search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆழியாறு"

    ஆழியாறு அணை அருகே யானை தாக்கி சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி ஆழியாறு அணை அருகே நவமலைபதி மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதி உள்ளது. அப்பகுதியை சேர்ந்தவர் ராஜீ என்கிற முருகன் (வயது37). இவர் வனத்துறையில் வேட்டை தடுப்பு காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சித்ரா.

    இவர்களின் மகள் ரஞ்சனி (7), அதே பகுதியிலுள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று சித்ரா தனது மகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக பொள்ளாச்சிக்கு சென்றார். மாலை விரைவில் வீட்டிற்குள் வந்துவிடலாம் என்பதால் மின்விளக்கினை ஒளிரச்செய்யாமல் சென்றுள்ளார்.

    தாய்-மகள் இருவரும் இரவு 7.30 மணியளவில் நவ மலைபதிக்கு திரும்பினர்.அங்கிருந்து செல்போனில் டார்ச் விளக்கு அடித்தபடி வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டின் முன்பு இருந்த அரிசியினை வனப்பகுதியில் உலா வந்த காட்டு யானை தின்று கொண்டிருந்தது.

    இருட்டாக இருந்ததால் யானை நிற்பதை அவர்கள் கவனிக்கவில்லை. திடீரென மின்விளக்கு ஒளியினை பார்த்த காட்டு யானை அவர்களை நோக்கி ஓடிவந்தது. இதனை பார்த்த இருவரும் யானையிடம் இருந்து தப்ப ஓடினர். அப்போது சிறுமி ரஞ்சனியால் ஓட முடியவில்லை.

    அவரை காட்டு யானை துதிக்கையால் தூக்கி வீசியுள்ளது. பின்னர் யானை அங்கிருந்து ஓடி புதருக்குள் மறைந்தது. யானை தாக்கியதில் காயமடைந்த சிறுமியை மீட்டு குடியிருப்பு வாசிகள் உதவியுடன் கோட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.செல்லும் வழியிலேயே சிறுமி ரஞ்சனி பரிதாபமாக உயிரிழந்தார்.

    பின்னர் அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டது. இது குறித்து வனத்துறை, ஆழியாறு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.வனத்துறை ஊழியர்கள் நவமலைபதி பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளதா? என கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையாதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். யானை நடமாட்டம் காரணமாக கிராம மக்கள் பீதியடைந்தனர்.

    யானை தாக்கி உயிரிழந்த சிறுமி ரஞ்சனியின் உடல் இன்று காலை பிரேபரிசோதனை செய்யப்படுகிறது. வனத்துறை சார்பில் உடனடி நிவாரணமாக ரூ.50 ஆயிரம் கொடுக்கப்பட்டது. மேலும் ரூ.3.50 லட்சம் அரசு நடைமுறைப்படி விரைவில் ரஞ்சனியின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவதாக வனத்துறையினர் கூறியுள்ளனர்.

    ×