search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடிதம்"

    பஞ்சாப் மந்திரி சித்துவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், அவருக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு வழங்கவேண்டும் என உள்துறைக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. #Congress #Sidhu #CISF #RajnathSingh
    புதுடெல்லி:

    பஞ்சாப் மாநிலத்தின் மந்திரியாக பதவி வகித்து வருபவர் நவ்ஜோத் சிங் சித்து. இவர் முன்னாள் கிரிக்கெட் வீரர்.

    இந்நிலையில், பஞ்சாப் மந்திரியான நவ்ஜோத் சிங் சித்து உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், அவருக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. 

    இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:



    காங்கிரஸ் சார்பில் பிரசாரம் செய்ய நவ்ஜோத் சிங் சித்து நியமனம் செய்யப்பட்டுள்ளார். பஞ்சாபில் பிரசாரம் செய்யும்போது அந்த மாநில போலீசார் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    ஆனால், சித்து இந்தியா முழுவதும் சென்று பிரசாரம் செய்து வருகிறார். அவருக்கு பல்வேறு மிரட்டல்கள் வந்துள்ளன.
    எனவே, சித்துவுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். #Congress #Sidhu #CISF #RajnathSingh
    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பிய கடற்படையின் மூத்த வீரரை போலீசார் கைது செய்தனர். #DonaldTrump
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ராணுவ மந்திரி ஜேம்ஸ் மட்டிஸ், உளவுத்துறை தலைவர் கிறிஸ்டோபர்ரே, மற்றும் கடற்படை உயர் அதிகாரி ஆகியோருக்கு, கடந்த 2 வாரத்துக்கு முன்பு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அதில் கடிதம் அனுப்பியவர் முகவரி எதுவும் இல்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த உளவுத்துறை அதிகாரிகள் அந்த கடிதத்தை பரிசோதித்தனர். அதில் ரிசின் எனப்படும் வி‌ஷம் தடவப்பட்டிருந்தது. எனவே, தீவிர விசாரணை நடத்திய அதிகாரிகள் உதா மாகாணத்தில் லோகன் நகரை சேர்ந்த வில்லியம் கிளைடே ஆலென் என்பவரை கைது செய்தனர்.

    இவர் அமெரிக்க கடற்படையின் மூத்த வீரர் ஆவார். இவர் மீது கசால்ட்லேக் சிட்டி கோர்ட்டில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  #DonaldTrump
    ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி சாந்தன் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு உருக்கமான கடிதம் எழுதி அனுப்பி உள்ளார். #RajivGandhiAssassination #Santhan
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், முருகனின் மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 27 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்கள் உள்பட ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலைக்காக போராடி வருகின்றனர்.

    இந்த நிலையில் சாந்தன், தன்னை விடுதலை செய்யக்கோரி தனது வக்கீல் ராஜகுரு மூலமாக மத்திய உள்துறை மந்திரிக்கு 4 பக்கத்திற்கு உருக்கமாக கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

    அந்த கடித விவரம் வருமாறு:-

    நான் சுதேந்திரராஜா என்கிற சாந்தன். உண்மையை சொல்லி விடுகிறேன். ராஜீவ்காந்தி கொலை சதி திட்டத்தோடு இந்தியாவிற்குள் நுழையவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு போவது தான் என் நோக்கம்.

    அந்த காலக்கட்டத்தில் இலங்கை தமிழர்கள் பலரும் தலைநகர் கொழும்பு வழியாக பயணிக்காமல் இங்கு வந்து தான் வெளிநாடுகளுக்கு பயணிப்பது வழக்கமாக கொண்டிருந்தனர். அப்படித்தான் நானும் வந்தேன். இங்குவரும் போது இலங்கையில் என் மீது குற்ற வழக்குகள் எதுவும் இல்லை என்று அதிகாரிகளால் சான்றளிக்கப்பட்ட பிறகு எனக்கு அளிக்கப்பட்ட பாஸ்போர்ட்டுடன் தான் வந்தேன். இது சி.பி.ஐ. வசமானது. பாஸ்போர்ட்டை வைத்தே நான் இலங்கை குடிமகன் என நிரூபிக்கப்பட்டது.

    சர்வதேச அளவில் பிரபலமான ஒரு தலைவரை கொல்ல வரும் வெளிநாட்டவன் யாராவது தன்னை பற்றிய உண்மையான தகவல்கள் அடங்கிய பாஸ்போர்ட்டை கொண்டு வருவானா?,

    இந்த வழக்கில் இன்னொரு சாந்தனும் குற்றவாளியாக காட்டப்பட்டுள்ளார். தடா நீதிமன்றத்தில் சி.பி.ஐ. வக்கீல் வாதிடும்போது, விடுதலை புலிகள் அமைப்பின் ஆதரவாளருக்கு நான் பணம் கொடுத்ததாக சொன்னார். பணம் பெற்ற விடுதலை புலி ஆதரவாளர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கும்போது என்னை அடையாளம் காட்டவில்லை. இன்னொரு சாந்தனின் போட்டோவை காட்டினார்.



    உச்ச நீதிமன்ற தீர்ப்பில் பக்கம் 558-ல், இந்த வழக்கில் 19-வது எதிரியாக சேர்க்கப்பட்டு, பிறகு விடுதலை செய்யப்பட்ட ஒருவரிடம், விரைவில் ஒரு முக்கியமான தலைவரை கொல்லப்போவதாக நான் சொன்னதாக பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆனால், பக்கம் 157-ல் அது அடுத்த சாந்தன் என்றிருக்கும். இப்படி பல குளறுபடிகள் தீர்ப்பில் உள்ளன.

    புலனாய்வு அதிகாரிகள் இப்போது சொல்லும் உண்மையை பற்றியோ, 1999-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உள்ள தவறுகள் பற்றியோ நான் இப்போது வெளிக்கொணர விரும்பவில்லை. பழையவற்றை புறந்தள்ளிவிட்டு பயணப்படவே விரும்புகிறேன்.

    2011-ம் ஆண்டில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டபோது நோயாளியான என் அப்பா, தூக்கு தண்டனை ரத்து என்ற 2014-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை அறியும் முன்னரே இறந்துவிட்டார். வயோதிக தாயாருக்காவது மகனுக்கான கடமைகளை செய்ய விரும்புகிறேன். என்னுடைய உறவுகளுடன் என்னை சேர்த்து வைக்க மத்திய அரசால் முடியும்.

    என்னுடைய சிரமம் மிகுந்த சிறை வாழ்க்கையை சிதறடிக்க உதவுங்கள்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் சாந்தன் எழுதி உள்ளார்.  #RajivGandhiAssassination  #Santhan
    பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி, டெல்லியில் உள்ள வாடிகன் தூதரகத்தின் இந்திய பிரதிநிதி கியாம்படிஸ்டா டிகுவாட்ரோவுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். #KeralaNun #Vatican #Bishop
    கொச்சி:

    கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு கன்னியாஸ்திரி, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கத்தோலிக்க மறைமாவட்ட பேராயர் பிராங்கோ முலக்கல் மீது கற்பழிப்பு புகார் கொடுத்துள்ளார். அவருக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி, அவரது சக கன்னியாஸ்திரிகள் 5 பேர் உள்பட ஏராளமானோர், கொச்சியில் கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    கன்னியாஸ்திரி புகார் மீதான விசாரணை, சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாகவும், யாரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்றும் கேரள மந்திரி இ.பி.ஜெயராஜன் நேற்று கூறினார்.

    இதற்கிடையே, பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி, டெல்லியில் உள்ள வாடிகன் தூதரகத்தின் இந்திய பிரதிநிதி கியாம்படிஸ்டா டிகுவாட்ரோவுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், “கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டுவரை, பேராயர் முலக்கல், என்னை பலதடவை கற்பழித்துள்ளார். அச்சமும், அவமானமும் இருந்ததால், நான் வெளியே சொல்லவில்லை. தற்போது நான் புகார் கொடுத்த பிறகும், திருச்சபை கண்ணை மூடிக்கொண்டிருப்பது ஏன்?

    பேராயர் முலக்கலை அப்பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும். அவர் தனது செல்வாக்கையும், பணபலத்தையும் பயன்படுத்தி, விசாரணையை முடக்க முயன்று வருகிறார். ஆகவே, தாங்கள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.  #KeralaNun #Vatican #Bishop
    மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் கைது விவகாரத்தில் முக்கிய ஆதாரமான கடிதத்தை எப்படி பத்திரிகையாளர்கள் முன் படித்து காட்டி பகிரங்கப்படுத்தலாம் என போலீசாருக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது. #BombayHC #MaharashtraPolice
    மும்பை:

    பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக கடந்த செவ்வாய்க்கிழமை போலீசார் 5 மாவோயிஸ்டு ஆதரவாளர்களை கைது செய்தனர். இதில் மும்பையை சேர்ந்த வெர்னன் கோன்சால்வ்ஸ், அருண் பெரேரா ஆகியோரும் அடங்குவார்.

    இடதுசாரி சிந்தனையாளர்களான இவர்களின் எதிர்ப்பு குரலை ஒடுக்கும் நோக்கில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    ஆனால் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரம் இருப்பதாக போலீசார் கூறினர்.

    இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை புனேயில் பத்திரிகையாளர் கூட்டத்தில் கலந்துகொண்ட மாநில கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. பரம்வீர் சிங், புனே மாவட்டம் பீமா-கோரேகாவ் வன்முறையில் கடந்த ஜூன் மாதம் கைதானவர்களும், தற்போது கைதான மாவோயிஸ்டு ஆதரவாளர்களும் தகவல் பரிமாறிக்கொண்ட கடிதத்தை படித்து காட்டினார்.

    இதற்கிடையே புனே போலீசார் இந்த வழக்கை நியாயமற்ற, தீய எண்ணத்துடன் விசாரித்து வருவதாக கூறி சதீஷ் கெய்க்வாட் என்பவர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றவேண்டும் என்று அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.ஷிண்டே மற்றும் மிருதுலா பாத்கர் அடங்கிய அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள், வழக்கில் முக்கிய ஆதாரமாக கருதப்படும் கடிதத்தை பத்திரிகையாளர்கள் முன்னால் போலீசார் படித்து காட்டி பகிரங்கப்படுத்தியதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

    வழக்கு கோர்ட்டில் விசாரணையில் இருக்கும் நிலையில், போலீசார் எவ்வாறு இப்படி செய்யலாம்? இந்த விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு விசாரணை நடத்தி வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் வழக்கு தொடர்பான தகவல்களை வெளிப்படுத்துவது தவறானது என தெரிவித்தனர்.

    பின்னர் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 7-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 
    எந்த தேர்தல் வந்தாலும் மக்கள் விரோத அரசுகளை வீழ்த்துவதே தி.மு.க.வின் இலக்கு என்று தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin #DMKCadres
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    என் உயிரினும் மேலான தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளே. புதிதாகப் பிறந்திருக்கின்றோம் நாம். ஆம் நம்மை ஆளாக்கிய தலைவர் கலைஞர் நம் நெஞ்சில் நிறைந்து, உலகைத் துறந்த நிலையில், அவர் காலமெல்லாம் கட்டிக்காத்த கழகம் எனும் லட்சிய தீபத்தை ஏந்தித் தொடர்ந்து மேற்செல்லும் மிகப்பெரும் பொறுப்புடன் நாம் புதிதாகப் பிறந்திருக்கின்றோம்.

    உங்களால் உங்களுக்காகத் தலைவர் என்ற பொறுப்பை ஏற்றிருக்கும் தலைமைத் தொண்டன் நான். அரை நூற்றாண்டு காலம் தலைவர் கலைஞரின் தகுதி வாய்ந்த நிழலில்- அவரது வழிகாட்டுதலில் கழகத்தின் வளர்ச்சியிலும், சோதனைகளிலும் சம மனநிலையுடன் பங்கெடுத்து, சிறிதும் சளைக்காமல் களம் கண்ட உங்களில் ஒருவன் இன்று உங்களின் தலைவன் என்ற பொறுப்பினை உன்னதமான உங்களால் தான் பெற்றிருக்கிறேன் என்பதை உயிருள்ளவரை ஒருபோதும் மறக்க மாட்டேன்.

    காலத்திற்கேற்ற அணுகு முறைகள்-மக்களின் மனநிலையை உணர்ந்த மாற்றங்கள் லட்சியத்தை வென்றடைவதற்கான வியூகங்கள் இவற்றுடன் புதிய பயணத்தைத் தொடங்கியிருக்கிறோம். பாதை நமது; பயணம் புதிது.

    நூற்றாண்டு கடந்து வந்து, பல வெற்றிகளைக் குவித்துள்ள திராவிட இயக்கத்தின் பயணம் இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. அந்த நெடும் பயணத்தில் உடனடி இலக்குகள், இரண்டு.

    ஒன்று, சுயமரியாதையை அடகு வைத்த முதுகெலும்பில்லாத-ஊழல் கறை படிந்த-அரசு கருவூலத்தைக் கொள்ளையடிப்பதற்காகவே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசை மக்கள் துணையுடன் விரட்டி அடிப்பது. மற்றொன்று, சமூக நீதிக்குக் குழிவெட்டி, நாட்டின் பன்முகத்தன்மையைச் சிதைத்து, மாநில உரிமைகளைப் பறித்து மதவெறியைத் திணித்து, இந்தியா முழுவதும் காவி வண்ணம் பூச நினைக்கும் மத்திய பா.ஜ.க. அரசை வீழ்த்திக் காட்டுவது.

    இந்த இரண்டு உடனடி இலக்குகளும், இந்தியாவையும் தமிழ்நாட்டையும் நெருக்கும் பேராபத்திலிருந்து காக்கக்கூடிய பாதுகாப்பு வேலிகளாகும். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள மதசார்பற்ற சக்திகளுடன் இணைந்து அந்தப் பாதுகாப்பு வேலிகளை அமைப்பதில் நாம் முனைப்புடன் செயல்பட வேண்டும்.


    மத்தியில் ஆள்கின்ற நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் எதேச்சதிகாரப் போக்கினால் இந்தியாவின் ஒருமைப்பாடு மிகப்பெரிய அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது. 120 கோடி மக்களைக் கொண்ட நாட்டின் வலிமையைப் பலவீனப்படுத்தும் அனைத்து வேலைகளையும் சமூக, பொருளதார, கல்வி, மொழி, வாழ்வுரிமை உள்ளிட்ட பல தளங்களிலும் செய்து வருகிறது. இவற்றால் ஒவ்வொரு மாநிலத்திலும் வாழ்கின்ற அந்தந்த மொழி பேசும் தேசிய இனங்களின் மீது அறிவிக்கப்படாத போர் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த யுத்தத்தை எதிர்கொள்கின்ற ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து செல்வதில், மாநில சுயாட்சிக்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அதற்காக அயராது உழைக்கும் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகம் முன்னணியில் இருக்கும்.

    சமூக நீதிக்கு எதிராகவும் மதவெறியுடனும் இந்திய ஒருமைப்பாட்டை சிதைக்கும் வகையிலும் செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசையும், சுயமரியாதை இழந்து மாநில உரிமைகளை அடமானம் வைத்த மாநில அ.தி.மு.க. அரசையும் வீழ்த்த வேண்டியது என்பது ஜனநாயக போர்க்களமான தேர்தல் களம் தான். நாடாளுமன்றத் தேர்தலும், சட்டமன்றத் தேர்தலும் அடுத்தடுத்து வரலாம். ஏன், இரண்டும் இணைந்துகூட வரலாம்.

    எப்படி வந்தாலும், எந்தத் தேர்தல் வந்தாலும் அதில் மக்கள் விரோத அரசுகள் இரண்டையும் வீழ்த்துவதே ஜனநாயக இயக்கமான தி.மு.க.வின் இலக்கு. நாம் என்ற உணர்வுடன் என்றும் இணைந்து பயணிப்போம். இனப் பகையை முறியடிப்போம். தேர்தல் களத்தில் வெற்றி குவிப்போம். அதனை நம் உயிருக்கு மேலான தலைவர் கலைஞருக்கு லட்சியக் காணிக்கையாக்குவோம்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #DMK #MKStalin #DMKCadres
    நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் தகவல்கள் திருடப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த ‘நீட்’ தேர்வு நடத்திய சி.பி.எஸ்.இ.யின் தலைவர் அனிதா கர்வாலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு கடிதம் எழுதி உள்ளார். #NEET #RahulGandhi #CBSE
    புதுடெல்லி:

    மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வு, கடந்த மே 6-ந் தேதி நடைபெற்றது. அதில் பங்கேற்ற மாணவர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ‘நீட்’ தேர்வு நடத்திய சி.பி.எஸ்.இ.யின் தலைவர் அனிதா கர்வாலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

    அதில், “நீட் தேர்வு எழுதியவர்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் பெயர், செல்போன் எண், இமெயில் முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள், ஒரு இணையதளத்தில் விலைக்கு விற்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது, அவர்களின் தனிநபர் ரகசியத்தை மீறும் செயல். இதை தடுக்க போதிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது. எதிர்காலத்திலாவது, கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை உருவாக்க வேண்டும். இந்த திருட்டு பற்றி விசாரணை நடத்தி, இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.  #NEET #RahulGandhi #CBSE #tamilnews 
    தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களும், கால்பந்து பயிற்சியாளரும் அவர்களது பெற்றோர்களுக்கு கடிதம் எழுதி, இங்கிலாந்து மீட்பு வீரர்கள் மூலம் கொடுத்து அனுப்பி உள்ளனர். #ThaiCave #FIFA
    சியாங்ராய்:

    தாய்லாந்து குகையில் வெள்ளப்பெருக்குக்கு இடையே சிக்கி உள்ள 12 சிறுவர்களையும், அவர்களது கால்பந்து பயிற்சியாளரை மீட்பதற்கான பணியில் அந்த நாட்டின் கடற்படை வீரர்கள், ராணுவ வீரர்கள், போலீசார், தன்னார்வ தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குகையின் வெள்ளத்தை வடியச்செய்வதற்கான பணியில் அவர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் சிக்கியுள்ள சிறுவர்களும், கால்பந்து பயிற்சியாளரும் கடிதம் எழுதி, இங்கிலாந்து மீட்பு வீரர்கள் மூலம் கொடுத்து அனுப்பி உள்ளனர். அந்தக் கடிதங்கள் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.



    போங் என்ற புனைப்பெயரால் அழைக்கப்படுகிற சிறுவன் தன் பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில், “என்னைப்பற்றி கவலைப்பட வேண்டாம். நான் பத்திரமாக இருக்கிறேன்” என கூறி உள்ளான்.

    இன்னொரு சிறுவன், “அம்மா, அப்பா, உடன்பிறப்புகள் அனைவரையும் நான் நேசிக்கிறேன். நான் வெளியே வந்த பின்னர் அம்மா, அப்பா எனக்கு சாப்பிட மூகாத்தா விருந்து (திறந்தவெளி விருந்து) வேண்டும்” என்று கேட்டு இருக்கிறான்.



    சிறுவர்களின் கால்பந்து பயிற்சியாளர் எக்காபொல் சாண்டாவோங், சிறுவர்களை குகைக்கு அழைத்துச்சென்றதற்கு மன்னிப்பு கேட்டு அவர்களின் பெற்றோருக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்தக் கடிதத்தில் அவர், “அன்பான சிறுவர்களின் பெற்றோரே, அவர்கள் எல்லாரும் நலமாக உள்ளனர். நான் என்னால் முடிந்த அளவுக்கு அவர்களை நன்றாக கவனித்துக்கொள்வேன். என்னை எல்லோரும் மன்னித்து விடுங்கள்” என்று உருக்கமுடன் கூறி உள்ளார்.

    இதேபோன்று பயிற்சியாளர் எக்காபொலுக்கு சிறுவர்களின் பெற்றோரும் கடிதம் எழுதி உள்ளனர். அதில் அவர்கள், அவர்மீது தங்களுக்கு கோபம் இல்லை என்றும், குழந்தைகளை கவனித்துக்கொள்வதற்கு நன்றி என்றும் தெரிவித்து உள்ளனர்.

    மாகாண கவர்னர் நாரோங்சாக் கூறும்போது, “சிறுவர்கள் நல்ல பலத்துடன் உள்ளனர். ஆனாலும் நீந்த முடியாது. அவர்களுக்கு முக்குளிப்பு மற்றும் சுவாச பயிற்சிகள் தரப்படுகின்றன” என்று குறிப்பிட்டார்.  #ThaiCave #FIFA #Tamilnews 
    அணை பாதுகாப்பு சட்டத்தை இயற்ற எடுத்துள்ள நடவடிக்கைகளை மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். #EdappadiPalaniswamy #Letter #Modi
    சென்னை:

    மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர உள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    இந்த சட்டம் தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வந்து, அதனை முன்மொழிந்து பேசியதாவது:-

    மத்திய அரசு, 2010-ம் ஆண்டு வரைவு அணை பாதுகாப்பு மசோதாவை தயாரித்து மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்டது. இந்த வரைவு மசோதாவில், தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டுள்ள அணைகள் அண்டை மாநிலத்தில் இருக்கும் போது அதனை இயக்குதல் மற்றும் பராமரித்தல் சம்பந்தமாக பிரச்சினைகள் ஏற்படும் என்ற காரணத்தால், அந்த வரைவு மசோதாவில் இடம்பெற்ற தமிழ்நாட்டிற்கு பாதகமான அம்சங்கள் குறித்து மறுப்பு தெரிவிக்கப்பட்டு, அவைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் ஜெயலலிதா, 29.7.2011 மற்றும் 17.3.2012 நாளிட்ட கடிதங்களின் வாயிலாக பிரதமரை கேட்டுக்கொண்டார்.



    ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு, 2010-ம் ஆண்டைய வரைவு அணை பாதுகாப்பு மசோதாவை கைவிட்டது.

    இருப்பினும், அணை பாதுகாப்பு குறித்து, நாடு முழுவதும் பின்பற்றக்கூடிய ஒரு சட்டத்தை இயற்ற, மத்திய அரசு 2016-ம் ஆண்டு ஒரு வரைவு அணை பாதுகாப்பு மசோதாவை தமிழ்நாட்டின் கருத்து கோரி அனுப்பி வைத்தது. இந்த வரைவு மசோதாவை தமிழ்நாடு அரசு விரிவாக ஆய்வு செய்ததில், தமிழ்நாட்டிற்கு பாதகமான அம்சங்கள் கண்டறியப்பட்டது.

    அதில் குறிப்பாக, ஒரு மாநிலத்திற்குள் ஓடுகின்ற நதியின் குறுக்கே அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களை அந்தந்த மாநிலமே கட்டிக்கொள்வது குறித்து அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு கட்டப்படும் அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் அந்த மாநிலத்திற்கே சொந்தமானது என்றும், அவை அம்மாநிலங்களாலேயே இயக்கப்பட்டும், பராமரிக்கப்பட்டும் வரும் என்றும், இந்த வரைவு மசோதாவில் தேசிய அணை பாதுகாப்பு நிறுவனத்திற்கு மாநிலங்களிலுள்ள அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களை ஆய்வு செய்யும் அதிகாரங்களை அளிக்க உத்தேசித்திருப்பது, நடைமுறைக்கு உகந்ததாக இருக்குமா என தெரியவில்லை.

    முல்லைப்பெரியாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு மற்றும் பெருவாரிப்பள்ளம் அணைகள், அண்டை மாநிலமான கேரளாவுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களினால் தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டும், இயக்கப்பட்டும் மற்றும் பராமரிக்கப்பட்டும் வருகின்றன.

    இத்தகைய அணைகள் பற்றிய விவரம் குறித்து இந்த வரைவு மசோதாவில் இடம் பெறவில்லை. மத்திய அரசின் அமைச்சரவையினால் ஒப்புதல் வழங்கப்பட்ட வரைவு மசோதாவினால், இந்த 4 அணைகளை பராமரிப்பதில் இடையூறுகள் ஏற்படும்.

    உத்தேசிக்கப்பட்டுள்ள தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் மற்றும் அணை பாதுகாப்புக் குழு ஆகிய அமைப்புகளினால் அணைகளை பராமரிப்பதில் ஏற்படும் இடையூறுகளில் தீர்வு காண இயலாது.

    இவைகளை எல்லாம் சுட்டிக்காட்டி, ஜெயலலிதா 11.9.2016 அன்று பிரதமருக்கு கடிதம் அனுப்பினார். இக்கடிதத்தில், இந்த மசோதா அவசர கதியில் பரிசீலிக்கப்பட கூடாது எனவும், அனைத்து அம்சங்களும் விரிவாக பரிசீலிக்கப்பட்ட பின்னரே சட்டம் இயற்றுவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, 2016-ம் ஆண்டைய வரைவு அணை பாதுகாப்பு மசோதாவிற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார். தமிழ்நாடு அரசு இம்மசோதாவிற்கு தன்னுடைய எதிர்ப்பினை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    2018-ம் ஆண்டைய அணை பாதுகாப்பு மசோதாவிற்கு, மத்திய அமைச்சரவை 13.6.2018 அன்று ஒப்புதல் அளித்துள்ளது என பத்திரிகை மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. இந்த வரைவு மசோதாவின் மீது மத்திய அரசு தமிழ்நாட்டின் கருத்தை கோரவில்லை.

    இந்த வரைவு மசோதாவில், தமிழ்நாட்டின் உரிமைகளை பாதிக்கும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாலும், குறிப்பாக, அண்டை மாநிலத்தில், தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டுள்ள அணைகளான முல்லைப்பெரியாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு மற்றும் பெருவாரிப்பள்ளம் ஆகிய அணைகளை இயக்குதல் மற்றும் பராமரித்தல் போன்றவற்றிற்கு பல்வேறு பிரச்சினைகள் இவ்வரைவு மசோதாவால் எழக்கூடும் என்பதாலும், மாநிலங்களை கலந்தாலோசித்து, மாநிலங்களின் ஒருமித்த கருத்து ஏற்படும் வரையில், மத்திய அரசு, அணை பாதுகாப்பு சட்டத்தை இயற்றக்கூடாது எனவும், அது வரையில் மத்திய அமைச்சரவை தற்பொழுது எடுத்துள்ள முடிவை நிறுத்திவைக்க வேண்டும் எனவும், நான் 15.6.2018 அன்று பிரதமருக்கு, அனுப்பிய கடிதத் தில் கேட்டுக் கொண்டேன்.

    அணை பாதுகாப்பு குறித்து மத்திய அரசு உத்தேசித்துள்ள சட்டத்தை நிறைவேற்றுமானால், அணை பாதுகாப்பு என்ற போர்வையில், முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு மற்றும் பெருவாரிப்பள்ளம் ஆகிய நான்கு அணைகளைப் பராமரிப்பதில் தமிழ்நாட்டிற்கு இடை யூறுகள் ஏற்படும். மத்திய அமைச்சரவை 13.6.2018 அன்று இசைவு அளித்துள்ள, 2018-ம் ஆண்டைய வரைவு அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்கவும், மாநிலங்களை கலந்தாலோசித்து, மாநிலங்களின் ஒருமித்த கருத்து ஏற்பட்ட பின்னரே, மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டத்தை இயற்றலாம் எனவும், அது வரையில் மத்திய அரசு, அணை பாதுகாப்பு சட்டத்தை இயற்ற உத்தேசித்துள்ள நடவடிக்கைகளை நிறுத்திவைக்க வேண்டும் என்ற கீழ்க்கண்ட தீர்மானத்தை முன்மொழிகிறேன்.

    “மத்திய அரசு இயற்ற உத்தேசித்துள்ள 2018-ம் ஆண்டைய வரைவு அணை பாதுகாப்பு மசோதாவில், தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படக்கூடிய அம்சங்கள் உள்ளதாலும், குறிப்பாக, தமிழ்நாடு அரசால் அண்டை மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள அணைகளை இயக்குதல் மற்றும் பராமரித்தல் பணிகளில் பல்வேறு பிரச்சினைகள் எழக்கூடும் என்பதாலும், மாநிலங்களை கலந்தாலோசித்து ஒருமித்த கருத்து ஏற்பட்ட பின்னரே, மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் எனவும், அது வரையில், மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டத்தை இயற்ற எடுத்துள்ள நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், இம்மாமன்றம் மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது” இந்த தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றித்தரும்படி தங்கள் வாயிலாக இம்மாமன்றத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    முதல்-அமைச்சரின் இந்த தீர்மானத்தை வரவேற்பதாக எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் முகமது அபுபக்கர் ஆகியோர் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து தீர்மானம் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. சபாநாயகர் இந்த தீர்மானத்தை, ‘ஆதரிப்போர் ஆம் என்க, எதிர்ப்போர் இல்லை என்க’ என்றார். அதனை தொடர்ந்து அவையில் இருந்த ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ‘ஆம்’ என்று கூற, தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

    இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திரமோடிக்கு, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.

    அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    2018-ம் ஆண்டைய அணை பாதுகாப்பு மசோதாவிற்கு, மத்திய அமைச்சரவை 13.6.2018 அன்று ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வரைவு மசோதாவால் மாநிலத்தின் உரிமைகள் பாதிக்கப்படும். எனவே மாநிலங்களை கலந்தாலோசித்து, மாநிலங்களின் ஒருமித்த கருத்து ஏற்படும் வரையில், மத்திய அரசு, அணை பாதுகாப்பு சட்டத்தை இயற்றக்கூடாது.

    மத்திய அமைச்சரவை தற்பொழுது எடுத்துள்ள முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று நான் 15.6.2018 அன்று தங்களுக்கு (பிரதமருக்கு), அனுப்பிய கடிதத்தில் கேட்டுக்கொண்டேன். மாநிலங்களின் உரிமைகளை பாதிக்கும் வகையில் இந்த மசோதாவில் சில அம்சங்கள் இருக்கிறது. எங்கள் மாநிலத்தின் சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றி தங்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். இந்த தீர்மானத்தின் அடிப்படையில் உடனடியாக நல்ல முடிவை உங்களிடம் இருந்து நான் எதிர்பார்க்கிறேன்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    அந்த கடித்தத்துடன் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அனுப்பப்பட்டுள்ளது. 
    ஜெர்மனியில் நடைபெற உள்ள உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்பதற்கு நிதி உதவி கேட்டு பிரதமர் மோடிக்கு உ.பி.யைச் சேர்ந்த இளம் வீராங்கனை கடிதம் எழுதி உள்ளார். #ISSFJuniorWorldCup #FundForIndianPlayer
    மீரட்:

    சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு (ஐஎஸ்எஸ்எப்) சார்பில் ஜெர்மனியின் சுகல் நகரில் வரும் 22-ம் தேதி ஜூனியர் உலகக் கோப்பை போட்டி தொடங்க உள்ளது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்பதற்கு, உத்தர பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த பிரியா சிங் (வயது 19) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    ஆனால், உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்க காத்திருக்கும் பிரியா சிங்கின் குடும்பம் ஏழ்மை நிலையில் இருப்பதால், அவரால் ஜெர்மனி சென்று தங்கியிருந்து போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு செல்வதற்கு லட்சக் கணக்கில் செலவு ஆகும் என்பதால் அவரது குடும்பத்தினர் என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பில் உள்ளனர்.



    எனவே, ஜெர்மனி சென்று திரும்புவதற்கான பயணச் செலவு மற்றும் அங்கு தங்குவதற்கு தேவையான நிதி உதவி கேட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரியா சிங் கடிதம் அனுப்பி உள்ளார்.

    இது தொடர்பாக பிரியா சிங் கூறியதாவது:-

    உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க ஆர்வமாக இருக்கிறேன். ஆனால், அதற்கு 3 முதல் 4 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என கூறியுள்ளனர். என் தந்தை கூலித் தொழிலாளி. அவரால் இயன்ற வரை முயற்சி செய்தார். ஆனால், அவரால் பணத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை. எனவே, நிதி உதவி கேட்டு உத்தர பிரதேச முதல்வர் மற்றும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளேன்.

    உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க உதவி கேட்டு விளையாட்டுத்துறை மந்திரியை சந்திப்பதற்காக இரண்டு முறை சென்றேன். ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #ISSFJuniorWorldCup #FundForIndianPlayer
    “திரும்பவும் ஒரு தோல்வியை தாங்கும் சக்தி எனக்கு இல்லை” என்று தற்கொலைக்கு முன்பு தனது தந்தைக்கு எழுதிய உருக்கமான கடிதத்தில் பிரதீபா தெரிவித்துள்ளார். #NEET2018 #Pratheeba #TNStudentSuicide
    மேல்மலையனூர்:

    நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பெருவளுரை சேர்ந்த மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது தந்தைக்கு எழுதிய 2 பக்கம் கொண்ட உருக்கமான கடிதம் ஒன்று தற்போது கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    ‘உங்க அம்மு உங்க கிட்ட சொல்ல விரும்புவது இதுவே கடைசி. அப்பா சாரி பா. என்னால ஜெயிக்க முடியல. நீங்க என்மேல வச்சிருந்த நம்பிக்கையை என்னால காப்பாத்த முடியல. என்னால திரும்பவும் ஒரு தோல்வியை தாங்குகிற சக்தி இல்லை. எத்தனை முறை பா நான் தோல்வியை தாங்குவேன். தோல்வியடைந்ததால என்னால என் பள்ளிக்கு செல்ல முடியல. என்னோட ஆசிரியரை பார்த்து பேசுகிற தைரியம் எனக்கு இல்லை. என்னாலதானப்பா மற்றவங்க முன்னாடி நீங்க 2 வருஷமா தலைகுனிந்து வாழ்ந்தீர்கள். என் ஆசை நீங்க மற்றவங்க முன்னாடி தலை நிமிர்ந்து வாழனும். ஆனால் என்னால அதை செய்ய முடியல.

    என் குடும்பம் நீங்க எல்லோரும் எனக்கு கிடைத்த வரம்பா. ஆனால் நான் உங்களுக்கு கிடைத்த சாபம்னு நினைக்கிறேன். எனக்கு தோல்வியை தாங்குகிற சக்தி இல்லை. இந்த 2 வருஷமா எனக்கு அந்த சக்தியை கொடுத்தது நீங்க தான்பா. ஆனால் இதுக்கு மேலயும் நான் உனக்கு பாரமா இருக்க விரும்பவில்லை. இந்த முடிவை நான் 2 வருஷத்துக்கு முன்னாடி எடுத்தப்பவே நீங்க என்னை தடுக்காம இருந்திருக்கலாம். அப்படி நான் செய்திருந்தால் 2 வருஷத்துல என்னை கொஞ்சம், கொஞ்சமாக மறந்துட்டு இருப்பீங்க. அதனால நான் அதை செய்யப்போறேன். ஏன்னா நான் உங்க எல்லாருடைய நம்பிக்கையை இழந்துட்டேன். நான் சாக போறேன். ஐயம் சாரி பா. லவ் யூ பா.

    எனக்கு வேற வழி தெரியலபா. நம்ம குடும்பம்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்க எல்லோரு கூடவும் ரொம்பநாள் சேர்ந்து இருக்கனும்னு ஆசையா இருக்கு. ஆனா எனக்கு அந்த தகுதி இல்லை. இந்த முடிவு மற்றவங்களுக்கு கோழைத்தனமா தெரியலாம். ஆனா அடுத்தவங்க நம்ம மேல வச்சிருக்க நம்பிக்கையை நாமே அழிச்சிட்டு வாழ்கிற வாழ்க்கையை விட இந்த முடிவே சரி. எனக்கு ஒரே ஒரு வருத்தம்பா. என்னால உங்களுக்கு எந்த சந்தோஷத்தையும் தர முடியல. அதுமட்டும் இல்லாம என்னால இருந்த எல்லா சந்தோஷத்தையும் நீங்க இழந்துட்டீங்க. அப்பா எனக்கு நீங்க தைரியம் சொன்னதுக்கு அப்புறமும் நான் இந்த முடிவு எடுக்கிறது தப்பு தான். ஆனால் என்னால தோல்வியை தாங்க முடியல. உங்க எல்லோரையும் விட்டுட்டு போகனும்னு நினைக்கும்போது ரொம்ப வலிக்குது.



    ஆனா அதை விட அதிகமான வலியை இந்த தோல்வி தந்து விட்டது. என்னால மற்றவங்க மாதிரி கிடைச்சத வச்சு வாழ முடியல. ஏன்னா அப்படி நான் வளரல. நான் மனசுல ஒன்னு வச்சுக்கிட்டு வாழ்க்கை முழுவதும் வேற ஒரு வாழ்க்கையை வாழரவங்க மாதிரி இல்லை. என்னால அந்த வலியை தாங்க முடியாது. என்ன மன்னிச்சுடுமா, மன்னிச்சுடுக்கா, மன்னிச்சுடுணா உங்கள எல்லாரையும் மிஸ் பன்றேன். ஐ லவ் மை பேமிலி.

    இப்படிக்கு உங்க அம்மு (பிரதீபா).

    இவ்வாறு அந்த கடிதத்தில் பிரதீபா எழுதி இருக்கிறார்.

    நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவரது குடும்பத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் தற்கொலை செய்த பிரதீபாவின் உடலை அடக்கம் செய்யமாட்டோம் என காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

    இந்த நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மாணவி உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் போராட்டத்தை கைவிட்டு மாணவியின் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கேட்டுக்கொண்டார். இதனை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து மாலை 5 மணி அளவில் காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

    இதையடுத்து மாணவியின் உடல் இறுதி சடங்குக்கு பின்னர் மாலை 6.15 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்பட்டு அந்த பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. #NEET2018 #Pratheeba #TNStudentSuicide
    கர்நாடகாவில் வெளியாகும் காலா படத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என நடிகர் விஷால் கர்நாடக முதல் மந்திரி குமாரசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். #Kaala #ActorVishal #Kumarasami #Letter
    சென்னை:

    இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் நாளை வெளியாகிறது. வெளிநாடுகளில் காலா படம் ஒருநாள் முன்னதாகவே வெளியிடப்பட்டது. 

    இதற்கிடையே, காலா படத்தை பேஸ்புக் லைவ் மூலம் நேரடியாக சுமார் 40 நிமிடம் ஒளிபரப்பு செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்க தலைவரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.



    இந்நிலையில், காலா படத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி கர்நாடக முதல் மந்திரி குமாரசாமிக்கு நடிகர் விஷால் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், கர்நாடகாவில் காலா படம் வெளியாவதை உறுதி செய்து, திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களுக்கு பாதுகாப்பு வழங்குங்கள்.

    முதல் மந்திரி குமாரசாமி எடுக்கும் முடிவு தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என குறிப்பிட்டிருந்தார். #Kaala #ActorVishal #Kumarasami #Letter
    ×