search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்குமூலம்"

    கோவில் விழாவில் அடித்ததால் அவமானத்தில் வெட்டிக் கொன்றதாக மீன் வியாபாரி கொலை வழக்கில் கைதான வாலிபர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
    சேலம்:

    சேலம், அழகாபுரம், பெரியபுதூர் எம்.டி.எஸ். நகரை சேர்ந்தவர் மாது. இவரது மகன் வெங்கடேசன் (வயது 33). மீன் வியாபாரியான இவர் அஸ்தம்பட்டி சாரதா கல்லூரி சாலையில் உள்ள சுற்றுலா மாளிகை எதிரில் கடந்த மாதம் 22-ந்தேதி இரவு மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

    இந்த கொலை தொடர்பாக கடந்த 22-ந்தேதி அன்று திருச்சி ஜே.எம்.நீதிமன்றம் எண்.5-ல் பெரியபுதூர் பகுதியை சேர்ந்த பழனிவேல் மகன் அஜித்குமார்(26), மாதவன் மகன் ராமு(34) ஆகியோர் சரணடைந்தனர். அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் நாகப்பன் உத்தரவிட்டார். அதன்படி 2 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதையறிந்த அஸ்தம்பட்டி போலீசார், வாலிபர்கள் அஜித்குமார், ராமு ஆகிய இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர். இதற்காக, போலீஸ் காவல் கேட்டு வழக்கு ஆவணங்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

    இதையடுத்து மாஜிஸ்திரேட், 2 பேரையும் 4 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். நேற்று இரவு ஜெயிலில் இருந்து அஜித்குமார், ராமு ஆகிய இருவரையும் போலீசார் அழைத்து வந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விசாரணையில் அவர்கள் போலீசாரிடம் பரபரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளனர். அதன் விபரம் வருமாறு:-

    அஜித்குமார் தரப்பினரும், கொலை செய்யப்பட்ட வெங்கடேசன் தரப்பினரும் ஒரு கட்டத்தில் நண்பர்களாக இருந்தனர். இவர்கள் கொலை, அடி-தடி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டனர்.இதில் வெங்கடேசன் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதனால் அவரை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ரவுடி பட்டியலிலும் இடம் பெற்றார்.

    பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதால் இவர்களது ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் போலீசார் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். திருந்தி வாழுமாறு கூறி அறிவுரையும் வழங்கினார்கள்.

    இதில் வெங்கடேசன் மட்டும் திருந்தி வாழ தொடங்கினார். தனது நண்பர்களிடம் இருந்து விலகி தனியாக மீன்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் வெங்கடேசன் திருந்தி விட்டார். நாம் மட்டும் கெட்டவனாக இருக்கிறோம் என்ற ஆதங்கம் அவர்களது நண்பர்கள் மத்தியில் இருந்து வந்தது. இதனால் இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு நிலவி வந்தது. போலீசார் ஒரு வழக்கு தொடர்பாக அஜித்குமாரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் பேர்லேண்ட்ஸ் பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவை பார்ப்பதற்காக வெங்கடேசன் மற்றும் அவரது தரப்பினர் வந்திருந்தனர். அங்கு மற்றொரு தரப்பான அஜித்குமார் அண்ணன் ரஞ்சித் மற்றும் அவரது நண்பர்களும் நின்று கொண்டி ருந்தனர். வெங்கடேசனை கண்டதும் அவர்களுக்கு கோபம் கொப்பளித்தது. அங்கு வைத்து இரண்டு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன், ரஞ்சித்தை அடித்து விட்டார். கோவில் விழாவில் பொதுமக்கள் மத்தியில் வைத்து தாக்கியதால் ரஞ்சித் மற்றும் அவரது தரப்பினர் இதை ஒரு அவமானமாக கருதினர்.

    தனக்கு நேர்ந்த இந்த சம்பவம் குறித்து ரஞ்சித் தனது தம்பி அஜித்குமாரிடம் தெரிவித்தார். அதற்கு அவர், நான் ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும் அவனை பார்த்துக் கொள்கிறேன் என்றார். அதன்படி, சில நாட்கள் கழித்து ஜெயிலில் இருந்து வெளியே வந்த வந்த அஜித்குமார் நண்பர்களுடன் சேர்ந்து வெங்கடேசனை தீர்த்துக் கட்டினார் என்பது தெரியவந்தது.

    இந்த நிலையில் கொலை வழக்கு தொடர்பாக மேலும் ஒருவர் கரூர் கோர்ட்டில் சரணடைந்தார். அவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். #tamilnews
    பீளமேட்டில் தொழிலாளியை கொன்றது ஏன் என்பது குறித்து கைதான 5 பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
    பீளமேடு:

    சிங்காநல்லூர் எஸ்.ஐ. எச்.எஸ். காலனியை சேர்ந்தவர் பாபு(வயது 45). வெல்டிங் தொழிலாளி.

    இவர் நேற்றுமுன்தினம் இரவு பீளமேடு விமான நிலையத்தின் பின்புறம் நடந்து சென்ற போது 5 பேர் இவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்தனர்.திடீரென கும்பல் கத்தியால் பாபுவை குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர். பீளமேடு போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இதில் சவுரிபாளையத்தை சேர்ந்த பூசாரி மணி(20), நீலிகோணம்பாளையத்தை சேர்ந்த மோகன்பாபு(23), நவீன்குமார்(21), சசி மோகன் (25), ஆனந்த்ராஜ்(24) ஆகிய 5 பேர் சிக்கினர்.

    இவர்களில் பூசாரி மோகன் மீது ஏற்கனவே ஒரு கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் என பல்வேறு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. இவர் கடைசியாக ஜனவரி மாதம் வழக்கு ஒன்றில் கைதாகி உள்ளார்.

    பிறகு ஜாமீனில் வெளி வந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு இவரும், மற்ற 4 பேரும் மோட்டார் சைக்கிள்களில் நீலிகோணம்பாளையம் பகுதியில் சென்றுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த பாபுவிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளனர். அவர் பணம் தர மறுத்ததால் கத்தியால் குத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    கைதான 5 பேர் மீதும் கொலை, வழிப்பறி உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைதான 5 பேரும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்படுகின்றனர்.

    பாபுவை குத்திய பிறகு இதே கும்பல் மோட்டார் சைக்கிளில் ஹட்கோ காலனி சென்றுள்ளனர். அங்கு மிதுன் என்பவரிடம் பணம் கேட்டு தகராறு செய்தனர். அவர் பணம் கொடுக்க மறுத்ததால் கத்தியை காட்டி மிரட்டி தாக்கினர்.

    மிதுன் சத்தம்போடவே அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டதால் பூசாரி மணி உள்பட 5 பேரும் தப்பி ஓடிச் சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக பூசாரி மணி மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. #tamilnews
    ‘பணத்துக்கு ஆசைப்பட்டு மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது உண்மை’ என்று போலீஸ் விசாரணையில் விடுதி வார்டன் புனிதா ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
    கோவை:

    ‘பணத்துக்கு ஆசைப்பட்டு மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது உண்மை’ என்று போலீஸ் விசாரணையில் விடுதி வார்டன் புனிதா ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து போலீஸ் காவல் முடிந்து புனிதாவை போலீசார் மீண்டும் சிறையில் அடைத்தனர்.

    கோவை சேரன்மாநகரை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 45). இவர் கோவை பாலரங்கநாதபுரத்தில் மகளிர் விடுதி நடத்தி வந்தார். இங்கு தங்கியிருந்த மாணவிகள் சிலரை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறி அந்த விடுதியின் வார்டனான தண்ணீர் பந்தலை சேர்ந்த புனிதா (32) மீது புகார் கூறப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் விடுதி உரிமையாளர் ஜெகநாதன் மற்றும் விடுதி வார்டன் புனிதா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இதற்கிடையில் நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள ஒரு கிணற்றில் ஜெகநாதன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த வார்டன் புனிதா கடந்த 1-ந் தேதி கோவை கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார். புனிதாவை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நேற்று முன்தினம் மாலை மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து புனிதாவை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர்.

    இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

    புனிதா அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-

    விடுதி வார்டன் புனிதா மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததை ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார். இப்படி அழைத்தது இதுதான் முதல் முறை என்றும் இதற்கு முன்பு மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

    இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த ஜெகநாதன் இறந்ததை புனிதா செய்தித்தாள் மற்றும் டெலிவிஷனை பார்த்து தான் தெரிந்துகொண்டதாக கூறியுள்ளார். பணத்துக்கு ஆசைப்பட்டு மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துள்ளார்.

    சரண் அடைவதற்கு முன்பு புனிதா சென்னையில் தான் தலைமறைவாக இருந்துள்ளார். ஜெகநாதன் இறந்த பின்னர் இனி போலீசாரிடம் இருந்து தப்ப முடியாது என்பதால் கோர்ட்டில் சரண் அடைந்ததாகவும், இந்த விவகாரத்தில் ஜெகநாதன் மற்றும் புனிதாவை தவிர வேறு யாருக்கும் இதில் தொடர்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். என்றாலும் ஜெகநாதன் மரணம் குறித்தும், புனிதா தலைமறைவாக இருக்க உதவியவர்கள் பற்றியும், இந்த விவகாரத்தின் பின்னணி பற்றியும் விசாரித்து வருகிறோம்.

    இவ்வாறு போலீசார் கூறினார்கள்.

    போலீஸ் காவல் முடிந்து புனிதாவை நேற்று மாலை 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அவரை வருகிற 14-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு கண்ணன் உத்தரவிட்டார்.

    அந்த உத்தரவை தொடர்ந்து புனிதாவை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று கோவை சிறையில் அடைத்தனர்.

    கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதே காரணத்துக்காக கோவையில் மகளிர் விடுதி வார்டன் புனிதா போலீசில் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    பணத் தகராறில் வாலிபரை கொலை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் அஸ்தம்பட்டி, மணக்காடு கிழக்கு தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் விஜி என்கிற விஜய் (வயது 27). இவர் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களுக்கு லோன் வாங்கி கொடுக்கும் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ராம்நகர் மாநகராட்சி தொடக்கப்பள்ளிக்கு பின்புறம் உள்ள ஒரு தகர கூடாரத்தில் வைத்து மர்ம கும்பலால் விஜய் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தியதில், விஜய் மீது அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி போலீஸ் நிலையங்களில் 9 வழக்குகள் இருப்பதும், பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு காரணமாக மகேந்திரபுரி, கலிங்கா சாலை பகுதியை சேர்ந்த ரமேஷ் பாபு மகன் ராகுல்ராஜ் (24) என்பவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து அவரை தீர்த்துக்கட்டியதும் தெரியவந்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் அம்பிகா தலைமையிலான தனிப்படை போலீசார் தலைமறைவாக இருந்த கொலையாளிகள் ராகுல்ராஜ், மரவனேரி காந்தி நகர் பகுதியை சேர்ந்த செல்வம் மகன் விஜய் என்கிற ஜெயபிரகாஷ்(28), கலெக்டர் பங்களா பின்புறம் வசிக்கும் செல்வம் மகன் சர்மல்(23), குமாரசாமிபட்டி பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் வினோத்குமார் (23), ராம்நகர் ஓடை பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் ஸ்ரீரங்கன் (39) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

    இதில் ராகுல்ராஜ், ஏன்? விஜயை கொலை செய்தேன் என்பது குறித்து போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:-

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எனது தேவைக்காக காரை விஜயிடம் அடமானம் வைத்து ரூ.1 லட்சம் கேட்டேன். அதற்கு விஜய் தலா ரூ. 50 ஆயிரமும் அவரது நண்பர் தலா ரூ.50 ஆயிரமும் என சேர்த்து ரூ.1 லட்சம் திரட்டி என்னிடம் கொடுத்தார்கள்.

    கடன் வாங்கிய ஒரு வாரத்தில் மீண்டும் விஜயிடம் சென்று எனது அண்ணனுக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடப்பதாக கூறி காரை திரும்ப பெற்றுக் கொண்டேன்.

    இதனால் விஜய் தான் கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு கேட்டார். பணம் எல்லாம் தரமுடியாது. அப்புறம் காரை தருவதாக கூறினேன். பின்னர் சில நாட்கள் கழித்து நான் காரும் கொடுக்கவில்லை. பணத்தையும் கொடுக்க வில்லை.

    இதையடுத்து விஜய் ஒரு நாள் என்னை நேரில் சந்தித்து பணத்தை கொடுக்குமாறு கூறி கடுமையாக சத்தம் போட்டார்.சில நாட்கள் கழித்து ரூ.80 ஆயிரத்தை விஜயிடம் திருப்பி கொடுத்தேன். அதில் ரூ.50 ஆயிரத்தை விஜய் அவரது நண்பரிடம் கொடுத்தார். ரூ.30 ஆயிரத்தை விஜய் எடுத்துக் கொண்டார். மீதமுள்ள பாக்கி ரூ.20 ஆயிரத்தை என்னிடம் எப்போது தருவாய் என கேட்டார். நானும் பணத்தை தருவதாக கூறி காலம் கடத்தி வந்தேன்.

    சில நாட்களுக்கு முன்பு எனது வீட்டிற்கு விஜய் சென்று எனது அம்மாவை சத்தம் போட்டார். மேலும் உங்களது மகனிடம் பணத்தை கொடுக்க சொல்லுங்கள், இல்லையென்றால் உங்கள் மகனுக்கு மாலை போட்டு நீங்கள் வணங்க வேண்டி இருக்கும் என்று மோசமாக திட்டினார்.

    இதையறிந்த நான் கடும் ஆத்திரம் அடைந்தேன். நான் இல்லாத நேரத்தில் எனது வீட்டிற்கே சென்று சத்தம் போடுகிறாயா? எவ்வளவு தைரியம் இருக்கும். உன்னை விடமாட்டேன் என கோபத்தில் கொப்பளித்தேன். இது பற்றி ஸ்ரீரங்கனிடம் கூறினேன். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அவரும், நண்பர்களும், நானும் சேர்ந்து திட்டம் வகுத்தோம்.

    பணம் தருவதாக கூறி ஸ்ரீரங்கன் வீட்டிற்கு எதிரே குப்பை வண்டிகள் நிற்கும் இடத்திற்கு அழைத்து வந்து விஜய் கொலை செய்து விடலாம் என திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி நானும், எனது நண்பர்களும் சேர்ந்து விஜய்யை குப்பை வண்டிகள் நிற்கும் இடத்திற்கு அழைத்து வந்து வீச்சரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதத்தால் தாக்கி கொலை செய்தோம்.

    போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியதாக தெரிகிறது.

    கொலையாளிகளிடம் இருந்து 2 வீச்சரிவாள்கள், 2 சூரி கத்திகள் கைப்பற்றப்பட்டது. துரிதமாக செயல் பட்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை போலீஸ் கமி‌ஷனர் சங்கர் பாராட்டினார்.

    ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அப்பல்லோ மருத்துவமனையில் கண்காணிப்பு கேமரா அகற்றப்பட்டது ஏன்? என்று உளவுப்பிரிவு ஐ.ஜி. சத்தியமூர்த்தி விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்தார். #JayaDeath #JudgeArumugasamy
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில், உளவுப்பிரிவு ஐ.ஜி. சத்தியமூர்த்தி நேற்று ஆஜரானார். முதல்-அமைச்சரின் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் உளவுப்பிரிவு போலீசார் தான் மேற்கொள்வார்கள் என்ற அடிப்படையில் போயஸ் கார்டனில் இருந்து ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது முதல் அவர் மரணம் அடையும் வரை மருத்துவமனையில் நடந்தது குறித்து நீதிபதி மற்றும் ஆணையம் தரப்பு வக்கீல்கள் மதுரை எஸ்.பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர் ஐ.ஜி. சத்தியமூர்த்தியிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர்.



    விசாரணையின் போது, ஜெயலலிதா போயஸ் கார்டனில் இருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட போது உளவுப்பிரிவு போலீசார் உடன் சென்றார்களா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி எங்களுக்கு எந்த தகவலும் இல்லை என்று சத்தியமூர்த்தி பதில் அளித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து நீதிபதி, ‘செப்டம்பர் 21-ந் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஜெயலலிதா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அதன்பின்னர் ஜெயலலிதா உடல்நிலை பற்றி நீங்கள் தானே கண்டறிய வேண்டும்’ என்று கேள்வி எழுப்பினார்.



    அதற்கு சத்தியமூர்த்தி, ‘ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் சிரமப்பட்டது தெரியும். ஆனால் அவரது உடல்நிலை பாதிப்பு பற்றி எந்த தகவலும் தெரியாது’ என்று பதில் அளித்தார்.

    விசாரணையின் போது, ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த வார்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா அகற்றப்பட்டது தெரியுமா? என்று ஆணையத்தின் தரப்பு வக்கீல்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சத்தியமூர்த்தி, ‘ஆமாம். சொன்னார்கள்’ என்று பதில் அளித்துள்ளார். ‘பாதுகாப்பு கருதி உங்களது அறிவுரையின் பேரிலேயே கண்காணிப்பு கேமரா எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறதே?’ என்று ஆணையத்தின் வக்கீல்கள் கேட்டதற்கு, ‘நான் எதுவும் சொல்லவில்லை. யாருடைய உத்தரவின் பேரில் கண்காணிப்பு கேமரா அகற்றப்பட்டது என்பது தெரியாது’ என்று அவர் பதில் அளித்தார்.

    ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த வார்டு பகுதிக்கு யாரையும் அனுமதிக்கக்கூடாது என்று நீங்கள் அறிவுறுத்தினீர்களா?, இதுதொடர்பாக அப்பல்லோ நிர்வாகம் உங்களிடம் ஆலோசனை நடத்தினார்களா?, ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த வார்டு பகுதிக்குள் யாரை அனுமதிக்க வேண்டும் யாரை விடக்கூடாது என்ற கட்டுப்பாடு யாரிடம் இருந்தது? என்று ஆணையத்தின் வக்கீல்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. சசிகலாவை மருத்துவமனையில் நான் சந்திக்கவில்லை’ என்று பதில் அளித்துள்ளார்.

    மேலும் அவர் தனது வாக்குமூலத்தில், ‘ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பு சீருடை அணியாத உளவுப்பிரிவு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். அப்பல்லோ மருத்துவமனையின் 2-வது தளம் முழுவதும் உளவுத்துறை கட்டுப்பாட்டில் தான் இருந்தது. ஆனால், ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது அவரை பார்க்க யார், யார் வந்தார்கள் என்பது குறித்த விவரம் தன்னிடம் இல்லை.

    ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அளித்த கருப்பு பூனை படைக்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. அப்பல்லோ மருத்துவமனைக்கு ஏன் அவர்கள் பாதுகாப்புக்கு வரவில்லை என்பது தெரியாது. அதை தெரிந்துகொள்ளவும் நான் முயற்சிக்கவில்லை’ என்று கூறி உள்ளார்.

    காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை சுமார் 2½ மணி நேரம் அவரிடம் விசாரணை நடந்தது. 
    சென்னை பெண் எரித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான வாலிபர், முன்னாள் காதலியான அவர், தன்னை 2-வதாக திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
    கோயம்பேடு:

    காஞ்சீபுரம் மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த பழவேலி பகுதியில் கடந்த 28-ந்தேதி, இளம்பெண் ஒருவர் எரித்துக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். செங்கல்பட்டு தாலுகா போலீசார், அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் நடத்திய விசாரணையில் கொலையான பெண், சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த அருள்தாஸ் என்பவருடைய மகள் பொக்கிஷமேரி(வயது 33) என தெரிய வந்தது.

    இதுபற்றி செங்கல்பட்டு போலீசார் அளித்த தகவலின்பேரில் சென்னை அண்ணாநகர் போலீசார் நெற்குன்றம் செல்லியம்மன் நகர் ஆனித் தெருவைச் சேர்ந்த பாலமுருகன்(30), எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த சுகுமாரன் (38) ஆகிய 2 பேரை கைது செய்து, செங்கல்பட்டு தாலுகா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இந்தநிலையில் கைதான பாலமுருகன், போலீசாரிடம் அளித்து உள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

    நான், சென்னை அண்ணாநகரில் உள்ள ஒரு மருந்து கடையில் வேலை செய்து வந்தேன். அப்போது எனக்கும், அதே கடையில் வேலை செய்து வந்த பொக்கிஷமேரிக்கும் காதல் மலர்ந்தது. நாங்கள் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தோம். இதற்கிடையில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எங்கள் காதல் முறிந்தது.

    பின்னர் நான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். இதற்கிடையில், என்னை சந்தித்து பேசிய பொக்கிஷமேரி, உன்னை என்னால் மறக்க முடியவில்லை. 2-வதாக என்னையும் திருமணம் செய்து கொள் என்று என்னை தொந்தரவு செய்து வந்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த நான், இது தொடர்பாக பேச வேண்டும் என்று கூறி பொக்கிஷமேரியை, எம்.ஜி.ஆர். நகர், பெரியார் தெருவில் உள்ள எனது நண்பர் வீட்டுக்கு வரவழைத்தேன். அங்கு வந்த பொக்கிஷமேரி, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தொடர்ந்து வற்புறுத்தினார். இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் முற்றியது.

    இதில் ஆத்திரம் அடைந்த நான், நண்பரின் வீட்டில் இருந்த குக்கர் மூடியால் பொக்கிஷமேரியின் தலையில் பலமாக தாக்கினேன். இதில் படுகாயம் அடைந்த அவர், அதே இடத்தில் பரிதாபமாக இறந்து விட்டார்.

    பின்னர் கொலையை மறைக்க திட்டமிட்ட நான், பொக்கிஷமேரியின் உடலை சூட்கேசில் அடைத்து, வாடகை கார் மூலம் செங்கல்பட்டு அடுத்த பழவேலி பகுதிக்கு சென்றேன். அங்கு ஒதுக்குப்புறமான இடத்தில் உடலை போட்டு விட்டு, போலீசார் அடையாளம் கண்டுபிடிக்காமல் இருக்க தீ வைத்து எரித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டேன்.

    இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    கடந்த 26-ந்தேதி வேலைக்கு சென்ற பொக்கிஷமேரி மாயமானதாக அவரது தாயார், அண்ணாநகர் போலீசில் புகார் செய்து இருந்தார். அண்ணாநகரில் இருந்து மோட்டார் சைக்கிளில் கோயம்பேடு வந்து மொபட்டை நிறுத்தி விட்டு, அங்கிருந்து எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள பாலமுருகனின் நண்பரின் வீட்டுக்கு சென்று உள்ளார். அதன் பிறகு அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.

    பொக்கிஷமேரியின் தாயார் அளித்த புகாரின்பேரில் இளம்பெண் மாயமானதாக வழக்குப்பதிவு செய்து இருந்த அண்ணாநகர் போலீசார், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றினர். பின்னர் கைதான பாலமுருகனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பாலமுருகன் மட்டும் தனியாக இந்த கொலையை செய்து விட்டு, உடலை காரில் கொண்டு சென்று எரித்து இருக்க முடியாது. ஆனால், இந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கொலையான பெண்ணின் முன்னாள் காதலன் பாலமுருகன் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளது இந்த வழக்கில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. 
    நீடாமங்கலம் அருகே தம்பி மனைவி ஆசைக்கு இணங்க மறுத்ததால் கொலை செய்தேன் என்று கைதானவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள மேலாளவந்தசேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜோசப் ராஜசேகர். இவர் சிங்கப்பூரில் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், கோட்டூர் அருகே வடக்கு நாணலூர் கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி மகள் எஸ்தருக்கும் (வயது 25) திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 வயதில் ‌ஷர்வன் என்கிற ஆண் குழந்தை உள்ளது.

    கணவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வந்ததால் தனது குழந்தையுடன் எஸ்தர் தனியாக வசித்து வந்தார்.

    கடந்த 6-ந் தேதி இரவு 7 மணியில் இருந்து திடீரென்று வீட்டில் இருந்த எஸ்தரை காணவில்லை.

    இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த எஸ்தரின் குடும்பத்தினர், பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் காணவில்லை.

    இதையடுத்து ஜோசப் ராஜசேகருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் ஊருக்கு திரும்பி வந்து தேவங்குடி போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் நீடாமங்கலம் இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ஜோசப்ராஜசேகரின் அண்ணன் விவசாயி நெல்சனின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதனால் நெல்சனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் எஸ்தரை துண்டு துண்டாக வெட்டி 2 சாக்கு மூட்டையில் வீசி விட்டதாக தெரிவித்தார். இதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் அவரை அழைத்து கொண்டு புதர் பகுதியில் 2 சாக்கு மூட்டைகளில் இருந்த எஸ்தரின் உடலை கைப்பற்றினர்.

    இதுகுறித்து தேவங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து நெல்சனிடம் மேலும் விசாரணை நடத்தினர். அப்போது தனது நண்பர் சகாயராஜூடன் சேர்ந்து எஸ்தரை கொன்றதாக கூறினார். இதனைத்தொடர்ந்து நெல்சன், நண்பர் சகாயராஜ் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    கைதான நெல்சன் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

    எனது தம்பி ஜோசப்ராஜசேகர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தான். அவனது மனைவி எஸ்தர் மற்றும் குழந்தை ஆகியோர் எனது தந்தை வீட்டில் வசித்து வந்தனர். எனது தந்தை மோசஸ் இறந்து விடவே, தாயார் நட்சத்திரமேரியின் பாதுகாப்பில் எஸ்தரும், அவருடைய குழந்தையும் இருந்தனர்.

    எனது தந்தை இறந்த பின்பு என் தம்பி என்னிடம், இனிமேல் நீதான் எனது மனைவி மற்றும் குழந்தைக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என என்னிடம் கூறி விட்டு வெளிநாடு சென்றான்.

    ஆனால் எஸ்தர் அழகால் எனக்கு காமம் ஏற்பட்டது. வீட்டில் எஸ்தர் தனியாக இருக்கும் போது நான் அடிக்கடி அவரிடம் சென்று பேசுவேன்.

    மேலும் சில நேரங்களில் ஆசைக்கு இணங்கும்படி கூறி வந்தேன். ஆனால் இதற்கு எஸ்தர் உடன்படாமல் என்னை திட்டி பேசி வந்தார். இது நாளடைவில் எனக்கு அவர் மீது கோபத்தை உண்டாக்கியது.

    கடந்த 5-ந் தேதி எனது மனைவி, குழந்தையை வேளாங்கண்ணியில் உள்ள எனது மாமியார் வீட்டிற்கு அனுப்பி வைத்தேன். மறுநாள் 6-ந் தேதி எனது அம்மா நட்சத்திர மேரியை வயலுக்கு அனுப்பி வைத்தேன். அப்போது வீட்டில் தனியாக இருந்த எஸ்தரிடம் சென்று எனது ஆசைக்கு இணங்குமாறு மீண்டும் வற்புறுத்தினேன்.

    அதற்கு எஸ்தர் மறுப்பு தெரிவித்து என்னை கண்டபடி திட்டினார். மேலும் இதுபோல் தொடர்ந்து நடந்தால் எனது கணவரிடம் தெரிவிப்பேன் என்று கூறியதால் எனக்கு ஆத்திரம் வந்தது.

    இந்த வி‌ஷயத்தை எனது தம்பியிடம் அவள் சொல்லி விட்டால் என்னவானது? என்று பயந்தேன். இதனால் எஸ்தரை கொலை செய்து விட வேண்டும் என்று தீர்மானித்தேன். இந்த வி‌ஷயத்தை எனது நண்பன் சகாயராஜிடம் தெரிவித்தேன். அவனும் இதற்கு உடன்பட்டான். எனவே இருவரும் சேர்ந்து எஸ்தரை தீர்த்துக்கட்டும் முடிவுக்கு வந்தோம்.

    சம்பவத்தன்று வீட்டில் எஸ்தர் தனியாக இருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எஸ்தரை நானும் எனது நண்பர் சகாயராஜூம் சென்றோம்.

    எங்கள் இருவரையும் பார்த்த எஸ்தர் திடுக்கிட்டு சத்தம் போட்டார். உடனே வேகமாக சென்று எஸ்தரின் வாயை நான் பொத்தினேன். சகாயராஜ் கத்தியால் எஸ்தரின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்தம் பீறிட்டு கீழே மயங்கி விழுந்து எஸ்தர் இறந்தார்.

    அதனைத்தொடர்ந்து கத்தி மற்றும் அரிவாளால் உடலை இரண்டு துண்டாக்கினோம். 2 கால்களின் முட்டிகளை மட்டும் தனியாக வெட்டினோம். கைகள் இரண்டையும் தனியாக வெட்டினோம். உடல் முழுவதும் ரத்தமாக இருந்ததால் தண்ணீரால் ரத்தத்தை நன்றாக கழுவினோம். பின்னர் வீடு முழுவதும் இருந்த ரத்தக்கறையை தண்ணீரால் கழுவினோம். 2 சாக்கு மூட்டைகளில் எஸ்தரின் உடலை கட்டி மொபட்டில் வைத்து அருகில் உள்ள கோரையாற்று புதரில் போட்டு விட்டு வீடு திரும்பினோம். சகாயராஜ் அங்கிருந்து சென்று விட்டார்.

    இந்த நிலையில் எஸ்தர் மாயமானது பற்றி எனது தாயார் கேட்டார். அதற்கு பதில் சொல்லவில்லை. தொடர்ந்து என்னிடம் எஸ்தர் குறித்து கேட்டபோது நான் எஸ்தரை கொலை செய்து உடலை ஆற்றில் வீசிவிட்டேன் என்று கூறினேன்.

    இதை கேட்டு உறவினர்கள் எல்லோரும் போலீசில் புகார் செய்தனர். அதன்பிறகு நடத்திய விசாரணையில் நான் சிக்கி கொண்டேன்.

    இவ்வாறு நெல்சன், போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக அப்பல்லோ மருத்துவர்கள் அளித்த வாக்குமூலம் முரண்படுவதால் ‘ரமணா’ பட பாணியில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதா? என்ற சந்தேகம் ஆணையத்துக்கு எழுந்துள்ளது. #Jayalalithaa #JayaProbe #Apollo
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி வருகிறார். ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் பல்வேறு காலகட்டங்களில் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த 20 மருத்துவர்களின் பட்டியலை சசிகலா ஆணையத்தில் தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மருத்துவர்களிடம் தற்போது ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. அந்த பட்டியலில் இடம்பெற்ற அப்பல்லோ மருத்துவர் ஜெயஸ்ரீகோபால் மற்றும் மருத்துவர் ராமச்சந்திரன்(இருவரும் சர்க்கரை நோய் தடுப்பு சிறப்பு மருத்துவர்கள் ஆவர்) ஆகியோரிடம் நேற்று முன்தினம் ஆணையம் விசாரணை நடத்தியது.

    கோப்பு படம்

    சசிகலா அளித்த பட்டியலில் இடம்பெற்றிருந்த அப்பல்லோ மருத்துவமனையில் சர்க்கரை நோய் தடுப்பு சிறப்பு மருத்துவராக பணியாற்றி வரும் சாந்தாராமிற்கு ஆணையம் சம்மன் அனுப்பியது. அதன்படி நேற்று காலை 10.30 மணிக்கு அவர் ஆணையத்தில் ஆஜரானார்.

    ஜெயலலிதாவுக்கு எந்த ஆண்டு முதல் சிகிச்சை அளித்து வருகிறீர்கள்?, ஜெயலலிதாவுக்கு என்னென்ன உடல்நிலை பாதிப்பு இருந்தது?, உங்களது சிகிச்சையில் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் இருந்ததா? என்பது போன்று பல்வேறு கேள்விகளை நீதிபதி கேட்டார்.



    அதற்கு மருத்துவர் சாந்தாராம், ‘2000-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை தொடர்ந்து 14 ஆண்டுகள் ஜெயலலிதாவுக்கு சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளித்தேன். அப்போது சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. 2015-ம் ஆண்டுக்கு பின்னர் ஜெயலலிதாவுக்கு நான் சிகிச்சை அளிக்கவில்லை. என்னை ஏன் அழைக்கவில்லை என்பது எனக்கு தெரியாது. எனக்கு பின்னர், ஜெயஸ்ரீகோபால் ஜெயலலிதாவுக்கு சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிப்பதாக கேள்விப்பட்டேன். 2015-ம் ஆண்டுக்கு பின்னர் ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்றும் கேள்விப்பட்டேன். நான் அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றியபோதும், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் அவருக்கு சிகிச்சை எதுவும் அளிக்கவில்லை’ என்று பதில் அளித்துள்ளார்.

    ‘தொடர்ந்து 14 ஆண்டுகள் நீங்கள் ஜெயலலிதாவுக்கு சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளித்து இருந்ததால் அவரது உடல்நிலை குறித்து உங்களுக்கு தெரிந்திருக்கும். அப்படி இருக்கும்போதும், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதும் ஏன் உங்களை ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழுவில் சேர்க்கவில்லை’ என்று சாந்தாராமிடம் நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு, அதுபற்றி தனக்கு தெரியாது என்று மருத்துவர் சாந்தாராம் பதில் அளித்துள்ளார்.

    தொடர் சிகிச்சையில் இருந்த ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பது குறித்து கேள்வி எழுப்பிய ஆணையம், அதுபோன்று திடீர் மாரடைப்பு ஏற்படும்போது என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று கேள்வி எழுப்பியது.

    அதற்கு மருத்துவர் சாந்தாராம், ‘அதிக ரத்த அழுத்தத்தின் காரணமாக மாரடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. மாரடைப்பு ஏற்பட்டால் ரத்த ஓட்டம் நின்று விடும். சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல், மூளை செயல் இழந்து விடும். மீண்டும் இருதயம் செயல்பட்டால் எல்லா உறுப்புகளும் செயல்படும். ஆனால், ஜெயலலிதாவுக்கு இருதயம் மீண்டும் செயல்படவில்லை’ என்று கூறி உள்ளார்.

    மேலும், ரத்த ஓட்டம் நின்றபின்பு கொடுக்கப்படும் மருந்துகள் செயல்படுமா? என்று கேட்டதற்கு, அதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறி உள்ளார். மருத்துவர் சாந்தாராமிடம் ஆணையத்தின் வக்கீல் எஸ்.பார்த்தசாரதி குறுக்கு விசாரணை செய்தார். அதேபோன்று சாந்தாராமிடம் குறுக்கு விசாரணை செய்வதற்காக சசிகலா தரப்பு வக்கீல் ராஜ்குமார் பாண்டியன் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்துகொண்டார்.

    அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஆணையத்தில் தாக்கல் செய்த ஜெயலலிதா சிகிச்சை குறித்த மருத்துவ ஆவணங்களில், 2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி மாலை 6 மணிக்கு ஜெயலலிதாவுக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அப்போது ஜெயலலிதாவுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஆனால், ஜெயலலிதாவுக்கு அன்றைய தினம் மாலை 4.20 மணிக்கு இருதய அடைப்பு ஏற்பட்டதும், மீண்டும் இருதயத்தை செயல்பட வைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி அனைத்தும் தோல்வியில் முடிந்தது என்பதும் அப்பல்லோ மருத்துவர்களின் வாக்குமூலத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

    இருதய அடைப்பு ஏற்பட்டதும் ரத்த ஓட்டம் நின்று விடும் என்ற சூழ்நிலையில் அன்றைய தினம் மாலை 6 மணிக்கு ஜெயலலிதாவுக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்டதாக அப்பல்லோ மருத்துவ ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு இருப்பது ஆணையத்துக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும், ஜெயலலிதாவுக்கு இருதய அடைப்பு ஏற்பட்ட பின்பு ‘ரமணா’ பட(நடிகர் விஜயகாந்த் நடித்த ரமணா படத்தில் இறந்தவருக்கு பரபரப்பாக சிகிச்சை அளிப்பது போன்ற காட்சி இடம்பெறும்) பாணியில் சிகிச்சை அளிக்கப்பட்டதா? என்ற சந்தேகம் ஆணையத்துக்கு எழுந்துள்ளது. இதை அடுத்தடுத்து ஆஜராகும் மருத்துவர்கள் மூலம் உறுதி செய்ய ஆணையம் முடிவு செய்துள்ளது.  #Jayalalithaa #JayaProbe #Apollo
    ×