search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 102691"

    நெல்லை மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது. #Rain

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையினால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    ஏற்கனவே தென்மேற்கு பருவ மழையினால் பெரும்பாலான அணைகள், குளங்கள் நிரம்பியிருந்தன. இந்த அணைகள், குளங்களில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவ மழை காரணமாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று மாவட்டத்தில் பல பகுதியில் இடி, மின்னலுடன் மழை கொட்டியது. குறிப்பாக மணி முத்தாறு, நெல்லை, சேரன்மகாதேவி பகுதியில் கன மழை பெய்தது.

    இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குற்றாலம், பாபநாசம் மலைப் பகுதியில் பெய்த மழையினால் குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி ஆகிய அருவிகளில் அதிகளவு தண்ணீர் கொட்டியது.

    தற்போது அரையாண்டு தேர்வுகள் முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறைவிடப்பட்டுள்ளதால் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    ஐயப்ப சீசன் என்பதால் குற்றாலம் அருவிகளில் குளிக்க ஐயப்ப பக்தர்களும் அதிகளவில் வந்தனர். இதனால் கூட்டத்தை ஒழுங்கு படுத்த அருவிகளில் போலீசார் நிறுத்தப்பட்டனர். தொடர் மழை காரணமாக பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளன. இதனால் அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 120.60 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 122.87 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 104.30 அடியாகவும் உள்ளன. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1410 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 922 கன அடி தண்ணீர் வருகிறது.

    பாபநாசம் அணையில் இருந்து 20 கன அடி தண்ணீரும், மணிமுத்தாறு அணையில் இருந்து 480 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகின்றன. பாபநாசம் கீழ் அணையில் இருந்து 856 கன அடி தண்ணீர் தாமிரபரணியில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதேபோல் கடனா அணை நீர்மட்டம் 79.40 அடியாகவும், ராமநதி அணை 65.75 அடியாகவும், கருப்பாநதி அணை 59.01 அடியாகவும், குண்டாறு அணை 32.25 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணை 29 அடியாகவும், நம்பியாறு அணை 12.74 அடியாகவும், கொடுமுடியாறு அணை 20.50 அடியாகவும், அடவிநயினார் அணை 73 அடி யாகவும் உள்ளன.

    நெல்லை அருகே விபத்தில் 6 பயணிகள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கயத்தாறு:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் பகுதியில் இருந்து 15 பேர் ஒரு வேனில் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்தனர். வேனை பள்ளத்தூர் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிவஞானம் (வயது31), என்பவர் ஓட்டினார்.

    வேன் இன்று காலை 5.20 மணிக்கு நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் புலவர்த்தான்குளம் விலக்கு அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது லேசான மழை பெய்து கொண்டிருந்தது. இந்த வேளையில் மதுரையில் இருந்து நாகர்கோவில் நோக்கி ஒரு அரசு பஸ் வந்தது. அந்த பஸ் காரைக்குடி வேனை முந்தி செல்ல முயன்றது.

    அப்போது பஸ், வேனின் பின்பகுதியில் லேசாக உரசியது. உடனே வேனில் வந்தவர்கள் அதில் இருந்து இறங்கி பஸ் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நடுவழியில் நின்று வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் வாக்குவாதம் முடிந்து வேனும், பஸ்சும் புறப்பட தயாரானது. இந்த வேளையில் அந்த வழியாக சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கி ஒரு அரசு பஸ் வந்தது.

    காலை நேரம் என்பதாலும், மழை தூறிக்கொண்டு இருந்ததாலும் நடுரோட்டில் நின்ற வேன் மற்றும் அரசு பஸ்சையும் டிரைவர் கவனிக்கவில்லை. இதனால் அந்த பஸ் முன்னால் நின்ற வேன் மற்றும் பஸ் மீது பயங்கரமாக மோதியது. பின்னர் சாலையோர தடுப்பில் மோதியது. இந்த பயங்கர விபத்தில் வேன் ரோட்டோரம் கவிழ்ந்தது. முன்னால் நின்ற பஸ்சின் பின்பகுதியும், பின்னால் மோதிய பஸ்சின் முன்பகுதியும் பயங்கரமாக சேத மடைந்தன. பஸ்சில் இருந்தவர்கள் அலறினார்கள்.

    இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி மோதியதில் பஸ்சில் இருந்த பயணிகள் திருச்சி துறையூரை சேர்ந்த ஆனந்த ஜோதி மகன் அம்ஜத் குமார், பேச்சிமுத்து மகன் முருகன், தேவதாஸ் மகன் ஜீவா ரூபி, பாஸ்கர் ஆகிய 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். வேன் மற்றும் பஸ்சில் இருந்த 18 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு, தாழையூத்து இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் பாளை தீயணைப்பு நிலைய வீரர்களும் அப்பகுதிக்கு விரைந்தனர்.

    இதைத்தொடர்ந்து காயம் அடைந்த 18 பேரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே மதுரையை சேர்ந்த மகாராஜன் மகன் பிரதீப் (26), குமரி மாவட்டம் விளாச்சேரியை சேர்ந்த தவசிமுத்து (47) ஆகிய 2 பேர் பலியானார்கள்.

    விபத்தில் காயமடைந்த வர்கள் பெயர் விவரம் வருமாறு:-

    வேனில் இருந்த காளியப்பன் (84), சேர்மராஜ் (55), செல்வி (50) மற்றொரு செல்வி (34), அனந்தராஜ் (10) (இவர்கள்) 5 பேரும் வேனில் இருந்தவர்கள்.

    முத்துக்குமார் (26), அன்பு (24), இசக்கிமுத்து (25), அரிச்சந்திரா (26), முத்து கிருஷ்ணன் (24), ஹென்ஸ் (20), பால கிருஷ்ணன் (24), சதீஷ் (24), சேகர் (45), முத்துப் பாண்டி (29), வேல்முருகன் (24), பிரபு (34), தங்கத்துரை (40) (இவர்கள் 13 பேரும் பஸ்சில் இருந்தவர்கள்) என மொத்தம் 18 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.

    நெல்லை அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள ராமையன்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது63), கூலித்தொழிலாளி. இவர் அடிக்கடி மது குடித்து வந்ததால் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் முருகன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    இதனால் அவருக்கு குடிக்க பணம் கிடைக்க வில்லை. இதில் மனமுடைந்த முருகன் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தென் மாவட்டங்களில் நேற்றும், இன்றும் எந்தவித மழை பொழிவும் இல்லாததால் அணைகளுக்கு வரும் நீர்வரத்து குறைந்தது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக அணைகளுக்கு கூடுதல் நீர் வந்தது. இதைத்தொடர்ந்து பாபநாசம் அணை நீர்மட்டம் 124 அடியை தாண்டியது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டி 104 அடியானது.

    இந்த நிலையில் தென் மாவட்டங்களில் நேற்றும், இன்றும் எந்தவித மழை பொழிவும் இல்லை. இதன் காரணமாக அணைகளுக்கு குறைந்த அளவு நீர் வருகிறது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 827 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 804 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இன்று காலை பாபநாசம் அணை நீர்மட்டம் 124.50 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று 134.74 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 315 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 35 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இன்று காலை மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 104.25 அடியாக உள்ளது.

    கடனாநதி-78.80, ராமநதி- 69.25, கருப்பாநதி-67.03, குண்டாறு-35.87, வடக்கு பச்சையாறு-31.50, நம்பியாறு-18.66, கொடுமுடியாறு-35, அடவிநயினார்-93.25 அடிகளாகவும் நீர்மட்டம் உள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழ்நிலை உள்ளதால் 5-ந்தேதிக்கு பிறகு மீண்டும் வடகிழக்கு பருவமழை பெய்யும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பல இடங்களில் கனமழை பெய்ததையடுத்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. #ManimutharDam
    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை மிகவும் குறைந்த அளவே பெய்து வருகிறது. நவம்பர் மாதம் சராசரி மழை அளவான 208.20 மில்லி மீட்டரை விட குறைவாக 186.11 மில்லி மீட்டர் மழையே பெய்துள்ளது.

    இந்த மாதம் சராசரி மழை அளவான 111.60 மில்லி மீட்டர் பெய்தால் தான் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் போதுமானதாக இருக்கும். இந்த நிலையில் டிசம்பர் 1-ந்தேதியே நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பல இடங்களில் கனமழை பெய்தது. மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1841.55 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 804.75 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் நேற்றைவிட ஒரு அடி உயர்ந்து இன்று 124.15 அடியாக உள்ளது. சேர்வ லாறு அணை நீர்மட்டமும் நேற்றை விட ஒரு அடி உயர்ந்து இன்று 134.18 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 1059 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 35 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது. இதனால் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்றை விட ஒரு அடி உயர்ந்து இன்று 103.60 அடியாக உள்ளது.

    இதுபோல கடனாநதி -78.20, ராமநதி-69.25, கருப்பாநதி-67.86, குண்டாறு-36.10, வடக்கு பச்சையாறு-31.50, நம்பியாறு -19.61, கொடுமுடியாறு-37, அடவிநயினார்-94.75 அடிகளாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்றும் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

    நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக ராமநதி அணை பகுதியில் 54 மில்லி மீட்டர் மழையும், பாபநாசம் மலை பகுதியில் 39 மில்லி மீட்டர் மழையும், அம்பையில் 38.2 மில்லி மீட்டர் மழையும், கன்னடியன் கால்வாய் பகுதியில் 32.8 மில்லி மீட்டர் மழையும், சேர்வலாறு அணை பகுதியில் 30 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக வைப்பாறில் 13 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    மற்ற இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ராமநதி-54, பாபநாசம்-39, அம்பை-38.2, கன்னடியன் கால்வாய்-32.8, சேர்வ லாறு-30, ஆய்க்குடி-12.8, தென்காசி-8.4, கருப்பாநதி-7, குண்டாறு-7, களக்காடு-5.6, மணிமுத்தாறு-5.2, கடனாநதி-5, சேரன் மகாதேவி-2

    தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    வைப்பாறு-13, கடம்பூர்-3, எட்டயபுரம்-3, கயத்தாறு-1. #ManimutharDam

    கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #Rain #SouthDistricts
    சென்னை:

    வங்கக்கடலில் உருவான கஜா புயல் நாகையில் கரையை கடந்தபோது 7 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    அதன்பின் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் டெல்டா மாவட்டங்களிலும், சென்னையிலும் பரவலாக மழை பெய்தது.

    வங்கக் கடலில் 22-ந்தேதி உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வுநிலை தெற்கு கர்நாடகா மற்றும் கேரளா, தமிழகத்தின் மேட்டூர் அணைப் பகுதியில் நிலை கொண்டிருந்தது.

    அது காற்றின் சுழற்சியால் தமிழகத்தில் நீடித்துக் கொண்டிருந்ததால் இன்று வரை தமிழகத்தில் மழை இல்லாத வறண்ட வானிலையே காணப்பட்டது.

    இந்த நிலையில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



    இது தொடர்பாக வானிலை ஆய்வுமைய அதிகாரி கூறியதாவது:-

    இந்திய பெருங்கடல் மத்தியரேகை மற்றும் அதனை யொட்டியுள்ள வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் நாளை (29-ந்தேதி) ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.



    தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

    சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Rain #SouthDistricts

    நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. #Rain #Dams
    நெல்லை:

    வடகிழக்கு பருவமழை காரணமாக நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக காலையில் வெயிலும், மாலையில் மழையுமாக காலநிலை மாறி உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை வழக்கம் போல் வெயில் அடித்தது. மதியம் கருமேகங்கள் சூழ்ந்து மாலையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக அம்பை, பாபநாசம், மணிமுத்தாறு பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அம்பை பகுதியில் 37.60 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள ஓடைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. குடியிருப்பு பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. ஏற்கனவே பெய்த மழையினால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் நேற்றைய மழை காரணமாகவும் கூடுதல் தண்ணீர் வந்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    பிரதான பாசன அணையான பாபநாசம் அணையின் நீர்மட்டம் 121.95 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,835 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 20 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 130.18 அடியாக இருந்தது.

    இங்கு பெய்த மழையினால் இந்த அணை மேலும் 3 அடி உயர்ந்து 133.27 அடியாக அதிகரித்துள்ளது. நேற்று 100 அடியை தாண்டிய மணிமுத்தாறு அணை நீர்மட்டம் இன்று 101.05 அடியாக உள்ளது.

    பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய 3 அணைகளிலும் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ள நிலையில் அணைகள் நிரம்பி வருவது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதே போல் மாவட்டத்தில் உள்ள மற்ற அணைகளான கடனா, ராமநதி, கருப்பாநதி, வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு, அடவிநயினார் அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடனா அணை நீர்மட்டம் 76.80 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 69.25 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 63.23 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 31.25 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 42 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 98.50 அடியாகவும் உள்ளன.

    நம்பியாறு, குண்டாறு அணைகள் ஏற்கனவே நிரம்பியுள்ளன. குற்றாலம் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. மெயினருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது. எனினும் சீசன் முடிந்து விட்டதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக காணப்படுகிறது.

    ஐயப்ப பக்தர்கள், குறைவான சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். தொடர் மழையினால் மாவட்டம் முழுவதும் உள்ள 2 ஆயிரத்து 500 குளங்களுக்கு தண்ணீர் வர தொடங்கியுள்ளது. இதில் பல குளங்கள் நிரம்பியுள்ளன.

    அணை பகுதி மற்றும் தாலுகா பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    அம்பை-37.60, பாபநாசம் -24, ராமநதி-20, மணிமுத்தாறு-19.20, சேர்வலாறு-15, கொடுமுடியாறு-15, அடவிநயினார் அணை-11, குண்டாறு-9, சேரன்மகாதேவி-8, செங்கோட்டை-7, நெல்லை-5, கருப்பாநதி-4, ஆய்க்குடி-2.60, நாங்குநேரி-2. #Rain #Dams

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதையடுத்து மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் நேற்றைவிட ஒரு அடி உயர்ந்து இன்று காலை 100.15 அடியாக உள்ளது. #ManimutharDam
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 2 நாட்களாக கனமழை பெய்து வருவதால் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக பாபநாசம் அணை பகுதியில் இன்று காலை வரை 61 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சேர்வலாறு அணை பகுதியில் 47 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    நகர்ப்புறங்களில் சற்று குறைவான மழையே பெய்துள்ளது. ராதாபுரத்தில் 14 மில்லி மீட்டரும், சேரன்மகாதேவியில் 9 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. மற்ற பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்துள்ளது.

    மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1,511 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1,005 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் நேற்றைவிட ஒரு அடி உயர்ந்து இன்று காலை 121.10 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 130.18 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 318 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 40 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் நேற்றைவிட ஒரு அடி உயர்ந்து இன்று காலை 100.15 அடியாக உள்ளது.

    தென்மேற்கு பருவமழையின் போது மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டி இருந்தது. அதன்பிறகு படிப்படியாக குறைந்து 80 அடியாக இருந்தது. தற்போது வடகிழக்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து இன்று காலை மீண்டும் 100 அடியை தாண்டியுள்ளது.

    இதுபோல கடனாநதி- 75.80, ராமநதி- 69, கருப்பாநதி- 69.23, குண்டாறு- 36.10, வடக்கு பச்சையாறு- 31, நம்பியாறு- 21.62, கொடுமுடியாறு- 42, அடவிநயினார்- 98.50 அடிகளாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    குற்றாலத்தில் நேற்று காலை அதிகளவு தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. நேற்று பிற்பகல் தண்ணீர் குறைந்ததும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    இன்று காலை குற்றாலம் பகுதியில் சாரல் மழை பெய்தது. அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்கும் வகையில் தண்ணீர் விழுந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குற்றால அருவிகளில் ஆனந்தமாக குளித்தனர்.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பாபநாசம்-61
    சேர்வலாறு-47
    ராமநதி-15
    ராதாபுரம்-14
    கடனாநதி-10
    சேரன்மகாதேவி-9
    ஆய்க்குடி-4
    அம்பை-2
    சங்கரன்கோவில்-2
    நெல்லை- 1.2
    மணிமுத்தாறு- 1.2
    செங்கோட்டை- 1 #ManimutharDam
    நெல்லை அருகே கூட்டுறவு வங்கி ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேரன்மகாதேவி:

    நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ளது வெள்ளாங்குளி. இங்குள்ள தாமிரபரணி ஆற்றுக்கரையில் இன்று காலை ஒரு வாலிபர் பிணமாக கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. இதனால் அவர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    இதுபற்றி வீரவநல்லூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் அதே பகுதியை சேர்ந்த இசக்கிசங்கர்(வயது 33) என்பது தெரியவந்தது.

    இசக்கி சங்கர் களக்காட்டில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் வழக்கமாக அதிகாலையில் அப்பகுதியில் உள்ள ஆற்றில் குளிப்பது வழக்கம். இன்று காலையில் அவர் வழக்கம்போல் ஆற்றில் குளிக்க சென்றபோது மர்ம நபர்கள் அவரை வெட்டி கொலை செய்துள்ளனர்.

    இசக்கிசங்கரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொன்றனர்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவ இடத்துக்கு மோப்பநாய் வர வழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தை மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடியது. தடய வியல் நிபுணர்களும் வந்து தடயங்களை பரிசோதித்தனர்.

    சம்பவ இடத்துக்கு சேரன்மகாதேவி ஏ.எஸ்.பி. ஆசிக் ராவத், அம்பை டி.எஸ்.பி. ஜாகீர் உசேன், சேரன்மகாதேவி இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ் ஆகியோர் வந்து விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட இசக்கி சங்கருக்கும், அப்பகுதியில் வேறு யாருக்கும் முன்விரோதம் இருந்ததா? என்பதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கஜா புயல் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதியில் உள்ள மீனவர்கள் இன்று 2-வது நாளாக மீன்பிடிக்க விசைப்படகுகளில் கடலுக்கு செல்லவில்லை. #GajaCyclone #GajaStorm #Fishermen
    நெல்லை:

    வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘கஜா’ புயல் தற்போது திசைமாறி நாகப்பட்டினம் பாம்பன் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக தென் மாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் தூத்துக்குடி துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    நெல்லை- தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதியில் உள்ள மீனவர்கள் இன்று 2-வது நாளாக மீன்பிடிக்க விசைப்படகுகளில் கடலுக்கு செல்லவில்லை. நாட்டுப் படகு மீனவர்கள் வழக்கம் போல் நேற்று நள்ளிரவு கடலுக்கு மீன்பிடிக்க சென்று இன்று காலை கரை திரும்பி விட்டனர்.

    தூத்துக்குடியில் மட்டும் சுமார் 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    ‘கஜா’ புயல் குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    ‘கஜா’ புயல் காரணமாக வடதமிழகம் மற்றும் தென் மாவட்டங்களில் வரும் 14 -ந்தேதி கனமழை பெய்யும். 15-ந்தேதி வடதமிழகத்தில் மிக மிக கனத்த மழையும் தென்தமிழகத்தில் மிக கனமழை அல்லது கனமழை பெய்யும்.

    சுழல் காற்று மணிக்கு 90 முதல் 100 கி.மீ வேகத்தில், அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ வேகத்தில் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று 13-ந்தேதி காலை முதல் வீசக்கூடும்.

    தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று மற்றும் நாளை கடல் சீற்றத்துடன் காணப்படும்.

    இதன் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்பவும் ஏற்கனவே எச்சரிக்கப்பட்டுள்ளது.

    எனவே தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த பருவமழை இன்று நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் பெய்யத் தொடங்கி உள்ளது. தென்காசியில் அதிகபட்சமாக 6.4 மில்லி மீட்டர் மழையும், ஆய்க்குடியில் 4.20 மில்லி மீட்டர் மழையும், குண்டாறு அணை பகுதியில் 3 மில்லி மீட்டர் மழையும் இன்று காலை வரை பெய்துள்ளது.

    பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணை நீர் மட்டம் தொடர்ந்து அப்படியே நீடிக்கிறது. அணைகளுக்கு குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே வருகிறது.  #GajaCyclone #GajaStorm #Fishermen


    அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்ததாக நெல்லை மாவட்டத்தச் சேர்ந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். #Tirunelveli #Diwali
    நெல்லை:

    காற்று மாசுபாட்டை தடுப்பதற்கான நடவடிக்கையாக தீபாவளி தினத்தன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, காலை 6 முதல் 7 மணி வரையிலும், மாலை 7 முதல் 8 மணி வரையிலும் வெடி வெடிக்கலாம் என தமிழக அரசு நேரத்தை நிர்ணயித்து இருந்தது.

    இந்த நேரத்தில் அல்லாமல் மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்தால் 6 மாதம் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது.



    இந்நிலையில், நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி பகுதியைச் சேர்ந்த 6 பேர் அனுமதிக்கப்படாத நேரத்தில் வெடி வெடித்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதேபோல், சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் அனுமதிக்கப்படாத நேரத்தில் வெடிவெடித்ததாக 78 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Tirunelveli #Diwali
    தீபாவளி பண்டிகையையொட்டி தாம்பரத்தில் இருந்து நெல்லை மற்றும் கோவைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. கூட்டநெரிசல் இன்றி சென்றதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    தாம்பரம்:

    தீபாவளி பண்டிகையையொட்டி கூட்டநெரிசலை சமாளிக்க சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து நெல்லை மற்றும் கோவைக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

    அதன்படி தாம்பரம்-நெல்லை சிறப்பு ரெயில் நேற்று காலை 9.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து பயணிகளுடன் நெல்லைக்கு புறப்பட்டு சென்றது. இதேபோல 5-ந் தேதி(திங்கட்கிழமை)யும் இந்த சிறப்பு ரெயில் தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படுகிறது.

    மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரெயில்கள், நெல்லையில் இருந்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 7-ந் தேதி காலை 7.10 மணிக்கு புறப்பட்டு அதேநாள் இரவு 10.30 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது.

    இதேபோல சென்னை -கோவை முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் நேற்று காலை 7.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. 5-ந் தேதியும் இந்த சிறப்பு ரெயில் தாம்பரத்தில் இருந்து கோவைக்கு இயக்கப்படுகிறது.

    மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 7-ந் தேதி ஆகிய இரு நாட்களும் காலை 10 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 8.30 மணிக்கு தாம்பரம் வந்துசேரும்.

    நெல்லை மற்றும் கோவைக்கு தாம்பரத்தில் இருந்து தீபாவளி சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டதால் 2 ரெயில்களிலும் கூட்ட நெரிசல் இன்றி பயணிகள் குடும்பத்தினரோடு சொந்த ஊர்களுக்கு தீபாவளி பண்டிகையை கொண்டாட மகிழ்ச்சியுடன் புறப்பட்டு சென்றனர்.

    இதேபோல தாம்பரம் சானடோரியம் பஸ் நிலையத்தில் இருந்து விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர், மன்னார்குடி, பட்டுக்கோட்டை பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. அதிக பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் தீபாவளி பண்டிகையை கொண்டாட கூட்ட நெரிசல் இன்றி பயணம் செய்தனர். 
    ×