search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 105098"

    • பார்வதி, கங்கை இருவருமே அவருக்கு அன்னை ஆனார்கள்.
    • பிள்ளையாரை நீரில் கரைக்கும் வழக்கம் வந்ததற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

    ஒரு சமயம் பார்வதிதேவி கங்கையில் நீராடியபோதுதன் அழுக்கைத் திரட்டி பொம்மையாக்க, அது யானைத்தலையும் மனித உருக்கொண்டும் அமைந்தது.

    அதை அன்னை கங்கையில் போட பெரிய உருவத்துடன் விநாயகர் வெளிப்பட்டார் அப்போது பார்வதிதேவியும் கங்கையும் அவரை பிள்ளையாக ஏந்திக் கொண்டனர். இக்காரணத்தால் பார்வதி, கங்கை இருவருமே அவருக்கு அன்னை ஆனார்கள்.

    இதனாலேயே சதுர்த்தி முடிந்ததும் பிள்ளையாரைக் கங்கையில் கரைக்கும் வழக்கம் ஏற்பட்டது.

    மற்றொரு வரலாறு :

    விநாயகர் சிலையை நீரில் கரைக்கும் வழக்கம் வந்தது பற்றிய தகவலை இங்கே பார்ப்போம்.

    ஆடிப்பெருக்கில் வெள்ளம் ஏற்படும். அப்போது ஆற்றில் உள்ள மணலை வெள்ளப்பெருக்கு அரித்துச் சென்றுவிடும். இதனால் அந்த இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறையும்.

    மணல் அடித்துச் செல்லாமல் இருப்பதற்கு, களிமண்ணை கரைத்தால், அது கரைந்து ஆற்று நீரை வெளியேற விடாமலும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தியும் தரும் என்று முன்னோர்கள் கணித்தனர். அதனால்தான் விநாயகர் சிலை வைத்து, அதை கரைக்கும் பழக்கம் வந்துள்ளது. ஈரமான களிமண்ணை கரைத்தால் பலன் கிடைக்காது என்பதால்தான், அதை மூன்று நாட்கள் வைத்து அது இறுகிப்போனதும் அதைக் கொண்டு போய் ஆறுகளில் கரைத்துள்ளனர்.

    • திருவாரூர் கோவிலில் விநாயகரை வணங்கினால் சகல கிரக தோஷங்கள் விலகும்.
    • திருவண்ணாமலை கிரிவலம் சாலையில் இடுக்குப் பிள்ளையார் அமைந்துள்ளார்.

    ஒரு தடவை சனிதோஷம் பிடித்த சத்யகுப்தன் என்ற அசுரன் நவகிரகங்களை எதிர்த்துப் போரிட்டான். இதனால் பயந்த நவகிரகங்கள் திருவாரூர் தியாகராசப் பெருமானிடம் முறையிட அவர்களை அவர் அசுரனிடமிருந்து காப்பாற்றினார். அதனால் இங்கு நவகிரகங்கள் நேர்கோட்டில் சிவபெருமானை நோக்கி அமைந்துள்ளன.

    நவகிரகங்கள் பக்தர்களுக்கு தொல்லை கொடுக்கின்றனவா என்பதைக் கண்காணிக்க, விநாயகர் சிலையும் இந்த நவகிரக சன்னதியில் உள்ளது. அதனால் திருவாரூர் கோவிலில் விநாயகரை வணங்கினால் சகல கிரக தோஷங்கள் விலகும்.

    108 திருப்பதிகளில் சென்னையை அடுத்த திருநீர்மலையும் ஒன்று. இங்குள்ள குளத்தின் பெயர் மணிகர்ணிகாதடாகம். இந்த மணிகர்ணிகா தடாகத்தின் கிழக்குக் கரையில் தூம கேது விநாயகர் எழுந்தருளியுள்ளார்.

    தூமம் என்றால் ராகு, ராகு கேது ஆகிய இரண்டு வடிவமும் இணைந்து விளங்குகிறார் தூம கேது விநாயகர். இவரை வெள்ளி, சனி, ஞாயிறு, செவ்வாய் போன்ற நாட்களில் தரிசிக்கலாம். திருமணமாகாத பெண்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபடும் போது, அவர்களது ராகு, கேது தோஷம் நீங்கி திருமணம் நடந்து விடுவதாக கூறுகிறார்கள்.

    விநாயகர், சதுர்த்தியன்று இத்தலத்தில் சிறப்பு யாகம் நடைபெறும். குழந்தைப் பாக்கியம் வேண்டுவோருக்கு கணபதி யாகம் நடத்தப்படுகிறது. வலம்புரிச்சங்கு கொண்டு பால் அபிஷேகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் மற்ற விசேஷ நாட்களிலும் வலம்புரிச்சங்கு தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    இதைப் போலவே திருச்சியிலிருந்துமேற்கு புறம் முப்பத்தைந்து கி.மீ. தொலைவில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள கடம்பனேஸ்வரர் கோவிலிலும் ராகு கேது இருபுறம் இருக்க, நடுவில் இடஞ்சுழி விநாயகராக நின்ற கோலத்தில் வன்னிமரத்தடியில் மேடையில் வீற்றிருக்கிறார். தோஷம் நீங்க நெய்விளக்கேற்றி இவரை வழிபடலாம்.

    சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்னால் பாண்டியர்கள் கொற்கையிலிருந்து அரசாண்ட பொழுது, அரசன் செய்த யாகத்தில் கலந்து கொண்ட அந்தணர்களால், நர்மதை நதிக்கரையிலிருந்து கொண்டு வரப்பட்டு இந்த விநாயகர் ஸ்தாபிக்கப்பட்டார். எனவே இந்த விநாயகரே தமிழ்நாட்டில் முதலில் வந்த பிள்ளையார் என்கின்றனர். விநாயகரை மூலவராக கொண்ட கோவில்களில் கொடிமரம், திருத்தேர் கொண்டு திருநாள் காணும் கோவில் இது மட்டுமே. இத்திருத்கோவிலில் அபூர்வமான பஞ்சமுக விநாயகரும் வீற்றிருக்கிறார்.

    காளஸ்தீஸ்வரரும் இக்கோவிலில் இருந்து அருள்பாலிப்பதால், கால சர்ப்ப தோஷ பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. திருவாரூர் வன்னியூர் (காரையூர்) கிராமத்தில் உள்ள விநாயகரை வன்னி இலையாலும், மந்தாரைப் புஷ்பத்தாலும் அர்ச்சனை செய்து வழிபட்டால் சகல பாவங்களும் தீரும்.

    தஞ்சாவூர் பில்லுக்காரத் தெருவில் ஸ்ரீ சக்தி முனியாண்டவர் திருக்கோயில் உள்ளது. இந்த கோவிலின் அரசு-வேம்பு இணைந்த மரத்தடியில், ஐந்து தலை நாகம் குடை பிடிக்க, நாக அணி பூண்டு வீற்றிருக்கிறார் ஸ்ரீ நாகநாத விநாயகர். நாக தோஷம், ராகு-கேது தோஷங்களை நீக்குகிறார் என்பதால் தினமுமே இங்கு விழாக்கோலம் தான்.

    மரண பயம், விஷ ஜந்துக்கள் பயம் நீக்குவதுடன், திருமணத் தடையை அகற்றி மழலை பாக்கியமும் தந்தருள்கிறார் இந்த விநாயகர். வேதாரண்யத்தில் உள்ள கோயிலின் வெளிப்பிரகாரத்தில் மேற்கு நோக்கி வீரஹத்தி விநாயகர் வீற்றிருக்கிறார். ராவணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க, ராமபிரான் ராமேசுவரத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். எனினும் அவரை விடாமல் தொடர்ந்து வந்த வீரஹத்தியைத் தீர்த்தருளிய காரணத்தால் இவருக்கு இந்தப் பெயர் அமைந்தது என்கிறது தலப் புராணம். நாமும் இவரை வழிபட தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

    திருவண்ணாமலை கிரிவலம் சாலையில் இடுக்குப் பிள்ளையார் அமைந்துள்ளார். இவரை பிள்ளையார் வடிவில் காண முடியவில்லை. கோவிலின் முன்புறம் இரண்டு பாதங்கள் அமைந்துள்ளன. கோவிலின் பின்புறம் மண்டியிட்டுப் படுத்து சர்க்கசில் இரும்பு வளையத்தில் நுழைவது போல, நுழைந்து முன்புறமாக வெளிவருவது தான் இக்கோவிலில் செய்யும் பிரார்த்தனை, தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு உடல் வலி, பில்லி சூனியம் போன்றவை அகலுதல் ஆகிய பலன்கள் கிடைக்கும்.

    • ஆதிசங்கரர் பாடிய கணேச பஞ்சரத்தினத்தின் பொருளை தொகுத்து வழங்கி இருக்கிறோம்.
    • விநாயக சதுர்த்தி அன்று படியுங்கள். பலன் பெறுங்கள்.

    விநாயக சதுர்த்தி அன்று விநாயகரை போற்றி வழிபடுவதற்கு ஆதிசங்கரர் பாடிய கணேச பஞ்சரத்தினத்தின் பொருளை தொகுத்து வழங்கி இருக்கிறோம். படியுங்கள். பலன் பெறுங்கள்.

    "தனக்கு மேல் வேறு ஒரு தலைவன் இல்லை என்ற ஒப்பற்ற தனிப் பெருந்தலைவனே !

    கஜமுகாசுரனை அழித்து தேவர்களைக் காத்தவனே !

    அற்புதம் நிகழ்த்துபவனே !

    மோதகம் ஏந்தியவனே !

    சந்திரனைத் தலையில் சூடியவனே !

    உயிர்களை முக்தி நெறியில் செலுத்துபவனே !

    உன்னை நம்பும் அடியவர்களின் தீவினைகளைப் போக்கி கருணை காட்டும் கணபதியே !

    உம்மை வணங்குகிறேன். தேவாதிதேவனே !

    பாமரர்களின் அறியாமையைப் போக்குபவனே !

    வல்லமை நிறைந்தவனே !

    ஆனைமுகனே !

    கருணை மிக்க இதயம் கொண்டவனே !

    அப்பாலுக்கும் அப்பாலாய் வீற்றிருக்கும் பரம்பொருளே !

    எப்போதும் உன் திருவடியை சரணடைந்து வழிபடும் பாக்கியத்தை அருள்வாயாக.

    ஓங்கார வடிவினனே ! கருணாமூர்த்தியே !

    பொறுமை, மகிழ்ச்சி, புகழ் மிக்கவனே !

    எல்லா உயிர்களும் மகிழும்படி நன்மை அருள்பவனே !

    பணியும் அன்பர்களின் பிழை பொறுப்பவனே !

    அடியார் வேண்டும் வரம் தந்தருள்பவனே !

    நித்ய வடிவினே !

    உன்னை வணங்குகிறேன். கன்னத்தில் மதநீர் பொழியும் கஜமுகப் பெருமானே ! சிரிப்பாலே திரிபுர சம்ஹாரம் செய்த சிவபெருமானின் புதல்வனே !

    பக்தர்களின் துயர் களைபவனே !

    ஊழிக் காலத்தில் உலகத்தைக் காத்தருள்பவனே !

    செய்யும் செயல்களின் வெற்றிக்குத் துணைநிற்கும் ஆதிபரம்பொருளே !

    உன்னை சரணடைந்து போற்றுகின்றேன்.

    ஒற்றைக் கொம்பனே ! கணபதீஸ்வரா !

    சிவ பெருமானின் பிள்ளையே !

    ஆதிஅந்தமில்லாதவனே !

    துன்பம் துடைப்பவனே !

    யோகியர் உள்ளத்தில் குடிகொண்டவனே !

    உன் திருவடிகளை எப்போதும் திருவடியில் வைத்து சிரம் தாழ்த்தி வணங்கும் இச்சிறியேனையும் காத்தருள்வாயாக.

    இதை விநாயக சதுர்த்தி அன்று விநாயகரின் முன் பக்தியோடு சொல்லி வழிபடுவோருக்கு தொடங்கும் செயல்கள் யாவும் இனிதே நிறைவேறும். தோஷங்கள் யாவும் நீங்கும். வாழ்வில் உண்டாகும் துன்பம் தொல்லை யாவும் அடியோடு அகலும். குலம்தழைக்க மழலைச் செல்வம் கிடைக்கும்.மேம்பாடும் நற்புகழும் உண்டாகும். அஷ்டமாசித்திகள் கை கூடும்.

    • விநாயகர் சதுர்த்தி விழா நாளை (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.
    • பிள்ளையார் சிலைகள் ரூ.40 முதல் 180 வரை விற்பனை செய்யப்பட்டன.

    சென்னை :

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்படவில்லை. இந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா நாளை (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.

    பொதுவாக விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, தமிழகத்தில் பெரும்பாலான வீடுகளில் சிறிய வடிவிலான மண் பிள்ளையார் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவது வழக்கம். அதன் பிறகு அருகில் உள்ள நீர்நிலைகளில் வீட்டில் உள்ள நபர்கள் கரைப்பது வழக்கம். அல்லது, தங்கள் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெரிய வடிவிலான பிள்ளையார் சிலைகள் கரைக்க கொண்டு செல்லும் போது, அந்த வாகனங்களில் இந்த மண் பிள்ளையார்களையும் சேர்த்து அனுப்பி விடுவார்கள்.

    இந்த நிலையில், சென்னையில் உள்ள கோயம்பேடு, புரசைவாக்கம், தியாகராயநகர், மயிலாப்பூர், மூலக்கடை உள்ளிட்ட பிரதான மார்க்கெட் பகுதிகளில் சிறிய வடிவிலான மண் பிள்ளையார் சிலைகள் விற்பனைக்கு வந்தன. இந்த சிலைகள் ரூ.40 முதல் ரூ.180 வரை விற்பனை செய்யப்படுகின்றன.

    விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த மண் பிள்ளையார் சிலைகள் விற்பனை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை முதல் நாளை மாலை வரை விறுவிறுப்பாக விற்பனையாகும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் ஒரு சிலர் நேற்றே மண் பிள்ளையார் சிலைகளை வாங்கிச் சென்றதையும் பார்க்க முடிந்தது.

    இதே போன்று, விநாயகர் சதுர்த்தி விழா வழிபாட்டில் வைக்கப்படும் பிரதான பொருட்களான கரும்பு, விளாம்பழம், கம்பு மற்றும் சோளம் போன்றவை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்தன.

    மேலும், விநாயகர் சதுர்த்தியையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் பூ மற்றும் பழங்கள் வியாபாரம் கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று காலை திடீரென பெய்த மழை காரணமாக விற்பனை மந்தமானதாக பூ மற்றும் பழக்கடை வியாபாரிகள் தெரிவித்தனர்.

    எனினும், விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பூ மற்றும் பழங்கள் விற்பனை கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • சென்னையில் மட்டும் 5 ஆயிரத்து 501 சிலைகள் வைக்கப்பட உள்ளன.
    • விநாயகர் சதுர்த்தி விசர்ஜன விழா 4-ந் தேதி நடைபெற உள்ளது.

    சென்னை :

    கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ள நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு விநாயகர் சதுர்த்தி விழா நாளை (புதன்கிழமை) நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

    இதற்காக தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் 1¼ லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. சென்னையில் மட்டும் 5 ஆயிரத்து 501 சிலைகள் வைக்கப்பட உள்ளன.

    இந்து முன்னணி தவிர மேலும் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் தனிநபர்களும் ஆங்காங்கே பிள்ளையார் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்ய தயார் நிலையில் உள்ளனர். இதற்காக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பிள்ளையார் சிலைகள் களிமண் மற்றும் 'பிளாஸ்டர் ஆப் பாரிசாலும்' செய்யப்பட்டு வருகின்றன.

    பொதுவாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும்போது, அந்த நேரத்தில் நடைபெறும் பிரபலமான நிகழ்வுகளை மையப்படுத்தி விநாயகர் சிலைகள் தயாரிப்பது வழக்கம்.

    2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் கொரோனா தொற்று பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படாமல் இந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ளது. இந்தநிலையில் உலகம் முழுவதும் உள்ள மக்களை வாட்டி வதைத்த கொரோனா வைரசை கட்டுப்படுத்திய கொரோனா தடுப்பூசியை மையப்படுத்தி இந்த ஆண்டு கொரோனா தடுப்பூசி நாயகன் விநாயகர் புதுவரவு பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

    இதே போன்று, கடந்த ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்டு 9-ந் தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 40-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. இதனை மையப்படுத்தி பிள்ளையாரும், முருகரும் செஸ் விளையாடுவது போன்ற சிலைகளும் புதுவரவு பட்டியலில் இடம் பெற்றுள்ளன. மேலும், வழக்கம் போல் சிவன் மற்றும் விஷ்ணு வடிவில் பிள்ளையார், சக்தியுடன் பிள்ளையார், சித்தி மற்றும் புத்தியுடன் பிள்ளையார், மலேசியா முருகன் வடிவிலான பிள்ளையார், யானை மீது பிள்ளையார், புலிகள் மீது பிள்ளையார், கருடன் மற்றும் மயில் மீது பிள்ளையார், சிக்ஸ் பேக் பிள்ளையார் என பல்வேறு வடிவிலான பிள்ளையார் சிலைகள் 3 அடி முதல் 15 அடி உயரம் வரையில் உருவாக்கப்பட்டு பிரதிஷ்டை செய்து வழிபட தயார் நிலையில் உள்ளன.

    இவ்வாறு பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படும் விசர்ஜன விழா அவரவர் விருப்பத்திற்கு இணங்க வருகிற 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னையில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன விழா 4-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த விநாயகர் சிலைகள் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில், சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர், நவ்ரோஜி தெருவில் பிள்ளையார் சிலைகள் தயாரிக்கும் தொழில் செய்து வரும் கொல்கத்தாவை சேர்ந்த பரத்நாத் பால் என்கிற பாபி கூறியதாவது:-

    நான் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பிள்ளையார் சிலைகள் செய்யும் தொழில் செய்து வருகிறேன். ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் தொடங்கி விநாயகர் சதுர்த்தி விழா வரை நூற்றுக்கும் மேற்பட்ட பெரிய சிலைகள் தயாரித்து வழங்குவேன். ஆனால், இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுமா? என்ற சந்தேகத்தின் காரணமாக சிலைகள் செய்ய தொடங்கவில்லை. எனவே, இந்த ஆண்டு வெறும் 35 பெரிய சிலைகள் மட்டுமே செய்ய முடிந்தது.

    நான் பிள்ளையார் சிலை செய்வதற்காக கொல்கத்தாவில் இருந்து லாரிகள் மூலம் பிரத்யேகமான களிமண் கொண்டு வந்து வைக்கோல் மற்றும் களிமண் மூலம் மட்டும்தான் சிலைகளை செய்து வருகிறேன். தொழிலாளர்களும் கொல்கத்தாவை சேர்ந்தவர்கள்தான். கடந்த 20 நாட்களாக நாங்கள் இரவு பகல் பாராமல் வேலை பார்த்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த விரதத்தை உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் அனுஷ்டிப்பது மிகவும் விசேஷம்.
    • பூஜை நேரம் வரை பட்டினியாக இருப்பது சிறப்பு.

    விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் தருவார். அதனால்தான் அவர் எல்லோருக்கும் பொதுவாகவும், யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார்.

    விநாயகர் விரதத்தை பார்வதி தேவியே மேற்கொண்டி ருக்கிறார். தன் கணவரை அவமதித்து யாகம் நடத்திய தந்தை தட்சனிடம் நியாயம் கேட்கப் போனாள் பார்வதி என்ற தாட்சாயணி. ஆனால், தட்சனோ மிகவும் கர்வம் பிடித்தவன். மருமகனை அவமானப்படுத்தியது போதாதென்று, மகளையும் கேலி பேசினான்.

    இந்த அவமானத்தை பொறுத்துக் கொள்ள முடியாத தாட்சாயணி, தட்சன் வளர்த்து வைத்திருந்த யாக குண்டத்தில் அப்படியே பாய்ந்துவிட்டாள்.

    அதன்பிறகு, பர்வதரா ஜனுக்கு மகளாகப் பிறந்து பார்வதி என்னும் பெயருடன் வளர்ந்து வந்தாள். சிறு வயதில் இருந்தே கயிலைநாதன்தான் தன் கணவன் என்று தீர்மானமாக இருந்தாள். அவளுடைய அந்த எண்ணம் பலிக்க வேண்டும் என்றால், அவள் விநாயகரை நினைத்து சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டுமென்று அவளுடைய தந்தையார் பர்வதராஜன் யோசனை சொன்னார்.

    அவர் சொன்னபடியே, மண்ணால் ஒரு விநாயகர் விக்ரகத்தை உருவாக்கினாள் பார்வதி. கூடவே தங்கத்தாலும் ஓர் உருவம் செய்து இரண்டையும் பொற்கும்பம் ஒன்றின் பக்கத்தில் வைத்தாள். அந்த விக்ரகங்களுக்கு ஆகம விதிப்படி பூஜைகளை செய்தாள். ஆவணி மாத அமாவாசைக்கு அடுத்த சதுர்த்தியில் இப்படி பூஜையை ஆரம்பித்து, பவுர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி வரையில் தினமும் பூஜை செய்தாள்.

    அதற்குப் பிறகு மண் பிள்ளையாரை, மேள தாளத்தோடு ஊர்வலமாக எடுத்துப் போய் நதியிலே இறக்கி விட்டாள். அந்த பதினைந்து நாட்களும் நியம நிஷ்டைகளை மீறாமல் இருந்த விரதத்தின் பலனாக, தான் ஆசைப்பட்டாற்போல கயிலைநாதனை கைப்பிடித்தாள்.

    விநாயகர் ஆதி பரம்பொருள். எல்லோருக்கும் மூத்தவர். பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று எல்லோரையும் உருவாக்கியவர் அவர்தான். அவர் சாதிக்க வேண்டியது நிறைய இருந்ததால் அவர் பலவித அவதாரங்களை எடுத்தார். அந்த மாதிரியான ஒரு அவதாரம்தான் சிவன் மகனாக அவர் தோன்றியது. அற்பத் தாவரமான புல்லையும் (அருகம்புல்) அவர் ஏற்றுக் கொள்கிறார். காட்டுப்பூவான எருக்கம்பூவைக் கூட அவர் மறுப்பதில்லை.

    விநாயகர் சதுர்த்தி தினத்தன்று விடியற் காலையிலேயே எழுந்து, சுத்தமாக குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டலாம்.முடிந்தால், இரண்டு வாழைக் கன்றுகளையும் வாசலின் இருபுறங்களிலும் கட்டி வைக்கலாம். பிறகு, பூஜையறையில் சுத்தம் செய்த ஒரு மனையை வைக்க வேண்டும்.

    அதன்மேல் ஒரு கோலம் போட்டு, அதன்மேல் ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும். இலையின் நுனி வடக்கு பார்த்ததுபோல இருப்பது நல்லது. இந்த இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும்.

    பூமியில் இருந்து உருவான எதுவும் பூமிக்கே திரும்பப் போகவேண்டும் என்ற தத்துவம்தான் களிமண் பிள்ளையார். களிமண் மட்டும்தான் என்றில்லாமல், உலோகம், கற்சிலை விக்ர கங்களையும் வைக்கலாம்.

    பத்ர புஷ்பம் எனப்படும் பல்வகைப் பூக்கள் கொண்ட கொத்து, எருக்கம்பூ மாலை, அருகம்புல், சாமந்தி, மல்லி என்று எத்தனை வகை பூக்களை வாங்க முடியுமோ, அவரவர் வசதிக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம். அதேபோல முடிந்த அளவுக்கு சில வகை பழங்களையும் வாங்கிக் கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் விட, விநாயகருக்கு மிகவும் பிடித்தமான மோதகத்தை செய்து கொள்ளலாம்.

    அதாவது கொழுக்கட்டை. தேங்காய் பூர்ணத்தை உள்ளே வைத்து செய்யப்படுவது. இதிலும் ஒரு தத்துவம் இருக்கிறது. மேலே இருக்கும் மாவுப் பொருள்தான் அண்டம்.

    உள்ளே இருக்கும் வெல்லப் பூர்ணம்தான் பிரம்மம். அதாவது நமக்குள் இருக்கும் இனிய குணங்களை மாயை மறைக்கிறது. இந்த மாயையை உடைத்தால் அதாவது வெள்ளை மாவுப் பொருளை உடைத்தால், உள்ளே இனிய குணமான வெல்லப் பூர்ணம் நமக்குக் கிடைக்கும்.

    (விநாயகருக்கு முதன் முதலாக இந்தக் கொழுக்கட்டையை நிவேதனம் செய்தது, வசிஷ்ட முனிவருடைய மனைவியான அருந்ததி.)

    பிள்ளையாருக்கு பூக்களால் அலங்காரம் செய்து விட்டு, பிறகு விநாயகர் பாடல்கள் எதை வேண்டுமானாலும் பாடலாம்.

    அவ்வையார் தந்த விநாயகர் அகவல், காரிய சித்தி மாலை படிப்பது விசேஷமான பலன்களைத் தரும். பிள்ளையாருக்கு கொழுக்கட்டை மட்டுமில்லாமல், அவரவர் வசதிக்கேற்ப எள்ளுருண்டை, பாயாசம், வடை என்றும் நைவேத்யம் செய்யலாம். பால், தேன், வெல்லம், முந்திரி, அவல் என்று ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து ஒன்றாகக் கலந்து அதையும் நைவேத்யம் செய்யலாம். நிவேதனப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் 21 என்ற கணக்கில் சிலர் வைப்பார்கள். ஆனால், எண்ணிக்கை முக்கியமில்லை; ஈடுபாடுதான் முக்கியம். பிறகு கற்பூரம் காட்டி விரதத்தை முடிக்கலாம்.

    இந்த விரதத்தை காலையில் இருந்தே உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் அனுஷ்டிப்பது மிகவும் விசேஷம். பூஜை நேரம் வரை பட்டினியாக இருப்பது சிறப்பு. சம்பிரதாயம் பார்க்கக் கூடியவர்கள் இந்த விநாயகர் சதுர்த்திக்குப் பிறகும் தொடர்ந்து விரதத்தை அனுசரிப்பார்கள். அப்படித் தொடர்ந்து, பவுர்ணமிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினத்தோடு விரதத்தை நிறைவு செய்வார்கள்.

    • 2 ஆண்டுகளுக்குப் பிறகு விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் (31-ந் தேதி) கொண்டாடப்படுகிறது.
    • ½ அடி முதல் 10 அடி வரை உயரத்திற்கு விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்படுகிறது. மயில் விநாயகர், அன்ன விநாயகர் உள்பட பல்வேறு வடிவிலான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு

    நாகர்கோவில்:

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழாவும் ஒன்று. விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கொண்டாடப்படவில்லை. 2 ஆண்டுகளுக்குப் பிறகு விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் (31-ந் தேதி)கொண்டாடப்படுகிறது.

    இதனால் விநாயகர் சதுர்த்தி விழாவை வெகு விமர்சையாக கொண்டாட இந்து அமைப்புகள் தயாராகி வருகிறது. இந்து முன்னணி, பாரதிய ஜனதா, இந்து மகா சபா, சிவசேனா உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு தயாராகி வருகிறார்கள்.குமரி மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகளை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    நாளை மறுநாள் (31-ந்தேதி) காலையில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. ½ அடி முதல் 10 அடி வரை உயரத்திற்கு விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்படுகிறது. மயில் விநாயகர், அன்ன விநாயகர் உள்பட பல்வேறு வடிவிலான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    முக்கிய இடங்களில் மட்டுமின்றி வீடுகளிலும் விநாயகர் சிலைகளை வைப்பதற்கு இந்து அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளன. பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளுக்கு காலை, மாலை இரு வேளைகளிலும் பூஜைகள் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு சிலைகளை 2,3,4-ந் தேதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கவும் முடிவு செய்துள்ளனர்.

    விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். விநாயகர் சிலைகளை ஏற்கனவே பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.பொது மக்களுக்கு இடையூறாக விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யக்கூடாது.

    10 அடிக்கு மேல் உள்ள விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யக்கூடாது. விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் இடங்கள் எளிதில் தீப்பிடிக்காத வகையில் இருக்க வேண்டும். சிலைகளை கண்காணிக்க கண்காணிப்பு குழு அமைத்திருக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதே போல் சிலைகளை கரைப்பதற்கும் கட்டுப்பாடு கள் விதிக்கப்பட்டுள்ளது. போலீசார் அனுமதித்த வழித்தடத்தில் மட்டுமே சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும். ஊர்வலத்தின் போது பிற மனதை புண்படுத்தும் வகையில் கோஷங்கள் எழுப்பக் கூடாது.கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கன்னியாகுமரி கடற்கரை சொத்தவிளை, சங்குதுறை கடற்கரை உட்பட 10 இடங்களில் சிலைகள் கரைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த 10 இடங்களிலும் மின்விளக்கு வசதி உட்பட அடிப்படை வசதிகளை பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    • விநாயகப் பெருமானை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
    • விநாயகரை தோப்புக் கரணம் போட்டு வணங்க வேண்டும்.

    எல்லா சுப நிகழ்வுகளுக்கும் முன் நின்று நிறைவாய் நடத்தி தரும் விநாயகப் பெருமாளின் நேர்மறை சக்தியை உணராதவர்கள் உண்டோ! துதிக்கையோடு ஐந்து கரத்தனை உடையவரும் மிக்க பலம் பொருந்தியவர் என்பதன் குறியீடாக யானை முகத்தை பெற்றவரும், இளம் பிறை சந்திரனைப் போன்ற அழகான தந்தத்தை உடையவரும், அன்பே வடிவமான சிவபெருமானின் மூத்த குமாரரும் ஞானத்தின் தெளிவாய் விளங்குபவரும் ஆன விநாயகரின் திருவடிகளை போற்றி அவரை நம் உள்ளத்தில் வைத்து வணங்குவோம்.

    நம்முடைய தினப்படி வாழ்க்கையில் எல்லா சமயங்களிலும் நேர்மறை சிந்தனை இருப்பின் நேர்மறையான எண்ணங்களே உதிக்கும். நேர்மறையான எண்ணங்கள் உதிக்கின்ற பட்சத்தில் தூய்மையான குண நலன்களுக்கு வழிவகுக்கும் அவை நல்ல செயல்களை மேற்கொள்ள நம்மை வழிநடத்தும். விநாயகரை துதிப்பது மேற்படி தூய்மையான நேர்மையான சூழல் நிலவவும், வாழ்வை ஒவ்வொரு கணமும் நாம் இனிமையாக அனுபவித்து வாழவும் தான்.

    சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விநாயகப் பெருமானை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஞானத்தின் சிகரமாக அவரை கருதப்பட்டாலும் பக்தி மார்க்கத்தில் உருவ வழிபாட்டில் விநாயகரையே எல்லா இடங்களிலும் நாம் முன்னிறுத்துகின்றோம் என்பது குறிப்பிடத்தக்கது.

    சற்றே கவனித்தால் எல்லா விழாக்களுக்கும் முத்தாய்ப்பாய் விளங்குவது விநாயகர் சதுர்த்தி தான். இந்தியா முழுவதும் ஏன் தற்போது உலகெங்கிலும் கொண்டாடப்படும் விழாவாக இருப்பது மகிழ்வுக்கு உரியது.

    விநாயகர் சதுரத்தி கொண்டாட்டம் அவரவர் குடும்ப வழக்கப்படி 1,3,5,7,9 மற்றும் 11 நாட்கள் என கொண்டாடப்படும். முதல் நாள் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வீட்டில் வைத்து பூ மற்றும் மாலை அணிவித்து அலங்காரம் செய்வதோடு தம் வீடுகளை பூ மற்றும் விளக்குகளால் அலங்கரிப்பார்கள். வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெறுவார்கள். உறவினர் மற்றும் நண்பர்களை வீட்டிற்க்கு அழைத்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வார்கள்.

    • வன்னி மரத்தடி விநாயகர் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்.
    • விநாயகரை தோப்புக் கரணம் போட்டு வணங்க வேண்டும்.

    வேண்டியதை எல்லாம் அளிப்பவர் விநாயகர். தடைகளை நீக்குபவர். அறிவாற்றலை குறிக்கும் கடவுள் விநாயகர். அவரை வழி படுவது மிகவும் எளிமையானது. மஞ்சள் அல்லது சாணத்தை பிடித்து வைத்து வழிபடலாம். எங்கும் நிறைந்த்திருக்கும் அருகம் புல் மற்றும் எருக்கம் பூ அவருக்கு விருப்பமான இலை மற்றும் பூவாகும். எப்போது வேண்டுமானாலும் விநாயகரை வணங்கலாம். மூன்று தெருக்கள் கூடும் இடத்தில் விநாயர் காணப்படுவார். விநாயகர் அரச மரத்தடிகளில் காணப்படுவார். வன்னி மரத்தடி விநாயகர் மிகவும் சிறப்பு வாய்ந்தவர். அரசமரம் மரங்களிலே மிக அதிகமாக ஆக்ஸிஜனை வெளிப்படுத்தக்கூடிய மரம். அந்த மரத்தடியில் இருக்கும் விநாயகரை வணங்கும் போது நமக்கு நிறைய பிராணவாயு கிடைத்து மனமும் உடலும் சிறப்பாக இயங்க உதவுகிறது.

    ஒவ்வொரு மாதம் சதுர்த்தி திதி அதாவது அமாவாசை பௌர்ணமியை அடுத்து வரும் நான்காம் நாள் அன்று விநாயகரை வணங்குவது சிறப்பு. ஆவணி மாதம் வளர் பிறை சதுர்த்தி விநாயகர் பிறந்த தினம். ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக உலகம் முழுவதும் கொண்டாடப் படுகிறது.

    விநாயகர் சதுர்த்தி விழா 3-10 நாட்கள் கொண்டாடப்படும்

    விழா என்றாலே பிள்ளைகளுக்கு கொண்டாட்டம். காரணம் விடுமுறை, புத்தாடை மற்றும் வகை வகையான இனிப்பு உணவுகள். விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டில் உள்ள பெரியவர்கள் குளித்து விட்டு, புத்தாடை அணிந்து கோலம் போட்ட ஒரு மனையை எடுத்துக் கொண்டு விநாயகர் சிலை வாங்க கடை வீதிக்கு செல்வார்கள். உடன் குழந்தைகளும் புத்தாடையில் மகிழ்ச்சியோடு செல்வார்கள். விநாயகர் சிலையோடு எருக்கம் பூ மாலை, குடை, கண்மணி, கொய்யாப்பழம் மற்றும் அருகம் புல் வாங்கிவருவார்கள். வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்ய துவங்குவார்கள். வீட்டில் உள்ள பெண்கள் விநாயகர் சதுர்த்தி அன்று படைக்க வேண்டிய உணவுகளான அப்பம், கொழுக்கட்டை, அவல், பொரி, சக்கரை பொங்கல், சுண்டல், இவற்றை சமைப்பார்கள்.

    நல்ல நேரம் பார்த்து பூஜையை துவங்குவார்கள். விநாயகரை தோப்புக் கரணம் போட்டு வணங்க வேண்டும். நாம் எண்ணிய காரியம் வெற்றி அடையும். தோப்பு கரணம் போடும் போது நம் உடலில் குண்டலினி சக்தி செயல் படுவதாக சொல்லப்படுகிறது. அப்போது என்ன வேண்டுகிறோமோ அது நடக்கும் என்று சொல்கிறார்கள்.

    தோப்பு கரணம் போடும் முறையை பாப்போம். கால்களை தோள்பட்டை அகலத்திற்கு வைத்துக் கொள்ளவும். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொள்ளவும். இப்படி பிடிக்கும் போது உங்கள் கை கட்டை விரல் வெளிப்பக்கமாகவும், ஆள் காட்டி விரலை உள் பக்கமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். மூன்று முறை உட்க்கார்ந்து எழவும். பின்னர் கைகளால் தலையின் பக்கவாட்டில் அதாவது காதுக்கு சற்று மேலே குட்டிக் கொள்ளவும்.

    மூன்று முறை இருந்த இடத்திலேயே வலப்பக்கம் சுற்றிக் கொள்ளவும். இந்த நிலையில் நீங்கள் விநாயகரிடம் வேண்டுவது கிடைக்கும் என்று சொல்கிறார்கள். குழந்தைகளின் நினைவாற்றல் வளர கல்வி நன்றாக பயில நாள் தோறும் தோப்பு கரணம் போட்டு விநாயகரை வணங்குவது சிறப்பு.

    விநாயகருக்கு படைக்கும் உணவுகளில் உள்ள அறிவியல் கருத்தை பாப்போம். சூரிய ஒளி மிகுதியாக இருக்கக்கூடிய பூக்களில் ஒன்று எருக்கம் பூ. அருகம்புல் சாறு இருதய நோயை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. அருகம் புல் வேர் ஆழமாக செல்லக் கூடியது. அறிவு ஆழமாக இருக்க வேண்டும் என்பதை குறிக்க அருகம் புல் படைக்கப் படுகிறது. கொழுக்கட்டை நினைவாற்றலை வளர்க்கும் ஒரு அற்புதமான உணவாகும். குழந்தைகள் கொழுக்கட்டை உண்டு வர நினைவாற்றல் பெருகும்.

    இனி சமைத்த உணவுகளையும் படைத்து, குழந்தைகள் விநாயகர் பாடலை பாட, மகிழ்ச்சியோடு விநாயகருக்கு தீபம் காட்டி வணங்க வேண்டும். பொதுவாக 3 நாட்கள் விநாயகர் சிலையை வீட்டில் வைத்து வழிபட்டு பின்னர் ஓடும் நீரிலோ குளத்திலோ கரைத்து விடுவார்கள். கோயில்களில் விநாயகரை ஊர்வலமாக எடுத்து சென்று கடலில் கரைப்பார்கள்.

    விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் போது அதில் மறைந்துள்ள அறிவியல் தத்துவங்களை உணர்ந்து வாழ்க்கையில் எல்லா நன்மைகளையும் பெறுவோம்.

    • விநாயகர் சதுர்த்திவிழா வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
    • விநாயகர் சிலைகளை ஆர்வமுடன் பொது மக்கள் வாங்கி செல்கிறார்கள்.

    விநாயகர் சதுர்த்திவிழா வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது. வீடு களிலும், தெருக்களிலும் விநாயகர் சிலைகளை அலங்கரித்து வைத்து பூஜை, வழிபாடு செய்வது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

    இதையொட்டி சென்னையில் களிமண் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி அனைத்து இடங்களிலும் நடந்து வருகிறது. சுற்றுச் சூழல் பாதிக்காத வகையில் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு உள்ளன. பல்வேறு விதமான தோற்றங்களில் கண்களை கவரும் வகையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வர்ணங்கள்பூசி மெருகேற்றப்பட்டு உள்ளன.

    புரசைவாக்கம் கொசப்பேட்டையில் அடி 12 அடி உயரம் வரையிலான பிரமாண்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டு உள்ளன.

    சென்னை புறநகர், பெரியபாளையம் திருவள்ளூர் காஞ்சிபுரம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெரிய வடிவிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு உள்ளன.

    கொசப்பேட்டை 5 விளக்கு சந்திப்பு, வெங்கடேசன்தெரு, உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் பொதுமக்கள் கவனத்தை பெரிதும் ஈர்த்து வருகின்றன.

    இந்த ஆண்டு புதிதாக சாய்பாபா வடிவில் விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. சிங்கம், புலிவடிவில், வித்தியாசமான தோற்றங்களில் கலர்புல் வண்ணத்தில் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கிறார்கள்.

    • 31-ந்தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.
    • இந்த விநாயகர் சிலை 4 டன் எடை கொண்டது.

    விஸ்வரூப விநாயகர் குழு சார்பில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் இருந்து 32 அடி உயரத்தில் விநாயகர் சிலை ஊர்வலமாக நாகூர் வெட்டாற்று பாலம் வரை எடுத்து செல்லப்படும்.

    இந்த நிலையில் விஸ்வரூப விநாயகர் குழுவினர் முயற்சியால் முழுவதும் அத்திமரத்தால் செய்த 32 அடி உயர விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டது.

    இந்த விநாயகர் சிலை நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது. நீல தெற்கு, வடக்கு என 4 வீதிகளின் வழியாக விநாயகர் சிலை கொண்டு செல்லப்பட்டது. தாசில்தார் கார்த்திகேயன் தலைமையில் வருவாய்த்துறையினர், நாகை நகரபோலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இதுகுறித்து நாகை விஸ்வரூப விநாயகர் குழுவினர் கூறியதாவது:- பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்ட பணத்தின் மூலம் புதிய முயற்சியாக அத்தி மரத்திலேயே விநாயகர் சிலை வடிவமைக்க முடிவு செய்தோம்.

    இதற்காக டெல்டா மாவட்டங்களில் இருந்து 83 அத்தி மரங்கள் சேகரித்தோம். இந்த மரங்களில் 32 அடி உயரம் 18 அடி அகலத்தில் விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விநாயகர் சிலை 4 டன் எடை கொண்டது. விநாயகர் சிலையை விழா காலங்களில் ஊர்வலமாக எடுத்து செல்ல திருச்சி பெல் நிறுவனத்தில் இருந்து 8 டன் எடை கொண் தேர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை திருவாரூர் மாவட்டம் ஆண்டிபந்தல் பகுதியை சேர்ந்த ஸ்தபதி திருநாவுக்கரசு என்பவர் செய்து கொடுத்தார்.

    வெள்ளோட்டத்திற்கு பின்னர் விநாயகர் சிலை கோவில் அருகே பாதுகாப்பாக வைக்கப்படும். இதை தொடர்ந்து வருகிற 31-ந் தேதி(புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி தினத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.இதை தொடர்ந்து இரவு 7 மணிக்கு நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக நாகூர் வெட்டாற்று பாலம் வரை விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் என்றனர்.

    • சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம்.
    • சிலைகளுக்கு வர்ணம் புசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயண சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது.

    திருச்சி,

    திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழக முதலமைச்சரின் சீரிய நல்லாட்சியில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில், வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல்களின்படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள(இணையதளத்தில) இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துறைப்பு வழங்குமாறு கேட்டு க்கொள்ளப்படுகிறது.

    களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆஃப்பாரிஸ் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டுமே செய்யப்பட்டது மான, விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும். சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.

    ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. நீர்நிலைகள் மாசு படுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வர்ணம் புசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயண சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்குந்த நீர் சார்ந்த மக்கக் கூடிய நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

    சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும். விநாயக சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×