search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயிரிழப்பு"

    கோவை நரசிபுரத்தில் தனியார் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #CoimbatoreStudent #Logeshwari
    கோவை:

    கோவையில் தனியார் கலை அறிவியல் கல்லூரி இயங்கிவருகிறது. இந்நிலையில், அந்தக் கல்லூரியின் நாட்டுநலப் பணித்திட்டம் சார்பாக, பேரிடர் மேலாண்மைப் பயிற்சி நடைபெற்றிருக்கிறது.  அந்த கல்லூரியில் பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு பயின்றுவந்த  லோகேஸ்வரி  என்ற மாணவி, கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது 2-வது மாடியில் இருந்து பாதுகாப்பு கயிறு கட்டாமல் பயிற்சியாளர் தள்ளியதில் மாணவி லோகேஸ்வரி உயிரிழந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    மாணவியை பிடிப்பதற்காக மாணவர்கள் வலையுடன் இருந்தபோது சன்ஷேடில் அடிபட்டு உயிரிழந்துவிட்டார். மாணவி குதிப்பதற்கு முன்னதாக பயிற்சியாளர் அவரை கீழே தள்ளும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. மாணவி எதிர்பாராத விதமாக சன்ஷேடில் மோதி கீழே விழுந்தார். அவருடைய தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  ஆனால் செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது. இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  #CoimbatoreStudent #Logeshwari #tamilnews
     
    கோவை ஜெயிலில் ஆயுள் தண்டனை கைதி திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சின்னக்காளை(வயது 47).

    இவர் கடந்த 2006-ம் ஆண்டு அப்பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் நாமகிரிபேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சின்னக்காளைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    நேற்று இரவு ஜெயில் அறையில் சின்னக்காளைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் அலறித் துடித்தார்.

    சத்தம் கேட்டு அங்கு சென்ற ஜெயில் ஊழியர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் இறந்தார்.

    இதுகுறித்து ஜெயில்சூப்பிரண்டு செந்தில்குமார் ரேஸ் கோர்ஸ் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரில் தலிபான் பயங்கரவாதிகளின் வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 15 பேர் பலியாகியுள்ளனர். #Afghanistan #Talibanattack
    காபூல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் அந்நாட்டின் அரசுக்கும், தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் பல ஆண்டுகளாக போர் நடந்துவருகிறது. இதுவரை ஏராளமான பொதுமக்களும், பாதுகாப்பு படை வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.

    மேலும், ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளையும் தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றி போட்டி அரசு ஒன்றை நடத்தி வருகின்றனர். இதையடுத்து இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடு என்பதால் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு 5 நாள் தற்காலிக போர் நிறுத்தத்துக்கு அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி அழைப்பு விடுத்திருந்தார்.

    அவரது அழைப்பை ஏற்ற தலிபான் அமைப்பு 3 நாள் போர் நிறுத்தத்துக்கு சம்மதிப்பதாக ஒப்புக்கொண்டு இருந்தது. ஆனால் தலிபான் ஒப்புக்கொண்ட 3 நாள் போர் நிறுத்தம் என்று துவங்கும் என்பது குறித்த அறிவிப்பை தலிபான் அமைப்பு வெளியிடவில்லை.

    இந்நிலையில், இன்று ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் பகுதியில் உள்ள கல்வித்துறை கட்டிடம் அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். மேலும், குண்டூஷ் மாகாணத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 15 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர்.

    பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பாதுகாப்பு படை வீரர்களும் எதிர்தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் சில பகுதிகளிலும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருவதால் தலிபான் பயங்கரவாதிகளின் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. #Afghanistan #Talibanattack
    உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆக்ரா - லக்னோ இடையேயான அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து மோதியதில் சுற்றுலா சென்ற 6 மாணவர்களும், ஆசிரியர் ஒருவர் என 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். #accident
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆக்ராவுக்கும் லக்னோவுக்கும் இடையே அதிவேக நெடுஞ்சாலை அமைந்துள்ளது. சமீப காலங்களில் இந்த சாலைகளில் அதிக அளவிலான விபத்துக்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், சாந்த் கபீர் நகர் பகுதியில் இருந்து கல்லூரி மாணவர்கள் இரண்டு பேருந்துகளின் மூலம் ஹரித்வார் நோக்கி சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். அப்போது, ஆக்ரா - லக்னோ இடையேயான அதிவேக நெடுஞ்சாலையில் ஒரு பேருந்து எரிபொருள் இன்றி நின்று போனது.

    இதனால் பேருந்தில் இருந்த மாணவர்கள், மற்றொரு பேருந்தில் இருந்து சிறிது எரிபொருள் எடுத்து அதன் மூலம் பெட்ரோல் பங்க் வரை செல்ல திட்டமிட்டு, பேருந்தை விட்டு கீழே இறங்கினர்.

    அப்போது அந்த வழியே அதிவேகமாக வந்த பேருந்து, மாணவர்கள் மீது மோதியது. இந்த கோர விபத்தில் 6 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 3 மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து, சிகிச்சை பலனளிக்காமல் ஆசிரியரும் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், மாணவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் தப்பிச்சென்ற பேருந்தையும், ஓட்டுநரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    புனித தலத்துக்கு கல்லூரியில் இருந்து சுற்றுலா சென்ற ஆசிரியர் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் மாணவர்களின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்த உ.பி. முதல்மந்திரி யோகி ஆதித்யநாத்,  உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாயும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரண நிதியாக அறிவித்துள்ளார்.  #accident
    கோவா மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சந்தாராம் நாயக் மாரடைப்பால் இன்று காலை மரணமடைந்தார்.
    பனாஜி:

    கோவா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தவர் சந்தாராம் நாயக். ராகுல் காந்தி அரசியலில் இளைஞர்களுக்கு மூத்தவர்கள் வழிவிட வேண்டும் என கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், இவர் தனது மாநிலத் தலைவர் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார்.

    இந்நிலையில்,  இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டதால் மார்கோவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட சந்தாராம் நாயக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக, கோவா மாநில மகளிர் காங்கிரஸ் தலைவர் பிரடிமா கவுண்டிகோ தெரிவித்துள்ளார்.

    72 வயதான இவர் ஒரு முறை மக்களவை உறுப்பினராகவும், 2 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சிஆர்பிஎப் கமாண்டோ மற்றும் போலீஸ்காரர் உயிரிழந்தனர். #JharkhandEncounter
    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்கு தீவிர நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது. மாவோயிஸ்டுகள் பதுங்கியிருக்கும் பகுதிகளில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இவ்வாறு தேடுதல் வேட்டையின்போது மாவோயிஸ்டுகள் தரப்பில் மட்டுமின்றி, காவல்துறை தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

    இந்நிலையில், சராய்கேலா-கர்சவான் மாவட்டம் தல்பாகா அர்கி பகுதியில் மாவோயிஸ்டுகள் சிலர் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியை இன்று காலையில் சிஆர்பிஎப் படையின் கோப்ரா கமாண்டோ பட்டாலியன் வீரர்கள் மற்றும் உள்ளூர் போலீசார் சுற்றி வளைத்தனர்.

    பின்னர் மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையே கடுமையான சண்டை நடைபெற்றது. இதில், கோப்ரா கமாண்டர் ஒருவர் உயிரிழந்தார். ஒரு போலீஸ்காரர் பலத்த காயமடைந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார்.

    சிறிது நேர துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு, மாவோயிஸ்டுகள் அந்த இடத்தில் இருந்து சென்றுவிட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். #JharkhandEncounter

    கவுதமாலா நாட்டில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியதில், பலியானோர் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மீண்டும் வெடித்து சிதறியதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. #GuatemalaVolcano
    கவுதமாலா சிட்டி:

    மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று கவுதமாலாவில் உள்ள பியூகோ என்ற எரிமலை ஞாயிற்றுக்கிழமை வெடித்துச் சிதறியதில் எரிமலைக் குழம்புகளும், சாம்பல் துகள்களும் பரவின. ஏராளமான வீடுகளை எரிமலை குழம்புகள் மற்றும் சாம்பல் சூழ்ந்ததால் பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர். எங்கு பார்த்தாலும் சாம்பல் புகை சூழ்ந்து காணப்பட்டது. சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாம்பல் புகை பரவியது. கவுதமாலா சர்வதேச விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது.



    கடும் சவால்களுக்கு மத்தியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த எரிமலை வெடிப்பினால் நேற்று வரை 69 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. பலர் இன்னும் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நேற்று மீட்பு பணியின்போது மேலும் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதன்மூலம் உயிரிழப்பு 72 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த சூழ்நிலையில் நேற்று மீண்டும் எரிமலை வெடித்து சாம்பல் துகள்களை கக்கத் தொடங்கியது. இதனால் மீட்புப் பணியை மேற்கொள்வதில் மேலும் சிக்கல் ஏற்பட்டது. #GuatemalaVolcano 
    ஈராக் நாட்டின் வடபகுதி மற்றும் துருக்கி நாட்டின் கிழக்கு மாகாணங்களில் துருக்கி விமானப்படை தாக்குதலில் 15 குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியை சேர்ந்த 15 பேர் உயிரிழந்தனர். #Turkishairstrikes #Kurdishmilitantskilled
    இஸ்தான்புல்:

    ஈராக்கில் குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சி என்னும் அமைப்பை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.

    பெரும்பாலும் ஈராக்கின் வடக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்திவரும் குர்திஸ்தான் பயங்கரவாதிகள், கான்டில் மலைப்பகுதியில் முகாம்களை அமைத்துள்ளனர். இங்கிருந்தவாறு துருக்கி எல்லையில் பயங்கரவாத தாக்குதல்களை அவ்வப்போது நடத்தி வருகின்றனர். துருக்கி நாட்டின் தென்கிழக்கு எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் இவர்கள் நடத்திய தாக்குதல்களில் சுமார் 40 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

    இவர்களை வேட்டையாடும் பணியில் துருக்கி நாட்டின் விமானப்படைகள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், தங்கள் நாட்டில் தாக்குதல் நடத்த குர்திஸ்தான் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக துருக்கி நாட்டு உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைதொடர்ந்து, ஈராக் நாட்டின் வடபகுதி எல்லைக்குள் புகுந்தும், துருக்கி நாட்டின் கிழக்கு மாகாணங்களான டுன்செலி மற்றூம் சீர்ட் பகுதிகளிலும் உள்ள குர்திஸ்தான் முகாம்களின்மீதும் துருக்கி விமானப்படைகள் நேற்றும் இன்றும் அதிரடியாக தாக்குதல் நடத்தின. இதில் 15 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக துருக்கி ராணுவம் இன்று தெரிவித்துள்ளது.  #Turkishairstrikes #Kurdishmilitantskilled

    உத்தரப்பிரதேசம் மாநிலம் முசாபர்நகர் உட்பட பல பகுதிகளில் நேற்று இடி, மின்னல் தாக்கியதன் காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளனர். #rainkills
    லக்னோ:

    வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக இடி மின்னல் தாக்கி பலர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் மரங்கள், வீடுகள் இடிந்து விழுகின்றன. இதனால் பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்வை இழந்து தவிக்கின்றனர். அரசும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், நேற்று உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இந்த மழை காரணமாக மொராதாபாத், முசாபர்நகர், மீரட், அம்ரோஹா மற்றும் சம்பால் ஆகிய மாவட்டங்களில் இடி தாக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட 9 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #rainkills
    சில தினங்களுக்கு முன்பு எங்கள் நாட்டில் (ஆப்கானிஸ்தான்) நிகழ்ந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ஆட்டநாயகன் விருதை சமர்ப்பிப்பதாக ஐதராபாத் பவுலர் ரஷித்கான் கூறியுள்ளார். #RashidKhan
    கொல்கத்தா:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதில் ஐதராபாத் நிர்ணயித்த 175 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி ஒரு கட்டத்தில் 8.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 86 ரன்களுடன் நல்ல நிலையிலேயே இருந்தது. ஆனால் நிதிஷ் ராணா (22 ரன்) ரன்-அவுட் ஆனதும் ஆட்டத்தின் போக்கு மாறியது. மேலும் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் 3 முன்னணி விக்கெட்டுகளை சாய்க்க, கொல்கத்தா அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 160 ரன்களே எடுக்க முடிந்தது.

    10 பந்தில் 34 ரன், 3 விக்கெட், 2 கேட்ச் என்று ஆல்-ரவுண்டராக ஜொலித்து அட்டகாசப்படுத்திய ஐதராபாத் சுழற்பந்து வீச்சாளர் 19 வயதான ரஷித்கான் ஆட்டநாயகன் விருதை பெற்றார். அவர் கூறுகையில், ‘சில தினங்களுக்கு முன்பு எங்கள் நாட்டில் (ஆப்கானிஸ்தான்) கிரிக்கெட் ஆட்டம் நடந்து கொண்டிருந்த போது நிகழ்ந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ஆட்டநாயகன் விருதை சமர்ப்பிக்கிறேன். என்னிடம் இருந்து இத்தகைய செயல்பாடு மிகவும் தேவையாக இருந்தது. பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் மூன்று துறைகளிலும் 100 சதவீத திறமையை வெளிப்படுத்தவே எப்போதும் முயற்சிக்கிறேன். பேட்டிங் மற்றும் பவுலிங்கில் எனது பங்களிப்பை அளிக்க முடியாமல் போகும் போது, அடுத்து எனது கவனம் பீல்டிங் மீது இருக்கும்’ என்றார்.  #RashidKhan

    ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த பள்ளி மாணவி பலியானார்.
    தூத்துக்குடி:

    துப்பாக்கி சூட்டில் பலியான தூத்துக்குடியைச் சேர்ந்த வெனிஸ்டா (வயது 17) பள்ளி மாணவியாவார்.

    இவர் தற்போது, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதி விட்டு இன்று வெளியாகும் தேர்வு முடிவுக்காக காத்து இருந்தார். மாணவி இறந்த தகவல் அறிந்ததும் அவரது பெற்றோர், உறவினர்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர்.

    அவர்கள் வெனிஸ்டா உடலை பார்த்து கதறி அழுதனர். மாணவி வெனிஸ்டாவின் வாயில் குண்டு பாய்ந்துள்ளது.

    இதுபற்றி மாணவியின் உறவினர்கள் கூறுகையில், “வெனிஸ்டா சிறுவயதில் இருந்தே நன்றாக படிப்பவர். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் நல்ல மதிப்பெண் எடுப்பேன் என்று வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்து வந்தார்.

    ஆனால் துரதிஷ்டவசமாக அவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியாகிவிட்டார்” என்றனர்.
    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன், ச.ம.க. தலைவர் சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடியில் போராடுகிற மக்களின் கோரிக்கையை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு மாறாக, ஆலை முதலாளியின் விருப்பத்தை நிறைவேற்றுகிற வகையில் போராடியவர்களை காவல் துறையினர் பெண்கள், குழந்தைகள் அனைவரின் மீதும் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி, ஓட, ஓட விரட்டியடித்துள்ளனர்.

    கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசியதோடு மட்டுமல்லாமல், துப்பாக்கிச் சூடும் நடத்தியுள்ளனர். இதில் ஒருவர் பலியாகி உள்ளார். பலர் படுகாயமுற்றுள்ளனர். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வன்மையாக கண்டிக்கிறது.

    அமைதியாக போராடுகிற மக்கள் மீது கொடூரமான துப்பாக்கிச் சூடு மற்றும் அடக்குமுறைகளை ஏவிவிடுவதை தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். எனவே நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை மூட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.

    ச.ம.க. தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

    ஜனநாயக ரீதியில் போராடும் மக்களிடம் வன்முறை சம்பவங்களை நிகழ்த்தி தடியடி, புகைக்குண்டு என அப்பகுதியை கலவரபூமியாக மாற்றியிருப்பது கண்ட னத்திற்குரியது. பல்லாயிரக்கணக்கில் திரளும் மக்கள் பல லட்சக்கணக்கில் திரள்வதற்கு முன்பாக அவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

    போராட்டக்களத்தில் ஏற்பட்ட துப்பாக்கிசூடு சம்பவத்தால் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்த செய்தி வருத்தமளிக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பிற்கான போராட்டத்தில் உயிரிழந்த அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    டைரக்டர் கவுதமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் மக்களை அழிக்கும் எமன். தூத்துக்குடியில் நீர், நிலம், காற்று அனைத்தும் பாழாகியுள்ளது. தமிழக அரசு தூத்துக்குடி மக்களின் எழுச்சிக்கு மதிப்பளிக்க வேண்டும். அடித்து ஒடுக்க முற்பட்டால் நிலைமை விபரீதமாகும்.

    மக்கள் புரட்சியாக போராட்டம் மாறுவதற்குள், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். தூத்துக்குடி மக்களின் போராட்டம் வெல்லட்டும். மக்கள் வாழும் நகரமாக தூத்துக்குடி நிலைக்கட்டும்.
    ×