search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 103053"

    ஈரோட்டில் கருணாநிதி சிலையை திமுக தலைவர் முக ஸ்டாலின் நாளை மாலை திறந்து வைக்கிறார். சிலை திறப்புக்காக 3-ம் வகுப்பு மாணவி சிறுமி சோபிகா தனது உண்டியல் பணத்தை கொடுத்துள்ளார். #Karunanidhi #DMK
    ஈரோடு:

    ஈரோடு முனிசிபல் காலனியில் சென்னை கலைஞர் அறிவாலயத்தில் உள்ளது போல் முழு உருவ கருணாநிதி சிலை வைக்கப்பட்டு உள்ளது.

    இந்த சிலையை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை (30-ந் தேதி) மாலை திறந்து வைக்கிறார். இந்த சிலை திறப்பு நிகழ்ச்சிக்காக கொடுமுடி அருகே உள்ள சாண்டாம்பாளையம் மேலூரை சேர்ந்த 3-ம் வகுப்பு மாணவி சிறுமி சோபிகா தனது உண்டியல் பணத்தை கொடுத்துள்ளார்.

    இந்த மாணவி தனது தந்தையிடம் வாங்கும் பணத்தை உண்டியலில் சிறுக... சிறுக சேர்த்து வைத்திருந்தார். இந்த உண்டியல் பணத்தை தான் சிறுமி சோபிகா வழங்க முடிவு செய்தார்.

    உண்டியலை திறந்து பார்த்தபோது அதில் ரூ.1104 இருந்தது. அந்த பணத்துடன் பெற்றோருடன் ஈரோடு வந்த சிறுமி சோபிகா முன்னாள் அமைச்சரும், ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான முத்துசாமியை சந்தித்து வழங்கினார்.

    அந்த சிறுமி கூறும்போது, ‘‘எனக்கு கலைஞர் தாத்தா ரொம்ப பிடிக்கும். கலைஞர் தாத்தா சிலை திறப்புக்காக இந்த பணத்தை கொடுத்துள்ளேன்’’ என்று கூறினார்.  #Karunanidhi #DMK
    ஜனவரி 28ந் தேதி நடப்பதாக இருந்த திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஏன்? என்பது தொடர்பாக விரிவான விபரங்கள் வெளியாகியுள்ளது. #ThiruvarurByElection #ElectionCommission

    சென்னை:

    கருணாநிதி மரணம் காரணமாக 7-8-2018 முதல் திருவாரூர் சட்டசபை தொகுதி காலி இடமாக உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி காலியாக உள்ள தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் அதாவது 6-2-2019க்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

    அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் ஜனவரி 3-ந்தேதி அறிவிக்கை வெளியிட்டது. 28-ந்தேதி ஓட்டுப்பதிவு நடத்துவதற்கு ஏற்ப தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டது.

    தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கடந்த 3-12-2018 அன்று தேர்தல் ஆணையத்துக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில் அவர் கஜா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கடும் பேரிழவு ஏற்பட்டு இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். விவசாய பயிர்கள், தோட்டக்கலை பயிர்கள் அழிந்ததோடு 6 லட்சம் வீடுகள், 1½ லட்சம் மின் கம்பங்கள் சேதம் அடைந்து இருப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

    கஜா புயல் பாதித்த 12 மாவட்டங்களில் திருவாரூர் மாவட்டமும் ஒன்று என்றும், அங்கு நிவாரணப் பணிகள் முடிந்து முழுமையான இயல்பு நிலை திரும்ப குறைந்தது 3 மாதங்கள் ஆகும் என்றும் கூறி இருந்தார். எனவே திருவாரூர் தொகுதிக்கு 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்பு இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு இருந்தார்.

    மேலும் தலைமைச் செயலாளர் தனது கடிதத்தில், காலி இடமாக உள்ள மேலும் 18 தொகுதிகளுக்கு ஏப்ரல் மாதத்திற்கு முன்பு இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து இருந்தார். தமிழக அரசு தலைமை செயலாளரின் இந்த கடிதத்தை மத்திய உள்துறைக்கு தேர்தல் ஆணையம் அனுப்பி கருத்து கேட்டது.

    அதை ஏற்று கடந்த 31-12-2018 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் பதில் அளித்து இருந்தது. அதில், “தமிழ்நாட்டில் நவம்பர் 15-ந்தேதி தாக்கிய கஜா புயலில் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அந்த பகுதிகளில் மாநில அரசு மூலம் நிவாரணப் பணிகள் நடந்து வருகிறது” என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் கடந்த 2-1-2019 அன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் தேர்தல் ஆணையத்துக்கு இ.மெயில் மூலம் ஒரு வேண்டுகோள் விடுத்து இருந்தார். திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டு இருந்தார். மறுநாள் 3-1-2019 அன்று அவர் தேர்தல் கமி‌ஷனரை நேரில் சந்தித்து இது தொடர்பாக மனு அளித்தார்.

    மேலும் கஜா புயல் தாக்குதல் காரணமாக மாநில அரசு அதிகாரிகள் அனைவரும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக உள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் தற்காலிகமாக மற்றொரு மாவட்டத்துக்கு இடம் பெயர்ந்து உள்ளனர். இதுபற்றி தலைமை தேர்தல் ஆணையம் தமிழக தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டது. சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யலாம் என்று கூறி இருந்தார்.

     


    இதையடுத்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திருவாரூரில் தேர்தல் நடத்த உகந்த சூழ்நிலை உள்ளதா? என்று கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில் மாவட்ட தேர்தல் அதிகாரி திருவாரூரில் கடந்த 5-1-2019 அன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை அழைத்து கருத்து கேட்டார்.

    பா.ஜனதா, காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, தேசியவாத காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க. ஆகியவை உள்பட பல்வேறு கட்சிகள் திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டன. கஜா புயல் நிவாரப்பணிகள் நடந்து வருவதால் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று இந்த கட்சிகள் கோரிக்கை விடுத்து இருந்தன.

    இது தொடர்பாக கடந்த 6-1-2019 அன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கமான அறிக்கை ஒன்றை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி இருந்தார். அதில் கூறி இருந்ததாவது:-

    1. கஜா புயலால் இடம் பெயர்ந்துள்ள பட்டியலை தயாரிக்க மாநில நிர்வாகத்துக்கு கூடுதல் அவகாசம்.

    2. கஜா புயல் நிவாரணப் பணிகள் பாதிதான் முடிந்து உள்ளன. முழுமையாக முடிக்க அவகாசம் வேண்டும். நிவாரணப் பணிகளில் உள்ள அதிகாரிகள்தான் தேர்தல் பணிகளை செய்ய வேண்டி உள்ளது.

    3. தமிழ்நாட்டின் முக்கிய பண்டிகையான பொங்கல் திருநாள் தேர்தல் சமயத்தில் வருகிறது.

    4. டெல்டா மாவட்டங்களில் சம்பா அறுவடை நடைபெற உள்ளது. அந்த சமயத்தில் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட வேண்டி உள்ளது. அந்த சமயத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீற வாய்ப்பு உள்ளது.

    5. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

    6. இந்த சூழ்நிலையில் வியாபாரிகளும் இடைத்தேர்தல் நடத்தப்படுவதை விரும்பவில்லை.

    7. தமிழ்நாட்டில் பள்ளிகளில் பொதுத்தேர்தவு 2 வாரங்களில் நடைபெற உள்ளது. இந்த சமயத்தில் ஆசிரியர்களை தேர்தல் அதிகாரிகளாக பணியாற்ற வைப்பதில் இடையூறு உள்ளது.

    8. இத்தகைய சூழ்நிலையில் பொதுமக்கள் தேர்தல் நடைமுறைகளில் ஆர்வமுடன் தீவிரமாக பங்கேற்கமாட்டார்கள்.

    9. மேலும் திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து அனைத்து கட்சிகளிடமும் கருத்து கேட்டபோது அனைத்து கட்சிகளும் தேர்தலை நடத்த வேண்டாம் என்றும் ஒத்திவைக்க கோரியும் கருத்து தெரிவித்து உள்ளன.

    இவ்வாறு தமிழக தேர்தல் அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

    கஜா புயலால் திருவாரூர் மாவட்டத்தில் நிவாரணப் பணிகள் செய்ய வேண்டி இருப்பதை மாவட்ட கலெக் டர் மூலம் தெரிய வந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு தற்போது திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை சுமூகமாக நடத்த முடியாது என்ற முடிவுக்கு தேர்தல் ஆணையம் வந்தது.

    எனவே மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் -1951 பிரிவு 150, 30, 56 மற்றும் அரசியல் சட்டப்பிரிவு 326, பொது காரணங்கள் சட்டப்பிரிவு 21 ஆகியவற்றின் அடிப்படையில் திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. இதன் விளைவாக திருவாரூர் தொகுதி மாவட்ட தேர்தல் அதிகாரி இதுவரை மேற்கொண்டு இருந்த தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளும், நடவடிக்கைகளும் செல்லாது என்று அறிவிக்கப்படுகிறது.

    தமிழக அரசின் கடிதம் மற்றும் கட்சிகளின் கருத்து அடிப்படையில் திருவாரூர் தொகுதி தேர்தல் ரத்து ஆகிறது. திருவாரூர் தொகுதியில் சுமூகமாக, நியாயமாக, அமைதியாக தேர்தல் நடத்த உகந்த சூழ்நிலை உருவான பிறகு மீண்டும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையர்களின் உத்தரவில் தெரிவிக்கபட்டுள்ளது.

    திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிற 28-ந் தேதி நடைபெற இருந்த நிலையில், இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது. #Thiruvarur #ThiruvarurByElection #ElectionCommission
    திருவாரூர்:

    திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் பணிகளை நிறுத்திவைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழக சட்டசபைக்கு கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது திருவாரூர் தொகுதியில் முன்னாள் முதல்- அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி இரண்டாவது தடவையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    அந்த தேர்தலில் அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளரை விட கூடுதலாக 68 ஆயிரத்து 316 வாக்குகள் பெற்றார். திருவாரூர் தொகுதியில் முதன் முதலாக 2011-ம் ஆண்டு களம் இறங்கிய போதும் அவர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி உடல் நலக்குறைவு காரணமாக கருணாநிதி மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து திருவாரூர் தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டது. சட்ட விதிகளின்படி திருவாரூர் தொகுதியில் பிப்ரவரி 5-ந்தேதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால் தலைமை தேர்தல் ஆணையம் இதுபற்றி ஆலோசித்து வந்தது.

    தமிழ்நாட்டில் திருவாரூர் தொகுதி தவிர திருப்பரங்குன்றம் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளும் காலியாக இருப்பதால் 20 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திருப்பரங்குன்றம் தொகுதி தொடர்பான வழக்கு கோர்ட்டில் இருப்பதாலும், தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் அப்பீல் செய்ய அவகாசம் இருப்பதாலும் அந்த 19 தொகுதிகளின் தேர்தலை சற்று தாமதித்து நடத்தலாம் என்று தலைமை தேர்தல் கமி‌ஷன் முடிவு செய்தது.

    இதையடுத்து திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி வருகிற 28-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருந்த நிலையில், திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் பணிகளை நிறுத்திவைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இடைத்தேர்தல் பணிகளை நிறுத்துமாறு தமிழக தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    கஜாபுயல் நிவாரணப் பணிகள் முடியாததால் திருவாரூரில் தேர்தலை ஒத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
    திருவாரூர் தேர்தலுக்கு எதிரான மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்நிலையில் இந்த அறிவிப்பு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.   #Thiruvarur #ThiruvarurByElection #ElectionCommission
    திருவாரூர் தொகுதி மக்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் கலைஞர் மீதான பாசத்தை வாங்க முடியாது என்று பூண்டி கலைவாணன் தெரிவித்துள்ளார். #ThiruvarurByElection #DMK #PoondiKalaivannan
    சென்னை:

    திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளருக்கான நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடைபெற்றது. பின்னர் திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன் அங்கு போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த கலைவாணன், அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார்.

    பின்னர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் பூண்டி கலைவாணன் கூறியதாவது:-

    திருவாரூர் மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக அங்கு போட்டியிட்டு தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் கலைஞர். நாம் அனைவரும் விரும்பாத ஒரு சூழ்நிலையில் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    இடைத்தேர்தலில் நிற்கும் வாய்ப்பினை எனக்கு வழங்கியதற்கு தலைவர் ஸ்டாலினுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கலைஞருக்குக் காணிக்கையாக மக்கள் அளிக்கும் வாக்குகளைப் பெற்று, மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.

    “முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தேர்தல் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவருடைய வழிகாட்டுதலோடு தேர்தலை எதிர்கொள்வோம். எவ்வளவு பணம் கொடுத்தாலும் திருவாரூரில் கலைஞரின் மீது மக்கள் வைத்திருக்கும் பாசத்தை எவரும் விலை கொடுத்து வாங்க முடியாது.

    அ.தி.மு.க, அ.ம.மு.க. இரண்டையும் நாங்கள் போட்டியாக நினைக்கவில்லை. ஏனெனில் இரண்டு அணிகளும் ஒன்றாக இருக்கும்போது,  கலைஞர் 68,366 வாக்குகள் அதிகமாக வாங்கினார். தற்போது தலைவர் இல்லையே என்பதைத் தவிர எங்களுக்கு வேறு எந்த சவாலும் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார். #ThiruvarurByElection #DMK #PoondiKalaivannan

    தமிழக சட்டசபையில் இன்று கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து பேசிய துரைமுருகன் துக்கம் தாங்காமல் கதறி அழுதார். #Karunanidhi #DuraiMurugan
    சென்னை:

    சட்டசபையில் இன்று கருணாநிதி மறைவுக்கு கொண்டு வரப்பட்ட இரங்கல் தீர்மானத்தில் துரைமுருகன் பேசியதாவது:-

    என்னை இந்த மன்றத்தில் பேச அழைக்கும் போதெல்லாம் உணர்ச்சியோடு, எழுச்சியோடு எழுந்து நிற்பேன். ஆனால் இன்று கலைஞருக்காக இரங்கல் தீர்மானத்தில் பேச அழைத்த போது உடல் தளர்ந்து உள்ளம் சோர்ந்து துவண்ட நிலையில் இருக்கிறேன்.

    95 ஆண்டு காலம் வாழ்ந்தவர் கலைஞர். தமிழுக்காக, தமிழ் நாட்டுக்காக, தமிழ் மக்களுக்காக உழைத்து விட்டு அண்ணாவின் பக்கத்திலே ஓய்வெடுக்கிறார் கலைஞர்.

    எனது சார்பிலும், மு.க. ஸ்டாலின் சார்பிலும் கனத்த இதயத்தோடு கண்ணீரை அடக்கிக் கொண்டு பேச முற்படுகிறேன். கலைஞர் தனி மனிதர் அல்ல. பன்முகத்தன்மை கொண்டவர். அரசியல் வித்தகர், இலக்கிய வேந்தர், கவிதைக் கடல், புரட்சிகரமான வசனங்களை திரையில் தீட்டியவர், அவரை ஒரு முகத்தோடு அடக்கி விட முடியாது.

    கலைஞர் 95 ஆண்டு காலம் அதாவது 34 ஆயிரத்து 258 நாட்கள் வாழ்ந்தவர். இதில் எம்.எல்.ஏ.வாக பணியாற்றியது 20 ஆயிரத்து 411 நாட்கள். அதாவது 56 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி இருக்கிறார். தான் வாழ்ந்த நாளில் பாதி நாட்களுக்கு மேல் இந்த அவையில் அமர்ந்து பணியாற்றியவர். 13 தேர்தல்களில் நின்று வென்றவர். எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர், முதல்- அமைச்சர் என 56 ஆண்டு காலம் சட்டமன்றத்தில் பணியாற்றியவர். முதல்- அமைச்சராக 6863 நாட்கள் அதாவது 9 ஆண்டுகள் பணியாற்றினார். 17 ஆயிரத்து 908 நாட்கள் தி.மு.க. கட்சித் தலைவராக செயல்பட்டார்.


    கலைஞர் வரலாற்று சிறப்பு மிக்க அநேக செயல்களை செய்துள்ளார். மதராஸ் என்ற பெயரை சென்னை என மாற்றியவர் கலைஞர். சுதந்திர தினத்தன்று கோட்டையில் கொடி ஏற்றும் உரிமையை மாநில முதல்-அமைச்சர்களுக்கு பெற்றுத் தந்தவர். தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்தவர். பெண்களுக்கு சொத்தில் பங்கு பெற்றுத் தந்தவர். இப்படி எண்ணற்ற சாதனைகளை புரிந்தவர். பல குடியரசு தலைவர்களை உருவாக்கியவர். என்னை தத்தெடுத்த பிள்ளையாக வளர்த்து உயர்த்தியவர்.

    எனக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தபோது 2-வது முறையாக உயிர் கொடுத்தவர். நான் அன்று இறந்திருந்தால் எனது உடல் மீது அவர் கண்ணீர் சிந்தி இருப்பார். ஆனால் எனது துர்பாக்கியம் என் தலைவர் உடல் மீது நான் கண்ணீர் சிந்தும் நிலை ஏற்பட்டு விட்டது.

    இவ்வாறு அவர் பேசும் போது கண்ணீர் விட்டு கதறி அழுதார். அவர் பேச முடியாமல் இருக்கையில் அமர்ந்ததும் கதறி கதறி அழுதார். அவரை மு.க. ஸ்டாலின் ஆறுதல் படுத்தினார். #Karunanidhi #DuraiMurugan
    திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மறுத்துவிட்டனர். #ThiruvarurByElection #SC
    புதுடெல்லி:

    தி.மு.க. தலைவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதியின் மறைவால் திருவாரூர் தொகுதி காலியாக உள்ளது.

    இந்த நிலையில் திருவாரூர் தொகுதிக்கு வருகிற 28-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. 10-ந் தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

    இந்த நிலையில் திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளி வைக்ககோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கஜா புயலால் திருவாரூர் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

    இதே போல சுப்ரீம் கோர்ட்டிலும் திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்தி வைக்ககோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

    மாரிமுத்து என்பவர் சார்பில் மூத்த வக்கீல் கபில்சிபில் இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் முறையிட்டார். ஆனால் சுப்ரீம் கோர்ட்டோ அவசரமாக விசாரிக்க மறுத்து விட்டது.


    இதேபோல இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளரும், மேல்சபை எம்.பி.யுமான டி.ராஜா சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இடைத்தேர்தல் அறிவிப்பு தொடர்பாக மத்திய அரசு வெளியிட உள்ள அரசாணைக்கு தடை விதிக்க கோரியும் அவர் கோரி இருந்தார்.

    டி.ராஜா சார்பில் சல்மான் குர்ஷித் இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டார். இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது.

    ஏற்கனவே அவசரமாக விசாரிக்க முடியாது என்று உத்தரவிட்டுள்ள நிலையில் மீண்டும் அவசரமாக விசாரிக்க கோருவதா? என்று சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது. #ThiruvarurByElection #SC
    கருணாநிதி உள்ளிட்ட மறைந்த 12 உறுப்பினர்களுக்கு சட்டசபையில் இன்று இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. #AssemblySession #TamilNaduAssembly
    சென்னை:

    சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று தொடங்கியது. இதில், மறைந்த 12 அவை உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

    முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேரவையில் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தீர்மானம் வாசித்தார். 

    அதில், ‘‘கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை.  இலக்கியம், கவிதை என அனைத்திலும் சிறப்புடன் பணியாற்றியவர்,  அவர் சமூக நீதிக்காக போராடியவர். தனது உடன்பிறப்புகளுக்கு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடிதங்களை எழுதியுள்ளார்.

    சுதந்திர தினத்தில் மாநில முதல் அமைச்சர்கள் தேசியக் கொடி ஏற்றும் உரிமையை பெற்று தந்தவர். அரசியல் எல்லையை கடந்து முன்னாள் முதல் அமைச்சர்களான மறைந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரும் கருணாநிதி மீது அன்பு கொண்டிருந்தனர்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது. #AssemblySession #TamilNaduAssembly
    திருவாரூர் தொகுதிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இடைத்தேர்தல் பணியை அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளும் உடனடியாக தொடங்கின. #ThiruvarurByElection
    திருவாரூர்:

    தமிழக சட்டசபைக்கு கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது திருவாரூர் தொகுதியில் முன்னாள் முதல்- அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி இரண்டாவது தடவையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    அந்த தேர்தலில் அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளரை விட கூடுதலாக 68 ஆயிரத்து 316 வாக்குகள் பெற்றார். திருவாரூர் தொகுதியில் முதன் முதலாக 2011-ம் ஆண்டு களம் இறங்கிய போதும் அவர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி உடல் நலக்குறைவு காரணமாக கருணாநிதி மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து திருவாரூர் தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டது. சட்ட விதிகளின்படி திருவாரூர் தொகுதியில் பிப்ரவரி 5-ந்தேதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால் தலைமை தேர்தல் ஆணையம் இதுபற்றி ஆலோசித்து வந்தது.

    தமிழ்நாட்டில் திருவாரூர் தொகுதி தவிர திருப்பரங்குன்றம் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளும் காலியாக இருப்பதால் 20 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திருப்பரங்குன்றம் தொகுதி தொடர்பான வழக்கு கோர்ட்டில் இருப்பதாலும், தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் அப்பீல் செய்ய அவகாசம் இருப்பதாலும் அந்த 10 தொகுதிகளின் தேர்தலை சற்று தாமதித்து நடத்தலாம் என்று தலைமை தேர்தல் கமி‌ஷன் முடிவு செய்தது.

    இதையடுத்து திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. அதன்படி வருகிற 28-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 3-ந்தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. 10-ந்தேதி மனுத்தாக்கலுக்கு இறுதி நாளாகும்.


    11-ந்தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். மனுக்களைத் திரும்பப் பெற 14-ந்தேதி கடைசி நாளாகும். 28-ந்தேதி ஓட்டுப்பதிவு நடப்பதைத் தொடர்ந்து 31-ந்தேதி ஓட்டுகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் நேற்றே அமலுக்கு வந்தன.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இடைத்தேர்தல் பணியை அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளும் உடனடியாக தொடங்கின. இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்களை நாளை, நாளை மறுநாள் 2 நாட்கள் கொடுக்கலாம் என்று இரு கட்சிகளும் அறிவித்து உள்ளன. மனு கொடுத்தவர்களிடம் அ.தி.மு.க., தி.மு.க. மூத்த தலைவர்கள் 4-ந்தேதி நேர்காணல் நடத்த உள்ளனர்.

    அதன் அடிப்படையில் திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்ய அ.தி.மு.க., தி.மு.க. முடிவு செய்துள்ளன. நேர்காணல் முடிந்த சிறிது நேரத்தில் 4-ந்தேதி இரவே தி.மு.க. வேட்பாளரை மு.க.ஸ்டாலின் அறிவித்து விடுவார் என்று கூறப்படுகிறது.

    தி.மு.க. சார்பில் திருவாரூரில் களம் இறங்க உள்ளூர் நிர்வாகிகள் பலரிடமும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. கருணாநிதி போட்டியிட்டு வென்ற தொகுதி என்பதால் அங்கு போட்டியிட தி.மு.க. நிர்வாகிகள் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களில் திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணனுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    அ.தி.மு.க. சார்பில் கடந்த தடவை போட்டியிட்ட திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. பொருளாளர் பன்னீர்செல்வம், ஜெயலலிதா பேரவை செயலாளர் கலியபெருமாள், திருவாரூர் ஒன்றிய செயலாளர் மணிகண்டன் ஆகியோர் தீவிரமாக உள்ளனர். டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் எஸ். காமராஜர் திருவாரூர் நகர செயலாளர் பாண்டியன் இருவரும் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

    இதன் காரணமாக வேட்பாளர்களை தேர்வு செய்யும் நடைமுறைகளில் அ.தி.மு.க., தி.மு.க., மூத்த தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    திருவாரூர் தொகுதி 1962-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தொகுதியாகும். 1962-ம் ஆண்டு முதல் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதன் பிறகு நடந்த தேர்தல்களில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு இரு கட்சிகள் மட்டுமே மாறி மாறி வெற்றி பெற்றுள்ளன.

    தி.மு.க. 1971, 1977, 1996, 2001, 2006, 2011, 2016-ம் ஆண்டுகளில் அதிகபட்சமாக 7 தடவை வெற்றி பெற்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 1967, 1980, 1984, 1989, 1991 ஆகிய தேர்தல்களில் 5 தடவை வெற்றி பெற்றுள்ளது.

    அ.தி.மு.க. திருவாரூரில் ஒரு தடவை கூட வெற்றி பெற்றதில்லை.

    இந்த தடவையும் வெற்றிக் கனியைப் பறிக்க வேண்டும் என்பதில் தி.மு.க. தீவிரமாக உள்ளது. இந்த தடவை திருவாரூரில் பலமுனை போட்டி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பாரதிய ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க., கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகியவை திருவாரூர் தேர்தல் பற்றி ஆலோசித்து வருகின்றன.

    எத்தனை கட்சிகள் போட்டியிட்டாலும் தி.மு.க., அ.தி.மு.க., அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே தான் மும்முனைப் போட்டி ஏற்படும். தி.மு.க.வுக்கு காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மனித நேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை ஆதரவாக உள்ளன.

    அ.தி.மு.க.வை எத்தனை கட்சிகள் ஆதரிக்கும் என்பது இனி தான் தெரியும். கஜா புயல் கடந்த மாதம் டெல்டா மாவட்டங்களில் கோரத் தாண்டவம் ஆடியபோது திருவாரூர் தொகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. எனவே கஜா புயலின் தாக்கம் இந்த தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்பு உள்ளது.

    இதை கருத்தில் கொண்டு அ.தி.மு.க. பிரசார பணிகளில் மாற்றம் ஏற்படுத்தி புதிய வியூகத்தை கடைபிடிக்கும் என்று தெரிகிறது. தி.மு.க., அ.தி.மு.க., அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் இப்போதே திருவாரூர் தொகுதிக்குள் உலா வரத் தொடங்கி விட்டனர். இதனால் திருவாரூர் தொகுதியில் இன்றே விறுவிறுப்பு உருவாகி விட்டது. #ThiruvarurByElection
    1953-ம் ஆண்டு ரெயில் மறியல் போராட்டத்தில், கருணாநிதியுடன் கலந்து கொண்டு சிறை சென்ற 88 வயதானவருக்கு முக ஸ்டாலின் ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். #Karunanidhi #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவுக்காக திருச்சி சென்றபோது, 1953-ம் ஆண்டு கருணாநிதி தலைமையில் கல்லக்குடி பெயர் மாற்றம் கோரி நடைபெற்ற ரெயில் மறியல் போராட்டத்தில், கருணாநிதியுடன் கலந்து கொண்டு சிறை சென்ற 88 வயதான பூவாளூரை சேர்ந்த செபஸ்தியன் என்ற ராசுவின் ஏழ்மை நிலைமை அவரது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.



    இதைத்தொடர்ந்து அவரை அழைத்த மு.க.ஸ்டாலின், கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பாக ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார். இந்த நிகழ்வில், துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே.என்.நேரு, திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் ஆகியோர் உள்ளனர்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Karunanidhi #MKStalin
    அண்ணாவையும், கருணாநிதியையும் தமிழர்கள் நெஞ்சில் நிறுத்த வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து கூறினார். #Vairamuthu #Karunanidhi #MKStalin
    சென்னை:

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை, கவிஞர் வைரமுத்து நேற்று சந்தித்தார். அப்போது, அண்ணா அறிவாலயத்தில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சிலை அமைத்ததற்காக மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்தார்.

    அப்போது, கவிஞர் வைரமுத்துவுக்கு கருணாநிதியின் மார்பளவு சிறிய வெண்கல சிலையை நினைவு பரிசாக வழங்கி மு.க.ஸ்டாலின் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார். இந்த சந்திப்பின்போது, தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, எ.வ.வேலு எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    சந்திப்பு முடிந்து வெளியே வந்த கவிஞர் வைரமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:-

    மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் சிலையை பரிசாக தந்துள்ளார். கருணாநிதியின் தமிழுக்கும், அவரது ஆற்றலுக்கும், இனமொழி போராட்டத்துக்கும், அவரது பேரறிவுக்கும் அடையாளமாக இந்த சிலை என்னோடு இருந்து வழிகாட்டும் என்று நான் நம்புகிறேன்.

    கருணாநிதியும், மு.க.ஸ்டாலினும் ஒருவருக்கொருவர் தாங்கள் ஆற்ற வேண்டிய பணிகளை செய்துவிட்டனர். இதன் மூலம், திருவள்ளுவர் தந்த இலக்கணத்துக்கு தந்தையும், மகனும் இலக்கியமாக திகழ்கிறார்கள்.

    கருணாநிதியின் சிலை திறப்பு விழா என்பது வெறும் விழா அல்ல. அது சடங்கு அல்ல. சம்பிரதாயம் அல்ல. அந்த விழா கருணாநிதியை உயிராக கருதியவர்கள், அவரை இன்னும் நெஞ்சில் சுமந்து கொண்டு இருப்பவர்கள் அத்தனை பேரின் கண்களிலும் ஈரம் கட்டிய நிகழ்ச்சி அது. அந்த நிகழ்ச்சி என்பது கருணாநிதிக்கு, மு.க.ஸ்டாலின் செய்த மிகப்பெரிய வரலாற்று திருப்பணி என்று நான் நினைக்கிறேன்.



    அதுவும், அண்ணாவுக்கு பக்கத்தில் கருணாநிதியை நிறுத்தி வைத்த அந்த அருஞ்செயலுக்காகவே மு.க.ஸ்டாலினை நான் கொண்டாடுகிறேன். அண்ணா வேறு, கருணாநிதி வேறு அல்ல. மிக முக்கியமாக தமிழர்கள் கவனிக்க வேண்டியது ஒன்று உண்டு. தமிழுக்காகவும், இனத்துக்காகவும், நாட்டுக்காகவும் பாடுபட்ட அந்த இருபெரும் தலைவர்களும் அருகருகே துயில் கொண்டு இருக்கிறார்கள். அருகருகே நின்று கொண்டு இருக்கிறார்கள். தமிழர்களும் இந்த 2 பேரையும் நெஞ்சில் அருகருகே நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Vairamuthu #Karunanidhi #MKStalin
    சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், ராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக என தெரிவித்தார். #Karunanidhi #SoniaGandhi #RahulGandhi #Stalin
    சென்னை:

    சென்னை அண்ணாஅறிவாலயத்தில் இன்று மாலை நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவை தொடர்ந்து, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்த கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், என் வாழ்வில் இன்று மறக்கமுடியாத நாள். இன்று மிகுந்த மகிழ்ச்சியில் பூரிப்புடன் இருக்கிறேன். இந்த வேளையில் நீங்கள் எங்கே போய்விட்டீர்கள்?

    நீங்கள் எங்கும் போகவில்லை. லட்சக்கணக்கான மக்கள் உள்ளங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ளீர்கள்.



    வேறுபாடற்ற இந்தியாவை உருவாக்க நாம் இங்கு கூடியிருக்கிறோம். மோடியின் ஆட்சியில் இந்தியா 15 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது. 

    தன்னையே ரிசர்வ் வங்கியாக, தன்னையே வருமான வரித்துறையாக நினைத்துக் கொண்டிருக்கிறார் மோடி. 

    கஜா புயல் பாதிக்கப்பட்ட தமிழக பகுதிகளை பிரதமர் மோடி பார்க்க வரவில்லை. சாடிஸ்ட் பிரதமராக செயல்பட்டு வருகிறார் மோடி. தமிழகம் என்றால் அவ்வளவு அலட்சியமா? எனவே அவரை வீழ்த்துவதற்கு 21 கட்சிகள் இணைந்திருக்கின்றன.

    ராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக என குறிப்பிட்டார்.  #Karunanidhi #SoniaGandhi #RahulGandhi #Stalin
    சென்னையில் நாளை நடைபெற உள்ள கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #Rajini #KarunanidhiStatue
    சென்னை:

    சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சிலை திறப்பு விழாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர்.



    நாளை சென்னை வரும் சோனியா காந்தி மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளார்.

    அண்ணா அறிவாலயம் வளாகத்தில் நடைபெறும் திருவுருவச் சிலை திறப்பு விழா முடிவடைந்ததும், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு தலைவர்கள் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். #Rajini #KarunanidhiStatue

    ×