search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 106582"

    11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் மொழிப்பாடங்களுக்கு இனி 2 தனித்தனி தேர்வுகள் நடத்தப்படாது என்றும் ஒரே தேர்வாக நடத்தப்படும் எனவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. #TamilNaduGovt
    சென்னை:

    தமிழகத்தில் நீட் தேர்வு அறிவிக்கப்பட்ட பின்னர் கல்வி முறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு மாநில கல்வி முறை மேம்படுத்தப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து இருந்தார்.

    அதன்படி, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம், 2-ம் இடம் போன்ற பாகுபாடுகள் இருக்க கூடாது உத்தரவிட்டார். மேலும், மாநில பாடத்திட்டத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மொழிப்பாடங்களில் நடத்தப்படும் 2 தனித்தனி தேர்வுகள் இனி ஒரே தேர்வாக நடத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்து, அதற்கான பணியைத் தொடங்கியது. மாணவர்களின் சுமையையும், மன உளைச்சலையும் குறைக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.



    அதன்படி இன்று இதுதொடபான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இனி மொழிப்பாடங்களில் ஒரே தேர்வு மட்டுமே நடத்தப்படும் என்றும், இந்த தேர்வு முறை இந்த கல்வியாண்டில் இருந்தே பின்பற்றப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மொழிப்பாடங்களுக்காக மட்டும் 4 தேர்வுகள் (தமிழ்-2, ஆங்கிலம்-2) எழுதி வந்த நிலையில், இனி 2 தேர்வுகள் மட்டுமே எழுதவேண்டும்.

    அரசின் இந்த அறிவிப்புக்கு கல்வியாளர்கள் பலர் வரவேற்பு அளித்து வருகின்றனர். அதே சமயம் மாணவர்களுக்கு மொழிப்பாடம் மற்றும் இலக்கணம் மீதான ஆர்வம் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். #TamilNaduGovt
    உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், ஜெர்மனியில் நடைபெறும் ஜூனியர் உலக கோப்பை போட்டியில் பங்கேற்க பிரியாசிங்குக்கு ரூ.4½ லட்சம் நிதி உதவி வழங்க உத்தரவிட்டார். #PavaShooter #PriyaSingh
    லக்னோ:

    ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணிக்கு உத்தரபிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த 19 வயதான பிரியா சிங் தேர்வு பெற்றுள்ளார். ஏழை தொழிலாளியின் மகளான அவருக்கு ஜெர்மனி செல்வதற்கு போதிய பணம் இல்லை. இதனால் போட்டியில் பங்கேற்க தனக்கு உதவி செய்யும்படி உள்ளூர் எம்.எம்.ஏ. முதல், முதல்-மந்திரி மற்றும் பிரதமர் வரை பிரியாசிங் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

    இந்த கோரிக்கைக்கு உடனடியாக பதில் கிடைக்காததால், ‘தனக்கு சொந்தமான மாடுகளை விற்றும், நண்பர்களிடம் கடன் வாங்கியும் தனது மகளை நிச்சயம் ஜெர்மனி போட்டிக்கு அனுப்பி வைப்பேன்’ என்று பிரியாசிங்கின் தந்தை பிரிஜ்பால் சிங் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையின் ஏழ்மை நிலையை அறிந்த உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், ஜெர்மனியில் நடைபெறும் ஜூனியர் உலக கோப்பை போட்டியில் பங்கேற்க பிரியாசிங்குக்கு ரூ.4½ லட்சம் நிதி உதவியை மாநில அரசு சார்பில் உடனடியாக வழங்க உத்தரவிட்டார். #PavaShooter #PriyaSingh  #tamilnews
    சவுதி அரேபியா நாட்டின் மந்திரிசபையை விரிவாக்கம் செய்து மன்னர் சல்மான் இன்று உத்தரவிட்டுள்ளார். #Saudiking #Saudinewministers
    ரியாத்: 

    சவுதி அரேபியா நாட்டில் பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள மன்னர் சல்மான் தீர்மானித்தார். அதேபோல், பழமைவாதத்தில் இருந்து சற்று விலகி, முற்போக்கு பாதையில் நாட்டை முன்னெடுத்து செல்லவும் அரசு திட்டமிட்டுள்ளது.

    இதைதொடர்ந்து, சினிமா திரையரங்கங்கள், இசை நிகழ்ச்சிகள் நடத்தும் கலையரங்கங்கள் உருவாக தொடங்கியுள்ளன. எனவே, இவற்றை எல்லாம் கட்டுப்படுத்தி, நிர்வகிக்க கலாசாரத்துறை என்ற அமைப்பு  புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.



    இந்த கலாசாரத்துறையின் மந்திரியாக இளவரசர் பதெர் பின் அப்துல்லா பின் முஹம்மத் பின் முஹம்மது பின் பர்ஹான் அல் சவுத் நியமிக்கப்பட்டுள்ளார்.

    அந்நாட்டின் தொழிலாளர் நலத்துறை மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை மந்திரி அலி பின் நாசெர் அல்-காபிஸ் நீக்கப்பட்டுள்ளார். அந்த பதவியில் அஹமெத் பின் சுலெய்மான் அல்-ராஹ்ஜி என்பவரை நியமித்து மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளதாக சவுதி மன்னர் மாளிகை இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Saudiking #Saudinewministers

    திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் யானை தாக்கி இறந்த பாகன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை: 

    திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மசினி என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை மண்ணச்சநல்லூரை சேர்ந்த பாகன் கஜேந்திரன் என்பவர் பராமரித்து வந்தார்.

    கடந்த 25-ம் தேதியன்று கோவில் யானை மசினி தாக்கியதில் பாகன் கஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்நிலையில், சமயபுரம் கோவில் யானை தாக்கி உயிரிழந்த பாகன் குடும்பத்துக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி ரூ. 5 லட்சம் நிதியுதவி அளித்து உத்தரவிட்டுள்ளார்.  

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமயபுரம் கோவில் யானை மசினி தாக்கியதில் உயிரிழந்த பாகன் கஜேந்திரன் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும், யானை தாக்கி உயிரிழந்த பாகன் கஜேந்திரனின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார். #Tamilnews
    புத்தகத்தில் வெளியிட்ட சர்ச்சை கருத்துக்கு உளவுத்துறை முன்னாள் தலைவர் பாகிஸ்தானில் இருந்து வெளியேற ராணுவம் தடை விதித்துள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் உளவுத் துறையான ‘ஐ.எஸ்.ஐ’ அமைப்பின் முன்னாள் தலைவர் லெப்டினெட் ஜெனரல் ஆசாத் துரானி. இவர் 1990 முதல் 1992-ம் ஆண்டுவரை இப்பதவி வகித்தார்

    கடந்த வாரம் ‘தி ஸ்பை கிரானிகல்ஸ்’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. ஆசாத் துரானி இந்திய உளவு அமைப்பான ‘ரா’ வின் முன்னாள் தலைவருடன் இணைந்து இப்புத்தகத்தை எழுதியுள்ளார். இவர் இணை ஆசிரியராக இருக்கிறார். அப்புத்தகத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவில் ஏற்படும் பிரச்சினைகளில் பாகிஸ்தானின் பங்கு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    மேலும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் மறைந்து இருந்த இடம் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு தெரியும். பின்னர் அவர்கள் அமெரிக்காவிடம் அவரை ஒப்படைத்தனர் என்ற கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    இது சர்ச்சையை ஏற்படுத்துவதாகவும், உளவுத் துறையின் கண்ணியத்தை பாழபடுத்துவதாகவும் ராணுவ தலைமையகத்தில் இருந்து துரானிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவரது நடத்தை விதிமுறையில் இருந்து தவறியதாக குற்றம் சாட்டி அவர் பாகிஸ்தானில் இருந்து வெளியேற தடை விதித்துள்ளது. #tamilnews

    துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவு பிறப்பிக்க துணை தாசில்தார்களுக்கு அதிகாரம் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறி உள்ளார்.
    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடந்த 22.5.2018 அன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய பொதுமக்கள், மீனவர்கள், விவசாயிகள், வியாபாரிகள் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி வந்தபோது அவர்களிடம் முறையான பேச்சுவார்த்தை எதுவும் நடத்தாமல் காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். வரலாற்றில் இல்லாத அளவுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு 13 பேர் உயிரிழந்து உள்ளதுடன், மேலும் 26 பேர் குண்டு காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் மட்டுமின்றி சில நூறு பேர் தடியடியால் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இத்தகைய அடக்குமுறையினை ஏவிவிட்ட தமிழக ஆட்சியாளர்கள் தொடர்ந்து உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பி வருகின்றனர். அப்பாவி பொது மக்களை தீவிரவாதிகள் எனவும், கொலைகாரர்கள் எனவும் சிருஷ்டிப்பதுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தவர்களது உயிர்களைக் காப்பாற்ற துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இட்டுக்கட்டி செய்தி வெளியிட்டு வந்தனர்.

    இதுவரை துப்பாக்கிசூடு நடத்துவதற்கு உத்தரவிட்டது யார்? என்ற கேள்விக்கு ஒரு வாரமாக பதிலளிக்க மறுத்து வந்த தமிழக அரசும், காவல்துறையும் தற்போது இரண்டு துணை வட்டாட்சியர்கள் உத்தரவின் பேரில் தான் துப்பாக்கி சூடு நடந்ததாக எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.

    கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உள்ள நிலையில் இரண்டு துணை வட்டாட்சியர்கள் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட வேண்டிய நிலைமை ஏன் ஏற்பட்டது? மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேறு எந்த அதிகாரியும் அப்போது பணியில் இல்லையா? 22-ந்தேதி ஊர்வலத்தையொட்டி 144 தடை உத்தரவு போட்டுள்ள நிலையில் அனைத்து அதிகாரிகளும் கூண்டோடு மாவட்ட ஆட்சியர் அலுவலத்தை விட்டு ஏன் வெளியேறினார்கள்?

    துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு உத்தரவிட துணை வட்டாட்சியருக்கு அதிகாரம் உள்ளதா? அவர்களுக்கு ஜூடிசியல் மேஜிஸ்டிரேட் என்ற அதிகாரமில்லாதபோது துப்பாக்கி சூடு நடத்த அவர்கள் எப்படி உத்தரவிட முடியும்? அவர்கள் உண்மையில் உத்தரவிட்டிருந்தால் இத்தனை நாட்கள் அதை மூடி மறைக்க வேண்டிய அவசியம் என்ன?

    இப்போது தாமதமாக இந்த எப்.ஐ.ஆர் போட வேண்டிய அவசியமென்ன? இத்தனை நாட்கள் இல்லாமல் இந்த நாடகங்களை அரங்கேற்றுவதற்கு தான் துணை முதலமைச்சர் தூத்துக்குடி சென்றாரா? நாளை தமிழக சட்டமன்றம் கூடுவதால் சட்டமன்ற ஆவணங்களில் பதிவேற்றம் செய்ய இந்த நாடகம் அரங்கேற்றப்படுகிறதா? போன்ற எண்ணற்ற கேள்விகள் எழும்புகின்றன.

    வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை பாதுகாப்பதற்காக மத்திய மோடி அரசின் வழி காட்டுதலில் காட்டு மிராண்டித்தனமான அடக்கு முறையை ஏவிவிட்டு பலரை கொன்று விட்டு இதிலிருந்து தப்பித்துக் கொள்ள தமிழக அரசு பல பொய்யான ஆவணங்களை தயார் செய்து வருவது தெளிவாகிறது. இத்தகைய நாடகங்களின் மூலம் உண்மையை மறைத்து குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் தமிழக அரசின் முயற்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

    மேலும், நடந்த கொடூரத்திற்கு பொறுப்பேற்க வேண்டிய தமிழக முதல்-அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் தப்பித்துக் கொள்வதுடன் அப்பாவியாக உள்ள பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்து கைது படலம் தொடர்ந்து கொண்டுள்ளது.

    இக்கொடுமையினை எதிர்த்து அனைவரும் குரல்கொடுக்க முன்வர வேண்டுமெனவும், உயர் நீதிமன்றம் தாமே முன்வந்து தலையிட்டு இவ்வழக்கினை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு விசாரிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலசெயற்குழு வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறது.

    தற்போது ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவினை மே மாதம் 22-ந்தேதிக்கு முன்னால் வெளியிட்டிருந்தால் தூத்துக்குடியில் காவல்துறையின் துப்பாக்கி சூடுக்கு 13 உயிர்கள் பலியாக வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது. மேலும், பலர் குண்டு காயங்களுடன், தடியடி காயங்களும் ஏற்படுவதை தடுத்திருக்க முடியும்.

    ஆலையை மூட வேண்டுமென போராடிய மக்கள் மீது அடக்குமுறையை ஏவி, அப்போராட்டத்தை அடக்கிட அரசு முனைந்தது. ஆனால், தமிழகம் முழுவதும் ஏற்பட்ட கொந்தளிப்புக்கும், மக்களின் எதிர்ப்புக்குரலுக்கும் அரசு பணிய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதன் விளைவே இந்த உத்தரவு.

    தற்போது ஆலையை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டிருந்தாலும், வேதாந்தா நிர்வாகம் மோடி அரசின் செல்வாக்கோடு உச்சநீதி மன்றத்தில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பைப் பெற முயற்சிப்பார்கள். தமிழக அரசு நீதிமன்றத்தில் கோட்டை விட்டு விட்டு மீண்டும் ஆலையை நீதி மன்ற உத்தரவின் மூலம் திறப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாயின் மீண்டும் மக்களது கொந்தளிப்பிற்கு ஆளாக வேண்டிய அவசியம் ஏற்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி டி.கே. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். #ThoothukudiFiring #ThoothukudiIncident #CBCID
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து சில நாட்களாக பதற்றம் நீடித்தநிலையில், தற்போது இயல்பு நிலை திரும்பத் தொடங்கி உள்ளது. துப்பாக்கி சூடு தொடர்பாக தூத்துக்குடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே, பொதுமக்களின் உணர்வுகளுக்கும், கருத்துகளுக்கும் மதிப்பு அளிக்கும் வகையில், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. இது தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல்  வைக்கப்பட்டுள்ளது.



    அதேசமயம் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மற்றும் அதற்கு உத்தரவிட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.  #ThoothukudiFiring #ThoothukudiIncident #CBCID
    எதிர்க்கருத்து கூறுபவர்களை ப்ளாக் செய்யும் வசதி ட்விட்டரில் இருக்கும் நிலையில், டிரம்ப் அப்படி யாரையும் பிளாக் செய்ய கூடாது என அமெரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #Trump
    வாஷிங்டன்:

    ட்விட்டர் எனும் சமூக வலைதளத்தை உலகம் முழுவதும் 300 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ட்விட்டரில் அதிகம் பின்பற்றப்படும் அரசியல் தலைவர்களில் டிரம்ப் முக்கிய இடம் வகிக்கிறார். 50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் டிரம்பை பின்தொடர்ந்து வருகின்றனர்.

    காரசாரமான அரசியல் விமர்சனம், ஊடகங்களை கடுமையாக சாடுவது என தனிப்பட்ட ட்விட்டர் கணக்கில் தொடர்ந்து டிரம்ப் ஆக்டிவாக இருப்பவர். தன்னை கடுமையாக விமர்சிப்பவர்களை பிளாக் செய்வதும் வாடிக்கையான ஒன்றே. இதில், டிரம்பால் பிளாக் செய்யப்பட்ட 7 பேர் கோர்ட்டை நாடினர்.

    டிரம்ப் தங்களை பிளாக் செய்துள்ளதால், அவரது ட்விட்டர் பதிவை எங்களால் படிக்க முடியவில்லை என அவர்கள் அமெரிக்க பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இதுதொடர்பான வழக்கு விசாரணையில், பின்தொடர்பவர்களின் அரசியல் ரீதியான கருத்துக்களின் அடிப்படையில் அவர்கள் தடை செய்யப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த பதிலை ஏற்க மறுத்த நீதிபதி, சமூகவலைதளங்களில் பொதுமக்களின் கருத்து அவர்களின் தனிப்பட்ட உரிமை என்றும், அதனை பிரதமரின் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றம் செய்யக் கூடாது என்றும் தெரிவித்தார்.

    மேலும், டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பின் தொடர்பவர்களை தடை செய்யக்கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு, நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. #Trump
    சமூக வலைத்தளங்களில் வெளியாகும் ஆபாச வீடியோ குறித்து பதில் மனு தாக்கல் செய்யாத யாகூ, முகநூல் வலைத்தளங்களுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Google #Facebook #Fine
    புதுடெல்லி:

    சமூக வலைத்தளங்களில் வெளியாகும் ஆபாச வீடியோ குறித்து ஐதராபாத்தை சேர்ந்த பிரஜாவாலா என்ற தொண்டு நிறுவனம் 2015-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் அப்போதைய தலைமை நீதிபதி எச்.எல்.தத்துவுக்கு 2 வீடியோ ஆதாரங்களுடன் ஒரு கடிதம் எழுதியது. அதில் ஆபாச வீடியோ காட்சிகளை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதன் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.



    இந்த வழக்கு நீதிபதிகள் மதன் பி.லோகுர், யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. முன்னதாக இந்த வழக்கு கடந்த மாதம் 16-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது அனைத்து சமூக வலைத்தளங்களும் தாங்கள் இதுபற்றி எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்த பதிலை அடுத்த விசாரணையின்போது தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். ஆனால் முக்கிய வலைத்தளங்கள் இதுபற்றி எந்த பதில் மனுவையும் நேற்று தாக்கல் செய்யவில்லை.

    இதையடுத்து நீதிபதிகள் அமர்வு சமூக வலைத்தளங்கள் பதில் மனுதாக்கல் செய்யாததை சுட்டிக் காண்பித்து யாகூ, முகநூல் (பேஸ்புக்) இந்தியா, முகநூல் அயர்லாந்து, கூகுள் இந்தியா, கூகுள், மைக்ரோ சாப்ட் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.  #Google #Facebook #Fine 
    18 வயதுக்குட்பட்டோருக்கு புகையிலை பொருட்கள் விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    விருதுநகர்:

    கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் ஆய்வுக்கூட்டம் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டத்தின்கீழ் பதிவு பெற்று அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கீழ் 31 குழந்தைகள் இல்லங்கள் செயல்பட்டு வருகிறது. சுமார் 1,300 குழந்தைகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். மாவட்ட பதிவு பெறாமல் செயல்படும் இல்லங்கள் மற்றும் இதர விடுதிகள் அனைத்தும் இளைஞர் நீதி சட்டம் மற்றும் விடுதிகள் சட்டத்தின்கீழ் பதிவு பெற்று செயல்படவேண்டும். குழந்தைகள் இல்லங்களில் சேர்க்கை மற்றும் நீக்கம் செய்யும்போது குழந்தைகள் நலக்குழுவின் ஆணை உரிய படிவத்தில் பெறவேண்டும்.

    குழந்தைகள் இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகளிடம் சட்ட விதிகளுக்கு முரணாக எவ்வித கட்டணங்களும் வசூலிக்கக்கூடாது. வெளி மாநில, மாவட்ட குழந்தைகளை சேர்க்கும்போது சம்பந்தப்பட்ட மாநில, மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் ஆணை பெற வேண்டும். குழந்தைகள் இல்லங்களை ஆய்வு மேற்கொள்ள அமைக்கப்பட்ட மாவட்ட ஆய்வுக்குழுவினர் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு, குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி, இல்லங்கள் சிறப்பாக செயல்பட வழிவகை செய்ய வேண்டும்.

    மேலும், மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் இல்லாத நிலையினை எய்திட தொடர் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு மீட்கும் குழந்தைகளை குழந்தைகள் நலக்குழு முன் முன்னிலைப்படுத்த வேண்டும். பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களால் கைவிடப்படும் ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாக்க அனைத்து குழந்தைகள் இல்லங்கள், மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தை தொட்டில் வைக்க வேண்டும்.

    பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுக்கான ஆலோசனைப்பெட்டி வைக்க வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மதுபானம், புகையிலை பொருட்கள், போதை தரும் பொருட்கள் வழங்குவதோ, விற்பனை செய்யவோ கூடாது. அந்த செயலில் ஈடுபடுவோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்தகுமார், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கணேசன், நன்னடத்தை அலுவலர் முருகன், சமூக நல அலுவலர் ராஜம், குழந்தைகள் நலக்குழு தலைவர் ஆரோக்கியசாமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் தொண்டு நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
    இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக டி.டி.வி.தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை 21-ந் தேதிக்கு டெல்லி ஐகோர்ட்டு ஒத்திவைத்தது. #DoubleLeafSymbol #DelhiHighCourt
    புதுடெல்லி:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க. அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.



    இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதம் தொடங்கியது. அவர்களின் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதிட்டார். அவர் தனது வாதத்தின் போது கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் முறையாக பொதுக்குழு கூட்டப்பட்டு பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவின் அடிப்படையில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டது. இதனையடுத்து பொதுக்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் உருவாக்கப்பட்டன.

    குறிப்பாக 2128 பொதுக்குழு உறுப்பினர்களில் 1741 பேர் எங்களுக்கு ஆதரவாக வாக்களித்தனர். சுமார் 10 சதவிகிதம் மட்டுமே எதிராக வாக்களித்துள்ளனர். 90 சதவீதத்துக்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்களின் பிரமாண பத்திரங்கள் தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்யப்பட்டது.

    எனவே, காரண காரியங்களை ஆராய்ந்து பெரும்பான்மை அடிப்படையிலேயே தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை எங்கள் அணிக்கு ஒதுக்கி உள்ளது.

    தேர்தல் ஆணையத்தில் இந்த வழக்கு நடைபெற்ற போது சசிகலா தரப்பினர், ‘பெரும்பான்மை அடிப்படையிலேயே இந்த வழக்கை அணுக வேண்டும்’ என்று கோரிக்கை வைத்துவிட்டு, தற்போது அதனை எதிர்த்து வாதாடுவது எந்த வகையில் நியாயம்?

    மேலும் தேர்தல் கமிஷனில் பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்டவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்தியிருக்க வேண்டும் என்றும் சசிகலா தரப்பில் தெரிவிக்கின்றனர். ஆனால் 90 சதவிகித பொதுக்குழு உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவாக இருக்கும்போது இதுபோன்ற குறுக்கு விசாரணையால் என்ன பயன் இருக்க முடியும்?

    இவ்வாறு முகுல் ரோத்தகி வாதிட்டார்.

    இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள் வழக்கின் மீதான விசாரணையை 21-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர். 
    1,300 டாஸ்மாக் கடைகளை மூடும் விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. #Tasmac #SupremeCourt #ChennaiHighCourt
    புதுடெல்லி:

    தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் சுமார் 3 ஆயிரம் மதுக்கடைகள் மூடப்பட்டன.

    அதன் பின்னர், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்யப்பட்டு, அடைக்கப்பட்ட மதுக்கடைகளில் பல மீண்டும் திறக்கப்பட்டன. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து வக்கீல்களுக்கான சமூகநீதிப்பேரவையின் தலைவர் கே.பாலு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.



    இதை விசாரித்த ஐகோர்ட்டு ‘தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து, அதுகுறித்த முறையான அறிவிப்பு வெளியிடாமல், அந்த சாலைகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு இருந்தால், அப்படிப்பட்ட கடைகளை உடனடியாக மூட வேண்டும்’ என கடந்த 28-ந்தேதி உத்தரவிட்டது. வகைமாற்றம் செய்யாமல் புதிதாக டாஸ்மாக் கடைகளை திறக்கவும் தடை விதித்த நீதிபதிகள், நட்சத்திர ஓட்டல்களில் உள்ள மதுபான விடுதிகளுக்கு எந்த தடையும் இல்லை என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.

    இதனால் 1,300 மதுக்கடைகள் மூடும் நிலை ஏற்பட்டது. எனவே சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுவில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுக்கடைகள் திடீரென்று மூடப்படுவதால் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்த தமிழக அரசு, மதுவால் ஏற்படும் சாலை விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியிருந்தது.

    இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் மூத்த வக்கீல்கள் முகுல் ரோத்தகி, யோகேஷ் கன்னா ஆகியோர் ஆஜரானார்கள்.

    அவர்கள் தங்கள் வாதத்தில், ‘டாஸ்மாக் கடைகள் மூடும் விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு வழங்கி உள்ள தீர்ப்பு சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக அமைந்துள்ளது. சண்டிகர் தொடர்பான வழக்கின் தீர்ப்புக்கு தமிழக அரசு தாக்கல் செய்த விளக்கம் கோரும் மனுவின் மீது சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில்தான் நகராட்சி பகுதிகளில் புதிதாக மதுக்கடைகள் திறக்கப்பட்டன. எனவே சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறினர்.

    ஆனால் மனுதாரர் கே.பாலு மற்றும் அவரது சார்பில் ஆஜரான வக்கீல் தனஞ்செயன் தங்கள் வாதத்தில், ‘சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் நகராட்சி பகுதிகளில் செல்லும் நெடுஞ்சாலைகளுக்கு முழு விதிவிலக்கு அளிக்கவில்லை. ஆனால் தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தவறாக புரிந்து கொண்டு, இரவோடு இரவாக 1,300 மதுக்கடைகளை நகராட்சி பகுதிகளில் திறந்துள்ளது’ என்று குற்றம் சாட்டினர்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தங்கள் உத்தரவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது எனக்கூறியதுடன், சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது எனவும் உத்தரவு பிறப்பித்தனர்.

    அவர்கள் மேலும் கூறுகையில், ‘நகராட்சி பகுதிகளில் வரும் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் திறப்பது குறித்து கடைவாரியாகத்தான் முடிவெடுத்து இருக்க வேண்டும். ஒரே உத்தரவில் இத்தனை கடைகள் திறந்துள்ளதை அனுமதிக்க முடியாது. எனவே சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய உத்தரவை அடிப்படையாக கொண்டு புதிய உத்தரவை பிறப்பித்து அதை சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டனர்.

    பின்னர் இந்த வழக்கின் விசாரணையை 23-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 
    ×