search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எதிர்க்கட்சி"

    • ராகுல் காந்தி தலைவர் பதவியை தட்டிக்கழிக்காமல் ஏற்று கொள்ள வேண்டும் என்று தீர்மானம் இயற்றப்பட்டது.
    • பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து ராகுல்காந்தி இந்தியாவின் பிரதமராக வர கடுமையாக உழைக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ெதற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் து.கிருஷ்ணசாமி வாண்டையார்தலைமையில் தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் வட்டாரத்தலைவர் ரவிச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார்.

    மாவட்ட துணைத்தலைவர்கள் வக்கீல் கோ.அன்பரசன், பட்டுக்கோட்டை வக்கீல் ராமசாமி, அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் குணா பரமேஸ்வரி, முன்னாள் மாநில துணைத்தலைவர் பட்டுக்கோட்டை கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில்,அகில இந்திய காங்கிரஸ் துணைத்தவைர் ராகுல்காந்தி தலைமையில் அடுத்த மாதம் 7-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை தொடங்க உள்ள நடைபயண ஆரம்ப விழாவில் தஞ்சை மாவட்டத்தில் இருந்து 1000 பேர் கலந்து கொள்ள வேண்டும்.

    நடைபயணத்தில் ராகுல் காந்தியுடன் 50 பேர்செல்ல வேண்டும்.

    செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர்தேர்தலில் ராகுல் காந்தி தலைவர் பதவியை தட்டிக்கழிக்காமல் ஏற்று கொள்ள வேண்டும் என்று தீர்மானம் இயற்றப்பட்டது.

    2024- –ல் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து ராகுல்காந்தி இந்தியாவின் பிரதமராக வர கடுமையாக உழைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள தஞ்சாவூர் -பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் - அரியலூர், மன்னார்குடி- பட்டுக்கோட்டை, கும்பகோணம் -விருத்தாச்சலம் ரயில்பாதை திட்டத்திற்கு அதிக அளவு பணம் ஒதுக்கி மேற்படி திட்டத்தை விரைந்து செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    தஞ்சாவூரிலிருந்து பெங்களுருக்கு புதிதாக விரைவு ரயில் ஒன்றை இயக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, மாநகர மாவட்ட கோட்ட தலைவர் கதர்.வெங்கடேசன், வட்டாரத்தலைவர்கள் நாராயணசாமி, சேக்இப்ராகிம்ஷா, அய்யப்பன், பாண்டிதுரை, சித்திரக்குடி ஆண்டவர், கனகராஜ், அதிராம்பட்டிணம்நகர தலைவர் தமிழ் அன்சாரி, சோழமண்டல சிவாஜி பாசறை தலைவர்சதா.

    வெங்கட்ராமன், வழக்கறிஞர் மைனர், சோழபுரம் ராஜேந்திரன், இளைஞர்காங்கிரஸ் நிர்வாகிகள் ரமேஷ் சிங்கம், கீர்த்திவாசன், ராஜ்குமார், காங்கிரஸ் நிர்வாகிகள் சண்முகம், முகிலன், சுப்புராமன், சாமி மனோகரன், ஜான் தனசேகர், மாரிமுத்து, வீராசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    எனக்கு பினாமி சொத்து, பண்ணை வீடு, வணிக வளாகம், வெளிநாட்டு சொத்து இருப்பதை நிரூபிக்க முடியுமா என எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி சவால் விடுத்தார்.
    லக்னோ:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு, 6 கட்ட தேர்தல்கள் முடிந்து விட்டன. 7-ம் இறுதிக்கட்ட தேர்தல், 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் வரும் 19-ந் தேதி நடக்க உள்ளது.

    அவற்றில் ஒன்றான உத்தரபிரதேச மாநிலம், பால்லியாவில் பா.ஜனதா வேட்பாளர் வீரேந்தர்சிங் மாஸ்த்தை ஆதரித்து நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு ஆவேசமாக பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நாட்டு மக்களை கொள்ளையடித்து பிரதமர் ஆக வேண்டும் என்று நான் ஒருபோதும் கனவு கண்டது இல்லை. நான் இளமைப்பருவத்தில் ஏழையாக இருந்தபோது அனுபவித்திராத எல்லா வசதிகளையும் வழங்குவதற்கு ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்யத்தான் விரும்புகிறேன். நான் எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுக்கிறேன்.

    எனக்கு பினாமி சொத்து உள்ளது என்றோ, பண்ணை வீடு உள்ளது என்றோ, வெளிநாட்டு வங்கிகளில் பணம் குவித்துள்ளேன் என்றோ, வணிக வளாகம் உள்ளது என்றோ, வெளிநாடுகளில் என் பெயரில் சொத்து உள்ளது என்றோ, சொகுசு கார் உள்ளது என்றோ நிரூபிக்க முடியுமா?

    நான் பணக்காரன் ஆக வேண்டும் என்று ஒருபோதும் கனவு கண்டது இல்லை. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்களாக்கள் கட்டி உள்ளனர். மற்ற சொத்துக்களை குவித்து உள்ளனர். தங்களது உறவினர்கள் சொத்துக்களை குவிக்க வைத்து உள்ளனர். என்னிடம் உள்ள ஒரே சாதி வறுமைதான். எனவேதான் நான் வறுமைக்கு எதிராக கிளர்ச்சி நடத்தி இருக்கிறேன்.

    நான் எத்தனையோ தேர்தல்களில் போட்டியிட்டு இருக்கிறேன். ஆனால் என் சாதியின் ஆதரவை கேட்டுப் பெற்றதில்லை. எனது நோக்கம், இந்தியாவை முன்னோக்கி அழைத்துச்செல்வதுதான்.

    மோடியின் சாதியைப்பற்றி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. நான் நீண்ட காலம் முதல்-மந்திரி பதவி வகித்திருக்கிறேன். நான் தேர்தல்களில் போட்டியிட்டதோடு, பலர் போட்டியிடுவதற்கு உதவியும் செய்திருக்கிறேன். ஆனால் ஆதரவுக்காக என் சாதியைப் பயன்படுத்தியது கிடையாது.

    சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கரம் கோர்த்து உள்ளன என்று சொன்றால், அது அவர்களது ஊழலை மறைப்பதற்காகவும், ஊழலில் தொடர்புடைய உறவினர்களைக் காப்பாற்றவும்தான்.

    மோடியை தாக்காமல் அவர்கள் ஒரு நாளைக்கூட கழித்தது கிடையாது. அவர்கள் தாக்குதலுக்கு இந்திய மக்கள் இந்த தேர்தலில் பதிலடி கொடுப்பார்கள். மே 23-க்கு பின்னர் அவர்கள் (எதிர்க்கட்சிகள்) மீண்டும் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொள்வர்.

    நேற்று இரவு (நேற்று முன்தினம் இரவு) நான் டெல்லிக்கு போய்ச்சேர்ந்த உடன் டெலிவிஷனில் பார்த்தேன். சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் தொண்டர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டார்கள். தேர்தல்கள் இன்னும் முடியக்கூட இல்லை. 23-ந் தேதி தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னர் இது டிரைலர் (முன்னோட்டம்)தான்.

    இன்றைக்கு எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிராக பதிலடி கொடுத்திருக்கிறோம். ஆனால் தேர்தலின்போது, தேசிய பாதுகாப்பு குறித்து சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் பேசி பார்த்திருக்கிறீர்களா?

    துல்லிய தாக்குதல்கள் நடத்தி பதிலடி கொடுத்திருக்கிறோம். வான்தாக்குதல் நடத்தி இருக்கிறோம். அதைக் கண்டு பயங்கரவாதிகள் ஓடி ஒளிந்திருக்கிறார்கள். மோடி தேர்தலில் தோற்கடிக்கப்படவேண்டும் என்பதுதான் அவர்களது பிரார்த்தனை. இது போதாது என்று பயங்கரவாதிகளுக்கு எதிர்க்கட்சிகள் உதவுகின்றன.

    பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியை மக்கள் ஆதரிக்க வேண்டும். நான் என் இளமைப்பருவத்தில் சந்தித்த வறுமையை உங்கள் குழந்தைகளும் சந்திப்பதை நான் விரும்பவில்லை. நாம் மாற வேண்டும். இந்த நாட்டை வளர்ந்த நாடாக மாற்றிக்காட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    செயல்திறன் கொண்ட அரசுக்கே மக்கள் ஓட்டு போட்டு வருகிறார்கள். எனவே, எதிர்க்கட்சிகள் படுதோல்வி அடையும் என்று பிரதமர் மோடி கணித்துள்ளார்.
    குஷிநகர்:

    பாராளுமன்றத்துக்கு 6 கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இறுதிக்கட்ட வாக்குப்பதிவை சந்திக்கும் தொகுதிகளில் பிரதமர் மோடி நேற்று பிரசாரத்தை தொடங்கினார். உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-

    செயல்திறன் மிக்க, நேர்மையான அரசுக்குத்தான் மக்கள் ஓட்டு போட்டு வருகிறார்கள். எனவே, இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் படுதோல்வி அடையும்.

    இந்த மாநிலத்தில் அகிலேஷ் யாதவும், மாயாவதியும் கூட்டணி அமைத்துள்ளனர். இவர்கள் இருவரும் உத்தரபிரதேச முதல்-மந்திரியாக இருந்த மொத்த நாட்களை விட நான் அதிக நாட்கள் குஜராத் மாநில முதல்-மந்திரியாக இருந்துள்ளேன். ஆனால், என் மீது ஊழல் கறை படிந்தது கிடையாது.

    ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் பட்டியல் இன பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத் காரம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், அந்த பெண்ணுக்காக மாயாவதி முதலைக்கண்ணீர் வடிக்கிறார். அவருக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெறத் தயாரா?

    அந்த மாநில காங்கிரஸ் அரசும், இந்த சம்பவத்தை மறைக்க நினைக்கிறது. காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. பயங்கரவாதிகளை சுடுவதற்கு நமது ராணுவ வீரர்கள் தேர்தல் கமிஷனிடம் அனுமதி வாங்கினார்களா? என்று எதிர்க்கட்சிகள் கேட்டாலும் கேட்கும்.

    தேர்தல் நடந்து கொண்டிருக்கும்போது, பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுடலாமா? என்று அவர்கள் கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அவர்கள் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்களா?

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    பின்னர், மத்தியபிரதேச மாநிலம் காண்ட்வா என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-

    நமது மத கலாசாரத்தை இழிவுபடுத்தும்வகையில், ‘இந்து பயங்கரவாதம்’ என்ற முத்திரை குத்தி காங்கிரஸ் கட்சி சதி செய்தது. எத்தனை ‘புனித கயிறு’களை கட்டினாலும், இந்து மதத்தின் காவி வண்ணம் மீது பயங்கரவாத கறை பூசிய பாவத்தில் இருந்து காங்கிரசும், அதன் கலப்பட கூட்டணி கட்சிகளும் தப்ப முடியாது.

    போபால் விஷ வாயு கசிவு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியை நாட்டை விட்டு தப்ப வைத்தது, காங்கிரஸ்தான். ஏனென்றால், அவர்கள் ‘நடந்தது, நடந்து விட்டது. அதனால் என்ன?’ என்ற எண்ணம் கொண்டவர்கள். அவசர நிலை காலத்தின்போது, பாடகர் கிஷோர் குமாரின் பாடல்களை தடை செய்தனர். இப்போது கேட்டால், ‘நடந்தது, நடந்து விட்டது’ என்பார்கள். செய்த நல்ல பணிகளின் அடிப்படையில், நான் பிரசாரம் செய்கிறேன். காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும் பொய்களை அடிப்படையாக கொண்டு பிரசாரம் செய்கின்றன.

    இவ்வாறு அவர் பேசினார்.
    எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு மத்தியில் பா.ஜனதாவுக்கு எதிர்பார்த்ததைவிட ஆதரவு பெருகி வருகிறது என்று இல.கணேசன் கூறியுள்ளார். #Ganesan #BJP #ilaganesan

    சென்னை:

    பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசனிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- தமிழக தேர்தல் களத்தில் பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவு எப்படி இருக்கிறது?

    பதில்:- எதிர்பார்த்ததை விட அதிகமான அளவில் ஆதரவு பெருகி வருகிறது.

    கேள்வி:- எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன் வைக்கும் போது ஆதரவு பெருகி வருவதாக எப்படி சொல்கிறீர்கள்?

    பதில்:- உண்மைதான். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத்தான் இப்போது பதில் சொல்லிக் கொண்டிருக்கிறோம். மோடி ஆட்சியின் சாதனைகளை சொன்னால் போதும். அதுவே பா.ஜனதாவுக்கு சாதகமாக இருக்கும்.

    கேள்வி:- நீங்கள் சாதனை என்பதையெல்லாம் வேதனையாக அல்லவா எதிர்க்கட்சிகள் கூறுகின்றன?

     


    பதில்:- எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வரும் போது சிறிது காலம் சிரமம் ஏற்படத்தான் செய்யும். அது மக்களுக்கும் தெரியும்.

    இந்த தலைமுறைக்கு தெரிந்து இராத ஒரு வி‌ஷயம். அணாவில் இருந்து நயா பைசாவாக மாறியபோதும் நீண்ட நாட்கள் பிரச்சினை இருந்தது. அதன் பிறகு அணா, பைசா நினைவு இல்லை.

    தங்க நாற்கர சாலை அமைக்கப்பட்டபோது ‘டைவர்சன்’ என்று மாற்றி மாற்றி விட்டு சிரமம் ஏற்பட்டது. அலைய விடுகிறார்களே என்றுதான் தோன்றியது. சாலை அமைந்த பிறகு அந்த சிரமத்தை மறந்து விடுவோம். ஒரு நன்மைக்காக சிறு கஷ்டங்கள் ஏற்படத்தான் செய்யும். அதை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். எதிர்க்கட்சிகளுக்குத்தான் அதை பொறுக்க முடிய வில்லை.

    மோடி 5 ஆண்டுகள்தான் பிரதமராக இருந்துள்ளார். இந்த 5 ஆண்டுகளில் என்ன செய்தார்? 50 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் என்ன செய்தது? அப்போது ஏற்படாத மாற்றம் இப்போது ஏற்பட்டு இருக்கிறதா? இல்லையா? இதெல்லாம் மக்களுக்கு தெரியும். ஆனால் எதிர்க்கட்சிகள் வாக்குக்காக அவர்களை திசை திருப்ப பார்க்கிறார்கள்.

    கேள்வி:- சிரமங்களை தாங்கி மக்கள் உங்களை ஏற்றுக் கொள்வார்களா?

    பதில்:- நிச்சயமாக. மக்களுக்கு சிரமம் ஏற்பட்டது. ஆனால் பாதிப்பு இல்லை. எனவே ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் அவரது நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட ஒரு சிலர் மட்டுமே எதிர்க்கிறார்கள்.

    கேள்வி:- மி‌ஷன் சக்தி அறிவிப்பு மூலம் ராணுவ ரகசியத்தை மோடி வெளியே தெரிவித்து விட்டதாக ப.சிதம்பரம் குறை கூறி உள்ளாரே?

    பதில்:- மிகப்பெருமையான ஒரு நிகழ்வை பிரதமர் நாட்டு மக்களுக்கு அறிவித்தார். மி‌ஷன் சக்தியின் மூலம் உலகின் 4-வது நாடாக இந்தியா வளர்ந்துள்ளது. இதை தேச பக்தர்கள் அனைவரும் வர வேற்பார்கள்.

    கேள்வி:- அப்படியானால் ப.சிதம்பரம் தேச பக்தி இல்லாதவரா?

    பதில்:- அதுபற்றி எனக்கு தெரியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #Ganesan #BJP #ilaganesan

    நிவாரணம் கிடைக்காததால் தான் பொதுமக்கள் போராடுகிறார்கள் என்றும் எதிர்க்கட்சிகள் தூண்டவில்லை எனவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார். #TTVDinakaran #AMMK #GajaCyclone
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கஜா புயலால் பேரழிவை சந்தித்துள்ள நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களிலும், பாதிக்கப்பட்ட கிராமங்களிலும் சந்தித்தேன்.

    கஜா புயலானது பெருமளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்த போதும், குறைந்தபட்சம் பத்து நாட்களாவது முகாம்களில் மக்கள் தங்கும்படி நேரும் என்பதை முன்கூட்டியே யோசித்து முறையான திட்டமிடல் இல்லாததால், அம்முகாம்களில் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளான உணவு, குடிநீர், குழந்தைகளுக்கான பால், ஜெனரேட்டர், மருத்துவ வசதி போன்ற முன்னேற்பாடுகளை இந்த அரசு செய்யத்தவறிவிட்டது என்பதை அறிய முடிந்தது.

    போதிய அளவில் நடமாடும் மருத்துவ முகாம்கள் செயல்பாட்டில் இருப்பதாக அரசு சொல்கிறது. ஆனால், செல்லும் இடங்களில் எல்லாம் ஒரு சுகாதார குழுவைக் கூட பார்க்க முடியவில்லை என்று எங்களிடம் மக்கள் புலம்புகின்றனர்.

    இதனிடையே, பாதிப்புகளுக்குள்ளான பகுதிகளில் இறந்துபோன கால்நடைகளை உரிய முறையில் அடக்கம் செய்ய இயலாததாலும், மீட்பு பணிகளை விரைந்து செயல்படுத்தாததாலும் அனைத்து பகுதிகளிலும் துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது. மேலும், டெல்டா மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்ய ஆரம்பித்துள்ள இந்த சூழலை மனதில்கொண்டு தொற்று நோய் பரவாமல் தடுக்கவேண்டிய கடமையும் அரசுக்கு இருக்கிறது.

    கிணற்றில் நீர் இருக்கிறது. ஆனால், அதை நீர் தொட்டிக்கு மேலேற்ற மின்சார வசதியில்லை. தனிநபர் வீடுகளில் மட்டுமல்ல, ஊர் பொது குடிநீர் தொட்டிக்கும் இதுதான் நிலைமை. இந்த வி‌ஷயத்தில் கவனம் செலுத்தவேண்டிய உள்ளாட்சித் துறையின் செயல்பாடு மக்களை மேலும் கொந்தளிக்க வைத்துள்ளது.

    வேளாண் தொழிலையே நம்பி வாழ்ந்துக் கொண்டிருக்கும் டெல்டா பகுதி மக்களின் பாதிப்பை பார்வையிடவோ, மேற்கொண்டு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதை அறியவோ வேளாண்மைத்துறை மற்றும், கிராம நிர்வாக அதிகாரிகளையாவது உடனடியாக கிராமங்களுக்கு அனுப்பி கணக்கீடு பணியை விரைந்து செய்திட வருவாய்த் துறையும் முன்வரவில்லை.

    புயலின் காரணமாக இதுவரை சுமார் 90,000 மின் கம்பங்கள் சாய்ந்தும், பாதிக்கப்பட்டும் உள்ளதாக அரசு சொன்னது. ஆனால், 10,000-க்கும் குறைவான புதிய மின்கம்பங்களே இருப்பில் உள்ளதாக மின்துறை அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் சொல்கிறார்கள். இதை வைத்து எப்படி பாதிப்பை சரிசெய்து, மின் விநியோகத்தை சீராக்க முடியும் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது.



    எனவே, வெறுமனே புள்ளி விவரங்களை மட்டுமே வெளியிடுவதை நிறுத்தி விட்டு, வருவாய், மின்சாரம், சுகாதாரம், உள்ளாட்சி, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் என்னென்ன பாதிப்பு இருந்தது? எங்கே, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? என்பதை தனித்தனியாக வெளிப்படையாக ஒரு வெள்ளை அறிக்கை மூலம் வெளிப்படுத்தி மக்களுக்கும், எதிர்கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ள சந்தேகங்களை போக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

    அரும்பாடுபட்டு வளர்த்தெடுத்த தென்னை, வாழை, கரும்பு, நெல் போன்ற பயிர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் புயலுக்கு பலியானதை அம்மக்களால் இன்னும் மறக்க முடியவில்லை. மக்கள் விரும்பாத திட்டங்கள், வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் உபயோகமில்லாத பணிகளுக்கு நிதியை அள்ளி இறைக்கும் அரசு, இயற்கை பேரிடரால் வாழ்வாதாரத்தை தொலைத்து நிற்கும் மக்களுக்கு உரிய நிவாரணத்தை கொடுக்க மறுக்கிறது.

    தென்னை விவசாயிகள் மட்டுமின்றி, அதைத் சார்ந்த கூலித் தொழிலாளிகளும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். அவர்களுக்கும் தகுந்த நிவாரணத்தை இந்த அரசு வழங்கி அவர்கள் வாழ்வை மறு சீரமைக்க வேண்டும்.



    ஒவ்வொரு புயல்வரும் போது மாநில அரசுக்கு தேவையான உதவிகளைச் செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது என்று சொல்வதும்; ஆனால், மாநில அரசு கேட்கும் நிதியை உரிய நேரத்தில் தராமல் தமிழக மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் வஞ்சிப்பதும் மத்திய அரசின் வாடிக்கையாக இருக்கிறது. மத்திய அரசோடு இணக்கமாக இருந்து மாநில அரசுக்கு தேவையான திட்டங்களை பெற்றுத்தருவதாக சொல்லிக் கொள்ளும் இந்த அரசு ஏன் இடைகால நிவாரணம் கேட்கவில்லை?

    பசிக்கு உணவு இல்லை, உடுத்த உடை இல்லை, படுத்துறங்க வீடூ இல்லை, குடிக்க தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, இருட்டில் ஒளியேற்றிட மெழுகுவர்த்தி இல்லை, இப்படி அத்தியா வசிய பொருட்கள் எதுவும் இல்லாமல், நிம்மதியும் இல்லாமல், வாழ்வாதாரத்தை புயலுக்கு காவு கொடுத்துள்ள அப்பாவி மக்களுக்கு ஏனென்று கேட்க அரசுமில்லை என்று வெம்பி அழும் ஓலங்களே போகுமிட மெல்லாம் கேட்க முடிகின்றது.

    உரிய நேரத்தில் நிவாரணம் கிடைக்காத பொதுமக்கள் தன்னெழுச்சியாக ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். அமைச்சர்களோ, அரசு அதிகாரிகளோ கிராம நிர்வாக அதிகாரிகளோ புயல் பாதித்த பகுதிகளை உடனடியாக சென்று மக்களுக்கு தேவையானவற்றை அறிய தவறியதன் காரணம்தான் அவர்களை கண்டாலே மக்கள் கொதிக்கின்றனர்.



    இதனை உணராமல், எதிர்க்கட்சியினர் தூண்டி விடுவதால்தான் மக்கள் போராடுகிறார்கள் என்று வெட்டி அரசியல் செய்வதும், கேள்வி கேட்பவர்களை கைது செய்வது கண்டனத்திற்குரியதாகும்.

    மேலும், மக்கள் விரோத அரசு என்று முத்திரை பெற்ற பின், மற்ற மாநிலங்களைப் போல் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து பணியாற்றவேண்டுமென சொல்வது, சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.

    ஆகவே, இனியாவது பழனிசாமி அரசு தங்களது பொறுப்பை உணர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஆக்கபூர்வமான பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TTVDinakaran #AMMK #GajaCyclone
    தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாதது திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #TNGovernment #DMK #ADMK #ElectionCommission
    சென்னை:

    மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஷ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.

    5 மாநில தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் தமிழகத்தில் பருவமழை தீவிரமாக இருக்கும் என்பதால் தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க 2 தொகுதிகளுக்கான தேர்தல் தேதியும் அறிவிக்கப்படவில்லை.

    இது தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளனர்.

    இதே போன்ற பருவமழை காலங்களில் ஏற்கனவே பல தேர்தல்கள் நடந்து இருப்பதாகவும், தேர்தல் தள்ளி வைக்கப்பட்டிருப்பதற்கு உண்மையான காரணம் அது இல்லை என்றும் கூறுகிறார்கள்.



    இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சிக்கே வெற்றி என்ற நிலைதான் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை இருந்தது.

    ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அது முறியடிக்கப்பட்டது. இதை மனதில் கொண்டே தேர்தல் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் கே.பால கிருஷ்ணன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தின் இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாததற்கு சொல்லப்பட்ட காரணங்கள் எதுவும் பொருத்தமானதாக இல்லை.

    ஏற்கனவே, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தாமல் உள்ளாட்சி அமைப்புகள் முடமாகியுள்ளன. இதுபோன்று ஜனநாயக வழிமுறைகளை கைவிடுகிற போக்கு மக்களுடைய பிரச்சினைகளை ஜனநாயக ரீதியில் எதிர்கொள்ள உதவிடாது.

    தமிழக இடைத்தேர்தலுக்கான தேதிகள் அறிவிப்பு வராதது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

    திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு தேர்தல்கள் முறையாகவும், நேர்மையாகவும் நடைபெற உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #TNGovernment #DMK #ADMK #ElectionCommission
    அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து பா.ஜனதாவை வீழ்த்தும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறினார். #PetrolDieselPriceHike #BharatBandh #RahulGandhi #ModiRule
    புதுடெல்லி:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் நேற்று ‘பாரத் பந்த்’ என்னும் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதையொட்டி டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடந்த கண்டன கூட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அகமது பட்டேல், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங், லோக் தந்திரிக் ஜனதாதளம் தலைவர் சரத்யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுகேந்து சேகர் ராய் மற்றும் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட 20 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.



    முன்னதாக கயிலாய மானசரோவர் புனித யாத்திரை முடிந்து டெல்லி திரும்பிய ராகுல்காந்தி நேற்று காலை ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்றார். அங்கு மானசரோவர் ஏரியின் நீரை தெளித்து மரியாதை செய்தார்.

    பின்னர் அங்கிருந்து காங்கிரஸ், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் புறப்பட்டு ஊர்வலமாக ராம் லீலா மைதானத்துக்கு வந்தார்.

    அங்கு அனைத்து எதிர்க்கட்சிகள் சார்பில் கண்டன கூட்டத்தில் பங்கேற்று ராகுல் காந்தி ஆவேசமாக பேசியதாவது:-

    4 ஆண்டுகளுக்கு முன்பு மோடி பிரதமர் பதவி ஏற்றபோது கடந்த 70 ஆண்டுகளில் எதுவும் நடக்கவில்லை. அதை நாங்கள் 4 ஆண்டுகளில் முடித்துக் காட்டுவோம் என்றார். அவர் சொன்னது உண்மைதான். ஆம் கடந்த 4 ஆண்டுகளில் நடந்துள்ள அனைத்தும் அதற்கு முந்தயை 70 ஆண்டுகளில் எப்போதும் நிகழ்ந்திடாதவை ஆகும்.

    இந்த 4 வருடங்களில் நாட்டு மக்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதை உங்களால் காண முடிகிறது. நீங்கள் எங்கே சென்றாலும் மத ரீதியாக, சாதி ரீதியாக மக்கள் பிளவுபட்டு இருப்பதையும் பார்க்க முடிகிறது. அதுமட்டுமின்றி ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்துக்கு எதிராக செயல்படுவதையும் காணலாம்.

    எரிபொருளின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதுபற்றி பிரதமர் எதுவும் பேசாமல் மவுனம் சாதிக்கிறார். இதேபோல் ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் நடந்துள்ள ஊழல் பற்றி வாய்திறக்க மறுக்கிறார். விவசாயிகள் தற்கொலை, பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள், வேலைவாய்ப்பு பிரச்சினை ஆகியவை குறித்தும் எதுவும் பேசுவதில்லை.

    பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. ரூபாயின் மதிப்பும் சரிந்துள்ளது. ஆனால் இதுபற்றி மோடி எதுவும் கூற மறுக்கிறார். 4 வருடங்களுக்கு முன்பு தேர்தல் பிரசாரத்தின்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வை கடுமையாக கண்டித்துப் பேசினார். இப்போதோ மவுனமாக இருக்கிறார்.

    இங்கே அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் ஒரே மேடையில் அமர்ந்து இருக்கிறோம். இது எங்களிடையே இருக்கும் ஒற்றுமையை காட்டுகிறது. எங்களிடையே உள்ள சித்தாந்தங்களை பகிர்ந்து கொண்டு அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து பா.ஜனதாவை வீழ்த்தும்.

    நாட்டு மக்களின் துயரங்களையும், வேதனையையும் எதிர்க்கட்சிகள் உணர்ந்துள்ளன. ஆனால் மோடி இதுபற்றி எதையும் அறியாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. இதுதான் எதிர்க்கட்சிகளாகிய எங்களுக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம். இந்த இடத்தில் இருந்து நாங்கள் உறுதியளிக்கிறோம். நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசும்போது, பொதுமக்கள் இந்த அரசின் மீது மிகுந்த கோபத்தில் உள்ளனர். விவசாயிகள், சிறு வணிகர்கள் மிகுந்த துயரத்தில் இருக்கின்றனர். வேலைவாய்ப்புகள் இல்லாமல் இளைஞர்கள் கவலையோடு காணப்படுகின்றனர். அரசியல் கட்சிகள் தங்களுக்குள் உள்ள சிறுசிறு கருத்துவேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு பா.ஜனதா அரசுக்கு எதிராக போராட ஒருங்கிணையவேண்டும். நாட்டுக்கு நிறைய செய்து இருக்கிறோம் என்று மோடி அரசு கூறுகிறது. ஆனால் அது நாட்டின் நலன்களுக்கானது அல்ல. இந்த அரசு அனைத்து எல்லைகளையும் மீறி விட்டது. நமது ஜனநாயகத்தை பாதுகாக்க நாம் அனைவரும் தயாராவோம். இந்த அரசாங்கத்தை மாற்றுவதற்குரிய சரியான நேரம் விரைவில் வரும் என்றார்.

    இந்த கூட்டத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தி கலந்துகொண்டாலும் உடல் நலக்குறைவு காரணமாக அவர் பேசவில்லை.

    கூட்டம் தொடங்கியபோது 20 கட்சிகளின் தலைவர்களும் ஒன்றாக எழுந்து நின்று ஒருவருக்கொருவர் கைகோர்த்து மோடி அரசுக்கு எதிராக தங்களது ஒற்றுமையை காண்பித்தது, குறிப்பிடத்தக்கது.  #PetrolDieselPriceHike #BharatBandh #RahulGandhi #ModiRule
    பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் மக்கள் கட்சியை சேர்ந்த அய்த்ஜாஜ் அசன் மற்றும் ஜமியாத் உலமா இ இஸ்லாம் கட்சித்தலைவர் மவுலானா ஆகிய இருவரும் எதிர்க்கட்சி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். #Pakistan #PresidentialPolls
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் தற்போதைய அதிபர் மம்னூன் உசேனின் பதவிக்காலம் முடிவதையொட்டி புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 4-ந் தேதி நடக்கிறது. இதில் ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி சார்பில் டாக்டர் ஆரிப் ஆல்வி போட்டியிடுகிறார். அவர் தனது வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார்.

    இந்த தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளரை எதிர்த்து பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன. இதற்காக பல நாட்களாக தொடர்ந்து அந்த கட்சிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. எனினும் பொது வேட்பாளரை தேர்வு செய்வதில் அந்த கட்சிகளுக்கு இடையே கருத்தொற்றுமை ஏற்படவில்லை.

    எனவே பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த அய்த்ஜாஜ் அசன் மற்றும் ஜமியாத் உலமா இ இஸ்லாம் கட்சித்தலைவர் மவுலானா பஸ்லுர் ரகுமான் ஆகிய இருவரும் எதிர்க்கட்சி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு எதிர்க்கட்சிகள் சார்பில் 2 பேர் போட்டியிடுவதால், ஆளுங்கட்சி வேட்பாளரான டாக்டர் ஆரிப் ஆல்வி எளிதில் வெற்றிபெறும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    பாகிஸ்தான் அதிபரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 4 மாகாணங்களின் சட்டசபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பர் என்பது குறிப்பிடத்தக்கது. #Pakistan #PresidentialPolls
    பாராளுமன்ற செயல்பாடுகள் கடந்தமுறை முடங்கியதுபோல் இல்லாமல் எதிர்வரும் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சியினரை மந்திரி விஜய் கோயல் சந்தித்து வருகிறார். #monsoonsession #govtreachesopposition #Parliamentmonsoonsession
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18-ம் தேதி தொடங்கவுள்ளது. ஆகஸ்ட் 10-ம் தேதிவரை நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற வேண்டியுள்ளது.

    கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து பாராளுமன்ற செயல்பாடுகள் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முற்றிலுமாக முட்க்கினர். இதனால், பல மசோதாக்களை அறிமுகப்படுத்த முடியாமலும், நிறைவேற்ற இயலாமலும் போனது.

    இந்நிலையில், கடந்தமுறை முடங்கியதுபோல் இல்லாமல் எதிர்வரும் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சியினரை பாராளுமன்ற விவகாரங்கள்துறை மந்திரி விஜய் கோயல் தற்போது சந்தித்து வருகிறார்.

    சமாஜ்வாதி கட்சி பாராளுமன்ற தலைவர் ராம்கோபால் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி பாராளுமன்ற தலைவர் சத்திஷ் சந்திரா மிஸ்ரா, சிவசேனா பாராளுமன்ற தலைவர் சஞ்சய் ரவுத், இந்ஹ்டிய கன்யூனிஸ்ட் கட்சி தலைவர் டி.ராஜா மற்றும் தெலுங்கானா ராஷ்டரிய சமிதி உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகளையும் சந்தித்த விஜய் கோயல், எதிர்வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது மக்களவை மற்றும் மாநிலங்களவை இடையூறுகள் ஏதுமின்றி நல்லமுறையில் செயல்பட ஒத்துழைக்குமாறு கேட்டுகொண்டார்.

    பாராளுமன்றத்தின் பணிகள் உரியமுறையில் நிறைவேற்றப்பட வேண்டியது ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தேசிய கடமையாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்த விஜய் கோயல், பாராளுமன்றத்தை சுமுகமாக நடத்த காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    இதற்கிடையில், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த நாளை மத்திய அரசின் சார்பில் அனைத்து கட்சி கூட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. #monsoonsession #govtreachesopposition #Parliamentmonsoonsession
    பா.ஜனதாவுடன் கூட்டணி ஆட்சியில் இருந்த பல கட்சிகள் விலகி வருவதாகவும் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை வலுவாகி வருவதாகவும் கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். #kanimozhi #DMK
    ஆலந்தூர்:

    தி.மு.க. எம்.பி. கனிமொழி, சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இத்தனை ஆண்டுகளாக சிறையில் இருந்தும் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளுக்கு விடுதலை தராதது வருந்தத்தக்கது. சிறையில் இருந்த எத்தனையோ பேருக்கு விடுதலை வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இவர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்பது வேதனையாக உள்ளது.

    இந்தியாவில் பல அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு எதிரான நிலைபாட்டைத்தான் எடுத்து உள்ளது. பா.ஜனதாவுடன் கூட்டணி ஆட்சியில் இருந்த பல கட்சிகளும் விலகி வரக்கூடிய நிலையும் ஏற்பட்டு உள்ளது. மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை வலுவாகி வருகிறது.



    தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிராக யாரும் இல்லை. அந்தந்த பகுதிகளில் திட்டங்கள் கொண்டு வரப்படும் போது மக்களிடம் பேசி, அவர்களின் கருத்துகளை கேட்டு அறிந்து கொள்ளாமல் தாங்கள் சொல்வதுதான் சட்டம் என்று கூறுபவர்களுக்கு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் என்று கூறுவதற்கு அருகதை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #kanimozhi #DMK
    பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து போட்டியிடும் கூட்டணியில் சேருவதற்கு உ.பி. முன்னாள் முதல்-மந்திரி மாயாவதி புதிய நிபந்தனை விதித்துள்ளார். #Mayawati #BJP #Parliamentelection

    புதுடெல்லி:

    மத்தியில் பா.ஜனதா, காங்கிரசுக்கு எதிராக புதிய அணியை உருவாக்கும் முயற்சியில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார்.

    இந்த நிலையில் கர்நாடகத்தில் பா.ஜனதாவை ஆட்சிக்கு வரவிடாமல் காங்கிரஸ்- ஜே.டி.எஸ். கூட்டணி தடுத்து விட்டதால் காங்கிரசுக்கு எதிரான போக்கை கட்சிகள் கைவிட்டு அதனுடன் கைகோர்க்க தயாராகி வருகின்றன.

    பெங்களூரில் நடந்த குமாரசாமி பதவி ஏற்பு விழாவில் சோனியா, ராகுலுடன் பகுஜன் சமாஜ் கட்சி மாயாவதி, சமாஜ்வாடி கட்சி அகிலேஷ் யாதவ், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    உத்தரப்பிரதேசத்தில் நடந்த இடைத்தேர்தலின் போது எதிரும் புதிருமாக இருந்த மாயாவதியும், அகிலேசும் ஒன்று சேர்ந்ததால் பா.ஜனதா தோற்றது.

    அதன்பிறகு இரு தலைவர்களும் பெங்களுரில் ஒரே மேடையில் கலந்து கொண்டது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக விளங்கியது.


    இந்த நிலையில் மாயாவதி லக்னோவில் நடந்த பகுஜன் சமாஜ் கட்சி கூட்டத்தில் பேசுகையில், எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு திடீர் என்று நிபந்தனை விதித்தார்.

    அவர் பேசுகையில், பாராளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு போதுமான தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும், அப்படி ஒதுக்கப்பட்டால் தான் கூட்டணி சேருவோம். இல்லையெனில் தனித்தே தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்றார்.

    மாயாவதி மேலும் பேசுகையில், “பா.ஜனதாவை அடியோடு நீக்கும் நேரம் வந்து விட்டது. இன்னும் அடுத்த 20 ஆண்டுகளுக்கு நான்தான் பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக நீடிப்பேன்” என்றார். #Mayawati #BJP #Parliamentelection

    மலேசிய பாராளுமன்ற தேர்தலில் மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி ஆட்சியை கைப்பற்றி உள்ளது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #MalaysiaElection #Oppositecoalition #Won
    கோலாலம்பூர்: 

    222 உறுப்பினர்களை கொண்ட மலேசிய பாராளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. பிரதமர் நஜீப் ரஜாக்கின் ஆளும் பி.என்.கட்சிக்கும், முன்னாள் தலைவர் மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. 

    நேற்று காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. அங்குள்ள வாக்கு சாவடிகளில் வரிசையில் நின்று பொதுமக்கள் ஓட்டு போட்டனர். மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இந்த தேர்தலில் ஒன்றரை கோடி மக்களில் 69 சதவிகிதம் பேர் வாக்களித்தனர்.

    இதையடுத்து, நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஆளும் பி.என். கட்சி தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் 54 இடங்களிலும், மகாதிர் முகமது தலைமையிலான பக்கட்டான் ஹரப்பான் எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர்கள் 51 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர் என முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன. 



    இந்நிலையில், மலேசியா தேர்தலில் எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
     
    இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், பிரதமர் நஜீப் ரசாக் மற்றும் மகாதிர் முகம்மது இருவரும் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். ஆட்சி அமைக்க 112 உறுப்பினர்களின் பலம் தேவை என்னும் நிலையில் இந்த தேர்தலில் மகாதிர் முகமதுவின் எதிர்க்கட்சி கூட்டணி 115 இடங்களை பிடித்து ஆட்சியை கைப்பற்றுகிறது என தெரிவித்தனர்.

    மலேசியா வரலாற்றில் சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு அங்குள்ள எதிர்க்கட்சியினர் ஆட்சியை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. #MalaysiaElection #Oppositecoalition #Won
    ×