search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேதாரண்யம்"

    11 நாட்களாக மின்சாரம் இல்லாமல் இருந்த வேதாரண்யம் நகரில், 75 சதவீத வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. #GajaCyclone
    சென்னை:

    நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்கள் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

    இந்த மாவட்டங்களில் இருந்த 1 லட்சத்து 13 ஆயிரம் மின் கம்பங்கள், 201 துணை மின் நிலையங்கள், 841 மின்மாற்றிகள் முற்றிலும் சேதம் அடைந்து விட்டன. இவற்றை சீரமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    மின்துறை அமைச்சர் தங்கமணி டெல்டா மாவட்டங்களில் முகாமிட்டு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார். தற்போது எந்த அளவுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றி அமைச்சர் தங்கமணி கூறியதாவது:-

    மின் வினியோகத்தை பொறுத்தவரை நகராட்சி பகுதிகளில் ஓரளவு முழுமையாக மின் இணைப்பு கொடுத்து விட்டோம்.

    11 நாட்களாக மின்சாரம் இல்லாமல் இருந்த வேதாரண்யம் நகரில், 75 சதவீத வீடுகளுக்கு நேற்று மின் இணைப்பு வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ள வீடுகளுக்கும் மின் இணைப்பு 2 நாளில் கிடைக்க பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதேபோல் முத்துப்பேட்டை நகருக்கு மின் இணைப்பு கொடுக்க வேலைகள் நடந்து வருகிறது. நாளை அல்லது நாளை மறுநாளில் இருந்து அங்கு மின்சாரம் கிடைத்து விடும்.

    திருவாரூர் நகராட்சியில் 100 சதவீதமும், மன்னார்குடி நகராட்சியில் 92.66 சதவீதமும், கூத்தாநல்லூர் நகராட்சியில் 92.42 சதவீதமும், திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 75.02 சதவீதமும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

    கிராம பகுதிகளில் 30 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின்சாரம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வது மிகப்பெரிய சவாலாக உள்ளது. மின்வாரிய ஊழியர்கள் இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகிறார்கள்.

    நிறைய வீடுகளில் மின் இணைப்பு சேதம் அடைந்திருப்பதால் 30-ந்தேதி வரை பில் கட்ட வேண்டாம் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலக்கெடுவை நீட்டிப்பது பற்றி முதல்-அமைச்சருடன் கலந்து பேசி அறிவிப்பு வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone
    வேதாரண்யம் அருகே வாலிபரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கரியாப்பட்டிணம் காவல் சரகத்திற்குட்பட்ட அண்டகதுறை பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 27). இவர் நேற்று அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

    அப்போது அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்த ஒரு சிறுமி மகேந்திரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் முன்பு ஓடி வந்து விட்டார். இதை சுதாரித்து கொண்ட அவர் உடனே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டார். பின்னர் ஆத்திரமடைந்த மகேந்திரன் அந்த சிறுமியை அழைத்து இப்படி சாலையில் வந்து விளையாடலாமா? என்று அடித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது தந்தை பாரதி (45). ஏன் அழுகிறாய் என்று கேட்டதற்கு சிறுமி நடந்ததை கூறியுள்ளார். இதனால் தனது மகளை மகேந்திரன் எப்படி அடிக்கலாம் என்று ஆவேசம் அடைந்த பாரதி, அவரது உறவினரான தமிழ்ச்செல்வம் (26). என்பவருடன் மகேந்திரன் வீட்டிற்கு சென்று அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    இதில் பலத்த காயமடைந்த மகேந்திரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் இது குறித்து கரியாப்பட்டிணம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேம்பரசி வழக்கு பதிவு செய்து பாரதி மற்றும் தமிழ்ச்செல்வனை கைது செய்து விசாரனை நடத்தி வருகிறார்.

    வேதாரண்யம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது கொன்றை மரங்கள் பூத்து குலுங்கி மஞ்சள் போர்வை போர்த்தியது போல் காணப்படுகிறது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது கொன்றை மரங்கள் பூத்து குலுங்கி மஞ்சள் போர்வை போர்த்தியது போல் காணப்படுகிறது. கொன்றை பூவில் அதிகளவில் மருத்துவ குணங்கள் நிறைந்ததாக சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில், தங்க மழை மரம் ‘அக்வந்தா‘ என்று அழைக்கப்படுகிறது, அதாவது ‘நோயாளியின் கொலையாளி‘ என்று அர்த்தம்.

    சரக்கொன்றை மரத்தின் பூ, இலை மற்றும் மரப் பட்டைக்கு மருத்துவக்குணம் உள்ளது. பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப் படுகிறது. சரக்கொன்றை பூவையும் இளம்கொழுந்தையும் துவையல் செய்து சாப்பிடலாம், பூவை கஷாயம் செய்து சாப்பிடலாம். இப்படி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி, வயிற்றுக்கோளாறு, போன்றவையும் சரியாகும்.

    சரக்கொன்றை காயின் உள்ளே இருக்கும் சதைப்பற்றை, சமையலில் சேர்க்கும் புளியைப்போன்று பயன்படுத்தினால் பித்தம் சரியாகும். குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் சாப்பிட்டால் மலப்பிரச்னை சரியாகும். மேலும் கொன்றை பூ அதிகளவில் பூத்தால் அந்த வருடம் நல்ல மழை பெய்யும் என்பது நம்பிக்கை.

    தமிழகம் முன்னேற ஆட்சி மாற்றம் தேவை என்று வேதாரண்யத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா பேசினார். #BJP #HRaja
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள கரியாப்பட்டினம் கடைத்தெரு பகுதியில் பா.ஜனதா சார்பில் ‘‘உழவனின் உரிமை மீட்பு சைக்கிள் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்’’ மாநில கல்வியாளர் பிரிவு செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது. தஞ்சை கோட்ட பொறுப்பாளர் வரதராஜன், நாகை தெற்கு மாவட்டத் தலைவர் நேதாஜி, மாவட்டச் செயலாளர் தமிழ்நேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-

    காவிரி பிரச்சனைக்கு முக்கிய காரணம் தி.மு.க.வும், அதற்கு துணை நின்ற காங்கிரஸ் கட்சியும்தான். 50 ஆண்டு கால ஒப்பந்தத்தை நீட்டிப்பு செய்யாமல் அதற்கு போடப்பட்ட நீதிமன்ற வழக்கையும் தள்ளுபடி செய்து துரோகம் செய்தது தி.மு.க.தான். மக்களை ஏமாற்றும் கட்சியாகவும், துரோகியாகவும் உள்ள தி.மு.க. தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் கம்யூ. கட்சிகள் இரட்டை வேடம் போடுகின்றனர். தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தனது செயல்பாடுகள் மற்றும் பேச்சுகள் மூலம் தான் அரசியலில் இருப்பதற்கு தகுதியில்லை என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

    தற்போது தமிழகம் உலகிலேயே ஊழல் மிகுந்த மாநிலமாக உள்ளது. 50 ஆண்டு காலமாக தமிழ்நாடு திராவிட கட்சிகளால் முன்னேறவில்லை. தமிழகம் முன்னேற ஆட்சி மாற்றம் தேவை.

    இவ்வாறு எச்.ராஜா பேசினார்.

    முன்னதாக கோவில் பத்து ஊராட்சியிலிருந்து மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் தொடங்கிய சைக்கிள் பேரணியை மாநில செயலாளர் வேதரத்தினம் தொடங்கி வைத்தார். #BJP #HRaja
    வேதாரண்யத்தில் தம்பியை தாக்கிய அண்ணன் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் மேலவீதியில் வசிப்பவர்கள் குமரசாமி (வயது 55), குமரேசமூர்த்தி (54). இருவரும் சகோதரர்கள். குமரேசமூர்த்தி அரசு கல்லூரி பேராசிரியர்.

    குமரசாமி வேதாரண்யத்தில் ஜெராக்ஸ் கடை வைத்துள்ளார். இவர் மேல வீதியில் உள்ள கடை மற்றும் வீடுகளை சமமாக பிரித்துக்கொண்டனர். இதில் மேலத்தெருவிற்கு செல்ல பொதுப்பாதை ஒன்று இருந்து வருகிறது.

    இந்த பொதுப்பாதையில் தென்னை மட்டைகளை குமரசாமி போட்டிருந்தாராம். இதை அவரது தம்பி குமரேசமூர்த்தி அப்புறப்படுத்தியுள்ளார். இதை குமரசாமி தட்டிக்கேட்டதில் தகராறு ஏற்பட்டு குமரேசமூர்த்தியை குமரசாமியும், அவரது நண்பரும் சேர்ந்து கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதில் படுகாயமடைந்த குமரேசமூர்த்தி வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்பு தீவிர சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அவர் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதேபோல் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ள குமரசாமியும் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    வேதாரண்யத்தில் 45 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட மாணவர்களும் ஆசிரியர்களும் பழைய நினைவுகளை பேசி மகிழ்ந்தனர். பின்பு மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா கத்தரிபுலத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் 1973-ம் ஆண்டு முதல் படித்த முன்னாள் மாணவர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் 45 ஆண்டுகளுக்கு முன்பு இப்பள்ளியில் படித்த மாணவர்களும் அவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

    விழாவில் இப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்று பல்வேறு ஊர்களில் வாழ்ந்துவரும் ஆசிரியர்கள் ஆதிநெடுஞ்செழியன், நாகராஜன், ரசல், ராஜ்குமார், ராமநாதன், வீரப்பத்திரன், வடிவேல், சுந்தரேசன், ராமசந்திரன், கணேசன், ராமலிங்கம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    மாணவர்களும் ஆசிரியர்களும் பழைய நினைவுகளை பேசி மகிழ்ந்தனர். பின்பு மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.

    கொல்கத்தா, சென்னை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வேதாரண்யம் பகுதிகளில் இருந்தும் 500-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

    இந்த விழாவில் கத்தரிப்புலம் கிராமத்தில் பிறந்து இப்பள்ளியில் படித்த தமிழரசன் கொல்கத்தாவில் அரசு பணியில் உள்ளார். அவர் வாட்ஸ்-அப்பில் இந்த சந்திப்பு விழா அழைப்பை பார்த்து கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து அங்கு உள்ள தனது குடும்பத்தாரையும் அழைத்து கொண்டு வந்து விழாவில் கலந்து கொண்டார்.

    விழா ஏற்பாடுகளை பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சாம்பசிவம், சிவகடாட்சம், தருமையன், இளவழகன், சாமியப்பன், ஜெகநாதன், சரவணன், வீரமணி, ராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

    விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் கூறும்போது, 45 ஆண்டுகளுக்கு பிறகு தங்களுடன் படித்தவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்களின் ஆசிரியர்களை சந்தித்து ஆசி வாங்கியதை பெருமையாக நினைக்கிறோம். நாங்கள் படித்த பள்ளியை மேம்படுத்தவும், இப்பகுதி மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஜ.ஏ.எஸ் சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த உள்ளோம் என்றனர்.

    ×