search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயிரிழப்பு"

    ஜிம்பாப்வே நாட்டின் மிட்லான்ட்ஸ் மாகாணத்தில் நிகழ்ந்த பஸ் விபத்தில் சிக்கிய 42 பேர் உயிரிழந்தனர். #42killedinbusaccident #Zimbabwebusaccident
    ஹராரே:

    ஜிம்பாப்வே நாட்டின் மிட்லான்ட்ஸ் மாகாணத்திற்குட்பட்ட ஸ்விஷாவானே பகுதியில் இருந்து தென்னாப்பிரிக்காவில் உள்ள முசினா என்ற பகுதியை நோக்கி சுமார் 70 பேர் ஒரு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.

    புலாவயோ- பெய்ட்பிரிட்ஜ் சாலை வழியாக நேற்றிரவு சென்றபோது அந்த பேருந்து திடீரென்று தீபிடித்து எரிய துவங்கியது. ஓடும் பஸ்சில் ஏற்பட்ட இந்த விபத்தில் சிக்கிய  42 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.


    இதே மாகாணத்தில் உள்ள ருசாப்பே என்னுமிடத்தில் கடந்த வாரம் இரு பேருந்துகள் மோதிகொண்ட விபத்தில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #42killedinbusaccident #Zimbabwebusaccident
    கஜா புயல் காரணமாக மழை சார்ந்த பல்வேறு விபத்துகளில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். #GajaCyclone #Gajastorm #GajaCycloneAlert
    தஞ்சாவூர்:

    கஜா புயல் நாகப்பட்டிணம் மாவட்டம் அதிராம்பட்டிணத்தை 111 கி.மீ வேகத்தில் தாக்கி, தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் தனது ஆட்டத்தை தொடர்ந்து வருகிறது. புயல் காரணமாக உள்மாவட்டங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. 

    நாகப்பட்டிணம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கஜா புயல் தாக்கியதில் பல இடங்களில் மரங்கள் வேரோடு முறிந்துவிழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மழை சார்ந்த விபத்துகளில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் மின்வயர் அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கியதில் ஆனந்தன் (40) என்பவர் உயிரிழந்தார்.

    விருத்தாச்சலம் அருகே தொடர் மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் அய்யம்மாள் (45) என்பர் உயிரிந்தார். அய்யம்மாளின் கணவர் ராமச்சந்திரன் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சிவகொல்லையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ரமேஷ், சதீஷ், அய்யாதுரை, தினேஷ் உள்ளிட்ட 4 பேர் பலியாகினர்.



    அதிராம்பட்டிணத்தில் வீடு இடிந்து 3 வயது பெண் குழந்தையும், திருவண்ணாமலை நகராட்சி செய்யாறு அருகே பிரியாமணி என்ற சிறுமியும், சிவகங்கையில் வீடு இடிந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

    கஜா புயல் காரணமாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகப்பட்டிணம், கடலூர் மாவட்டங்களில் புயல் தாக்கிய பகுதிகளை சேர்ந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #GajaCyclone #Gajastorm #GajaCycloneAlert

    மும்பையில் ரெயில் தண்டவாளங்களை கடந்தபோதும், கவனக்குறைவாக பயணித்தபோதும் ரெயில்களில் அடிபட்டு ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்தனர். #RailTracksDeaths #RailwayPolice #Mumbai
    மும்பை:

    ரெயில்வே கிராசிங்கை கடக்கும்போது கவனமாக கடந்து செல்ல வேண்டும், ரெயில் நிலையங்களில் தண்டவாளத்தை கடக்கக்கூடாது என தொடர்ந்து அறிவுறுத்தியபோதிலும் பயணிகளின் கவனக்குறைவால் உயிர்ப்பலி அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை அதிகம் உள்ள மும்பை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் காயமடைந்துள்ளனர்.

    தண்டவாளத்தை கடந்தபோதும், அதிக கூட்ட நெரிசலின்போது ரெயிலில் இருந்து தவறி விழுந்தும், தற்கொலை செய்தும் உயிரிழந்துள்ளனர்.



    தானே மாவட்டம் மற்றும் கல்யாண் நகரில் தலா 3 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பை வடாலா பகுதியில் 2 பேரும், குர்லா, மத்திய மும்பை, பாந்த்ரா, டோம்பிவிலி பகுதியில் தலா ஒருவரும் ரெயிலில் அடிபட்டு இறந்துள்ளதாக அரசு ரெயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது.

    கடந்த ஆண்டு மும்பை மற்றும் புறநகர்ப் பகுதியில் மொத்தம் 3014 பேர் ரெயில்களில் அடிபட்டு இறந்ததாக, தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுவிற்கு ரெயில்வே காவல்துறை பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது. #RailTracksDeaths #RailwayPolice #Mumbai
    காசா எல்லையில் இருந்து இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதேபோல் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 8 பேர் பலியாகினர். #PalestianianRocketFire #Isreal
    ஜெருசலேம்:

    இஸ்ரேல் நாட்டுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் உள்ள காசா எல்லையில் ஆதிக்கம் செலுத்திவரும் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர். அவ்வப்போது இஸ்ரேல் பகுதிக்குள் ஏவுகணைகளை வீசி அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதேபோல் இஸ்ரேல் படைகளும் அவர்களுக்கு எதிராக தொடந்து ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாலஸ்தீனர்கள் வசிக்கும் பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்படுகிறது.

    இந்நிலையில், காசா எல்லையில் இருந்து போராளிகள் இஸ்ரேல் பகுதிக்குள் நேற்று மாலை முதல் ராக்கெட்டுகளை வீசி உக்கிரமான தாக்குதல் நடத்தினர். 300க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் வீசப்பட்டதாகவும், இதையடுத்து இஸ்ரேல் சிறப்பு படைகள் போர் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.



    போராளிகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் இஸ்ரேலின் தெற்கு பகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்தார். ஒரு பெண் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்த தாக்குதல்களைத் தொடர்ந்து காசா எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. #PalestianianRocketFire #Isreal
    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே பாலியல் வன்கொடுமை முயற்சியின்போது பலத்த காயமடைந்த பிளஸ்டூ மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். #DharmapuriGirlStudent #GirlMolested
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கடந்த இரு தினங்களுக்கு முன் இரவு, பிளஸ்டூ மாணவி ஒருவர் தனியாக சென்றுள்ளார். அப்போது அவரை சில நபர்கள் பின்தொடர்ந்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அவர்களின் பிடியில் இருந்து தப்பிக்கப் போராடிய மாணவியை கடுமையாக தாக்கி துன்புறுத்தி உள்ளனர். அதன்பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.



    பலத்த காயமடைந்த மாணவி தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். பாலியல் வன்கொடுமை முயற்சியில் பாதிக்கப்பட்ட மாணவி உயிரிழந்தது, தருமபுரி பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சதீஷ், ரமேஷ் ஆகிய இருவரை தேடி வருகின்றனர். #DharmapuriGirlStudent #GirlMolested
    தமிழகத்தில் இந்த வருடம் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 5 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். #DengueFever #SwineFlu #DengueDeaths #TNHealthSecretary
    சென்னை:

    டெங்கு காய்ச்சலுக்கு இரட்டை குழந்தை பலியானதை அறிந்ததும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்றார்.

    அங்கு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெங்குவை பரப்பும் கொசுக்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் சுகாதாரத்துறை ஊழியர்கள் உள்ளாட்சி துறை ஊழியர்கள் இணைந்து இந்த பணியினை மேற்கொண்டு வருகிறார்கள்.

    பொது மக்களும் இணைந்து செயல்பட்டால் தான் கொசுக்களை ஒழிக்க முடியும். டெங்குவினால் உயிர் இழப்பு என்பது ஒரு சதவீதம் என்று கூறலாம். உடலில் தட்டணுக்கள் குறைந்து ரத்தம் வெளியேறும் ஆபத்தான கடைசி நேரத்தில் மட்டுமே உயிர் இழப்பு நேரிடும்.

    அந்த ஒரு சதவீதமும் டெங்கு பாதிப்பு மட்டுமல்லாமல் வேறு நோய்களிலும் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு தாமதமாக வருவதால் உயிர் இழப்பு ஏற்படுகிறது. காய்ச்சல் வந்தால் அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

    அரசு மற்றும் மாநகராட்சி மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க தேவையான மருந்து, மாத்திரைகள், தடுப்பூசி போன்றவை போதுமானதாக உள்ளன. டெங்குவை கண்டுபிடிக்க கூடிய ‘எலிசா’ பரிசோதனையும் அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ளது. காலி இடங்களில் மழைநீர் தேங்காமல் மக்கள் பார்த்து கொள்ள வேண்டும்.


    குடிநீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும். மழை நீர் தேங்கக் கூடிய வீடு-கடைகளில் அவற்றை அப்புறப்படுத்த மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    கொசு உற்பத்தியாகக் கூடிய இடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்படுகிறது. ஒன்றரை லட்சம் தடுப்பூசிகள் தயாராக இருக்கின்றன. பொது மக்கள் பீதி அடைய வேண்டாம். காய்ச்சல் வந்த உடனே ஆஸ்பத்திரிக்கு வந்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. அலட்சியமாக இருக்க வேண்டாம்.

    பன்றிக் காய்ச்சல் சங்கரன் கோவில், மதுரை, கோவை, சென்னை போன்ற இடங்களில் பரவி வருகிறது. கிருமி பரவாமல் தடுக்க அடிக்கடி கை கழுவ வேண்டும். பன்றி காய்ச்சல் ஆஸ்துமா, நீரிழிவு நோய் பாதிப்பு உடையவர்கள், கர்ப்பிணிகளை எளிதாக தாக்க கூடியது. சுகாதாரத் துறை தீவிரமாக கண் காணித்து அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

    டெங்கு காய்ச்சலை பொறுத்தவரை கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது. 2012-ம் ஆண்டு அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு 22 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். இந்த வருடம் 2 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளது.

    பன்றிக் காய்ச்சலால் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலுக்கு நாள் ஒன்றுக்கு 25 முதல் 50 பேர் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது.

    இந்த ஆண்டு இதுவரையில் 5 பேர் டெங்கு காய்ச்சலிலும், 11 பேர் பன்றி காய்ச்சலிலும் உயிர் இழந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #DengueFever #SwineFlu #DengueDeaths #TNHealthSecretary
    ராம்லீலா நாடகத்தில் ராவணனாக நடித்த வாலிபர் ஒருவரும், பஞ்சாப் ரெயில் விபத்தில் உயிரிழந்தார். அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்கும்படி தாய் கேட்டுக்கொண்டுள்ளார். #AmritsarTrainAccident #Dussehra #Ravana
    அமிர்தசரஸ்:

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜோதா பதக் என்ற இடத்தில் நேற்று இரவு தசரா கொண்டாட்டத்தின்போது ராவணனின் ராட்சத உருவ பொம்மை தீயிட்டு எரிக்கப்பட்டது. அதைக் காண்பதற்காக, சுமார் 600 பேர் திரண்டிருந்தனர். சிலர் இடப்பற்றாக்குறையால் அருகில் உள்ள தண்டவாளத்திலும், தண்டவாளத்தின் அருகிலும் நின்றுகொண்டிருந்தனர்.

    அப்போது, அந்த வழியாக வந்த ஜலந்தர் எக்ஸ்பிரஸ் ரெயில் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில், 61 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமானோர் காயமடைந்தனர். பலரது கைகால்கள் உடைந்தும், தலையில் பலத்த அடிபட்டும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தசரா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற ராம்லீலா நாடகத்தில் ராவணனாக நடித்த தல்பீர் சிங் என்ற வாலிபரும் ரெயில் விபத்தில் இறந்துள்ளார். அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 8 மாத கைக்குழந்தை உள்ளது. தல்பீல் சிங் இறந்ததையடுத்து அவரது மனைவி மற்றும் தாய் இருவரும் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.



    மகன் தல்பீர் சிங் இறந்துவிட்டதால், நிர்கதியாக நிற்கும் மருமகளுக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என தாய் வேண்டுகோள் விடுத்துள்ளார். #AmritsarTrainAccident #Dussehra #Ravana




    சென்னை எம்.கே.பி.நகர் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வந்த பிரபல ரவுடி உயிரிழந்ததையடுத்து, அவரது உறவினர்கள் போலீசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். #RowdyDeath
    பெரம்பூர்:

    சென்னை வியாசர்பாடி, பி.வி. காலனி 2-வது தெருவைச் சேர்ந்த அசாம் பாண்டியன் என்பவரது மகன் கார்த்திக் (வயது 28). பிரபல ரவுடியான இவர் மீது எம்.கே.பி.நகர், வியாசர்பாடி ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளதாக தெரிகிறது.

    மேலும் இவர் வியாசர்பாடி பி.வி. காலனியை சேர்ந்த சாலமோன் என்பவரை ஒரு ஆண்டுக்கு முன்பு சோழவரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஆட்டந்தங்கள் கிராமத்தில் கொலை செய்த வழக்கிலும் முக்கிய குற்றவாளி ஆவார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு எம்.கே.பி.நகர் பகுதியில் கார்த்திக் மற்றும் அவரது கூட்டாளி அருண்பாண்டியன் ஆகியோர் கத்தியுடன் சுற்றித்திரிந்ததாக ரோந்து பணியில் இருந்த போலீசார் பிடித்தனர். இருவரையும் கத்தியுடன் எம்.கே.பி.நகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    அவர்கள் குடிபோதையில் இருந்ததால் போலீஸ் நிலையத்தில் நேற்று மதியம் அவர்களிடம் விசாரணை நடத்தியதாக தெரிகிறது. அப்போது கார்த்திக் மயங்கி விழுந்ததாகவும், அவரை அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    இதனால் போலீசார் கார்த்திக் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீஸ் விசாரணையின்போது கார்த்திக் இறந்தது குறித்து அவரது உறவினர்களுக்கு நேற்று இரவு 8 மணிக்கு பின்னரே தெரியவந்தது. இதனால் அவர்கள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆனால் போலீஸ் நிலையத்தில் உரிய அதிகாரிகள் யாரும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்த அவர்கள் சிறிது நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு அம்பேத்கர் கல்லூரி சிக்னல் அருகில் சாலை மறியல் செய்வதற்காக திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்து போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    எம்.கே.பி.நகர் போலீஸ் நிலையம், மரணம் அடைந்த கார்த்திக் வீடு ஆகிய பகுதிகளில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.

    விசாரணை கைதி மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தண்டையார்பேட்டை ஆர்.டி.ஓ. ராஜேந்திரன் விசாரணைக்கு பரிந்துரை செய்தனர்.

    போலீஸ் நிலையத்தில் விசாரணையின்போது கைதி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #RowdyDeath
    நைஜீரியாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில், ஐநா பொதுச்செயலாளர் கவலை தெரிவித்துள்ளார். #NigeriaFloods #UnitedNations #Guterres
    நியூயார்க்:

    நைஜீரியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் கனமழை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. பல்வேறு ஆறுகளின் கரைகளில்  உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்தது.

    மழையினால் ஏற்பட்ட  பெருவெள்ளம் மற்றும் ஆறுகளில் ஏற்பட்ட உடைப்பினால் சாலைகள், பாலங்கள் என உள்கட்டமைப்பு கடுமையாக சேதமடைந்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். 5.6 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 1.5 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் மூழ்கி பயிர்கள் அழுகி உள்ளன. வெள்ளத்தில் சிக்கி 200 பேர் உயிரிழந்துள்னர். 1310 பேர் காயமடைந்துள்ளனர். கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள் தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நைஜீரியாவில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் குறித்து ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.



    மழை வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் கூறினார். மேலும் இந்த கடினமான நேரத்தில் நைஜீரியாவுக்கு ஐநா உறுதுணையாக இருப்பதுடன், தேவையான ஆதரவை வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

    ஐநா சார்பில் உணவு விநியோகம், அவசரகால மருத்துவ உதவி மற்றும் காலரா, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு சுகாதார பெட்டகங்கள் விநியோகம் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஐநா அலுவலகம் தெரிவித்துள்ளது. #NigeriaFloods #UnitedNations #Guterres 
    கொடுங்கையூரில் கர்ப்பிணி பெண் மயங்கி விழுந்து திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆர்.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ராயபுரம்:

    கொடுங்கையூரை சேர்ந்தவர் பார்த்திபன். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சோனியா. இவர்களுக்கு திருமணமாகி 8 மாதமாகிறது. சோனியா 2 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை சோனியாவை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு பார்த்திபன் கொடுங்கையூர், அம்பேத்கார் நகரில் உள்ள உறவினர் வீட்டில் விட்டுச்சென்றார். சோனியா உறவினர் வீட்டுக்கு நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆர்.கே.நகர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    பாலஸ்தீனத்தில் காசா எல்லையில் நடந்த போராட்டத்தின்போது இஸ்ரேல் துப்பாக்கிச்சூட்டில் குண்டுபாய்ந்து பாலஸ்தீனியர் ஒருவர் உயிரிழந்தார். #Palestinain #Israel #Gaza
    காசா:

    இஸ்ரேல் 1948-ம் ஆண்டு உருவானது. அப்போது நடந்த மோதல்களில் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வெளியேற்றப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக சென்றனர். அப்போது இடம் பெயர்ந்த சுமார் 7 லட்சம் பேர், திரும்பி வர அனுமதிக்கப்பட வேண்டும் என்பது பாலஸ்தீனியர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது.இந்த கோரிக்கையை வலியுறுத்தியும், இஸ்ரேல் படையினரின் அத்துமீறல்களை எதிர்த்தும் அவ்வப்போது பாலஸ்தீனியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    அந்த வகையில், பாலஸ்தீனத்தில் இஸ்ரேல், காசா எல்லையில் நேற்று முன்தினம் பெரிய அளவில் ஒரு போராட்டம் நடந்தது. இஸ்ரேலுக்கு எதிரான இந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அப்போது வன்முறை மூண்டது. டயர்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. கற்களும், வெடிப்பொருட்களும் வீசப்பட்டன. இஸ்ரேல் படையினர் எதிர் தாக்குதல் நடத்தினர். துப்பாக்கிச்சூடும் நடத்தினர். இதில் குண்டுபாய்ந்து பாலஸ்தீனியர் ஒருவர் உயிரிழந்தார். டஜன் கணக்கிலான பாலஸ்தீனியர்கள் படுகாயம் அடைந்தனர்.

    இதுபற்றி காசா அதிகாரிகள் கூறும்போது, “வன்முறை மூண்டதில் 90 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 10 பேர் துப்பாக்கிச்சூட்டில் சிக்கியவர்கள்” என்று குறிப்பிட்டனர். பாலஸ்தீனத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஹமாஸ் இயக்கத்தினர்தான் வன்முறையை தூண்டி விட்டதாக இஸ்ரேல் கூறுகிறது. #Palestinain #Israel #Gaza
    தாராபுரம் அமராவதி ஆற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலியானார்.
    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம், உப்புத்துறைப்பாளையத்தை சேர்ந்தவர் இருதயராஜ். மரக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மகன் நவீன்ராஜ் (வயது 19). கோவை அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இவருடைய நண்பரான பிரகாஷ் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பின்னர் அவர் வீட்டில் ஓய்வெடுத்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் பிரகாசின் உடல் நலம் விசாரிக்க அவருடைய வீட்டிற்கு நேற்று நவீன்ராஜ் மற்றும் அவரது நண்பர்களான சபரீஸ்வரன் (19), பிரகாஷ் (19), கோகுல்நாத் (19) அருண்பாண்டியன் (19) வடுகபாளையத்தை சேர்ந்த மனோஜ் (20), புதுநவக்கொம்பைச் சேர்ந்த கிறிஸ்டோபர் (19), மோகன் (19) ஆகியோர் சென்றனர்.

    அங்கு அவரை பார்த்து விட்டு மதியம் 2 மணிக்கு அனைவரும் அமராவதி ஆற்றுக்கு குளிக்க சென்றனர். அதன்படி நகராட்சி தலைமை நீரேற்று நிலையம் பகுதியில் உள்ள தடுப்பணையில் இறங்கி அனைவரும் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக நவீன்ராஜ் தண்ணீரில் மூழ்கி னார். உடனே காப்பாற்றுங் கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சல் போட்டார்.உடனே அவருடைய நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி நவீன்ராஜ் இறந்தார். உடனே அருகில் இருந்தவர்களின் உதவியோடு அவரை தேடியபோது, அவருடைய உடல் அந்த பகுதியில் மிதந்தது. இது குறித்து தாராபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று நவீன்ராஜ் உடலைமீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    ×