search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடன்குடி"

    உடன்குடி வட்டார பகுதியில் பனை மரத்தில் புதிய முறையில் ஏறி தொழிலாளர்கள் பதனீர் எடுத்து வருகின்றனர். இதை தொடர்ந்து தற்போது அந்த பகுதியில் கருப்புக்கட்டி உற்பத்தி தொடங்கப்பட்டு உள்ளது.
    உடன்குடி:

    துத்துக்குடி மாவட்டம் உடன்குடி கருப்புக்கட்டி என்றாலே அதற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஊர் பெயரோடு ஊர் ஊராய் பவனி வரும் உடன்குடி கருப்புக்கட்டி உற்பத்தி தற்போது உடன்குடி வட்டார பகுதியில் தொடங்கப்பட்டு உள்ளது. இப்பகுதியில் உள்ள பனை மரத்தில் வளரும் பாளைகளை தொழிலாளர்கள் பக்குவப்படுத்தி கலசம் கட்டி காலையில் பதனீர் இறக்கி, கருப்பு கட்டி காய்ச்சுகின்றனர். மாலையில் பனை ஏறி பாளையை சீவி விடுகின்றனர்.

    தினசரி காலை, மாலை என இருமுறை பனை மரத்தில் ஏறி இறங்க வேண்டும். ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் இந்த தொழில் விறுவிறுப்பாக நடக்கும். பனை மரத்தில் ஏறி இறங்குவதற்கு முன்பு இரு கால்களையும் சேர்த்து நார் போட்டு ஏறுவார்கள். நெஞ்சில் தழும்பு ஏற்படாமல் இருக்க நெஞ்சில் தோல் மாட்டுவார்கள். இந்த முறையில் தினசரி இருமுறை ஏறி இறங்குவதற்கு ஆட்கள் கிடைக்காததால் பனை ஏறும் முறையை தற்போது மாற்றியுள்ளனர்.

    பனை மரத்தில் கீழிருந்து உச்சி வரை தடுப்புகள் வைத்து கயிற்றினால் கட்டுகிறார்கள். இது ஒரு ஏணியை போல அமைந்து விடுகிறது. இதில் மளமளவென ஏறி பதனீர் எடுக்கின்றனர். இப்படி ஏறுவதால் நெஞ்சில் காயம், தழும்புகள் ஏற்படாது.

    இவ்வாறாக பனை ஏறி வரும் தொழிலாளி பெரியபுரத்தை சேர்ந்த முருகராஜ் கூறுகையில், “பனைத்தொழில் ஆண்டுக்கு ஆண்டு அழிவதற்கு முதல் காரணம் பனை ஏறுவதற்கு ஆட்கள் கிடைப்பதில்லை. இதனால் புதிய முறையில் பனை ஏறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய முறையில் பனை ஏறுவதற்கு பலர் தயாராக உள்ளனர்” என்றார்.

    உடன்குடி பகுதியில் தற்போது எந்த கலப்படமும் இல்லாமல் பனை மரத்து பதனீரை வைத்து கருப்புக்கட்டி, பனங்கற்கண்டு, வெள்ளை நிற புட்டு கருப்புக்கட்டி ஆகியவற்றை சிலர் மட்டுமே தயாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    உடன்குடியில் டிராவல்ஸ் அதிபர் வீட்டை உடைத்து நகையை கொள்ளையடித்த கொள்ளையன் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உடன்குடி:

    உடன்குடி சுல்தான்புரத்தை சேர்ந்தவர் பதூருதீன் (வயது 60). இவர் சென்னை மண்ணடியில் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இதற்காக குடும்பத்தினருடன் அங்கு தங்கியுள்ளார். மாதம் ஒரு முறை மட்டும் உடன்குடிக்கு வந்து செல்வார். இந்நிலையில் நேற்று இரவு இவரது வீட்டு மாடி பகுதி கதவை உடைத்து மர்ம நபர் உள்ளே புகுந்துள்ளான்.

    பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 10 பவுன் நகையை கொள்ளையடித்துள்ளான். அப்போது நள்ளிரவில் ஆள் இல்லாத வீட்டில் லைட் எரிவதை பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது ஒரு கொள்ளையன் பொருட்களை திருடி கொண்டிருப்பதை பார்த்து சத்தம் போட்டனர். பின்னர் அவனை பிடிக்க விரட்டி சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த கொள்ளையன் சுவர் ஏறி குறித்து அங்கிருந்து தப்பினான். அப்போது அவனது செருப்புகளை விட்டு சென்றான்.

    இது குறித்து பதூருதீன் சகோதரர் மகன் முகமது புகாரி என்பவர் குலசேகரன்பட்டிணம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் தூத்துக்குடியில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×