search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடலூர்"

    கூடலூர் பகுதியில் அறிவிக்கப்படாத மின் தடையால் வியாபாரிகள், பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

    கூடலூர்:

    கூடலூர் பகுதியில் அறிவிக்கப்படாத மின் தடையால் வியாபாரிகள், பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

    துணை மின் நிலையங்களில் மாதத்திற்கு ஒரு நாள் மின் வினியோகம் நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. பழுதான வயர்களை சரி செய்வது, மரங்கள், விளம்பர பலகைகள் போன்றவை மின் வயர்கள் செல்ல இடையூறாக இருந்தால் அவற்றை அகற்றுவது மிக முக்கியமான பணியாகும்.

    மேலும் இந்த பராமரிப்பு பணியின் போது அனைத்து மின் கம்பங்கள் மற்றும் வயர்கள் சோதனை செய்யப்படுகிறது. தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின் வெட்டு நிலவி வருகிறது.

    நேற்று முன் தினம் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் கடும் தவிப்புக்கு உள்ளாகினர். கொசுக்கடியில் இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்தனர். மேலும் பகல் பொழுதிலும் அவ்வப்போது மின்சாரம் வருவதும் தடை படுவதும் என இருந்ததால் வெப்பத்தின் தாக்கம் காரணமாக வீட்டுக்குள் இருக்க முடியவில்லை.

    நேற்றும் இந்த நிலை தொடர்ந்தது. இதனால் சிறுவர்கள், முதியவர்கள் சிரமத்துக்கு உள்ளானார்கள். கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் மின் விசிறி ஓடிய போதும் வெப்பம் தாங்காமல் பொதுமக்கள் அவதியடைந்து வரும் நிலையில் மின் தடை மேலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    சிறு வியாபாரிகள், கடை உரிமையாளர்கள் மின் தடையால் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், கடந்த 2 வருடங்களாக தடையற்ற மின்சாரம் வினியோகம் இருந்தது. ஆனால் தற்போது எந்தவித அறிவிப்பும் இன்றி திடீரென மின் வினியோகம் நிறுத்தப்படுவதால் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

    குறிப்பாக அரசு உதவித் தொகைக்கு சான்றிதழ்களை ஜெராக்ஸ் எடுக்க செல்லும் போது மின் வினியோகம தடைபடுவதால் அந்த பணிகள் பாதிக்கப்படுகிறது.

    மேலும் பொதுமக்களின் நேரம் விரயமாகிறது. விடுமுறை எடுத்து இந்த பணிகளை மேற்கொள்பவர்கள் இதனால் கடுமையாக சிரமம் அடைந்து வருகிறார்கள். ஆனால் மின் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இதைப்பற்றி கவலை படாமல் அலட்சியமாக உள்ளனர். அவர்களிடம் கேட்டால் முறையான பதில் அளிப்பது இல்லை. எனவே உயர் அதிகாரிகள் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றனர்.

    கூடலூர் அருகே இரவில் வீடுகளை முற்றுகையிடும் காட்டு யானையால் கிராம மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
    கூடலூர்:

    கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. வாழை, பாக்கு உள்ளிட்ட விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கூடலூர் அருகே மரப்பாலம் சீனக்கொல்லி கிராமத்துக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு காட்டு யானை நுழைந்தது.

    பின்னர் அது பொதுமக்களின் வீடுகளை முற்றுகையிட்டது. இதனால் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். மேலும் அவசர தேவைகளுக்காக வெளியே வர முடியாமல் சிரமப்பட்டனர்.

    இந்த நிலையில் இரவு முழுவதும் அப்பகுதியில் நின்றிருந்த காட்டு யானை அங்கு பயிரிட்டு இருந்த வாழை, பாக்கு உள்ளிட்ட விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தியது. இதனால் விவசாயிகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் நின்றிருந்த காட்டு யானை நேற்று விடியற்காலையில் வனப்பகுதிக்கு சென்றது. அதன்பின்னரே கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, காட்டு யானை அடிக்கடி ஊருக்குள் வருவதால் பாதுகாப்பற்ற சூழல் காணப்படுகிறது. எனவே வனத்துறையினர் கூடுதல் கண்காணிப்பு மேற்கொண்டு காட்டு யானை வராமல் தடுக்க வேண்டும் என்றனர்.

    இதேபோல் கூடலூர் ஹெல்த்கேம்ப், அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளிட்ட பகுதியில் தினமும் இரவு காட்டு யானை வந்து வீடுகளை முற்றுகையிட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் நிம்மதியாக தூங்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.

    சில சமயங்களில் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூட வளாகத்தில் காட்டு யானை நின்று வருகிறது. இன்னும் 1 வாரத்தில் பள்ளிக்கூடம் திறக்க உள்ள நிலையில் காட்டு யானை வருகையால் மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    எனவே வனத்துறையினர் காட்டு யானை வராமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹெல்த்கேம்ப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    கூடலூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக பலியானார்கள்.

    கூடலூர்:

    கூடலூர் கிருஷ்ணசாமி கவுண்டர் தெருவை சேர்ந்தவர் ராஜா மகன் ஆனந்தகுமார் (வயது25). இவர் தனது நண்பர் தங்கம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கம்பத்தில் இருந்து கூடலூருக்கு வந்து கொண்டிருந்தார்.

    கூடலூர் காஞ்சிமரத்துரை வெட்டுக்காடு பகுதியை சேர்ந்த நாகேந்திரன் (17) என்பவர் தனது நண்பர் ஆதேசுடன் மற்றொரு மோட்டார் சைக்கிளில் கூடலூரில் இருந்து கம்பம் நோக்கி வந்துகொண்டிருந்தார். தேசிய நெடுஞ்சாலையில் துர்க்கை அம்மன் கோவில் அருகே வந்த போது 2 மோட்டார் சைக்கிளும் பயங்கரமாக மோதிக்கொண்டன.

    இதில் ஆனந்தகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த நாகேந்திரன் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் தங்கம், ஆதேஸ் ஆகியோர் படுகாயங்களுடன் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பொன்னிவளவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    கூடலூரில் மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம், கூடலூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையில் போலீசார் புது பஸ்நிலையம் பகுதியில் ரோந்து சுற்றிவந்தனர். அப்போது பஸ்நிலையம் பின்புறம் ஒரு சாக்கு பையில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.

    போலீசார் நடத்திய விசாரணையில் 4-வது வார்டு சுக்காங்கல்பட்டி பகுதியைச் சேர்ந்த சந்திரன் (வயது 38) எனத் தெரியவந்தது. அவரிடமிருந்து 23 குவாட்டர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல் குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்த உலகமாயன் (வயது 50) என்பவரிடம் இருந்து 39 மது பாட்டில்களையும், கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்த பேச்சி (வயது 52) என்பவரிடமிருந்து 11 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை படத்தில் காணலாம்.

    தேனி மாவட்டம் கூடலூரில் வாலிபரை பீர் பாட்டிலால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.

    தேனி:

    தேனி மாவட்டம் கூடலூர் காமாட்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்ட ஹரிஹரன் (வயது 20). இவர் சம்பவத்தன்று தனது நண்பர் ஸ்டாலினுடன் அரசமர பஸ் ஸ்டாப் அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது பூச்சி தேவர் சந்து பகுதியைச் சேர்ந்த விஜய் (21) அங்கு போதையில் வந்தார். அவர் ஸ்டாலினிடம் பணம் கேட்டு தகராறு செய்தார்.

    இதனை ஹரிஹரன் தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த விஜய் அருகில் இருந்த பீர் பாட்டிலை உடைத்து அவரது வயிற்றில் குத்தினார். மேலும் கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி ஓடி விட்டார்.

    படுகாயமடைந்த ஹரிஹரன் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விஜயை கைது செய்தனர்.

    கூடலூர் அருகே வாழைத் தோட்டத்தை யானைகள் நாசம் செய்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. சுரங்கனாறு நீர் வீழ்ச்சி, வெட்டுக்காடு, பளியங்குடி உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் வாழை, தென்னை, கரும்பு மற்றும் மானாவாரி பயிர்களை பயிரிட்டுள்ளனர்.

    இதனையொட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து காட்டுப்பன்றி, காட்டெருமை, யானை உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி விளை நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அகழிகள் வெட்டப்பட்டு சோலார் மின் வேலி அமைக்கப்பட்டது.

    ஆனால் தற்போது அவை பராமரிக்கப்படாததால் வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகள், விளை நிலங்களில் புகுவது தொடர் கதையாகி வருகிறது.

    வெட்டுக்காடு சில்ராம படுகை பகுதியில் உள்ள பேச்சியம்மாள் என்பவருக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் செவ்வாழை பயிரிட்டுள்ளார். தற்போது அவை தார் வெட்டும் பருவத்தில் இருந்துள்ளது. இங்கு புகுந்த யானை கூட்டம் வாழைகளை நாசம் செய்தன.

    இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த சில நாட்களாகவே யானைகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே இரவு நேர காவலுக்கு செல்ல விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

    இப்பகுதியில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவ்வாழைகளை யானைக் கூட்டம் சேதப்படுத்தியது. பல்வேறு இன்னல்களுக்கு இடையே விவசாயம் செய்து வரும் எங்களுக்கு இது மேலும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. விவசாய நிலங்களை சுற்றி அகழி அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் நிரந்தரமாக விரட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு தீர்வு காண வேண்டும். நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

    கூடலூர் அருகே மாயமான தனியார் பள்ளி ஆசிரியையை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் லோயர்கேம்ப் அம்பேத்கார் காலனியை சேர்ந்தவர் சாமுவேல் மகள் ஷாமிலி(வயது23). கம்பம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலைபார்த்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு செல்வதாக ஷாமிலி வீட்டில் கூறிச்சென்றுள்ளார்.

    இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை பள்ளிக்கு சென்று விசாரித்தபோது ஷாமிலி அங்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது.

    இதனைதொடர்ந்து நண்பர்கள் மற்றும் உறவினர்களது வீடுகளில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் குமுளி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் தேவாரத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் தனது மகளை கடத்தியிருக்கக்கூடும் என சாமுவேல் குறிப்பிட்டுள்ளார். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான ஆசிரியையை தேடி வருகின்றனர்.

    கூடலூர் அருகே தோட்டங்களுக்குள் புகுந்து இலவ மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி சென்றதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள லோயர்கேம்ப் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் வாழை, தென்னை, மா, இலவ மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

    வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளதால் அடிக்கடி மான், யானை, காட்டுப்பன்றி, குரங்குகள் ஆகியவை தோட்டத்தில் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் தங்கள் நிலங்களை பாதுகாக்க வேலி மற்றும் அகழிகள் அமைத்துள்ளனர்.

    குறிப்பாக நாயக்கர் தொழு, எள்கரடு, பளியங்குடி ஆகிய பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகம் இருக்கும் என்பதால் அங்கு மட்டும் அகழிகள் கூடுதலாக அமைக்கப்பட்டன. ஆனால் தற்போது அகழிகளில் மண் மேவி காணப்படுவதால் மீண்டும் யானைகள் வலம் வரத் தொடங்கி உள்ளது.

    நேற்று நாயக்கர் தொழு, சரளைமேடு பகுதியில் பெருமாயி (வயது48) என்பவருக்கு சொந்தமான இலவ மரத்திற்குள் புகுந்த யானைகள் அங்கிருந்த மரங்களை வேறுடன் சாய்த்து சேதப்படுத்தியது. அதிகாலையில் எழுந்து பார்த்த பெருமாயி மற்றும் அப்பகுதி விவசாயிகள் யானைகளின் அட்டகாசத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    கடந்த சில நாட்களாக யானைகள் இடம்பெயர்வது குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அட்டகாசம் செய்திருப்பதால் வனத்துறையினருக்கு புகார் அளித்துள்ளனர். வனத்துறையினர் பார்வையிட்டு மீண்டும் யானைகள் வராமல் இருக்க முகாமிட்டு உள்ளனர்.

    கூடலூரில் அதிக வட்டி கேட்டு பெண்ணை மிரட்டிய கும்பல் மீது மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் மந்தையம்மன் கோவில் தெருவைச்சேர்ந்த லெனின் மனைவி பிரியா(வயது28). இவருக்கு கூடலூரைச் சேர்ந்த முத்தையா மனைவி லதா, பாண்டியன் மனைவி சரண்யா, ராஜா மனைவிபோதுமணி, பரமன் மனைவி சிங்காரம் உட்பட 15 பெண்கள் மற்றும் சேகர், ஜெயக்குமார் ஆகியோர் ரூ. 10 லட்சம் வரை வட்டிக்கு கொடுத்தனர்.

    பின்னர்அதிக வட்டி கேட்டு பிரச்சினை செய்துள்ளனர். மேலும் பிரியாவின் வீட்டிற்குள் அத்துமீறி சென்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து பிரியா கடந்த சிலநாட்களுக்கு முன் தேனி போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் கொடுத்தார். அவரது உத்தரவின் பேரில் கூடலூர் வடக்கு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் அதிக வட்டி கேட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 17 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கூடலூர் பகுதியில் பலத்த சூறாவளி காற்றில் வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தன.

    கூடலூர்:

    தேனி மாவட்டம், கூடலூர் பகுதியில் முல்லைப் பெரியாறு அணை தண்ணீர் மூலம் இருபோக நெல் விவசாயமும், மானாவாரி நிலங்களில் எள், நிலக்கடலை, தட்டைபயறு, மொச்சை, கம்பு, சோளப் பயிர்களையும் தோட்டங்களில் வாழை, தென்னை, திராட்சை உள்பட பணப்பயிர் வகைகளும் விவசாயம் செய்யப்பட்டு வருகின்றது.

    கடந்த சில வருடங்களாக கூடலூர் பகுதியில் தென்னை மரங்களை அழித்துவிட்டு அதிகளவில் ஒட்டு ரக திசு வாழைகளை சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர்.

    குறிப்பாக செவ்வாழை, நாழிபூவன், ரஸ்தாலி, பச்சை பழம் வகைகளை பயிரிட்டுள்ளனர். வாழை மரங்களில் தார்கள் நன்கு விளைந்து உள்ள நிலையில் தற்போது எதிர்பாராமல் பலத்த சூறவாளிகாற்று வீசியதால் கூடலூர் பகுதிகளில் உள்ள வாழை தோட்டங்களில் வாழை மரங்கள் முறிந்து தார்களுடன் கீழே விழுந்துள்ளது. இதனால் வாழை சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    பெருமாள் கோவில் புலம் சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் எதிர்பார்ப்புடன் காத்து இருக்கின்றனர்.

    கூடலூர்:

    தேனி அருகே கூடலூர் மந்தைவாய்க்கால் பாலத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் பெருமாள் கோவில் புலம் உள்ளது. மானாவாரி நிலங்களில் எள், நிலக்கடடலை, தட்டைப்பயறு, அவரை, மொச்சை, கம்பு, சோளப் பயிர்களையும், தோட்டங்களில் வாழை, தென்னை, திராட்சை, வெங்காயம், மா உள்ளிட்ட பணப்பயிர்களையும் சாகுபடி செய்து வருகின்றனர்.

    இவர்கள் தினசரி இருசக்கர வாகனங்கள் மற்றும் மினி ஆட்டோக்களில் கூலி ஆட்களை ஏற்றிக்கொண்டு செல்கின்றனர். விவசாயிகள் விளைவித்த பொருட்களை மாட்டுவண்டிகள் மற்றும் டிராக்டர் வண்டிகளில் ஏற்றி சந்தைகளுக்கு கொண்டு செல்கின்றனர்.

    கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தார் சாலை அமைக்கப்பட்டது. தொடர்ந்து சாலையில் பராமரிப்பு பணிகள் செய்யாததால் சாலைகள் தற்போது சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளித்து வருகிறது. இதனால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து அப்பகுதி விவசாயிகள் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு வழங்கினர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே, பெருமாள் கோவில் புலம் சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் எதிர்பார்ப்புடன் காத்து இருக்கின்றனர். #tamilnews

    சேலம், கூடலூரில் இருந்து ரூ.72 லட்சம் ஹவாலா பணம் கடத்திய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் குழல்மன்னம் மதுவிலக்கு அதிகாரி உதயகுமார் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் சாந்தி சந்திப்பு என்ற பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது பாலக்காடு- திருவனந்தபுரத்திற்கு சென்ற அரசு பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். பஸ்சுக்குள் சந்தேக்கப்படும்படி ஒரு வாலிபர் அமர்ந்திருந்தார். அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

    இதனையடுத்து அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அதில் ரூ.11 லட்சத்து 40 ஆயிரம் பணம் இருந்தது. இது குறித்து ஆவணங்கள் கேட்டபோது அவரிடம் இல்லை. முறையான காரணமும் அவர் கூறவில்லை. இதனையடுத்து ஹவாலா பணத்தை பறிமுதல் செய்த மதுவிலக்கு அதிகாரிகள் பணத்தையும், வாலிபரையும் குழல்மன்னம் போலீசில் ஒப்படைத்தனர்.

    குழல்மன்னம் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள வயநாடு கோட்டத்தரையை சேர்ந்த விபிசின் (வயது 32) என்பது தெரியவந்தது. இவர் ஏதற்காக பணம் கடத்தினார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோன்று பாலக்காடு மதுவிலக்கு அதிகாரி ரியாஸ் தலைமையில் ஒலவக்கோடு ரெயில் நிலையத்தில் போலீசார் ரோந்து வந்தனர். அப்போது 2 வாலிபர்கள் சந்தேகப்படும்படி நின்றனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.

    இதனையடுத்து அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்தபோது ரூ.60 லட்சம் ஹவாலா பணம் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் மலப்புரம் கண்ணமங்கலத்தை சேர்ந்த அப்துல் சமீது (35), யாஸ்துல் பசாரி (30) ஆகியோர் என்பதும் இவர்கள் சேலத்தில் இருந்து எர்ணாகுளத்திற்கு இந்த பணத்தை கடத்தி வருவதாகவும் கூறினர்.

    அவர்கள் 2 பேரையும் பாலக்காடு தெற்கு போலீசார் கைது செய்து ரூ.60 ஹவாலா பணத்தையும் பறிமுதல் செய்தனர். #tamilnews

    ×