search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேட்டூர்"

    மேட்டூர் அருகே மினிலாரி மோதி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அணை ஆர்.எஸ். தங்கமாபுரிப்பட்டணம் பெரியார் நகரை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன், (வயது 48).

    இவர், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.

    தற்போது கோபால கிருஷ்ணன் இங்கிருந்து மாற்றுப்பணிக்காக திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.

    வழக்கம்போல் நேற்று இரவு பணி முடிந்து கோபால கிருஷ்ணன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பினார். அவர், பவானி, அம்மாப்பேட்டை, நெருஞ்சிபேட்டை வழியாக வந்து கொண்டிருந்தார்.

    இரவு சுமார் 8.40 மணி அளவில் மேட்டூர் அருகே உள்ள நவப்பட்டி என்ற இடத்தில் வந்தபோது அந்த வழியாக சென்ற ஈச்சர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் கோபால கிருஷ்ணன் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த அடிப்பட்டு, சம்பவ இடத்திலேயே துடித்துடித்து பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து, மேட்டூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோபால கிருஷ்ணன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் போலீசார், சம்பந்தப்பட்ட ஈச்சர் லாரியை பறிமுதல் செய்து, அந்த லாரியை ஓட்டி வந்த தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் கோவிந்தன் (34) என்பவரை கைது செய்தனர்.

    விபத்தில் பலியான கோபால கிருஷ்ணனுக்கு சுஜிதா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், சஞ்சனா என்ற மகளும் உள்ளனர். இருவரும் அங்குள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

    பவானி மற்றும் ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் சக போலீசார் மத்தியில் இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மேட்டூர் புதிய அனல் மின் நிலைய பாய்லரில் ஏற்பட்ட பழுது காரணமாக நேற்று நள்ளிரவு முதல் 600 மெகா வாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
    மேட்டூர்:

    மேட்டூர் பழைய மற்றும் புதிய மின் நிலையங்கள் உள்ளன. பழைய அனல் மின் நிலையத்தில் 4 யூனிட்களில் தலா 210 மெகாவாட் மூலம் 840 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இதே போல புதிய அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த மின்சாரம் நெய்வேலிக்கு கொண்டு செல்லப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்றிரவு புதிய அனல் மின் நிலைய பாய்லரில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் நள்ளிரவு முதல் இந்த அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து ஊழியர்கள் பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஆனாலும் இன்று காலை வரை புதிய அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கவில்லை. இதனால் அந்த அனல் மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் இடங்களில் மின் தடை ஏற்பட வாய்ப்புள்ளது.
    மேட்டூரில் ஸ்கேன் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது. இதுதொடர்பாக பெண் டாக்டர் கைது செய்யப்பட்டார்.

    மேட்டூர்:

    மேட்டூர் அரசு மருத்துவமனை அருகே ஒரு தனியார் மருத்துவமனை இயங்கி வந்தது.

    இந்த மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களை ஸ்கேன் செய்து கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிவிப்பதாகவும், பெண் குழந்தை என்றால் கருக்கலைப்பு செய்வதாகவும் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து ஊரக நலப்பணிகள் டி.எஸ்.பி. தாமஸ்பிரபாகரன், முதுநிலை எக்ஸ்ரே மருத்துவர் நடராஜன் மற்றும் குழுவினர் அந்த மருத்துவ மனையில் சோதனை செய்தனர். அப்போது ஸ்கேன் செய்த கர்ப்பிணி பெண்களின் பட்டியல் பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படாமலும், தனி தாளிலும் எழுதி வைக்கப்பட்டு இருந்தது. மேலும் ஸ்கேன் செய்த படங்களும் முறையாக பராமரிக்கப்படவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவ குழுவினர் ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்தனர்.

    மருத்துவமனை நடத்தி வந்த ஓய்வு பெற்ற சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சந்திரா கைது செய்யப்பட்டார். அவர் இன்று கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.

    கர்நாடகா மற்றும் கேரளாவில் பெய்து வரும் தொடர் மழை, வெள்ளப்பெருக்கு காரணமாக தமிழ்நாட்டில் உள்ள 15 பெரிய அணைகளில் 9 அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பிவிட்டன. #MetturDam #MullaPeriyar #Vaigai
    சென்னை:

    தமிழ்நாட்டில் இந்த ஆண்டு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு தென்மேற்கு பருவமழை அதிக அளவில் பெய்து வருகிறது.

    கர்நாடகா மற்றும் கேரளாவிலும் மிக பலத்த மழை பெய்கிறது.

    இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பியதால் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடக அணைகள் நிரம்பி வழிவதால் 2005-ம் ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டு மேட்டூர் அணை 2 முறை நிரம்பியது.

    காவிரியில் தற்போது வினாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் அரியலூர் ஆகிய 11 டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பெய்து வரும் தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக தமிழ்நாட்டில் உள்ள 15 பெரிய அணைகளில் 9 அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பிவிட்டன.

    மேட்டூர், பவானிசாகர், முல்லைப்பெரியாறு, அமராவதி, பாபநாசம், பெருஞ்சாணி, சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு ஆகிய 9 அணிகள் நிரம்பி வழிகின்றன. முல்லை பெரியாறு அணை முழு கொள்ளளவான 152 அடிக்கு தண்ணீரை தேக்கி வைக்க முடியும். ஆனால் கோர்ட்டு உத்தரவுபடி தற்போது 142 அடி தண்ணீர் மட்டுமே தேக்கி வைக்கப்பட்டுள்ளது.


    இவை தவிர வைகை மற்றும் திருமூர்த்தி அணைகள் நிரம்பி வருகின்றன. நேற்றைய நிலவரப்படி 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் 63.74 அடி தண்ணீர் உள்ளது. 60 அடி உயரமுள்ள திருமூர்த்தி அணையில் 52.21 அடியும், 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையில் 79.6 அடியும் தண்ணீர் உள்ளது.

    நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இந்த 3 அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. பேச்சிப்பாறை அணையில் பராமரிப்பு பணி நடை பெறுவதால் அங்கு முழுகொள்ளளவு தண்ணீர் தேக்கி வைக்கப்படவில்லை.

    கிருஷ்ணகிரி அணையில் பழுதடைந்த ஒரு மதகு இன்னும் சரிசெய்யப்படவில்லை. எனவே அங்கும் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கி வைக்கப்படவில்லை.

    தமிழ்நாட்டில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 11 காவிரி டெல்டா மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேட்டூரில் 10 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் எடப்பாடியில் 3 முகாம்களும், சங்ககிரியில் 3 முகாம்களும் பொதுமக்கள் தங்குவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவில் உபரி நீர் திறந்து விடப்படுவதால் காவிரி கரையோரம் தங்கியிருக்கும் மக்கள் முகாம்களில் வந்து தங்குமாறு சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    ஒகேனக்கல் அருவியில் இருந்து 1 லட்சத்து 70 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுவதால் காவிரி கரையோரம் கட்டப்பட்டு வரும் 31 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. 46 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

    நாமக்கல், பள்ளிப்பாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோவையில் குறிச்சி அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் நொய்யல் ஆற்றின் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் 3 வீடுகள் இடிந்து தரைமட்டமாயின.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை கொட்டுகிறது. தாமிரபரணி மற்றும் பரளியாறுகளின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகள் தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன. அங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். #MetturDam #MullaPeriyar #Vaigai
    வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று மேட்டூர், பவானிசாகர் அணைகளில் இருந்து பாசன கால்வாய்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #TNCM #EdappadiPalaniswamy
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, மேட்டூர் அணையிலிருந்து, புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு கால்வாய்களில் நடப்பாண்டு பாசனத்திற்காக 1.8.2018 முதல் தண்ணீரை திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

    இதன் மூலம், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் 42,736 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி திட்ட பிரதானக் கால்வாயின் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய்களில் இரட்டைப்படை மதகுகள் ஆகியவற்றின் கீழ் பாசனம் பெறும் நிலங்களுக்கு 1.8.2018 முதல் 28.11.2018 முடிய 120 நாட்களுக்கு தண்ணீரை திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

    இதனால், ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பவானி, பெருந்துறை, ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி, திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் வட்டம் மற்றும் கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி வட்டம் ஆகியவற்றில் உள்ள 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TNCM #EdappadiPalaniswamy
    காவிரி ஆற்றில் அதிக நீர் திறக்கப்பட உள்ளதால் கரூர், திருவாரூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. #Karur #Thanjavore #FloodAlert
    கரூர்:

    சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது. இதனால், ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கரைகளில் இருந்து இரவு 8 மணி முதல் நீர் திறக்கப்பட உள்ளது. முதலில் 200 கன அடி தண்ணீர் திறக்கப்படும். பின்னர் அது படிப்படியாஅக 1000 கன அடி தண்ணீர் திறக்கப்படும். எனவே, கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர் என சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார்.
      
    இந்நிலையில், காவிரி ஆற்றில் அதிக நீர் திறக்கப்பட உள்ளதால் கரூர் மற்றும் திருவாரூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கூறுகையில், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காவிரியில் இருந்து நீர் திறப்பு அதிகரித்து வருவதால் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் யாரும் காவிரி ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

    இதேபோல், கல்லணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றை பொதுமக்கள் யாரும் கடந்து செல்ல வேண்டாம் என்றும், காவிரி ஆற்றில் பொதுமக்கள் இறங்கவோ அல்லது குளிக்கவோ கூடாது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். #Karur #Thanjavore #FloodAlert
    சேலம் மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் குளித்த 5 பேரை வெள்ளம் அடித்துச் சென்றது. இதில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் ஒருவரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. #Cauvery #Mettur
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது. இதனால், ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    இந்நிலையில், ரெட்டியூர் என்ற பகுதியில் இன்று ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 5 பேரை தண்ணீர் அடித்துச் சென்றது.

    தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தேடினர். இதில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. வாணிஸ்ரீ, மைதிலி சரவணன், ரவீனா ஆகியோரின் உடல்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர். மாயமான ஹரிஹரனை தேடி வருகின்றனர்.

    சம்பவ இடத்துக்கு மாவட்ட கலெக்டர் ரோகிணி வந்து மீட்பு பணிகளை ஆய்வு செய்தார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், காவிரி ஆற்றில் இறங்க வேண்டாம் என கடலோர மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். மேலும், வெள்ள பாதிப்புகளுக்கு 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம எனவும் தெரிவித்துள்ளார். #Mettur #Cauvery
    ஒகேனக்கல்லில் இருந்து மேட்டூர் வரை 75 கிலோ மீட்டர் தூரத்துக்கு காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. #Cauvery #MetturDam #Hogenakkal #KabiniDam
    தருமபுரி:

    கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளில் இருந்து தமிழகத்துக்கு 55 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.



    தமிழகத்தில் காவிரி பாயும் பகுதிகளில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய நீர்வளத்துறையும், தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளது. இன்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் ஐவர்பாணி மற்றும் மெயின் அருவிகளில் வெள்ள நீர் அதிகமாக கொட்டுகிறது.

    ஒகேனக்கல்லில் இருந்து மேட்டூர் வரை 75 கிலோ மீட்டர் தூரத்துக்கு காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் குளித்தல், துணி துவைத்தல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் குடிசை போட்டு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    இதுகுறித்து தருமபுரி உதவி கலெக்டர் சிவனருள் கூறியதாவது:-

    ஒகேனக்கல் முதல் மேட்டூர் அணை வரை காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள், வருவாய் துறை ஊழியர்கள், போலீசார், தீயணைப்பு படையினர், ஊர்காவல் படையினர் கண்காணித்து வருகிறார்கள். வனத்துறையினரும் ரோந்து சுற்றி வருகின்றனர்.



    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மீன்பிடி தொழிலாளர்கள் மீன்பிடிக்க வேண்டாம். பரிசல் ஓட்டிகள் பரிசல்களை இயக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

    நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் இன்று 4-வது நாளாக ஒகேனக்கல்லில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Cauvery #MetturDam #Hogenakkal #KabiniDam

    குடகு மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் விரைவில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
    பெங்களூரு:

    குடகு மாவட்டத்தில் 2 நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. தலைக்காவிரி பகுதியில் பெய்த மழையால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் காவிரி கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கின் காரணமாக கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. அதேபோல் ஹாரங்கி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இந்த அணைக்கு வினாடிக்கு 295 கன அடி வீதம் நீர் வருகிறது. கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் விரைவில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    கர்நாடக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னட, உடுப்பி, உத்தரகண்டா பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குமாரதாரா, நேத்ராவதி அணைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கர்நாடக கடலோர மாவட்டங்களில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும், மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    ×