search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டு"

    வாக்கு எந்திரங்கள் மாற்றப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதை அடுத்து தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்துள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக நடந்த தேர்தலில் 67.11 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

    வேலூர் தவிர 542 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் அந்தந்த பகுதி ஓட்டு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

    மின்னணு எந்திரங்கள் இருக்கும் அறையை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது தவிர கட்சிகளின் முகவர்களும் மின்னணு எந்திரங்களின் பாதுகாப்புக்காக அங்கேயே தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு நடக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். வெளியில் இருந்தபடியே ரேடியோ அலைகள் மூலம் மின்னணு எந்திரங்களில் உள்ள பதிவை மாற்ற முடியும் என்ற புதிய குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

    இந்த நிலையில் நாடு முழுவதும் சில குறிப்பிட்ட தொகுதிகளில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக மின்னணு எந்திரங்களை மாற்ற முயற்சிகள் நடப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. சமீபத்தில் தேனி, மதுரை தொகுதிகளில் அப்படி எந்திரங்களை மாற்ற முயற்சி நடப்பதாக எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தேர்தல் ஆணைய அதிகாரிகள் இதற்கு விளக்கம் அளித்தனர். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மின்னணு எந்திரங்களை கொண்டு சென்று இருப்பு வைப்பதாக தெரிவித்தனர். அதன் பிறகே அமைதி திரும்பியது.

    இந்த நிலையில் வட மாநிலங்களில் பல தொகுதிகளில் மின்னணு எந்திரங்களை மாற்ற முயற்சிகள் நடப்பதாக நேற்று முதல் சமூக வலைதளங்களில் பரபரப்பாக தகவல்கள் பரவியபடி உள்ளன. குறிப்பாக உத்தரபிரதேசம், பீகார், பஞ்சாப், அரியானா மாநிலங்களில் இந்த பரபரப்பு அதிகளவில் பரவி உள்ளது.

    அந்த சமூக வலைதள தகவல்களில் மின்னணு எந்திரங்களை ஒட்டு மொத்தமாக மாற்றவும் சில இடங்களில் மின்னணு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்யவும் முயற்சி நடப்பதாக படங்களுடன் தகவல்கள் பரவியது. இதனால் எதிர்க்கட்சியினர் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     


    உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள காசிப்பூர் தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் மத்திய மந்திரி மனோஜ்சின்கா, பகுஜன் சமாஜ் சார்பில் அப்சல் அன்சாரி போட்டியிடுகிறார்கள். இந்த தொகுதியில் பதிவான வாக்குகளை கொண்ட மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்த அறைக்குள் நேற்று இரவு சிலர் செல்ல முயன்றனர்.

    அவர்கள் அங்கிருந்த மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை ஒரு வாகனத்தில் ஏற்றி செல்ல முயன்றதாக தகவல் பரவியது. இதையடுத்து ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறை முன்பு அன்சாரியும் அவரது ஆதரவாளர்களும் திரண்டு வந்து தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் காசிப்பூர் தொகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

    இதற்கிடையே உத்தர பிரதேச மாநிலம் சந்தவுலி தொகுதியிலும் ஓட்டுப்பதிவு எந்திரங்களை மாற்ற முயற்சிகள் நடப்பதாக தகவல் பரவியது. இந்த தொகுதிக்குரிய மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்துக்கு நேற்று இரவு ஒரு லாரியில் ஏராளமான எந்திரங்கள் கொண்டு வந்து இறக்கப்பட்டன.

    ஓட்டுப்பதிவு நிறைவு பெற்று 2 நாட்களுக்கு பிறகு லாரியில் இருந்து புதிதாக மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங்கள் இறக்கப்பட்டதால் அந்த தொகுதி சமாஜ்வாடி தொண்டர்களுக்கு சந்தேகம் எழுந்தன. அவர்கள் அதை வீடியோவில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர்.

    சந்தவுலி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரை வெற்றி பெற செய்வதற்காக திட்டமிட்டு ஓட்டுப்பதிவு எந்திரங்களை மாற்றுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டது. ஆனால் இதை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

    இது தொடர்பாக தேர்தல் ஆணைய மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “சந்தவுலி தொகுதியில் 35 மின்னணு எந்திரங்கள் முன் எச்சரிக்கையாக வைக்கப்பட்டு இருந்தன. ஏதாவது வாக்குச்சாவடியில் எந்திரங்கள் பழுதானால் அங்கு பயன்படுத்துவதற்காக இந்த 35 ஓட்டுப்பதிவு எந்திரங்களும் கையிருப்பு வைக்கப்பட்டு இருந்தன. அந்த 35 எந்திரங்களைதான் நாங்கள் லாரியில் இருந்து எடுத்து வந்து இறக்கி வைத்தோம்” என்று விளக்கம் அளித்துள்ளார்.

    ஆனால் இதை சமாஜ்வாடி தொண்டர்கள் ஏற்க மறுத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    உத்தரபிரதேசத்தில் டுமரியாகஞ்ச் தொகுதியிலும் மினி லாரி மூலம் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் கொண்டு வந்து மாற்றம் செய்யப்பட்டதாக பகுஜன் சமாஜ்-சமாஜ்வாடி கட்சி தலைவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த தொகுதியில் பல இடங்களில் போராட்டங்கள் நடந்தது.

    போராட்டங்கள் வலுத்ததால் மினி லாரியில் கொண்டு வரப்பட்ட ஓட்டுப்பதிவு எந்திரங்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஓட்டு எண்ணும் மையத்தில் இருந்து எடுத்து வேறு பகுதிக்கு கொண்டு சென்றனர்.

    ஜான்சி தொகுதியிலும் ஓட்டுப்பதிவு எந்திரங்களை மாற்ற முயற்சி நடந்ததாக சமூக வலைதளங்களில் நேற்று முதல் பரபரப்பு தகவல் வெளியானது. பஞ்சாப், அரியானா, பீகார் மாநிலங்களிலும் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    பீகாரில் மகாராஜ் கஞ்ச், சரண் தொகுதிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களுடன் லாரிகள் சுற்றி வருவதை லாலு பிரசாத் கட்சி தொண்டர்கள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

    இதனால் பீகாரிலும் பல இடங்களில் இன்று போராட்டம் நடைபெற்றது. வட மாநிலங்களில் சுமார் 20 தொகுதிகளில் மின்னணு எந்திரங்களை மாற்ற முயற்சி நடந்ததாக எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    எதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டுகளை தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் அதிரடியாக மறுத்துள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    உத்தரபிரதேசத்தில் சில தொகுதிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மாற்றப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவி உள்ள தகவல்களில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. தேவையில்லாமல் வதந்தியை பரப்பும் வகையில் இதை யாரோ செய்துள்ளனர். திட்டமிட்டு இத்தகைய சதியில் யாரோ ஈடுபட்டுள்ளனர்.

    எந்த ஒரு தொகுதி வாக்குகளும் தில்லுமுல்லு செய்து மாற்றப்படவில்லை. மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் உரிய முறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்த எந்திரங்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கின்றன.

    நாடு முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு எந்திரங்களும், ஒப்புகை சீட்டு எந்திரங்களும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் முன்னிலையில்தான் சீல் வைத்து மூடப்பட்டன. அப்படி சீல் வைக்கப்பட்டது முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சீல் வைக்கப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மத்திய பாதுகாப்பு படையினர் ஒவ்வொரு ஓட்டு எண்ணும் மையம் முன்பும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    இத்தகைய பலத்த பாதுகாப்பை மீறி யாரும் உள்ளே சென்று விட முடியாது.

    தேர்தல் ஆணையம் செய்துள்ள பாதுகாப்பை தவிர வேட்பாளர்களும் தங்களது முகவர்கள் மூலம் மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை முன்பு பாதுகாப்பில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் 24 மணி நேரமும் அங்குதான் இருக்கிறார்கள்.

    இவற்றையெல்லாம் மீறி எப்படி மின்னணு எந்திரங்களை கடத்தி சென்று விட முடியும். எனவே அடிப்படை ஆதாரமே இல்லாத இத்தகைய குற்றச்சாட்டுகளை யாரும் நம்ப வேண்டாம்.

    உத்தரபிரதேசத்தில் சில தொகுதிகளில் பயன்படுத்தாத அதாவது கையிருப்பு வைக்கப்பட்டு இருந்த மின்னணு எந்திரங்களை கொண்டு சென்றபோது தான் அதுபற்றி தெரியாமல் வதந்தியை பரப்பி விட்டனர். அத்தகைய இடங்களில் மின்னணு எந்திரம் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    அதை அனைத்துக் கட்சியினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதனால் பிரச்சினை தீர்ந்துள்ளது. பயன்படாத மின்னணு எந்திரங்களை கொண்டு செல்வது தொடர்பாக இப்போது நாங்கள் உரிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளோம்.

    ஜான்சி தொகுதியிலும் பயன்படாத மின்னணு எந்திரங்களை கொண்டு சென்றதால்தான் கட்சி தொண்டர்கள் சந்தேகத்தில் வதந்தியை பரப்பிவிட்டனர். தற்போது அங்கும் உரிய விளக்கம் அளித்த பிறகு பிரச்சினை தீர்ந்துள்ளது.

    இவ்வாறு அந்த தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்தார்.

    கேரள வாக்குப்பதிவில் காங்கிரசுக்கு ஓட்டு போட்டால் தாமரை சின்னத்திற்கு விளக்கு எரிந்ததால் வாக்குச்சாவடி மையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #LokSabhaElections2019

    கோவளம்:

    கேரள மாநிலத்தின் 20 பாராளுமன்றத் தொகுதிகளிலும் இன்று வாக்குப் பதிவு தொடங்கியது. திருவனந்தபுரம் தொகுதிக்கு உட்பட்ட கோவளம் சொவ்வரா வாக்குச் சாவடியில் 151-வது பூத்தில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது.

    முதலில் சுமார் 76 பேர் ஓட்டு போட்டனர். 77-வது நபர் காங்கிரசின் கை சின்னத்துக்கு வாக்களித்த போது தாமரை சின்னத்திற்கு அருகில் உள்ள விளக்கு ஒளிர்ந்ததாக குற்றம் சாட்டினார்.

    இதை கண்டித்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து 151-வது பூத்தில் மட்டும் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான கே.வாசுகி இந்த வாக்குச் சாவடிக்கு வருகை தந்தார்.

    வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவறு நடந்ததா என்பதை பரிசோதித்து பார்ப்பது இப்போது இயலாத காரியம் என்பதால் வேறு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் மக்கள் வாக்களித்தனர். #LokSabhaElections2019

    ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் தொகுதியில் 14.1 சதவீத ஓட்டுகள் மட்டுமே பதிவாகி உள்ளன. #LokSabhaElections2019
    புதுடெல்லி:

    காஷ்மீர் மாநிலத்தில் மொத்தம் 6 தொகுதிகள் உள்ளன. இவற்றுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

    இதில் பாரமுல்லா, ஜம்மு ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு கடந்த 11-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது.

    2-வது கட்டமாக ஸ்ரீநகர், உத்தம்பூர் ஆகிய 2 தொகுதியில் நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு மிகவும் மந்தமாக இருந்தது. காஷ்மீர் மக்கள் ஓட்டு போடுவதை விரும்பவில்லை. ஸ்ரீநகர் தொகுதியில் 14.1 சதவீதமே ஓட்டு பதிவாகி இருந்தது.

    95 தொகுதிகளுக்கு நேற்று 2-வது கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் ஸ்ரீநகரில் தான் மிகவும் குறைவான வாக்கு பதிவாகி இருந்தது. தலைநகர் ஸ்ரீநகரில் இவ்வளவு மோசமாக ஓட்டுப்பதிவாகி இருந்தது.

    ஆனால் உத்தம்பூர் தொகுதியில் 70.2 சதவீத வாக்கு பதிவாகி உள்ளது.

    காஷ்மீரில் 2-வது கட்ட தேர்தலில் மொத்தம் 45.7 (இரண்டு தொகுதி யிலும் சேர்த்து) ஓட்டுப்பதி வானதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

    மேற்கு வங்காள மாநிலம் ஐல்பைகுரி தொகுதி யில்தான் அதிகபட்சமாக 82.26 சதவீத ஓட்டுப்பதிவானது.  #LokSabhaElections2019
    ஓட்டு போடுவதை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டது தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். #VotingProcessRecord #PostedFacebook
    அவுரங்காபாத்:

    மராட்டிய மாநிலம் உஸ்மானாபாத் நாடாளுமன்ற தொகுதியில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. ஒரு வாக்குச்சாவடியில் ஒருவர், தான் ஓட்டு போடுவதை வீடியோ எடுத்தார். அப்போது, தேசியவாத காங்கிரசுக்கு ஓட்டு போடுங்கள் என்று பேசினார். இந்த வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட்டார். சற்று நேரத்தில் அது ‘வைரல்’ ஆனது. அந்த நபர், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர் ஆவார்.

    தேர்தல் அதிகாரி கவனத்துக்கு இச்சம்பவம் தெரிய வந்ததும், அவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். இச்செயல், தேர்தல் விதிமீறல் என்பதால், அவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பேஸ்புக்கில் வீடியோ நீக்கப்பட்டது. 
    சென்னை மாநகர் முழுவதும் 323 இடங்களில் பணப்பட்டுவாடா நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. #LokSabhaElections2019

    சென்னை:

    பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நாளை நடைபெறுவதையொட்டி அதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    தமிழகம் முழுவதும் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இருப்பினும் ஆங்காங்கே சத்தமில்லாமல் பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

    சென்னை மாநகர் முழுவதும் 323 இடங்களில் பணப்பட்டுவாடா நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளை பதட்டமான இடங்கள் என்று அறிவித்து அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். #LokSabhaElections2019

    அதிமுகவிற்கு ஒரு ஓட்டு போட்டாலும் அது பாஜகவிற்கு வாக்களிப்பதற்கு சமம் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். #LokSabheElections2019 #ChandrababuNaidu
    சென்னை:

    ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளை சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    ஜனநாயகம் ஆபத்தான நிலையில் உள்ளது. அதிமுகவிற்கு ஒரு ஓட்டு போட்டாலும் அது பாஜகவிற்கு வாக்களிப்பதற்கு சமம். பிரதமர் மோடி நாட்டுக்கு துரோகம் செய்கிறார். டெல்லியில் விவசாயிகள் போராடியபோது பிரதமர் மோடி சந்தித்து பேசினாரா?



    அனைத்து விவிபேட் இயந்திரங்களையும் சரிபார்க்க முடியாது என்கிறது தேர்தல் ஆணையம். பல்வேறு வளர்ந்த நாடுகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை விலக்கிக் கொண்டனர். தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடுகளும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த முன்வரவில்லை. உலகில் 10 சதவீத நாடுகளே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தி வருகின்றன

    தமிழகத்தில் ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு மத்திய அரசு பல்வேறு நாடகங்களை நடத்தி வருகிறது. மோடி அரசின் கைப்பாவையாக அதிமுக அரசு மாறிவிட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு இருப்பதாக தலைமை தேர்தல் ஆணையத்தில் சந்திரபாபு நாயுடு புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது. #LokSabheElections2019 #ChandrababuNaidu
    பணத்திற்காக ஓட்டு போடுவதில் புதுவையில் 43 சதவீதம் வாக்காளர்கள் ஆர்வம் காட்டுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. #LokSabhaElections2019 #Voters
    புதுச்சேரி:

    பாராளுமன்ற-சட்டசபை தேர்தல்களில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது புதுவையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது அதிகமாக உள்ளது.

    இது சம்பந்தமாக ஜனநாயக மறுசீரமைப்பு என்ற அமைப்பு மற்றும் ஆர்.ஏ. ஆஸ்டரைஸ் கம்ப்யூட்டிங் நிறுவனம், டேட்டா சொலி‌ஷன் நிறுவனம் ஆகியவை இணைந்து மாநிலம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டது.

    இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், புதுவையில் 43 சதவீத மக்கள் காசு வாங்கி கொண்டு அதற்கு தகுந்த மாதிரி ஓட்டு போடுவதாக தெரிவித்தனர்.

    இவர்களில் 35 சதவீதம் பேர் ஓட்டுக்கு காசோ, பரிசுகளோ முக்கியம் என்று கூறினார்கள். 10 சதவீதம் பேர் ஓட்டுக்கு காசு மிக, மிக முக்கியம் என்று தெரிவித்தனர்.



    காசு வாங்கி கொண்டு ஓட்டு போடுவது சட்டப்படி குற்றம் என்று 65 சதவீதம் பேர் தெரிவித்தனர். 39 சதவீதம் பேர் பணம் பெறுவதில் தவறு இல்லை என்றும், பணத்துக்கு ஈடாக நாங்கள் ஓட்டு போட்டு விடுகிறோம் என்று கூறினார்கள்.

    மேலும் இந்த ஆய்வில் குறிப்பிட்ட வேட்பாளர்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களுக்கு உதவி செய்தால் போதாது, தொடர்ந்து அவர்கள் உதவி செய்தால் தான் மக்களின் ஆதரவை தக்க வைக்க முடியும் என்று தெரிய வந்துள்ளது.

    மக்களின் வாக்குகளை பெறுவதற்கு முதல்-அமைச்சரின் செயல்பாடு அவசியமானது என்று 46 சதவீதம் பேர் கூறினார்கள். அதில் 36 சதவீதம் பேர் முதல்-அமைச்சரின் செயல்பாடு மிக, மிக முக்கியம் என்று தெரிவித்தனர்.

    67 சதவீத வாக்காளர்கள் வேட்பாளரின் தகுதியை முக்கியமாக வைத்துதான் ஓட்டு போடுவோம் என்று தெரிவித்தனர்.

    அதில், 12 சதவீதம் பேர் வேட்பாளர் தகுதி மிக முக்கியமானது என்று கூறினர். 46 சதவீதம் பேர் எந்த கட்சி வேட்பாளர் என்பதை பார்த்து ஓட்டு போடுவதாக கூறினார்கள்.

    82 சதவீத வாக்காளர்கள் தன்னிச்சையாக சிந்தித்து ஓட்டு போட முடிவை எடுப்பதாக தெரிவித்தனர். 9 சதவீதம் பேர் தனது கணவர் அல்லது மனைவி சொல்படி முடிவு எடுப்பதாக கூறினார்கள்.

    3 சதவீதம் பேர் அரசியல் தலைவர்கள் ஆலோசனையின் பேரில் ஓட்டு போடுவோம் என்று சொன்னார்கள்.

    பாராளுமன்ற, சட்டமன்ற வேட்பாளர்கள் கிரிமினல் குற்ற பின்னணி இருந்தால் ஓட்டு போட மாட்டோம் என்று 99 சதவீதம் பேர் கூறினார்கள். ஆனால், தங்கள் வேட்பாளரின் குற்ற பின்னணி குறித்து சரியாக தெரிவதில்லை என்று பெரும்பாலானோர் தெரிவித்தனர்.

    32 சதவீதம் பேர் வேட்பாளர்களின் குற்ற பின்னணி தெரியும் என்று கூறினர். #LokSabhaElections2019 #Voters

    வாக்குரிமை பெற்றவர்கள் தேர்தலில் ஓட்டு போடாவிட்டால் பின்னர் வருந்த நேரிடும் என வானொலியில் பிரதமர் மோடி கூறினார். #PMModi #Vote #MannKiBaat
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். ‘மன் கீ பாத்’ எனப்படும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு தகவல்களை அவர் பகிர்ந்து கொள்கிறார்.

    அந்தவகையில் நேற்று ஒலிபரப்பான மன் கீ பாத் உரையில், வாக்களிப்பதன் முக்கியத்துவம் மற்றும் தேர்தல் கமிஷனின் அயராத பணிகளை பிரதமர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, கடந்த 25-ந் தேதி வாக்காளர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், முதல் முறை வாக்களிக்கப்போகும் இளம் வாக்காளர்களுக்கு அவர் அறிவுரைகளை வழங்கி இருந்தார்.

    இது தொடர்பாக மோடி கூறியதாவது:-

    21-ம் நூற்றாண்டில் பிறந்தவர்கள் முதல் முறையாக நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க இருக்கின்றனர். தேசத்தின் கடமைகளில் தோள்கொடுக்கும் வாய்ப்பை எதிர்கொள்ள இருக்கின்றனர். தேச கட்டுமானத்தின் பங்குதாரர்களாக பயணத்தை தொடங்க உள்ளனர். அவர்களின் தனிப்பட்ட கனவை தேசத்தின் கனவுடன் இணைப்பதற்கான நேரம் வந்திருக்கிறது.

    வாக்களிக்க தகுதி வாய்ந்த இளம் சமூகத்தினர் அனைவரும் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ள வேண்டும். வாக்காளர் ஆவதன் மூலம் வாக்குரிமையை பெறுகிறோம். இது, நமது வாழ்க்கை பயணத்தின் முக்கியமான சடங்குகளில் ஒன்று என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.

    அதேநேரம் வாக்களிப்பது புனிதமான கடமை என்ற உணர்வும் நம்மிடம் தானாகவே வளர வேண்டும். எந்த காரணத்தை முன்னிட்டும் ஒருவர் வாக்களிக்க முடியவில்லை என்றால், அது ஒருவரை காயப்படுத்தும். வாக்குரிமை பெற்றவர்கள் ஓட்டு போடாவிட்டால் பின்னர் வருந்த நேரிடும்.

    எனவே வாக்களிக்கும் கடமையின் முக்கியத்துவத்தை மக்கள் நிச்சயம் புரிந்து கொள்ள வேண்டும். அதைப்போல வாக்காளர் பதிவு மற்றும் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வை பரப்புவதில் முக்கிய பிரபலங்களும் இணைந்து கொள்ள வேண்டும்.

    இந்தியாவில் தேர்தல் நடத்தப்படுவது உலக நாடுகளுக்கு பிரமிப்பாக இருக்கிறது. தேர்தல் கமிஷன் மற்றும் அதன் திறன்வாய்ந்த செயல்பாடுகளால் ஒவ்வொரு குடிமகனும் பெருமை அடைகின்றனர். ஒவ்வொரு வாக்காளருக்கும் தனது வாக்குரிமையை தேர்தல் கமிஷன் உறுதி செய்கிறது. இதுதான் நமது ஜனநாயகத்தின் அழகு.

    நேர்மை மற்றும் சுதந்திரமான முறையில் தேர்தல் நடப்பதுக்கு உறுதுணையாக இருக்கும் ஒவ்வொரு மாநிலத்தின் தேர்தல் கமிஷன்கள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவர் மீதும் மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.  #PMModi #Vote #MannKiBaat
    தெலுங்கானாவில் ஜனநாயக கடமையை நிறைவேற்ற பெறுகொலு கிராம மக்கள் வாக்குசாவடிக்கு 16 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து ஓட்டு போட்டுள்ளனர். #TelanganaAssemblyElections
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலில் ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது.

    2 கோடியே 80 லட்சம் வாக்காளர்களை கொண்ட தெலுங்கானா தேர்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவானது.

    இங்கு ஓட்டுப்போட்டு ஜனநாயக கடமையை நிறைவேற்ற 16 கிலோ மீட்டர் தூரம் கிராம மக்கள் நடந்து வந்துள்ளனர். ஜெயசங்கர் பூபல்பள்ளி மாவட்டம் பெறுகொலு என்ற மலை கிராமம் தெலுங்கானா- சத்தீஸ்கர் மாநில எல்லையில் உள்ளது.

    மாவோயிஸ்டு ஆதிக்கம் நிறைந்த இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு 16 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஜனகலபள்ளி கிராமத்தில் வாக்குசாவடி மையம் அமைக்கப்பட்டது.

    வாகன வசதி இல்லாத பெறுகொலு கிராம மக்கள் ஓட்டு போடுவதற்காக 16 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று வாக்குச்சாவடி மையத்தில் ஓட்டு போட்டனர்.

    காலை 8 மணிக்கு தங்களது பயணத்தை தொடங்கிய அவர்கள் மதியம் 12.30 மணிக்கு வாக்குசாவடி மையத்தை வந்தடைந்தனர். அக்கிராமத்தில் 56 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 50 பேர் தங்களது ஓட்டுக்களை பதிவு செய்தனர்.



    6 பேர் குழந்தைகளை கவனித்து கொள்ள வேண்டும் என்பதால் ஓட்டு போட வர முடியவில்லை. வயதான வாக்காளர்கள் 10 பேர் 6-ந்தேதி இரவு தங்களது பயணத்தை தொடங்கினர். அவர்கள் இரவு ஜனகலபள்ளி கிராமத்தில் தங்கி காலை தங்களது ஓட்டுக்களை போட்டனர்.

    பெனுகொலு கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் கூறுகையில், “எங்களிடம் வயதானவர்கள் கூறும் போது ஓட்டு போடவில்லை என்றால் அரசு ஆவணங்களில் தாங்கள் இறந்து விட்டதாக பரிசீலித்து விடுவார்கள் என்று கூறினார்கள். #TelanganaAssemblyElections
    மத்திய பிரதேசத்தில் ஓட்டு கேட்டு காலில் விழுந்த பாஜக எம்எல்ஏவுக்கு செருப்பு மாலை அணிவித்து அவமானப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #MadhyaPradeshElections #BJPMLA #ShoeGarland
    இந்தூர்:

    மத்திய பிரதேச மாநிலத்தில் வரும் 28-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மத்திய பிரதேசத்தில் கடந்த 15 ஆண்டுகளாக முதல்-மந்திரி சவுகான் தலைமையில் பா.ஜனதா ஆட்சியில் இருந்து வருகிறது. அங்கு மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் பா.ஜனதா செயல்பட்டு வருகிறது. இதற்காக கட்சி நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் பாஜக எம்எல்ஏவும் நகடா தொகுதியின் பாஜக வேட்பாளருமான திலிப் ஷெகாவத், கடந்த 19-ம் தேதி வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது பெரியவர்களின் காலைத் தொட்டு வணங்கி வாக்கு கேட்டபடி சென்றார். இப்படி ஒருவரின் காலைத் தொட்டு வணங்கி எழுந்தபோது, அந்த நபர் திடீரென வேட்பாளரின் கழுத்தில் செருப்பு மாலை அணிவித்தார்.

    இதனால் கடும் அவமானமும் ஆத்திரமும் அடைந்த வேட்பாளர் திலிப் ஷெகாவத், செருப்பு மாலையை உடனடியாக கழற்றி வீசியதுடன், அந்த நபரை அடித்தார். பின்னர் அருகில் இருந்தவர்களும் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    கடந்த 19-ம் தேதி நடந்த இந்த சம்பவத்தை யாரோ செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். அது வைரலாக பரவி வருகிறது. #MadhyaPradeshElections #BJPMLA #ShoeGarland



    கண் மூடித்தனமாக ஓட்டு போட்ட மக்கள்தான் முதல் குற்றவாளி என காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார். #Vote #TamilaruviManian

    ஈரோடு:

    ஈரோடு சி.கே.கே. அறக்கட்டளை சார்பில் ஈரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் சி.கே.கே. அறக்கட்டளையின் 40- ஆண்டு இலக்கிய விழா நடந்தது.

    விழாவில் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    வெளி நாட்டில் வாழும் தமிழ் மக்கள் இலக்கிய சிந்தனையை நேசிக்கிறார்கள். அதே போல் நாமும் இலக்கியத்தை நேசிக்க வேண்டும்.

    இன்று பெண்கள் பெரும் பாலானோர் டி.வி. சீரியல்களை நேசிப்பதால் அவர்களின் சிந்தனை அழிந்து வருகிறது. மக்கள் பிரதிநிதிகளை குற்றம் சொல்வதை விட பெரிய குற்றம் அவர்களுக்கு கண் மூடித்தனமாக ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்கும் நம்ம தான் (பொதுமக்கள்) குற்றவாளிகள்.

    இளைய தலைமுறையினர் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை கற்று கொள்ள வேண்டும். இதன் மூலம் பல நல்ல சிந்தனைகளை வளர்த்து கொள்ளலாம்.

    இலக்கியம் தொடர்பான விழாக்கள் அவ்வப்போது நடத்தப்பட வேண்டும். அப்போது தமிழ் இலக்கியங்கள் பாதுகாக்கப்படும். இதன் மூலம் தமிழும், மனித நேயமும் வளரும்.

    இவ்வாறு தமிழருவி மணியன் பேசினார்.  #Vote #TamilaruviManian

    ஓட்டுக்கு பணம் தருவதை தடுக்காமல் ஜனநாயகத்தை எப்படி காக்க முடியும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #AnbumaniRamadoss

    சென்னை:

    பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தேர்தல்களில் ஓட்டுக்கு பணம் கொடுப்பது என்பது கிட்டத்தட்ட எழுதப்படாத சட்டமாகவே மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தான் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது. கடந்த 2016ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. ரூ.10,000 கோடி அளவுக்கும், தி.மு.க. ரூ.6000 கோடி அளவுக்கும் பணத்தை வாரி இறைத்து தான் இந்த அளவுக்கு வெற்றி பெற்றன.

    விதிப்படிப் பார்த்தால் சட்டப்பேரவைத் தேர்தலையே செல்லாது என ஆணையம் அறிவித்திருக்க வேண்டும். ஆனால், பணம் கொடுத்து பெற்ற வெற்றியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருக்கிறது.

    ஜனநாயகம் என்பது மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் ஆட்சி ஆகும். ஆனால், ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுப்பதற்கு மாற்றாக பணம் தேர்ந்தெடுக்குமானால் அது ஜனநாயகம் அல்ல... பணநாயகம் ஆகும். தேர்தலில் பெரும் சவாலாக இருந்த படைபலம் ஒழிக்கப்பட்டு விட்ட நிலையில், பணபலம் தான் நியாயமான, சுதந்திரமான தேர்தலுக்கும், ஜனநாயகத்துக்கும் பெரும் சவாலாக உருவாகி உள்ளது. தேர்தலில் பண பலத்தைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் 1998-ம் ஆண்டில் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்த சீர்திருத்தங்களை மத்திய அரசு இன்று வரை பரிசீலனைக்குக் கூட எடுத்துக் கொள்ளாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது.

    உண்மையான ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்துவதில் மத்திய ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லை என்பதையே இது காட்டுகிறது. இது நாட்டுக்கு நல்லதல்ல.

    ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுவதை தடுக்காவிட்டால் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியாது. தேர்தல் சீர்திருத்தங்களில் முதன்மையானது ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுவதை தடுப்பது ஆகும்.

    ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டால் உடனடியாக தேர்தல் ஒத்திவைக்கப்பட வேண்டும்; எத்தனை முறை பணம் கொடுக்கப்பட்டாலும் அத்தனை முறை தேர்தலை ஒத்திவைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, ஓட்டுக்கு பணம் கொடுத்த வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

    10 சதவீதம் தொகுதிகளில் ஒரு கட்சியின் வேட்பாளர்கள் தகுதி நீக்கப்பட்டால் அந்த கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும். இவை உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இதற்காக, பாராளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரை செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #AnbumaniRamadoss

    ×