search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மறியல்"

    விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பம் வெட்டி சாய்க்கப்பட்டதால் மர்ம கும்பலை கைது செய்ய கோரி அக்கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிகம்பம் உள்ளது. நேற்று நள்ளிரவில் மர்ம கும்பல் இந்த கொடி கம்பத்தை வெட்டி சாய்த்து பிடுங்கி எறிந்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

    இன்று காலை அந்த வழியாக வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொடிக்கம்பம் வெட்டி சாய்க்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டதால் அவர்களும் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    பின்னர் கொடிக்கம்பத்தை வெட்டி சாய்த்த மர்ம கும்பலை கைது செய்ய கோரி திடீரென அப்பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்ட செய்தி தொடர்பாளர் தேவா தலைமையில் நிர்வாகிகள் ஆடலரசு, ஜீவா உள்பட பலர் கலந்து கொண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மறியல் குறித்து தகவல் கிடைத்ததும் சீர்காழி போலீசார் விரைந்து வந்தனர். உடனே மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மர்ம கும்பலை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதை ஏற்று மறியலை கைவிட்டு விடுதலை சிறுத்தைக் கட்சியினர் கலைந்து சென்றனர்,

    இந்த மறியல் போராட்டத்தால் சீர்காழி- மயிலாடுதுறை மெயின் ரோட்டில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மதுரையில் சாலை அமைக்ககோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் செல்லூர் மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
    மதுரை:

    மதுரையில் நாளுக்கு நாள் வாகன பெருக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால் அதற்கேற்ற வகையில் சாலை வசதிகள் இல்லாததால், அவதியடைந்து வருகின்றனர்.

    மழை காலங்களில் மேலும் சாலைகள் சேதமடைந்து தண்ணீர் தேக்கும் குளங்களாக மாறி விடுகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாக நடந்து வருகிறது.

    மதுரை காளவாசல், செல்லூர், பழங்காநத்தம், பெரியார், காமராஜர் சாலை, தவிட்டு சந்தை, வில்லாபுரம், அவனியாபுரம், அண்ணாநகர், கே.கே.நகர் உள்பட நகரின் அனைத்து பகுதிகளிலுமே சாலைகள் மோசமாக உள்ளன.

    செல்லூர் மார்க்கெட், அகிம்சாபுரம் மெயின் ரோடு, ஜான்சிராணிபுரம் ஆகிய பகுதிகளில் சாலைகள் போடுவதற்காக 2 மாதங்களுக்கு முன்பு ஜல்லி கற்கள் குவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது வரை சாலைகள் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இதனால் ஜல்லி கற்கள் ரோட்டில் சிதறி கிடக்கிறது. இதனால் பாதசாரிகள் நடக்க முடியாமல் அவதியடைகின்றனர். சாலை மேலும் சேதமடைந்து காணப்படுகின்றன.

    இதை கண்டித்தும் சாலை அமைக்ககோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் செல்லூர் மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #tamilnews
    முழு அடைப்பால் தமிழகத்தில் பாதிப்பு இல்லை. மாநிலம் முழுவதும் மறியல் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட 15 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். #BharathBandh #PetrolDieselPriceHike
    சென்னை:

    பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

    இது அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாகிவிடும் என்பதால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்கவும் மத்திய அரசை வலியுறுத்தி வந்தன.

    இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், அதைக் கட்டுப்படுத்தக்கோரியும் நேற்று நாடு தழுவிய அளவில் பொது வேலைநிறுத்த போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. நாடு முழுவதும் 21 கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

    தமிழ்நாட்டை பொறுத்தவரை, தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., த.மா.கா., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்பட பல கட்சிகள் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தன. அதேபோல், சில வணிக அமைப்புகளும், தொழிற்சங்கங்களும் ஆதரவு வழங்கியிருந்தது. ஆனால், ஆளும் கட்சியான அ.தி.மு.க. மட்டும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

    இந்த நிலையில், நேற்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் தமிழ்நாட்டில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பஸ், ரெயில், வேன், ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின. அரசு - தனியார் அலுவலகங்களும், பள்ளி - கல்லூரிகளும் வழக்கம்போல் இயங்கின. கடைகளும் அதிக அளவில் திறந்து இருந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

    தலைநகர் சென்னையை பொறுத்தவரை, காலை முதலே வழக்கம்போல் பரபரப்பாக இயங்கியது. பஸ், ரெயில், ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின. பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டிருந்தன. ஒரு சில பகுதிகளில் மட்டும் குறைந்த அளவிலான கடைகள் மூடப்பட்டிருந்தன. வணிகப் பகுதிகளான தியாகராயநகர், புரசைவாக்கம், பெரம்பூர், வண்ணாரப்பேட்டையில் கடைகள் அனைத்தும் திறந்திருந்தன. கோயம்பேடு மார்க்கெட் வழக்கம்போல் இயங்கியது.

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் ஒரு சில பகுதிகளில் கடைகளை அடைக்கச் சொல்லி வியா பாரிகளை வற்புறுத்தினர். ஆனாலும், வியாபாரிகள் கடைகளை அடைக்க வில்லை. சென்னையில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றாலும், தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் நடைபெற்ற கல்வீச்சு சம்பவத்தில் பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

    காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னை உள்ளிட்ட சில இடங்களில் சாலை மறியலிலும் போராட்டக்காரர்கள் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    அந்த வகையில், சென்னையில் 430 பேரும், காஞ்சீபுரத்தில் 550 பேரும், திருவள்ளூரில் 400 பேரும் கைது செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் மொத்தம் 15 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்திய முழு அடைப்பு போராட்டத்துக்கு பொதுமக்களின் ஆதரவு இல்லை என்ற போதிலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு அலைகள் இருந்ததையும் காண முடிந்தது.  #BharathBandh #PetrolDieselPriceHike
    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து குமரி மாவட்டத்தில் 12 இடங்களில் இன்று மறியல் போராட்டம் நடந்தது. காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
    நாகர்கோவில்:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து குமரி மாவட்டத்தில் 12 இடங்களில் இன்று மறியல் போராட்டம் நடந்தது. காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்பு நடந்த மறியலுக்கு குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். நகர தலைவர் அலெக்ஸ், மாவட்ட துணைத்தலைவர் மகேஷ்லாசர், நிர்வாகிகள் கே.டி.உதயம், தங்கம் நடேசன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் செல்லச்சாமி, செயற்குழு உறுப்பினர் உசேன், மாவட்ட குழு உறுப்பினர் அந்தோணி, மரிய ஸ்டீபன், அஜிஸ்,

    ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெற்றிவேல், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, சி.பி.எம்.எல். மாவட்ட செயலாளர் அந்தோணி முத்து, திராவிடர் கழக மண்டல செயலாளர் வெற்றிவேந்தன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷமிட்டவாறு அண்ணா பஸ் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை பாதுகாப்புக்கு நின்ற நாகர்கோவில் டி.எஸ்.பி. இளங்கோவன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

    125-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    கருங்கலில் நடந்த மறியல் போராட்டத்தில் கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமாரும், திங்கள்நகரில் நடந்த மறியல் போராட்டத்தில் பிரின்ஸ் எம்.எல்.ஏ.வும் கலந்து கொண்டனர். அவர்களையும் மறியலில் ஈடுபட்டவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் கொட்டாரம், திருவட்டார், குலசேகரம், மார்த்தாண்டம், மேல்புறம் உள்ளிட்ட இடங்களிலும் மறியல் நடந்தது. மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர்.
    சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு பல நாட்களாக குடிநீர் வராததை கண்டித்து இன்று காலை சேலம்- சென்னை நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    அப்போது அவர்கள் தங்களுக்கு குநீர் வசதி செய்து கொடுத்தால் தான் இங்கிருந்து செல்வோம் என்று கூறினர்.

    இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளை வரவழைத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் அடிப்படையில் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதேபோல் நேற்று மாலை மந்தைவெளி பகுதியில் குடிநீர் வராததை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர்.

    2 தினங்களுக்கு முன்பு 21-வது வார்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், 10-வது வார்டை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் குடிநீர் வரவில்லை என்று கூறி தொடர் மறியல் போராட்டம் நடத்தினர்.

    இதனால் ஆத்தூர் நகராட்சி பகுதியில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதால் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர். #tamilnews
    உடன்குடியில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழு கடை அடைப்பு நடத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடபோவதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    உடன்குடி:

    உடன்குடி வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது. சங்க தலைவர் ரவி தலைமை தாங்கினார். பொருளாளர் அப்துல் காதர் வரவேற்றார். செயலாளர் கந்தன் தீர்மானங்களை வாசித்தார்.

    கூட்டத்தில், உடன்குடி பஜாரை சுற்றியுள்ள 4 வழி ரோடுகள் மற்றும் திசையன்விளை ரோடு ஆகியவற்றை முழுமையாக புதுப்பிக்க நெடுஞ்சாலைத்துறையை கேட்டுக்கொள்ளப்பட்டது.

    மேலும், உடன்குடியில் இருந்து பெரியதாழைக்கு புதியதாக டவுன் பஸ் இயக்கவும், திருச்செந்தூரில் இருந்து குலசேகரன்பட்டினம், உடன்குடி, பெரியதாழை வழியாக நாகர்கோவிலுக்கும் திருச்செந்தூரில் இருந்து பரமன்குறிச்சி, உடன்குடி, திசையன்விளை, நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரிக்கும் புதிய பஸ்கள் இயக்க போக்குவரத்து துறையை கேட்டுக்கொள்வதும், திங்கட்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தையை தினசரி மார்க்கெட்டாக மாற்றி தர கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த 5 அம்ச கோரிக்கைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். இல்லை என்றால் 15 நாளில் உடன்குடியில் முழு கடை அடைப்பு நடத்தி சாலை மறியல் போராட்டம் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. துணைச் செயலாளர் ராஜா நன்றி கூறினார். #tamilnews
    விபத்தில் பலியானவர் உடலை நடுரோட்டில் வைத்து கிராமத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள சூலக்கரை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 28). இவரும், இவரது சகோதரர் நாகேஸ்வரன் என்பவரும் விருதுநகர்- சாத்தூர் ரோட்டில் சூலக்கரைமேடு அருகே ரோட்டை கடந்து சென்றபோது மதுரையில் இருந்து நாங்குநேரி சென்ற கார் மோதியதில் பால்பாண்டி படுகாயம் அடைந்தார்.

    விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இது பற்றி நாகேஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் கார் டிரைவர் மதுரையை சேர்ந்த செல்வம் என்பவரை கைது செய்து வழக்குபதிவு செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று பால்பாண்டியின் உடல் பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை எடுத்து சென்றவர்கள், அதனை நடுரோட்டில் வைத்து மறியலில் இறங்கினார்கள். சூலக்கரை பஸ் நிறுத்தம் அருகே நான்கு வழிச்சாலையில் தடுப்புவேலி வைக்க கோரியும், உயர்கோபுர மின் விளக்கு அமைக்க கோரியும் வலியுறுத்தினர்.

    இந்த போராட்டத்தால் பரபரப்பு உருவானது. நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. 
    26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    விருதுநகர்:

    ஊராட்சி செயலர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இக்கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    மாவட்ட தலைவர் புகழேந்தி தலைமையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட 25 பெண்கள் உள்பட 155 பேர் கைது செய்யப்பட்டனர். 
    கும்பகோணம் அருகே குட்டையில் விளையாடிய போது மண்சரிவில் சிக்கி இரண்டு சிறுமிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    குத்தாலம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஆனைக்காரன்பாளையத்தை சேர்ந்த தேவேந்திரன் மகள் சியாமளா (வயது 10), அதே பகுதியை சேர்ந்த சுதாகர் மகள் வர்சினி (12). சியாமளா அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பும், வர்சினி 7-ம் வகுப்பும் படிந்து வந்தனர்.

    பள்ளி விடுமுறை என்பதால் நாகை மாவட்டம் குத்தாலம் அருகே ராஜகோபாலபுரம் ராஜகாலனி கீழத்தெருவை சேர்ந்த வக்கீல் ராமமூர்த்தி வீட்டுக்கு மாணவி சியாமளாவும், வர்சினியும் சென்று இருந்தனர்.

    இந்தநிலையில் நேற்று மாலை வீட்டுக்கு அருகில் உள்ள கொம்புகாரன் குட்டையில் ஆழமாக மண் எடுக்கப்பட்ட குழிகளில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தனர்.

    அப்போது 2 பேரும் இறங்கி விளையாடிய குழியில் திடீரென மண் சரிவு ஏற்பட்டு மண்ணுக்குள் சிக்கி அலறினர். சத்தம் கேட்டு உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவிகள் 2 பேரையும் மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் குத்தாலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு டாக்டர்கள் இல்லாததால், அங்கிருந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே சியாமளாவும், வர்சினியும் பரிதாபமாக இறந்தனர்.

    இந்தசம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் குத்தாலம் தாசில்தார் சபீதாதேவி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே மயிலாடு துறை அரசு ஆஸ்பத்திரி முன்பு உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    குட்டையில் அனுமதியின்றி மணல் எடுக்கப்படுவதாகவும் , அந்த குழியை சரிசெய்யாமல் விட்டுச்சென்றதுதான் சிறுமிகள் சாவுக்கு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

    இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த எம்.எல்.ஏ.க்கள் ராதாகிருஷ்ணன், பாரதி, உதவி கலெக்டர் தேன்மொழி, மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து குத்தாலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    வேலூர் அருகே குடிநீர் கேட்டு 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வேலூர்:

    வேலூர் அடுத்த ஒடுகத்தூர் மேல்பள்ளிப்பட்டு கிராமத்தில் மின் இணைப்பு துண்டிப்பு, மோட்டார் பழுது காரணமாக கடந்த ஒரு வாரமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.

    இதனால் குடிநீருக்காக அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட ஒன்றிய அலுவலர்களிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    ஆத்திரமடைந்த கிராம மக்கள் 50-க்கும் மேற்பட் டோர் இன்று காலை குருவ ராஜபாளையம்-ஆசனாம் பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். வேப்பங்குப்பம் போலீசார் விரைந்து வந்து சமரசம் செய்தனர்.

    வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பேசி குடிநீர் கிடை க்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து, கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    நீலகிரியில் ஊட்டி நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு சீல் வைக்க முயன்றதால் வியாபாரிகள் கொட்டும் மழையிலும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    காந்தல்:

    ஊட்டி நகராட்சிக்கு சொந்தமாக சுமார் 3 ஆயிரம் கடைகள் உள்ளது. இதனை வாடகைக்கு எடுத்து நடத்தும் வியாபாரிகளுக்கு குறைவான வாடகை தான் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    ஒரு சில வியாபாரிகள் கடைகளை உள் வாடகைக்கு விட்டு அதிக பணம் சம்பாதிப்பதாகவும் புகார் எழுந்தது. ஊட்டி நகராட்சி ஒரு வருடத்திற்கு முன் கடை வாடகையை உயர்த்தியது.

    இதனை பெரும்பாலான வியாபாரிகள் கட்டவில்லை. ஒரு சில வியாபாரிகள் மட்டுமே கட்டினார்கள். உயர்த்தப்பட்ட வாடகையை குறைக்க கோரி வியாபாரிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆகியோருக்கு மனு அனுப்பி இருந்தனர்.

    வாடகையை கட்டா விட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என நகராட்சி சார்பில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனாலும் வியாபாரிகள் வாடகையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

    ஊட்டி நகராட்சி கடைகளை 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே குடும்பத்தினர் தான் நடத்தி வருகிறார்கள். இதனால் பொது ஏல முறையில் விட நகராட்சி முடிவு செய்தது.

    இதற்கும் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று ஊட்டி நகராட்சிக்கு சொந்தமான 1,500 கடைகளுக்கு சீல் வைக்க நகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    இதனை கண்டித்து ஊட்டி மார்க்கெட் முன்பு வியாபாரிகள் மறியலில் ஈடுபட்டனர். ஊட்டியில் இன்று காலை மழை பெய்தது. அதனையும் பொருட்படுத்தாமல் வியாபாரிகள் மறியல் செய்தனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர். இதனை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
    குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து திருவள்ளூர்- ஊத்துக்கோட்டை சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த ஒதப்பை மற்றும் ஆற்றுப்பாக்கம் கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2 மாதமாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

    இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திருவள்ளூர்- ஊத்துக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். கடந்த 2 மாதங்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திருவள்ளுர்- ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்

    தகவல் அறிந்து வந்த பென்னாலூர்பேட்டை போலீசார் மற்றும் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தற்காலிகமாக லாரிகள் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றும் விரைவில் குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர்.

    இதையடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘ஒதப்பை பகுதியில் அரசு குவாரி மூலம் மணல் எடுக்க அனுமதி அளித்த போது நிர்ணயித்த அளவை விட கூடுதல் ஆழத்தில் மணல் எடுத்ததால் ஆற்று நீர் வற்றிப் போனது.

    இதனால் ஒதப்பை மற்றும் ஆற்றுப்பாக்கம் பகுதியில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஆழ்துளை கிணறு அமைத்தாலும் நீர் வராததால் மக்கள் குடிநீருக்காக மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்’ என்றனர்.

    ×