search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாணியம்பாடி"

    வாணியம்பாடி அருகே மோட்டார் சைக்கிள் தென்னை மரத்தில் மோதி 2 பேர் இறந்தனர்.

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அருகே உள்ள கோவிந்தாபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வேலாயுதம் (50), பார்த்திபன் (55) வடசேரியில் பார்த்திபன் மகளை திருமணம் செய்து கொடுத்துள்ளார். மகள் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது.

    இதுபற்றி பேசுவதற்காக பார்த்திபன், வேலாயுதம் இருவரும் நேற்று வடசேரிக்கு சென்றுவிட்டு மாலையில் பைக்கில் வந்து கொண்டிருந்தனர். வெங்கடாபுரம் கூட்ரோடு அருகே வந்தபோது பைக் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த தென்னை மரத்தில் மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்தனர். வாணியம்பாடி தாலுகா போலீசார் அவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு வேலாயுதம் இறந்தார்.

    பார்த்திபனை மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். நள்ளிரவு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வாணியம்பாடி அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாணியம்பாடி:

    சென்னை போரூரை சேர்ந்த உமாபதி. அவரது நண்பர்கள் 4 பேர் காரில் ஏலகிரி மலைக்கு சென்றனர். இன்று மதியம் ஊருக்கு புறப்பட்டு வந்தனர்.

    வாணியம்பாடி அருகே தாலிஅறுத்தான்மேடு என்ற இடத்தில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர புளியமரத்தில் மோதியது. இதில் செல்வபிரகாசம், சிவா, ஜானகிராமன் ஆகியோர் சம்பவ இடத்தில் இறந்தனர். சுப்பிரமணி என்பவர் படுகாயத்துடன் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். உமாபதி லேசான காயத்துடன் தப்பினார்.

    வாணியம்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பலியானவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வாணியம்பாடி அருகே காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த சிறுத்தை மீண்டும் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்ததால் 15 கிராம மக்கள் விடிய விடிய தூங்காமல் பீதியில் தவித்தனர்.

    வாணியம்பாடி:

    வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சிக்கணாங்குப்பம் ஊராட்சி நாகலேரிவட்டம் பகுதியில் கடந்த மாதம் 28-ந் தேதி சிறுத்தை ஒன்று கரும்பு தோட்டத்தில் பதுங்கியது. அப்பகுதியை கடந்த பெண் உள்பட 3 பேர் மீது அது திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இத்தகவல் பரவியதை அடுத்து, கரும்புத் தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை மீது அப்பகுதியை சேர்ந்த திரளானோர் ஒன்றிணைந்து கல்வீச்சு நடத்தினர். அப்போது கூட்டத்தினர் மீது சிறுத்தை பாய்ந்து தாக்குதல் நடத்தியதில், மேலும் 3 பேர் காயமடைந்தனர்.

    இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் முருகன் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க மாட்டு இறைச்சி, கோழி ஆகியவற்றை அடைத்த 3 கூண்டுகளை சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் வைத்தனர். மயக்க மருந்து செலுத்தி சிறுத்தையைப் பிடிக்க வண்டலூர், ஓசூரில் இருந்து மயக்க மருந்து நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். 3 நாள்கள் அவர்கள் தொடர்ந்து சிறுத்தையை பிடிக்க முயற்சித்த போதும் அது சிக்கவில்லை.

    ஆந்திர வனப்பகுதிக்குள் சிறுத்தை தப்பி சென்று விட்டது. இனி இந்த பகுதிக்குள் சிறுத்தை வராது என்று வனத்துறையினர் அங்கிருந்து சென்றனர்

    இந்நிலையில், சிக்கனாங்குப்பம் அருகே உள்ள அரப்பாண்டகுப்பம் கிராமத்தினுள் நேற்று அதிகாலை மீண்டும் சிறுத்தை புகுந்தது. அங்குள்ள மாட்டுக் கொட்டகை அருகே சிறுத்தை வந்ததைக் கண்ட மாடுகள் கத்தியது. இதனை கேட்ட கிராமத்தினர் தீப்பந்தங்களுடன் ஓடி வந்து சிறுத்தையை விரட்டினர்.

    அதைத் தொடர்ந்து, சிறுத்தை ராஜாமணிவட்டம் கிராமத்தில் புகுந்தது. அங்கு கொட்டையில் கட்டி வைத்திருந்த 2 மாடுகள், கன்று குட்டியை தாக்கியது.

    கன்றுக்குட்டி, மாடுகள் கத்தியதைக் கேட்ட அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து சிறுத்தையை விரட்டினர். காயமடைந்த கன்றுக்குட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் காயமடைந்த 2 மாடுகள் பரிதாபமாக இறந்தது. சிறுத்தை கடித்து இதுவரை 5 மாடுகள் இறந்துள்ளது.

    விடிய, விடிய தவித்த கிராம மக்கள்

    வாணியம்பாடியை சுற்றி தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் இரவு நேரத்தில் வெளியே வருவதற்கு அச்சமடைந்துள்ளனர்.

    சிறுத்தை மீண்டும் ஊருக்குள் புகுந்து விடுமோ என்ற அச்சத்தில் அப்பகுதியை சுற்றி உள்ள கொத்தூர், பச்சூர், சிக்கனாங்குப்பம், சங்கரபுரம், தும்பேரி, அரப்பாண்ட குப்பம், சிமுக்கம்பட்டு உள்ளிட்ட 15 கிராம மக்கள் இரவு முழுவதும் தூங்காமல் தவித்து விடிய, விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இளைஞர்கள் கிராம வீதியில் தீப்பந்தம் கொளுத்தி வைத்திருந்தனர்.

    இன்று காலை திருப்பத்தூர் வன அலுவலர் சோழராஜன் தலைமையில் வனத்துறையினர் சிக்கனாம்குப்பம், அரபாண்டகுப்பம், ராஜாமணி வட்டம், சிமுக்கம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்களிடம் சிறுத்தை நடமாட்டம் குறித்து கேட்டறிந்தனர். பலியான மாட்டின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர்.

    சிறுத்தையின் கால் தடங்களை பதிவு செய்து வருகின்றனர். சிறுத்தை எந்த திசையை நோக்கி சென்றுள்ளது என்பது குறித்த ஆய்வு செய்து வருகின்றனர். சிறுத்தையை பிடிக்க வைக்கப்பட்டிருந்த கூண்டில் தானியங்கி கதவு வேலை செய்யாததால் மாட்டு இறைச்சியை சிறுத்தை தின்று விட்டு தப்பி சென்று விட்டது.அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    வனத்துறையினர் மைக் மூலம் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர்.

    கிராம மக்கள் இரவு நேரத்தில் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் கூட வீட்டை விட்டு வெளியே வரமல் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

    தமிழக- ஆந்திர வனத்துறை இணைந்து பிடிக்க வலியுறுத்தல்

    கிராம மக்கள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபிலை சந்தித்து சிறுத்தையை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினர். இந்த கிராமங்கள் அனைத்தும் ஆந்திர மாநில எல்லையில் இருப்பதால் சிறுத்தையை இங்கிருந்து விரட்டினால் ஆந்திர வனப்பகுதிக்குள் சென்று விடுகிறது.

    நம் மாநில வனத்துறையினர் சிறுத்தை ஆந்திர வனப்பகுதிக்குள் சென்று விட்டது இனி வராது என்கின்றனர். ஆனால் சில நாட்களில் சிறுத்தை மீண்டும் தமிழக கிராம பகுதிக்குள் புகுந்து எங்களை அச்சத்தில் ஆழ்த்துகிறது.

    இதனால் தமிழக- ஆந்திர வனத்துறையினர் கூட்டாக இணைந்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். * * * சிறுத்தை நடமாட்டம் உள்ள கிராம பகுதியில் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடந்த காட்சி.

    வாணியம்பாடி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். #Leopard

    வாணியம்பாடி:

    வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த சிக்கணாங்குப்பம் அருகே உள்ள நாகலேரி வட்ட பகுதியில் கடந்த 28-ந் தேதி சிறுத்தை புகுந்தது அங்குள்ள கரும்பு தோட்டத்தில் பதுங்கியது.

    கரும்புத்தோட்டத்துக்கு சென்ற பொதுமக்கள் 3 பேரை சிறுத்தை திடீரென பாய்ந்து தாக்கியது.

    சிறுத்தை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. ஏராளமானோர் அப்பகுதியில் திரண்டனர். சிலர் சிறுத்தைப்புலி இருந்த பகுதியை நோக்கி கல்வீசினர். இதனால் கோபம் கொண்ட சிறுத்தை மக்கள் கூடி இருந்த கூட்டத்தில் புகுந்து தாக்க ஆரம்பித்தது. இதனால் பொதுமக்கள் உயிர் தப்பினால் போதும் என கருதி நாலாபுறமும் சிதறி ஓடினர். இருப்பினும் சிறுத்தை அவர்களை துரத்தி மேலும் 3 பேரை தாக்கியது.

    சிறுத்தையை பிடிக்க 3 கூண்டுகள் கொண்டு வரப்பட்டது. அதில் மாட்டு இறைச்சி, கோழி, நாய் ஆகியவற்றை அடைத்து ஏரி பகுதியில் வைத்துள்ளனர். சிறுத்தையை மயக்க மருந்து செலுத்தி பிடிக்க வண்டலூர், ஓசூரில் இருந்து மயக்க மருந்து நிபுணர்கள் வரவழைக்கபட்டனர்.

    வனத்துறையினர் மயக்க ஊசியுடன் சிறுத்தையை தேடினர். ஆனால் சிறுத்தை சிக்கவில்லை.

    சிறுத்தை அங்கிருந்து தப்பி காட்டுக்குள் சென்றது. இந்த நிலையில் சிக்கனாங்குப்பம் அருகே உள்ள அரப்பாண்ட குப்பம் கிராமத்திற்குள் நேற்று இரவு சிறுத்தை புகுந்தது. ரவி என்பவர் மாட்டு கொட்டகை அருகே வந்தது. அதனை கண்டதும் மாடுகள் சத்தமிட்டன. பொதுமக்கள் தீப்பந்தங்கள் கொளுத்தி சிறுத்தையை விரட்டினர். அவர்கள் விடிய விடிய தூங்காமல் கண்காணித்தனர்.

    அங்கிருந்து ஓடிய சிறுத்தை ராஜாமணிவட்டம் கிராமத்திற்கு சென்று முருகன் என்பவரது கன்றுகுட்டியை தாக்கியது. சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் அதனை விரட்டியடித்தனர். கன்றுகுட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

    வாணியம்பாடி அருகே மயக்க ஊசி போட்டு சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். #Leopard

    வாணியம்பாடி:

    வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த சிக்கணாங்குப்பம் அருகே உள்ள நாகலேரி வட்ட பகுதியில் நேற்று முன்தினம் சிறுத்தை புகுந்தது அங்குள்ள கரும்பு தோட்டத்தில் பதுங்கியது.

    நேற்று காலை அலமேலு என்ற பெண் மாட்டுக்கு தீவனம் எடுக்க கரும்புத் தோட்டத்துக்கு சென்றார். அப்போது சிறுத்தை சத்தமிட்டது. இதனால் திடுக்கிட்ட அந்த பெண் ஊருக்குள் சென்று பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கரும்புத்தோட்டத்துக்கு சென்றனர். பதுங்கி இருந்த சிறுத்தை திடீரென பாய்ந்து 3 பேரை தாக்கியது. பொதுமக்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சிறுத்தை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. அதைத்தொடர்ந்து ஏராளமானோர் அப்பகுதியில் திரண்டனர். இதில் சிலர் சிறுத்தைப்புலி இருந்த பகுதியை நோக்கி கல்வீசினர்.

    இதனால் கோபம் கொண்ட சிறுத்தை மக்கள் கூடி இருந்த கூட்டத்தில் புகுந்து தாக்க ஆரம்பித்தது. இதனால் பொதுமக்கள் உயிர் தப்பினால் போதும் என கருதி நாலாபுறமும் சிதறி ஓடினர். இருப்பினும் சிறுத்தை அவர்களை துரத்தியது.

    அப்போது சிறுத்தை தாக்கியதில் மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களும் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பொதுமக்கள் கலைந்து ஓடியதால் சிறுத்தை மறுபடியும் நாகலேரி முட்புதரில் புகுந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் வனத்துறை அதிகாரி சோழராஜன், வாணியம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், தாசில்தார் கிருஷ்ணவேனி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பில் 3 கூண்டுகள் கொண்டு வரப்பட்டது. அதில் மாட்டு இறைச்சி, கோழி, நாய் ஆகியவற்றை அடைத்து ஏரி பகுதியில் வைக்கப்பட்டது.

    மேலும் சிறுத்தையை மயக்க மருந்து செலுத்தி பிடிக்க வண்டலூர், ஓசூரில் இருந்து மயக்க மருந்து நிபுணர்கள் வரவழைக்கபட்டனர்.

    வனத்துறையினர் மயக்க ஊசியுடன் இரவு முழுவதும் சிறுத்தையை தேடினர். ஆனால் சிறுத்தை சிக்கவில்லை. இன்று காலை கரும்பு தோட்டம், முள்புதர்களில் சிறுத்தையை தேடினர். அங்கு அது இல்லை அங்கிருந்து 3 கி.மீட்டர் தொலைவில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. சிறுத்தை காட்டுக்குள் சென்றிருக்க வாய்ப்புள்ளது.

    அதனை பிடிக்க தொடர்ந்து வனத்துறையினர் முகாமிட்டுள்ளனர். பொதுமக்கள் சிறுத்தையை பார்த்தால் அதை தாக்க முயற்சி செய்யவேண்டாம். அந்த இடத்தில் இருந்து வெளியேறி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். #Leopard

    வாணியம்பாடி அருகே சிறுத்தை தாக்கி 5 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. #Leopard

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் சிறுத்தைபுலி நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் கூறி வந்தனர்.

    நேற்று ஆம்பூர் அடுத்த அரங்கல் துருகம் பகுதியில் கன்றுகுட்டி, 2 ஆடுகளை சிறுத்தை கடித்து குதறியது.

    இந்த நிலையில் இன்று காலை நாகலேரி வட்டம் சிக்கனாங்குப்பம் பகுதியை சேர்ந்த பாரதி (வயது 45). இவரது தங்கை அலுமேலு (42). ஆகிய 2 பேரும் மாடுகளுக்கு தீவனம் சேகரிப்பதற்காக ஏரிகரைக்கு சென்றனர்.

    ஏரிக்கரை அருகே கரும்பு தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று திடீரென பாய்ந்து அலுமேலுவை கடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாரதி சிறுத்தையை விரட்டினார். அவரையும் கையில் கடித்தது. அப்போது அந்த வழியாக வந்த சந்தோஷ் என்பவரையும் சிறுத்தை கையில் கடித்தது.

     


    இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து சிறுத்தையை விரட்டியடித்தனர். பொதுமக்களை கண்டதும் சிறுத்தை மீண்டும் அங்கிருந்த கரும்பு தோட்டத்திற்கு சென்று பதுங்கி கொண்டது.

    படுகாயமடைந்த 3 பேரையும் மீட்ட பொது மக்கள் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வாணியம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் உள்பட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலங்காயம் மற்றும் திருப்பத்தூர் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மயக்க ஊசி செலுத்தி கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    சிறுத்தைபுலியை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் சிறுத்தை பதுங்கியுள்ள இடத்தில் திரண்டனர். கரும்பு தோட்டத்தின் ஒரு பகுதியில் தீ வைத்தனர். மேலும் சிறுத்தை நோக்கி கற்களை வீசினர். அப்போது கூட்டத்தில் புகுந்த சிறுத்தை அங்கு நின்றிருந்த 2 பேரை கடித்து குதறியது. இதில் கமல் என்பருக்கு வயிறு பகுதியிலும், சுப்பு என்பவருக்கு கையிலும் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  #Leopard

    வாணியம்பாடி அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ரே‌சன் அரிசிமூட்டைகளை பொதுமக்களே பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அருகே உள்ள தேவராஜபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சில நாட்களாக ஆந்திர மாநிலத்திற்கு ரேசன் அரிசி கடத்துபவர்களை கண்காணித்து வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று தமிழக எல்லையில் 2 லாரிகள், 2 கார், ஒரு பைக் போன்றவற்றில் ரே‌சன்அரிசி மூட்டைகளை கும்பல் கடத்த முயன்றனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த வாகனங்களை மடக்கி பிடித்தனர்.

    இதில் 2 லாரிகள் தப்பி சென்று விட்டன. மற்ற 2 கார்கள் ஒரு பைக் மட்டும் பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரேசன்அரசியை கடத்திய ஆந்திர மாநிலம் ராமக்குப்பத்தை சேர்ந்த கேசவரெட்டி, பானு, கோவர்தணரெட்டி, மஞ்சுநாதன், விஜயகுமார் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்து 500கிலோ ரே‌ஷன் அரிசி மூட்டைகள் மற்றும் ரூ.50 ஆயிரம்ரொக்கம் 4 செல்போன்கள் கடத்தலுக்குபயன்படுத்திய இரண்டு கார்கள் ஒருபைக்கை பறிமுதல் செய்தனர்.

    மேலும் லாரிகளுடன்தப்பியோடிய கடத்தல் குமபலை போலீசார் தேடிவருகின்றனர். இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி கிராமிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பணத்தகராறில் மிரட்டல் விடுத்ததால் லாரி டிரைவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அ.தி.மு.க. பிரமுகர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த மேல்நிம்மியம்பட்டை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 52). லாரி டிரைவர். இவருக்கு தாமரை என்ற மனைவி, ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கோவிந்தசாமிக்கு செக்குமேட்டில் 75 சென்ட் நிலம் உள்ளது.

    அந்த நிலத்தை விற்க கோவிந்தசாமி முடிவு செய்தார். அதன்படி, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரான எம்.ஜி. என்ற ஜெய்சங்கரிடம் ரூ.7 லட்சம் விலை பேசினார்.

    முன் பணம் ரூ.2½ லட்சம் பெற்று கொண்டார். மீதித் தொகையை 3 மாதத்திற்குள் கொடுத்து நிலத்தை கிரயம் செய்வதாக அ.தி.மு.க. பிரமுகர் கூறினார். கடைசி வரை மீதி பணத்தை தந்து அவர் நிலத்தை கிரயம் செய்யவில்லை.

    இதனால், காலக்கெடு முடிந்ததையடுத்து வேறு நபருக்கு கோவிந்தசாமி தனது நிலத்தை விற்றுவிட்டார். இதனால் அ.தி.மு.க. பிரமுகர் ஜெய்சங்கர் ஆத்திரமடைந்தார். முன் பணமாக கொடுத்த ரூ.2½ லட்சத்தை திருப்பி கேட்டு நச்சரித்தார். பணத்தை கோவிந்தசாமி தராததால் அ.தி.மு.க. பிரமுகர் மிரட்டல் விடுத்தார். மேலும், தனது ஆதரவாளர்களுடன் சென்று தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

    மேலும், வாணியம்பாடி தாலுகா போலீசிலும் கோவிந்தசாமி மீது அ.தி.மு.க. பிரமுகர் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வந்தனர். கோவிந்தசாமி வரும் 20-ந் தேதிக்குள் 2½ லட்சம் ரூபாயையும் கொடுப்பதாக எழுதி கொடுத்தார்.

    இந்த நிலையில், நேற்று அ.தி.மு.க. பிரமுகர் ஜெய்சங்கர் ஆதரவாளர்களுடன் மீண்டும் கோவிந்தசாமியை அழைத்து மிரட்டினார். இதனால் மனமுடைந்த கோவிந்தசாமி தனது பைக்கில் பெட்ரோலை பிடித்து, உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

    உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. கட்டப்பஞ்சாயத்து பேசி மிரட்டல் விடுத்த அ.தி.மு.க. பிரமுகர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஓடி விட்டனர். அப்பகுதி மக்கள், கோவிந்தசாமி உடல் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

    பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய அவரை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கோவிந்தசாமி மாற்றப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, ஆலங்காயம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு அ.தி.மு.க. பிரமுகர் ஜெய்சங்கரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாணியம்பாடி அடுத்த ஆலங்காயத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டான்.
    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியை சேர்ந்தவர் சம்பத். இவரது மகன் விஷால் (வயது 15). ஆலங்காயம் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி இருந்தான்.

    இந்த நிலையில் நேற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் மாணவன் விஷால் தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் ஆகிய 3 பாடங்களில் குறைந்த மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்தான். இதனால் மனமுடைந்த விஷால் வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டான்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆலங்காயம் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் இருந்து மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ஆலங்காயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    ×