search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100907"

    கர்நாடகா மாநில அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு இன்று காலை 8 மணி நிலவரப்படி 66 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. #Hogenakkal
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை பெய்தது. இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. தண்ணீர் திறப்பால் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து நீர்வரத்து ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் அதிகரித்தது.

    கர்நாடக மாநிலத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மழை குறைந்ததால் அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. ஒகேனக்கல்லுக்கு நேற்று 50 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து சரிந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ததால் கர்நாடக மாநில அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரித்தது. இதனால் நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து 70 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி சற்று சரிந்து 66 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து குறைந்தது. தொடர்ந்து 50 ஆயிரம் கனஅடிக்கு மேல் நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    நீர்வரத்து அதிகமாக இருப்பதால் ஒகேனக்கல் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசலில் செல்லவும் இன்று 19-வது நாளாக தடை விதிக்கப்பட்டு உள்ளது. #Hogenakkal
    குறுவை சாகுபடிக்கு தண்ணீர் வழங்க கோரி பிச்சை கேட்டுதான் கர்நாடகாவுக்கு சென்றேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். #Cauvery #KamalHaasan
    ஆலந்தூர்:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குறுவை சாகுபடிக்கு தண்ணீர் வழங்ககோரி பிச்சை கேட்டுதான் கர்நாடகாவுக்கு சென்றேன். எங்கள் விவசாயிகளுக்காக வெட்கம் பார்க்காமல் சென்று கேட்டேன். அதை அரசியலில் காவிரி ஆணையம் வேண்டாம் என்று கேட்கச் சென்றதாக திரித்து விட்டனர்.

    காவிரி ஆணையம் வேண்டும். காவிரியில் இருந்து தண்ணீர்விடும் கணக்குகளை பார்க்கத்தான் ஆணையம் வேண்டும் என்று கோரப்பட்டது. ஆணையம் கிடைத்தது பெரிய வெற்றிதான். 2 மாநிலங்களும் அதைத்தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் மீண்டும் பஸ்களை உடைப்பதுதான் வேலையாக இருக்கும்.

    ஓ.பன்னீர்செல்வம் மீது சொத்து குவிப்பு வழக்கு பற்றி விசாரணை நடப்பதால் அவர் பதவி விலக வேண்டும் என்று தமிழகம் வழிமொழிவது மிகுந்த சந்தோசமாக இருக்கிறது. இதுபற்றி நான் ஒரு வருடத்துக்கு முன் சொன்னேன்.

    இதுபோன்ற நிலவரங்கள் அதிகரித்து வந்ததால்தான் நான் அரசியலுக்கு வருவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. தமிழக அரசு நீங்க வேண்டும் என்று நான் சொல்லி நீண்ட நாளாகிவிட்டது. தனி நபருக்காக ராணுவ ஹெலிகாப்டர் வழங்கிய சம்பவம் அரசியல் மாண்பு சிரழிந்து வருவதாக நினைக்கிறேன்.

    எம்.ஜி.ஆர். உயிருக்காக போராடியபோது தனியார் விமானத்தில்தான் போனார். சேலம்-சென்னை இடையேயான 8 வழி சாலை பற்றி எந்த ஒரு ஏழையும் பேசலாம். 8 வழி சாலை வேண்டுமா? வேண்டாமா? என்பதை பற்றி மக்கள்தான் முடிவு செய்யவேண்டும். அதுபற்றி பேசக்கூடாது என்று எச்.ராஜா எப்படி சொல்லலாம்.

    கருத்து சுதந்திரம் மெதுவாக பறிக்கப்பட்டு வருகிறது. யாரும் தங்களுடைய கருத்துகளை வெளியிடக்கூடாது என்ற பதட்டமான சூழல்தான் உள்ளது. அது மாறவேண்டும் என்பது இந்தியாவின் தேவையாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Cauvery #KamalHaasan

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததையடுத்து அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. #MetturDam #MeturWaterLevel
    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால், கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதையடுத்து அந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து, கடந்த 23-ம் தேதி முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

    அணை முழு கொள்ளளவை எட்டியதையடுத்து திறந்து விடப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.



    இந்த நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு படிப்படியாக குறைந்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. எனவே, அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர் அணைக்கு இன்று நீர்வரத்து 80,291 கன அடியில் இருந்து 48,065 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் நீர் இருப்பு 93.93 டி.எம்.சி.யாக உள்ளது.  மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 46,422 கன அடியாக உள்ளது.  எனினும், அணையின் நீர்மட்டம் 120.22 அடியில் இருந்து 120.29 அடியாக உயர்ந்துள்ளது. #MetturDam #MeturWaterLevel
    காவிரி ஆற்றின் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவு 80,000 கன அடியில் இருந்து 65,000 கன அடியாக குறைந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Metturdam #Cauvery
    சேலம்:

    கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த தென்மேற்கு பருவ மழை வெளுத்து வாங்கியது. தற்போதும் அங்கு மழை நீடித்து வருகிறது.

    இதனால் கர்நாடகத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி தமிழகத்திற்கு காவிரியில் அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. நேற்று பகல் 12 மணிக்கு மேட்டூர் அணை முழுவதுமாக நிரம்பி அணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 5 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை நிரம்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேட்டூர் அணையில் இருந்து 75 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் இருபுறங்களை தொட்டபடி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.



    இந்த நிலையில், காவிரி ஆற்றின் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவு 80,000 கன அடியில் இருந்து 65,000 கன அடியாக குறைந்தது. தஞ்சை கல்லணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்துக்கு விநாடிக்கு 28,057 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரியில் 7,013 கன அடி நீரும், வெண்ணாற்றில் 2,022 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. கல்லணை கால்வாயில் 2,513 கன அடி நீரும், கொள்ளிடத்தில் 7,018 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

    ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் தொடர்ந்து 17-ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #Metturdam #Cauvery

    மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் காவிரி ஆறு பல்வேறு பகுதிகளில் பாய்ந்து இறுதியில் நாகை மாவட்டம் பூம்புகார் அருகே கடலில் கலக்கிறது. #Metturdam #Cauvery
    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் சேலம் மாவட்டம் செக்கானூர் கதவணை வழியாக நெருஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, ஊராட்சிக்கோட்டை வழியாக பவானி, ஈரோடு கருங்கல்பாளையம் வழியாக நாமக்கல் மாவட்டம் சோழசிராமணி சென்றடையும்.

    பின்னர் பரமத்திவேலூர் வழியாக சென்று கரூர் அருகேயுள்ள கட்டளை என்னுமிடத்தில் காவிரியுடன் கலக்கிறது.

    கரூர், திருச்சி மாவட்டங்களில் பாயும் காவிரி அகண்டு காணப்படுவதால் அங்கு பாயும் காவிரியை அகண்ட காவிரி என்பர்.

    கரூர் அருகே ஸ்ரீராம சமுத்திரம், மாயனூர், முசிறி, குளித்தலை, வாத்தலை, முக்கொம்பு (காவிரி, கொள்ளிடம் என இரண்டாக பிரிகிறது), ஜீயபுரம், முத்தரசநல்லூர், கம்பரசம்பேட்டை (தடுப்பணை) வழியாக காவிரி ஆற்றில் பாய்கிறது.

    அங்கிருந்து அம்மா மண்டபம், ஸ்ரீரங்கம் வழியாக கல்லணையை சென்றடைகிறது. கல்லணையில் காவிரி ஆறு நான்காக பிரிகிறது. அதாவது கல்லணை கால்வாய், காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் என பிரிந்து பரந்துவிரிந்து செல்கிறது. தொடர்ந்து பல்வேறு கிளை வாய்க்கால்களில் பாயும் காவிரி ஆறு இறுதியில் நாகை மாவட்டம் பூம்புகார் அருகே கடலில் கலக்கிறது.

    தமிழகத்தின் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், புதுச்சேரியின் காரைக்கால் பகுதி ஆகியவை காவிரி டெல்டாவை சேர்ந்தவை ஆகும். #Metturdam #Cauvery

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 102.68 அடியாக உயர்ந்து பிற்பகல் 103 அடியை தாண்டியது. இதனால் ஒரே நாளில் நீர்மட்டம் 7 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Cauvery #MetturDam
    மேட்டூர்:

    கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் அங்குள்ள ஹேமாவதி, ஹாரங்கி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பியுள்ளது.

    இதே போல கேரளாவில் வயநாடு மலைப்பகுதியில் பெய்த கன மழையால் மைசூர் மாவட்டத்தில் உள்ள கபினி அணையும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

    கபினி அணையில் இருந்து நேற்று 35 ஆயிரம் கன அடியும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 81 ஆயிரத்து 841 கன அடி என மொத்தம் 1 லட்சத்து 16 ஆயிரத்து 841 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது.

    இன்று காலை கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு நீர்வரத்து 71 ஆயிரத்து 353 கன அடியாக இருந்த நிலையில் தண்ணீர் திறப்பு 40 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. இதனால் இனி வரும் நாட்களில் தமிழகத்திற்கு தண்ணீர் வரத்து குறைய வாய்ப்புள்ளது.

    கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அந்த அணைகளில் நாளை மறுநாள் கர்நாடக முதல்-அமைச்சர் குமாரசாமி சிறப்பு பூஜை செய்கிறார். அப்போது அணை முழு கொள்ளவுடன் இருக்க வேண்டும் என்பதால் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளையும் வெள்ளம் மூழ்கடித்தபடி சென்றது. இன்று காலை ஒகேனக்கலில் 1 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் 10-வது நாளாக இன்றும் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஒகேனக்கலில் 1 லட்சம் கன அடிக்கும் அதிகமாக வரும் தண்ணீர் காவிரியின் இரு கரைகளையும் தொட்டபடி மேட்டூர் அணை நோக்கி வருகிறது. இதனால் காவிரி கரையில் உள்ள கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



    மேட்டூர் அணைக்கு நேற்று 1 லட்சத்து 7 ஆயிரத்து 64 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 1 லட்சத்து 4 ஆயிரத்து 436 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    நேற்று 95.73 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 102.68 அடியாக உயர்ந்தது. பிற்பகல் 103 அடியை தாண்டியது. இதனால் ஒரே நாளில் நீர்மட்டம் 7 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    தட்சிணாய புண்ணிய நதியான காவிரியில் 4 ஆண்டுகளுக்கு பின்பு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் புண்ணிய கால தொடக்கமான ஆடி மாதம் 1-ந் தேதியே மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியதால் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேட்டூர் அணையை கட்டி 83 ஆண்டுகள் ஆன நிலையில் நேற்று 64 வது முறையாக நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.



    இதற்கிடையே நீர்மட்டம் 100 அடியை தாண்டியதை அடுத்து அணையின் இடது கரையில் அணை செயற்பொறியாளர் தேவராஜன், உதவி பொறியாளர் மதுசூதனன் மற்றும் ஊழியர்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக நாளை (19-ந் தேதி) காலை 10 மணிக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அணையில் இருந்து தண்ணீரை திறந்து விடுகிறார். இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, சரோஜா, அன்பழகன், கருப்பண்ணன், விஜயபாஸ்கர் மற்றும் எம்.பி.,எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள்.

    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதன் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. #Cauvery #MetturDam

    ஒகேனக்கல்லில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 102 அடியை தாண்டியது. #Cauvery #MetturDam
    சேலம்:

    கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து நேற்று வினாடிக்கு 1 லட்சத்து 17 ஆயிரத்து 642 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று காலை முதல் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஐந்தருவிகள் மற்றும் பிரதான மெயின் அருவி, பெரிய பாணி உள்ளிட்ட பகுதிகளில் பாறைகளை மூழ்கடித்தப்படி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் ஒகேனக்கல் வெள்ளக்காடாக மாறியது.



    இதனால் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையில் தண்ணீர் வெள்ளமென கரைபுரண்டு ஓடுவதால் சுற்றுலா பயணிகள் உள்ளே செல்ல முடியாத வகையில் நுழைவுவாயில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகளை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்.

    இந்த நிலையில் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் மாலை வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வந்தது. இதன்காரணமாக அணை நீர்மட்டம் அன்று இரவு 92 அடியை எட்டியது. இதனிடையே நேற்று காலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1 லட்சத்து 7 ஆயிரத்து 64 கனஅடியாக அதிகரித்துள்ளது.

    நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 95.73 அடியாக உயர்ந்திருந்தது. ஒரு லட்சம் கனஅடிக்கும் அதிகமாக நீர்வரத்து இருந்ததால் இரவு 8 மணியளவில் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது. நள்ளிரவில் 102 அடியாக உயர்ந்தது. அணை வரலாற்றில் 100 அடியை எட்டுவது 64-வது முறையாகும்.

    கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ந்தேதி அணையின் நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது. அதன்பின்னர் 4 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது. காவிரி டெல்டா பாசனத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையில் இருந்து நாளை (வியாழக்கிழமை) தண்ணீர் திறந்து விடுகிறார்.



    அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதையொட்டி கடல் போல் காட்சி அளிக்கும் மேட்டூர் அணையை காண நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.  #Cauvery #MetturDam
    காவிரியில் கழிவு நீர் கலக்கும் விவகாரம் தொடர்பாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று அறிக்கையை தாக்கல் செய்தது. #PollutionControlBoard #SupremeCourt
    புதுடெல்லி:

    கர்நாடக மாநிலத்தில் பல இடங்களில் காவிரி கரையில் உள்ள சில நகரங்கள் மற்றும் அந்த மாநிலத்தை சேர்ந்த தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் காவிரி ஆற்றில் அதிக அளவில் கலக்கின்றன. குறிப்பாக பெங்களூர் மாநகரத்தின் 80 சதவீத கழிவுகளும், கழிவு நீரும் காவிரியில்தான் கலக்கின்றன. ஆண்டுக்கு சுமார் 5 லட்சத்து 40 ஆயிரத்து 200 மில்லியன் லிட்டர் கழிவுகள் கர்நாடகாவிலிருந்து காவிரி மூலம் தமிழகத்துக்கு வருகிறது.

    அபாயகரமான கழிவுகளோடு தமிழகத்துக்கு வரும் காவிரி நீரில் விளையும் பயிர்களில் துத்தநாகம், ஈயம், காட்மியம், செம்பு போன்ற வேதிப்பொருள்களின் தன்மை அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரியவருகிறது. மேலும் இதனால் காவிரி கரையோரம் வாழ்பவர்கள் பலவிதமான நோய்களுக்கு ஆளாகிறார்கள். மாசுபட்ட வகையில் உள்ள ஆற்றுநீரை பயன்படுத்தும் உயிரினங்களுக்கும் பயங்கர கேடுகளை விளைவிக்கிறது.

    எனவே, கர்நாடகா மாநிலத்தில் காவிரி கரையில் அமைந்துள்ள நகரங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியேற்றும் பல்வகையான கழிவுகளை நேரடியாக ஆற்றில் கலக்கவிடாமல் கழிவுகள் கலந்த தண்ணீரை சுத்திகரித்து பிறகு மீண்டும் ஆற்றில் கலக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும், நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவின் மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.ஏ. போப்டே, எல். நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த ஏப்ரல் 13-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கூட்டுக்குழு கர்நாடக பகுதியின் நீர்த்தேக்கத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு அனுப்பப்படும் தண்ணீரின் தரத்தை மே மாதம் வரை முறையாக பரிசோதனை செய்து இது தொடர்பாக ஜூலை மாதத்தில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:-

    காவிரி உருவாகும் இடத்தில் கழிவுகள் எதுவும் கலப்பது இல்லை. கர்நாடக பகுதியில் ஓடும் நதியில் எங்கும் கழிவு நீர் கலக்கப்படவில்லை. காவிரி நீர் செல்லும் வழியில் கழிவு நீர் கலக்கப்படுகிறது. தென் பெண்ணையாறு, அக்ராவதி ஆகிய காவிரியின் கிளை நதிகள் மாசடைந்த நிலையில் தமிழ்நாட்டுக்குள் பிரவேசிக்கின்றன.

    கடந்த செப்டம்பர் தொடங்கி டிசம்பர் வரை நான்கு மாதங்களில் காவிரி (அஜ்ஜிபோர்-கர்நாடகா), தென்பெண்ணையாறு (சொக்கரசனபல்லி- தமிழ்நாடு), அக்ராவதி (சங்கமா-கர்நாடகா) ஆகிய நதிகளில் இருந்து தண்ணீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் தென்பெண்ணையாறு, காவிரி, அக்கராவதி ஆகிய நதிகளின் தண்ணீர் பெருமளவில் மாசடைகிறது. தண்ணீரின் தரத்தை சீர்படுத்துவதற்கான நடவடிக்கையை இரு மாநிலங்களும் எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

    அறிக்கை தாக்கல் செய்ததை தொடர்ந்து இந்த அறிக்கையின் தமிழக அரசு மற்றும் கர்நாடக அரசு 2 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  #PollutionControlBoard #SupremeCourt #tamilnews
    கர்நாடகத்தில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்படுவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சேலம், தர்மபுரி மாவட்டங்களில் காவிரி கரையோர பகுதியில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
    சேலம்:

    கர்நாடகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது.

    இதனால் கர்நாடகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கர்நாடகத்தில் உள்ள முக்கிய அணைகளாக கருதப்படும் கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜ சாகர்), கபினி, ஹாரங்கி, ஹேமாவதி, பத்ரா, துங்கபத்ரா, மல்லபிரபா உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதில் கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டிவிட்டது.

    மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் காவிரியின் குறுக்கே அமைந்துள்ள கே.ஆர்.எஸ். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக குடகு மாவட்டம், கேரள மாநிலத்திற்கு உட்பட்ட வயநாடு பகுதிகள் விளங்கி வருகின்றன. அப்பகுதிகளில் இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் காவிரியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    நேற்றைய நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 35 ஆயிரத்து 698 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    நேற்றைய நிலவரப்படி கே.ஆர்.எஸ். 115.20 அடியை எட்டி இருந்தது. அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 124.80 அடி ஆகும். அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக உள்ளதால் விரைவில் நிரம்பிவிடும் தருவாயில் உள்ளது. அணையில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 3,657 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    ஏறக்குறைய முழு கொள்ளளவை எட்டிவிட்ட கபினி அணையின் நீர்மட்டம் தற்போது 2,282.22 அடியாக (கடல் மட்டத்தில் இருந்து) உள்ளது. கபினி அணையின் மொத்த நீர்மட்டம் 2,284.00 அடி ஆகும். இந்த அணை மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடுவில் கபிலா ஆற்றின் குறுக்கே அமைந்திருக்கிறது.

    நேற்றைய நிலவரப்படி கபினி அணைக்கு வினாடிக்கு 40 ஆயிரத்து 363 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 39 ஆயிரத்து 667 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர் மதியம் 4 மணிக்கு மேல் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. இதனால் வினாடிக்கு அணையில் இருந்து 50 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    கபினி மற்றும் கே.ஆர்.எஸ். ஆகிய இவ்விரு அணைகளில் இருந்து தமிழகத்திற்கு மொத்தம் வினாடிக்கு 53 ஆயிரத்து 657 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

    காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்தை பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    காவிரி ஆற்றில் கூடுதல் தண்ணீர் வருவதால் ஒகேனக்கல் அருவிகளில் நேற்று 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு தொடர்ந்தது. காவிரி ஆற்றில் புதுவெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்ட நிர்வாகம் பரிசல்களை இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் விதித்துள்ள தடை நேற்றும் நீடித்தது.

    கபினி, கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்) அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு தற்போது வினாடிக்கு 53,657 கனஅடியாக உயர்ந்து இருப்பதால் இன்று (வியாழக்கிழமை) ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    ஒகேனக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் குறிப்பாக ஒகேனக்கல்லில் இருந்து மேட்டூர் வரை சுமார் 75 கிலோமீட்டர் தூர காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் குளித்தல், துணிதுவைத்தல் உள்ளிட்ட செயல்களை தவிர்க்க வேண்டும். காவிரி ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் ஆற்றங்கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும், என்று சேலம், தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த 9-ந்தேதி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1,533 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்தானது படிப்படியாக அதிகரித்து நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 32,284 கனஅடியாக அதிகரித்து உள்ளது.

    இதன் எதிரொலியாக மேட்டூர் அணையின் நீர்மட்டமும் மளமளவென உயர்ந்து வருகிறது. கடந்த 9-ந் தேதி 63.72 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 65.15 அடியாக உயர்ந்தது. அது நேற்று மேலும் உயர்ந்து காலை 68.42 அடியாக இருந்தது. இது இரவு 70 அடியை எட்டியது. அதாவது அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 5 அடி உயர்ந்துள்ளது.

    இந்த நீர்வரத்தானது மேலும் அதிகரிக்குமானால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர வாய்ப்புள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் மத்திய நீர்வள கமிஷன், தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் வெள்ளத்தால் அபாயம் ஏதும் ஏற்படாமல் இருக்க முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளது.

    கபினி அணையில் இருந்து நீர்வரத்து அதிகரிப்பால் நேற்று காலை 40 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 45.05 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் 5 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #metturdam #cauveryriver #kabinidam
    மேட்டூர்:

    கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாடு பகுதிகளிலும் கடந்த 2 வாரமாக பெய்த பலத்த மழை காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    கிருஷ்ணராஜசாகர் அணைக்கு இன்று 11 ஆயிரத்து 297 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையின் நீர்மட்டம் 101.90 அடியாக உயர்ந்து உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடியாகும்.

    கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. அணையின் நீர்மட்டம் தற்போது 81.08 அடியாக உள்ளது. அணை நிரம்ப இன்னும் 3 அடியே தேவைப்படுகிறது. இதையடுத்து கபினி அணையில் இருந்து பாதுகாப்பு கருதி கடந்த 14-ந்தேதி முதல் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    முதலில் 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அடுத்த நாள் இந்த அளவு 35 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

    கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று அதிகாலை தமிழக-கர்நாடக எல்லை பகுதியை கடந்து ஒகேனக்கல் வந்தடைந்தது.

    ஒகேனக்கலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து காலை 9 மணிக்கு விநாடிக்கு 29 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இரவு 32 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    காவிரி ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை 2-வது நாளாக நீடிக்கிறது. இதற்கிடையில் கர்நாடகாவில் மழை குறைந்ததால் இன்று ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 23 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

    மேட்டூர் அணைக்கு அடிபாலாறு வழியாக சீறிபாய்ந்து வரும் தண்ணீர்

    கபினி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேற்று காலை அடிபாலாறு பகுதிக்கு வந்து சேர்ந்தது. பிற்பகல் மேட்டூர் அணைக்கு வர தொடங்கியது. தொடக்கத்தில் 1000 கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 15 ஆயிரம் கனஅடியாகவும், இரவு 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இன்று காலையில் அணைக்கு 32 ஆயிரத்து 421 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    நீர்வரத்து அதிகரிப்பால் நேற்று காலை 40 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 45.05 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் 5 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர் திறப்பை விட நீர்வரத்து பல மடங்கு அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் கிடு கிடுவென உயர தொடங்கி உள்ளது.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் மழை தீவிரம் குறைந்ததால் கபினி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. கபினி அணைக்கு இன்று 9 ஆயிரத்து 599 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருகிறது.

    நீர்வரத்து குறைந்ததால் கடந்த 4 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட 35 ஆயிரம் கன அடி தண்ணீர் நேற்று முன்தினம் விநாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. இந்த நீர்திறப்பு இன்று காலை 729 கனஅடியாக குறைக்கப்பட்டது. இன்னும் ஓரிரு நாளில் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைவதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளன.

    நீர்வரத்து காரணமாக பல மாதங்களாக வறண்டு கிடந்த காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் காவிரி ஆற்றில் முகாமிட்டு இருந்த மீனவர்கள் தங்களின் கூடாரங்களை மேடான பகுதிக்கு மாற்றி சென்றனர்.

    காவிரி கரையில் விதைக்கப்பட்டிருந்த எள், கம்பு, சோளம், ராகி உள்ளிட்ட தானிய பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. #metturdam #cauveryriver #kabinidam
    கபினி அணையில் திறந்து விடப்பட்ட 35 ஆயிரம் கன அடி காவிரி நீர் தமிழகம் வந்தது. இதனால் இன்று இரவு முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. #metturdam #cauveryriver #kabinidam
    மேட்டூர்:

    கர்நாடகத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 2 வாரமாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. காவிரியின் முக்கிய நீர்பிடிப்பு பகுதிகளான குடகு, தலைக்காவிரி, பாகமண்டலா, மடிக்கேரி உள்பட பல்வேறு பகுதிகளிலும் மழை கொட்டி வருவதால் அங்குள்ள முக்கிய அணைகளான கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    கேரள மாநிலம் வயநாடு பகுதியில் தொடர்மழையால் 84 அடி உயரம் கொண்ட கபினி அணை நிரம்பும் நிலையில் உள்ளது. அணைக்கு நேற்று வினாடிக்கு 36ஆயிரத்து 650 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று 33 ஆயிரத்து 153 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையின் நீர்மட்டம் 79.40 அடியாக உள்ளது. அணை நிரம்ப இன்னும் 4 அடியே தேவைப்படுகிறது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் முதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

    முதலில் 1,000 கனஅடியாக இருந்த நீர்திறப்பு 15ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டது. பின்னர் இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு முதல் 35ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் இருபுறங்களையும் தொட்டபடி சீறி பாய்ந்து வருகிறது.

    இதையடுத்து கரையோரத்தில் உள்ள மைசூரு, ராம்நகர், கனகபுரா, சங்கம்மா, மேக்கேதாட்டு ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. காவிரி கரையோரம் வசித்து வந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இதேபோல் கிருஷ்ண ராஜசாகர் அணைக்கும் நீர்வரத்து அதிகமாக வருகிறது. அணைக்கு நேற்று வினாடிக்கு 28ஆயிரத்து 96 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று 31 ஆயிரத்து 37 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    124.80 அடி கொள்ளளவு கொண்ட அணை நீர்மட்டம் நேற்று 94.53 அடியாக இருந்தது. இன்று காலை இது 98.20 அடியாக உயர்ந்தது. ஒரேநாளில் 4 அடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. அணையில் இருந்து 437 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதேஅளவு நீர்வரத்து இருந்தால் இன்னும் 10 நாளில் அணை நிரம்ப வாய்ப்பு உள்ளது.

    கடந்த ஆண்டு இதேநாளில் கிருஷ்ணராஜசாகர் அணை நீர்மட்டம் 67.60 அடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு வேகமாக நீர்மட்டம் அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள ஹாரங்கி, ஹேமாவதி அணைகளுக்கு நீர்வரத்து பன்மடங்கு அதிகரித்து உள்ளது.

    ஹாரங்கி அணைக்கு வினாடிக்கு 5ஆயிரத்து 145கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 30 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ஹேமாவதி அணைக்கு 19ஆயிரத்து 242 கனஅடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 200கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    கபினி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட 35ஆயிரம் கனஅடி தண்ணீர், இன்று அதிகாலை தமிழக-கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலு வரத் தொடங்கியது. நேற்று 1,100 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1,300 கனஅடியாக அதிகரித்தது. படிப்படியாக நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இந்த தண்ணீர் இன்று பிற்பகல் ஒகேனக்கல் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஒகேனக்கல்லில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் முதல் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் அதிகளவு கொட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

    இன்று இரவு கபினி தண்ணீர், மேட்டூர் அணையை வந்து சேரும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    இதனால் இன்று இரவு முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று 616 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    அணையின் நீர்மட்டம் 39.96 அடியாக உள்ளது. இன்றும் இதே நிலை நீடிக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.



    நாளை முதல் மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென உயரும். மேட்டூர் அணைக்கு தொடர்ச்சியாக 24 மணி நேரமும் 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தால், தினமும் ஒரு அடி உயரும். தற்போது 35ஆயிரம் கனஅடி தண்ணீர் மேட்டூர் அணை நோக்கி வந்து கொண்டிருப்பதால், அணையின் நீர்மட்டம் தினமும் 2½ அடி உயரும் சூழ்நிலை உருவாகி உள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்ப இன்னும் 26 அடி தேவைப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் அந்த அணையும் நிரம்பி காவிரியில் உபரிநீர் திறக்கப்படும். கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரியில் மொத்தமாக தண்ணீர் திறக்கும்போது மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயரும்.

    கடந்த 7 ஆண்டுகளாக மேட்டூர் அணையிலிருந்து குறித்த காலமான ஜூன் 12-ந் தேதி போதுமான தண்ணீர் இல்லாததால் அணை திறக்க வாய்ப்பு இல்லாமல் போனது. இதனால் டெல்டா பாசனம் பாதிக்கப்பட்டது.

    இந்த ஆண்டும் கடந்த 12-ந்தேதி அணை திறக்கப்படவில்லை. ஆனால் தற்போது கர்நாடகத்தில் கனமழை பெய்து, காவிரியில் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து இந்த மாதம் இறுதியில் அல்லது ஜூலை முதல் வாரத்தில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு காவிரி டெல்டா விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. #metturdam #cauveryriver #kabinidam
    தொடர்மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கபினி அணையில் இருந்து காவிரியில் 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நாளை இரவு ஒகேனக்கல் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    மேட்டூர்:

    கர்நாடக மாநிலத்தில் கடந்த மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூர், மாண்டியா உள்பட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது.

    இதனால் காவிரி ஆற்றில் வரலாறு காணாத அளவுக்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.

    தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்), கபினி மற்றும் ஹாரங்கி, ஹேமாவதி அணைகளுக்கு நீர்வரத்து பலமடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணை நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது.

    கர்நாடகத்தில் குடகு மாவட்டத்தில் பருவமழை வெளுத்து வாங்குவதால், காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ண ராஜசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 124.80 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 90.20 அடியாக உயர்ந்தது. இன்று இது 94.50 அடியாக உயர்ந்துள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 28 ஆயிரத்து 383 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 416 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    நாளை அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டும் எனவும், இன்னும் 10 நாட்களுக்குள் அணை முழுமையாக நிரம்பும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    கபினி ஆறு உற்பத்தியாகும் கேரள மாநிலம் வயநாடு மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால் மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    நேற்று முன்தினம் 23 ஆயிரத்து 487 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. இன்று அல்லது நாளை கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கபினி அணை நிரம்பி வருவதால் அணையின் பாதுகாப்பு கருதி, காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    நேற்று காலை 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் இது படிப்படியாக உயர்த்தப்பட்டு பகல் 1 மணிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீரும், மாலை 6 மணி முதல் 15 ஆயிரம் கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டன.

    கபினி அணைக்கு இன்று 37ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 80 அடியை தாண்டி உள்ளது. அணை நிரம்ப இன்னும் 4 அடியே தேவைப்படுகிறது. இதையடுத்து நேற்று இரவு முதல் கபினி அணையில் இருந்து நீர்திறப்பு 35ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    கபினி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் நேராக தமிழக, கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை நோக்கி சீறிபாய்ந்து வருகிறது.

    கபினியில் திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வந்தடைய 48 மணிநேரமும், மேட்டூர் அணைக்கு வந்து சேர 60 முதல் 62 மணிநேரம் வரை ஆகும்.

    இதனால் காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் நாளை இரவு ஒகேனக்கல் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மறுநாள் மேட்டூர் அணைக்கு இந்த தண்ணீர் வந்து சேரும்.

    காவிரி ஆற்றில் 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தமிழக-கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்பாசனத்துறை அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் 24 மணிநேரமும் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல்லில் நேற்று 1,300 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று இது 1,100 கனஅடியாக குறைந்தது. நாளை இரவு 35ஆயிரம் கனஅடி தண்ணீர் ஒகேனக்கல் வரும்போது அங்குள்ள அருவிகளில் அதிகளவு தண்ணீர் கொட்ட இருப்பதால் வருவாய்த்துறை அதிகாரிகளும், தீயணைப்பு படை வீரர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேட்டூர் அணைக்கு நேற்று 748 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று 616 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 39.96 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    கபினியில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், நாளை மறுநாள் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் பட்சத்தில் நீர்மட்டம் கிடுகிடுவென உயரும். தொடர்ந்து 24 மணிநேரம் மேட்டூர் அணைக்கு 12ஆயிரம் கனஅடி தண்ணீர் தொடர்ச்சியாக வந்தால் அணையின் நீர்மட்டம் தினமும் ஒருஅடி உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. தற்போது 35ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் சீறிபாய்ந்து வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தினமும் 2½ அடி உயரும்.

    கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்பும் தருவாயில், அந்த அணையில் இருந்தும் காவிரி ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்படும். கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் ஆகிய 2 அணைகளில் இருந்தும் ஒருசேர காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட்டால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும்.

    இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து இம்மாத இறுதிக்குள் காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் குறுவை சாகுபடியை எதிர்நோக்கி காத்திருக்கும், காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கர்நாடகா கடலோர மாவட்டங்கள் மற்றும் தெற்கு உள் கர்நாடக பகுதிகளில் வருகிற 19-ந்தேதி வரை மிக பலத்தமழை பெய்யும் என வானிலை இலாகா அறிவித்துள்ளது.

    இதனால் கர்நாடகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு மழை கொட்ட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக அணைகள் அனைத்தும் நிரம்புவதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது.
    ×