search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராணுவம்"

    இலங்கை செல்பவர்களுக்கு இந்தியா புதிய அறிவுரை வழங்கி உள்ளது.
    புதுடெல்லி:

    இலங்கையில் கடந்த மாதம் 21-ந் தேதி தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. அதனால், அவசியமின்றி இலங்கைக்கு செல்வதை தவிர்க்குமாறு இந்தியர்களை இந்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டது. ஒரு மாதம் கடந்தநிலையில், நேற்று வெளியுறவு அமைச்சகம் புதிய அறிவுரை ஒன்றை வெளியிட்டது.

    அதில், “ஊரடங்கு ரத்து, சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடுகள் நீக்கம், பள்ளிகள் திறப்பு என்று இலங்கையில் இயல்புநிலை படிப்படியாக திரும்பி வருகிறது. இருப்பினும், அங்கு செல்லும் இந்தியர்கள், கவனமாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும்.



    ஏதேனும் உதவி தேவைப்பட்டால், கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தையோ அல்லது கண்டி, யாழ்ப்பாணம், ஹம்பன்தொட்டா ஆகிய இடங்களில் உள்ள இந்திய துணை தூதரகங்களையோ எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம்” என்று கூறப்பட்டுள்ளது.
    ஈராக்கில் ராணுவம் நேற்று முன்தினம் அங்கு அதிரடி தாக்குதல் நடத்தி அந்த முகாமை அழித்தது. மேலும் அங்கிருந்து ஏராளமான வெடிபொருட்களை கைப்பற்றியும் உள்ளது.
    பாக்தாத்:

    ஈராக் நாட்டில் அன்பார் மாகாணத்தில் உள்ள ராவா நகரம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வசமிருந்து 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் மீட்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலுமாய் அழிக்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலுமாய் அழிக்கப்படவில்லை. அவர்கள் ஆங்காங்கே பதுங்கி இருந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், அங்குள்ள அன்பார் மாகாணத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கவும், வெடிபொருட்கள் பதுக்கி வைக்கவும் ஒரு இடம், முகாமாக செயல்பட்டு வந்தது ராணுவத்துக்கு தெரிய வந்தது.

    இதையடுத்து ராணுவம் நேற்று முன்தினம் அங்கு அதிரடி தாக்குதல் நடத்தி அந்த முகாமை அழித்தது. மேலும் அங்கிருந்து ஏராளமான வெடிபொருட்களை கைப்பற்றியும் உள்ளது. இதை ஈராக் பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்தது.
    ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த பொதுமக்கள் 10 பேரை பாதுகாப்பு படையினர் விடுவித்தனர்.
    குந்தூஸ்:

    ஆப்கானிஸ்தானில் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாதிகள், அரசுப் படைகளுக்கு எதிராக அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு படைகளுக்கு உளவு பார்ப்பதாக கூறி பொதுமக்களையும் சிறைப்பிடித்து துன்புறுத்துகின்றனர்.  தலிபான்கள் வசம் உள்ள பகுதிகளை மீட்க ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், குந்தூஸ் மாகாணம், சகர் தாரா மாவட்டத்தில் தலிபான்கள் வசம் உள்ள பகுதிகளை ராணுவம் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியது. இதில் தலிபான்களுக்கு பின்னடைவு ஏற்பட்டது. தங்கள் இடங்களை காலி செய்துவிட்டு தலிபான்கள் தப்பிச் சென்றனர். இதையடுத்து மேலும் முன்னேறிய ராணுவம் அனைத்து பகுதிகளிலும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

    அவ்வகையில், அக் சரே கிராமத்தில் உள்ள தலிபான்கள் பாதுகாப்பு அரண்களை பாதுகாப்பு படையினர் தகர்த்தனர். தலிபான்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். பின்னர் அங்கு நேற்று தேடுதல் வேட்டை நடத்தியபோது, தலிபான்களின் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 10 பொதுமக்களை விடுவித்தனர்.

    அவர்கள் பத்திரமாக ராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். விசாரணைக்குப் பிறகு அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்களின் குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கவும் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. 
    இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடைய அனைத்து பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டு விட்டனர் அல்லது கைது செய்யப்பட்டு விட்டனர். நாடு தற்போது பாதுகாப்பாக உள்ளது என்று இலங்கை ராணுவமும், போலீசும் அறிவித்துள்ளன. #SriLanka #Easterattacks
    கொழும்பு:

    இலங்கையில் கடந்த மாதம் 21-ந்தேதி தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. அதில், 250-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதுகுறித்து இடைக்கால போலீஸ் ஐ.ஜி. சந்தான விக்ரமரத்னே கூறியதாவது:-

    3 தேவாலயங்கள், 3 ஓட்டல்கள் ஆகியவற்றில் நடந்த குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர் அல்லது கைது செய்யப்பட்டு விட்டனர். தேசிய தவ்ஹீத் ஜமாத் பதுக்கி வைத்திருந்த வெடிபொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு விட்டன. வெடிகுண்டு தயாரிப்பதில் நிபுணர்களான 2 பேர், போலீசுடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டு விட்டனர்.

    ஆகவே, இலங்கை தற்போது பாதுகாப்பாக உள்ளது என்று போலீஸ் மகிழ்ச்சியாக அறிவிக்கிறது. ஊரடங்கு உத்தரவும் ரத்து செய்யப்பட்டு விட்டது. இயல்பு நிலை திரும்பி வருகிறது.

    உறுதி செய்யப்படாத தகவல்களை நம்பி குழப்பம் அடைய வேண்டாம் என்று பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம். சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பப்படும் பொய் தகவல்கள்தான் பீதிக்கு காரணமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராணுவ தளபதி மகேஷ் சேனநாயகே கூறியதாவது:-

    தேச பாதுகாப்பை உறுதி செய்ய ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 2 வாரங்களில் இயல்புநிலை திரும்பி வருகிறது. பொய் செய்திகளுக்கு மக்கள் இரையாக வேண்டாம். மக்கள் தங்கள் அன்றாட பணிகளில் ஈடுபடலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக, 9 பெண்கள் உள்பட 73 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் செய்தித்தொடர்பாளர் ருவன் குணசேகரா தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

    கைதானவர்கள், சி.ஐ.டி. மற்றும் பயங்கரவாத புலனாய்வு துறையால் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். தேசிய தவ்ஹீத் ஜமாத்துடன் தொடர்புடைய 14 கோடி ரூபாய் இலங்கை பணத்தையும், 700 கோடி இலங்கை ரூபாய் மதிப்புள்ள சொத்துகளையும் சி.ஐ.டி. அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    இலங்கையைச் சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியை தான் செல்லப்பிராணியாக வளர்த்து வந்த 5 நாய்களை, வெடிகுண்டுகளை கண்டறியும் பணிக்கு பயன்படுத்தி கொள்ள ராணுவத்துக்கு பரிசாக வழங்கி உள்ளார். #SriLankabombings #Easterblasts #colomboblasts #PetDog
    கொழும்பு:

    இலங்கையில் கடந்த 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் தொடர் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்தன. இதில் 250-க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர்.

    உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னரும், இலங்கையில் தொடர்ந்து அமைதியற்ற சூழல் நீடிக்கிறது. அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து, வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்படுவதால் மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.



    இந்நிலையில் இலங்கையைச் சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியையான ஷிரு விஜெமானே என்பவர், தான் செல்லப்பிராணியாக வளர்த்து வந்த 5 நாய்களை, வெடிகுண்டுகளை கண்டறியும் பணிக்கு பயன்படுத்தி கொள்ள ராணுவத்துக்கு பரிசாக வழங்கி உள்ளார். ஜெர்மன் ஷெப்பர்டு இனத்தை சேர்ந்த இந்த 5 நாய்களும், ஒரே குடும்பத்தை சேர்ந்தவை ஆகும். இதில் தாய் நாய்க்கு 2 வயதும், மற்ற நாய்களின் வயது 6 மாதங்களும் ஆகின்றன.

    இலங்கை ராணுவத்தின் உயர் அதிகாரி பிரிகேடியர் ஏ.என்.அமரசேகராவை கொழும்புவின் நாரஹெம்பிடா பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு வரவழைத்து அவரிடம் தனது 5 நாய்களையும் ஷிரு விஜெமானே ஒப்படைத்தார். ராணுவத்தின் வெடிகுண்டுகள் கண்டறிந்து அகற்றும் துறையில் இந்த நாய்கள் சேர்க்கப்பட்டு இலங்கை ராணுவப் படைப்பிரிவு பொறியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்க உள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.     #SriLankabombings #Easterblasts #colomboblasts #PetDog
    ராணுவத்தை வைத்து வாக்கு சேகரிப்பதை மோடி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரசாரத்தின்போது கூறினார். #LokSabhaElections2019 #Vaiko
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம் செய்தார்.  அப்போது அவர் கூறியதாவது:

    மக்கள் கலைஞர் இருந்த இடத்தில் தற்போது ஸ்டாலினை வைத்து பார்க்கின்றனர். நல்லாட்சி நடத்த ஸ்டாலின் வந்துள்ளார். ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படும் என தி.மு.க. வாக்குறுதியளித்துள்ளது. எனவே மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள கூட்டணிக்கு அனைத்து மக்களும் வாக்களிக்க வேண்டும்.

    நரேந்திர மோடி, புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலில் 41 துணை ராணுவனத்தினர் இறந்த சம்பவத்தை வைத்து வாக்கு சேகரித்து வருகிறார். ராணுவம் யாருக்கும் சொந்தமில்லை. எந்தக் கட்சிக்கும் சொந்தமில்லை. ராணுவத்தை வைத்து வாக்கு சேகரிப்பதை மோடி நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    முப்படையில் முக்கியமானது விமானப்படை. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது ரூ.526 கோடிக்கு போடப்பட்ட பழைய ஒப்பந்தத்தை ரத்து செய்த மோடி அரசு ரூ.1,670 கோடி மதிப்பில் எந்தவித முன் அனுபவமும் இல்லாத அனில் அம்பானிக்கு கொடுத்து உள்ளது. இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பில் மோடி அரசு ஊழல் செய்துள்ளது.

    8 வழி சாலையினால் பல ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி மற்றும் விவசாய நிலங்கள் பாதிப்புக்கு உள்ளாக இருந்தது. இந்தத் திட்டத்தை நீதிமன்றம் தடுத்து நிறுத்தியுள்ளது. நாட்டில் 83 லட்சம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை, ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் செலுத்தப்படும் என்று மோடி பொய் வாக்குறுதிகளை கொடுத்து உள்ளார். தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் முதல் குற்றவாளி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான். இவற்றை மனதில் கொண்டு மோடி ஆட்சிக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதை தொடர்ந்து ஆரணியில் அவர் பேசியதாவது:-

    நாட்டிற்கு ஆபத்து வந்து கொண்டிருக்கிறது. ஆனால் பிரதமர் மோடி தொடர்ந்து பிரசார பொதுக்கூட்டங்களில் ஆபத்தான கருத்துக்களை சொல்லி வருகிறார். கர்நாடகாவில் கமி‌ஷன் ஆட்சி நடப்பதாக கூறி பிரச்சாரம் செய்கிறார். அது இங்கு பேச வேண்டிய பிரசாரம் ஆகும்.

    இந்த பகுதிக்கு முக்கிய பிரச்சினையாக திண்டிவனம் - ஆரணி வழியாக ஆந்திர மாநிலம் நகரி வரை செல்லக்கூடிய ரெயில் பாதை திட்டம் கடந்த 10 ஆண்டுகாலமாக கிடப்பில் உள்ளது. நெசவாளர்கள் நிறைந்த இந்த பகுதியில் பட்டு ஜவுளி பூங்கா அமைப்பதாக வாக்குறுதி மட்டுமே உள்ளது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

    தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல்கள் நடைபெறுகின்றன. அதில் உதயசூரியன் ஜெயிக்க வேண்டும் அப்போதுதான் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளான விவசாயிகள் கடன் தள்ளுபடி, கல்விக் கடன் ரத்து, ஏழை எளிய நடுத்தர மக்கள் வங்கிகளில் 5 சவரன் நகை வரை கடன் பெற்றவர்களுக்கு அதனை ரத்து செய்யும் அறிவிப்பு போன்றவற்றை செயல்படுத்த முடியும்.

    மேகதாது அணை கட்டப்பட்டு வருவதால் நம் பகுதிக்கு நீர் ஆதாரங்கள் வெகுவாக குறைந்துவிடும். இதுபோன்ற திட்டங்கள் தடுக்க அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என உள்ளது அதனை மத்திய, மாநில அரசுகள் எந்த முடிவும் எடுக்காது. நாம் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே இந்த திட்டங்களை சாத்தியமாக மாற்ற முடியும்.

    எனவே விழிப்பாக இருந்து கை சின்னத்திற்கு வாக்களித்து எம்.கே.விஷ்ணுபிரசாத்தை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #LokSabhaElections2019 #Vaiko

    அரசியல் ஆதாயத்துக்கு ராணுவத்தை பயன்படுத்த கூடாது என ஆட்சேபம் தெரிவித்து முன்னாள் முப்படை தளபதிகள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். #LokSabhaElections2019 #MilitaryVeterans
    புதுடெல்லி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு முன்னாள் ராணுவ தளபதிகள் ரோட்ரிக்ஸ், சங்கர்ராய் சவுத்ரி, தீபக் கபூர், முன்னாள் விமானப்படை தளபதி என்.சி.சூரி, முன்னாள் கடற்படை தளபதிகள் எல்.ராமதாஸ், அருண் பிரகாஷ், மேத்தா, விஷ்ணு பகவத் மற்றும் ஓய்வு பெற்ற 148 முப்படை உயர் அதிகாரிகள் கடிதம் எழுதி உள்ளனர்.

    அந்த கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    ஆயுதப்படைகள், எல்லைதாண்டி சென்று நடத்தும் தாக்குதல்களுக்கு அரசியல் தலைவர்கள் உரிமை கோரும் ஏற்க இயலாத, வழக்கத்துக்கு மாறான நடைமுறை நிலவி வருகிறது. ஆயுதப்படைகளை ‘மோடி சேனை’ என்று அழைக்கும் அளவுக்கு சென்றுவிட்டனர்.

    அவர்களின் அரசியல் செயல் திட்டங்களுக்கு ராணுவத்தை பயன்படுத்துகிறார்கள். மேலும், விமானி அபிநந்தன் புகைப்படத்தை பிரசாரத்துக்கு உபயோகிக்கிறார்கள். இதற்கு எங்கள் ஆட்சேபனையை தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #MilitaryVeterans
    சூடான் நாட்டு அதிபரான ஒமர் அல்-பஷிரை பதவி நீக்கம் செய்த அந்நாட்டு ராணுவம், அவரை சிறைபிடித்து உள்ளதாக தெரிவித்துள்ளது. #Sudanesepresident #OmaralBashir
    கர்ட்டோம்: 

    சூடான் நாட்டில் ரொட்டி உற்பத்திக்கான அரசு மானியங்கள் நிறுத்தப்பட்டதால், ரொட்டி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ரொட்டி விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சியினருடன் இணைந்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.   

    போராட்டக்காரர்கள் பல்வேறு பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். கடைகளை சூறையாடி அங்குள்ள பொருட்களை போராட்டக்காரர்கள் கொள்ளையடித்துச் செல்வதும் அதிகரித்தது. போராட்டக்காரர்களை ஒடுக்க கலவர தடுப்பு பிரிவு போலீசார் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 

    இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்குமிடையிலான மோதல்களில் உயிர்ப்பலி ஏற்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடந்த போராட்டங்களில் 19 பேர் உயிரிழந்தனர்.  அரசுக்கு எதிரான போராட்டம் மற்றும் வன்முறைகளால் இதுவரை சுமார் 50 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போராட்டங்களை கட்டுக்குள் வைக்க தவறியதாக அதிபர் ஒமர் அல் பஷீருக்கு கண்டனங்கள் குவிந்தன.

    இந்நிலையில், சூடான் நாட்டு அதிபரான ஒமர் அல்-பஷிரை பதவி நீக்கம் செய்து சிறைபிடித்துள்ளோம் என அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

    இதுதொடர்பாக சூடான் நாட்டு பாதுகாப்பு துறை மந்திரி அவாட் இப்னூ கூறுகையில், அதிபர் பதவியில் இருந்து ஒமர் அல் பஷீர் பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அவரை சிறைபிடித்துள்ள நாங்கள் பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளோம் என தெரிவித்தார்.

    சூடான் நாட்டில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அதிபர் பதவி வகித்தவர் ஒமர் அல் பஷிர் என்பது குறிப்பிடத்தக்கது. #Sudanesepresident #OmaralBashir
    காஷ்மீரில் ராணுவத்தில் சேர கடும் குளிரையும், மழையையும் பொருட்படுத்தாமல் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ராணுவத்தில் சேர ஆர்வமாக வந்திருந்தனர். #PulwamaAttack #KashmiriYouth #Army
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள கண்டமுல்லா ராணுவ முகாமில் ராணுவத்துக்கு ஆட்கள் தேர்வு செய்யும் முகாம் நடந்தது. கடும் குளிரையும், மழையையும் பொருட்படுத்தாமல் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ராணுவத்தில் சேர ஆர்வமாக வந்திருந்தனர். அங்கு அவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடத்தப்பட்டது.

    இது தொடர்பான வீடியோ ராணுவத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது. அதில், “நாட்டை காக்க ஏராளமான இளைஞர்கள் ராணுவத்துக்கான ஆட்கள் தேர்வில் கலந்துகொண்டு இருக்கின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இது குறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ஸ்ரீநகரில் இந்த வார இறுதியிலும் அடுத்த வாரமும் ராணுவத்துக்கு ஆட்கள் தேர்வு முகாம் நடைபெற உள்ளது என்றனர்.

    புலவாமா பகுதியில் துணை ராணுவ படை மீது பயங்கரவாத தாக்குதல் நடந்த சில நாட்களிலேயே ராணுவத்தில் சேர காஷ்மீர் இளைஞர்கள் ஆர்வம் காட்டியது அதிகாரிகளிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 
    பெங்களூருவில் நேற்று 12-வது சர்வதேச விமான கண்காட்சியை தொடங்கி வைத்த மத்திய ராணுவத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், ராணுவத்தில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார். #NirmalaSitharaman
    பெங்களூரு:

    12-வது பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி தொடக்க விழா நேற்று பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் நடந்தது. இதில் ராணுவத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியாவில் 600 இந்திய நிறுவனங்கள், 200 வெளிநாட்டு நிறுவனங்கள் ராணுவ தளவாட உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. இந்த கண்காட்சியில் போர் விமானங்கள் மட்டுமின்றி ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள், பயணிகள் விமான நிறுவனம் ஆகியவையும் கலந்து கொண்டுள்ளன. இதன்மூலம் உலக அளவில் இந்தியா தன்னை நிலை நிறுத்திக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.



    இந்த கண்காட்சி 100 கோடி வேலைவாய்ப்புகளின் ஓடுதளமாக உள்ளது. இந்தியாவில் ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்து ஏற்றுமதியை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ‘மேக் இன் இந்தியா’, அதாவது இந்தியாவில் தயாரிப்போம் என்பதுதான் இந்த கண்காட்சியின் நோக்கம். உற்பத்தி துறை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முக்கிய பங்காற்றுகிறது.

    ‘மேக் இன் இந்தியா’ (இந்தியாவில் தயாரிப்போம்) திட்டத்தில் உற்பத்தி துறையின் மூலம் முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும்.

    கடந்த 2014 முதல் 2018-ம் ஆண்டு வரை ராணுவத்திற்கென 150 தொழில் ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இதில் ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 500 கோடி மதிப்பீட்டில் பொருட்களை உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளோம். கடந்த 4 ஆண்டுகளில் 126 உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 76 ஆயிரத்து 950 கோடி ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளோம்.

    இந்தியாவில் சந்தை வாய்ப்பு நன்றாக உள்ளது. ராணுவத்துறையில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு விதிகளை தளர்த்தி உள்ளோம். இதன்மூலம் ராணுவ தளவாடங்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதனால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும்.

    பெங்களூரு-ஓசூர்-சென்னை இடையே ராணுவ தொழில் வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் உத்தரபிரதேசத்தில் ஒரு விமான வழித்தடம் அமைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள கோவையில் விமான தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசினார்.

    விழாவில் முதல்-மந்திரி குமாரசாமி, விமானத்துறை மந்திரி சுரேஷ் பிரபு, முப்படை தளபதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழா முடிந்ததும் விமான சாகசங்கள் தொடங்கின. முதலில் தனுஷ், சாரங், சாரஸ் ஹெலிகாப்டர்கள், சுகோய், தேஜஸ் மற்றும் போர் விமானங்கள் அணிவகுப்பு நடத்தின. அதைத் தொடர்ந்து இந்திய ராணுவப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் வானில் சாகச நிகழ்ச்சிகளை நடத்தின. இதில் குறிப்பாக சாரங் ஹெலிகாப்டர்கள் ஒன்றோடொன்று மோதுவதுபோல் வந்த காட்சிகள் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தன.

    இதுமட்டுமின்றி அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான எப்-16 என்ற வகையைச் சேர்ந்த போர் விமானமும் சாகசத்தில் ஈடுபட்டது. எல்.யூ.எச்., எல்.சி.எச். ஹெலிகாப்டர்கள் சாகசத்தில் ஈடுபட்டன. ரபேல் போர் விமானங்கள் வானத்தில் தாறுமாறாக சுழன்று சாகசம் நிகழ்த்தின.

    இந்த கண்காட்சியில் ரஷியா, அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, இஸ்ரேல், உக்ரைன் உள்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 400 விமான உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்று அரங்குகளை அமைத்துள்ளன.

    வருகிற 24-ந் தேதி வரை 5 நாட்கள் இந்த கண்காட்சி நடைபெறுகிறது.
    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பத்காம் மாவட்டத்தில் நடந்த சண்டையில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். #JKEncounter #MilitantsNeutralised
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பத்காம் மாவட்டம், கோபால்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று காலை அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தனர்.



    அப்போது பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இந்த மோதலில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. #JKEncounter #MilitantsNeutralised
    ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்தியாவும் பதில் தாக்குதல் நடத்தியது. #Pakviolatesceasefire
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி தாக்குதல்  நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது.

    இதுதொடர்பாக ராணுவ அதிகாரிகள் கூறுகையில், பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லைப் பகுதியில் இன்று மதியம் 1.15 மணியளவில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும், கையெறி குண்டுகளை வீசி தாக்கினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவமும் தாக்குதல் நடத்தியது என தெரிவித்துள்ளார்.
    #Pakviolatesceasefire
    ×