search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகர்கோவில்"

    சென்னை சென்டிரல்-நாகர்கோவில் இடையே அதிவேக ரெயில் வாரம் 3 முறை இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரல்-நாகர்கோவில் (12689/12690) அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில் வாரம் ஒரு முறை மட்டுமே சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக இயக்கப்பட்டு வந்தது. ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஒரே ரெயிலும் இதுதான். இதனால் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கல்லூரிக்கும் செல்லும் மாணவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இந்த ரெயில் பேருதவியாக இருக்கிறது. இந்த நிலையில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று தெற்கு ரெயில்வே வாரத்திற்கு 3 முறை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

    அதன்படி சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரலில் இருந்து புறப்படும் ரெயில் திருச்சிக்கு செல்லாமல் சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை வழியாக நாகர்கோவில் சென்றடையும். இதேபோல் மறுமார்க்கமாக புறப்படும் ரெயில் திருச்சி செல்லாமல் சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரலுக்கு வந்தடையும். தெற்கு ரெயில்வேயின் எதிர்வரும் கால அட்டவணையில் இதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    நாகர்கோவிலில் நடைபெறும் திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு, காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமாரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். #LokSabhaElections2019 #MKStalin
    நாகர்கோவில்:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ.வை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) குமரி மாவட்டம் வருகிறார்.

    சென்னையில் இருந்து விமானம் மூலம் காலை திருவனந்தபுரம் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் குமரிக்கு வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையான களியக்காவிளைவில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தி.மு.க. தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்கிறார்கள்.

    பின்னர் அவர் அங்கிருந்து நாகர்கோவிலுக்கு வருகிறார். நாகர்கோவில் மணிமேடை பகுதியில் உள்ள பயோனியர் பாரடைஸ் ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.

    மாலை 5 மணி அளவில் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நடைபெறும் தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு, காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமாரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    அவருடன் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். பின்னர் ஸ்டாலின் நெல்லைக்கு புறப்பட்டு செல்கிறார். #LokSabhaElections2019 #MKStalin

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் முதல்கட்டமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் நாகர்கோவிலில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினர். #RahulGandhi #Stalin #TamilnaduCM
    நாகர்கோவில்:

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் முதல்கட்டமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் நாகர்கோவிலில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினர்.

    இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி கூறியதாவது:-

    தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் விரைவில் பதவியேற்பார் என்னும் நம்பிக்கையை உங்களுக்கு தெரிவித்து எனது பேச்சை தொடங்குகிறேன்.

    தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி இறந்துவிட்டாலும் நம்முடன் இருக்கிறார். அவர் மறைந்து விடவில்லை. தமிழ் மக்களின் உணர்வுகளில், தமிழக வரலாற்றில், தமிழகத்தின் வளர்ச்சியில் அவர் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

    தமிழ்நாட்டில் இங்கு நடைபெறும் அரசை டெல்லியில் இருந்து பிரதமர் மோடியின் அலுவலகம் கைப்பாவையாக ஆட்டிவைத்து இயக்கிக் கொண்டிருக்கிறது.

    பொய் சொல்வதில் வல்லவரான பிரதமர் மோடி கடந்த பாராளுமன்ற தேர்தலில் அளித்த வங்கி கணக்கில் 15 லட்சம் ரூபாய் உள்பட எந்த வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றவில்லை. தனக்கு வேண்டப்பட்ட பெரு முதலாளிகள் வாழ்க்கை வளம் பெறுவதற்காக அவர் தனது பதவியை பயன்படுத்துகிறார்.

    ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் நான் இந்த நாட்டின் காவல்காரன் என்று முழங்கிய மோடி, இந்த நாட்டு மக்களிடம் இருந்து 30 ஆயிரம் கோடி ரூபாயை பறித்து தனது நண்பர் அனில் அம்பானி கையில் கொடுத்து விட்டார்.

    ரபேல் ஒப்பந்தத்தில் அனில் அம்பானி இணைக்கப்பட வேண்டும் என பிரான்ஸ் முன்னாள் பிரதமரிடம் மோடி நேரிடையாகவே பேரம் பேசி இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த வைத்தார்.

    திருவள்ளுவர் கூறியதுபோல் உண்மை வெல்லும். அப்படி, உண்மை வெல்லும்போது ரபேல் விவகாரத்தில் செய்த ஊழலுக்காக மோடி சிறையில் அடைக்கப்படுவார்.

    நாங்கள் மக்களுக்காக என்ன செய்யப் போகிறோம்? என்பதை தெரிவிக்க விரும்புகிறோம். மக்கள் இன்று வேலையில்லா திண்டாட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பல தொழில்கள் நொடிந்துபோய் கிடக்கின்றன. அடுத்த அடியாக ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் மூலம் அவர்கள் சுரண்டப்படுகின்றனர். இதனால், நாட்டின் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டு, பணவீக்கமும் அதிகரித்துள்ளது.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மாற்றம் ஏற்படுத்தப்படும். நாடு முழுவதும் ஒரே வரி, குறைந்த வரி, எளிமையான வரி என்ற புதிய ஒற்றை வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்படும்.

    தமிழ்நாட்டில் தொழில்கள் தொடங்குவதற்கான அத்தனை வளங்களும் ஏராளமாக உள்ளன. இன்று பல கோடி மக்களிடம் உள்ள கைபேசிகளில் சீனாவில் தயாரிக்கப்பட்டது என பொறிக்கப்பட்டுள்ளதுபோல், தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்னும் நிலையை உருவாக்க தொழில் துறையை மேம்படுத்தி மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவோம்.

    தொழில் முனைவோருக்கு அதிகமான அளவில் வங்கிக்கடன்களை அளித்து வர்த்தகத்துறையில் சீனாவை மிஞ்சும் அளவுக்கு இந்தியாவை வளர்ச்சி அடைய வைப்போம். நமது நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் குறைந்தபட்ச நிச்சயிக்கப்பட்ட வருமானத்தை உறுதிப்படுத்துவோம். இந்த திட்டம் உள்பட நிறைவேற்றப்படும் அனைத்து திட்டங்களின் பலனும் பயனாளிகளான மக்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும்.



    தமிழகத்தில் சமீபத்தில் தாக்கிய புயல்களால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். பல லட்சம் ஏக்கர் விளைபொருட்கள் நாசமடைந்தன. லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரங்களை இழந்தனர். இவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிய இழப்பீட்டு தொகையை மோடி தலைமையிலான மத்திய அரசு இன்னும் அளிக்காமல் இருக்கிறது.

    மேலும், மீன்பிடி தொழிலை நம்பி வாழும் தமிழக மீனவ மக்களுக்கும் எவ்வித உதவிகளும் வழங்கப்படவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு தழுவிய அளவில் மீனவர்களின் நலன்களை பாதுகாக்கவும், தேவையான உதவிகளை அளிக்கவும் மீனவர் நலனுக்கு என தனியாக அமைச்சகம் உருவாக்கப்படும்.

    இங்குள்ள தாய்மார்களுக்கும், பெண்களுக்கும் ஒரு வாக்குறுதியை நான் இப்போது அளிக்க விரும்புகிறேன். பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவை மற்றும் அனைத்து மாநில சட்டசபை தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்துவோம். மத்திய அரசு துறைகளின் வேலைவாய்ப்புகளிலும் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவோம்.

    கடைசியாக நான் ஒன்றை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் வஞ்சிக்கும் மோடியை மீண்டும் பிரதமராக நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். எங்களுக்குள் எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் மோடி கையில் இருந்து இந்த நாட்டை காப்பாற்ற நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து நிற்போம்.

    மோடி தமிழ்நாட்டின் மீது மட்டும் தாக்குதல் நடத்தவில்லை. இந்தியாவில் உள்ள அனைத்து மக்களின் மொழி மற்றும் பண்பாட்டின் மீதும் இதேபோன்ற தாக்குதல் நடத்தப்படுகின்றன. இதற்கு இனிமேல் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்னும் உறுதிமொழியை அளித்து, இந்த கூட்டத்தில் உங்களை சந்தித்துப் பேசும் அரிய வாய்ப்பை அளித்ததற்கு நன்றிகூறி விடை பெறுகிறேன். #RahulGandhi #Stalin #TamilnaduCM 
    பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ராகுல் காந்தியை டெல்லியில் சென்று சந்திப்பேன் எனும் நம்பிக்கை எனக்கு அதிகமாக உள்ளது என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். #ParliamentElection #DMK #Stalin
    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    இன்னும் சில வாரங்களில் இந்தியாவின் பிரதமர் ராகுல் காந்திதான். உறுதியாக சொல்கிறேன். அதனால்தான் யாரும் சொல்வதற்கு முன் பிரதமர் வேட்பாளர் ராகுல்தான் என்று சொன்னேன்.

    நரேந்திர மோடி பார்க்கக் கூடிய ஒரே வேலை அடிக்கல் நாட்டுவது தான். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 155 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். அவரை இரும்பு  பிரதமர் என்கின்றனர். ஆனால் அவர் 'அடிக்கல்' பிரதமர் தான்.

    பல ஆண்டுகளுக்கு பிறகு இவ்வளவு காலமாக இல்லாமல் பெருந்தலைவர் காமராஜர் நினைவு பிரதமர் மோடிக்கு இப்போது தான் வந்திருக்கிறது. பத்திரிகைகளில் இப்போது காமராஜர் படங்களுடன் அவரது விளம்பரங்கள் வெளிவருகின்றன. உங்களுக்காக ஓட்டுக் கேட்க உங்கள் கட்சி தலைவர்கள் படம் கிடைக்கவில்லையா?

    தமிழ்நாட்டில் ஒரு பினாமி ஆட்சியை டெல்லியில் உள்ள பிஜேபி ஆட்சி நடத்தி வருகிறது. தமிழகத்தில் தற்போது நடப்பது வெறும் லஞ்சம், ஊழல் ஆட்சி மட்டுமல்ல, பெண்கள் எல்லாம் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் ஆட்சியாக மாறிவிட்டது.

    இந்த தேர்தலில் தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ராகுல் காந்தியை டெல்லியில் சென்று சந்திப்பேன் எனும் நம்பிக்கை எனக்கு அதிகமாக உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார். #ParliamentElection #DMK #Stalin
    தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சென்னை வந்தார். #RahulGandhi #LSPolls #DMKCongressAlliance
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை தி.மு.க-காங்கிரஸ் இணைந்து சந்திக்கிறது. தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இணைந்துள்ளன.

    தமிழகத்தின் பிரதான கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ், தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கி விட்டது.

    தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் முதல் பிரசார கூட்டம் நாகர்கோவிலில் இன்று நடக்கிறது. இதில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி கலந்து கொள்கிறார்.

    இதற்காக அவர், இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்பு மதியம் 2 மணிக்கு திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் செல்கிறார்.

    நாகர்கோவிலில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் மாலை 3 மணிக்கு தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் முதல் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடக்கிறது.  

    இதற்காக அங்கு பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேடையில் கூட்டணி கட்சி தலைவர்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி தலைமை தாங்குகிறார்.



    தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். இந்த மேடையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினும் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இதுதவிர கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேச உள்ளனர்.

    தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார கூட்டம் என்பதால் தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாகத்தில் உள்ளனர். #RahulGandhi #LSPolls #DMKCongressAlliance
    நாகர்கோவிலில் நாளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூட்டாக தேர்தல் பிரசாரம் செய்கிறார்கள். #RahulGandhi #MKStalin
    நாகர்கோவில்:

    பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18-ந்தேதி நடக்கிறது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே அரசியல் கட்சிகள் பிரசாரத்திற்கு நாள் குறித்து விட்டது. தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்துள்ள காங்கிரஸ் கட்சி இந்தியாவின் தென்கோடி முனையான நாகர்கோவில் நகரில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறது.

    காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    நாகர்கோவில் நகரில் நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க ராகுல்காந்தி நாளை காலை சென்னை வருகிறார். அங்கு ஸ்டெல்லா மேரீஸ் பெண்கள் கல்லூரியில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்று பேசுகிறார்.

    இந்த கூட்டம் முடிந்ததும், விமானம் மூலம் திருவனந்தபுரம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் நாகர்கோவில் புறப்படுகிறார்.

    நாகர்கோவிலில் உள்ள ஸ்காட் கல்லூரி மைதானத்தில் ராகுல்காந்தியின் ஹெலிகாப்டர் வந்திறங்க தளம் அமைக்கப்பட்டுள்ளது. நாளை பகல் 2 மணிக்கு வந்து சேரும் ராகுல்காந்தி அங்கிருந்து நேராக விழா மேடைக்கு செல்கிறார்.

    தொடர்ந்து கட்சியின் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், முன்னாள் மாநில தலைவர்கள், முன்னாள் மத்திய மந்திரிகள், கட்சியின் அகில இந்திய மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

    காங்கிரஸ் நடத்தும் இந்த பிரசார கூட்டத்தில் பங்கேற்க கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களும் இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டனர்.

    இதனால் நாகர்கோவிலில் நடக்கும் தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரசுடன் அணி சேர்ந்துள்ள அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள். கூட்டணிக்கு தலைமை ஏற்கும் தி.மு.க.வின் தலைவர் மு.க. ஸ்டாலினும், கூட்டத்தில் ராகுலுடன் பங்கேற்று பிரசாரம் செய்கிறார்.



    இதுபோல ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்.

    இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்கள்.

    நாகர்கோவிலில் ராகுல்காந்தி பங்கேற்கும் கூட்டமே தமிழகத்தில் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியின் முதல் பிரசார கூட்டமாக அமைகிறது. இதனால் கூட்டணி கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    அவரவர் கட்சி தலைவர்களை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதனால் நாகர்கோவில் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. ஸ்காட் கல்லூரி மைதானத்தை சுற்றிலும் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

    கூட்டணி தலைவர்கள் அமரும் மேடை வித்தியாசமாக திறந்தவெளி மேடையாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மேடையில் அமரும் தலைவர்களை தொண்டர்கள் மேடையின் 3 புறத்தில் இருந்தும் பார்க்கலாம். இதற்கான ஏற்பாடுகளை கூட்ட ஏற்பாட்டாளர்கள் செய்துள்ளனர்.

    கூட்டத்திற்கு வரும் தொண்டர்கள், பொதுமக்கள், பெண்கள் அமர தனித்தனி இட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உயர் பாதுகாப்பு பிரிவில் இருப்பதால் அவருக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் ஸ்காட் கல்லூரி மைதானத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    நேற்று முதல் மைதானம் போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகிறார்கள். 2 ஆயிரம் போலீசாரும் குவிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். #RahulGandhi #MKStalin
     
    நாகர்கோவிலுக்கு 13-ந் தேதி ராகுல்காந்தி வருகிறார். அவர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தை பாதுகாப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். #Parliamentelection #RahulGandhi
    கன்னியாகுமரி:

    காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி 13-ந் தேதி குமரி மாவட்டம் வருகிறார். நாகர்கோவிலில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தேர்தல் பிரசாரத்தை அவர் தொடங்கிவைக்கிறார். இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

    இதற்கிடையே ராகுல்காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தை நடத்த நாகர்கோவிலில் 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. குமரி மாவட்டம் வந்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், ராகுல்காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தை ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் நடத்தலாம் என்று முடிவு செய்தனர்.

    இந்நிலையில் டெல்லியில் இருந்து சிறப்பு பாதுகாப்பு குழுவினர் நேற்று நாகர்கோவில் வந்து ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரிக்கு சென்று ஆய்வு செய்தனர். விழா மேடை அமைக்கப்பட உள்ள இடம், பொதுமக்கள் வரும் வழி, ராகுல்காந்தி ஹெலிகாப்டர் இறங்கும் இடம் உள்ளிட்டவற்றை அந்த குழுவினர் பார்வையிட்டனர்.

    இதை தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளுடன் டெல்லியில் இருந்து வந்த சிறப்பு பாதுகாப்பு குழு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். அதன்பிறகு பாதுகாப்பு அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.

    பின்னர் காங்கிரஸ் நிர்வாகிகள், விழா மேடையை எந்த வடிவில் அமைப்பது? ராகுல்காந்தி ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி மேடைக்கு வரும் வழியை அலங்கரிப்பது தொடர்பாக ஆலோசித்தனர்.  #Parliamentelection #RahulGandhi
    நாகர்கோவிலில் தொழிலாளியை கத்தியைகாட்டி மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    குலசேகரம் வெண்டலிக் கோடு பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கிய டெல்லின் (வயது 30). தொழிலாளி.

    இவர் நாகர்கோவிலுக்கு வேலைக்காக வந்திருந்தார். பின்னர் வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக கோட்டார் கம்பளம் வழியாக பஸ் நிறுத்தத்திற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் அவரை தடுத்து நிறுத்தி குடிப்பதற்கு பணம் கேட்டார். ஆனால் தன்னிடம் பணம் எதுவும் இல்லை என ஆரோக்கிய டெல்லின் கூறினார்.

    இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி அவரை மிரட்டினார். இதைப் பார்த்த அக்கம், பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் வருவதைப்பார்த்ததும் அந்த வாலிபர் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்துச் சென்றார்.

    இதுகுறித்து கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் ஆரோக்கிய டெல்லினை கத்தியை காட்டி மிரட்டியது இருளப்பபுரம் பகுதியை சேர்ந்த சிவகண்டன் (36) என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் சிவகண்டன் மீது கொலை மற்றும் கொலை மிரட்டல், அடிதடி வழக்குகள், உள்பட பல்வேறு வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    ஓசூர், நாகர்கோவில் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுவதற்கான சட்டமசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. #TNAssembly
    சென்னை:

    தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகள் உள்ளன. இந்நிலையில் ஓசூர், நாகர்கோவில் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுவதற்கான சட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

    உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலு மணி தாக்கல் செய்த சட்டமசோதாவில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்து இருந்தார்.

    இந்த அறிவிப்புக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் கோவை மாநகராட்சி சட்டத்தின் வரைமுறைகளை தழுவி ஒரு சிறப்பு சட்டத்தை இயற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதன்படி மாநகராட்சியாக நாகர்கோவில் செயல்படும்போது நகராட்சி மன்றத்தால் விதிக்கப்பட்டு வந்த அனைத்து வரிகள், கட்டணங்கள், தீர்வைகள் இந்த சட்டத்தின் கீழ் வந்து முறைப்படி மாநகராட்சியால் விதிக்கப்பட்டதாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

    இதேபோல் ஓசூர் நகராட்சியை மாநகராட்சி ஆக்குவதற்கும் சட்டமசோதாவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் ஓசூர் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஓசூர் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்து இருந்தார்.

    அந்த அறிவிப்புக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் கோவை மாநகராட்சி சட்டத்தை தழுவி ஒரு சிறப்பு சட்டத்தை இயற்ற அரசு முடிவு செய்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதன்மூலம் தமிழ்நாட்டில் மாநகராட்சியின் எண்ணிக்கை 14 ஆக உயர்கிறது. மாநகரட்சிகள் விவரம் வருமாறு:-

    1. சென்னை
    2. மதுரை
    3. கோவை
    4. சேலம்
    5. நெல்லை
    6. வேலூர்
    7. திருச்சி
    8. தூத்துக்குடி
    9. ஈரோடு
    10. தஞ்சாவூர்
    11. திருப்பூர்
    12. திண்டுக்கல்
    13. நாகர்கோவில்
    14. ஓசூர் #TNAssembly

    நாகர்கோவிலில் பன்றி காய்ச்சலுக்கு கல்லூரி பேராசிரியை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Swineflu

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தற்போது கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பன்றி காய்ச்சலும் பரவி வருகிறது.

    இதைதொடர்ந்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே மாவட்டம் முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும்படி சுகாதாரத்துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். அதன்படி சுகாதாரத்துறை ஊழியர்கள் காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நாகர்கோவில் சற்குணவீதி பகுதியை சேர்ந்த திரேசா (வயது 60) என்ற ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை காய்ச்சல் காரணமாக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது ரத்த மாதிரியை பரிசோதனை செய்த போது அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க திறக்கப்பட்டுள்ள சிறப்பு சிகிச்சை வார்டில் திரேசாவை அனுமதித்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு திரேசாவுக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமானதால் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை திரேசா இறந்துவிட்டார். அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்புடன் வேறு சில உடல் நலக்குறைவுகளும் இருந்ததால் அவர் சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையில் பன்றி காய்ச்சல் பாதிப்பு காரணமாக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் 2 பெண்கள், ஒரு வயது பெண் குழந்தை ஆகிய 3 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    அதேப்போல நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சல் பாதிப்பு காரணமாக ஒரு ஆணும், ஒரு பெண்ணும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களது உடல்நலம் தேரி வருவதாகவும், அவர்கள் இன்று அல்லது நாளை வீடு திரும்புவார்கள் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

    பன்றி காய்ச்சலுக்கு ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியை பலியானதை தொடர்ந்து பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பேராசிரியை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தபோது அவரை 2 பெண்கள் கவனித்து வந்தனர். அவர்களுக்கும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதைதொடர்ந்து அவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு நெல்லையில் உள்ள ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    இதுபற்றி சுகாதாரத்துறை துணை இயக்குனர் மதுசூதனன் கூறியதாவது:-

    பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த நோய் தடுப்பு மாத்திரைகள் போதுமான அளவு உள்ளது. பன்றி காய்ச்சலால் இறந்த ஓய்வு பெற்ற பேராசிரியை வசிக்கும் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நோய் தடுப்பு மாத்திரைகள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. இருமல், காய்ச்சல், தொண்டை வலி போன்ற பாதிப்பு இருந்தால் அவர்கள் உடனே ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.

    தற்போது விடுமுறை முடிந்து இன்று பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. இதனால் யாராவது மாணவ, மாணவிகள் காய்ச்சல் காரணமாக விடுமுறை எடுத்து உள்ளார்களா? என்பதை பற்றி தகவல் தெரிவிக்க தலைமை ஆசிரியர், கல்வி அதிகாரிகளை கேட்டுக்கொண்டு உள்ளோம்.

    காய்ச்சல் பாதிப்பு இருந்தால் சம்மந்தப்பட்ட மாணவரின் வீட்டிற்கு சுகாதார ஊழியர்கள் நேரில் சென்று அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றி ஆய்வு செய்வார்கள். மேலும் பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது மக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையங்களில் இது தொடர்பான விழிப்புணர்வு நோட்டீசுகள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Swineflu

    வருகிற டிசம்பர் மாதம் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் பண்டிகை போன்ற விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து நெல்லை, செங்கோட்டை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
    சென்னை:

    சென்னை எழும்பூர்-செங்கோட்டை சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண்: 06011) டிசம்பர் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் இரவு 8.40 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 9.50 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மறுமார்க்கத்தில் (06012) செங்கோட்டையில் இருந்து 4, 11, 18 ஆகிய தேதிகளில் மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.45 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

    இந்த ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, புதுக்கோட்டை, செட்டிநாடு, காரைக்குடி, தேவக்கோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பன்கோவில் சாந்தி, கடையநல்லூர், தென்காசி வழியாக செல்லும்.

    சென்னை எழும்பூர்- நெல்லை சிறப்பு கட்டண ரெயில் (06001) டிசம்பர் 14 மற்றும் 28-ந்தேதிகளில் (வெள்ளிக்கிழமை) எழும்பூரில் இருந்து இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.30 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கத்தில் (06002) நெல்லையில் இருந்து 9 மற்றும் 16-ந்தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

    இந்த ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக செல்லும்.

    தாம்பரம்-கொல்லம் சிறப்பு கட்டண ரெயில் (06027) டிசம்பர் 3, 5, 10, 12, 14, 17, 19, 26, 28, 31 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கத்தில் (06028) கொல்லத்தில் இருந்து 4, 6, 8, 11, 13, 15, 18, 20, 27 ஆகிய தேதிகளில் காலை 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பன்கோவில் சாந்தி, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, பகவதிபுரம், ஆரியங்காவு, தென்மலை, எடமான், புனலூர், அவனீசுவரம், கொட்டாரக்கரா, குந்தாரா ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

    சென்னை சென்டிரல்-நாகர்கோவில் சிறப்பு கட்டண ரெயில் (06007) டிசம்பர் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் சென்டிரலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.05 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கத்தில் (06008) 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.

    இந்த அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

    சென்னை சென்டிரல்-அகமதாபாத் (06051) டிசம்பர் 1, 8, 15, 22, 19 ஆகிய தேதிகளில் இரவு 8.10 மணிக்கும், சென்டிரல்-சந்திரகாச்சி (06058) டிசம்பர் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.15 மணிக்கும், புதுச்சேரி-சந்திரகாச்சி (06010) டிசம்பர் 1, 8, 15, 22 ஆகிய தேதிகளில் மாலை 6.45 மணிக்கும் சிறப்பு கட்டண ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    இந்த தகவலை தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. 
    நாகர்கோவிலில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, எல்லைகள் மறுசீரமைப்பு பணிகள் முடிந்ததும் நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார். #MGRCenturyFestival #Edappadipalaniswami
    நாகர்கோவில்:

    தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி குமரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது.

    நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

    இந்த விழாவில் முதல்வர் பழனிசாமி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:
     
    ஒகி புயலில் இறந்த, மாயமான 136 மீனவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கப்பட்டது, ஒகி புயலில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு நிதி, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது. தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுக பணி முடியும் நிலையில் உள்ளது. 

    விவசாய பயிரிழப்புகளுக்கு ரூ.36 கோடி வழங்கப்பட்டது. குளச்சலில் ரூ.96.2 கோடியில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும், சின்ன முட்டம் துறைமுகம் மேம்படுத்தப்படும்.



    தற்போது எல்லைகள் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகள் முடிந்ததும் நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.

    அதிமுக ஆட்சியின் சாதனைகளை மக்கள் நன்றாக புரிந்துள்ளனர், ஆனால் ஒருசிலர் தேவையில்லாமல் விமர்சனம் செய்கின்றனர்.

    எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை, விமர்சனங்கள் அனைத்தும் அவர்களுக்கு திரும்ப செல்லும்.

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்லும் குற்றச்சாட்டுகளில் ஒன்று கூட உண்மையல்ல. பொய் பேசுவதற்கு டாக்டர் பட்டம் கொடுத்தால் அது ஸ்டாலினுக்கே பொருந்தும் என அவர் அறிவித்தார். #MGRCenturyFestival #Edappadipalaniswami
    ×