search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்குப்பதிவு"

    13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 பாராளுமன்ற தொகுதிகளில் இன்று நடைபெற்ற மூன்றாம்கட்ட தேர்தலில் ஒட்டுமொத்தமாக 64.66 சதவீதம் வாக்குகள் பதிவானது.
    புதுடெல்லி:

    நாட்டிலுள்ள 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 பாராளுமன்ற தொகுதிகளில் இன்று மூன்றாம்கட்ட தேர்தல் நடைபெற்றது.

    இன்று மாலை 6 மணி நிலவரப்படி, அசாம் மாநிலத்தில் 78.29% வாக்குகளும் பீகாரில் 59.97% வாக்குகளும் பதிவாகின. கோவாவில் 71.09% வாக்குகளும் குஜராத்தில் 60.21% வாக்குகளும் பதிவாகின. ஜம்மு-காஷ்மீரில் 12.86% வாக்குகளும் கர்நாடகாவில் 64.14% வாக்குகளும் பதிவாகின. கேரளாவில் 70.21% வாக்குகளும் மகாராஷ்டிராவில் 56.57% வாக்குகளும் பதிவாகின.

    ஒடிசாவில் 58.18% வாக்குகளும் திரிபுராவில் 78.52% வாக்குகளும் பதிவாகின. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 57.74% வாக்குகளும் மேற்கு வங்காளத்தில் 79.36% வாக்குகளும் சத்தீஸ்கரில் 65.91% வாக்குகளும் பதிவாகின.



    யூனியன் பிரதேசங்களான தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி-யில் 71.43% வாக்குகளும் டாமன் மற்றும் டியூ-வில் 65.34% வாக்குகளும் பதிவாகின.

    ‏அவ்வகையில், மேற்கண்ட தொகுதிகளில் இன்று ஒட்டுமொத்தமாக 64..66 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. #LokSabhaElections2019 #voterturnout
    மதுரையில் வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாத்திட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #MKStalin #MaduraiConstituency

    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறைக்குள் பெண் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் சிலர் அதிகாலை 3 மணி அளவில் உள்ளே நுழைந்து, இரண்டு மணி நேரத்திற்கும் மேல் அங்கேயே இருந்து வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்வதில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

    மதுரை மக்களவை தொகுதிக்காக வாக்குப் பெட்டிகள் அனைத்தும் சீலிடப்பட்டு, மதுரை மருத்துவக்கல்லூரியில் உள்ள ஆறு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அறையும் சீலிடப்பட்டு, துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினரின் முழுப் பாதுகாப்பில் இருக்கும் போது, இப்படி அரசு அதிகாரிகள் அத்துமீறி நுழைந்ததும் முறைகேடுகள் செய்ததும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தேர்தல் தொடங்கியதிலிருந்து பிரசாரம், வாக்குப் பதிவு அனைத்திலும் ஆளும் கட்சியினரின் அடாவடிகளுக்கும் முறைகேடுகளுக்கும் துணை நின்ற தேர்தல் அதிகாரிகள் இப்போது வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள்ளும் நுழைந்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.

     


    தேர்தல் ஜனநாயகம் தற்போதுள்ள அதிமுக ஆட்சியின் கீழும் அந்தக் கட்சியின் அத்துமீறல்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியிலும் காப்பாற்றப்படுவதற்கு வழியே இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது.

    தேர்தல் நடைமுறைகளுக்கும், சுதந்திரமான, நேர்மையான தேர்தலை நடத்துவதற்கும் மாநிலத்தில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரியும் இந்தியத் தேர்தல் ஆணையமும் தமிழகத்தில் மூச்சுத் திணறி நிற்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகிறது.

    தேர்தல் ஆணையத்தால், ஆளும் கட்சியின் பணப்பட்டு வாடாவைத் தடுக்க முடியவில்லை. துணை முதல்-அமைச்சரே நேரடியாக வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தும் அதை நிறுத்த முடியவில்லை. தர்மபுரி தொகுதியில் பத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி, அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. வாக்களித்த போது அதையும் அங்குள்ள காவல் துறையும் தேர்தல் அதிகாரிகளும் தடுக்க முன் வரவில்லை.

    சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியில் தாழ்த்தப்பட்டோர் மீது கடும் தாக்குதல் நடத்தியதையும், பொன்பரப்பியில் வாக்குப் பதிவில் செய்த தில்லு முல்லுகளையும் தடுத்து நிறுத்த முடியவில்லை.

    இப்போது துணை ராணுவத்தினரின் பாதுகாப்பில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களையும் இந்தத் தலைமைத் தேர்தல் அதிகாரியால் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியவில்லை என்பது கடும் கண்டனத்திற்குரியது.

    தேர்தல் அதிகாரிகள் அனைவரும் ஆளும் கட்சியின் கைப்பாவைகளாக ஒட்டுமொத்தமாக மாறி இருப்பது தேர்தல் ஜனநாயகத்தை சீர்குலைத்து நேர்மையான தேர்தலுக்கு பேராபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் இருக்கின்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமா? என்ற மிகப்பெரிய கேள்வி இப்போது எழுந்திருக்கிறது.

    ஆகவே அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் துணை ராணுவத்தின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டும்.

    அதிகாலையில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நுழைந்த அனைவர் மீதும், அதற்கு அனுமதி கொடுத்த அதிகாரிகள், நுழைய விட்டு பாதுகாப்பு கொடுத்தவர்கள் அனைவர் மீதும் கிரிமினல் வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    வாக்கு எண்ணும் மையங்களில் கழக நிர்வாகிகளும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் இரவு- பகல் பார்க்காமல் விழிப்புணர்வுடன் இருந்து வாக்கு எண்ணிக்கை மையங்களைக் கைப்பற்ற நினைக்கும் அராஜக அ.தி.மு.க. ஆட்சியிடமிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாத்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #MKStalin #MaduraiConstituency

    முழு வாக்குப்பதிவை எட்ட நாட்டின் எந்த பகுதியிலும் வாக்களிக்கும் வசதி வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Ramadoss

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தல்களில் பதிவான வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 38 தொகுதிகளிலும் சராசரியாக 71.90 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

    தமிழகத்தில் மொத்தமுள்ள 38 தொகுதிகளில் தருமபுரி, நாமக்கல், கரூர், சிதம்பரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், பெரம்பலூர், ஆரணி, கள்ளக்குறிச்சி, அரக்கோணம், தேனி, விழுப்புரம், சேலம், திண்டுக்கல், கடலூர், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய 23 தொகுதிகளில் சராசரிக்கும் கூடுதலாக, அதாவது 71.90%க்கும் கூடுதலாக வாக்குகள் பதிவாகியுள்ளன.

    அதேநேரத்தில் வாக்குப்பதிவு மிகவும் குறைவாக உள்ள தொகுதிகள் பட்டியலில் தென் சென்னை, மத்திய சென்னை, திருப்பெரும்புதூர், வட சென்னை ஆகிய தொகுதிகள் முன்னணியில் உள்ளன. இவற்றில் தென் சென்னையிலும், மத்திய சென்னையிலும் முறையே 56.34சதவீதம், 58.69 சதவீதம் என்ற அளவில் தான் வாக்குகள் பதிவாகியுள்ளன.


    திருப்பெரும்புதூர், வட சென்னை ஆகியவை 60 விழுக்காட்டைத் தட்டுத் தடுமாறி கடந்துள்ளன. இவை அனைத்தும் சென்னை பெருநகர எல்லைக்குள் உள்ள தொகுதிகளாகும். அதேபோல், கோவை (63.00 சதவீதம்), மதுரை (65.83சதவீதம்) ஆகிய மாநகரத் தொகுதிகளிலும், குறைந்த வாக்குகள் பதிவாகியிருப்பது பெருமைப்படக்கூடிய வி‌ஷயமல்ல.

    தேர்தலில் வாக்களிக்காதவர்கள் தங்களின் செயலை எந்த வகையிலும் நியாயப்படுத்தவே முடியாது. ஜனநாயகத்தின் முக்கியத்துவம் குறித்தும், மக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்தும் முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளும் புரட்சியாளர்கள், வெயிலுக்குக் கூட வாக்குச்சாவடி பக்கம் ஒதுங்காதது தான் முரண்பாடுகளின் உச்சம் ஆகும்.

    எந்த அரசியல் கட்சியையும் தங்களுக்குப் பிடிக்கவில்லை; அதனால் தான் வாக்களிக்க விரும்பவில்லை என்று கூறி அவர்கள் தப்பித்துக்கொள்ள முயலலாம். ஆனால், அது சரியான பதில் இல்லை என்பதை அவர்களே அறிவார்கள்.

    மக்களாட்சி என்பது மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சி ஆகும். மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சியை 100சதவீதம் மக்களும் இணைந்து தேர்ந்தெடுக்காவிட்டால் அது முழுமையான ஜனநாயகமாக இருக்காது. ஜனநாயகம் நமக்கு அளித்திருக்கும் அனைத்து உரிமைகளையும் அனுபவிக்கும் நாம், இன்னும் கூடுதலான உரிமைகளைக் கோரும் நாம் வாக்குகளை செலுத்துவதற்கு மட்டும் மறுப்பது மிகப்பெரிய கடமை தவறுதலாகவே பார்க்கப்பட வேண்டும்.

    இந்தத் தேர்தலில் வாக்களிக்காதவர்கள் தங்களுக்குத் தாங்களே கேட்டுக் கொண்டால், தாங்கள் செய்தது மன்னிக்க முடியாத ஜனநாயகக் குற்றம் என்ற உண்மை அவர்களுக்கு புரியும். அது அவர்களை மாற்ற வேண்டும்.

    வாக்களிக்கத் தவறுவது குற்றம் என்ற சட்டம் 1777ஆம் ஆண்டிலேயே அமெரிக்காவின் ஜார்ஜியா மாகானத்தில் நடைமுறைக்கு வந்து விட்டது. உலகில் 11 ஜனநாயக நாடுகள் உட்பட மொத்தம் 38 நாடுகளில் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. அல்லது இருந்திருக்கிறது. சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் வாக்களிக்கத் தவறுவது குற்றமாக கருதப்பட்டு, பல வகைகளில் அபராதங்கள் விதிக்கப்படுகின்றன.

    இந்தியாவிலும் வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்ற குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அதேநேரத்தில், அதிக எண்ணிக்கையிலான மக்கள் இடம் பெயர்ந்து வாழும் இந்தியா போன்ற நாட்டில் வாக்களிப்பதை கட்டாயமாக்குவது சாத்தியமில்லை என்ற குரல்கள் எழுகின்றன.

    அதில் ஓரளவு உண்மை இருந்தாலும், நாட்டின் எந்தப் பகுதியிலும் வாக்களிக்கலாம் என்பது உள்ளிட்ட சீர்திருத்தங்களைச் செய்வதன் மூலம் இதை சாத்தியமாக்க முடியும். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் இம்மாற்றங்களை எளிதாக செய்ய முடியும்.

    இந்தியாவில் வாக்களிப்பதை கட்டாயமாக்குவது குறித்த பொது விவாதத்தை தேர்தல் ஆணையம் முன்னெடுக்க வேண்டும். அதேநேரத்தில் தேர்தலில் வாக்களிப்பதை சுமையாக கருதாமல் கவுரவமாக நினைக்கும் நிலை உருவாக வேண்டும். அந்த நாள் தான் உண்மையான ஜனநாயகம் தழைக்கும் நாளாக அமையும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #Ramadoss

    தமிழகத்தில் 45 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும், மின்னணு எந்திரங்கள் அந்த இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் கூறினார். #LokSabhaElections2019 #TNElections
    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. சராசரியாக 71.87 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளன. தர்மபுரியில் அதிகபட்சமாக 80.49 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. தென் சென்னையில் குறைந்தபட்சமாக 56.41 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன.

    18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெற்றுள்ளது. இதில் சராசரியாக 75.57 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன.

    அதிகபட்சமாக சோளிங்கரில் 82.26 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. பெரம்பூரில் குறைந்தபட்சமாக 64.14 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன.

    வாக்குச்சாவடிகளில் ஆங்காங்கே நடந்த அசம்பாவித சம்பவங்கள் தொடர்பாக அவ்வப்போது கேட்டுக்கொண்டே இருந்தோம். முடிவில் அவர்கள் கொடுக்கும் அறிக்கையை வைத்து அந்தந்த வாக்குச் சாவடிகளில் தேர்தல் சரியாக நடத்தப்பட்டுள்ளதா என்பதை முடிவு செய்வோம்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை சரிபார்க்க சிறப்பு முகாம் நடத்தினோம். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 10 நாட்கள் முகாம் நடத்தி உள்ளோம்.

    ஆனால் சிலர் வாக்காளர் பட்டியலை பார்க்காமல் கடைசி நேரத்திலும் இண்டர்நெட்டில் பார்த்தும், 1950 நம்பருக்கு போன் செய்து விசாரித்தும் ஓட்டு போட வந்துள்ளனர். முகவரி மாறி சென்றுள்ளதால் பலரது பெயர்கள் பட்டியலில் நீக்கப்பட்டுள்ளன. அதிக பெயர்கள் நீக்கப்பட்டுள்ள இடங்களில் ஆய்வு நடத்த சொல்லி இருக்கிறோம்.

    கேள்வி:- 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் 73.68 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. தற்போது 2 சதவீத வாக்குகள் குறைந்துள்ளதே? நிறைய இடங்களில் பட்டியலில் வாக்காளர்கள் பெயர் இல்லாதது, பலர் தேர்தலை புறக்கணித்தது இதற்கு காரணமா?


    பதில்:- இப்போது 71.87 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. இதற்கு மேல் நான் கருத்து சொல்ல முடியாது.

    கே:- தர்மபுரி தொகுதி நத்தமேடு, மோட்டார் குறிச்சி 4 வாக்குச்சாவடியில் பா.ம.க. வினர் கேமராக்களை திருப்பி வைத்து, தி.மு.க. ஏஜெண்டுகளை விரட்டி விட்டு ஓட்டு போட்டார்கள். அங்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று தி.மு.க. வேட்பாளர் கோரிக்கை வைத்துள்ளாரே?

    ப:- நேற்று ஒரு சில கட்சியினர் போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இன்று செய்தித்தாள்களிலும் வந்துள்ளது. அதிகாரியிடம் அறிக்கை கேட்டுள்ளேன்.

    கன்னியாகுமரியில் ஒரு பிரச்சனை தொடர்பாக புகார் வந்துள்ளது. அதற்கும் அறிக்கை கேட்டுள்ளோம். மேலும் தேர்தல் தொடர்பாக ஏதாவது புகார் வந்தாலும் மாவட்ட கலெக்டர்களிடம் அறிக்கை கேட்டு தேர்தல் ஆணையத்துக்கு அனுப்புவோம். அதன்பிறகு இதுதொடர்பாக முடிவு எடுக்கப்படும்.

    4 தொகுதிகளுக்கு தேர்தல் பற்றிய அறிவிப்பு 22-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.

    கே:- பறக்கும்படை சோதனை இனி 4 தொகுதிகளில் மட்டும் நடத்தப்படுமா அல்லது தமிழகம் முழுக்க நடத்தப்படுமா?

    ப:- அந்தந்த மாவட்டங்களில் மட்டும் தான் சோதனை நடத்தப்படும். இது பற்றிய அதிகாரப்பூர்வ சிறப்பு அறிவிப்பு தேர்தல் கமி‌ஷனில் இருந்து பின்னர் வரும்.

    கே:- நடிகர் ரஜினிகாந்தின் வலது கை விரலில் மை வைக்கப்பட்டுள்ளதே?

    ப:- குறிப்பிட்ட விரலில் வைக்க வாய்ப்பு இல்லை என்றால் சில நேரங்களில் வேறு விரல்களில் வைக்கலாம். இது பொதுவானது தான்.

    ப:- பார்க்கலாம் இது பொதுவாக தவறுதான்.

    கே:- எத்தனை இடங்களில் வாக்குகள் எண்ணப்படும்?

    ப:- 45 இடங்களில் வாக்குகள் எண்ணப்படும். மின்னணு எந்திரங்கள் அந்த இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு 24 மணிநேரமும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் மின்னணு எந்திரங்கள் உள்ளே வைத்து பூட்டி வைக்கப்பட்டுள்ளன.

    பாதுகாப்பை அரசியல் கட்சியினர் கண்காணித்துக் கொண்டே இருக்கலாம். மே 23ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். அனைத்து மின்னணு எந்திரங்களும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டன.

    கே:- பறக்கும்படையினர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் திருப்பி கொடுக்கப்படுமா?

    ப:- அந்தந்த மாவட்டங்களில் எங்கெல்லாம் பணம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோ அங்கு ஆவணங்களை சரியாக காட்டி பணத்தை பெற்றுக்கொள்ளலாம். ஆதாரம் காட்டியவர்களுக்கு பணத்தை ஏற்கனவே திருப்பி கொடுத்துள்ளோம். தொடர்ந்து பணம் திரும்ப ஒப்படைக்கப்படும்.

    வருமானத்துறையினரும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ஆதாரத்தை காட்டினால் திருப்பி கொடுத்துவிடுவார்கள். அல்லது வருமானவரித்துறை சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கப்படுமோ அதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    கே:- சென்னை தொகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதம் எத்தனை?

    ப:- வடசென்னையில் 63.47 சதவீதமும், தென் சென்னையில் 56.41 சதவீதமும், மத்திய சென்னையில் 59.25 சதவீதமும் ஓட்டுகள் பதிவாகி உள்ளன.

    கே:- நகரப்பகுதிகளில் ஓட்டுப்பதிவு குறைவாக உள்ளதே?

    ப:- வழக்கமாக நகரப் பகுதிகளில் ஓட்டுகள் குறைவதை நாம் பார்த்திருக்கிறோம். நகரப்பகுதிகளுக்கு சிறப்பு விழிப்புணர்வு நடத்தினோம். அதற்கு பலன் கிடைத்தது. அதனால் கூடுதலாக ஓட்டு பதிவாகி இருக்க வேண்டும். பொது மக்கள் விடுமுறையை கொண்டாட வெளியூர் சென்றதும் இதற்கு ஒரு காரணம்.

    கே:- பூத் சிலிப் கொண்டு செல்லாதவர்களை பல இடங்களில் ஓட்டுபோட அனுமதிக்கவில்லையே?

    ப:- பூத்சிலிப் இல்லாமல் அடையாள அட்டை எடுத்து சென்றவர்கள் ஓட்டு போட அனுமதிக்கப்பட்டனர். அடையாள அட்டை எடுத்து செல்லாதவர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #TNElections
    தமிழகத்தில் உள்ள 38 பாராளுமன்றத் தொகுதிகளில் 71.87 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். #LokSabhaElections2019 #TNElections #VoterTurnout
    சென்னை:

    தமிழகத்தில் நேற்று 38 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றம் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மதுரையில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது ஏற்பட்ட பகுதிகளிலும், வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டது.

    இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


    தமிழகத்தில் உள்ள 38 மக்களவை தொகுதிகளிலும் 71.87 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 80.49 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. குறைந்தபட்சம் தென்சென்னையில் 56.41 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

    18 சட்டமன்றத் தொகுதிகளைப் பொருத்தவரை 75.57 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக சோளிங்கர் தொகுதியில் 82.26 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #TNElections #VoterTurnout
    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடத்தப்படும் தேர்தலில் தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் அதிகபட்சமாக 79.75 சதவீதம் நாமக்கல்லில் வாக்குப்பதிவானது. #Loksabhaelections2019

    சென்னை, ஏப். 19-

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடத்தப் படும் தேர்தலில் கடந்த 11-ந்தேதி முதல் கட்டமாக 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் ஓட்டுப் பதிவு நடந்தது.

    தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் இருக்கும் 95 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது.

    தமிழகத்தில் 38 தொகுதி களுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. இரவு 9 மணி நிலவரப்படி பதிவான ஓட்டு சதவீதம் விவரம் வருமாறு:-

    1. திருவள்ளூர்- 72.02

    2. வடசென்னை-61.76

    3. தென்சென்னை-57.43

    4. மத்தியசென்னை-57.86

    5. ஸ்ரீபெரும்புதூர்-60.61

    6. காஞ்சீபுரம்-71.94

    7. அரக்கோணம்-75.45

    8. கிருஷ்ணகிரி-73.89

    9. தர்மபுரி-75.92

    10.திருவண்ணாமலை-71.27

    11. ஆரணி-76.44

    12. விழுப்புரம்-74.96

    13. கள்ளக்குறிச்சி-76.36

    14. சேலம்-74.94

    15. நாமக்கல்-79.75

    16. ஈரோடு-71.15

    17. திருப்பூர்-64.56

    18. நீலகிரி-70.79

    19. கோவை-63.67

    20. பொள்ளாச்சி-69.98

    21. திண்டுக்கல்-71.13

    22. கரூர்-78.96

    23. திருச்சி-71.89

    24. பெரம்பலூர்-76.55

    25. கடலூர்-74.42

    26. சிதம்பரம்-78.43

    27. மயிலாடுதுறை-71.13

    28. நாகப்பட்டினம்-77.28

    29. தஞ்சாவூர்-70.68

    30. சிவகங்கை-71.55

    31. மதுரை-62.01

    32. தேனி-75.28

    33. விருதுநகர்-70.27

    34. ராமநாதபுரம்-68.26

    35. தூத்துக்குடி-69.41

    36. தென்காசி-71.60

    37. நெல்லை-68.09

    38. கன்னியாகுமரி-62.32

    மதுரை பாராளுமன்ற தொகுதியில் கடந்த தேர்தலை விட 2 சதவீதம் வாக்குப்பதிவு குறைந்தது. #Loksabhaelections2019
    மதுரை:

    17-வது பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் நேற்று நடைபெற்றது. மதுரையில் நேற்று மீனாட்சி அம்மன் கோவில் சித்தரை தேரோட்டம் மற்றும் கள்ளழகர் எதிர்சேவை இருந்ததால் வாக்குப்பதிவு தேதியை மாற்ற வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

    ஆனால் அவர்களது கோரிக்கையை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவுக்கான நேரத்தை இரவு 8 மணி வரை நீடிப்பதாக அறிவித்தது.

    மதுரை பாராளுமன்றத் தொகுதியில் மதுரை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தி, மேலூர் என 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

    மேலும் மதுரை மாவட்டத்தில் சோழவந்தான், உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய சட்டசபை தொகுதிகளும் உள்ளன. இந்த தொகுதிகள் தேனி, விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்டவை ஆகும்.

    வாக்குப்பதிவு தொடங்கியது முதலே மதுரை புறநகர் பகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இருந்தது. ஆனால் தேரோட்டம் நடைபெற்ற மாசி வீதிகள் மற்றும் கள்ளழகர் எதிர்சேவை நடைபெற்ற பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது.

    மாலை 6 மணி அளவில் மதுரை பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு 63 சதவீதமாக இருந்தது. இரவு 8 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும் பதிவான வாக்குகள் 65.83 சதவீதமாக இருந்தது.

    அதாவது நீட்டிக்கப்பட்ட 2 மணி நேரத்தில் 2.83 சதவீத வாக்குகளே அதிகரித்து இருந்தது. கடந்த (2014) பாராளுமன்ற தேர்தலின்போது மதுரை பாராளுமன்ற தொகுதியில் 67.87 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    அதனை ஒப்பிடும்போது இந்த தேர்தலில் 2 சதவீத வாக்குகள் குறைவாகவே பதிவாகி உள்ளன. 2019-ம் ஆண்டு தேர்தலில் 77.47 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    அதனுடன் ஒப்பிடுகையில் 12 சதவீதம் குறைவு ஆகும். தேர்தல் வாக்குப் பதிவு குறித்து கலெக்டர் நடராஜன் கூறும்போது, கடந்த தேர்தலை விட 2 சதவீதம் குறைந்துள்ளது உண்மைதான்.

    இதனை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. திருவிழா, தேர்தல் என 2 முக்கிய நிகழ்வுகள் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்றார்.

    சிவகங்கை பாராளுமன்றத் தொகுதியில் 70 சதவீதமும், விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் 72 சதவீதமும், ராமநாதபுரத்தில் 68.21 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன. #Loksabhaelections2019
    முதல் முறையாக ஓட்டுபோட்டது மகிழ்ச்சியாக உள்ளது என்று தர்மபுரி கல்லூரி மாணவிகள் கூறினர்.
    தர்மபுரி:

    தர்மபுரி சின்னசாமி கவுடு தெருவை சேர்ந்த மாணவி நீரா கூறியதாவது:-

    திருச்செங்கோடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ. முதலாம் ஆண்டு படித்து வருகிறேன். நான் முதல் முதலில் இன்று காலை அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தேன். எனக்கு முதல் முதலில் வாக்களிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் அனைவரும் தவறாமல் வந்து வாக்களிக்க வேண்டும். மேலும் இந்த தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மக்களுக்கு நல்ல திட்டங்கள் கொண்டு வந்து பயனுள்ளதாக அமைய பாடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தர்மபுரி நெடுமாறன் நகர் பகுதியை சேர்ந்த மாணவி இனியா கூறியதாவது:-

    தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி. படித்து வருகிறேன். நான் தேர்தல் முதல் முதலில் வாக்களிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. காலையில் வந்து வரிசையில் நின்று வாக்களித்துள்ளேன். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் இதேபோல் பொதுமக்கள் 100 சதவீதம் வந்து வாக்களிக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சனை உள்ளதால் அதற்கு தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தில் மதியம் 1 மணி நிலவரப்படி 39.49 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். #TNElections2019 #VoterTurnout
    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது காரணமாக தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 11 மணி நிலவரப்படி 30.62  சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது.

    இந்நிலையில் மதியம் ஒரு மணி வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகி உள்ளது. 39.49 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார். 



    “1 மணி நிலவரப்படி அதிகபட்சமாக நாமக்கல் தொகுதியில் 41.56 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. பெரியகுளத்தில் 32.32 சதவீதம், பெரம்பலூரில் 39.85 சதவீதம், தருமபுரியில் 43.06 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. சட்டமன்ற இடைத்தேர்தலில் 42.92 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

    கோளாறு காரணமாக 384 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 692 விவிபேட் இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன. அடுத்த வாக்குப்பதிவு நிலவரம் 4 மணிக்கு வெளியாகும்” என தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். #TNElections2019 #VoterTurnout
    கிருஷ்ணகிரி, தர்மபுரி எம்.பி. தொகுதியில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. #LokSabhaElections2019
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி, ஓசூர், போச்சம்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டு போட்டனர்.

    மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிக்க சக்கர நாற்காலிகள் தயாராக இருந்தன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 1800 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

    சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானாலும் உடனடியாக சரிசெய்யப்பட்டு ஓட்டுப்பதிவு தொடங்கியது.

    சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லீம்கள் ஆர்வத்துடன் ஓட்டு போட்டனர்.

    தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 1787 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்தல் பணியில் 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஊழியர்களும், பாதுகாப்பு பணியில் 2606 போலீசாரும் ஈடுபட்டனர்.

    வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பெண்களும், ஆண்களும் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டனர். மிக உயரமான வாக்குச்சாவடியாக பென்னாகரத்தை அடுத்த அலக்கட்டு, கோட்டூர்மலையில் அமைக்கப்பட்டு இருந்தது. இங்கு கழுதை மூலம் வாக்குப்பதிவு எந்திரம் கொண்டு செல்லப்பட்டு ஓட்டுப்பதிவு நடந்தது.

    பென்னாகரம் அடுத்த தாளக்குலம் வாக்குச்சாவடியில் காலை 6 மணிக்கே வாக்காளர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

    தர்மபுரியில் அதியமான் கோட்டை அரசு பள்ளிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் வாக்காளர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் இன்று விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. கர்நாடக எல்லையில் உள்ள ஓசூர், தளி உள்ளிட்ட பகுதிகளில் தமிழ் மட்டும் அல்ல கன்னடத்திலும் வாக்குச் சீட்டு அச்சடிக்கப்பட்டு இருந்தது. காலை 9 மணி நிலவரப்படி 9 சதவீதம் ஓட்டு பதிவாகி இருந்தது.

    அரூர் மற்றும் பாப்பி ரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று இடைத் தேர்தல் நடந்தது. விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. #LokSabhaElections2019

    திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மெஞ்ஞானபுரம் அருகே உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவு எந்திரத்தில் கோளாறு காரணமாக 3 மணிநேரத்துக்கு பின் வாக்குப்பதிவு தொடங்கியது. #LokSabhaElections2019
    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த தொகுதியில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மெஞ்ஞானபுரம் அருகே உள்ள கீழ ராமசாமியாபுரம் புனித அன்னாள் உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

    காலையில் இருந்தே ஆண்களும், பெண்களும் திரளாக வந்து வரிசையில் காத்து நின்றனர். வாக்குப்பதிவு தொடங்கியதும் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. அதை சரிசெய்ய அதிகாரிகள் முயற்சித்தனர். எனினும் பழுதை சரிசெய்ய முடியவில்லை. இதையடுத்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து வேறு எந்திரம் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது. அதுவரை வக்காளர்கள் காத்து நின்றனர். சில வாக்காளர்கள் ஓட்டு போட முடியாமல் திரும்பி சென்றனர். சுமார் 3 மணி நேரத்துக்கு பின்னர் வேறு எந்திரம் கொண்டு வரப்பட்டது. இதனால் காலை 10.40 மணிக்கு பிறகே வாக்குப்பதிவு தொடங்கியது. மெஞ்ஞானபுரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் சுமார் ஒரு மணிநேரம் வாக்குப்பதிவு தாமதமானது. #LokSabhaElections2019

    தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 13.48 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். #TNElections2019 #VoterTurnout
    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது காரணமாக தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

    இந்நிலையில் தமிழகத்தில் அமைதியாக தேர்தல் நடைபெறுவதாகவும், காலை 9 மணி நிலவரப்படி 13.48 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார். கோவையில் 11.20 சதவீதம், ஈரோட்டில் 1.32 சதவீதம், கரூரில் 10.01 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக கூறினார். #TNElections2019 #VoterTurnout
    ×