search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் வாலிபர் கொலையில் 5 பேர் கைது- பரபரப்பு வாக்குமூலம்
    X

    சேலம் வாலிபர் கொலையில் 5 பேர் கைது- பரபரப்பு வாக்குமூலம்

    பணத் தகராறில் வாலிபரை கொலை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் அஸ்தம்பட்டி, மணக்காடு கிழக்கு தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் விஜி என்கிற விஜய் (வயது 27). இவர் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களுக்கு லோன் வாங்கி கொடுக்கும் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ராம்நகர் மாநகராட்சி தொடக்கப்பள்ளிக்கு பின்புறம் உள்ள ஒரு தகர கூடாரத்தில் வைத்து மர்ம கும்பலால் விஜய் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தியதில், விஜய் மீது அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி போலீஸ் நிலையங்களில் 9 வழக்குகள் இருப்பதும், பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு காரணமாக மகேந்திரபுரி, கலிங்கா சாலை பகுதியை சேர்ந்த ரமேஷ் பாபு மகன் ராகுல்ராஜ் (24) என்பவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து அவரை தீர்த்துக்கட்டியதும் தெரியவந்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் அம்பிகா தலைமையிலான தனிப்படை போலீசார் தலைமறைவாக இருந்த கொலையாளிகள் ராகுல்ராஜ், மரவனேரி காந்தி நகர் பகுதியை சேர்ந்த செல்வம் மகன் விஜய் என்கிற ஜெயபிரகாஷ்(28), கலெக்டர் பங்களா பின்புறம் வசிக்கும் செல்வம் மகன் சர்மல்(23), குமாரசாமிபட்டி பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் வினோத்குமார் (23), ராம்நகர் ஓடை பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் ஸ்ரீரங்கன் (39) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

    இதில் ராகுல்ராஜ், ஏன்? விஜயை கொலை செய்தேன் என்பது குறித்து போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:-

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எனது தேவைக்காக காரை விஜயிடம் அடமானம் வைத்து ரூ.1 லட்சம் கேட்டேன். அதற்கு விஜய் தலா ரூ. 50 ஆயிரமும் அவரது நண்பர் தலா ரூ.50 ஆயிரமும் என சேர்த்து ரூ.1 லட்சம் திரட்டி என்னிடம் கொடுத்தார்கள்.

    கடன் வாங்கிய ஒரு வாரத்தில் மீண்டும் விஜயிடம் சென்று எனது அண்ணனுக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடப்பதாக கூறி காரை திரும்ப பெற்றுக் கொண்டேன்.

    இதனால் விஜய் தான் கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு கேட்டார். பணம் எல்லாம் தரமுடியாது. அப்புறம் காரை தருவதாக கூறினேன். பின்னர் சில நாட்கள் கழித்து நான் காரும் கொடுக்கவில்லை. பணத்தையும் கொடுக்க வில்லை.

    இதையடுத்து விஜய் ஒரு நாள் என்னை நேரில் சந்தித்து பணத்தை கொடுக்குமாறு கூறி கடுமையாக சத்தம் போட்டார்.சில நாட்கள் கழித்து ரூ.80 ஆயிரத்தை விஜயிடம் திருப்பி கொடுத்தேன். அதில் ரூ.50 ஆயிரத்தை விஜய் அவரது நண்பரிடம் கொடுத்தார். ரூ.30 ஆயிரத்தை விஜய் எடுத்துக் கொண்டார். மீதமுள்ள பாக்கி ரூ.20 ஆயிரத்தை என்னிடம் எப்போது தருவாய் என கேட்டார். நானும் பணத்தை தருவதாக கூறி காலம் கடத்தி வந்தேன்.

    சில நாட்களுக்கு முன்பு எனது வீட்டிற்கு விஜய் சென்று எனது அம்மாவை சத்தம் போட்டார். மேலும் உங்களது மகனிடம் பணத்தை கொடுக்க சொல்லுங்கள், இல்லையென்றால் உங்கள் மகனுக்கு மாலை போட்டு நீங்கள் வணங்க வேண்டி இருக்கும் என்று மோசமாக திட்டினார்.

    இதையறிந்த நான் கடும் ஆத்திரம் அடைந்தேன். நான் இல்லாத நேரத்தில் எனது வீட்டிற்கே சென்று சத்தம் போடுகிறாயா? எவ்வளவு தைரியம் இருக்கும். உன்னை விடமாட்டேன் என கோபத்தில் கொப்பளித்தேன். இது பற்றி ஸ்ரீரங்கனிடம் கூறினேன். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அவரும், நண்பர்களும், நானும் சேர்ந்து திட்டம் வகுத்தோம்.

    பணம் தருவதாக கூறி ஸ்ரீரங்கன் வீட்டிற்கு எதிரே குப்பை வண்டிகள் நிற்கும் இடத்திற்கு அழைத்து வந்து விஜய் கொலை செய்து விடலாம் என திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி நானும், எனது நண்பர்களும் சேர்ந்து விஜய்யை குப்பை வண்டிகள் நிற்கும் இடத்திற்கு அழைத்து வந்து வீச்சரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதத்தால் தாக்கி கொலை செய்தோம்.

    போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியதாக தெரிகிறது.

    கொலையாளிகளிடம் இருந்து 2 வீச்சரிவாள்கள், 2 சூரி கத்திகள் கைப்பற்றப்பட்டது. துரிதமாக செயல் பட்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை போலீஸ் கமி‌ஷனர் சங்கர் பாராட்டினார்.

    Next Story
    ×