search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பரங்குன்றம்"

    திருப்பரங்குன்றம் கோவிலில் தெப்பத் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக தை கார்த்திகை தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    முருகப்பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தெப்பத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி தினந்தோறும் காலை தங்க சப்பரத்திலும், இரவில் வெவ்வேறு வாகனங்களிலும் தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி எழுந்தருளி நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    இந்தநிலையில் திருவிழாவின் 9-ம் நாளான நேற்று காலை தெப்ப முட்டு தள்ளுதல் மற்றும் தை கார்த்திகை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி. ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப மிதவை தயார்படுத்தும் பணி நடந்தது. பின்னர் கோவிலுக்குள் உள்ள உற்சவர் சன்னதியில் இருந்து மேளதாளங்கள் முழங்க தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி புறப்பட்டு சன்னதி தெரு வழியாக தெப்பக்குளத்திற்கு வந்தார். அப்போது தெப்ப முட்டு தள்ளுதல் நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து சாமி புறப்பட்டு பதினாறு கால் மண்டபம் அருகே தயாராக இருந்த தேரில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன்பின்பு தேரோட்டம் நடைபெற்றது. நிலையில் இருந்த தேரை, பக்தர்கள் “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா“ என்று பக்தி கோஷங்கள் எழுப்பி வடம் பிடித்து இழுத்தனர்.

    கீழ ரத வீதி, பெரிய ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக தேர் ஆனது, தென்றலாய் மெல்ல, மெல்ல ஆடி அசைந்து வலம் வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (வியாழக் கிழமை) காலை தெப்ப உற்சவம் நடக்கிறது. இரவு 7 மணி அளவில் மீண்டும் மின்னொளியில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் தெப்பத்திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான தெப்பத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சியையொட்டி கோவிலுக்குள் உள்ள உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சாமிக்கு சர்வ அலங்காரமும், விசேஷ பூஜையும் நடந்தது.

    இதனையடுத்து மேளதாளம் முழங்க தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி உற்சவர் சன்னதியில் இருந்து புறப்பட்டு கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு முருகப்பெருமானின் அருள் பார்வையில் தங்க முலாம் பூசப்பட்ட கம்பத்திற்கு புனித நீர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்பட பல்வேறு திரவியங்கள் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து பகல் 11.30 மணி அளவில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு திரளாக கூடியிருந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    திருவிழாவையொட்டி வருகிற 17-ந் தேதி வரை தினந்தோறும் வெவ்வேறு வாகனங்களில் சாமி எழுந்தருளி நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 16-ந் தேதி தை கார்த்திகை தேரோட்டமும், தெப்ப முட்டு தள்ளுதலும் நடக்கிறது. சிகர நிகழ்ச்சியாக 17-ந் தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது. அன்றைய தினம் திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி. ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் காலை தெப்ப மிதவையில் தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி அமர்ந்து 3 முறை வலம் வருதல் நடக்கிறது. மேலும் அன்று இரவு 7 மணி அளவில் மின்னொளியில் தெப்பத்திருவிழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. 
    திருப்பரங்குன்றத்தில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நடராஜர், சிவகாமி அம்பாள் பூச்சப்பரங்களில் அமர்ந்து கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.விழாவையொட்டி நடராஜருக்கும், சிவகாமி அம்பாளுக்குமாக சிறப்பு அபிஷேகமும், சர்வ அலங்காரமும், மகாதீப ஆராதனையும் நடைபெற்றது. நடராஜ பெருமாளுக்கு “களி” படைக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதமாக “களி” வழங்கப்பட்டது.

    பின்னர் பல்லக்கில் நடராஜரும், சிவகாமி அம்பாளும் அமர்ந்து மேள தாளங்கள் முழங்க மகா மண்டபத்தில் இருந்து புறப்பட்டு ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினர்.

    அங்கு சாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது. அவை கண்கொள்ளா காட் சியாக இருந்தது.இதனை தொடர்ந்து பூச்சப்பரங்களில் நடராஜரும் சிவகாமி அம்பாளும் தனித் தனியாக எழுந்தருளி கோவில் வாசல் முன்பு காட்சி தந்தனர். பின்னர் சன்னதிதெரு, கீழரதவீதி,பெரியரத வீதி வழியே கிரிவல பாதையில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலித்தனர்.
    திருப்பரங்குன்றம் மேம்பாலத்தில் இன்று காலை நடந்த விபத்தில் வேன்-பஸ் மோதியது. இதில் வேனில் வந்த அய்யப்ப பக்தர்கள் காயமடைந்தனர்.

    திருப்பரங்குன்றம்:

    கடலூரில் இருந்து 17 அய்யப்ப பக்தர்கள் வேன் மூலம் சபரிமலை சென்றனர். அங்கு தரிசனத்தை முடித்துக் கொண்டு இன்று காலை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு வந்தனர்.

    அதே போன்று ஆந்திர மாநிலத்தில் இருந்து பஸ்சில் வந்த பக்தர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனத்தை முடித்துக் கொண்டு திருப்பரங்குன்றம் கோவிலுக்குச் சென்றனர்.

    இன்று காலை 8.30 மணியளவில் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள மூலக்கரை மேம்பாலத்தில் எதிர்பாராத விதமாக பஸ்சும், வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் வேனின் முன்பகுதி நொறுங்கியது.

    இடிபாடுகளில் சிக்கிய அய்யப்ப பக்தர்கள் வலி தாங்க முடியாமல் அலறினர். வேன் டிரைவர் பால முருகனின் கால் முறிந்தது.

    இதே வேனில் வந்த செல்வம், தங்கதுரை, நடராஜன் ஆகிய 3 அய்யப்ப பக்தர்களும் காயமடைந்தனர். 4 பேரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    மேம்பாலத்தில் நடந்த இந்த விபத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து மதுரை கரிமேடு போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பரங்குன்றத்தில் நடந்து வரும் கார்த்திகை தீப திருவிழாவில் வருகிற 23-ந்தேதி மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 15-ந்தேதி கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழா தொடர்ந்து வருகிற 24-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் காலை தங்க சப்பர வாகனத்திலும், இரவில் தங்க மயில் வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருவிழாவின் 4-ம் நாளான நேற்று தெய்வானையுடன் முருகப்பெருமான் காலை தங்கச் சப்பரத்திலும், இரவில் சேஷ வாகனத்திலும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 22-ந்தேதி மாலை 6.45 மணி அளவில் கோவிலுக்குள் உள்ள ஆறு கால் மண்டபத்தில் முருகப் பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. மறுநாள் 23-ந்தேதி காலை தேரோட்டம் நடக்கிறது. இதில் பதினாறு கால் மண்டபத்தில் இருந்து கீழரத வீதி, பெரிய ரத வீதி, மேல ரத வீதிகளில் தேர் வலம் வருகிறது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 23-ந்தேதி மாலை 6 மணிக்கு கோவிலுக்குள் பால தீபம் ஏற்றப்படுகிறது. அதே நேரத்தில் கோவில் மணி ஓசை ஒலித்ததும் மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக வழக்கம் போல் 3 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட தாமிர கொப்பரை மெருகு ஏற்றி தயார் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர 350 லிட்டர் நெய், 150 மீட்டர் நீளமுள்ள கடா துணியில் தயாரிக்கப்பட்ட திரி, 5 கிலோ கற்பூரம் ஆகியவை தயார் நிலையில் உள்ளது. திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக 24-ந்தேதி தீர்த்த உற்சவம் நடக்கிறது.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக மகா தீபம் 23-ந்தேதி நடக்கிறது.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீப திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 24-ந்தேதி வரை 10 நாட்கள் இந்த திருவிழா நடைபெறுகிறது.

    கொடியேற்ற நிகழ்ச்சியையொட்டி நேற்று காலை முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் கோவில் கொடி மரத்தில் தீபாராதனை காட்டப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக வருகிற 22-ந் தேதி பட்டாபிஷேகமும், 23-ந்தேதி காலை தேரோட்டமும், மாலை மகா தீபமும் நடைபெறுகிறது. திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியாக 24-ந்தேதி தீர்த்தவாரி உற்சவமும் நடக்கிறது.

    இதேபோல் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் கார்த்திகை தீப உற்சவம் வருகிற 22-ந்தேதி மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் நடைபெற உள்ளது.
    திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை நடத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #HCMaduraiBench #Byelection #Thiruvarur #Thiruparankundram
    மதுரை:

    தமிழகத்தில் காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி மதுரையை சேர்ந்த ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது இடைத்தேர்தல் நடத்தாத தேர்தல் ஆணையம் மீது அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை நடத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பினர்.



    மேலும் தேர்தலுக்கான கால அட்டவணை இருக்கிறதா? என்று கேட்ட நீதிபதிகள், தேர்தல் நடவடிக்கை குறித்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்தனர். #HCMaduraiBench #Byelection #Thiruvarur #Thiruparankundram 
    திருப்பரங்குன்றம் மற்றும் சோலைமலையில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது.
    முருகப்பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றத்தில் கடந்த 8-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக நேற்று முன்தினம் ‘வேல் வாங்குதல்‘ நடைபெற்றது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று சூரசம்ஹாரம் நடந்தது. இதனையொட்டி கோவிலுக்குள் உள்ள ஒடுக்க மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    இதேபோல் போர் படை தளபதி வீரபாகு தேவருக்கும் அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 5.10 மணி அளவில் முருகப்பெருமான் தனது தாயார் கோவர்த்தனாம்பிகையிடம் இருந்து பெற்ற சக்திவேலை ஏந்தியபடி தனது வாகனமான தங்கமயில் வாகனத்தில் அமர்ந்து நகர் வீதியில் வலம் வந்தார். இதனையடுத்து வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளியபடி வீரபாகு தேவரும் வீதிஉலா வந்தார்.

    அப்போது அசுரனான சூரபத்மன் இருமாப்புடன் சன்னதி தெருவுக்கு வந்தார். இதற்கிடையே முருகப்பெருமானின் பிரதிநிதியான சிவாச்சாரியார் தன் கையில் வாள் ஏந்தியபடி வந்தார். முருகப்பெருமான் நகரின் நான்கு வீதிகளிலுமாக இருமாப்பு கொண்ட சூரபத்மனை ஓட, ஓட விரட்டினார். அதில் சூரபத்மன் யானை முகம், சிங்கமுகம், ஆட்டுத் தலை என்று மாறி, மாறி உருவெடுத்து கொக்கரித்தார்.

    இந்த நிலையிலும் முருகப் பெருமான் 4 திசையிலும் எட்டு திக்குமாக சூரபத்மனை துரத்தினார். இறுதியில் சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு மாலை 6.42 மணி அளவில் முருகப்பெருமான் சக்திவேலால் சூரபத்மனை வதம் செய்தார். அப்போது அங்கு குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா‘ என்று பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

    முருகனின் அறுபடை வீடுகளில் ஆறாம் வீடான சோலைமலை முருகன் கோவிலில் நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை காண கூடியிருந்த பக்தர்கள் கூட்டத்தின் மத்தியில் சூரனை வதம் செய்த முருகப்பெருமானை படத்தில் காணலாம். உள்படம்- மயில் வாகனத்தில் முருகப்பெருமான்.

    சூரசம்ஹாரத்தை தொடர்ந்து கோவிலுக்குள் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணியசாமி, தெய்வானைக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து பூச்சப்பரத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக இன்று(புதன்கிழமை) கிரிவலத்தில் சட்டத்தேர் பவனி நடக்கிறது.

    இதேபோன்று முருகப்பெருமானின் ஆறாம் படை வீடான பழமுதிர் சோலை என்றழைக்கப்படும் சோலைமலையில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று சூரசம்ஹாரம் நடந்தது. இதனையொட்டி காலையில் குதிரை வாகனத்தில் சாமி புறப்பாடு நடந்தது. மாலை 4.35 மணி அளவில் வெள்ளிமயில் வாகனத்தில் சுப்பிரமணியசாமி புறப்பாடாகி வேல் வாங்குதல் நடைபெற்றது. பின்னர் அதே வாகனத்தில் 5.40 மணி அளவில் முருகப்பெருமான் ஈசான திக்கில் கஜமுகாசூரனையும், அக்கினிதிக்கில் சிங்கமுகா சூரனையும் சம்ஹாரம் செய்து, தலவிருட்சமான நாவல் மரத்தடியில் பத்மாசூரனை சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து சஷ்டிமண்டபத்தில் சாமிக்கு சாந்த அபிஷேகம் நடந்தது. திருவிழாவில் இன்று(புதன்கிழமை) காலை திருக்கல்யாண உற்சவமும், மாலை ஊஞ்சல் சேவையும் நடைபெறும். முடிவில் மஞ்சள் நீர் உற்சவத்துடன் திருவிழா நிறைவுபெறும். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்தனர். 
    திருப்பரங்குன்றம் கோவிலில் முருகப்பெருமான் தனது தாயாரிடமிருந்து இன்று சக்திவேலை வாங்குகிறார்.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 8-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி சண்முகர் சன்னதியில் தெய்வானை, வள்ளி சமேத சண்முகப் பெருமானுக்கு தினமும் 2 வேளை தலா 2 மணிநேரம் சண்முகார்ச்சனை நடைபெறுவது தனி சிறப்பு. சண்முகருக்கு (ஆறுமுகத்திற்கும்) 6 வகை சாத படையல் படைத்து சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. நேற்று மயில் சேவையாக வள்ளி, தெய்வானையுடன் சண்முகப் பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (திங்கட்கிழமை) கோவிலில் உள்ள ஆலய பணியாளர்கள் திருக்கண்ணில் இரவு 7 மணிக்கு வேல் வாங்குதல், நடக்கிறது. இதில் சூரனை வதம் செய்வதற்காக முருகப்பெருமான் தனது தாயாரான கோவர்த்தனாம்பிகையிடம் இருந்து சக்திவேல் வாங்கு கிறார்.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (செவ்வாய்க்கிழமை) சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு மாலை 6 மணிக்கு சூரசம்ஹார லீலை நடக்கிறது. இதையொட்டி அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிகிறார்கள்.

    திருவிழாவின் முத்தாய்ப்பாக நாளை மறுநாள் காலை 8 மணிக்கு சட்டத் தேர் பவனி நடக்கிறது. இதில் தெய்வானையுடன் முருகப் பெருமான் சட்டத் தேரில் எழுந்தருளுகிறார். காப்பு கட்டி விரதமிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சட்டத் தேரை வடம் பிடித்து இழுத்து கிரிவலம் வந்து சாமிதரிசனம் செய்கிறார்கள்.

    திருப்பரங்குன்றம் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு தினத்தில் முருகப்பெருமானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்படும். இதே போல கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவு நாளில் மாலை 4 மணிக்கு மேல் இரவு 9 மணி வரை முருகப் பெருமானுக்கு தங்க கவசம் சாற்றப்படும். ஆகவே ஆண்டிற்கு 2 முறை கருவறையில் முருகப்பெருமானுக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்டு வருகிறது. இதேபோல இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவு நாளான வருகிற 14-ந் தேதி மாலை 4 மணிக்கு முருகப்பெருமானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்படுகிறது. மேலும் கோவிலின் கருவறையில் கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், பவளக்கனிவாய் பெருமாள், சத்தியகிரீஸ்வரருக்கு வெள்ளிக்கவசம் சாற்றப்படுகிறது.

    முருகப் பெருமான் சூரனை வதம் செய்த உக்ரத்தில் (கோபம்) இருந்து தணிவதற்காக 100 படி அரிசியில் சாதம் படைத்து அதில் சுமார் 15 லிட்டர் தயிர் கலந்து படைக்கப்படுகிறது. இதை பாவாடை தரிசனம் என்று அழைக்கிறார்கள். இத்தகைய நிகழ்ச்சி ஆண்டிற்கு ஒரு முறை கந்தசஷ்டி திருவிழாவின் நிறைவு நாளில் மாலை 4 மணிக்கு நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.
    திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் திருக்கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் கந்த சஷ்டி திருவிழாவும் ஒன்று. இந்த திருவிழா ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தில் 7 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான கந்த சஷ்டி திருவிழா நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    இதையொட்டி காலை 9.30 மணிக்கு உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணியசாமிக்கு காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து சண்முகர் சன்னதியில் தெய்வானை, வள்ளி சமேத சண்முகருக்கும் காப்பு கட்டப்பட்டது. இதனையடுத்து முருகப் பெருமானின் பிரதிநிதியாக கோவில் முதல் ஸ்தானிகர் வசந்த் பட்டர் தனது கரத்தில் காப்பு கட்டி விரதம் தொடங்கினார்.

    பின்னர் கம்பத்தடி மண்டபத்தில் சிவாச்சாரியார்கள் சுவாமிநாதன், ரமேஷ், சொக்கு சுப்பிரமணியன், செல்லப்பா ஆகிய பட்டர்கள் பக்தர்களுக்கு காப்பு கட்டினர். காப்பு கட்டிக் கொண்ட பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு ஏற்ப மிளகு, துளசி, பால் மற்றும் ஒரு வேளை சாப்பாடு ஆகிய விரதங்களை கடைபிடித்தனர்.

    திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக வருகின்ற 12-ந் தேதி இரவு 7 மணிக்கு கோவிலுக்குள் ஆலய பணியாளர் திருக்கண்ணில் வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக முருகப்பெருமானின் தாயாரான கோவர்த்தனாம்பிகையிடமிருந்து சக்திவேலை பெற்று கம்பத்தடி மண்டபத்தில் உள்ள மகாநந்தியை வலம் வந்து, சத்தியகிரீஸ்வரர் முன்னிலையில் முருகப் பெருமானின் திருக்கரத்தில் வேல் சமர்ப்பிக்கப்படுகிறது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 13-ந் தேதி மாலை 6 மணிக்கு சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு சூரசம்ஹாரம் நடக்கிறது. திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக 14-ந் தேதி காலை கிரிவல பாதையில் சட்டத் தேரோட்டமும், மாலையில் கருவறையில் முருகப் பெருமானுக்கு தங்க கவசம் அணிவித்தலும் நடக்கிறது. மேலும் சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கற்பகவிநாயகர், துர்க்கை அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு வெள்ளி கவசம் சாத்துப்படி செய்யப்படுகிறது. மேலும் கருவறையில் பாவாடை தரிசனம் நடக்கிறது.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலை பொறுத்தவரை தினமும் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு நடை சாற்றப்படும். பின்னர் மாலை 4.30 மணிக்கு மீண்டும் நடைதிறக்கப்பட்டு இரவு 9.30 மணிக்கு நடை சாற்றப்படுகிறது. இந்த நடைமுறை திருவிழாக்காலங்களிலும் தொடருகிறது. இதில் கந்தசஷ்டி திருவிழாவில் மட்டும் ஆண்டு தோறும் 6 நாட்கள் திருவாட்சி மண்டபம் மற்றும் வெளி பிரகாரம் மற்றும் கோவிலின் பிரதான முன்வாசல் திறந்தே இருக்கும். காரணம் சஷ்டி விரதமிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலிலே தங்கி இருப்பதால் தான் என்பது குறிப்பிடத்தக்கது

    கந்தசஷ்டி திருவிழாவையொட்டி கோவிலுக்குள் உள்ள விசாக கொறடு மண்டபத்தில் 6 நாட்கள் தொடர்ந்து தினமும் காலையில் யாகசாலை பூஜை நடக்கிறது. இதில் பூஜை செய்யப்பட்ட எந்திர தகட்டை பக்தர்கள் தங்கள் வீடுகளில் உள்ள பூஜை அறையில் வைத்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்று கூறி சூரசம்ஹாரம் நாளில் ஒலிபெருக்கி மூலம் கோவில் நிர்வாகம் ஊழியர் கள் பக்தர்களுக்கு அறிவிப்பு செய்வார்கள். யாகசாலையில் பூஜிக்கப்பட்ட எந்திர தகடு மகிமை என்பதால் அதை பக்தர்கள் போட்டி போட்டு வாங்கி செல்லுவார்கள்.

    கந்த சஷ்டியையொட்டி சண்முகர் சன்னதியில் தினமும் காலை 11 மணிக்கும், மாலை 5 மணிக்கும் வள்ளி, தெய்வானை சமேத சண்முகருக்கு 6 நாட்களும் தலா 4 மணிநேரம் சண்முகார்ச்சனை நடக்கும். இதை விரதமிருக்கும் பக்தர்கள் அனைவரும் ஒரே இடத்தில் நின்று தரிசனம் செய்ய கோவிலுக்குள் 7 இடங்களில் பிரமாண்ட டி.வி.யில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இது தவிர தெய்வம், கந்தன் கருணை, வருவான் வடிவேலன், திருவிளையாடால் உள்ளிட்ட பக்தி சினிமா படங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
    திருப்பரங்குன்றம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 5-ம் வகுப்பு மாணவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Denguefever

    மதுரை:

    மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த மங்கம்மாள் சாலையைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவருடைய மகள் ஐஸ்வர்யா (வயது 11). அந்தப்பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

    சில நாட்களாக ஐஸ்வர்யா காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். எனவே அண்ணாநகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் காய்ச்சல் குணமாகவில்லை.

    ஐஸ்வர்யாவின் ரத்த மாதிரியை பரிசோதித்ததில் அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

    டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த ஐஸ்வர்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே பன்றி காய்ச்சலுக்கு 4 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 2 பேரும் இறந்துள்ளனர்.

    தற்போது மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 பேரும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 பேரும், நிமோனியா மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 161 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு தனி வார்டுகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #Denguefever

    திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார். #ADMK #OPanneerSelvam
    திருப்போரூர்:

    திருப்போரூர் முருகன் கோவிலில் இன்று காலை அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரது இல்லத் திருமண விழா நடந்தது. இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம். பொறுத்திருந்து பாருங்கள்.

    திருச்சி முக்கொம்பு அணையில் பொதுப்பணித்துறையின் பராமரிப்பு நன்றாக இருந்தது. அணை உடைந்தது குறித்து ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் சென்றுள்ளார். அவர் ஆய்வு செய்து விளக்கம் அளிப்பார்.

    அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் அ.தி.மு.க.வை வலுப்படுத்த முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் கோவிலில் இருந்து காரில் புறப்பட்டார். கண்ணகப்பட்டு சென்றபோது கட்சி பிரமுகர் ஒருவரது டீக்கடைக்கு சென்றார். அங்கு அமர்ந்து டீ குடித்தார். அப்போது டீ நன்றாக உள்ளதாக பாராட்டினார்.

    உடன் எம்.பி.க்கள் மைத்ரேயன், மரகதம் குமரவேல், மாவட்ட செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் குமரவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.

    முன்னதாக திருப்போரூர் வந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு கண்ணகப்பட்டு மற்றும் கோவில் குளம் அருகே மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. #ADMK #OPanneerSelvam
    ×