search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 101815"

    பல்வேறு பிரச்சனைகளை மையமாக வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக அமளியில் ஈடுபட்டதால் பாராளுமனற மாநிலங்களவை இன்றும் ஒத்திவைக்கப்பட்டது. #RajyaSabha #RajyaSabhaadjourned #oppositionuproar
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மாநிலங்களவை இன்று கூடியதும் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து பேசுவதற்கு சில கட்சி உறுப்பினர்கள் அனுமதி கேட்டனர்.

    உத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ், 2012-2016 ஆண்டுகளுக்கு இடையில் அம்மாநிலத்தின் சிறிய சுரங்கங்கள் துறையை தனது பொறுப்பில் வைத்திருந்தார். இந்த காலகட்டத்தில் அனுமதி பெறாமல் பல சுரங்கங்கள் இயங்கியதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக, அந்த துறையை முன்னர் நிர்வகித்த அகிலேஷ் யாதவ் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தியதால் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, மத்திய அரசின் இந்த நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் செயல் என குற்றம்சாட்டி சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் எம்.பி.க்கள் மாநிலங்களவையில் நேற்று அமளியில் ஈடுபட்டனர்.



    இதேபோல், கேரள மாநிலத்தில் சபரிமலை கோவில் விவகாரத்தில் பா.ஜ.க.வினரால் நடத்தப்படும் வன்முறை சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மா.கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். ரபேல் போர் விமான பேரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.க்களும் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.

    இதனால் மாநிலங்களவையை நடத்த இயலாத நிலை ஏற்பட்டதால், சபாநாயகர் வெங்கையா நாயுடு அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.

    இந்நிலையில், பாராளுமன்ற மாநிலங்களவை இன்று கூடியதும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என சில கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    அதன்பின், மதியம் 2 மணிக்கு அவை தொடங்கியதும் மீண்டும் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அவை மதியம் 3.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    மீண்டும் அவை தொடங்கியதும் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், இரண்டாவது நாளாக பாராளுமனற மாநிலங்களவை இன்றும் நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. #RajyaSabha #RajyaSabhaadjourned #oppositionuproar
    சி.பி.ஐ. இயக்குனராக அலோக் வர்மா மீண்டும் பொறுப்பேற்பதால் ரபேல் விசாரணையில் இருந்து பிரதமர் மோடியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #AlokVerma #Rafaleprobe #Rahulgandhi
    புதுடெல்லி:

    மத்திய அரசால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்  23-ம் தேதி கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா அந்தப் பதவியில் தொடர சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.

    இந்த தீர்ப்பு வெளியானதும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராளுமன்றம் வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ரபேல் விவகாரம் தொடர்பான விசாரணையை சி.பி.ஐ. இயக்குனர் அலோக்  வர்மா தொடரவிருந்த நிலையில் நள்ளிரவு ஒரு மணியளவில் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். தற்போது அவர் சுப்ரீம் கோர்ட்டால் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். நீதி நிலைநாட்டப்பட்டதன் மூலம் எங்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது.


    அவர்கள் ரபேல் விவகாரத்தில் இருந்து ஓடிப்போக முடியாது. அது நடக்காது. மக்கள் மன்றத்தில் விவாதம் நடத்தாமல் மோடி ஓடினார். ரபேல் விவகாரத்தில் உண்மை இருப்பதால் உண்மையிடம் இருந்து யாரும் தப்பியோடி விட முடியாது.

    ரபேல் ஒப்பந்தத்தில் மக்களின் பணம் 30 ஆயிரம் கோடி ரூபாயை எடுத்து தனது நண்பர் அனில் அம்பானிக்கு கொடுத்தது சந்தேகத்தின் நிழல் துளிகூட இல்லாமல் இந்த விசாரணையில் தெரியவரும். அடுத்து இனி என்ன நடக்கும்? என்று பார்க்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #CBIDirector #AlokVerma #Rafaleprobe #CBIenquiry #Rahulgandhi #AnilAmbani
    மத்திய அரசால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா அந்தப் பதவியில் தொடர சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #CBIDirector #AlokVerma
    புதுடெல்லி:

    சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே மோதல் இருந்து வந்த நிலையில், ராகேஷ் அஸ்தானா 3 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

    இதைதொடர்ந்து, அலோக் வர்மா சி.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் எடுத்த இந்த நடவடிக்கையால் அவரை கட்டாய விடுப்பில் வைத்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. மேலும், சி.பி.ஐ. இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில், தன்னை பதவி நீக்கம் செய்ததை எதிர்த்து அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.



    இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியானது.

    சி.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மாவை நீக்கி மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோரை கொண்ட அமர்வு உத்தரவிட்டது

    எனினும், அவர் மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் நடத்திவரும் விசாரணை முடிவடையும்வரை அவர் கொள்கை அடிப்படையிலான எவ்விதமான முக்கிய முடிவும் எடுக்கக்கூடாது என கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

    இவ்விவகாரத்தில் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஆகியோரை கொண்ட தேர்வு குழுவின் முடிவுக்கு விட்டிருக்கலாம் எனவும் கோர்ட் சுட்டிக்காட்டியது.

    இன்றைய தீர்ப்பு தொடர்பாக டெல்லி போலீசாருக்கான சிறப்பு சட்டத்தின் அடிப்படையில் மத்திய அரசின் உயரதிகாரம் கொண்ட குழு இன்னும் ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    வரும் 31-ம் தேதியுடன் தனது இரண்டாண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்யும் அலோக் வர்மா இந்த உத்தரவு மூலம் அதுவரை மீண்டும் சி.பி.ஐ. இயக்குனராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.  #CBIDirector  #AlokVerma 
    சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் கட்சிகள் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைத்துள்ளதால் அதை உடைக்கும் வகையில் சி.பி.ஐ. விசாரணையை மத்திய அரசு ஏவி விட்டுள்ளது என்று அகிலேஷ் யாதவ் புகார் தெரிவித்துள்ளார். #akhileshyadav #Samajwadi Bahujansamaji

    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் 2012-ல் இருந்து 2017 வரை அகிலேஷ் யாதவ் முதல்-மந்திரியாக இருந்து வந்தார். அப்போது 2012-ல் இருந்து 2013 வரை சுரங்கத்துறை மந்திரி பொறுப்பையும் அவர் கூடுதலாக கவனித்து வந்தார். பின்னர் வேறு மந்திரி நியமிக்கப்பட்டார்.

    இந்த காலக்கட்டத்தில் விதிமுறைகளை மீறி சுரங்கங்களை அனுமதித்து முறைகேடு செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் ஏற்கனவே சி.பி.ஐ. வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியது.

    ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா, சமாஜ்வாடி எம்.எல்.சி. ரமேஷ்குமார் மிஸ்ரா உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் சி.பி.ஐ. மீண்டும் விசாரணை தொடங்கி உள்ளது. கடந்த சனிக்கிழமை பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது.

    அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது ஆட்சியில் சுரங்கத் துறை மந்திரியாக இருந்தவர் ஆகியோரிடம் விசாரணை நடத்தவும் சி.பி.ஐ. திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

    இது சம்பந்தமாக அகிலேஷ் யாதவ் கூறியதாவது:-

    உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் கட்சிகள் பாரதீய ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைத்துள்ளதால் அதை உடைக்கும் வகையில் சி.பி.ஐ. விசாரணையை மத்திய பாரதீய ஜனதா அரசு ஏவி விட்டுள்ளது.

    பழைய வழக்கை மீண்டும் தோண்டி விசாரிக்கிறார்கள். இதன்மூலம் பாரதீய ஜனதா தனது உண்மையான முகத்தை காட்டுகிறது.

    சி.பி.ஐ.யை தனது கைப்பாவையாக வைத்து கொண்டு பாரதீய ஜனதா இந்த நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது.

    நாங்கள் கூட்டணி அமைத்து மக்களை சந்திக்க செல்கிறோம். எங்களை தடுத்து விடலாம் என்று பார்க்கிறார்கள். சி.பி.ஐ. என்ன செய்ய முடியுமோ? செய்யட்டும்.

    அவர்கள் எங்களிடம் கேள்வி கேட்டால் நாங்கள் பதில் சொல்ல தயார். நாங்கள் சொல்லும் பதில் மட்டும் அல்ல, இந்த நாட்டின் மக்களும் பாரதீய ஜனதாவுக்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறார்கள்.

    பாரதீய ஜனதா தனது உண்மை முகத்தை காட்டியதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு காலத்தில் காங்கிரஸ் இதை செய்தது. இப்போது பாரதீய ஜனதா செய்கிறது.

    பாரதீய ஜனதாவின் இந்த செயலுக்கு எதிர் விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #akhileshyadav #Samajwadi Bahujansamaji

    சுரங்கங்கள் ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததாக உ.பி. முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் மீதான சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து மாநிலங்களவையில் அம்மாநில எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். #RajyaSabha #RajyaSabhaadjourned #oppositionuproar
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மாநிலங்களவை இன்று கூடியதும் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து பேசுவதற்கு சில கட்சி உறுப்பினர்கள் அனுமதி கேட்டனர்.

    உத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ், 2012-2016 ஆண்டுகளுக்கு இடையில் அம்மாநிலத்தின் சிறிய சுரங்கங்கள் துறையை தனது பொறுப்பில் வைத்திருந்தார். இந்த காலகட்டத்தில் அனுமதி பெறாமல் பல சுரங்கங்கள் இயங்கியதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக, அந்த துறையை முன்னர் நிர்வகித்த அகிலேஷ் யாதவ் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தியதால் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் செயல் என குற்றம்சாட்டி சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் எம்.பி.க்கள் மாநிலங்களவையில் இன்று அமளியில் ஈடுபட்டனர்.


    கேரள மாநிலத்தில் சபரிமலை கோவில் விவகாரத்தில் பா.ஜ.க.வினரால் நடத்தப்படும் வன்முறை சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மா.கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். ரபேல் போர் விமான பேரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.க்களும் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.

    இதனால் மாநிலங்களவையை நடத்த இயலாத நிலை ஏற்பட்டது. உறுப்பினர்களை அமைதியாக இருக்குமாறு கூறிய சபாநாயகர் வெங்கையா நாயுடுவின் முயற்சி பலனளிக்காததால் அவையை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைப்பதாக அவர் அறிவித்தார். #RajyaSabha #RajyaSabhaadjourned #oppositionuproar
    வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிக்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளியாக டெல்லி சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. #VijayMallya #SpecialPMLACourt
    புதுடெல்லி:

    தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடனை செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பி ஓடி தற்போது லண்டனில் வசித்து வருகிறார். இது தொடர்பாக அவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. மேலும், அவரை நாடுகடத்தவும் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் கோரி மத்திய அரசு தொடர்ந்த வழக்கு அந்நாட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இதற்கிடையே புதிதாக கொண்டுவரப்பட்ட ‘தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின்’ கீழ், விஜய் மல்லையாவை தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கக்கோரி, மும்பையில் உள்ள பண மோசடி தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. 

    இந்த வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார். அப்போது, கடனை திருப்பிச் செலுத்தாமல் நாட்டைவிட்டுச் சென்ற மல்லையாவை தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளியாக அறிவித்தார். பொருளாதார குற்றவாளி என்பதால் மல்லையாவின் சொத்துக்களை அரசு பறிமுதல் செய்யலாம் என்றும் நீதிபதி தெரிவித்தார். மேலும், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு கால அவகாசம் வழங்கவும் மறுத்துவிட்டார். #VijayMallya #SpecialPMLACourt
    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறியது அமைச்சர் சிவி சண்முகத்தின் சொந்த கருத்து என ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். #OPanneerselvam#cvshanmugam
    ஆலந்தூர்:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது உறுதி என்றும், சிறப்பு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று முன்தினம் பேட்டி அளித்தார். இந்த கருத்தை மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரும் ஆதரித்தார்.

    இந்த நிலையில் கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த துணை முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் விமானநிலையத்தில் பேட்டியளித்தார். அப்போது அவரிடம், அமைச்சர் சி.வி.சண்முகம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக தெரிவித்த கருத்து குறித்து கேட்கப்பட்டது.



    அதற்கு பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம், ‘அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதை அவரது சொந்த கருத்தாக பார்க்கிறேன் என்று தெரிவித்தார். மேலும், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும், கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும்’ என்றும் அவர் தெரிவித்தார். #OPanneerselvam#cvshanmugam
    ஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் இருப்பது உண்மை தான் எனவும் இதுகுறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தினால் தான் நாட்டு மக்களுக்கு உண்மைத் தெரியவரும் எனவும் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #MKStalin #JayalalithaaDeath
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் இருக்கிறது என்று மிகத்தெளிவாக அமைச்சர் சி.வி.சண்முகம் சொல்லியிருக்கிறார். இது சம்பந்தமாக முறையாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் இருப்பது உண்மை. இதுகுறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தினால் தான் நாட்டு மக்களுக்கு உண்மைத் தெரியவரும். ஆறுமுகசாமி கமிஷனில் உண்மை வெளிவருவதற்கான வாய்ப்பு இல்லை என்பது தான் எனது கருத்து.

    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் குறித்து 4-ந்தேதி யார் விருப்பம் தெரிவித்திருக்கிறார்களோ அவர்களையும், மாவட்ட நிர்வாகிகளையும் அழைத்து பேசி அன்று மாலையில் யார் வேட்பாளர் என்பதை அறிவிக்க இருக்கிறோம். வெற்றி பெறக்கூடிய அளவிற்கு எங்களுடைய வியூகம் அமையும்.



    2019-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயமாக மிகப்பெரிய மாற்றம் வரப்போகிறது. அந்த மாற்றத்தை மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். மாற்றத்தை வரவேற்கக்கூடிய சூழ்நிலையில் தமிழ்நாட்டு மக்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.  #MKStalin #JayalalithaaDeath
    குட்கா குடோனில் நடந்த சோதனையின்போது, சோதனையை பாதியில் நிறுத்த உத்தரவிட்ட உயர் போலீஸ் அதிகாரி யார்? என குடோனில் சோதனை நடத்திய போலீஸ் அதிகாரிகளிடம் சி.பி.ஐ.போலீசார் நேற்று விசாரணை நடத்தினார்கள். #Gutkascam #CBI
    சென்னை:

    குட்கா ஊழல் வழக்கை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபற்றி வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ. போலீசார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை நகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட 35 பேரின் வீடுகளில் சோதனை நடத்தினார்கள்.

    அதைத் தொடர்ந்து குட்கா வியாபாரியும், தொழில் அதிபருமான மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த வழக்கில் டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் சென்னையில் முகாமிட்டு தற்போது அடுத்த கட்ட விசாரணையை நடத்தி வருகிறார்கள். அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது உதவியாளர் சரவணன், முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    நேற்று முன்தினம் முதல் போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை தொடங்கி விட்டது. குட்கா வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 7 போலீஸ் அதிகாரிகள் நேற்றுமுன்தினம் விசாரணைக்கு ஆஜரானார்கள்.

    2016-ம் ஆண்டு சென்னை செங்குன்றத்தில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனில், அப்போதைய சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஜெயக்குமார் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தலையீட்டின்பேரில், அந்த சோதனை முழுமையாக நடைபெறாமல் பாதியில் முடிக்கப்பட்டதாக தெரிகிறது.

    அப்போது சோதனை முழுமையாக நடைபெற்று இருந்தால், குட்கா ஊழல் இவ்வளவு பெரிய விசுவரூபம் எடுத்திருக்காது. அதன் பிறகுதான் வருமானவரித்துறையினர் குறிப்பிட்ட குட்கா குடோனில் சோதனை நடத்தி, ரூ.40 கோடி லஞ்ச ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தனர்.

    ஜெயக்குமார் தற்போது விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றுகிறார். சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது முதல் கட்ட விசாரணையிலேயே ஜெயக்குமாரிடம் விசாரித்து முடித்துவிட்டனர்.

    குட்கா குடோனில் ஜெயக்குமார் சோதனை நடத்தியபோது, அவருடன் சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு, 2 போலீஸ்காரர்கள் உள்ளிட்ட 7 பேர் நேற்று சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்கள். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    குட்கா குடோனில் நடந்த சோதனையை பாதியில் நிறுத்தச் சொல்லி உத்தரவிட்ட உயர் போலீஸ் அதிகாரி பற்றி நேற்றைய விசாரணையில் துருவி, துருவி சி.பி.ஐ. அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. விரைவில் அந்த உயர் போலீஸ் அதிகாரியை சி.பி.ஐ. போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வருவார்கள் என்று தெரிகிறது. #Gutkascam #CBI
    பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க. யாருடன் கூட்டணி என்பது குறித்து தேர்தல் அறிவித்த பிறகு அறிவிப்போம் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார். #PMK #AnbumaniRamadoss
    சேலம்:

    சேலத்தில் இன்று பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு முதற்கட்ட ஆய்வுக்கு அனுமதி கொடுத்தது. இது தமிழகத்திற்கு துரோகம் இழைப்பதாக உள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக இதை செய்துள்ளது.

    தமிழகத்தின் அனுமதி இல்லாமல் காவிரியின் குறுக்கே அணை கட்ட முடியாது. இது குறித்து முதல்-அமைச்சர் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தவில்லை. மேகதாதுவில் அணைக் கட்டுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். கர்நாடகாவில் மேகதாது அணை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்றது தமிழகத்திற்கு எதிரானது. டெல்டா மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணறுகள் உள்ளன. 150-க்கும் மேற்பட்ட எண்ணெய் கிணறுகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் முதல்வர் சட்டசபையை கூட்டி டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக மாற்ற வேண்டும்.

    மத்திய அரசின் அணை பாதுகாப்பு சட்டமசோதாவால் தமிழகத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் அதனை எதிர்க்கிறோம். ஸ்டெர்லைட் ஆலை ஏற்கனவே 2 முறை மூடி திறக்கப்பட்டுள்ளது. தற்போது 3-வது முறையாக திறக்கப்பட உள்ளது. இதில் தமிழக அரசு தற்போது நாடகம் ஆடி வருகிறது. நிரந்தரமாக மூடுவதற்கான காரணங்கள் பற்றி கோர்ட்டில் மாநில அரசு சொல்ல வேண்டும்.

    கஜா புயலுக்கு இதுவரையிலும் நிவாரணம் வழங்கப்படவில்லை. ஒரு சிலருக்கு மட்டும் வங்கிக் கணக்கில் ரூ.10 ஆயிரம் செலுத்தப்பட்டுள்ளது. இதையும் வங்கிகள் விவசாய கடனுக்காக பிடித்து வைத்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். பின்னர் கணக்கீடு செய்து சேதத்திற்கு தகுந்தப்படி வழங்க வேண்டும். சென்னை- சேலம் இடையே 8-வழிசாலை தேவையற்றது. நான் தொடுத்த வழக்கில் அடுத்த மாதம் தீர்ப்பு வரவுள்ளது. கன்னியாகுமரி- சென்னை 8 வழிச்சாலை போடலாம். மேட்டூர் உபரி நீர் திட்டத்தை செயல்படுத்தினால் சேலம் கிழக்கு மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இந்த ஆண்டில் மட்டும் மேட்டூரில் 170 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலுக்கு சென்றுள்ளது. இதில் 5 டி.எம்.சி. தண்ணீர் எடுத்தால் சேலம் கிழக்கு மாவட்டம் வளமடையும். சேலம் இரும்பாலைக்கு 4300 ஏக்கர் நிலம் எடுக்கப்பட்டது. தற்போது இந்த நிலத்தை தனியாருக்கு விற்க முயற்சி செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுத்து நிறுத்துவதுடன் ஏற்கனவே இந்த நிலத்தை கொடுத்த விவசாயிகளுக்கே நிலத்தை திருப்பி கொடுக்க வேண்டும்.

    விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைப்பதால் கடும் பாதிப்பு ஏற்படுகிறது. தரை வழியாக மின்சாரத்தை கொண்டு செல்ல வேண்டும். விவசாயத்தை அழித்தால் அடுத்த தலைமுறை வாழமுடியாது. தேர்தலில் ஓட்டுச் சீட்டு முறை கொண்டு வருவது நல்லது.


    பொன் மாணிக்கவேல் நேர்மையான அதிகாரி. சிலை திருட்டு வி‌ஷயத்தில் முக்கிய பிரமுகர்கள் சிக்குவதால் சி.பி.ஐ. விசாரணைக்கு கேட்கிறார்கள். 50-க்கும் மேற்பட்ட வழக்குகளில் நாங்கள் சி.பி.ஐ.க்கு கேட்டபோது அரசு எதிர்த்தது.

    பி.சி.ஆர். வழக்குகளில் யாரும் பாதிக்கக்கூடாது. தேர்தலில் கூட்டணி குறித்து தவறான தகவல்களை பரப்புகின்றனர். பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க. யாருடன் கூட்டணி என்பது குறித்து தேர்தல் அறிவித்த பிறகு எங்கள் நிலைபாடு குறித்து அறிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது, மாநில பொதுச்செயலாளர் இரர். அருள், முன்னாள் எம்.எல்.ஏ.கார்த்தி, மாவட்ட செயலாளர் கதிர் ராசரத்தினம் உள்பட பலர் உடன் இருந்தனர். #PMK #AnbumaniRamadoss
    ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததில் எந்த தவறும் இல்லை என்று செஞ்சியில் திருமண வரவேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார். #mkstalin #rahulgandhi #pmmodi

    செஞ்சி:

    விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், செஞ்சி தொகுதி எம்.எல்.ஏ.வுமான செஞ்சி மஸ்தான் மகன் திருமண வரவேற்பு விழா இன்று காலை செஞ்சியில் உள்ள அல்ஹிலால் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

    இந்த விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    செஞ்சி மஸ்தான் இல்ல திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இது திருமண வரவேற்பு விழாவா? அல்லது மாநாடா? என்று தெரியவில்லை. அந்தளவுக்கு மக்கள் கூடியுள்ளீர்கள்.

    கஜா புயலால் திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சை உள்பட 8 மாவட்டங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டன. இதுவரை பிரதமர் மோடி கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க வரவில்லை. இதுவே மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களில் நடந்திருந்தால் மோடி வருத்தம் தெரிவிக்கிறார், அனுதாபம் தெரிவிக்கிறார். ஏன் வெளிநாடுகளில் அசம்பாவிதம் நடந்தால் கூட அனுதாபம் தெரிவித்து செய்தி வெளியிடுகிறார். ஆனால், தமிழ்நாட்டில் விவசாயம் அழிந்து வருகிறது. கஜா புயல் 8 மாவட்டங்களை பெருமளவில் சூறையாடி உள்ளது. இதற்கு பிரதமர் வருத்தம் தெரிவிக்கவில்லை.

    தமிழக அரசு 14 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசிடம் நிதி கேட்டது. ஆனால், 300 கோடி ரூபாயை மட்டுமே மத்திய அரசு தந்துள்ளது. இதுவும் நிவாரண தொகையாக தரவில்லை. மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு வழக்கம்போல் கொடுக்கப்படும் நிதியாக கொடுக்கப்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது.

    கலைஞர் சிலை திறப்பு விழாவின்போது மோடியை நான் ‘சேடிஸ்ட்’ என்று கூறியதாக பல்வேறு விமர்சனங்கள் வந்துள்ளது. நான் தனிப்பட்ட மோடியை விமர்சிக்கவில்லை. அவர் பிரதமராக இருக்கிறார் என்றதால் அவரை சேடிஸ்ட் என்று கூறினேன். இதில் என்ன தவறு? ஒருமுறை அல்ல, பலமுறை அவரை ‘சேடிஸ்ட்’... ‘சேடிஸ்ட்’... என்று கூறினாலும் அதுமிகையாகாது.


    நாட்டில் மாற்றம் தேவை என கருதி ராகுலை பிரதமராக முன்மொழிந்தேன். அதில் என்ன தவறு? கலைஞர் இந்திராகாந்தியை அழைத்து நிலையான ஆட்சி தரவேண்டும் என்றார். அதன் பின்னர் சோனியாகாந்தியை அழைத்து நல்லாட்சி தரவேண்டும் என்றார். அதன் வரிசையிலேயே தற்போது நான் ராகுலை அழைத்து நல்லாட்சி தர வேண்டும் என்று முன்மொழிந்துள்ளேன். நான் ராகுலை முன்மொழிந்தது தவறு என்று யாரும் கூறவில்லை. மோடிக்கு எதிராக நல்லகூட்டணி அமைத்த பின்பு அறிவிக்கலாம் என்று இருந்தனர்.

    இனி மத்தியிலும், மாநிலத்திலும் ஆள முடியாத இருகட்சிகளும் தி.மு.க.வை விமர்சிப்பது வியப்பாக உள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் பலியானார்கள். அதில் 12 பேரின் தலையிலும், மார்பிலும் குண்டு பாய்ந்துள்ளது. இதில் போலீசார் விதிமுறைகளை மீறி குறிபார்த்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

    இதற்காக நான் அன்றே சொன்னேன். சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று. ஆனால், தற்போதுள்ள எடப்பாடி ஆட்சி உச்சநீதிமன்றம் வரை சென்று சி.பி.ஐ. விசாரணை வேண்டாம் என்று வலியுறுத்தியது. ஆனால், அதையும் மீறி சி.பி.ஐ. விசாரணை தற்போது நடந்து வருகிறது. எனவே, மத்தியிலும், தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் தேவை என்று தமிழக மக்கள் தயாராகி விட்டனர். தமிழகத்தில் பாரதிய ஜனதா தலைதூக்க முடியாது. அதுபோல இந்தியாவிலும் பாரதிய ஜனதாவை தூக்கி எறிவோம். தமிழக அரசு மத்திய அரசிடம் மண்டியிட்டு கிடக்கிறது.

    இனிவரும் பாராளுமன்ற தேர்தலாக இருக்கட்டும், சட்டமன்ற தேர்தலாக இருக்கட்டும், உள்ளாட்சி தேர்தலாக இருக்கட்டும் அதில் தி.மு.க.வே வெற்றி பெற சபதம் ஏற்போம்.

    இவ்வாறு அவர் பேசினார். #mkstalin #rahulgandhi #pmmodi

    காங்கிரஸ் ஆட்சியில் மாதந்தோறும் 9 ஆயிரம் டெலிபோன்கள் மற்றும் 300 இ-மெயில்கள் டேப் செய்யப்பட்டும், இடைமறித்தும் சோதனை நடத்தப்பட்டது என்று தகவல் அறியும் சட்டத்தில் தெரியவந்துள்ளது. #Congress

    புதுடெல்லி:

    அனைத்து கம்ப்யூட்டர்களையும் இடைமறித்து சோதனை நடத்தும் அதிகாரத்தை சி.பி.ஐ. உள்ளிட்ட 10 அமைப்புகளுக்கு மத்திய அரசு சமீபத்தில் வழங்கியது. அதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. தனிமனிதனி சுதந்திரத்தில் மத்திய அரசு தலையிடுவதாக குற்றம்சாட்டினர்.

    அதற்கு பதில் அளிக்கும் விதமாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில் இந்த சட்டம் தற்போதைய ஆட்சியாளர்களால் புதிதாக கொண்டு வரப்படவில்லை. மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி செய்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2008-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் சட்ட முன்வரைவு தாக்கல் செய்தது.

    அப்போது தி.மு.க.வை சேர்ந்த அ.ராசா தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரியாக இருந்தார். காங்கிரஸ் கட்சியின் சிவ் ராஜ் பாட்டீல் உள்துறை மந்திரியாக இருந்தார். இது 2009-ம் ஆண்டு சட்டமானது. அப்போது அ.ராசா தகவல் மற்றும் ஒளிபரப்பு மந்திரியாகவும், ப.சிதம்பரம் உள்துறை மந்திரியாகவும் இருந்தனர்.

    குற்றங்கள் மற்றும் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் மற்றும் மிரட்டல்களை கண்டுபிடிக்க இச்சட்டம் கொண்டுவரப்பட்டதாக அரசு தெரிவித்தது. அப்போது மாதந்தோறும் 9 ஆயிரம் டெலிபோன்கள் மற்றும் 300 இ-மெயில்கள் டேப் செய்யப்பட்டும், இடைமறித்தும் சோதனை நடத்தப்பட்டது.

    நாள்தோறும் 300 டெலிபோன்கள் மற்றும் 20 இ-மெயில்கள் இடைமறித்து டேப் செய்யப்பட்டன. இந்த தகவல் கடந்த 2013-ம் ஆண்டு டெல்லியை சேர்ந்த புரோசென்ஜித் என்பவரால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்காக வழங்கப்பட்ட பதிலில் உள்ளது.

    எனவே இந்த சட்டத்தை நாங்கள் (பா.ஜனதா அரசு) கொண்டுவரவில்லை. முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டுவந்து நடைமுறைப்படுத்தி உள்ளது. தற்போது அதில் ஒரே ஒரு வித்தியாசம் மட்டுமே உள்ளது. தற்போதைய பா.ஜனதா அரசு கம்ப்யூட்டர்களை இடைமறித்து தகவல்களை அறிய 10 நிறுவனங்களுக்கு அதிகாரம் வழங்கி உள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது. #Congress

    ×