என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தஞ்சை"
தஞ்சாவூர்:
தமிழகத்தில் 22 சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் 38 பாராளுமன்றத்துக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று தமிழகம் முழுவதும் உள்ள அரசு டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற தனியார் ஓட்டலில் உள்ள மதுபான கூடங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று அவைகள் அடைக்கப்பட்டன.
இதனை பயன்படுத்தி யாராவது மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்கிறார்களா? என்று சோதனை செய்ய தஞ்சையில் பல இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கிழக்கு போலீசார் தஞ்சை பழைய பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்றபோது, திருவையாறு பஸ் நிறுத்தம் அருகே 2 பேர் மதுபாட்டில்களை விற்றுக்கொண்டிருந்தனர்.
உடனடியாக போலீசார் அவர்களை பிடித்து விசாரித்ததில், வடுவூரை சேர்ந்த பஞ்சமூர்த்தி, சொக்கலிங்கம் என்பது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு லாட்டரி சீட்டுகள் தடை செய்யப்பட்டன. இருப்பினும் சில இடங்களில் திருட்டுத்தனமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுகிறது. லாட்டரி சீட்டுகள் விற்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இரண்டாம் கேட் அருகே 2 வாலிபர்கள் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மருத்துவக்கல்லூரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
அதில் தஞ்சை தென்பெரம்பூர் கிழக்கு தெரு வசந்த் (வயது 23), தெற்கு தெரு ராஜா (22) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து ரூ .61 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.80 ஆயிரமாகும்.
தஞ்சாவூர்:
தஞ்சை திருவேங்கடம் நகரை சேர்ந்தவர் தனபாலன் (வயது 63). ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். இவரது மனைவி சாந்தி (53). இவர்கள் 2 பேரும் கீழவாசலில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றனர். பின்னர் நிகழ்ச்சியை முடித்து விட்டு தனபாலன் தனது மனைவி சாந்தியுடன் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் 2 பேர் முகமூடி அணிந்து கொண்டு மற்றொரு மோட்டார் சைக்கிளில் அவர்களை பின்தொடர்ந்தனர். தஞ்சை-வல்லம் சாலையில் ஒரு தனியார் கம்பெனி அருகே வந்தபோது திடீரென மர்ம நபர்கள் வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்து சாந்தியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க செயினை சட்டென்று இழுத்து பறித்தனர்.
பின்னர் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். மர்ம நபர்கள் செயினை இழுத்ததில் சாந்தி நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத அவரது கணவர் அதிர்ச்சியடைந்து உடனடியாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சாந்தியை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சாந்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுப்பற்றி தனபாலன் தஞ்சை மருத்துவ கல்லூரி போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோவை ஆய்வு செய்தனர். அதில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் பின்தொடர்ந்து சென்று சாந்தியின் கழுத்தில் கிடந்த செயினை பறித்த காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து கொள்ளையர்கள் யார்? அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சையில் நேற்று முன்தினம் இரவு ரெயில் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு தாயுடன் ஸ்கூட்டியில் சென்ற சங்கவி தாரணி என்ற இளம்பெண்ணிடம் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் செயினை பறித்தனர். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது மீண்டும் அதுபோல் செயின் பறிப்பு நடந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
மோட்டார் சைக்கிள்களில் செல்லும் பெண்களை குறிவைத்து கொள்ளை சம்பவத்தில் மர்ம நபர்கள் ஈடுபடுகின்றனர். எனவே தஞ்சையில் முக்கிய இடங்கள் அனைத்திலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை அடுத்த திட்டை பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 52). கேபிள் டி.வி. ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சாந்தி (45).
இந்த நிலையில் லோகநாதனும், சாந்தியும் தஞ்சைக்கு பொருட்கள் வாங்குவதற்காக காரில் சென்றனர். பின்னர் தஞ்சையில் இருந்து திட்டைக்கு இன்று காலை 11.30 மணியளவில் காரில் அவர்கள் திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது திட்டை கோவில் அருகே கார் வந்த போது, எதிரே ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. இதனால் லோகநாதன், திடீரென காரில் பிரேக் போட்டார்.
இதில் அந்த பகுதி சாலையில் ஜல்லிக்கற்கள் நிரப்பப்பட்டு இருந்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது.
இதில் காரில் இருந்த லோகநாதன், முன்சீட்டில் உட்கார்ந்திருந்த சாந்தி ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து பற்றி தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திட்டை பகுதியில் கடந்த ஓராண்டாகவே தார்சாலை போட ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு இருந்தது. ஆனால் இதை சீர்படுத்தாமல் ரோட்டில் ஜல்லிக்கற்கள் அப்படியே இருந்தது. இதன்காரணமாக கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டு 2 பேர் பலியானதாக பொதுமக்கள் குற்றச்சாட்டினர். மேலும் ஜல்லிக்கற்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை கரந்தை பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 38) தொழிலாளி. இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த காளிதாஸ் திடீரென விஷம் குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் காளிதாஸ் பரிதாபமாக இறந்தார்.
இது பற்றி அவரது தந்தை சுந்தரம் தஞ்சை மேற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் ஏன் தற்கொலை செய்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பெரியகோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சாமி புறப்பாடு நடைபெற்றது. மேலும் பரதநாட்டியமும், திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது. தேர் இருக்கும் இடமான மேலவீதியில் கடந்த 7-ந் தேதி தேர் அலங்காரம் செய்யப்பட்டதையடுத்து பந்தகால் முகூர்த்தம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. நேற்று முதலே தஞ்சை மாவட்டம் மட்டுமில்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் தஞ்யில் குவிந்தனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் வழக்கத்தை விட அதிகளவில் கூட்டம் காணப்பட்டது. இதுமட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் தேரோட்டத்தை காண அதிகளவில் வந்தனர்.
தேரோட்டத்தையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு பெரியகோவிலில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர், தியாகராஜர்கமலாம்பாள் ஆகிய பஞ்சமூர்த்திகள் ஒன்றன்பின் ஒன்றாக முத்துமணி அலங்கார சப்பரத்தில் புறப்பட்டு தேர் மண்டபத்தை வந்தடைந்தனர். பின்னர் தியாகராஜர்- கமலாம்பாள் மட்டும் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதற்காக 16½ அடி உயரத்துடன் 40 டன் எடை கொண்ட 3 அடுக்குகள் கொண்ட தேரில் பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தியாகராஜருக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து காலை 6.15 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. மாவட்ட கலெக்டர் அண்ணாத்துரை, போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே ஆகியோர் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் மேலவீதியில் இருந்து பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி புறப்பட்டது. பக்தர்கள் ‘‘ஓம் நமச்சிவாய’’ என்ற கோஷங்களை எழுப்பியபடி தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர். அப்போது மங்கள வாத்தியங்கள், கரகாட்டம், குச்சிப்புடி, தப்பாட்டம், செண்டை வாத்தியங்கள் இசைக்கப் பட்டன.
தஞ்சை மேலராஜவீதி, வடக்கு ராஜவீதி, கீழராஜவீதி, தெற்கு ராஜவீதி ஆகிய 4 ராஜ வீதிகளிலும் தேர் வலம் வந்தது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாக மேலராஜவீதியில் 3 இடங்களிலும், வடக்கு ராஜ வீதியில் 4 இடங் களிலும், கீழராஜ வீதியில் 4 இடங்களிலும், தெற்குராஜ வீதியில் 3 இடங்களிலும் தேர் நிறுத்தப்பட்டது.
பக்தர்கள் பய பக்தியுடன் சாமி தரிசனம் செய்து சாமிக்கு மாலைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொடுத்தனர். பின்னர் மதியம் 11.45 மணிக்கு தேர் நிலை மண்டபத்தை வந்த டைந்தது.
இதில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளி நாட்டினர் என லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தஞ்சை நகரமே இன்று விழாக்கோலம் பூண்டது. போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் உத்தரவுப்படி பாதுகாப்பு பணியில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.
ஒரத்தநாடு:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு கிராமத்தை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் கோவிந்தராஜ் (வயது 75). ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை பண்ணை அலுவலக ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு திருமணமாகி 2 மகன் மற்றும் 1 மகள் உள்ளனர். தற்போது குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோவிந்தராஜ் தனியாக வசித்து வந்தார்.
இவர் பிரதமர் மோடி மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார். இதனால் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக ஒரத்தநாடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தனியாகவே சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார். செல்லும் இடங்களில் பார்ப்பவர்களை எல்லாம் மோடிக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்வாராம்.
இந்த நிலையில் கோவிந்தராஜ் ஒரத்தநாடு அண்ணா சிலை அருகே நேற்று இரவு மோடியின் படத்தை கழுத்தில் போட்டு கொண்டு பா.ஜனதாவுக்கு ஆதரவாக தனியாக நின்று பிரசாரம் செய்தார். அங்குள்ள கடைக்காரர்களிடம் வாக்கு சேகரித்தார்.
அப்போது அங்கு ஒரத்தநாட்டை அடுத்த கண்ணந்தங்குடி மேலையூரை சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் கோபிநாத் (33) என்பவர் வந்தார். அவர் திடீரென மோடிக்கு ஆதரவாக எப்படி பிரசாரம் செய்யலாம்? என கூறி முதியவர் கோவிந்தராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து வாக்குவாதம் முற்றி கோபிநாத் ஆத்திரம் அடைந்து கோவிந்தராஜை சரமாரியாக அடித்து உதைத்தார். வலி தாங்க முடியாமல் கதறினார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கோவிந்தராஜ் பரிதாபமாக இறந்தார்.
இது பற்றி கோவிந்தராஜ் மகள் அற்புத அரசு ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபிநாத்தை கைது செய்தனர்.
மோடிக்கு ஆதரவாக செயல்பட்ட சமூக ஆர்வலரை அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் சமூக ஆர்வலர் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க.வினர் சம்பவ இடத்துக்கு திரண்டனர். இதையொட்டி ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #BJP #LokSabhaElections2019
தஞ்சாவூர்:
தஞ்சை பாராளுமன்ற தொகுதி மற்றும் சட்டமன்ற தொகுதி தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் அரசு அலுவலர்களை கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு முக்கிய இடங்களில் 24 மணி நேரமும் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்குமார், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் பறக்கும் படையினர் இன்று காலை வாகன சோதனை நடத்தி கொண்டு இருந்தனர். அப்போது தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற ஒருமினி லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர்.
அப்போது அதனை ஓட்டி சென்ற தஞ்சை முனிசிபல் காலனியை சேர்ந்த கோபி (வயது 33) உரிய ஆவணம் இல்லாமல் ரூ.2 லட்சம் வைத்திருந்தது தெரிய வந்தது. அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக பணத்தை தொண்டு வந்த கோபியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் திருச்சி காய்கறி மார்க்கெட்டுக்கு சென்று காய்கறி வாங்க பணத்தை கொண்டு சென்றதாக கூறினார். அவரிடம் அதற்கான ஆவணத்தை காட்டி பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று பறக்கும் படையினர் தெரிவித்தனர். #LokSabhaElections2019
ஒரத்தநாடு:
நாகையை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 25). கார் டிரைவர். இவரது மனைவி துர்கா (20). இவர்கள் 2 பேரும் காதலித்து கடந்த 1 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் கணவன்- மனைவிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் பிரகாசிடம் கோபித்து கொண்டு துர்கா தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தெற்கு மடவளாகத்தில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் பிரகாஷ் மனவேதனையில் இருந்தார். இதற்கிடையே துர்க்காவை சமாதானபடுத்தி வீட்டுக்கு அழைத்து வர முடிவு செய்தார்.
அதன்படி ஒரத்தநாட்டுக்கு சென்று அவர் இனி நமக்குள் எந்த வித சண்டையும் வராது. நம் வீட்டுக்கு செல்லலாம். என் கூட வா என்று துர்காவை அழைத்தார். ஆனால் அவர் மறுத்தார். இதனால் மனமுடைந்த பிரகாஷ் அங்கேயே மனைவி கண்முன்னே திடீரென விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மற்றும் மாமனார் உடனடியாக பிரகாசை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனிக்காமல் பிரகாஷ் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஒரத்தநாடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 1 ஆண்டே ஆவதால் ஆர்.டி.ஓ. சுரேசும் விசாரித்து வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை காவல்துறை அதிகாரிகளுக்கு வாக்குச்சாவடி மற்றும் வாக்குப்பதிவு எந்திரங்களை கையாளுவது தொடர்பான பயிற்சி முகாம் தஞ்சை தீர்க்க சுமங்கலி மஹாலில் இன்று நடைபெற்றது பயிற்சியில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை கலந்துகொண்டு போலீசாருக்கு பயிற்சி வழங்கி பேசினார்.
தஞ்சை மாவட்டத்தில் 2287 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் காவலர்கள் கண்காணிப்பு பணியை கண்ணும் கருத்துமாக கண்காணிக்க வேண்டும். மாவட்டத்தின் 104 பதட்டமான வாக்குச்சாவடிகள் ஆக கண்டறியபட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு அவசியம் ஏற்படுத்த வேண்டும்.
மேலும் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படக்கூடிய வாக்குச்சாவடிகள் எவை எவை என்பதை முன்கூட்டியே கண்டறிந்து அங்கு தேவையான நடவடிக்கைகளை ஏற்படுத்த வேண்டும்.
முன்னதாக வாக்குப்பதிவு நடைபெறும் 48 மணி நேரத்திற்கு முன்னதாக அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டிருக்கும் நிலையில் மொத்தமாக யாராவது மதுபானங்களை வாங்கி செல்வது தெரியவந்தால் அதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் நடைபெறும் சமயத்தில் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளின்படி 200 மீட்டருக்கு அப்பால்தான் அரசியல் கட்சியினர் இருக்க வேண்டும் என்பதை அவசியம் கடைபிடித்து யாரும் வரம்பு மீறாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். மாவட்டத்தில் 347 பேர் தொடர்ச்சியாக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவலை முன்கூட்டியே காவல்துறையினர் தெரிந்து கொண்டு அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திடீரென வாக்குச்சாவடி மையங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டால் அதை தீர்க்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வரும் மத்திய துணை ராணுவப் படையினர் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் அவர்களுக்கு வழிகாட்டுதல் செய்ய வேண்டும் அவர்களுக்கு தேவையான தங்குமிடம் வாகன வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் உள்ளூர் போலீசார் செய்து தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் மற்றும் அனைத்து சரகத்திற்கு உட்பட்ட உதவி துணை போலீஸ் சூப்பிரண்டுகள், மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் ரெட்டிபாளையம் ரோடு கார்முகில் நகரை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 67). இவர் கடந்த 23-ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு அய்யன் திருவள்ளுவர் தெருவில் உள்ள உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பின்னர் நேற்று மாலை அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 25 பவுன் நகை கொள்ளை போய் இருந்ததை கண்டு திடுக்கிட்டார். பூட்டி கிடந்த வீட்டை நோட்டமிட்டு மர்ம கும்பல் நகையை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றுள்ளது தெரிய வந்தது. இதுபற்றி ஷாஜகான், தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் கொள்ளை நடந்த வீட்டுக்கு மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை பதிவு செய்தனர். தொடர்ந்து போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
தஞ்சை கூட்டுறவு காலனி 2-வது தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 69). இவர் சென்னையில் போலீஸ் உதவி கமிஷனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
தற்போது அவர் சென்னையில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இதனால் தஞ்சையில் உள்ள வீட்டை அவரது மகள் அபிராமி அவ்வப்போது வந்து பார்த்து விட்டு செல்வது வழக்கம். அபிராமி, திருச்சி மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று தஞ்சை கூட்டுறவு காலனியில் உள்ள தந்தை வீட்டை அபிராமி பார்வையிட வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் வீட்டின் பீரோவில் இருந்த ரூ.45 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி அவர் மருத்துவக் கல்லூரி போலீசில் புகார் செய்சார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தஞ்சை நகரில் 2 வீடுகளில் நகை- பணம் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வல்லம்:
காரைக்குடி பகுதி ஆத்தங்குடியை சேர்ந்தவர் நாச்சியப்பன் (வயது 83). இவர் தனது மகன் நாராயணனுடன் ஒரு காரில் புறப்பட்டார். காரை நாராயணன் ஓட்டி வந்தார்.
அந்த கார் தஞ்சை அருகே அற்புதாபுரம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக கார் மோதியது. இதில் காரில் இருந்த நாச்சியப்பன் மற்றும் அவரது மகன் நாராயணன் ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நாச்சியப்பன் பரிதாபமாக இறந்தார். நாராயணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்