search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 107604"

    மதுரையில் பட்டப் பகலில் வீடு புகுந்து நகை கெள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை தனக்கன்குளம் அருகிலுள்ள புளியங்குளம் வி.பி.சிந்தன் தெருவைச் சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ். இவர் நேற்று மதியம் தேவாலயத்திற்கு சென்று விட்டார்.

    அப்போது யாரோ சிலர் அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த நகையை கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.

    தேவாலயத்தில் வழிபாடு முடித்து விட்டு வீடு திரும்பிய ஜெயபிரகாஷ் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதையும், பீரோவில் இருந்த 7 பவுன் நகை கொள்ளை போயிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இது தொடர்பாக ஜெய பிரகாஷ் ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற விவசாயி பலியானார். 115 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #SwineFlu

    மதுரை:

    தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதில் 20-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிகாய்ச்சல் பாதிப்பால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மதுரை மாவட்டம், அழகர்கோவில் அருகில் உள்ள அழகாபுரியைச் சேர்ந்தவர் சாமிராஜ் (வயது 52), விவசாயி. கடந்த வாரம் இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    அவரது ரத்த மாதிரியை பரிசோதனை செய்தபோது சாமிராஜூக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி இருந்தது கண்டறியப்பட்டது.

    அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்காக 24 மணி நேரமும் செயல்படும் தனி பிரிவில் சாமிராஜ்அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    நேற்று மதியம் சாமிராஜின் உடல்நிலை மோசமடைந்தது. பிராண வாயு பொருத்திய நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் நள்ளிரவில் அவர் பரிதாபமாக இறந்தார்.

    பின்னர் சாமிராஜின் உடலை உறவினர்கள் சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றனர். இதன் மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்காக இறந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 15 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதே போன்று டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 100 பேரும் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். #SwineFlu

    மதுரையில் வீட்டின் கதவை உடைத்து நகை-பொருட்களை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    மதுரை:

    மதுரை வண்டியூர் மாந்தோப்பு ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 30). இவரது வீட்டில் நேற்று மின்தடை ஏற்பட்டது. இதனால் வீட்டை பூட்டி விட்டு அதே பகுதியில் உள்ள தனது அண்ணன் வீட்டில் இரவில் தங்கினார்.

    இன்று காலை ஆனந்த் வீட்டுக்கு வந்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த 4 பவுன் நகை மற்றும் வீட்டில் இருந்த வீட்டு உபயோக பொருட்கள் கொள்ளைபோய் இருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து அண்ணா நகர் போலீசில் ஆனந்த் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

    கரிமேடு ரெயில்வே காலனி குடியிருப்பை சேர்ந்தவர் ஜானகிராமன். இவருடைய மனைவி சரஸ்வதி (56). இவர் ஜவுளி கடைக்கு சென்று விட்டு மகனுடன் நேற்று இரவு வீடு திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த 2 பேர் சரஸ்வதி கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையினை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை அருகே ஆசிரியையிடம் நைசாக பேசி 7 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை பெத்தானியாபுரம், தாமரை தெருவைச் சேர்ந்தவர் ஜான் பேரின்ப தாஸ். இவரது மனைவி லைசெம்மாள் (வயது 70). அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    நேற்று காலை இவர் அருகில் உள்ள தேவாலயத்திற்கு சென்று விட்டு மதியம் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

    சின்னசாமிபிள்ளை குறுக்குத்தெருவில் வந்து கொண்டிருந்தபோது அவரை 2 டிப்டாப் ஆசாமிகள் வழிமறித்தனர். இந்தப்பகுதியில் வழிப்பறி நடக்கிறது.

    எனவே நகையை அணிந்து செல்ல வேண்டாம் எனக்கூறி லைசெம்மாளிடம் இருந்த 7 பவுன் நகையை பேப்பரில் மடித்துக் கொடுப்பது போல் நடித்து திருடினர்.

    வீட்டுக்கு சென்ற லைசெம்மாள் பேப்பரை பிரித்து பார்த்தபோது கற்கள் இருந்தது தெரியவந்தது. தன்னை ஏமாற்றி நகையை திருடியதை உணர்ந்த அவர் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை தேடி வருகின்றனர்.

    மதுரையில் பன்றி காய்ச்சலுக்கு 2 பெண்கள் பலியான நிலையில் 30-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். #Swineflu #Denguefever

    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மர்ம காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக ராஜாஜி அரசினர் மருத்துமனையில் தினமும் ஏராளமானோர் சிகிச்சைக்கு வருகின்றனர்.

    இவர்களின் பலர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் சென்றாலும் உள் நோயாளிகளாக 90 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வைரஸ் காய்ச்ச லால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தனி வார்டுகளில் வைத்து சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

    இதற்கிடையே டெங்கு அறிகுறியுடன் 30 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். அவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப் பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 7 பேருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு, அரசு மருத்துவமனை வந்தனர். அவர்களில் பைகாராவைச் சேர்ந்த பெரிய மாயன் மனைவி மீனாட்சி (வயது 49), அனுப்பானடி வீரம்மாள் (70) ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

    தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள புல்லக்காய்பட்டியைச் சேர்ந்த அரசு கால்நடை உதவியாளர் பெருமாள் (42), மதுரை அனுப்பாடின அகிலன் (21), சுந்தர், சாமிராஜ் ஆகியோர் பன்றி காய்ச்சல் தடுப்பு பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். #Swineflu #Denguefever

    வேலை பார்த்த கடையிலேயே மளிகை சாமான்களை திருடி விற்ற ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை:

    மதுரை கீழமாசி வீதியைச் சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 51). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் செல்லூரைச் சேர்ந்த குமரவேல்பாண்டி (45), நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த மணிமாறன் (50) ஆகியோர் பணியாற்றி வந்தனர்.

    சில மாதங்களாக கடையில் இருந்த பலசரக்கு சாமான்கள் குறைந்து வந்தது. இதனால் ராஜபாண்டிக்கு சந்தேகம் எழுந்தது. அவர் விசாரித்தபோது, கடையில் வேலை பார்த்த குமாரவேல் பாண்டி, மணிமாறன் ஆகியோர் 95 கிலோ மளிகை சாமான்களை திருடி வெளியில் விற்றது தெரியவந்தது.

    இது குறித்து அவர் விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து குமரவேல்பாண்டி, மணிமாறனை கைது செய்தனர்.

    இவர்களிடம் இருந்து 5 கிலோ மளிகை சாமான்கள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுரையில் நகை வாங்குவது போல் நடித்து நகை கடையில் 7 பவுன் நகையை திருடிய 2 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை மேலமாசி வீதியில் உள்ள பிரசித்தி பெற்ற நகை கடைக்கு நேற்று காலை நகை வாங்க 2 பெண்கள் வந்தனர். அவர்கள் ஊழியர்களிடம் பல்வேறு டிசைன்களில் நகைகளை கேட்டு பார்த்துக் கொண்டிருந்தனர்.

    ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடையில் இருந்த அவர்கள் நகை எதுவும் வாங்காமல் சென்றனர்.

    அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் நகைகளை ஆய்வு செய்தபோது 7 1/2 பவுன் நகை மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமிராவின் பதிவுகளை ஆய்வு செய்தபோது நகை வாங்க வந்த 2 பெண்கள் 7 1/2 பவுனை திருடியது தெரியவந்தது.

    இது குறித்து நகை கடை மேலாளர் சவுந்தரபாண்டி கொடுத்த புகாரின் பேரில் தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிய பெண்களை தேடி வருகின்றனர்.

    வைகை அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக 66 அடியை எட்டியிருப்பதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #VaigaiDam
    தேனி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ளது வைகை அணை. நீர்பிடிப்பு பகுதியான மூலவைகையாறு, வருசநாடு, வெள்ளிமலை வனப்பகுதி, கொட்டக்குடி ஆறு மற்றும் முல்லைபெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் வைகை அணையில் தேக்கப்படுகிறது.

    இதன் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    கேரளாவில் பெய்த தொடர் கனமழை காரணமாக 7 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அணையின் நீர்மட்டம் அதன் முழுகொள்ளளவான 71 அடியை எட்டியது. இந்த நிலையில், இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியிருக்கிறது.



    இதையடுத்து, தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #VaigaiDam

    அரபிக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மதுரை உள்பட 4 மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்தது.
    ராமநாதபுரம்:

    அரபிக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று காலை மழை சற்று ஓய்ந்து இருந்த நிலையில் மாலையில் பல்வேறு இடங்களில் பரவலாக லேசான முதல் மிதமான மழை பெய்தது.

    ராமநாதபுரம் நகர், பரமக்குடி, கமுதி, திருவாடானை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் இன்று காலை வரை விடிய, விடிய மழை பெய்தது.

    இதனால் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியது. சில இடங்களில் இடியுடன் மழை பெய்ததால் மின்தடை ஏற்பட்டது.

    ராமேசுவரத்தில் நள்ளிரவு 2 மணி முதல் இன்று காலை வரை பலத்த மழை பெய்தது. பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    பலத்த காற்றுடன் கடல் சீற்றம் இருந்ததால் தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. ராமநாதசுவாமி கோவில் பிரகாரத்தில் மழைநீர் புகுந்தது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காலையும் மழை நீடித்ததால் மாணவ -மாணவிகள், வேலைக்கு செல்வோர் கடும் அவதி அடைந்தனர்.


    சிவகங்கை மாவட்டத்திலும் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. இதனால் கண்மாய், ஏரி, குளங்களின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    காளையார்கோவில், காரைக்குடி, கல்லல், திருப்பத்தூர், தேவகோட்டை, இளையான்குடி, மானாமதுரை ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இன்று காலையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் லேசான சாரல் மழை இருந்தது.

    மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    திருப்புவனம்- 148.6

    தேவகோட்டை- 2.2

    காளையார்கோவில்- 9.8

    சிங்கம்புணரி- 13.6

    விருதுநகர் மாவட்டத்தில் போதிய மழை இல்லாத போதிலும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் 75 சதவீதத்துக்கும் மேல் தண்ணீர் நிரம்பி உள்ளது.

    ராஜபாளையத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய, விடிய மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழை காரணமாக அய்யனார்கோவில் ஆறு, முள்ளி ஆறு, பேயனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் லேசான மழை இருந்தது.

    மாவட்டத்தின் உள்பகுதிகளான விருதுநகர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் போதிய மழை இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    மதுரை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை இல்லாத நிலையில் நேற்று மதியம் முதல் ஆங்காங்கே லேசான முதல் மிதமான மழை பெய்தது. நேற்று நள்ளிரவு 1 மணி முதல் இடியுடன் பலத்த மழை பெய்தது. வாடிப்பட்டி, சமயநல்லூர், சோழவந்தான், மேலூர், நாகமலை புதுக்கோட்டை, அலங்காநல்லூர், பாலமேடு, குமாரம், ஆண்டிப்பட்டி, திருமங்கலம், விரகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சில இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது.

    மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இன்று காலையில் சில இடங்களில் மழை பெய்தது. வானம் மேகமூட்டமாக காணப்படுகிறது.

    மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    உசிலம்பட்டி- 26.20

    மதுரை தெற்கு- 40.30

    விரகனூர்- 110.50

    விமான நிலையம்- 21.20

    இடையபட்டி- 57.20

    புலிப்பட்டி- 8.40

    சோழவந்தான்- 30.10

    கள்ளிக்குடி- 12.20

    மாவட்டத்தில் நேற்று முதல் இன்று காலை வரை 853.70 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
    ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, திருவாடானை, சாயல்குடி, திருத்தங்கல், மண்டபம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் தொடர் மழை காரணமாக நேற்று இரவு முதல் சாரல் மழை பெய்து வருகிறது.
    மதுரை:

    கேரளாவை யொட்டியுள்ள லட்சத்தீவு பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

    வளிமண்டல சுழற்சி காரணமாக நேற்று முன்தினம் முதல் மதுரை நகரில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாலை நேரங்களில் சாரல் மழையும் பெய்து வருவதால் தண்ணீர் சாலைகளில் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது.

    நேற்று இரவு முதல் இன்று காலை வரை மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக சோழ வந்தானில் 53.10 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, திருவாடானை, சாயல்குடி, திருத்தங்கல், மண்டபம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் தொடர் மழை காரணமாக நேற்று இரவு முதல் சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ராமநாதபுரம் நகரில் சாலையில் மழை நீர் தேங்கியது. சில இடங்களில் மின் தடையும் ஏற்பட்டது. காலையில் பெய்த மழையால் பள்ளி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் சிரமப்பட்டனர்.

    ராமேசுவரத்தில் விடிய விடிய மழை பெய்தது. இதனால் ராமநாதசாமி கோவில் பிரகாரத்தில் மழை நீர் தேங்கியது. மழை காரணமாக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்தது. ராமேசுவரத்தில் நேற்று இரவு மின் தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

    பலத்த காற்றுடன் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், ராமேசுவரம், மண்டபம், பாம்பன் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. காற்று காரணமாக பாம்பன் பாலத்தில் ரெயில் குறைந்த அளவு வேகத்தில் இயக்கப்பட்டது.

    சிவகங்கை மாவட்டத் திலும் நல்ல மழை பெய்து வருகிறது. காரைக்குடி, தேவகோட்டை, கல்லல், காளையார்கோவில், மானாமதுரை ஆகிய பகுதிகளில் மழை காரணமாக கண்மாய் ஏரிகளுக்கு நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இன்று காலையும் மழை தொடர்வதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அய்யனார் கோவில் ஆறு, முள்ளி ஆறு, பேயனாறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக 6-வது மைல் குடிநீர் தேக்க ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    ஸ்ரீவில்லிபத்தூர், சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருவதால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கண்மாய், ஏரிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் படிப்படியாக நடைபெறும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். #AIIMS #RTI #Madurai #UnionCabinet

    மதுரை:

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் வெளியானது. இதுகுறித்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

    தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டது. அதில் மதுரை தோப்பூரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு தேர்வு செய்தோம்.

    4 வழிச்சாலை, ரெயில் நிலையம், மின்சார வசதி மற்றும் மருத்துவமனை அமையும் நிலத்துக்கு எந்த வில்லங்கமும் இருக்கக் கூடாது உள்ளிட்ட 5 நிபந்தனைகளை மத்திய அரசு விதித்தது.


    இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி நிலத்தை கையகப்படுத்தி மத்திய அரசிடம் ஒப்படைத்து விட்டோம். மத்திய அரசு இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து அதன் பின்னர் படிப்படியாக பணிகள் நடைபெறும்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், சுகாதாரத்துறை செயலாளரும் இது தொடர்பாக மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #AIIMS #RTI #Madurai #UnionCabinet

    தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் மதுரையில் எய்ம்ஸ் அமைவது குறித்த விவரம் கேட்கப்பட்ட நிலையில், மதுரையில் எய்ம்ஸ் அமைய மத்திய அமைச்சரவை இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. #AIIMS #RTI #Madurai #UnionCabinet
    மதுரை:

    மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த இடத்தில் தமிழக அமைச்சர்கள் ஆய்வு நடத்தினர். 2 ஆண்டுகளில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட துவங்கும் என தமிழக அரசு தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை இயக்கத்தைச் சேர்ந்த ஹக்கீம் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து சில கேள்விகளை எழுப்பி இருந்தார்.

    அதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என தெரிவித்துள்ளது. மேலும், இதற்காக இதுவரை நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை எனவும் அந்த பதில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஆய்வறிக்கை பணிகள் நடைபெற்று வருவதால், விரைவில் அடுத்தக்கட்ட பணிகளை மத்திய அரசு துவங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். #AIIMS #RTI #Madurai #UnionCabinet
    ×