search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆண்டாள்"

    சித்திரை மாதத்திற்கான பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ரெங்கமன்னாருடன் மேளதாளங்கள் முழங்க நந்தவனத்திற்கு ஆண்டாள் கொண்டு வரப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
    ஒவ்வொரு மாதம் வரும் பூரம் நட்சத்திரத்தன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் தான் பிறந்த இடமான நந்தவனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். சிறப்பு பூஜையும் நடைபெறும். அதேபோல் சித்திரை மாதத்திற்கான பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ரெங்கமன்னாருடன் மேளதாளங்கள் முழங்க நந்தவனத்திற்கு ஆண்டாள் கொண்டு வரப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

    பொதுவாக ஒவ்வொரு பூரத்திற்கும் ஆண்டாள் மட்டுமே கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க நந்தவனத்திற்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம்.

    ஆனால் தற்போது வசந்த உற்சவம் நடைபெற்று வருவதால் ஆண்டாள் சித்திரை பூர நட்சத்திரத்தை முன்னிட்டு ரெங்கமன்னாருடன் நந்தவனத்தில் எழுந்தருளினார். ரெங்கமன்னாருடன் நந்தவனத்தில் ஆண்டாள் காட்சியளித்ததை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் நந்தவனத்தில் திரண்டு இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்திருந்தனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி தேரில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்ட விழாவையொட்டி கிழக்கு சித்திரை வீதியில் உள்ள சித்திரை தேரில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல முகூர்த்தகாலில் புனிதநீர் தெளித்து, சந்தனம் பூசி, முகூர்த்தக்காலின் நுனியில் மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்கல பொருட்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    அதன் பின்னர் காலை 9.45 மணியளவில் மிதுன லக்னத்தில் முகூர்த்தக்காலை தேரில் கோவில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் நட்டனர். அப்போது கோவில் யானை ஆண்டாள் தும்பிக்கையை உயர்த்தி மரியாதை செலுத்தியது. இந்த நிகழ்ச்சியில் கோவில் உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர்.

    சித்திரை தேர் திருவிழா வருகிற 25-ந் தேதி(வியாழக்கிழமை) காலை 4-30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 6 மணிக்கு நம்பெருமாள் கொடி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு காலை 6.15 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார். மாலை 4.30 மணிமுதல் 5.30 மணிவரை பேரிதாடனம் நடைபெறுகிறது.

    மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகளில் உலா வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைகிறார். அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு யாகசாலையை சென்றடைகிறார். அங்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு 26-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார்.

    விழாவின் 2-ம் நாளான 26-ந்தேதி மாலை கற்பக விருட்ச வாகனத்திலும், 27-ந் தேதி காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும், 28-ந் தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருட வாகனத்திலும், 29-ந் தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும், 30-ந் தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார். 1-ந் தேதி நெல்லளவு கண்டருளுகிறார்.

    2-ந்தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் வீதி உலா வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் அடுத்த மாதம்(மே) 3-ந் தேதி நடைபெறுகிறது. 4-ந் தேதி சப்தாவரணம் நடக்கிறது. விழாவின் நிறைவு நாளான 5-ந் தேதி நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் அறங்காவலர் குழுவினர், கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேர்த்திருவிழாவையொட்டி நம்பெருமாள், தாயார் சேர்த்தி சேவை நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 7-ம் நாள் நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார். 8-ம் நாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் குதிரை வாகனத்தில் வையாளி கண்டருளுளினார். திருவிழாவின் 9-ம் நாளான நேற்று நம்பெருமாள் தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது. ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று இந்நிகழ்ச்சி நடைபெறும். ஆண்டுக்கு ஒருமுறை தான் நம்பெருமாளும் தாயாரும் ஒருசேர இருப்பார்கள். ஒருசேர இருக்கும் காட்சியை சேர்த்தி சேவை என்று அழைப்பர். பெருமாளையும், தாயாரையும் ஒருசேர தரிசிக்கும் தம்பதிகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்பது ஐதீகம்.

    இந்நிகழ்ச்சியையொட்டி கண்ணாடி அறையிலிருந்து நம்பெருமாள் தங்கப்பல்லக்கில் நேற்று காலை 6 மணிக்கு புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து ஆழ்வான் திருச்சுற்று வழியே தாயார் சன்னதி சென்றடைந்தார். பின்னர் சமாதானம் கண்டருளி பகல் 12 மணிக்கு முன்மண்டபம் வந்து சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு பங்குனி உத்திர மண்டபத்திற்கு பகல் 2 மணிக்கு வந்து சேர்ந்தார். மூலஸ்தானத்திலிருந்து உற்சவர் ரெங்கநாச்சியார் பகல் 2 மணிக்கு புறப்பட்டு சேர்த்தி மண்டபத்தை பகல் 2.15 மணிக்கு வந்தடைந்தார். பகல் 3 மணிமுதல் இரவு 10.30 மணி வரை சர்வ அலங்காரத்துடன் பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது.

    பின்னர் சின்னப்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளி இரவு 10.30 மணிக்கு தாயார் சன்னதியை சென்றடைந்தார். இரவு 12 மணி முதல் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3.30 மணிவரை திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து தாயார் புறப்பட்டு காலை 5.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    சர்வஅலங்காரத்துடன் எழுந்தருளியிருந்த பெருமாள்-தாயார் சேர்த்தி சேவையை திரளான பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து இரவு முழுக்க தரிசனம் செய்தனர். சேர்த்தி சேவைக்கென தாயார் சன்னதிக்கு வரும் பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்க பக்தர்கள் சன்னதிக்குள் வரவும், வெளியில் செல்லவும் தனித்தனி வழிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

    பங்குனிமாதம் நடைபெறும் உற்சவம் என்பதால், வெயிலின் தாக்கம் காரணமாக மக்கள் சிரமப்படாமலிருக்க இந்த ஆண்டும் கோவில் நிர்வாகம் சார்பில், தாயார் சன்னதியில் 12 இடங்களில் குளிர் சாதன வசதிகளும், 30 இடங்களில் மின் விசிறிகளும் வைத்து குளுமையூட்டப்பட்டது. பக்தர்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பாட்டில்களும், பிரசாதமாக மஞ்சள், கற்கண்டும் வழங்கப்பட்டது.

    கோவிலில் கூடியிருக்கும் பக்தர்கள் சேர்த்தி சேவையை காண்பதற்கு வசதியாக தன்வந்திரி சன்னதி, கம்பர் மண்டபம் அருகில் பிரமாண்ட திரையில் பெருமாள், தாயார் சேர்த்திசேவை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. கூட்டநெரிசலை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு மற்றும் குற்றச்சம்பவங்கள் நடக்காமல் இருக்கவும் கூடுதல் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனித் தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இன்று இரவு சப்தாவரணமும், நாளை (சனிக்கிழமை) இரவு ஆளும் பல்லக்கு வீதி உலாவுடன் பங்குனித்திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள் கே.என்.சீனிவாசன், கவிதா ஜெகதீசன், ரெங்காச்சாரி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். 
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் செப்புத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் திருக்கல்யாண திருவிழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் ஆண்டாள்- ரெங்கமன்னார் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் இன்று மாலை ஆண்டாள் கோவில் முன்பு உள்ள திரு ஆடிப்பூர கொட்டகையில் நடைபெற உள்ளது.

    இதனை தொடர்ந்து இன்று காலை செப்புத் தேரோட்டம் நடைபெற்றது. விழாவையொட்டி அதி காலை 5 மணிக்கு ஆண்டாளும், ரெங்கமன்னாரும் கோவிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க ஆண் டாள் கோவில் முன்புள்ள செப்பு தேர் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டனர். பின்னர் ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் செப்புத் தேரில் வைத்து நடைபெற்றது. அதைத்தொடர்ந்து திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

    திருக்கல்யாணத்தை முன்னிட்டு ஆண்டாள் அணிந்து கொள்ள திருப்பதியில் இருந்து பட்டு வஸ்திரமும் இன்று ஆண்டாளுக்கு கொண்டு வரப்படுகிறது.

    செப்புத் தேரோட்ட நிகழ்ச்சியில் ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச் சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன், ஆண்டாள் கோவில் பட்டர்கள், வேத பிரான் பட்டர், ஸ்ரீராமுலு, அனந்த ராமகிருஷ்ணன் முத்து பட்டர், சுதர்சன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தேரோட்டத்தை முன்னிட்டு டி.எஸ்.பி. ராஜா, நகர் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் அல்லது ஆடிப்பூரம் அன்று நாம் பாராயணம் செய்து, வந்தால் ஆண்டாள், அரங்கன் திருவருள் கிடைப்பது நிச்சயம்.
    அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
    சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
    கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
    கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
    குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
    வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
    என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
    இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.

    - திருப்பாவை

    பொதுப் பொருள்: மகாபலிச் சக்ரவர்த்தியின் தான கர்வத்தை அழித்து, அவனளிப்பவை மட்டுமல்லாமல் அவனும் உனக்குரியவன்தான் என்பதை மூன்றடிகளால் உணர்த்திய திருமாலே நமஸ்காரம். சீதையை மீட்க, தெற்குப் பகுதியில் உள்ள இலங்கைக்கு சென்று ராவணனை வென்று வெற்றி கொண்டு வீரத்தை நிரூபித்த ஸ்ரீராமபிரானே நமஸ்காரம். சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அசுரனை ஒரே உதையில் வீழ்த்தி மக்களைக் காத்து புகழ் பெற்றவனே நமஸ்காரம்.

    கன்று வடிவில் வந்த வத்சாசுரனை அப்படியே பற்றி, விளாமர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எறிந்து இரு அரக்கரையும் ஒருசேர அழித்தவனே, வீரக்கழல் அணிந்த உன் கால்களில் நமஸ்காரம். கோவர்த்தனகிரியை குடையாக்கி இந்திரன் அனுப்பிய மழையிலிருந்து ஆயர்குலத்தவரைக் காத்தவனே, உன் கருணை மனதுக்கு நமஸ்காரம். பலம் மிக்கப் பகைவர்களையும் உன் கையிலுள்ள வேலால் அழித்தவனே, அந்த வேலாயுதத்துக்கு நமஸ்காரம். உன் வீரச்செயல்களைப் பாடி, உன்னருளைப் பெறுவதற்கு, இப்போது நாங்கள் வந்துள்ளோம். எங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டுகிறோம்.

    திருவந்திபுரம் தேவநாதசாமிகோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாதசாமிகோவில் 108 வைணவ தலங்களில் சிறப்பு வாய்ந்தது. இக்கோவிலில் ஆண்டாள் உற்சவம் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. நேற்று ஆண்டாளுக்கும், தேவநாதசாமிக்கும் திருக்கல்யாண உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. முன்னதாக காலையில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து ஆண்டாளுக்கும், தேவநாதசாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையடுத்து சாமிக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி மங்கள வாத்தியத்துடன் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் தேவநாதசாமியும், ஆண்டாளும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். அதன்பிறகு சாமி வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று (செவ்வாய்க் கிழமை) பொங்கல் பண்டிகையையொட்டி தேவநாதசாமிக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. நாளை(புதன்கிழமை) கோவிலில் மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி தேவநாதசாமிக்கு காலையில் சிறப்பு பூஜை நடைபெறும். மாலையில் வெள்ளி குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பரிவேட்டை செல்வார்.

    அப்போது கெடிலம் ஆற்றில் இறங்கி அலங்காரம் செய்யப்பட்டு உள்ள மாடுகளை சுற்றி வந்து பரிவேட்டை ஆடுவார். இதையடுத்து சாமி வீதி உலா நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    திருவந்திபுரத்தில் உள்ள புகழ்பெற்ற தேவநாத சாமிகோவிலில் இன்று(திங்கட்கிழமை) ஆண்டாளுக்கும், தேவநாதசாமிக்கும் திருக்கல்யாண உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.
    கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் உள்ளது புகழ்பெற்ற தேவநாத சாமி கோவில். இங்கு ஆண்டாள் உற்சவம் நேற்று முன்தினம் சிறப்பு திருமஞ்சனத்துடன் தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில், 2-வது நாளான நேற்று காலையில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம், மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சாமி வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் இன்று(திங்கட்கிழமை) ஆண்டாளுக்கும், தேவநாதசாமிக்கும் திருக்கல்யாண உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. இதையொட்டி காலையில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடந்து, திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து சாமிக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்து, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க இருக்கிறார்கள். பின்னர் சாமி வீதிஉலா புறப்பாடு நடைபெற உள்ளது.

    நாளை (செவ்வாய்க் கிழமை) தை முதல் நாளான பொங்கல் பண்டிகையன்று தேவநாதசாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூஜை நடத்தப்பட்டு மகா தீபாரதனை நடைபெறும். பின்னர் நாளை மறுநாள்(மாட்டுப் பொங்கல் அன்று) மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இதில் மாலையில் வெள்ளி குதிரை வாகனத்தில் தேவநாத சாமி எழுந்தருளி பரிவேட்டை செல்வார்.

    அப்போது கெடிலம் ஆற்றில் இறங்கி அலங்காரம் செய்யப்பட்டு உள்ள மாடுகளை சுற்றி வந்து பரிவேட்டை ஆடுவார். தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் விழாக்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்யும் வகையில் முன்னேற்பாடுகளை போலீசார் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    சோளிங்கர் தலத்தில் தைப்பொங்கல் திருநாளில் காலையில் பெருமாள் ஆண்டாளுக்கு அலங்காரத் திருமஞ்சனம் நடைபெறும்.
    சோளிங்கர் தலத்தில் தைப்பொங்கல் திருநாளில் காலையில் பெருமாள் ஆண்டாளுக்கு அலங்காரத் திருமஞ்சனம் நடைபெறும். மாலையில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறும். போகிப்பண்டியைன்று தான் எல்லா ஊர்களிலும் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறும். ஆனால் இவ்வூரில் மட்டும் தைப்பொங்கல் திருநாளில் ஆண்டாளுக்கும் பெருமாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுவது விசேஷம்.

    இது கந்தாடை பெரியப்பங்கார் உபயமாகும். இவ்வாறு திரு ஆடிப்பூரத் திருக்கல்யாணம், சங்கராந்தித் திருக்கல்யாணம், ஆழ்வார் திருவடி தொழல் ஆகிய மூன்று நாட்களிலும் தொட்டாச்சார் வம்சத்தவர்க்கு- முதல் தீர்த்தகாரர்களுக்கு இரட்டை மரியாதை நடைபெறும்.

    பொங்கல் கழிந்த மறுநாள் கனுப்பரிவேட்டை உற்சவம் நடைபெறும். இதனை மேற்குத்திக்குப் பரிவேட்டை என்றும் கூறுவர். விடியற் காலையில் பெருமாள் தனித்துத்தலைப்பாகை, குற்றுவாள், கேடய அலங்காரத்துடன் கிளிக்கூண்டில் புறப்பாடு காண்பார் கண்டருளி மேற்குத்திசைக் கிராமங்களுக்குச் செல்வார்.
    திரும்பும் போது எறும்பி எனும் அசுவரேந்தபுரம் கிராம மண்டபத்தில் திருவாராதளம், திருப்பாவை நடைபெறும். பின்னர் திருப்பாவை சாற்று தீர்த்த விநியோகம் நிகழும்.'
    அனைத்து விரதங்களிலும் முதன்மையாக திகழ்கிறது காக்கும் கடவுளான விஷ்ணுவை எண்ணி கடைப்பிடிக்கும் ‘வைகுண்ட ஏகாதசி விரதம்.’
    18-12-2018 வைகுண்ட ஏகாதசி

    மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் பாலமாக இருப்பது விரதங்கள். மனிதனின் வாழ்வில் எழும் பிரச்சினைகளுக்கு ஏற்ப, கடவுள்களும் விரதங்களும் மாறுபடும். ஆனால் அனைத்து விரதங்களிலும் முதன்மையாக திகழ்கிறது காக்கும் கடவுளான விஷ்ணுவை எண்ணி கடைப்பிடிக்கும் ‘வைகுண்ட ஏகாதசி விரதம்.’

    ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இருந்து 11-ம் நாள் ஏகாதசி. அவை சுக்லபட்ச ஏகாதசி, கிருஷ்ணபட்ச ஏகாதசி என அழைக்கப்படுகின்றன. வைணவ பக்தர்கள் அந்நாட்களில் முழு உபவாசம் இருந்து, மறுநாள் துவாதசியில், பூஜை முடித்த பின்பே காலை உணவு உட்கொள்வது வழக்கம். ஒரு வருடத்தில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். அனைத்து ஏகாதசிகளிலும் விரதமிருந்து வழிபடுவோர் பிறவித் துயர் நீங்கி வைகுண்ட பதவி அடைவர் என்பது நம்பிக்கை.

    மாதந்தோறும் வரும் ஏகாதசி திதிகளை விட, மார்கழியில் வரும் ஏகாதசிக்கு பெரும் சிறப்பு உண்டு. ஏகாதசியில் விரதம் இருந்த அம்பரீஷன் என்ற அரசனை, துர்வாச முனிவரின் சாபத்தில் இருந்து காக்க, விஷ்ணு பகவான் தன்னுடைய சக்கரத்தை அனுப்பி புராண நிகழ்வு நடந்த மாதமாக மார்கழி ஏகாதசி இருக்கிறது.

    அம்பரீசனுக்கு இடையூறு செய்த துர்வாசரை, சுதர்சன சக்கரம் துரத்தியது. அதனிடம் இருந்து தன்னைக் காப்பாற்றும்படி, வைகுண்டம் சென்று பெரு மாளைப் பணிந்தார் துர்வாசர். ஆனால் துர்வாச முனிவரைக் காப்பாற்றும் தகுதி, ஏகாதசியில் தூய விரதம் இருந்து திருமாலை வழிபட்ட அம்பரீசனுக்கே அளிக்கப்பட்டது. ஏகாதசியின் சிறப்பு அத்தகையது.

    வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிப்போரின் கடைக்கண் பார்வைக்கு, அந்த கண்ணன் அடிமையாகி அவர்களின் கவலைகளைத் தீர்த்து இறுதியில் வைகுண்டம் அழைத்து முக்தி தருவான் என்பது நம்பிக்கை.

    தனது நண்பரான குசேலன் கொண்டுவந்த அவலை உண்டு, அவருக்கு சகல ஐஸ்வரியங்களும் கிடைக்க கண்ணன் வழி செய்தார். குசேலனுக்கு இறைவன் அருள் செய்தது இந்த மார்கழி ஏகாதசி என்பதால், பக்தர்கள் அன்றைய தினம் இரவு விழித்திருந்து பகவானுக்கு அவல் நைவேத்தியம் படைத்து வேண்டினால், அவர்களின் ஆவல் நிறைவேறும்.

    வருடம் முழுதும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள், மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் இருப்பது சிறப்பான பலனைத் தரும். ஒரு முறை நாம் இருக்கும் வைகுண்ட ஏகாதசி விரதமானது, மூன்று கோடி ஏகாதசி விரதங்களுக்கு ஒப்பாகும் என்பதால், இவ்விரதத்தை “முக்கோடி ஏகாதசி” என்றும் அழைக்கின்றனர்.

    ஏகாதசி விரதம் 10-வது திதியாகிய தசமி, 11-வது திதியாகிய ஏகாதசி, 12-ம் திதியாகிய துவாதசி என்று 3 திதிகளிலும் மேற்கொள்ளும் விரதமாக அமைந்துள்ளது. ஆகவே ஏகாதசி விரதம் இருப்பவர்கள், அதற்கு முன்தினமான தசமி நாளிலேயே தங்கள் விரதத்தை தொடங்க வேண்டும். அன்றைய தினம் பெருமாளை வழிபட்டு ஒருவேளை மட்டும் சாப்பிட்டு, மறுநாள் ஏகாதசியன்று முழுமையான உண்ணாவிரதத்தை கடைப்பிடிக்க வேண்டும்.



    நம்மைப் பாதிக்கும் பிரச்சினைகள், விடாமல் துரத்தினாலும் நாம் நம் சிந்தையை ஒருங்கிணைத்து அவன் பாதம் நாடி அருளைப்பெற இரவு-பகல் பாராமல், இறைவனின் நாமம் ஓதுவதில் கவனம் கொள்ள வேண்டும். வீண் கதைகள் பேசி பொழுதுகளை போக்குவது நன்மை தராது. இந்த நோக்கத்தின் அடிப்படையில் தசமிக்கு அடுத்த ஏகாதசியன்று இரவில் கண்விழித்து பெருமாளின் பெருமைகளை எடுத்துக்காட்டும் கதைகளைப் படிப்பதும், கேட்பதுமாக இருக்க வேண்டும். விஷ்ணு சகஸ்ர நாமம், ரங்கநாதர் ஸ்துதி போன்ற பெருமாள் மீதான பதிகங்களை ஓதுவது நல்லது. எதையும் படிக்கவோ மனனம் செய்யவோ முடியாதவர்கள் “ஓம் நமோ நாராயணா” எனும் எட்டெழுத்து மந்திரத்தை மனதில் நிறுத்தினாலே அந்த நாராயணனின் அருளுக்கு பாத்திரமாகலாம்.

    மறுநாள் துவாதசி திதி அன்று, இந்த பருவத்தில் கிடைக்கும் 21 வகை காய்கறிகளை சமைத்து சூரிய உதயத்திற்கு முன் உண்ணுதல் நலம் தரும். சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை விரதம் முடித்து உண்பதால் உடல் ஆரோக்கியத்துக்கும் இவ்விரதம் உதவுகிறது. அனைத்து காய்கறிகளும் இல்லை என்றாலும், அகத்திக் கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவை அவசியம் இடம்பெற வேணடும்.

    ஏனெனில் அகத்திக்கீரையை நலம் காக்கும் “அமிர்தபிந்து” என்றும், நெல்லிக்காயில் செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமியை மார்பில் சுமந்த ஹரி வாசம் செய்வதாகவும், சுண்டைக்காயில் பாற்கடலில் அமுதம் வேண்டி கடைந்தபோது வெளிவந்த பிணிகளைத் தீர்க்கும் மருத்துவக் கடவுளான தன்வந்திரியின் நிழல் இருப்பதாகவும் முன்னோர் வாக்கு.

    இந்த விரதத்தில் ஒரு முக்கியமான தகவலும் உண்டு. துவாதசியன்று காலையில் உண்டு விரதம் முடித்த பிறகு, எக்காரணம் கொண்டும் பகலில் உறங்கக்கூடாது. விரதத்தின் போது விஷ்ணுவுக்கு உகந்த துளசியை பறிக்கக்கூடாது. பூஜைக்கான துளசியை முதல்நாளே பறித்து விடுவது சிறப்பு. இந்த விரதத்தை உற்றார் உறவினரோடு பகவானின் சிந்தையில் மகிழ்ந்து, அவன் புகழை பாடி பூஜைகள் செய்து, அரங்கன் குடியிருக்கும் ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது மிகச் சிறப்பாகும்.

    மார்கழி ஏகாதசியை முறையாக வழிபடும் முறையை தொடங்கியவர், திருமங்கையாழ்வார். வைணவத் தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் விழாக்களில், மிகவும் சிறப்பானதாக இருப்பது வைகுண்ட ஏகாதசி விழாதான்.

    இங்கு மட்டுமல்ல சென்னை திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவில், சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவில் போன்ற அனைத்து பிரசித்திபெற்ற பெருமாள் ஆலயங்களிலும் கொடியேற்று விழா தொடங்கி, பத்து நாட்கள் விழாவாக சிறப்பாக கொண்டாடப்படும்.

    இராபத்து தொடங்கும் வைகுண்ட ஏகாதசியன்று, சொர்க்கவாசல் எனப்படும் முக்தி தரும் வாசல் திறப்பு நடைபெறும். அன்று ஸ்ரீரங்க மூலவருக்கு முத்தங்கி அணிவிக்கப் படும். அதிகாலை 4.30 மணியளவில் மூலஸ்தானத்தில் இருந்து பெருமாள் ரத்ன அங்கி அணிந்துவாறு, முகத்தில் மந்தகாசப் புன்னகையுடன் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருளைப் பொழிந்தவாறு பரமபத வாசல் வழியாக எழுந்தருள்வார்.

    மனிதனாக பிறப்பு எடுத்த நாம் நம் ஞானேந்திரியங்கள் ஐந்தையும், கர்மேந்திரியங்கள் ஐந்தையும், மனம் என்ற ஒன்றையும், பரம்பொருளுடன் ஒன்றுபடுத்தி நிம்மதியான வாழ்வைப் பெற வைகுண்ட ஏகாதசி விரதம் வழிகாட்டுகிறது.
    அரையர் என்போர் வைணவ கோவில்களில் திராவிட வேதம் எனப்படும் நாலாயிர திவ்யப்பிரபந்தத் தைப்பாடும் இறைத் தொண்டர்கள் ஆவர்.
    அரையர் என்போர் வைணவ கோவில்களில் திராவிட வேதம் எனப்படும் நாலாயிர திவ்யப்பிரபந்தத் தைப்பாடும் இறைத் தொண்டர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் ஆடவரே. இவர்கள் இப்பாடல்களை அபிநயத்துடன் தாள ஒலிக்கேற்ப ஆடிப்பாடும் நிகழ்ச்சி அரையர் சேவை என்று அழைக்கப்படுகிறது. அரையர் என்பவர் கோவில் மூலவருக்கான பலவித சேவையில் தினசரி ஈடுபட்டாலும் நாதமுனிகள் ஏற்பாட்டுக்கிணங்க பொங்கல், பங்குனி உத்திரம், திருவாடிப் பூரம் உள்ளிட்ட திருவத்யயனம் உற்சவங்களில் இறைமுன் அரையர் சேவை செய்வதை கட்டாயமாக்கியுள்ளனர்.

    திராவிட வேதம் தொகுத்த நாதமுனிகளால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த அரையர் சேவை தொடங்கப்பட்டது. மேலை அகத்து ஆழ்வான் மற்றும் கீழை அகத்து ஆழ்வான் எனும் தன்னுடைய இரண்டு மருமகன்களுக்கும் நாதமுனிகள் நாலாயிர பிரபந்தங்களை பண் மற்றும் தாளத்துடன் கற்பித்ததாகவும் இவர்கள் வழி வந்தவர்களும் இவர்களிடம் கற்றவர்களுமே இன்று தமிழகமெங்கும் உள்ள அரையர்கள் என நம்பப்படுகிறது. முதன் முதலில் இச்சேவை ஸ்ரீரங்கத்தில் தொடங்கப்பட்டது.

    வைணவ கோவில்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வழிபாடுகளில் ஒன்று அரையர் சேவையாகும். திருக்கோவில் உற்சவர் முன் நடைபெறும் அரையர் சேவையின் போது அரையர்கள் பஞ்ச கச்சம் அணிந்து, அரையர் குல்லாய் எனப்படும் கூம்பு வடிவத் தொப்பியும், இறைவனுக்கு சாத்தப்பட்ட மாலையோடு வழக்கமான வைணவ சின்னங்களையும் அணிந்திருப்பர்.

    காதுகளை மறைக்கும் வகையில் இரண்டு பட்டைகள் தொங்கும். குல்லாய் முழுவதும் சரிகை வேலைப்பாடுடன் அமைந்திருக்கும். இத்தகு அரிய கலை வைணவ கோவில்களில் மட்டுமே காணப்படும்.

    உற்சவர் முன்பு நிகழ்த்தப்படும் இச்சேவையானது மூன்று பகுதிகளைக் கொண்டது. பிரபந்தத்தின் குறிப்பிட்ட பாடலை பாடுவது முதலாவதாகவும், பாடப் பெற்ற பிரபந்தத்தின் பொருளுக்கு ஏற்றாற்போல் அபிநயம் பிடித்து ஆடுவது இரண்டாவதாகவும், பாடலின் உட்பொருளை விளக் கிக்கூறுவது மூன்றாம் பகுதியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது இச்சேவை. இது கதையைத் தழுவி அமையாமல் ஒரு பாடலுக்கான பொருள் விளக்கம் தரும் நிலையில் அமைகிறது.
    அரையர் ஒருவரே பல்வேறு பாத்திரங்களாக வேடப்புனைவு மாறுதல் இன்றி அபிநயிப்பர். காட்சி மாற்றங்களை, மாந்தர் கூற்று வழியே பாகுபடுத்துவர். பாசுரத்தின் ஒரு தொடருக்குப் பல நிலைகளில் அபிநயம் செய்யும் சிறப்பினை இக்கலையில் காணலாம்.



    பலநாட்கள் பயிற்சிக்கு பின்னே அரையர்களை இச்சேவையை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் நிரம்பிய மொழிப்புலமை இச்சேவைக்கு அடித்தளம் என்பதால் பொதுவாகவே அரையர்கள் தமிழ்மொழியிலும், பிரபந்தத்திலும் மிகுந்த புலமை மிக்கவர்களாகவும் உள்ளனர். அரையர், விண்ணப்பம் செய்வார், பாடுவான், இசைக்காரர், தம்பி ரான்மார் என்றெல்லாம் இவர்கள் அழைக்கப்படுகின்றனர்.

    பிரபந்தங்களில் அரையர்கள் தமிழ்ச் சூர்ணிகைகளைச் சேர்த்துள்ளனர்.ஆழ்வார் பாசுரங்களை இசையுடன் பாடி அனுபவித்து அவற்றின் விளக்கங்களை அழகுறப்பேசி நடிக்கும் முத்தமிழ்க்கலையே அரையர் சேவையாகும்.வைகுண்டத்தைதிருநாடு என்று தமிழில் குறிப்பிடுவர். அத்திருநாட்டிற்குச் செல்பவர்கள் எப்போதும் பெருமாளைத் தரிசிக்கும் பாக்கியம் பெறுவர். அவர்களுக்கு நித்யசூரிகள் என்று பெயர். இவர்களுக்கு பசி, தாகம், உறக்கம் என்னும் எவ்வித உணர்வும் இருக்காது. பேரானந்தத்தில் மூழ்கி இருப்பர். பரசவநிலையில் பெருமாளை புகழ்ந்து ஆடிப்பாடுவர்.

    இக்காட்சியைப் பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கத்திலும் நிகழ்த்த வேண்டும் என்ற ஆவல் நாதமுனிகளின் உள்ளத்தில் எழுந்தது. அரையர் என்னும் அபிநயத்தோடு ஆடும் கலைஞர்களை உருவாக்கினார். இதுவே அரையர் சேவை என்று வழங்கப்படுகிறது. ஸ்ரீரங்கத்தில் அரையர் சேவை நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது.

    நாலாயிரத்தை தொகுத்த நாதமுனிகளே இச்சேவையை தொடங்கினார். பாசுரங்களை பாடும்போது, அதற்கேற்ப முகம், கை பாவம் காட்டி அரையர் நடிப்பர். அரையர் சேவையில் முத்துக்குறி என்னும் பகுதி உண்டு.

    குறிசொல்லும் ஒரு பெண்ணிடம், தாய் தன் மகளின் எதிர்காலம் குறித்து கேட்பதே முத்துக்குறி. முத்துக்குறியைக் காண வரும் ஆண்களும், பெண்களும் பட்டு உடுத்தி வருவது மரபு.

    அன்று அரையர் ஒருவர் பட்டு உடுத்தி, தாயாக, மகளாக, குறிசொல்பவளாக மாறி மாறி அபிநயத்தோடு பாடி ஆடுவது சிறப்பு. தமிழகத்தில் ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீரங்கம் ஆகிய மூன்று திவ்யதேசங்களில் மட்டும் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி அரையர் சேவை நடக்கிறது. வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய பத்துநாட்களை பகல் பத்து என்றும், (மார்கழி அமாவாசைக்கு அடுத்த பிரதமை முதல் தசமி வரை) வைகுண்ட ஏகாதசிக்கு பிறகு வரும் பத்து நாட்களை (ஏகாதசி முதல் பஞ்சமி வரை) ராப்பத்து நாட்களாகவும் கொள்வர். ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்கழி தவிர ஆடி,தை மாதங்களிலும் அரையர் சேவை உண்டு.
    ஸ்ரீரங்கத்தில் கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசி விழாவை பற்றி ஒரு வரலாறு உண்டு. அந்த கதையை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஸ்ரீரங்கத்தில் கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசி விழாவை பற்றி ஒரு வரலாறு உண்டு. திருமங்கை யாழ்வாரின்பக்தியிலும், திருப்பணியிலும் மகிழ்ச்சியடைந்த ரெங்கநாதர் அவர் முன்பு தோன்றி, என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு திருமங்கையாழ்வார், பரமபதம் அடைந்த நாளான மார்கழி வளர்பிறை ஏகாதசியை பெருவிழாவாக கொண்டாட வேண்டும்.

    நம்மாழ் வாரின் திருவாய்மொழிக்காக திருவிழா நடைபெற அருள வேண்டும் என்று வரம் கேட்டார். அதனை ரெங்கநாதரும் ஏற்றுக்கொண்டு அருளினார். அதன்படி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது. மற்றொரு தகவலும் உண்டு. என்னவென்றால், கலியுகம் பிறந்தாலும் வைகுண்டத்தின் காவலர்களான ஜய, விஜயர்கள் வைகுண்டத்தின் வாசலை மூடினார்கள்.

    இதனை கண்ட பெருமாள் காவலர்களிடம் வைகுண்ட வாசலின் கதவை ஏன் மூடினீர்கள்? என்று கேட்டார். அதற்கு காவலர்கள் கலி பிறந்து விட்டது, இனிமேல் அதர்மம் தலை தூக்கும், தர்மம் நிலைகுலையும், பாவங்கள் பலவிதங்களில் பெருகும். அந்த சூழலில் இருந்து மானிடர்கள் யாரும் தப்பமுடியாது. அதனால் வைகுண்டத்திற்கு யாரும் வரமாட்டார்கள் என்றனர். உடனே பெருமாள் சொன்னார், கலியுகத்தில் பக்தி பெருகும்.

    தர்மம் செய்பவர்கள் பெருகுவார்கள். அப்படி சுயநலமின்றி புண்ணிய காரியங்கள் செய்பவர்களுக்காக பரமபத வாசல் திறந்தே இருக்கட்டும் என்று அருளினார். இப்படி பெருமாள் அருளியது மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி தினத்தில்தான். இப்படி பல புராண வரலாறுகள் இருந்தாலும் வைகுண்ட ஏகாதசியன்று சாஸ்திர சம்பிரதாயப்படி விரதம் கடைபிடித்து பெருமாளை வழிபடும் பக்தர்களுக்கு நிச்சயம் வைகுண்டத்தில் இருக்கும் இடம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    பெரும்பாலான வைணவ கோவில்களில் பரமபதவாசல் என்று ஒரு சன்னதி இருக்கும். இந்த வாசல் வடக்கு நோக்கி இருப்பதை காணலாம். இது மூடப்பட்டே இருக்கும். ஆண்டுக்கு ஒருமுறை வைகுண்ட ஏகாதசி திதி அன்று மட்டும் இந்த கதவுகள் திறக்கப்படும். இந்த வாசல் வழியாக அன்று பெருமாள் பிரவேசிக்கும்போது, பக்தர்கள் பின் தொடர்ந்து செல்வார்கள். இதனால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஸ்ரீரங்கத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.

    சொர்க்கவாசல் திறப்பு விழா

    மார்கழி மாதம் தேவர்களின் உஷக்காலம் எனப்படும் அதிகாலை நேரமாக இருப்பதால் வைகுண்ட வாசல்கள் திறந்தே இருப்பினும் பகவான் அந்த வழியாக வெளியே வந்து காட்சி தரும் நாளாகும். வைகுண்ட ஏகாதசி அதிகாலை அன்று சொர்க்கவாசல் எனப்படும் வடக்கு வாசல் வழியாக நம்பெருமாள் (தெற்கே பாற்கடலில் பள்ளி கொண்டுள்ளவர்) வருகிறார். அந்த நேரத்தை சொர்க்கவாசல் திறப்பு விழாவாக கொண்டாடுகிறோம்.
    இன்று திறக்கப்படும் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் வருகிற 27-ந்தேதி வரை திறந்திருக்கும். இது குறித்த விரிவான செய்தியை அறிந்து கொள்ளலாம்.
    இன்று திறக்கப்படும் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் வருகிற 27-ந்தேதி வரை திறந்திருக்கும். 25-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியன்று மட்டும் பரமபதவாசல் திறப்பு கிடையாது.

    இன்று அதிகாலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். மற்ற நாட்களில் பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை பரமபதவாசல் திறந்து இருக்கும்.

    24-ந்தேதி திருக்கைத்தல சேவையன்று மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை மட்டும் திறந்திருக்கும். 27-ந்தேதி நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளும் நாளன்று காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும். 
    ×