search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெரினா"

    பாராளுமன்றம், சட்டசபை இடைத்தேர்தலில் வென்ற எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களுடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேரணியாக சென்று தலைவர்கள் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.
    சென்னை:

    சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல், 22 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற புதிய எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு பேரணியாக சென்றார்.



    அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்துக்கு சென்ற ஸ்டாலின் அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கனிமொழி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    ஸ்டாலின் வருகையை கேள்விப்பட்டு அங்கு திரண்டிருந்த தி.மு.க.வினர் வெற்றி கோஷங்களை எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
    காணும் பொங்கலையொட்டி மெரினா கடற்கரையில் மக்கள் வெள்ளமென திரண்டனர். சென்னை மாநகரம் முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #KaanumPongal
    சென்னை:

    காணும் பொங்கல் கொண்டாட்டங்கள் இன்று தமிழகம் முழுவதும் களை கட்டியது.

    சென்னையில் மெரினா கடற்கரையில் மக்கள் வெள்ளமென திரண்டனர். காலையில் இருந்தே கார் மற்றும் மோட்டார்சைக்கிள்களில் கடற்கரையை நோக்கி மக்கள் படையெடுத்த வண்ணம் இருந்தனர். சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து மினி லாரிகளிலும் மக்கள் வந்திருந்தனர்.

    ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கலையொட்டி மெரினாவில் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடி வருகிறார்கள்.

    இந்த ஆண்டும் வழக்கமான உற்சாகத்துடன் காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் மெரினாவில் திரண்டனர்.

    தங்களது வீடுகளில் இருந்து சமைத்து எடுத்து வந்திருந்த உணவுகளை கடற்கரை மணலில் ஒன்றாக அமர்ந்து அனைவரும் சாப்பிட்டனர்.

    சிறுவர்களும் பெரியவர்களும் பாரபட்சமின்றி கூடி விளையாடி மகிழ்ந்தனர். கடற்கரை மணலில் பலர் கபடி விளையாடினார்கள்

    கண்ணாமூச்சி ஆட்டம் மற்றும் பந்து எறிதல் உள்ளிட்ட விளையாட்டுகளிலும் ஈடுபட்டனர். இதனால் மெரினா கடற்கரையில் உற்சாகம் கரைபுரண்டது.

    காணும் பொங்கலையொட்டி சென்னை மாநகரம் முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையர்கள், கமி‌ஷனர்கள் மகேஸ்குமார், தினகரன், இணை கமி‌ஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோரது மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

    உழைப்பாளர் சிலை மற்றும் காந்தி சிலை அருகில் தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலுள்ள சர்வீஸ் சாலை நுழைவு வாயில்களில் 11 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவசர மருத்துவ உதவிக்காக 7 ஆம்புலன்ஸ் வாகனங்களில் மருத்துவக் குழுவினர் மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது. மீட்புப் பணிக்காக மோட்டார் படகுகள் மற்றும் 140 நீச்சல் தெரிந்த நபர்கள் தயார் நிலையில் இருந்தனர்.

    மணல் பரப்பில் 13 உயர்கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு கோபுரத்திலும் 3 போலீசார் பணியமர்த்தப்பட்டிருந்தனர். அங்கிருந்து பைனாகுலர் மூலம் கண்காணித்து வாக்கி-டாக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. கட்டுப்பாட்டறைக்கு வாக்கிடாக்கி மூலமும் வாட்சப் குழுவிலும் உடனுக்குடன் தகவல்கள் வழங்கினர். 3 பறக்கும் பொம்மை விமானத்தில் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

    12 முக்கியமான இடங்களில் அதிக ஒளி திறன் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவை தற்காலிக கட்டுப்பாட்டு அறையில் அமைக்கப்பட்டுள்ள அகன்ற திரைகளில் கண்காணிக்கப்பட்டன.



    கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தடுப்பு வேலிகளை அமைத்து போலீசார் கண்காணித்தனர். ஆயுதப்படையின் குதிரைப் படையுடன் கூடுதலாக 16 குதிரைகள் மூலமும் கண்காணிக்கப்பட்டது.

    கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் உடனடியாக மீட்பதற்காக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. அடையாள அட்டையில் குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர் மற்றும் பெற்றோர் கைபேசி எண் ஆகியவற்றை எழுதி, குழந்தைகளின் கைகளில் கட்டப்பட்டது.

    இதே போன்று பொதுமக்கள் அதிகம் கூடும் மற்ற இடங்களான கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடலில் உள்ள தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சி, கேளிக்கை பூங்காக்கள் மற்றும் இதர இடங்களிலும் தற்காலிக காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. #KaanumPongal

    ஊர்க்காவல் படையினர் இன்று சென்னை கோட்டையை முற்றுகையிடப் போவதாக தகவல் பரவியதையடுத்து மெரினா கடற்கரையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
    சென்னை:

    தமிழகம் முழுவதும் ஊர்க்காவல் படையினர் ஏராளமானோர் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    பாதுகாப்பு பணி இல்லாத நேரங்களில் இவர்கள் சொந்த வேலையை பார்க்க சென்று விடுவார்கள். இவர்கள் போலீசாருக்கு உரிய சீருடையில் பணிபுரிவார்கள். ஆனால் இவர்களுக்கு சம்பளம் போலீசாரை விட குறைவு.

    இந்த நிலையில் சமீபத்தில் தமிழகத்தை சேர்ந்த ஊர்க்காவல் படையினர் வட மாநில தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சென்றனர். அங்கு போலீசாருக்கு இணையாக ஊர்க்காவல் படையினருக்கும் சம்பளம் வழங்கப்படுவதை அறிந்தனர்.

    இதையடுத்து தமிழகம் திரும்பிய அவர்கள் தங்களுக்கும், போலீசாருக்கு இணையான சம்பளம் வழங்க கோரி கடந்த வாரம் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் போராட்டம் நடத்தினார்கள். அன்று மாலை தொடங்கிய போராட்டம் நள்ளிரவு வரை நீடித்தது. அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இந்த நிலையில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்க்காவல் படையினர் இன்று சென்னை கோட்டையை முற்றுகையிடப் போவதாக தகவல் பரவியது. இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் கிளம்பி வருவதாக கூறப்பட்டது.

    இதையடுத்து மெரினா கடற்கரையிலும் எழிலகம் எதிரிலும், நேப்பியர் பாலம் அருகிலும், தலைமை செயலகம் முன்பும் இன்று ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

    மேலும் எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    புத்தாண்டுக்குள் மெரினா கடற்கரையை சுத்தம் செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #CleanMarina #MadrasHighCourt
    சென்னை:

    சென்னை வடபழனியில் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்தனர். இந்தக் கட்டிடம் விதிகளை மீறிக் கட்டப்பட்டதாகக் கூறப்படுவதால் இது தொடர்பாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.



    இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து ஜனவரி 3-ம் தேதி முடிவு செய்யப்படும் என தெரிவித்தனர்.

    மேலும், புத்தாண்டுக்குள் மெரினாவை தூய்மைப்படுத்த திட்டம் வகுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், முதலில் மெரினாவை சுத்தம் செய்யுங்கள், பின்னர் மாவட்டம், மாநிலத்தை சுத்தம் செய்யலாம் என்றனர். #CleanMarina #MadrasHighCourt
    சென்னையில் சுற்றுலாதளமாக திகழும் மெரினா கடற்கரையில் மோட்டார் சைக்கிள்களுக்கு பார்க்கிங் கட்டணமாக ரூ.5 வசூலிக்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. #MerinaBeach #ParkingFee
    சென்னை:

    சென்னையில் சுற்றுலாதளமாக திகழும் மெரினா கடற்கரைக்கு தினமும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக மெரினா கடற்கரை உட்புற சாலைகளில் கார்கள், வேன்கள், பஸ்கள், மோட்டார் சைக்கிள்கள் போன்ற வாகனங்கள் அணிவகுத்து நிற்பதை காண முடிகிறது.

    தற்போது கார்கள் போன்ற கனரக வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தை ஒரு மணி நேரத்திற்கு ரூ.20 ஆக உயர்த்தவும், மோட்டார் சைக்கிள்களுக்கு பார்க்கிங் கட்டணமாக ரூ.5 வசூலிக்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கையாக வாகனங்கள் நிறுத்தத்தை முறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சியும், காவல்துறையும் இணைந்து சென்னை நகரில் 375 இடங்களில் கட்டணத்துடன் கூடிய பார்க்கிங் வசதியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி மாநகராட்சி அதிகாரிகளும், போலீஸ் அதிகாரிகளும் இணைந்த கமிட்டி ஒன்று அமைக்கப்பட உள்ளது. இந்த கமிட்டி எந்தெந்த இடங்களில் பார்க்கிங் வசதியை அமைக்கலாம் என்று ஆய்வு செய்து அறிக்கை தருவார்கள். அதன் ஒரு கட்டமாகவே மெரினா, எலியட்ஸ் உள்பட கடற்கரைகளில் கார்களுக்கு பார்க்கிங் கட்டணத்தை உயர்த்தவும், மோட்டார் சைக்கிள்களுக்கு கட்டணம் வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகள் பற்றி அவ்வப்போது கருத்து தெரிவித்து வரும் கஸ்தூரி மெரினா அரசியல் பற்றி கருத்து தெரிவித்திருக்கிறார். #Kasthuri
    நடிகை கஸ்தூரி அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகள் பற்றி சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பேசி வருகிறார். இதனால் அவருக்கு எதிராக விமர்சனங்களும் வந்த வண்ணமாக உள்ளன.

    இருப்பினும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், தொடந்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் சாமி சிலைகள் கடத்தல் குறித்து பேசினார். சினிமாவில் பலர் சம்பளம் தராமல் தன்னை ஏமாற்றியதாகவும் கூறினார். இந்த நிலையில், தற்போது மெரினா அரசியல் குறித்து கடுமையாக சாடி இருக்கிறார். 

    சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகிலேயே மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டது. அங்குள்ள அண்ணா நினைவிடத்தின் பின்னால் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.



    மெரினாவில் சில தலைவர்கள் தியானம் செய்கிறார்கள். அரசியல் அறிவிப்புகளையும் வெளியிடுகிறார்கள். இதற்கு நடிகை கஸ்தூரி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    “கலைஞர் மற்றும் ஜெயலலிதா இல்லாத தமிழகத்தை எல்லோரும் கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாடு தகப்பன் சொத்துமாதிரி நினைத்து ஆளாளுக்கு அடித்துக் கொள்கிறார்கள். மெரினா என்பது தியானம் செய்வதற்கும், தர்மயுத்தம் நடத்துவதற்கும் அறிவிப்புகளை வெளிடுவதற்குமான இடமாக மாறி விட்டது.

    60 ஆண்டுகளாக சாதி பிரிவினைகள், லஞ்சம், ஊழல் மற்றும் வெறுப்பு அரசியல்தான் இருந்து இருக்கிறது. இதை அவர்களே ஒருவர்மீது ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டி சொல்லி வருகிறார்கள். இப்போது ஒரு மாற்றத்துக்கான நேரம் வந்து இருப்பதாக கருதுகிறேன்.” இவ்வாறு கூறியுள்ளார். #Kasthuri

    கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்கும்படி வழங்கிய தீர்ப்பு, சோகத்தில் கிடைத்த ஒரு மகிழ்ச்சி என மு.க.ஸ்டாலின் உருக்கமாக பேசினார். #Karunanidhi #MKStalin
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததையடுத்து கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செயற்குழு கூட்டத்தில் பேசிய தலைவர்கள் கருணாநிதியின் கட்சிப் பணிகள் மற்றும் ஆட்சிப் பணிகள் குறித்து விளக்கி அவரை நினைவுகூர்ந்தனர்.

    நிறைவாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, அண்ணாவின் பக்கத்தில் தன்னை அடக்கம் செய்யவேண்டும் என்பதே தலைவர் கருணாநிதியின் ஆசை என்று கூறினார்.



    ‘நீங்கள் அனைவரும் தலைவரை இழந்திருக்கிறீர்கள். நான் தலைவரை மட்டுமல்ல தந்தையையும் இழந்து நிற்கிறேன். மெரினாவில் தலைவர் கருணாநிதியை அடக்கம் செய்ய இடம் ஒதுக்கக் கோரி முதலமைச்சரின் கையை பிடித்து வேண்டுகோள் விடுத்தேன். ஆனால் விதிமுறைப்படி இடம்கொடுக்க வாய்ப்பில்லை என அவர் கூறினார்.

    ஆனால் எப்படியும் இடம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். மெரினாவில் இடம் கிடைத்ததின் வெற்றி வழக்கறிஞர் குழுவுக்குத் தான் சேரும். அவர்களுக்கு நன்றி. பெரிய சோகத்தில் கிடைத்த ஒரு மகிழ்ச்சி, நீதிமன்ற தீர்ப்பு’ என்றும் ஸ்டாலின் உருக்கமாக பேசினார். #Karunanidhi #MKStalin
    காமராஜர் நினைவிடத்துக்காக மெரினாவில் இடம் கேட்கவில்லை என்று காங்கிரஸ் முன்னாள் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். #Kamarajmemorial
    சென்னை:

    மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே தி.மு.க. தலைவர் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய தி.மு.க. தரப்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

    ஆனால், அரசு அதற்கு அனுமதி அளிக்கவில்லை. இதனால் தி.மு.க. சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    அதில், மெரினாவில் அடக்கம் செய்ய கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, அரசு தரப்பில் சில வாதங்களை முன்வைத்தனர்.

    கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலத்தில் முன்னாள் முதலமைச்சர்களான ராஜாஜி, காமராஜர் ஆகியோர் மரணம் அடைந்தார்கள்.

    அவர்களுக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க அனுமதி கேட்ட போது, கருணாநிதி மறுத்து விட்டார். எனவே, முன்னாள் முதலமைச்சர்களுக்கு மெரினாவிடம் இடம் ஒதுக்க முடியாது என்று அரசு சார்பில் வாதாடப்பட்டது.

    தி.மு.க. தரப்பில் வாதாடும் போது, காமராஜருக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க கோரிக்கை எதுவும் வைக்கப்படவில்லை என்று கூறினார்கள்.

    சமூக வலை தளங்களிலும் இது சம்பந்தமாக செய்திகள் பரவிய வண்ணம் உள்ளன. காமராஜர் முன்னாள் முதலமைச்சர் என்பதால் அவருக்கு மெரினாவில் இடம் அளிக்க கருணாநிதி மறுத்து விட்டார் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

    காமராஜர் இறந்த போது, அப்போது காங்கிரசில் முன்னணி தலைவர்களாக இருந்தவர்களிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. அப்போது காங்கிரசின் பொதுச் செயலாளராக இருந்த திண்டிவனம் ராமமூர்த்தி கூறியதாவது:-

    காமராஜர் இறந்த போது மெரினாவில் நினைவிடம் அமைக்க வேண்டும் என பழ.நெடுமாறன், கண்ணதாசன், ஜெயகாந்தன் போன்றவர்கள் வற்புறுத்தினார்கள்.

    இது சம்பந்தமாக கருணாநிதியிடம் கேட்ட போது, அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால், அங்கு அமைக்கப்பட்டுள்ள அண்ணா சமாதி, கடற்கரை அருகே இருப்பதால் பராமரிப்பதில் பெரும் கஷ்டம் இருக்கிறது.

    எனவே, இங்கு காமராஜருக்கு நினைவிடம் வேண்டாம் என்று கருணாநிதி கூறினார். ஆனால், முன்னாள் முதலமைச்சர்களுக்கு மெரினாவில் இடம் இல்லை என விதிகள் இருப்பதாக அப்படி எதுவும் கருணாநிதி சொல்லவில்லை.



    காந்தி மண்டபம் அருகே நினைவிடம் அமைக்கலாம் என்று கருணாநிதி கூறினார். அதை அப்போதைய மேல்-சபை எதிர்க்கட்சி தலைவரான ராஜாராம் நாயுடு உடனடியாக ஏற்றுக் கொண்டார். மற்ற காங்கிரஸ் தலைவர்களிடமும் இதுபற்றி கூறியபோது, அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

    அப்போது காமராஜருக்கு மெரினாதான் வேண்டும் என்று எங்களுக்கு உணர்ச்சிப் பூர்வமான எந்த எண்ணமும் இல்லை.

    இவ்வாறு திண்டிவனம் ராமமூர்த்தி கூறினார்.

    காமராஜர் இறந்த போது காங்கிரசின் செயலாளராக தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் இருந்து வந்தார். அவரிடம் இதுபற்றி கேட்ட போது, கூறியதாவது:-

    சமூக வலைதளங்களில் உண்மையான விவரம் தெரியாமல் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

    மெரினாவில்தான் காமராஜருக்கு நினைவிடம் கட்ட வேண்டும் என்று காங்கிரசார் அப்போது வற்புறுத்தவில்லை. சத்தியமூர்த்தி பவனில் நினைவிடம் அமைக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம்.

    அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி காந்தி மண்டபம் அருகே நிலம் ஒதுக்கீடு செய்து தருகிறேன். காமராஜர் தியாகி என்பதால் அந்த இடம்தான் பொருத்தமாக இருக்கும். அங்கு இறுதிச்சடங்குகள் செய்து நினைவிடம் அமைத்துக்கொள்ளலாம் என்று கூறினார்.

    அதன்படி அங்கு இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் நடந்தன. காமராஜரின் தங்கையின் பேரன் முறைப்படி இறுதிச்சடங்குகளை செய்து சிதைக்கு தீ மூட்டினார். அந்த இடத்தில் பின்னர் நினைவிடம் அமைக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், காமராஜர் பற்றி பல புத்தகங்களை எழுதியுள்ளவருமான கோபண்ணா கூறும் போது, காந்தி மண்டபத்துக்கு மேற்காக காமராஜருக்கு நினைவிடம் அமைக்கலாம் என்று முடிவு செய்து அப்போதைய பழைய காங்கிரஸ் தலைவர்களை கருணாநிதி ஏற்றுக்கொள்ள செய்தார் என்று கூறினார்.

    ராஜாஜி நினைவிடம் தொடர்பாக அப்போதைய சுதந்திரா கட்சியின் சட்டமன்ற தலைவராக இருந்த எச்.வி. ஹண்டே கூறும்போது, ராஜாஜிக்கு நாங்கள் மெரினாவில் இடம் கேட்கவில்லை.

    அதே நேரத்தில் ராஜாஜிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதை உடனே கருணாநிதி ஏற்றுக்கொண்டார் என்று கூறினார். #Kamarajmemorial
    சென்னை மெரினா கடற்கரையில் இன்று நடைபெற்ற நினைவேந்தல் பேரணியில் பங்கேற்க வந்தவர்களை போலீசார் கைது செய்தனர். #Marina #Police #Arrest
    சென்னை:

    இலங்கையில் நடந்த இனப்படுகொலை சம்பவத்தை நினைவுகூரும் வகையில் மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்ச்சியில் 13 இயக்கங்கள் இன்று பங்கேற்கப் போவதாக அறிவித்திருந்தன.

    ஆனால், சென்னை மெரினா கடற்கரை பகுதியில் போராட்டமோ, பொதுக்கூட்டமோ நடத்துவதற்கு ஐகோர்ட்டு உத்தரவின்படி போலீசார் அனுமதி கொடுப்பது கிடையாது. இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நினைவேந்தல் நிகழ்ச்சி எனும் பெயரில் தடையை மீறி ஒன்று கூடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தது. 

    இதற்கிடையே, மெரினா மற்றும் சேப்பாக்கம் பகுதிகளில் 1,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். மெரினாவில் பல்வேறு அமைப்பினர் நுழையாமல் இருக்க போலீசார் ரோந்தும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு மத்தியில் பாரதி சாலை முதல் கண்ணகி சாலை வரை பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி தொண்டர்கள் பேரணியாக செல்ல வந்தனர். இந்த பேரணியில் வைகோ, திருமுருகன் காந்தி மற்றும் தெலகான் பாகவி ஆகியோரும் பங்கேற்றனர்.

    நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்களை கைதாகுமாறு போலீசார் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து, தடையை மீறி மெரினா செல்ல முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர். #Marina #Police #Arrest
    இலங்கையில் இறுதிப்போரின் போது உயிரிழந்த தமிழர்களை நினைவு கூரும் வகையில் நடக்கவுள்ள நினைவேந்தல் நிகழ்ச்சியை தடுக்கும் வகையில் மெரினா, சேப்பாக்கத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #Marina #Police
    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரை பகுதியில் போராட்டமோ, பொதுக்கூட்டமோ நடத்துவதற்கு ஐகோர்ட்டு உத்தரவின்படி போலீசார் அனுமதி கொடுப்பது கிடையாது.

    இதற்கிடையே, மெரினா கடற்கரையில் இலங்கையில் நடந்த இனப்படுகொலை சம்பவத்தை நினைவுகூரும் வகையில் நினைவேந்தல் நிகழ்ச்சியில் 13 இயக்கங்கள் இன்று பங்கேற்கப் போவதாக அறிவித்திருந்தன.

    இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், போராட்டம் எனும் பெயரில் மெரினாவில் தடையை மீறி பொதுமக்களுக்கு இடையூறு செய்யவேண்டாம். தடையை மீறி நினைவேந்தல் நிகழ்ச்சி என்ற பெயரில் மெரினாவில் ஒன்று கூடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது. 

    இந்நிலையில், சென்னை மெரினா மற்றும் சேப்பாக்கம் பகுதிகளில் 1,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மெரினாவில் பல்வேறு அமைப்பினர் நுழையாமல் இருக்க போலீசார் ரோந்தும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. நீதிமன்ற தடையை மீறி மெரினாவில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். #Marina #Police
    மெரினாவில் தடையை மீறி நினைவேந்தல் நிகழ்ச்சி என்ற பெயரில் ஒன்று கூடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரை பகுதியில் போராட்டமோ, பொதுக்கூட்டமோ நடத்துவதற்கு ஐகோர்ட்டு உத்தரவின்படி போலீசார் அனுமதி கொடுப்பது கிடையாது. இந்தநிலையில் மெரினா கடற்கரையில் இலங்கையில் நடந்த இனப்படுகொலை சம்பவத்தை நினைவுகூரும் வகையில் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக நேற்று இரவு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நினைவேந்தல் நிகழ்ச்சியை சில அமைப்புகள் பொதுமக்கள் கூடும் மெரினாவில் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளன. எனவே யாரும் போராட்டம் எனும் பெயரில் மெரினாவில் தடையை மீறி பொதுமக்களுக்கு இடையூறு செய்யவேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுகிறார்கள். தடையை மீறி நினைவேந்தல் நிகழ்ச்சி என்ற பெயரில் மெரினாவில் ஒன்று கூடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 
    ×