search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலவரம்"

    கொல்கத்தா நகரில் பாஜக தலைவர் அமித் ஷாவின் பிரசார வாகனத்தின் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
    கொல்கத்தா:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் மாதம் 11-ம் தேதி தொடங்கி ஆறுகட்டங்களாக நடந்து முடிந்த தேர்தலில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களிடையே கடுமையான மோதல்கள் நடந்தன.
     
    பிரதமர் மோடியும் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி பானர்ஜியும் காரசாரமாக ஒருவரையொருவர் தாக்கி பேசி வருகின்றனர்.

    இந்நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்துக்காக ஜாதவ்பூர் பகுதியில் பாஜக தலைவர் அமித் ஷாவின் மிக பிரமாண்டமான பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பேரணிக்கு அனுமதி அளிக்க போலீசார் மறுத்து விட்டனர். இந்த பேரணியில் பங்கேற்பதற்காக அமித் ஷா வரும் ஹெலிகாப்டர் தரையிறங்கவும் அனுமதி மறுக்கப்பட்டதால் அம்மாநில பாஜகவினர் கொதிப்படைந்துள்ளனர்.

    இந்த பேரணி ரத்தான நிலையில் ஜாய்நகர் பகுதியில் நடைபெற்ற மற்றொரு பிரசார கூட்டத்தில் நேற்று மம்தா பானர்ஜியை அமித் ஷா கடுமையாக தாக்கி பேசினார்.

    ‘இன்று இங்கு நான் 3 பிரசார கூட்டங்களில் பேச இருந்தேன். மம்தாவின் மருமகன் போட்டியிடும் தொகுதிக்கு நான் போனால் அவர் தோற்பது உறுதி என்பதால் அங்கு என்னுடைய நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனது பிரசாரத்திற்கு மட்டும்தான் மம்தா தடை விதிக்க முடியும். ஆனால், பாஜகவின் வெற்றியை அவரால் தடுத்து நிறுத்திவிட முடியாது.

    மத்திய அரசு கொண்டுவந்த பல திட்டங்களின் பலன்கள் இங்குள்ள மக்களை வந்து சேராத வகையில் மம்தாவின் அரசு தடைக்கல்லாக நின்று தடுத்து விட்டது. அந்த திட்டங்களின் மூலம் இங்குள்ள மக்களிடையே பிரதமர் மோடி பிரபலமாகி விடக்கூடாது என்ற நோக்கத்தில் மம்தா இந்த திட்டங்களை எல்லாம் எதிர்த்து வருகிறார்.

    இந்த மாநிலத்தில் உள்ள மக்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சொன்னால் அவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். இந்த மேடையில் இருந்து நான் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழங்குகிறேன். நாளை வரை நான் கொல்கத்தாவில் இருப்பேன். முடிந்தால், துணிச்சல் இருந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என்று மம்தாவுக்கு நான் பகிரங்கமாக சவால் விடுகிறேன்’ என அமித் ஷா பேசினார்.

    இந்நிலையில், கொல்கத்தா நகரில் இன்று மாலை நடைபெற்ற பாஜக பேரணியில் அமித் ஷா பங்கேற்றார்.

    கொல்கத்தா பல்கலைக்கழகத்தை கடந்து சுமார் 7 மணியளவில் கல்லூரி சாலைக்குள் பேரணி நுழைந்தபோது அமித் ஷா வந்த பிரசார வாகனத்தின் மீது சில கம்புகள் வீசப்பட்டன. இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.



    பேரணியில் வந்தவர்களுக்கும் வேறொரு தரப்பினருக்கும் இடையில் மோதல் வெடித்தது. சாலையோரத்தில் இருந்த கட் அவுட்டுகள் அடித்து நாசப்படுத்தப்பட்டன. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

    சில இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் நடைபெற்றதால் கொல்கத்தா நகர மக்கள் பீதியடைந்துள்ளனர். பல பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட 15 பேரை உச்ச நீதிமன்றம் விடுவித்தது. #AntiSikhRiots #SupremeCourt
    புதுடெல்லி:

    சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின்போது டெல்லியின் திரிலோக்பூர் பகுதியில் வீடுகளுக்கு தீ வைத்ததாகவும், ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறையில் ஈடுபட்டதாகவும் பலர் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம் 1996ம் ஆண்டு 89 பேரை குற்றவாளிகளாக அறிவித்து, அவர்களுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து அனைவரும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 70 பேரின் தண்டனையை உறுதி செய்து, 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது. மீதமுள்ள 19 பேரில் 16 பேர் மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருந்தபோது மரணம் அடைந்துவிட்டனர். 3 பேர் தலைமறைவாக இருந்ததால், அவர்களின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது.

    இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய 5 ஆண்டு சிறைத்தண்டனையை எதிர்த்து, 15 பேர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 15 பேரையும் இன்று விடுவித்து தீர்ப்பளித்தது.

    குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லாததாலும், சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் நேரடியாக சாட்சியம் அடையாளம் காட்டாததாலும் 15 பேரும் விடுவிக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். #AntiSikhRiots #SupremeCourt
    வங்காளதேசத்தில் பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு இன்று மாலை 4 மணியுடன் முடிந்த நிலையில் தேர்தல்சார்ந்த வன்முறை சம்பவங்களில் 17 பேர் கொல்லப்பட்டனர். #Bangladeshelection #Bangladeshelectionclash #BNPsupporters
    டாக்கா:

    வங்காளதேசம் நாட்டு பாராளுமன்ற தேர்தல் இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது.  பாராளுமன்றத்தில் மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 299 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலில் 1,848 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.   

    அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்க 40,183 மையங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவில் பெண்கள் உள்பட பலர் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர்.  பிரதமர் ஷேக் ஹசீனா டாக்கா சிட்டி கல்லூரியில் இன்று காலை முதல்நபராக நின்று வாக்களித்தார். 

    தேர்தலுக்கு முன்னர் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்ததால் அசம்பாவித சம்பவங்களை தடுக்க ராணுவ வீரர்கள், துணை ராணுவ படையினர் உள்ளிட்ட 6 லட்சத்திற்கும் கூடுதலான வீரர்கள் நாடு முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

    எனினும், ஷேக் ஹசீனா தலைமையிலான ஆளும் அவாமி லீக் கட்சி மற்றும் ஊழல் வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்துவரும் கலிதா ஜியா தலைமையிலான வங்காளதேச தேசியவாத கட்சி (பி.என்.பி.) ஆதரவாளர்களிடையே நாட்டின் சில பகுதிகளில் வன்முறையும் மோதலும் ஏற்பட்டது. 

    இந்த மோதல்களில்  இன்று மாலை நிலவரப்படி 17 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். வன்முறை வெடித்த பகுதிகளுக்கு கூடுதலாக போலீசாரும் ராணுவத்தினரும் அனுப்பி வைக்கப்பட்டனர். காயமடைந்த சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது. 

    இந்த வன்முறைகள் தொடர்பான செய்திகள் பிறபகுதிகளுக்கு பரவாத வகையில் கைபேசி இன்டர்நெட்  சேவைகள் நாடு முழுவதும் முடக்கப்பட்டது. ஒரு தனியார் தொலைக்காட்சி சேவையும் இடைமறித்து தடை செய்யப்பட்டது.

    இந்நிலையில், இன்று மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்தது. வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்னும் 24 மணி நேரத்தில் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #17killed #Bangladesh #Bangladeshelection #Bangladeshelectionclash #AwamiLeague #BNPsupporters
    ராமர் கோவில் பிரச்சினையில் கலவரத்தை ஏற்படுத்த மத்திய அரசு சதி செய்வதாக மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ்தாக்கரே கூறியுள்ளார். #RamTemple #RajThackeray #Riot #BJP
    மும்பை:

    மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ்தாக்கரே மும்பையில் நடந்த கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியதாவது:-

    எனக்கு டெல்லியில் இருந்து ஒரு போன் அழைப்பு வந்தது. அயோத்தி ராமர் கோவில் பிரச்சினையில் கலவரத்தை ஏற்படுத்த மத்திய அரசு சதி செய்வதாக போனில் பேசியவர் என்னிடம் தெரிவித்தார். மஜ்லிஸ் என்ற இஸ்லாமிய கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி துணையுடன் இந்த வன் முறையை ஏற்படுத்த திட்டம் தீட்டப்பட்டு உள்ளது.

    இதை நான் சாதாரணமாக எடுத்து கொள்ளவில்லை. மிகவும் தீவிரமான பிரச்சினையாக கருதுகிறேன். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட கடந்த 4½ ஆண்டு காலத்தில் மத்திய அரசு எந்த ஒரு உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது அவர்களுக்கு மதகலவரத்தை தூண்டுவதை தவிர வேறு வழியில்லை.

    ராமர்கோவில் கட்ட நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு கோவில் கட்ட வேண்டும் என்று நான் வலியுறுத்தவில்லை. தேர்தலுக்கு பிறகு கோவில் கட்டுவதில் எந்த பிரச்சினையும் இருக்காது. #RamTemple #RajThackeray #Riot #BJP

    சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் 88 பேரின் 5 ஆண்டுகால சிறை தண்டனையை உறுதி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்திரவிட்டுள்ளது. #DelhiHighCourt #AntiSikhRiot
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந்தேதி அவரது சீக்கிய பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதனை தொடர்ந்து நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது.

    டெல்லியின் கிழக்கு பகுதியில் உள்ள திரிலோக்புரியில் நடந்த கலவரத்தில் 95 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 100 வீடுகளுக்கு தீவைக்கப்பட்டன.

    இது தொடர்பாக 1984-ம் ஆண்டு நவம்பர் 2-ந்தேதி 107 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 88 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து 1996-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ந்தேதி செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

    இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி 88 பேரும் டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீது 22 ஆண்டு காலமாக விசாரணை நடந்து வந்தது.

    இந்த நிலையில் டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.கே.குப்தா செசன்ஸ் கோர்ட்டு அளித்த தீர்ப்பை உறுதி செய்து நேற்று உத்தரவிட்டார். இதன் மூலம் 88 பேரின் 5 ஆண்டுகால சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது.

    எனினும் குற்றவாளிகளில் பலர் விசாரணை காலத்திலேயே இறந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.#DelhiHighCourt #AntiSikhRiot 
    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது சீக்கியர்களுக்கு எதிராக வெடித்த கலவரம் தொடர்பான வழக்கில் முதல்முறையாக இன்று ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. #antiSikhriotscase
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது சீக்கியர்களுக்கு எதிராக வெடித்த கலவரம் தொடர்பான வழக்கில் முதல்முறையாக இன்று ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, கடந்த 31-10-1984-ம் அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. இதில் 2800 சீக்கியர்கள் பலியாகினர். டெல்லியில் மட்டும் 2100 சீக்கியர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.

    இந்த கலவரம் தொடர்பாக டெல்லி கோர்ட்டில் நடந்துவந்த வழக்கு விசாரணையில் முதல்முறையாக ஒருவருக்கு மரண தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

    டெல்லியில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இருவரை உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் டெல்லி போலீசார் போதிய ஆதாரங்கள் இல்லை என வழக்கை முன்னர் மூடி விட்டனர். எனினும், சிறப்பு புலனாய்வு படையினர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது.



    இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த டெல்லி கூடுதல் அமர்வு நீதிபதி அஜய் பான்டே, குற்றவாளி யஷ்பால் சிங் என்பவருக்கு மரண தண்டனையும், அவருக்கு உடந்தையாக இருந்த ஓய்வுபெற்ற போஸ்ட் மாஸ்டர் நரேஷ் ஷெராவத் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்துள்ளார். இருவருக்கும் தலா 35 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

    இந்த தீர்ப்புக்கு டெல்லியில் உள்ள பல்வேறு சீக்கிய அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    இந்த வன்முறை தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் நடைபெற்றுவந்த 241 வழக்குகளும் முன்னர் முடித்து வைக்கப்பட்டன.

    இவற்றில் 186 வழக்குகள் உரிய விசாரணை நடத்தாமலேயே முடித்து வைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின்கீழ், இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்பிப்பதற்காக கண்காணிப்பு குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட் நியமித்தது.

    இந்த குழு சமர்ப்பித்த அறிக்கையை இன்று ஆய்வு செய்த சுப்ரீம் கோர்ட் மேற்படி 186 வழக்குகளையும் மீண்டும் விசாரிக்க தீர்மானித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #antiSikhriotscase #Delhicourt #firstdeathsentence #deathsentence
    மியான்மரில் நேற்று காலை சிறைக் கைதிகள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. பின்னர் அது கலவரமாக மாறியதால் சிறையை உடைத்து 41 கைதிகள் தப்பினர். #myanmarjailbreak

    யங்கூன்:

    மியான்மரில் ஹபா-அன் என்ற இடத்தில் சிறைச் சாலை உள்ளது. அங்கு ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை அங்கு அடைக்கப்பட்டிருந்த சிறைக் கைதிகள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. பின்னர் அது கலவரமாக மாறியது.

    இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. அதை பயன்படுத்தி கொண்ட கைதிகள் சிறை வளாகத்தை உடைத்துக் கொண்டு வெளியேறினர். அப்போது அவர்களை தடுத்த சிறை அதிகாரியை பயங்கரமாக தாக்கினர். அதில் அவர் காயம் அடைந்தார்.

    பின்னர் கிழக்கு கரோன் மாகாணத்தில் இருந்து சிறைக்கு வந்த லாரியை மடக்கி அதில் ஏறி 41 கைதிகள் தப்பினர். அதையடுத்து கைதிகளை தேடும் பணி நடந்தது.

    அவர்களில் 3 பேர் மட்டுமே பிடிபட்டுள்ளனர். எஞ்சிய கைதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பக்கத்து கிராமங்களில் புதிய நபர்களின் நடமாட்டம் காணப்பட்டதால் தகவல் தரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. #myanmarjailbreak

    வேறு மாநிலங்களில் இருந்து வந்து தமிழகத்தில் கலவரம் ஏற்படுத்த தீவிரவாதிகள் சதி செய்துள்ளதாக பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். #PonRadhakrishnan
    நாகர்கோவில்:

    தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாகவும், அவர்களை ஒடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

    நாகர்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டரங்கம் முன்பு மத்திய அரசின் 4 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவற்கு தடையாக இருப்பது அரசியல் கட்சியினர் அல்ல. வன்முறை, கலவரம் போன்றவற்றை உருவாக்க வேண்டும், அதன்மூலம் திட்டத்தை தடுக்க வேண்டும் என செயல்பட்டு வருபவர்களைத்தான் நான் எதிர்க்கிறேன்.

    ஏற்கனவே தமிழகத்தில் பயங்கரவாதிகள் பயிற்சி முகாம்கள் அமைத்து செயல்படுவதாக நான் கூறி வந்தேன். இதுதொடர்பாக தமிழக அரசை பலமுறை எச்சரித்தும் தீவிரவாதத்தை தடுக்க அரசு தவறி விட்டது. இதனால் தீவிரவாதிகளின் செயல்பாடு தற்போது அதிகரித்து வருகிறது.

    மீத்தேன் திட்டம், நியூட்ரின் திட்டம், கெய்ல் எரிவாயு திட்டம், ஸ்டெர்லைட் ஆலை ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தில் கூட பயங்கரவாதிகள் ஊடுருவி தான் பிரச்சினை ஏற்படுத்தி உள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் முன்பே அதற்கு எதிராக நான் 5 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தேன். அப்போது என்னை வலுக்கட்டாயமாக போலீசார் அப்புறப்படுத்தினர். தற்போது ஸ்டெர்லைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த கலவரத்தின் பின்னணியில் பயங்கரவாதிகள் தொடர்பு இருப்பதாக போலீசார் கருதுகிறார்கள்.

    எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போது தமிழகத்தில் நக்சலைட்டுகளை ஒழிக்க போலீஸ் அதிகாரி தேவாரத்துக்கு முழு அதிகாரம் கொடுத்தார். அதன் விளைவாக நக்சலைட்டுகள் ஒழிக்கப்பட்டனர். இங்கிருந்து ஓடி ஆந்திரா மற்றும் மற்ற மாநிலங்களுக்கு சென்றனர்.

    ஆனால் இன்று அந்த நிலை வேறு. வேறு மாநிலங்களில் இருந்து நக்சலைட்டுகள் தமிழகத்துக்குள் ஊடுருவி வருகிறார்கள். அவர்கள் தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த சதி செய்துள்ளனர். தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் நிலவுவதால் அதை பயன்படுத்தி இளைஞர்களை தீவிரவாதிகள் மூளைச்சலவை செய்கிறார்கள். தீவிரவாதிகள் விவகாரத்தில் வேடிக்கை பார்க்காமல் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.



    விவசாயத்தை அழிப்பது மத்திய அரசின் இலக்கல்ல. ஏனெனில், எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.11 லட்சம் கோடியை விவசாயிகளுக்கு வங்கி கடனாக மத்திய அரசு வழங்கியுள்ளது. மேலும், விவசாயிகளுக்கான இழப்பீடு தொகையையும் பலமடங்கு உயர்த்தி உள்ளது. விவசாயிகளை உயர்த்தவேண்டும் என்றால் அவர்களின் உற்பத்தி பொருளை சந்தைப்படுத்த வேண்டும். அதற்கான வழியை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும். அதை மனதில் கொண்டே மத்திய அரசு திட்டங்களை வகுத்து செயல்படுத்துகிறது. 150 ஆண்டு கால காவிரி பிரச்சினையில் நிரந்தர தீர்வு தந்தது பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசுதான்.

    இதுதவிர ஆண்டுக்கு 3 ஆயிரம் டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலக்கும் கோதாவரி ஆற்றுநீரை தமிழகத்துக்கு கொண்டுவரவும் திட்டம் வகுத்துள்ளது. இதற்கான கூட்டம் ஆந்திர மாநிலத்தில் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திரமோடி, தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, வீணாக கடலில் கலக்கும் கோதாவரி ஆற்று நீரை தமிழகத்துக்கு தரவேண்டும் என வலியுறுத்தினார்.

    இந்த கூட்டத்தில், அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறும்போது ‘தமிழகத்துக்கு தண்ணீர் தருவதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை‘ என்றே கூறினார். இதில் இருந்தே தமிழக விவசாயிகளின் மீது மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளதை அறிந்துகொள்ளமுடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் சத்துணவு முட்டை வினியோகத்தில் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாக பத்திரிகையாளர்கள் என்னிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு நான் பதிலளித்தபோது ‘முட்டை வினியோக ஊழல் தொடர்பாக தகுந்த விசாரணை நடத்த வேண்டும்‘ என்று கூறினேன்.

    ‘தமிழக மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்‘ என்பதைத்தான் ‘மொட்டை அடிக்கப்படுகிறார்கள்‘ என்றேன். எனவே நான் பேசியதன் கருத்தை புரிந்துகொண்டு அமைச்சர் ஜெயக்குமார் பேச வேண்டும். தமிழகம் ஊழல் மயமாக மாறிவிட்டது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஊழலில் இருந்து நாம் விடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PonRadhakrishnan
    கலவரத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக போலீசாருக்கான ஒத்திகை நிகழ்ச்சி விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று காலை விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில், கலவரத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் போலீசார்களில் ஒரு தரப்பினர் சாதாரண உடையில் கலவரக்காரர்கள்போல் செயல்பட்டு கல்வீசியும், உருட்டுக்கட்டைகளை தூக்கி வீசியும் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட்டனர்.

    இதையறிந்ததும் மற்றொரு தரப்பு போலீசார் இன்ஸ்பெக்டர் நெடுஞ்செழியன் தலைமையில் விரைந்து வந்து கலவர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இவர்கள் முதல்கட்டமாக கலவரத்தை தடுக்கும் வகையில் ஒலிப்பெருக்கி மூலம், கலவரக்காரர்களிடம் கும்பலாக கூடுவது சட்டவிரோதமானது, எனவே உடனடியாக கலைந்து செல்லுமாறு எச்சரிக்கை செய்தனர்.

    இதையடுத்து போலீசார், உயர் அதிகாரியின் உத்தரவை பெற்று அடுத்தகட்டமாக கலவரக்காரர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்தும், பின்னர் வஜ்ரா வாகனத்தை வரவழைத்து அதன் மூலம் கலவரக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து போலீசாரை தாக்கும் வகையில் வருபவர்களை எப்படி தடுக்க வேண்டும் என்பதை விளக்கும் வகையில், போலீசார் தலைக்கவசம், கவச உடை அணிந்தபடி தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். பின்னர் தடியடி நடத்துவது, துப்பாக்கி சூடு நடத்துவது போன்றும் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

    இவ்வாறு கலவர தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் போலீசார் தத்ரூபமாக ஈடுபட்டனர். இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பார்வையிட்டு, கலவரம் நடைபெறும் இடங்களில் போலீசார் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பற்றி, அறிவுரைகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியின்போது மதுவிலக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முகிலன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சங்கர், வீமராஜ், திருமால், இளங்கோவன், சரவணன், ராஜேந்திரன், முத்துமாணிக்கம் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். 
    ஹைதி நாட்டில் பெட்ரோல் விலையை எதிர்த்து சாலையில் டயர்களை கொளுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் விலை உயர்வு வாபஸ் பெறுவதாக அரசு அறிவித்தது. #Haiti
    போர்ட்-அயு-பிரின்ஸ்:

    அமெரிக்கா அருகே அட்லாண்டிக் கடலில் ஹைதி என்ற தீவு நாடு உள்ளது. நேற்று முன்தினம் அங்கு பெட்ரோல், டீசல் மற்றும் மண்எண்ணெய் விலை உயர்த்தப்பட்டது.

    அந்த அறிவிப்பு வெளியானதும் மக்களிடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் அனைவரும் தலைநகர் போர்ட்-அயு-பிரின்ஸ் நகர வீதியில் திரண்டனர்.

    பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரோடுகளில் டயர்கள் மற்றும் மரக் கட்டைகளை போட்டனர். கார்கள் மற்றும் வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. வர்த்தக நிறுவனங்கள் மற்றும் ஓட்டல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் அரசுக்கு எதிராக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


    இதனால் ஹைதி முழுவதும் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. இதையடுத்து அமெரிக்கா போர்ட்-அயு- பிரின்ஸ் நகருக்கான தனது விமான சேவையை ரத்து செய்தது. அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவித்தது. அதற்காக பயணிகளிடம் மன்னிப்பு கேட்டது.

    ஹைதியில் தங்கியிருக்கும் அமெரிக்கர்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

    நிலைமை மிகவும் மோசம் அடைந்ததை தொடர்ந்து மக்கள் போராட்டத்துக்கு அரசு பணிந்தது. பெட்ரோல், டீசல் மற்றும் மண்எண்ணெய் விலை உயர்வை வாபஸ் பெற்றது.

    அதற்கான அறிவிப்பை அதிபர் ஜோவெனல் மோசி டி.வி.யில் அறிவித்தார். அதை தொடர்ந்து போராட்டம் கட்டுக்குள் அடங்கியது. #Haiti
    மத்திய நைஜீரியாவில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் 86 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர். #Nigeria #Violence
    ஜோஸ்:

    நைஜீரியாவின் மத்திய பகுதியில் உள்ள பிளாட்டோ மாகாணத்தின் பரிகின் லாடி பகுதியில் இரு இனக் குழுக்களுக்கு இடையில் நேற்று மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

    அப்போது ஏற்பட்ட கலவரத்தில் சிக்கி 86 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். 50-க்கு மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டுள்ளது என முதல் கட்டமாக தகவல் வெளியாகியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    நைஜீரியாவில் நிலப் பிரச்னை தொடர்பாக பல்வேறு இனக் குழுக்களுக்கு இடையில் மோதல்கள் நடப்பது வழக்கம். கடந்த 2009-ம் ஆண்டில் இதுபோன்று நடைபெற்ற மோதலில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. #Nigeria #Violence
    பசுமை வழி சாலை திட்டம் மூலம் சேலத்தில் கலவரம் ஏற்படுத்த முயற்சிப்பதாக பாராதிராஜா, வைகோ, திருமாவளவன், சீமான் மீது டி.ஜி.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    சேலத்தை சேர்ந்த தேசிய மக்கள் இயக்கத்தின் சட்ட ஆலோசகர் வக்கீல் மணிகண்டன் போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனை சந்தித்து இன்று புகார் மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    சேலத்தில் வசித்து வரும் வடநாட்டை சேர்ந்த பீயூஸ் மனுஷ் என்ற நபர் பசுமை வழி சாலை திட்டத்தை சீர்குலைக்கவும், சேலம் தர்மபுரி திருவண்ணாமலை ஆகிய வடமாவட்டங்களில் கலவரத்தை ஏற்படுத்தவும் முயற்சிக்கிறார்.

    இவர் கடந்த மாதம் நடிகர் மன்சூர் அலிகானை சேலத்திற்கு வரவழைத்து ‘‘சேலம்-சென்னை பசுமை வழி சாலை போட நிலம் எடுக்க வரும் அரசாங்க ஊழியர்களின் கையை வெட்டுவேன்’’ என பேட்டி கொடுக்க செய்து வன்முறையை தூண்டி உள்ளார்.

    சீமான், வேல்முருகன், திருமாவளவன், வைகோ, இயக்குநர்கள் அமீர், கவுதமன், பாரதிராஜா, வெற்றிமாறன், சுப.உதயகுமார், திருமுருகன் காந்தி, மன்சூர் அலிகான் மற்றும் பூலோக நண்பர்கள், மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர்கள் அமைப்பு ஆகியோரை சேலத்திற்கு அழைத்து வந்து சேலம் மக்களிடம் வன்முறையை தூண்டும் விதமாக கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

    எனவே இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் உடனடியாக கைது செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவர்கள் சேலம் தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் நுழைய உடனடியாக தடைவிதித்து ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்றவற்றில் கலந்து கொள்ள தடை விதிக்குமாறும் வேண்டுகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×