search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தினகரன்"

    தேசிய கட்சிகளுடன் ஓரு போதும் அ.ம.மு.க. கூட்டணி அமைக்காது என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். #thangatamilselvan #bjp #parliamentelection

    ஆரணி:

    ஆரணி அடுத்த நேத்தப்பாக்கத்தில் அ.ம.மு.க. பிரமுகர் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது-

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி அமைந்தால் 4வது இடத்திற்கு செல்லும். நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெறுவார்கள்.

    தேசிய கட்சிகளுடன் ஓரு போதும் அ.ம.மு.க. கூட்டணி அமைக்காது. பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். அ.ம.மு.க. தயவு இல்லாமல் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது. எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தில் தி.மு.க. அடுத்து ஆட்சியை நிச்சயமாக பிடிக்கும் என்று கூறி வருகிறார். ஆர்.கே.நகர் இடைதேர்தலில் தி.மு.க. டெபாசிட் இழந்துள்ளது.

    ஜெயலலிதா, கருணாநிதி இறப்பிற்கு பின் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை தினகரன் நிரப்புவார். பாராளுமன்ற தேர்தலுக்கு பின்பு நிரந்தமான தலைவராக தினகரன் இருப்பார். 

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாவட்ட செயலாளர் வரதன், ஆரணி தொகுதி பொறுப்பாளர் பார்த்தீபன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஏழுமலை, நகர செயலாளர் வேலாயுதம், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் சீனிவாசன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் நேத்தப்பாக்கம் சரவணன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #thangatamilselvan #bjp #parliamentelection

    தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் சிறப்பு கோர்ட்டில் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று ஆஜரானார். #TTVDhinakaran

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடந்த ஆண்டு கரூரில் பொதுக்கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் பேசிய டி.டி.வி.தினகரன், மத்திய அரசின் கைப்பாவையாக தமிழக அரசு இருந்து மக்களை ஏமாற்றி வருகிறது என்று தெரிவித்தார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக தினகரன் பேசியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் கிரிமினல் அவதூறு வழக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 19-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கு 2018-ம் ஆண்டு அக்டோபர் 3-ந் தேதி சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல். ஏ. க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிறப்பு கோர்ட்டு நீதிபதி ஜெ.சாந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தினகரன் நேரில் ஆஜரானார். அவரிடம், வழக்கின் நகல் வழங்கப்பட்டது.

    இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற பிப்ரவரி 4-ந்தேதிக்கு நீதிபதி சாந்தி தள்ளிவைத்தார்.

    சிறப்பு கோர்ட்டில் தினகரன் ஆஜரானதை தொடர்ந்து, அ.ம.மு.க. தொண்டர்கள் ஏராளமானோர் கோர்ட்டில் குவிந்து இருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    கோர்ட்டில் ஆஜராகி விட்டு வெளியில் வந்த தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, “ஜாக்டோ-ஜியோ அமைப்பின் போராட்டத்தை தடுக்க நினைக்காமல் தமிழக அரசு பேச்சு நடத்த முன்வர வேண்டும்” என்றார். #TTVDhinakaran

    நீண்ட வரலாறு கொண்ட தி.மு.க.வில் எங்களோடு இருந்த ஒருவரை அழைத்து கட்சி நடத்துவது பலவீனத்தை காட்டுகிறது என்று வேலூரில் புகழேந்தி பேசினார். #pugalenthi #mkstalin #senthilbalaji

    வேலூர்:

    வேலூர் கிழக்கு, மேற்கு, மத்திய மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சத்துவாச்சாரியில் நடந்தது. இதில், கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி கலந்து கொண்டு பேசியதாவது:-

    ‘‘டி.டி.வி. தினகரன் பின்னால் இளைஞர் பட்டாளம் இருக்கிறது. மக்கள் ஆதரவோடு அவர் அரியணை ஏறப்போகிறார்’’.

    எம்.ஜி.ஆர். ஆட்சியை கட்டிக்காத்து மக்களுக்காக ஜெயலலிதா தன்னையே அர்ப்பணித்தார். அவருக்கு உதவியாக இருந்து பல தியாகங்களை செய்தவர் சசிகலா.

    ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டு அவர் வெற்றி பெற செய்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்திருப்பது ஜெயலலிதாவிற்கு செய்த துரோகம்.

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் சசிகலாவை நீங்கள்தான் பொதுச்செயலாளராக, முதல்வராக வரவேண்டும் என்று அழைத்தனர்.

    சசிகலா என்ன தவறு செய்தார். சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த கதையாக அவரை அழைத்துவிட்டு தற்போது தரம் தாழ்த்தி பேசுகின்றார்கள்.

    துரோக ஆட்சி நடத்தியவர்கள் கடந்து வந்த பாதையை பின்னோக்கி பார்க்க வேண்டும். மக்கள் ஆதரவோடு டி.டி.வி. தினகரன் தமிழக முதல்-அமைச்சர் ஆவார். இப்போது தரம் தாழ்ந்து பேசுபவர்களை காலம் மறந்து விடாது.

    அரசியலில் நாங்கள் தவழ்ந்து வரும் குழந்தையாக இருந்துவிட்டு போகிறோம். நீண்ட வரலாறு கொண்ட தி.மு.க.வில் எங்களோடு இருந்த ஒருவரை அழைத்து சென்று கரூர் மாவட்டத்தை காப்பாற்ற வேண்டிய நிலை ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளது. இது தி.மு.க.வின் பலவீனத்தை காட்டுகிறது.

    எந்த தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க திராணி உள்ள ஒரே கட்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மட்டும்தான்.

    பா.ஜ.க. வட மாநிலங்களில் தோல்வியடைந்து விட்டது. அதுமுடிந்து போன கட்சி. வரும் தேர்தலில் 60 அல்லது 70 இடங்களுக்கு மேல் பா.ஜ.க. வெற்றி பெற்றால் நாங்கள் அரசியலை விட்டு வெளியேறி விடுகிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #pugalenthi #mkstalin #senthilbalaji

    சிலை கடத்தல் வழக்கை போல் கொடநாடு விவகாரத்திலும் தனிக்குழு அமைத்து விசாரணை வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். #TTVDhinakaran #KodanadEstate

    திருவாரூர்:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயலை காரணம் காட்டி திருவாரூர் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டது. எப்போது தேர்தல் நடந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அமோக வெற்றி பெறும்.

    திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்த விவகாரத்தில் ஆளுங்கட்சியும், எதிர் கட்சியும் இணைந்து செயல்பட்டுள்ளது.

    தி.மு.க. எம்.எல்.ஏ.கள் அ.தி.மு.க.வுடன் ரகசிய உறவு வைத்துள்ளனர். கூட்டுறவு தேர்தலின் போது 60க்கு 40 என்ற சதவீதத்தில் தேர்தல் உடன்பாடு வைத்துக் கொண்டு தேர்தலை நடத்தினர்.

    கொடநாடு கொலை விவகாரத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி கண்காணிக்க வேண்டும். கொடநாடு கொலை கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டவர்கள் பல்வேறு விவரங்களை கூறியுள்ளனர். இந்த சம்பவத்தில் 5 பேர் இறந்துள்ளனர். இந்த இறப்பில் சந்தேகம் உள்ளது. இதுகுறித்து முதல்வர் பெயர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் தமிழக முதல்வருக்கு பயம், பதட்டம் உள்ளது தெரிகிறது. கொடநாடு கொலை- கொள்ளை வழக்கில் தமிழக காவல்துறையினர் கைது செய்து வந்தவர்களை நீதிபதி சிறைக்கு அனுப்ப மறுத்துள்ளது முதல்வருக்கு மிகப்பெரிய பின்னடைவு.

    உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி மூலம் முதல்வர் மீதான வழக்கை, எப்படி பொன்மாணிக்கவேல் சிலை கடத்தல் பிரிவு கண்காணிப்பது போன்று கண்காணிக்க வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தலில் மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தேர்தல் நேரத்தில் கூட்டணி கட்சிகளுடன் மற்றும் இட பகிர்வு குறித்து கூறப்படும். கட்சிகளின் பெயர்கள், கூட்டணி பேச்சு வார்த்தை முடிந்தவுடன் தெரிவிக்கப்படும். கூட்டணிகள் அமையாவிட்டாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 2014-ல் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டது போல் போட்டியிட்டு வெற்றி பெறும்.

    தேசிய கட்சிகள் தமிழ்நாட்டின் நலனில் அக்கறை கொள்ளவில்லை. இதனால் பாராளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை.

    எனவே தேசிய கட்சிகளுக்கு பதிலாக மாநில கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டு மக்கள் தேவைகளை பூர்த்தி செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ் உடனிருந்தார். #TTVDhinakaran #KodanadEstate

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்று தினகரன் கூறியுள்ளார். #SterlitePlant

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று உச்சநீதி மன்றம் அளித்துள்ள உத்தரவு மிகப்பெரிய அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. பலவீனமான நடைமுறை கொண்டு ஸ்டெர்லைட்டை மூடியதாலும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பழனிசாமி அரசு உரிய ஆதாரங்களை முன்வைக்க தவறிய காரணத்தினாலும், உணர்வு பூர்வமாக செயல்படாமலும், சட்ட ரீதியாக வலுவாக வாதிடாத காரணத்தினாலும் தான் ஸ்டெர்லைட் நிர்வாகம் சொன்னபடி தனது ஆலையை திறந்துவிட்டது.

    உச்சநீதிமன்றத்தில் தமிழக நலன் சார்ந்த பிரச்சினைகளில் தொடர் தோல்விகளைத்தான் நாம் சந்தித்து வருகிறோம். முல்லைப் பெரியாறு, மேகதாது, நீட் என்று தமிழகத்தின் ஜீவாதார பிரச்சினைகளில் பழனிசாமி அரசு பெரும் தோல்வியையே தமிழகத்திற்கு பெற்றுத்தந்து வருகிறது.

    ஸ்டெர்லைட் வி‌ஷயத்தில் துவக்கத்திலிருந்தே இந்த ஆலையை மூடவேண்டும் என்ற எண்ணம் பழனிசாமி அரசுக்கு இருந்ததே இல்லை.

    அதனால் தான் “தாமிர உருக்காலைகளே தமிழகத்திற்கு வேண்டாம்“ என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப் பட்டதை செவிமடுக்க மறுத்தது. இனிமேலாவது தாமதிக்காமல் ஒரு கொள்கை முடிவை எடுத்து, அவசியப்பட்டால் அவசரச் சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #SterlitePlant

    தினகரனை அ.தி.மு.க.வில் சேர்க்க மாட்டோம் என்பதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். #EdappadiPalanisami #ADMK
    சென்னை:

    ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஓ.பன்னீர் செல்வம் பின்னர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தார்.

    இதன் பின்னர் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம், துணை முதல்-அமைச்சர் பொறுப்பையும் வகித்து வருகிறார். அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி உள்ளார்.

    இவர்கள் இருவரும் கைகோர்த்த பின்னர் ஓரம் கட்டப்பட்ட டி.டி.வி.தினகரன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    இதன் பிறகு அ.தி.மு.க.வில் உள்ள தனது ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். அ.தி.மு.க.வில் இருப்பது போன்றே தனது கட்சியிலும் அமைப்புகளை ஏற்படுத்தி புதிய நிர்வாகிகளையும் தினகரன் நியமித்துள்ளார்.

    தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்கள் முதல் கிளை கழக நிர்வாகிகள் வரையில் அத்தனை பொறுப்புகளிலும் தனது கட்சியில் தினகரன் ஆட்களை நியமித்துள்ளார்.

    அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்ற அனைவரும் மீண்டும் கட்சியில் சேரலாம் என்று எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அழைப்பு விடுத்து வருகிறார்கள். இது தொடர்பாக பலமுறை அவர்கள் பிரிந்து சென்ற கட்சியினருக்கு வேண்டுகோளும் விடுத்துள்ளனர்.

    அ.தி.மு.க.வின் நலன் கருதி பிரிந்தவர்கள் மீண்டும் தாய் கழகத்தில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். அதுபோன்று வருபவர்களை வரவேற்க காத்திருக்கிறோம் என்று இருவரும் கூறி இருக்கிறார்கள்.

    அதே நேரத்தில் தினகரனை, எந்த சூழ்நிலையிலும் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ள வாய்ப்பு இல்லை என்றே அ.தி.மு.க. தரப்பில் கூறப்பட்டு வந்தது. இதற்கு தினகரன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில் தினகரனை அ.தி.மு.க.வில் சேர்க்க மாட்டோம் என்பதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.

    சென்னை கோட்டையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்துக்கு பின்னர், அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் தனியாக ஆலோசனை நடத்தினர். அப்போது தினகரன் அணியை அ.தி.மு.க.வுடன் இணைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.



    இந்த கூட்டத்தில் தினகரனுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அமைச்சர்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தினகரன் கட்சியை அ.தி.மு.க.வில் இணைப்பதற்கான எந்த சூழலும் இல்லை என்றும், தினகரனை தவிர அவருடன் இருக்கும் அனைவருமே எப்போது வேண்டுமானாலும் கட்சியில் வந்து சேரலாம் என்று தெரிவித்தார்.

    அதுபோன்று மனம் மாறி வருபவர்களை வரவேற்க அ.தி.மு.க. காத்திருக்கிறது என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    அ.தி.மு.க.வுடன், தினகரன் கட்சியை இணைக்க பிரதமர் மோடி முயற்சி செய்து வருவதாக வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை என்றும், அதுபோல எந்த முயற்சியும் நடைபெறவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி தெளிவுப்படுத்தி உள்ளார்.

    அமைச்சர்கள் பேட்டி அளிக்கும்போதும், பொதுக்கூட்டங்களில் பேசும் நேரங்களிலும் தினகரனை கண்டிப்பாக தாக்கி பேச வேண்டும் என்றும், கடுமையாக விமர்சனம் செய்ய வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தி உள்ளார்.

    தற்போதுள்ள அமைச்சர்களில் சிலர் தினகரனை விமர்சித்து பேசுவதில்லை என்கிற பேச்சு பரவலாக உள்ளது. இதனை மாற்றும் வகையில் அமைச்சர்கள் அனைவருமே தினகரன் எதிர்ப்பை காட்ட வேண்டும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் கூறி உள்ளார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இதற்கு பச்சைக்கொடி காட்டி உள்ளார்.

    தினகரனை விமர்சித்து பேச வேண்டும் என்கிற கருத்தில் அவரும் உடன்பட்டுள்ளார். இதன் மூலம் தினகரன் அணியில் இருப்பவர்களை சேர்க்க தயாராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் தினகரனை அருகில் அண்டவே விடக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருப்பதும் தெளிவாகி உள்ளது. எனவே, இனி வரும் காலங்களில் அமைச்சர்கள், தினகரனை காரசாரமாக விமர்சனம் செய்ய வாய்ப்பு அதிகமாக உள்ளது. #EdappadiPalanisami #ADMK
    துரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம்; ஆனால் விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார். #SenthilBalaji #TTVDhinakaran
    சென்னை:

    கரூரை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, டி.டி.வி.தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகி இன்று திமுகவில் இணைந்தார். தனது ஆதரவாளர்களுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து கட்சியில் இணைந்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    தொண்டர்களை அரவணைத்துச் செல்பவர்தான் சிறந்த தலைவராக இருக்க முடியும். அந்த வகையில், திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலினை சிறந்த தலைவராக நான் பார்க்கிறேன். அம்மாவின் மறைவுக்கு பிறகு ஒரு இயக்கத்தில் (அமமுக) பொறுப்பேற்று செயல்பட்டு வந்தேன். தற்போது தளபதியின் ஈர்ப்பால் அவர் முன்னிலையில் என்னை திமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டுள்ளேன்.

    கரூர் மாவட்ட மக்களின் உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப என்னை திமுகவில் இணைத்துக் கொண்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்த நிலையில் சென்னையில் டிடிவி தினகரன் அளித்த பேட்டியின்போது கூறியதாவது:

    சொந்த பிரச்சனைக்காக ஒதுங்கி இருப்பதாக கூறிய செந்தில் பாலாஜி திமுகவுக்கு சென்று விட்டார். துரோகிகளுடன்கூட சென்றிருக்கலாம்; ஆனால் விரோதிகளுடன் சென்று விட்டார் செந்தில் பாலாஜி.



    எந்த காலத்திலேயும் நான் துரோகிகளுடன் இணைய மாட்டேன். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் மேல்முறையீடுக்கு வாய்ப்பே இல்லை.

    எங்களது கட்சியில் இருந்து ஒருவரை இழுத்துவிட்டு அதற்கெல்லாம் திமுக விழா நடத்துகிறது. அமமுக கூடாரம் காலியாகவில்லை செந்தில் பாலாஜி திமுகவுக்கு சென்றதில் வருத்தம் கிடையாது.

    அமமுக உறுப்பினர் சேர்க்கைக்கு செந்தில் பாலாஜி வாங்கிய விண்ணப்பங்களை தந்தால் நன்றாக இருக்கும். யாரையும் பிடித்து வைக்க முடியாது; எங்கிருந்தாலும் வாழ்க.

    இவ்வாறு அவர் கூறினார். #SenthilBalaji  #TTVDhinakaran
    டிடிவி தினகரனை சந்தித்ததில் அரசியல் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார். #Thirumavalavan #TTVDhinakaran
    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னை நுங்கம்பாக்கத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழ் ஈழ விடுதலைக்காக போராடி உயிர்நீத்த மாவீரர் நினைவுநாள். இன்றைய தினம் தமிழ் சொந்தங்களும், சர்வதேச மக்களும் நினைவு கூர்கிற மகத்தான நாள்.

    7 பேர் விடுதலைக்காக டிசம்பர் 3-ந்தேதி கவர்னர் மாளிகை முன்பு ம.தி.மு.க. நடத்தும் முற்றுகை போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்கும்.

    தி.மு.க.வும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும், தோழமை கட்சிதான். தி.மு.க.வுடன் கூட்டணியாக வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கிறோம். இதில் முடிவெடுக்கும் இடத்தில் தி.மு.க. உள்ளது.



    கூட்டணியில் இருப்பதாக நான் சொல்ல முடியாது. அதை தி.மு.க.தான் அறிவிக்கும். எனவே தி.மு.க. கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை. நாங்கள் யாரையும் சந்திக்கலாம். ஆனால் தேர்தல் கூட்டணி தொடர்பான நிலைப்பாட்டில் விடுதலை சிறுத்தைகள் உறுதியாக இருக்கிறது.

    நான் சில மாதங்களில் 2, 3 முறை முதல்-அமைச்சரை சந்தித்து இருக்கிறேன். அதேபோல் டி.டி.வி. தினகரனை நேற்று கொத்தமங்கலம் என்ற இடத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்றபோது எதேச்சையாக சந்திக்க நேர்ந்தது. இந்த சந்திப்புகள் மக்களுக்கான களத்தில் நிகழக்கூடியவை. ஆனால் தேர்தல் களத்தில் மதசார்பற்ற ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைப்பதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதியாக உள்ளது.

    தி.மு.க. காங்கிரஸ், இடதுசாரிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் மற்றும் முஸ்லிம் கட்சிகள் ஆகிய தோழமை கட்சிகளின் உறவு இணக்கமாக இருக்கிறது. இதில் எந்த பங்கமும் ஏற்படவில்லை. எனவே தி.மு.க. பொருளாளர் துரை முருகன் சொன்ன கருத்து மிக எதார்த்தமானது. இன்னும் சொல்லப்போனால் நான் முன்மொழிந்ததை அவர் வழி மொழிந்திருக்கிறார்.

    அவருக்கு முன்னதாகவே நான் சொல்லி இருக்கிறேன். தி.மு.க.வோடு நாங்கள் தோழமை கட்சியாக இயங்கிக் கொண்டிருக்கிறோம். இந்த கட்சிகள் கூட்டணியாக மாற வேண்டும். இதை அதிகாரப்பூர்வமாக தி.மு.க. தலைமை அறிவிக்க வேண்டும் என்று ஒருமுறைக்கு பலமுறை சொல்லி இருக்கிறேன். எனவே இதில் எந்த குழப்பமும் இல்லை. இந்த அணி கூட்டணியாக வலுப்பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் திருமாவளவன் அண்ணா அறிவாலயம் சென்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். #Thirumavalavan #TTVDhinakaran
    ஆலங்குடி தாலுகா கொத்தமங்கலம் பகுதியில் டி.டி.வி. தினரனும், திருமாவளவனும் சந்தித்துக் கொண்டனர். பரஸ்பரம் நலம் விசாரித்த அவர்கள் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின்னர் புறப்பட்டனர். #GajaCyclone #Thirumavalavan #TTVDhinakaran
    ஆலங்குடி:

    கஜா புயல் பாதித்த தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் அமைச்சர்கள் முகாமிட்டு தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

    12 நாட்கள் ஆகியும் இயல்பு நிலைக்கு திரும்பாத மக்கள் பலர் தங்கள் வீடுகளை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து விவசாயிகளும் தவித்து வருகின்றனர். அவர்களின் வாழ்வை புனரமைக்கும் முயற்சியில் அரசியல் கட்சியினரோடு, தன்னார்வலர்களும் கைகோர்த்து இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக புயல் பாதித்த புதுக்கோட்டை மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார். இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

    ஆலங்குடி தாலுகா கொத்தமங்கலம் பகுதிக்கு சென்றபோது அங்கு டி.டி.வி. தினரனும் வந்திருந்தார். இதையடுத்து வாகனங்களில் இருந்து இறங்கிய இருவரும் சந்தித்துக் கொண்டனர். பரஸ்பரம் நலம் விசாரித்த அவர்கள் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டனர்.

    முன்னதாக தினகரன் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்தில் உள்ள மருதன்கோன்விடுதி நால்ரோடு, அம்மானிப்பட்டு, கறம்பக்குடி, புதுப்பட்டி, சூரக்காடு, வெட்டன்விடுதி ஆகிய பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். #GajaCyclone #Thirumavalavan #TTVDhinakaran
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நாங்கள் சந்திப்பது அரசியல் செய்வதற்கு அல்ல ஆறுதலும், உதவிகளும் வழங்க மட்டுமே என்று டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார். #TTVDhinakaran #GajaCyclone
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்க்கும்போது மாநில அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. காவல்துறை பாதுகாப்போடு பிரதான சாலைகளில் செல்லும் அமைச்சர்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை மட்டுமே சந்தித்து திரும்புகிறார்களே தவிர, நகர கிராமப்புற பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள மற்ற மக்களை சந்திப்பதில்லை என போகுமிடமெல்லாம் மக்கள் கூறுகின்றனர்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் 30 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளதாக கூறுகின்றனர். ஆகவே சில நாட்களுக்கு மட்டுமே நிவாரணம் அளிப்பதைவிட மத்திய மாநில அரசுகள் சிறப்பு கவனம் செலுத்தி, அம்மக்களின் வாழ்வாதாரத்தை நிரந்தரமாக மீட்டெடுக்க வேண்டும்.

    அமைச்சர்கள் ஆங்காங்கே ஆய்வு கூட்டங்கள் நடத்தி அதிகாரிகளை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்ல விடாமல் தடுப்பதை தவிர்த்து அதிகாரிகளை சுதந்திரமாக கிராமங்களுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும்.

    இதற்கு முன்பு புயல் பாதிப்புகள் ஏற்பட்டபோதெல்லாம் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகைக்கு யானைப்பசிக்கு சோளப்பொறியை தந்ததை போல் மத்திய அரசு நிவாரணம் கொடுத்துள்ளது. இம்முறையாவது அவ்வாறு இல்லாமல் இடைக்கால நிவாரண நிதியாக குறைந்தபட்சம் 5 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்.

    சோழநாடு சோறுடைத்து என்று சொல்வார்கள். ஆனால் செல்லும் இடங்களில் எல்லாம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் அநாதைகள் போலவும், அகதிகள் போலவும் உணவுக்காக வீதிகளில் நிற்பது வேதனையாக உள்ளது.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நாங்கள் சந்திப்பது அரசியல் செய்வதற்கு அல்ல. ஆறுதலும், உதவிகளும் வழங்க மட்டுமே.

    அ.ம.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் என்.ஜி.ஓ.க்கள் போல செயல்பட்டு வருகிறார்கள். அ.ம.மு.க. சார்பில் நிவாரண பொருட்கள் முகாம்களுக்கும் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கும், தொடர்ந்து அனுப்பப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.

    தனியார் தொண்டு நிறுவனங்களும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்து வருவதை வரவேற்கிறேன். இந்த பணியில் அவர்களுக்கு இடையூறு ஏற் டாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அரசின் கடமை.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.  #TTVDhinakaran #GajaCyclone

    முதல்-அமைச்சர் டெல்லி செல்வது உண்மையிலேயே நிவாரண நிதி கோருவதற்கா? அல்லது தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காகவா என்று டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார். #TTVDhinakaran #GajaCyclone
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கஜா புயலின் கோர தாண்டவத்தால் நிலைகுலைந்து போயுள்ள டெல்டா மாவட்டங்களில், ஆறு நாட்களாகியும் மக்கள் உணவின்றி, குடிநீரின்றி, மாற்று துணியின்றி தத்தளித்து கொண்டிருக்கின்றனர்.

    கடந்த இரண்டு நாட்களாக, நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்றிருந்தபோது, பல கிராமங்களில் கிராம நிர்வாக அதிகாரி கூட தங்களை காண வரவில்லை என்று மக்கள் கதறுகின்றனர்.

    இந்நிலையில், ஐந்து நாட்களுக்கு பிறகு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட ஹெலிகாப்டரில் பறந்து வந்த முதல்வர், வானிலையை காரணம் காட்டி திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு செல்லாமலேயே திரும்பியுள்ளார். புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களிலும் போலீஸ் பாதுகாப்புடன் சில பயனாளிகளுக்கு மட்டும் நிவாரண உதவி வழங்கிவிட்டு பறந்துவிட்டார்.



    தற்போது, முதல்-அமைச்சர் பிரதமரை நாளை சந்தித்து புயல் நிவாரண நிதி கோர இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

    நூற்றுக்கணக்கான கிராமங்களில், பாதிக்கப்பட்ட மக்களையும் சேதமடைந்த அவர்களது நிலங்களையும், வீடுகளையும், கால்நடைகளையும், உடமைகளையும் ஒரு கிராம நிர்வாக அதிகாரி கூட வந்து பார்வையிட்டு இழப்புகளை மதிப்பீடு செய்யாத நிலையில், எதன் அடிப்படையில் முதல்வர் நிவாரண நிதியை கோர இருக்கிறார்? மிகப் பெரிய இயற்கை பேரிடர் நடந்துள்ள நிலையில், மத்திய அரசிடமிருந்து இடைக்கால நிவாரண நிதி கோராதது ஏன்?

    பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறியாமல், இழப்புகளை மதிப்பீடு செய்யாமல், அவசர அவசரமாக முதல்-அமைச்சர் டெல்லி செல்வது உண்மையிலேயே நிவாரண நிதி கோருவதற்கா அல்லது தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காகவா என்ற நியாயமான சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

    இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். #TTVDhinakaran #GajaCyclone
    பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த பள்ளி மாணவியின் குடும்பத்தினரை டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். #dinakaran #dharmapurigirl #molestation

    கம்பைநல்லூர்:

    அரூரை அடுத்த சிட்லிங் மலை கிராமத்தில் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த பள்ளி மாணவியின் குடும்பத்தினரை அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

    பின்னர் மாணவியின் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாணவியின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கினார். #dinakaran #dharmapurigirl #molestation

    ×