search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடைத்தரகர்கள்"

    ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் இடைத்தரகர்கள் 3 பேரின் ஜாமீன் மனுவை நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை தொடர்பாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது.

    இதையடுத்து ராசிபுரத்தை சேர்ந்த விருப்ப ஓய்வுபெற்ற அரசு மருத்துவமனை செவிலியர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன் மற்றும் இந்த குழந்தை விற்பனைக்கு உடந்தையாக இருந்த ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் மற்றும் இடைத்தரகர்களாக செயல்பட்ட பர்வீன், நிஷா, லீலா, அருள்மணி, செல்வி என 8 பேரை ராசிபுரம் போலீசார் கைது செய்தனர்.

    இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் அமுதவள்ளி, அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுனர் முருகேசன் இடைத்தரகர்களான அருள்சாமி,பர்வீன், நிஷா ஆகியோரை சி.பி.சி.ஐ.டி காவலில் எடுத்து விசாரித்தனர்.


    விசாரணையில் அவர்கள் மொத்தம் 30 குழந்தைகள் வரை விற்பனை செய்தது தெரியவந்தது.

    மேலும் இந்த கும்பலுடன் சேர்ந்து சேலம் கொல்லப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் உதவி செவிலியர் சாந்தி சேலம் பகுதியில் குழந்தைகளை வாங்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கில் கைதாகி சேலம் மத்திய சிறையில் உள்ள இடைத்தரகர்களான அருள்சாமி, லீலா, செல்வி ஆகியோர் நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு வழக்கறிஞர்கள் மூலம் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனு நீதிபதி இளவழகன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, 3 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    இதில் லீலா ஏற்கனவே ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது 2-வது முறையாக அவரது மனு தள்ளுபடி ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
    ×