search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கெங்கவல்லி"

    கெங்கவல்லி பகுதியில் சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று பிற்பகலில் மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.

    பின்னர் சங்ககிரி, கெங்கவல்லி, ஆத்தூர் ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை மற்றும் சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் கெங்கவல்லி இலுப்பை தோப்பு பஸ் நிலையத்தில் இருந்த 100 ஆண்டு பழமையான இலுப்பை மரம் வேருடன் சாய்ந்தது.

    இதனால் அருகில் இருந்த செல்வமேரி என்பவரின் கூரை வீடு சேதம் அடைந்தது. மரத்தின் அடியில் நிறுத்தியிருந்த கூடமலையை சேர்ந்தவரின் மோட்டார் சைக்கிள் சேதம் அடைந்தது. மேலும் மரத்தின் அடியில் நின்ற 9 பேரும் மரம் சாய்வதை பார்த்து தப்பியோடியதால் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பினர்.

    சாலையில் விழுந்த இலுப்பை மரத்தால் கெங்கவல்லி- தம்மம்பட்டி நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து வாகனங்கள் கடம்பூர் வழியாக டெங்குவில் இருந்து தம்மம்பட்டி மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.மேலும் கெங்கவல்லி ஒன்றிய அலுவலக வளாகம் மற்றும் சிவன் கோவில் அருகே இருந்த வேம்பு, புளியமரங்கள் முறிந்து விழுந்தன. சாலையில் விழுந்த மரங்களை தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலை துறையினர் வெட்டி அகற்றினர். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது.

    ஆத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான நரசிங்கபுரம், கல்லாநத்தம், அம்மம்பாளையம் உள்பட பல பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. கொத்தம்பாடி மற்றும் கல்பகனூர் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    சங்ககிரியில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இந்த மழை ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீடித்ததால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மழையை தொடர்ந்து அந்த பகுதியில் மின் தடை ஏற்பட்டது. இதனால் பொது மக்கள் அவதி அடைந்தனர்.

    சேலம் மாநகரில் பிற்பகல் 3 மணி முதலே வானத்தில் கரு மேகங்கள் திரண்டு காட்சி அளித்தது. இதனால் கன மழை பெய்யும் என்று அவசரம், அவசரமாக வெளியில் சென்றவர்கள் வீட்டிற்கு திரும்பினர். ஆனால் லேசான தூறலுடன் மழை நின்று விட்டதால் சேலம் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    மாவட்டம் முழுவதும் இன்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மி.மீட்டரில் வருமாறு:-

    சங்ககிரி 26.3 மி.மீ, கெங்கவல்லி 18.4, ஆத்தூர் 16.8, மேட்டூர் 4.4, சேலம் 3.6, ஆனைமடுவு 3 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 72.5 மி.மீ. மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.

    சேலம் மாவட்டத்தில் வீரகனூர், கெங்கவல்லி உள்பட பல பகுதிகளில் 2-வது நாளாக கன மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் வீரகனூர், கெங்கவல்லி, கரியகோவில் உள்பட பல பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

    2-வது நாளாக நேற்றிரவு வீரகனூர், கெங்கவல்லி உள்பட பல பகுதிகளில் சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. சங்ககிரி தம்மம்பட்டி, பெத்த நாயக்கன் பாளையம், கரியகோவில் ஆகிய பகுதிகளிலும் இந்த மழை நீடித்தது.

    ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் நிம்மதியாக தூங்க முடிந்தது.

    இன்று காலையும் மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியதுடன் வானம் மப்பும், மந்தாரமுமாக காட்சி அளித்தது. சேலம் மாவட்டத்தில் பெய்யும் இந்த தொடர் மழை விவசாய பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம் மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-

    வீரகனூரில் 46 மி.மீ, கெங்கவல்லி 45.4, சங்ககிரி 14.3, தம்மம்பட்டி 11.2, பெத்தநாயக்கன் பாளையம் 7, கரியகோவில் 6, வாழப்பாடி 5, எடப்பாடி 4, ஆத்தூர் 2.4, ஆனைமடுவு 2, சேலம் 0.4 மி.மீ. என மாவட்டம் முழுவதும் மொத்தம் 143.4 மி.மீட்டர் மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    ×