search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 101815"

    சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்காக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் இன்று மேகாலயாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். #SaradhaScam #KolkataCommissioner #CBI
    புதுடெல்லி:

    சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்துவதற்காக சம்மன் அனுப்பியது. அவர் தொடர்ந்து ஆஜராகாத நிலையில், சமீபத்தில் கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர். அப்போது சிபிஐ அதிகாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தி சிறைப்பிடித்தனர். காவல் நிலையம் அழைத்துச் சென்று சிறிது நேரம் விசாரித்து விட்டு பின்னர் விடுவித்தனர்.

    சிபிஐ அதிகாரிகள் தடுக்கப்பட்டது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும், மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.



    இதையடுத்து, கொல்கத்தா கமிஷனர் ராஜீவ் குமாரிடம் பிப்ரவரி 9-ம் தேதி விசாரணை நடத்துவதற்காக சிபிஐ சம்மன் அனுப்பியது. இதையடுத்து கமிஷனர் ராஜீவ் குமார் நேற்றே ஷில்லாங் வந்து சேர்ந்தார். அவருடன் மாநில போலீஸ் அதிகாரிகள் 3 பேர் வந்தனர். இதேபோல் சிபிஐ தரப்பில் கமிஷனரிடம் விசாரணை நடத்துவதற்காக டெல்லியில் இருந்து 10 அதிகாரிகள் நேற்றே ஷில்லாங் வந்து சேர்ந்தனர்.

    இன்று சிபிஐ அலுவலகத்தில் கமிஷனர் ராஜீவ் குமார் ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சாரதா நிறுவன மோசடி வழக்கு தொடர்பான ஆவணங்கள் அழிக்கப்பட்டது தொடர்பாக, கமிஷனரிடம் அதிகாரிகள் விசாரித்தனர். இதற்கிடையே, சிபிஐ அலுவலகத்திற்கு வெளியே திரண்ட திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள், மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #SaradhaScam #KolkataCommissioner #CBI
    மேற்கு வங்காள மண்ணை மம்தா களங்கப்படுத்தி விட்டார். சாரதா நிதி நிறுவன ஊழல்வாதிகளை பாதுகாப்பவர்களை இந்த காவலாளி தப்ப விடமாட்டான் என்று பிரதமர் மோடி கூறினார். #MamataBanerjee #CBIvsMamata #PMModi
    கொல்கத்தா :

    மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டம் சூராபந்தரில் பா.ஜனதா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அவர் பேசியதாவது:-

    மேற்கு வங்காளத்தில் இடதுசாரிகளை வீழ்த்தி ஆட்சியை பிடித்தவர்கள், அதே வன்முறை கலாசாரத்தையே பின்பற்றுகிறார்கள். அவர்கள் மேற்கு வங்காள மண்ணை களங்கப்படுத்தி விட்டார்கள். அதனால் மக்கள் நிர்க்கதியாக விடப்பட்டுள்ளனர்.

    லட்சக்கணக்கான ஏழைகளின் பணத்தை கொள்ளையடித்த மோசடியாளர்களை பாதுகாக்க ஒரு முதல்-மந்திரி தர்ணா போராட்டம் நடத்தியது, இதுவே முதல்முறை. ஆனால், இந்த காவலாளி (மோடி), சாரதா நிதி நிறுவன ஊழல்வாதிகளையோ, அவர்களை பாதுகாப்பவர்களையோ தப்ப விடமாட்டான்.

    இவ்வாறு மோடி பேசினார்.

    மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் வழங்கப்பட்ட காண்டாமிருக பொம்மை நினைவுப்பரிசுடன் பிரதமர் மோடி.

    சுராபந்தரில், கொல்கத்தா ஐகோர்ட்டின் சர்க்யூட் கிளையை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.

    அப்போது அவர் பேசுகையில், ‘‘வடக்கு வங்காள மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி உள்ளது. அவர்கள் வழக்கு தொடர இனிமேல் 600 கி.மீ. பயணம் செய்து கொல்கத்தாவுக்கு செல்ல வேண்டியது இல்லை. 100 கி.மீ.க்குள் இங்கு வந்து விடலாம்’’ என்று கூறினார்.

    சத்தீ‌ஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் நேற்று நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கு அவர் பேசியதாவது:-

    விவசாய கடன் தள்ளுபடி செய்வதாக பொய் சொல்லி, சத்தீ‌ஷ்காரில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. ஆனால், கூட்டுறவு, கிராமப்புற வங்கிகளில் பெற்ற கடன்களை மட்டும் தள்ளுபடி செய்துள்ளனர்.

    அப்படியானால், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி பெற தகுதி இல்லையா? இந்த விதிமுறைகளை ஏன் முன்பே சொல்லவில்லை? அடகுகடைக்காரர்களிடமும், உறவினர்களிடமும் பெற்ற கடன்களை யார் தள்ளுபடி செய்வது?

    சத்தீ‌ஷ்கார் மாநில அரசு, சி.பி.ஐ.க்கு முட்டுக்கட்டை போட முடிவு செய்துள்ளது. தவறு செய்தவர்கள்தான் விசாரணையை கண்டு பயப்படுவார்கள். காரணமின்றி யாராவது விசாரணை நடத்துவார்களா?

    இந்திரா காந்தி குடும்பத்தில் பெரும்பாலானோர், ஒன்று ஜாமீனில் இருக்கிறார்கள் அல்லது முன்ஜாமீன் பெற்றிருக்கிறார்கள். மெகா கலப்பட கூட்டணியிடம் மக்கள் உ‌ஷாராக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #MamataBanerjee #CBIvsMamata #PMModi
    அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைதான இடைத்தரகர் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு அளித்துள்ளார். #ChristianMichel #AgustaWestlandscam #VVIPchopperscam #CBI
    புதுடெல்லி:

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக பிரிட்டன் நாட்டை சேர்ந்த கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் என்பவரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் தீர்மானித்தனர். துபாயில் இருக்கும் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என துபாய் அரசாங்கத்துக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

    இந்நிலையில், கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் சமீபத்தில்  துபாய் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.  துபாயில் இருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்ட அவரிடம் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் பலமணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர், டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

    கிறிஸ்டியன் மைக்கேலை 5 நாள் காவலில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிப்பதற்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். அந்த விசாரணை காலம் முடிவடைந்ததால் கிறிஸ்டியன் மைக்கேல் கடந்த பத்தாம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    இந்த ஊழல் தொடர்பான விசாரணையில் உரிய ஒத்துழைப்பு அளிக்க மைக்கேல் மறுப்பதாகவும், சில கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்காமல் மழுப்பலாக பேசுவதாகவும் நீதிபதியிடம் குறிப்பிட்ட சி.பி.ஐ. வழக்கறிஞர், அவரை மேலும் 9 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்குமாறு கேட்டு கொண்டார். விசாரணைக் காவல் முடிவடைந்தபின்னர், நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இதேபோல் அமலாக்கத்துறையும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்நிலையில், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்குகளில் ஜாமீன் கோரி கிறிஸ்டியன் மைக்கேல் இன்று டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், கடந்த டிசம்பர் 22ம் தேதி முதல் தான் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், விசாரணை முடிந்து 60 நாட்கள் ஆன நிலையில் தன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததால் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில் அவர் மீது 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததன் காரணம் குறித்து 12ம் தேதிக்குள் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பதிலளிக்கும்படி சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் உத்தரவிட்டார். வழக்கின் விசாரணையையும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தார். #ChristianMichel #AgustaWestlandscam #VVIPchopperscam #CBI   

    விவிஐபி ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் வழக்கில் பிடிபட்டுள்ள இடைத்தரகர் ராஜீவ் சக்சேனாவின் விசாரணைக் காவலை மேலும் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #EDcustody #AgustaWestlandcase #RajeevSaxena
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. 

    இதில் ரூ.362 கோடி லஞ்சப் பணம் இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இதே விவகாரத்தில் சட்டவிரோதமாக வெளிநாட்டு பணம் இந்தியாவுக்கு வந்துள்ளதாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், அமலாக்கத்துறை கடந்த 18-7-2018 அன்று துணை குற்றப்பத்திரிகையை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 

    இந்த குற்றப்பத்திரிகையில் இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 34 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. மேலும், இடைத்தரகர்களாக செயல்பட்ட வெளிநாட்டினர் கிறிஸ்டியன் மைக்கேல், கார்லோ ஜெரோசா, கைடோ ஹாஷ்கே, துபாய் வாழ் இந்தியரான ராஜீவ் சக்சேனா ஆகியோருக்கு எதிராக ஜாமினில் வெளிவராத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

    இவர்களில் கிறிஸ்டியன் மைக்கேல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துபாயில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

    தலைமறைவாக இருந்த மற்றொரு இடைத்தரகர் ராஜீவ் சக்சேனா 31-1-2019 அன்று துபாயில் கைது செய்யப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டார். முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் ராஜீவ் சக்சேனா ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து 4 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி சச்சேனாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

    சச்சேனாவின் விசாரணைக் காவல் நிறைவடைந்ததையடுத்து, இன்று அவரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியிருப்பதாலும், மேலும் தகவல்களைப் பெறவேண்டியிருப்பதாலும் சச்சேனாவின் நீதிமன்றக் காவலை நீட்டிக்கும்படி அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிமன்றம், சச்சேனாவின் விசாரணைக் காவலை மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது.

    முன்னதாக, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வழக்கறிஞர் கவுதம் கெய்தானின் விசாரணைக் காவலும் இன்று நிறைவடைந்ததையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை பிப்ரவரி 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் தரப்பில் ஜாமீன் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வரும் 15-ம் தேதிக்குள் அமலாக்கத்துறை பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது. #EDcustody #AgustaWestlandcase #RajeevSaxena #GautamKhaitan
    எங்கள் கட்சிகளுடன் தி.மு.க. இன்னும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இந்த மாத இறுதிக்குள் பேச்சு வார்த்தை தொடங்க வாய்ப்பு உள்ளது என்று திருமாவளவன் கூறியுள்ளார். #mkstalin #thirumavalavan #parliamentelection

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருப்பதால் தமிழகத்தில் அரசியல் கட்சியினர் கூட்டணி பேச்சு வார்த்தையில் மறைமுகமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தி.மு.க.- அ.தி.மு.க. தலைமையில் 2 அணிகள் தேர்தலை சந்திக்க வாய்ப்பு உள்ளன. தி.மு.க.வை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு வரை முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. தற்போது உள்ள சூழலில் தி.மு.க. தலைமையில்தான் 11 கட்சிகள் இடம் பெற்று மெகா கூட்டணியாக உருவாகியுள்ளது.

    இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாவது:-

    டெல்லியில் ஆட்சி அமைப்பது யார்? என்பதை தமிழகம் தான் முடிவு செய்யும். தமிழகத்தின் தேர்தல் முடிவு தான் அகில இந்திய அளவில் எதிர் பார்க்கப்படுகிறது.

    மோடிக்கு எதிராக அணி திரளும் மத சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து மத்தியில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவோம். மம்தா பானர்ஜி தலைமையில் 20 கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன.

    இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் காங்கிரசுடன் கூட்டணி வைக்க தயாராகி விட்டன. தமிழ்நாட்டில் மோடிக்கு எதிராக தி.மு.க. கூட்டணியில் 11 கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய முஸ்லிம் லீக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, பொன்குமாரின் கட்டிட தொழிலாளர் கட்சி ஆகியவை ஒன்றிணைந்துள்ளன.

    தி.மு.க.வுக்கு எதிராக ஒரு சில கட்சிகள் இருந்தாலும் இன்னும் அணி என்ற வடிவம் பெறவில்லை.

    பா.ஜ.க.வோடு அ.தி.மு.க. கூட்டணி வைக்க மாட்டார்கள். சி.பி.ஐ.யை வைத்து அச்சுறுத்தி தான் அ.தி.மு.க.வோடு பா.ஜனதா கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது. மனமுவந்து கூட்டணி அமையாது.

    பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்தால் அது அ.தி.மு.க.வுக்கு தான் நஷ்டம். பலவீனம் ஆகி விடும்.

    பா.ம.க., தே.மு.தி.க.வுக்கு மக்களிடம் செல்வாக்கு இல்லை. இருவரையும் சேர்த்து கொண்டால் கூட்டணியில் எண்ணிக்கைதான் கூடுமே தவிர பயன் இல்லை.

    கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க. இன்னும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இந்த மாத இறுதிக்குள் பேச்சு வார்த்தை தொடங்க வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #mkstalin #thirumavalavan #parliamentelection

    எதிர்க்கட்சியினரை பழிவாங்கும் நடவடிக்கையில் மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி சி.பி.ஐ., வருமான வரித்துறையை பயன்படுத்துகிறது என்று புதுவை முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டினார். #Congress #Narayanasamy #BJP
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனத்தில் நடந்த வெள்ளி விழா ஆண்டு தொடக்க விழாவில் புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்திய நாட்டின் மிகப்பெரிய பலமே மனித வளம். மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் சீனாவை நாம் மிஞ்சியுள்ளோம். 30 வயதுக்குறைந்த இளைஞர்கள் நம்முடைய நாட்டில் 60 சதவீதம் பேர் உள்ளனர். இதனால் தான் வெளிநாடுகளிலிருந்து லட்சக்கணக்கான கோடி ரூபாய் நம்முடைய நாட்டில் முதலீடு செய்யப்படுகிறது. பல நிறுவனங்கள் நம் நாட்டை நோக்கி வருகின்றனர்.

    அதுமட்டுமல்லாமல் நம் நாட்டிலே படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள், விஞ்ஞானிகள், அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, தென்கொரியா, ஐரோப்பியா போன்ற நாடுகளில் சென்று பணிபுரியும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

    மத்திய பாரதிய ஜனதா ஆட்சியில் சாதாரண மக்களுக்கு, நடுத்தர மக்களுக்கும், தொழில் வியாபாரிகளுக்கு, தொழிற்சாலை நிறுவனங்களுக்கு ஒரு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பல வாக்குறுதிகளை கொடுத்த மத்திய அரசு நான்கரை ஆண்டுகள் ஆகியும் முழுமையாக நிறைவேற்றவில்லை. பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி இவைகளெல்லாம் நாட்டில் வேலைவாய்ப்பை குறைத்து பொருளாதார நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

    கடந்த மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் இந்திய நாட்டில் வளர்ச்சி 9 சதவீதம் இருந்தது. தற்போது 7.1 சதவீதமாக ஆகியுள்ளது. இந்தியாவில் பொருளாதாரம் 2 சதவீதம் குறைந்துள்ளது. பாரதிய ஆட்சியால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து துறைகளையும் சரி செய்ய குறைந்த பட்சம் ஓராண்டு ஆகும். விவசாயிகள், தொழில் நிறுவனம், தொழிற்சாலை, தொழிலாளர்கள், சிறுபான்மையினர், அரசு ஊழியர்கள் போன்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்க முதல்வரே தெருவில் இறங்கி போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.

    அதற்கு காரணம் வருமான வரி, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. அதை தன் கையில் எடுத்துக் கொண்டு அரசியல் எதிரிகளையும், தொழில் அதிபர்களையும் பழிவாங்கும் நடவடிக்கையில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது. சி.பி.ஐ. நிறுவன தலைவரே ஊழல் செய்ததாக கூறப்படுகிறது. இதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு எல்லாமே பலவீனமடைந்துள்ளது. இந்திய பொருளாதாரத்தை உயர்த்த வேண்டுமென்றால் நாட்டில் மாற்றம் வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #Narayanasamy #BJP
    சி.பி.ஐ. அமைப்பை ஏவி எதிர்க்கட்சிகளை மத்திய அரசு பழிவாங்குவதாக கூறி தர்ணா போராட்டம் நடத்தி வரும் மம்தா பானர்ஜியை தி.மு.க. எம்.பி. கனிமொழி இன்றிரவு நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். #KanimozhimeetMamata #MamataBanerjeedharna
    கொல்கத்தா:

    சி.பி.ஐ. அதிகாரிகளை அனுப்பி கொல்கத்தா நகர போலீஸ் கமிஷனரை கைது செய்ய முயன்ற சம்பவத்தை மையப்படுத்தி மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி நேற்றிரவில் இருந்து மத்திய அரசுக்கு எதிராக நடத்திவரும் ‘ஜனநாயகம் காப்போம்’ போராட்டம் 8-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வரும் மம்தா பானர்ஜியை தி.மு.க. எம்.பி. கனிமொழி இன்றிரவு நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

    பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசியல் பிரமுகர்களும் மம்தா பானர்ஜியை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். #KanimozhimeetMamata #MamataBanerjeedharna 
    மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு எதிராக நடத்திவரும் ‘ஜனநாயகம் காப்போம்’ போராட்டம் 8-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #Mamata #Mamatadharna
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் சாரதாநிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த கொல்கத்தா மாநகர போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் நேற்று மாலை சென்றனர்.
      
    அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சி.பி.ஐ. அதிகாரிகளை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதுகுறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, கமிஷனர் வீட்டிற்கு வந்த சிபிஐ அதிகாரிகள் குழுவை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    மேற்கு வங்காளம் மாநில போலீசாரின் நடவடிக்கை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தரப்பில் இன்று வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு நாளை விசாரிக்கப்படவுள்ளது.

    மத்திய அரசின் கைக்கூலியாக செயல்படும் சி.பி.ஐ.யை வைத்து எதிர்க்கட்சிகளை மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு மிரட்டி வருவதற்கு கண்டனம் தெரிவித்து மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தா நகரில் நேற்றிரவில் இருந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

    அவருக்கு ஆதரவாக பல்வேறு மாநில கட்சி தலைவர்களும், முதல் மந்திரிகளும் கருத்து வெளியிட்டு வருகின்றனர். மத்தியில் ஆளும் பா.ஜ.க. மற்றும் அதன் ஆதரவு கட்சியினர் மம்தாவின் போக்குக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மாநிலத்தின் பல பகுதிகளில் மத்திய அரசை கண்டித்தும் மம்தாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாகவும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றுவரும் விவசாயிகள் பேரணியில் ‘பேஸ்புக் லைவ்’ மூலம் தர்ணா போராட்டம் நடத்திவரும் இடத்தில் இருந்து மம்தா பானர்ஜி இன்று மாலை உரையாடினார்.

    மத்திய அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் அரசு பணியாளர்களும் தற்போது இலக்காகி விட்டனர். மக்கள் பேசவே பயப்படுகின்றனர். மக்களின் ஜனநாயக உரிமைகள் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகிறது என தனது பேச்சினிடையே குறிப்பிட்ட மம்தா பானர்ஜி, எனது தர்ணா போராட்டம் வரும் 8-ம் தேதி வரை தொடரும் எனவும் தெரிவித்தார். 

    அதன் பின்னர் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பொதுத்தேர்வுகள் நடப்பதால் போராட்டம் கைவிடப்படும் என கருதப்படுகிறது. #Mamata #Mamatadharna 
    மேற்கு வங்கத்தில் சிபிஐ அமைப்புக்கும், மம்தா பானர்ஜி தலைமையிலான அரசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கு மற்றும் தற்போதைய சூழ்நிலை தொடர்பாக உள்துறைக்கு கவர்னர் அறிக்கை அனுப்பி உள்ளார். #CBI #WestBengalGovernor
    கொல்கத்தா:

    சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கு தொடர்பாக, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்துவதற்காக, சிபிஐ அதிகாரிகள் நேற்று மாலை கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சிபிஐ அதிகாரிகளை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதுகுறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, கமிஷனர் வீட்டிற்கு வந்த சிபிஐ அதிகாரிகள் குழுவை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.



    சிபிஐ நடவடிக்கையை கண்டித்தும், நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை காக்க வலியுறுத்தியும் மெட்ரோ சேனல் அருகே முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று இரவு முதல் விடிய விடிய தர்ணா போராட்டம் நடத்தினார். அதேசமயம், திரிணாமுல் காங்கிரஸ்  தொண்டர்களும் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

    இதையடுத்து, சிபிஐ அதிகாரிகளை சிறைப்பிடித்தது மற்றும் மாநிலத்தில் நிலவும் சூழ்நிலை தொடர்பாக மேற்கு வங்க அரசிடம் உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டது.

    இதையடுத்து,  தலைமைச் செயலாளர் மற்றும் மாநில டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் கவர்னர் திரிபாதி ஆலோசனை நடத்தினார். நிலைமையை சரி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர், அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், உள்துறைக்கு கவர்னர் திரிபாதி ரகசிய அறிக்கை அனுப்பியுள்ளார். #CBI #WestBengalGovernor
    மம்தா பானர்ஜி அரசை கவிழ்க்க பிரதமர் மோடி சதி செய்கிறார் என்று திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். #thirumavalavan #mamata #pmmodi

    சென்னை:

    உத்தரபிரதேசத்தில் மகாத்மா காந்தியின் உருவ படத்தை துப்பாக்கியால் சுட்ட இந்து மகா சபை நிர்வாகிகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் இந்து மகாசபை நிர்வாகிகளை கைது செய்யக் கோரி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

    பின்னர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மகாத்மா காந்தி இந்தியாவின் அடையாளம். இந்து மகா சபை தேசிய செயலாளர் பூஜாசகுன் பாண்டே மற்றும் நிர்வாகிகள் காந்தியை அவமதித்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயிற்சி பெற்று பின்னர் இந்து மகா சபை உறுப்பினராகி காந்தியை சுட்டு கொன்றவர் கோட்சே. அவரது வாரிசுகள் இன்று மீண்டும் ஆயுதங்களுடன் வலம் வருகிறார்கள்.

    ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார் அமைப்பினர்தான் கவுரிலங்கேஷ், கல்புர்சி ஆகியோரை வீடு தேடி சென்று துப்பாக்கியால் சுட்டு கொன்றார்கள்.

    மேற்கு வங்காளத்தில் சாரதா சிட் பண்ட் வழக்கில் மம்தாவுக்கு எதிராக சாட்சி சொல்லும்படி சிலர் வற்புறுத்தப்படுகின்றனர். இது வன்மையான கண்டனத்திற்குரியது.


    மம்தா சமீபத்தில் பா.ஜனதாவுக்கு எதிராக பல்வேறு கட்சி தலைவர்களையும் ஒன்றிணைத்து மாநாடு நடத்தியதே சி.பி.ஐ. ஏவி விடப்பட்டிருப்பதற்கு காரணம். மம்தா பானர்ஜி அரசை கவிழ்க்க பிரதமர் மோடி சதி செய்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சிந்தனை செல்வன், பாவரசு, எஸ்.எஸ். பாலாஜி, வன்னியரசு, இரா. செல்வம், வி.கோ, ஆதவன், செல்லதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர். #thirumavalavan #mamata #pmmodi

    கொல்கத்தாவில் போலீஸ் கமிஷனரிடம் விசாரணை நடத்த விடாமல் தடுத்தது தொடர்பாக, சிபிஐ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #CBI #KolkataCommissioner
    புதுடெல்லி:

    சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்துவதற்காக சிபிஐ அதிகாரிகள் நேற்று கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றனர். ஆனால், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சிறைப்பிடித்தனர். காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி, பின்னர் விடுவித்தனர்.



    அதேசமயம் சிபிஐ நடவடிக்கையை கண்டித்தும், நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை காக்க வலியுறுத்தியும் மெட்ரோ சேனல் அருகே மம்தா பானர்ஜி நேற்று இரவு தர்ணாவை தொடங்கினார். இதில் கொல்கத்தா மாநகர போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரும் பங்கேற்றார். மம்தாவின் போராட்டம் இன்றும் நீடிக்கிறது. அங்கு திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டுள்ளனர்.

    இந்நிலையில், கொல்கத்தா விவகாரம் தொடர்பாக, சிபிஐ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாருக்கு உத்தரவிடும்படி கூறப்பட்டுள்ளது.  

    பலமுறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ஒத்துழைக்க மறுப்பதாகவும், விசாரிக்க சென்றால் தடைகளை ஏற்படுத்துவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

    இந்த மனுவை இன்றே விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. ஆனால், உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. கொல்கத்தா போலீஸ் கமிஷனருக்கு எதிரான ஆதாரங்களை நாளை தாக்கல் செய்யும்படி சிபிஐக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவு பிறப்பித்தார்.

    வலுவான ஆதாரங்கள் இருந்தால் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வருந்தும் அளவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார். #CBI #KolkataCommissioner
    ராகேஷ் அஸ்தானாவை விமான போக்குவரத்து பாதுகாப்பு பிரிவு பொது இயக்குநராக நியமிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கை சுப்ரீம் கோர்ட்டு இன்று தள்ளுபடி செய்தது. #SC #RakeshAsthana
    புதுடெல்லி:

    சி.பி.ஐ. சிறப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டு இருந்த ராகேஷ் அஸ்தானாவை விமான போக்குவரத்து பாதுகாப்பு பிரிவில்  பொது இயக்குநராக மத்திய அரசு ஜனவரி 18-ஆம் தேதி நியமித்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு இன்று தள்ளுபடி செய்துள்ளது.

    மூத்த வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தாக்கல் செய்த மனு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

    முன்னதாக, ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய மறுத்த டெல்லி ஐகோர்ட், அவர் மீதான குற்றச்சாட்டுக்களை 10 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்கவேண்டும் என ஜனவரி 11-ஆம் தேதி உத்தரவிட்டது நினைவிருக்கலாம். #SC #RakeshAsthana
    ×