search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்ஜாமீன்"

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு முன் ஜாமீன் வழங்கப்படுமா? என்பது குறித்து 20-ந் தேதி ஐகோர்ட்டு முடிவு செய்கிறது.
    மதுரை:

    ‘மக்கள் நீதி மய்யம்’ தலைவர் கமல்ஹாசன், அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தின்போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என தெரிவித்தார். கமலின் இந்த பேச்சுக்கு பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    கமலுக்கு எதிராக போராட்டங்களும் வெடித்தன. திருப்பரங்குன்றத்தில் அவர் பேசியபோது செருப்பு வீச்சும் நடந்தது.

    இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் கமல் மீது புகார் செய்தார். இதன் அடிப்படையில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது, இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசியது என 2 பிரிவுகளில் கமல்ஹாசன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.



    இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிடக்கோரி, மதுரை ஐகோர்ட்டில் கமல்ஹாசன் சார்பில் முறையீடு செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்க விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்க மறுத்த ஐகோர்ட்டு, முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தால் விடுமுறை கால அமர்வில் விசாரிக்கலாம் என தெரிவித்தது.

    இதனைத் தொடர்ந்து கடந்த 15-ந் தேதி முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி புகழேந்தி, இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

    மேலும் தேர்தல் முடியும் வரை கமலின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் விவாதிக்கக்கூடாது என்றும் கூறினார்.

    இந்த நிலையில் வருகிற 20-ந் தேதி மதுரை ஐகோர்ட்டில் நடைபெற உள்ள வழக்குகளின் பட்டியலில் கமல்ஹாசனின் முன்ஜாமீன் மனு வழக்கும் இடம் பெற்றுள்ளது.

    எனவே அவருக்கு முன்ஜாமீன் கிடைக்குமா? என்பது நாளை மறுநாள் தெரியவரும்.

    குட்கா முறைகேடு வழக்கில் தூத்துக்குடி இன்ஸ்பெக்டரின் பெயர் இல்லாததால், அவருக்கு முன்ஜாமீன் தேவையில்லை என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #GutkhaCase #HighCourt
    சென்னை:

    தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக ஆலை உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, மத்திய கலால்துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செந்தில்முருகன், சிவக்குமார் ஆகியோரை சி.பி.ஐ., போலீசார் கைது செய்துள்ளனர்.

    இதில் அதிகாரிகள் செந்தில்முருகன், நவநீதகிருஷ்ண பாண்டியன் ஆகியோர் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுக்கள் நீதிபதி எம்.தண்டபாணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், ‘அதிகாரிகள் இருவரும் கடந்த 45 நாட்களாக சிறையில் இருந்து வருகின்றனர். இவர்கள் இருவர் மீதும் சி.பி.ஐ., சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. எனவே, இருவருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும்’ என வாதிட்டனர்.

    அப்போது சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வக்கீல் சீனிவாசன், ‘இந்த வழக்கின் புலன் விசாரணை முடிவடையவில்லை. இந்த சூழ்நிலையில் அதிகாரிகள் இருவருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது’ என்று ஆட்சேபனை தெரிவித்து வாதிட்டார்.

    இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தற்போதைய சூழ்நிலையில், அதிகாரிகள் இருவருக்கும் ஜாமீன் வழங்க முடியாது என்று கருத்து தெரிவித்தார். இதையடுத்து, ஜாமீன் மனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பு வக்கீல்கள் கூறினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுக்களை வாபஸ் பெற அனுமதித்து, அதை தள்ளுபடி செய்தார்.

    இதேபோல இந்த குட்கா வழக்கில் தூத்துக்குடி, சிப்காட் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சம்பத், முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    தேவையில்லை

    இந்த மனுவும் நீதிபதி எம்.தண்டபாணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான வக்கீல் சீனிவாசன், ‘குட்கா வழக்கில் இன்ஸ்பெக்டர் சம்பத்தை குற்றவாளியாக சேர்க்கவில்லை. ஆரம்பக்கட்ட விசாரணை மட்டுமே அவரிடம் நடத்தப்பட்டது’ என்றார்.ஃ

    அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி, ‘மனுதாரர் மீது வழக்கே இல்லாதபோது, முன்ஜாமீன் தேவையற்றது. அவரது முன்ஜாமீன் மனுவை முடித்து வைக்கிறேன்’ என்று உத்தரவிட்டார். #GutkhaCase #HighCourt
     
    சுனந்தா புஷ்கர் மர்மச்சாவில் சசிதரூருக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்ய மறுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். #SunandaPushkar #ShashiTharoor #DelhiHC
    புதுடெல்லி:

    முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் எம்.பி.யுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர். இவர் கடந்த 2014-ம் ஆண்டு, ஜனவரி 17-ந் தேதி டெல்லி நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது மர்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது தொடர்பான வழக்கில், சசிதரூர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்த நிலையில், அவர் சம்மன் பிறப்பித்த டெல்லி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜராகவில்லை. மாறாக, டெல்லி செசன்ஸ் கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்று விட்டார்.



    இந்த முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி தீபக் ஆனந்த் என்ற வக்கீல், டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை நீதிபதி ஆர்.கே. காபா, நேற்று விசாரித்தார். அவர் சசிதரூருக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்ய மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். #SunandaPushkar #ShashiTharoor #DelhiHC 
    பூலித்தேவன் நினைவிடத்தில் நடந்த மோதல் தொடர்பான வழக்கில் கருணாசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை முன்ஜாமீன் வழங்கியது. #KarunasMLA
    மதுரை:

    நெல்லை மாவட்டம் நெற்கட்டும் செவலில் கடந்த ஆண்டு பூலித்தேவன் நினைவிடத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் மரியாதை செலுத்த சென்றபோது மோதல் வெடித்தது. இது தொடர்பாக புளியங்குடி போலீசார் கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் கருணாசை கைது செய்வதற்கு சமீபத்தில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.



    இதனை தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கருணாஸ் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த 4-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, முன்ஜாமீன் மனு மீதான விசாரணை முடியும் வரை கருணாசை போலீசார் கைது செய்ய மாட்டார்கள் எனக் கூறிய நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்தார்.

    இந்நிலையில் கருணாஸ் முன்ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, கருணாசுக்கு நிபந்தனையற்ற முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

    2017ல் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கருணாசை காவல்துறை இப்போது கைது செய்ய முயற்சிப்பது ஏன்? என கேள்வி எழுப்பிய நீதிபதி, இந்த வழக்கில் போலீசார் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளிப்பதாக கூறினார். #KarunasMLA
    12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால், மரண தண்டனை விதிக்க வகைசெய்யும் மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது. #LokSabha #CriminalLaw
    புதுடெல்லி:

    காஷ்மீர் மாநிலம் கதுவாவில் ஒரு சிறுமி கற்பழித்து கொல்லப்பட்ட செயல், நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உத்தரபிரதேச மாநிலம் உன்னா நகரில் நடந்த கற்பழிப்பும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதையடுத்து, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிக்க வகைசெய்யும் அவசர சட்டத்தை கடந்த ஏப்ரல் 21-ந் தேதி மத்திய அரசு பிறப்பித்தது.

    இந்நிலையில், அவசர சட்டத்துக்கு மாற்றாக, குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. உறுப்பினர் களின் விவாதத்துக்கு பிறகு, நேற்று அம்மசோதா நிறைவேற்றப்பட்டது.



    இந்த மசோதாவின்படி, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனை 20 ஆண்டுகளாகவும், அதிகபட்ச தண்டனை ஆயுட்கால சிறை அல்லது மரண தண்டனையாகவும் இருக்கும்.

    12 முதல் 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத் காரம் செய்தால், 20 ஆண்டு சிறை அல்லது ஆயுட்கால சிறை தண்டனை விதிக்கப் படும். பெண்களை பாலியல் பலாத்காரம் செய்பவர் களுக்கான குறைந்தபட்ச தண்டனை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப் படுகிறது. அதிகபட்சமாக, ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

    16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள், எவ்வளவு பெரிய செல்வாக்கு உடையவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு முன்ஜாமீன் கிடையாது என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

    மேலும், பாலியல் பலாத்கார வழக்குகளை, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த நாளில் இருந்து 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும், கோர்ட்டு விசாரணையை 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் காலக்கெடு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. மேல்முறையீட்டு மனுக்களை, 6 மாதங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும்.

    16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பலாத்கார வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்குவதற்கு முடிவு செய்யும் முன்பு, அரசு வக்கீல் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பிரதிநிதியின் கருத்தை கேட்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    முன்னதாக, இந்த மசோதா மீது நடைபெற்ற விவாதத்துக்கு மத்திய உள்துறை இணை மந்திரி கிரன் ரிஜிஜு பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

    சிறுமிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதே மசோதாவின் நோக்கம். தற்போது இருக்கும் இந்திய தண்டனை சட்டத்தில், 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பலாத்காரம் தொடர்பாக விசேஷ ஷரத்துகள் இல்லை. எனவே, இந்த கடுமையான மசோதாவை கொண்டு வந்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது, சபையை நடத்திக் கொண்டிருந்த துணை சபாநாயகர் தம்பிதுரை, “இந்த மசோதாவின் ஷரத்துகளை நன்றாக விளம்பரப்படுத்த வேண்டும். அதன்மூலம், கற்பழிப்பை தடுக்க வாய்ப்பாக அமையும்” என்று யோசனை தெரிவித்தார். அதனை கிரன் ரிஜிஜு ஏற்றுக்கொண்டார்.  #LokSabha #CriminalLaw #Tamilnadu 
    பாலியல் பலாத்கார வழக்கில் பாதிரியார்களுக்கு முன்ஜாமீன் வழங்க இயலாது என கேரள ஐகோர்ட்டு நீதிபதி தெரிவித்துள்ளார். #KeralaHighCourt #KeralaPriests
    கொச்சி:

    கேரளாவின் பத்தினம்திட்டா மாவட்டத்தின் மலங்கரா மரபுவழி திருச்சபையில் பாவ மன்னிப்பு கேட்க வந்த ஒரு பெண்ணை கற்பழித்த 4 பாதிரியார்கள் மீது கேரள குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் போலீசார் தங்களை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் வழங்கக் கோரி கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார்களில் சோனி வர்கீஸ், மேத்யூஸ், ஜெய்ஷ் கே ஜார்ஜ் ஆகிய மூவரும் கேரள ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

    அதில் அரசியல் நெருக்கடி காரணமாக தங்கள் மீது இந்த பாலியல் புகார் அளிக்கப்பட்டு உள்ளது என்று அவர்கள் கூறி இருந்தனர். இந்த மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி ராஜா விஜயராகவன், “இந்த புகார் மிகவும் தீவிரமானது. இதுபோன்ற நிலையில் இவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கினால் அது விசாரணையை கடுமையாக பாதிக்கும். ஏனென்றால் விசாரணை தற்போது தொடக்க நிலையில்தான் உள்ளது. எனவே முன் ஜாமீன் வழங்க இயலாது” என்று குறிப்பிட்டார்.  #KeralaHighCourt #KeralaPriests #tamilnews

    டைரக்டர் கவுதமனுக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூன் 4-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
    மதுரை:

    சினிமா இயக்குனர் கவுதமன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “மே 19-ந் தேதி ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக கதிராமங்கலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் முன் அனுமதியின்றி கலந்து கொண்டதாக பந்தநல்லூர் போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    நான் சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறேன். இந்த வழக்கு தொடர்பாக பந்தநல்லூர் போலீசார் என்னை கைது செய்ய தேடி வருகின்றனர். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு நான் உட்பட்டு நடந்து கொள்வேன். எனவே இந்த வழக்கில் எனக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

    இந்த மனு, நீதிபதி கிருஷ்ணவள்ளி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கவுதமனுக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூன் 4-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். 
    பத்திரிகையாளர்களை அவதூறாக விமர்சித்த வழக்கில் எஸ்.வி. சேகருக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை ஐகோர்ட் மறுத்துள்ளது.
    சென்னை:

    பா.ஜ.க., பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர், சமூக வலை தளத்தில் பெண் செய்தியாளர்களுக்கு எதிராக அவதூறான, கீழ்தரமான கருத்துக்களை பதிவிட்டார். எஸ்.வி.சேகரின் செயலுக்கு, பத்திரிகையாளர்கள் மட்டுமல்லாமல், பலதரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். அவருக்கு எதிராக போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இதையடுத்து, எஸ்.வி. சேகரும் மன்னிப்பு கோரினார். தனக்கு வந்த ஒரு பதிவை படித்துப் பார்க்காமல் அப்படியே தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு விட்டதாக விளக்கம் அளித்தார். இந்த நிலையில், எஸ்.வி.சேகருக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி சென்னை ஐகோர்ட்டில், எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார். அதில், ‘‘சமூக வலைதளங்களில் வரும் செய்திகளை பொதுத்தளத்தில் பகிர்வது என்ற பழக்கத்தின் அடிப்படையில், இந்த செய்தியையும் முழுமையாக படித்துப்பார்க்காமல், அப்படியே பதிவு செய்து விட்டேன். வேறு எந்த தவறையும் நான் செய்யவில்லை. இதற்காக பகிரங்க மன்னிப்பும் கோரியுள்ளேன். எனவே, எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

    இவருக்கு முன்ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று பத்திரிகையாளர் முரளி கிருஷ்ணன் சின்னதுரை என்பவர் மனு தாக்கல் செய்தார்.

    இந்நிலையில், எஸ்.வி. சேகர் முன் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார். அப்போது எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமீன் வழங்க நீதிபதி மறுத்துவிட்டார். அத்துடன் அவரது மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    இதையடுத்து எஸ்.வி. சேகர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. #SVeShekher
    ×