என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 102422"
உயர்நிலைப்பள்ளி, தலைமையாசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், அமைச்சுப்பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள் ஆகியோர் ஊதிய முரண்பாடுகளை களைந்திட வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்கி மத்திய அரசில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை முழுமையாக வழங்க வேண்டும், ஊதிய மாற்றத்தால் ஏற்பட்ட 21 மாத ஊதிய நிலுவைத்தொகை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஆகிய அதிகாரிகளுக்கு வழங்கியபோல அரசு ஊழியர், ஆசியர்களுக்கும் முழுமையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வேலை நிறுத்த தொடர் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அறிவித்திருந்தது.
அதன்படி இன்று காலை சேலம் மாவட்டத்தில் சேலம், மேட்டூர், சங்ககிரி, எடப்பாடி, காடையாம்பட்டி, ஓமலூர், ஆத்தூர், வாழப்பாடி, ஏற்காடு, கெங்கவல்லி உள்ளிட்ட தாலுகா அலுவலகங்களின் முன்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் தலைமை தாங்கி, பேசினர். அப்போது 9- அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அனைவரும் கோஷங்கள் எழுப்பினர். இதில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆரம்ப பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள் திரளாக கலந்து கொண்டனர்.
இது குறித்து ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக் குழு உறுப்பினரும், தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளருமான சந்திரசேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
9-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று மாவட்ட தாலுகா முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இந்த போராட்டத்தில் அரசு ஆரம்பபள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள், அரசு உழியர்கள் என மொத்தம் 10 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர்.
நாளை மற்றும் நாளை மறுநாள் தாலுகா அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. எங்களது கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வில்லையெனில் வருகிற 25-ந்தேதி சேலம் மாவட்ட தலைநகரான கலெக்டர் அலுவலகம் முன்பு அனைவரும் திரண்டு மிகப் பெரிய மறியல் போராட்டம் நடத்த உள்ளோம். இதில் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இன்று நடந்த இந்த போராட்டத்தால் அரசு சார்ந்த பணிகள் பாதிக்கப்பட்டது. உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறையில் அரசு அலுவலர்கள் இல்லாததால் திரும்பிச் சென்றனர்.
வாரிசு சான்றிதழ், சாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் பெற முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, ராசிபுரம், நாமக்கல், பரமத்திவேலூர் உள்ளிட்ட அனைத்து தாலுகா அலுவலகங்களின் முன்பு வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதனால் அரசு பணிகள் முடங்கியது.
இந்த போராட்டத்தையொட்டி தாலுகா அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுப்பு போடப்பட்டிருந்தது. #tamilnews
சேலம்:
தொழிலாளர் நலச்சட்டங்களை முறையாக அமல் படுத்த வேண்டும், பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு விற்க கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்த பட்ச மாத ஊதியம் 18 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினர்.
நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர், அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், பி.எஸ்.என்.எல். மற்றும் எல்.ஐ.சி. ஊழியர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2-வது நாளான இன்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் சேலம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது.
அரசு ஊழியர்கள், ஏற்காடு எஸ்டேட் தொழிலாளர்கள் நாட்டாமை கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீரங்கா பாளையம் பி.எஸ்.என்.எல்.அலுவலகம் முன்பு பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காந்திரோட்டில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களால் அரசு பணிகள் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து இன்று காலை வாழப்பாடி, வீரபாண்டி, இளம்பிள்ளை, மேச்சேரி, ஓமலூர், இரும்பாலை, ஆட்டையாம் பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் உள்ளூர் பஸ்கள் வழக்கம்போல் இயங்கின.
அதுபோல் திருச்சி, தர்மபுரி, கரூர், நாமக்கல், மதுரை, கோவை, கிருஷ்ணகிரி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லக்கூடிய பஸ்களும் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது.
பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்கள் மட்டும் குறைந்த அளவே ஓடியது. மற்றபடி வேன், கால்டாக்சி வாகனங்கள் ஓடின.
சூரமங்கலம் மீன் மார்க்கெட், உழவர் சந்தை, செவ்வாய்ப்பேட்டை, திருமணிமுத்தாறு, வ.உ.சி. மார்க்கெட் திறந்திருந்தன. வழக்கம்போல் பொதுமக்கள் காய்கறிகள் வாங்கிச் சென்றனர். பெரும்பாலான கடைகள் திறந்திருந்தது.
நாமக்கல்லில் பஸ்கள், லாரிகள் இன்று வழக்கம்போல் இயங்கின. நாமக்கல் நகரில் கறிக்கடைகள், மளிகைக் கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. ஆட்டோக்கள் மட்டும் குறைந்த அளவே ஓடியது. மினிவேன், கார் உள்ளிட்ட வாகனங்கள் இயங்கியது.
மோகனூர், பரமத்திவேலூர், சேந்த மங்கலம், பள்ளிப்பாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள், ஓட்டல்கள் திறந்திருந்தன. வேலை நிறுத்த போராட்டத்தினால் நாமக்கல் மாவட்டத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. #Bharatbandh
கொண்டலாம்பட்டி:
சேலம் மாவட்டம் சித்தர் கோவிலிலிருந்து சேலம் நோக்கி, இன்று பகல் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். சித்தர் கோவில் மெயின்ரோடு பனங்காடு அருகே வந்தபோது, அந்த வழியாக வந்த டாடா சுமோ கார் அவர் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் கோட்டை பெருமாள் கோவில் பின் பகுதியில் சின்னசாமி தெரு உள்ளது.
இந்த தெருவில் வசிக்கும் கவுதீப்முகைன் என்பவர் நேற்றிரவு வழக்கம் போல தனது மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு தூங்க சென்றார்.
இன்று அதிகாலை 2.30 மணியளவில் வீட்டிற்குள் புகை வாடை வருவதை அறிந்த அவர் சமையல் அறைக்கு சென்று பார்த்தார்.அப்போது அங்கிருந்து புகை வரவில்லை என்பதை உணர்ந்த அவர் கதவை திறந்து வெளியே வந்தார்.
வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றார்.
அப்போது 5 வீடுகளை தாண்டி ஒரு டிரான்ஸ்பார்மரின் கீழ் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 5 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு சைக்கிளும் தீப்பிடித்து எரிவதை பார்த்து மேலும் அதிர்ச்சி அடைந்தார். உடனே சத்தம்போட்டு அவர்களை எழுப்பினார்.
அதிகாலை 2.30 மணி என்பதால் வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்களான ரகுமத்துல்லா, சர்தீன், சுல்தான், முபாரக், சானாஷ் மற்றும் சைக்கிள் உரிமையாளரான ரிஷன் (19) மற்றும் அவர்களது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்த படி வெளியே ஓடி வந்தனர்.
பின்னர் மோட்டார் சைக்கிளில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கொளுந்து விட்டு எரிந்ததால் அவர்களால் அருகில் செல்ல முடியவில்லை. இதனால் அந்த மோட்டார் சைக்கிள்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.
இதனால் அதிர்ச்சியில் உறைந்த அவர்கள் கதறினர். மேலும் மர்ம நபர்கள் பெட்ரோலை ஊற்றி மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்ததாக அவர்கள் புகார் கூறினர்.
தகவல் அறிந்த கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு திரண்ட அந்த பகுதியினர் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த மர்மநபர்களை உடனே பிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள கடைகளில் ஏதாவது கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? அல்லது அதில் மர்ம நபர்கள் உருவம் பதிந்துள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.
சேலம் மாநகரின் முக்கிய பகுதியான கோட்டையில் ஒரே நேரத்தில் 6 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு சைக்கிளுக்கும் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் இன்று அதிகாலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் மாவட்டம் தீவட்டிபட்டி கள்ளிகாடு பகுதியை சேரந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சீனிவாசன் (33). லாரி டிரைவராக உள்ளார். சீனிவாசன் மனைவி ராமாயி (29). இவர்களுக்கு திருமணம் ஆகி 10 வருடம் ஆகிறது. 2 ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. ராமாயி, சீனிவாசனுக்கு அத்தை மகள் ஆவார்.
இந்த நிலையில் சீனிவாசன் தன் மனைவியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்தார். மேலும் மாமனார் ராஜேந்திரன் மருமகளை மானபங்கம் செய்ததாக தெரிகிறது. இதனை தட்டிகேட்ட உறவினர்கள் அனைவரிடமும் தகராறு செய்துள்ளனர்.
இது குறித்து தீவட்டிபட்டி போலீசில் ராமாயி புகார் கொடுத்தார். இந்த புகாரின்பேரில் தீவட்டிபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னராஜ் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரன் மற்றும் சீனிவாசன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இதனால் மகிழ்ச்சியடைந்த ராமாயி மற்றும் அவரது பெற்றோர், உறவினர்களுக்கு கள்ளி காட்டில் உள்ள எல்லம்மாள் கோவிலில் இன்று கிடாவெட்டி விருந்து வைத்தனர்.
கணவர் மற்றும் மாமனார் கைது செய்யப்பட்டதை தன் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் கிடா வெட்டி விருந்து வைத்து கொண்டாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் சுக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவரது மகன் ஆதி (வயது 14). இவர் சேலத்தில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று காலை வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்வதாக கூறி சென்ற ஆதி மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினர்.
பின்னர் பள்ளியில் வந்து விசாரித்தபோது அவர் பள்ளிக்கு செல்லாமல் மாயமானது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் சேலம் மாநகர போலீசார் அவரை தேடி வந்தனர்.
இந்தநிலையில் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் பள்ளி மாணவர் ஒருவர் தனியாக சுற்றி திரிவதை பார்த்த சென்னை போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் சேலத்தில் மாயமான ஆதி என்பது தெரிய வந்தது.
அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார் சேலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் மாணவரின் பெற்றோருக்கும் தகவல் கொடுத்தனர்.
இதற்கிடையே சேலம் போலீசார் நேற்றிரவு சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். மாணவனை இன்று சேலத்திற்கு அழைத்து வந்து அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கிறார்கள்.
போலீசார் நடத்திய விசாரணையில் படிக்க விருப்பம் இல்லாமல் மாணவன் சென்னைக்கு சென்றதாக கூறப்படுகிறது. வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் இளம்பிள்ளையை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 22). இவர் இன்று அதிகாலை சேலம் புதிய பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றி திரிந்தார். இதை பார்த்த பள்ளப்பட்டி போலீசார் அவரிடம் விசாரித்தனர்.
அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்தனர். அதில் லேப்-டாப் மற்றும் ஆப்பிள் போனும் இருந்தது.
இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்திய போது அந்த பொருட்களை பெங்களூரில் இருந்து நெல்லைக்கு ரெயிலில் சென்ற கார்த்திகா என்ற பெண்ணிடம் ரெயிலில் இருந்து திருடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரெயில்வே போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமைச்சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தால் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், எனவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் பாதிக்கப்படும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இந்த திட்டத்தை கைவிடக்கோரி பாதிக்கப்படுபவர்கள் மற்றும் விவசாய சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். விவசாயிகள் சிலர் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டனர்.
இதற்கிடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த திட்டத்திற்காக கையகப்படுத்தப்படும் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, அந்த நிலங்களில் எல்லை கற்கள் நடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதைத்தொடர்ந்து 8 வழிச்சாலை அமைக்கும் பணிக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.
இந்த நிலையில் 8 வழிச்சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களை சர்வே எண்ணுடன் பட்டியலிட்டு கடந்த வாரம் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கிடையே 8 வழிச்சாலைக்காக கூடுதலாக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் பரவியது.
இதையடுத்து சேலம் நிலவாரப்பட்டி பகுதியில் 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தனர். ஆனால் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த விவசாயிகளை மல்லூர் போலீசார் அழைத்து கைது செய்வோம் என எச்சரிக்கை விடுத்தனர், இதையும் மீறி நிலவாரப்பட்டியில் விமல் என்பவரது விவசாய தோட்டத்தில் 70-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த கூட்டத்தில் வருகிற 14-ந்தேதி விவசாயிகள் கலெக்டர் ரோகிணியை சந்தித்து இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுப்பது என்றும், 2-வது கட்டமாக அந்தந்த பகுதியில் ஒரே இடத்தில் திரண்டு விவசாய நிலங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்து அறிவித்தனர். கூட்டத்தில் பேசிய அனைவரும் 8 வழிச்சாலைக்கு எதிராக ஆவேசமாக பேசினர்.
8 வழிச்சாலைக்கு எதிராக ஏற்கனவே பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளோம். இதுதொடர்பாக கோர்ட்டிலும் முறையிட்டதால் 8 வழிச்சாலை பணிக்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்தோம்.
இந்த நிலையில் மத்திய அரசின் அறிவிப்பால் மீண்டும் நிலங்களை கையகப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. எங்களின் ஒரே வாழ்வாதாரமாக திகழும் அந்த நிலத்தையும் பறித்துக் கொண்டால் நாங்கள் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை.
8 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் யாரும் ஒன்று திரண்டுவிடக் கூடாது என்பதில் போலீசார் தீவிரமாக இருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.
போலீசாரின் மிரட்டல்படி கைது செய்தாலும் எங்கள் உயிர் இருக்கும் வரை தொடர்ந்து போராடுவோம், ஒருபோதும் நிலத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் ஆவேசமாக கூறினர்.
இதனால் சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு எதிராக மீண்டும் போராட்டம் தீவிரம் அடைய வாய்ப்புள்ளது. #ChennaiSalemExpressway #Farmers
உலக எய்ட்ஸ் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி சேலம் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலகம் மூலம் எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு மனித சங்கிலி சேலம் அரசு ஆஸ்பத்திரி முன்பு நடந்தது. இதை கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தி நின்றனர்.
அதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரி கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார். மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்ட மேலாளர்(பொறுப்பு) அருணாசலம் வரவேற்றார். அரசு ஆஸ்பத்திரி டீன் ராஜேந்திரன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர்(பொறுப்பு) சத்யா, மருத்துவ பணிகள் துணை இயக்குனர் வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் எச்.ஐ.வி. கிருமியின் அளவை கணக்கீடு செய்யும் கருவியை கலெக்டர் ரோகிணி அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் மிக அதிக பாதிப்புக்குள்ளான மாவட்டத்தில் ஒன்றாக சேலம் மாவட்டமும் திகழ்கிறது. இருப்பினும் அவர்களுக்கான சிறப்பான மருத்துவ சிகிச்சை, எச்.ஐ.வி. தடுப்பு பணி மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சிறப்பாக செய்து வருகிறோம். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள எச்.ஐ.வி. கிருமியின் அளவினை கணக்கீடு செய்யும் கருவி மூலம் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 4 மாவட்டங்களில் ஏ.ஆர்.டி. மையங்களில் மருத்துவ சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை இலவசமாக பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
சேலம் மாவட்டத்தில் இதுவரை 24,318 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் சேலம் மாவட்டத்தில் 94,858 பேர் எச்.ஐ.வி. பரிசோதனையும், ஆலோசனையும் பெற்றுள்ளனர். இதில் 363 பேருக்கு புதியதாக எச்.ஐ.வி. தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 15 கர்ப்பிணிகள் அடங்குவர்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மீது அன்பு செலுத்தி அரவணைப்பதன் மூலம் சமூக புறக்கணிப்பு இல்லாமையை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. முடிவில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு மேற்பார்வை யாளர் நல்லதம்பி நன்றி கூறினார்.
வடகிழக்கு பருவ மழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது.
கடந்த 18-ந் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக கடலோர பகுதி வழியாக உள்ளே நுழைந்து வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதியாக இருந்தது.இதனால் தமிழக கடலோர மாவட்டங்கள, வட தமிழகத்திலும் மழை பெய்தது.
தற்போது அது வலுவிழந்து உள் தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டு இருப்பதாகவும், இதனால் தமிழகத்தில் சேலம், நாமக்கல் உள்பட 11 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில் சேலம் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. தம்மம்பட்டி, ஏற்காடு, கரியகோவில் உள்பட பல பகுதிகளில் சாரல் மழையாக நீடித்தது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசி வருகிறது.
இன்று காலையும் சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்ததுடன் மழை தூறிய படியே இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் செல்வோர் அவதி அடைந்தனர்.
மாவட்டத்தில் அதிக பட்சமாக தம்மம்பட்டியில் 10 மி.மீ. மழை பெய்துள்ளது. ஏற்காட்டில் 6.6, கரியகோவில் 5, வீரகனூர் 4.8, கெங்கவல்லி 3.4, ஆத்தூர் 3.2, எடப்பாடி 1, மேட்டூர் 0.5, சேலம் மாநகரில் 0.4 என மாவட்டம் முழுவதும் மொத்தமம் 34.9 மி.மீ. மழை பெய்துள்ளது. #Rain
சேலம்:
சேலம் அஸ்தம்பட்டி கள்ளிக்காட்டை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 60). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர் அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் 2 நாட்களுக்கு முன்பு ஜெயராமனை அவரது உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து காய்ச்சல் வார்டில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
2 நாட்களாக தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெயராமன் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர்.
அஸ்தம்பட்டி பகுதியில் மேலும் பலருக்கு இதே போல காய்ச்சல் பாதிப்பு இருப்பதாகவும், சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என்றும் அந்த பகுதி மக்கள் புகார் கூறி உள்ளனர்.
எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் முகாமிட்டு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்