search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குலசேகரன்பட்டினம்"

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சித்திரை மாத வசந்த விழாவையொட்டி, 1,008 சுமங்கலி பூஜை நடந்தது.
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சித்திரை மாத வசந்த விழாவையொட்டி, நேற்றுமுன்தினம் காலை 7.30 மணிக்கு கணபதி வழிபாடு, விநாயகர் வேள்வி, இளைஞர் பூஜை, நிறை அவி அளித்தல், 9 மணிக்கு நவக்கிரக வழிபாடு, 10 மணிக்கு குபேர வழிபாடு, செல்வ வழிபாடு, பசு பூஜை, 10.30 மணிக்கு லட்சுமி ஹோமம், 11 மணிக்கு 1,008 கலச பூஜை, இறைவி வேள்வி, திருமுறைகள் ஓதுதல், மதியம் 12 மணிக்கு 1,008 கலசம் சிறப்பு நன்னீராட்டு, சிறப்பு அலங்கார தீபாராதனை, 1 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு 1,008 சுமங்கலி பூஜை, அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

    தொடர்ந்து நேற்று காலை 6 மணிக்கு 1,008 சங்கு பூஜை, இறைவன் வேள்வி, வேதம் திருமுறை ஓதுதல், அன்னதானம், 10 மணிக்கு சூரசம்ஹார கடற்கரையில் இருந்து 504 பால்குட ஊர்வலம், மதியம் 12 மணிக்கு 1,008 சங்காபிஷேகம், 504 பால்குட அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மதியம் 1 மணிக்கு திருமண தோஷம் விலக வேண்டி சிறப்பு அர்ச்சனை, மாலை 6.30 மணிக்கு 5004 மாவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு அன்னதானம், 9 மணிக்கு இறைவன், இறை விக்கு புஷ்பாஞ்சலி, அலங்கார தீபாராதனை ஆகியவை நடந்தன. ஏற்பாடுகளை குலசை முத்தாரம்மன் தசரா குழு மற்றும் தமிழ்நாடு கல்வி அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவில் விமான கலசங்களுக்கும், சுவாமி-அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் புனிதநீர் ஊற்றி, வருசாபிஷேகம் நடந்தது.
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் வருசாபிஷேக விழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள், யாகசாலை பூஜைகள் நடந்தது. காலை 11 மணி அளவில் கோவில் விமான கலசங்களுக்கும், சுவாமி-அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் புனிதநீர் ஊற்றி, வருசாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை நடந்தது. பின்னர் சங்காபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.

    மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் அம்மன் தேரில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் ராமசுப்பிரமணியன், கட்டளைதாரர் சலவையாளர், கலா தசரா குழுவினர் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் சமேத முத்தாரம்மன் கோவிலில் 1,008 பால்குட அபிஷேக விழா கடந்த 2 நாட்கள் நடந்தது.
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் சமேத முத்தாரம்மன் கோவிலில் 1,008 பால்குட அபிஷேக விழா கடந்த 2 நாட்கள் நடந்தது. நேற்று முன்தினம் காலையில் 108 சங்காபிஷேகம், 108 கலசாபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. மாலையில் அரசடி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, யாகசாலை பூஜை, இரவில் அலங்கார தீபாராதனை, வில்லிசை, கற்பூர ஜோதி வழிபாடு நடந்தது.

    நேற்று காலையில் கணபதி ஹோமம், யாகசாலை பூஜை நடந்தது. சிதம்பரேசுவரருக்கு தீபாராதனையை தொடர்ந்து, சிதம்பரேசுவரர் கோவிலில் இருந்து முத்தாரம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வரப்பட்டது. பின்னர் சந்தனகுடம் பவனி நடந்தது.

    தொடர்ந்து அறம் வளர்த்த நாயகி அம்மனுக்கு தீபாராதனையை தொடர்ந்து, அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் 1,008 பால்குடம் எடுத்து ஊர்வலமாக முத்தாரம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    பின்னர் 108 சுமங்கலி பெண்கள் கும்மி வழிபாடு, மாலையில் 1,008 அகல்தீப வழிபாடு, இரவில் புஷ்ப சகஸ்ரநாமாவளி அர்ச்சனை, பைரவருக்கு வடைமாலை அணிவித்து சிறப்பு பூஜை, அம்பாள் தேர் பவனி நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் நேற்று சூரசம்ஹாரம் நடந்தது. இதையொட்டி கோவில் முன்பு திரண்டிருந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியை படத்தில் காணலாம். #Kulasekarapattinam #Dasara #Soorasamharam
    குலசேகரன்பட்டினம் :

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து, அம்மனை வழிபடுகின்றனர்.

    கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் காப்பு அணிந்து, பல்வேறு வேடங்களை அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்தனர். ஒவ்வொரு ஊரிலும் உள்ள கோவிலின் அருகில் தசரா பிறை அமைத்து, அதில் பக்தர்கள் தங்கியிருந்து அம்மனை வழிபட்டனர்.

    ஒவ்வொரு ஊரிலும் பக்தர்கள் தசரா குழுக்கள் அமைத்து, வாகனங்களில் ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்தனர். தசரா குழுக்களின் சார்பில் கரகாட்டம், பரதநாட்டியம், மேற்கத்திய நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இதனால் தென் மாவட்டங்களில் தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் வளாகத்தில் உள்ள சவுந்திரபாண்டிய நாடார்-தங்ககனி அம்மாள் கலையரங்கத்தில் தினமும் மாலையில் பக்தி சொற்பொழிவு, திருமுறை இன்னிசை, பரதநாட்டியம், வில்லிசை போன்றவையும், இரவில் பட்டிமன்றம், பாவைக்கூத்து, இன்னிசை நிகழ்ச்சி போன்றவையும் நடந்தது.

    10-ம் திருநாளான நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடந்தது. இதனை முன்னிட்டு காலை முதல் மதியம் வரையிலும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். பெரும்பாலான பக்தர்கள் அக்னிசட்டி ஏந்தியும், முளைப்பாரி எடுத்தும் கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் பல மணி நேரம் காத்து இருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. இரவு 12 மணி அளவில் அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளினார். அப்போது காளி வேடம் அணிந்த திரளான பக்தர்களும் அம்மனை பின்தொடர்ந்து வந்தனர். சூரசம்ஹாரத்தை காண்பதற்காக கடற்கரையில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.

    முதலில் ஆணவமே உருவான மகிஷாசூரன், அம்மனை சுற்றி வந்து போருக்கு தயாரானான். அவனை சூலாயுதத்தால் அம்மன் வதம் செய்தார். பின்னர் யானையாகவும், சிங்கமாகவும், சேவலாகவும் அடுத்தடுத்து உருமாறி போர் புரிய வந்த மகிஷாசூரனை அம்மன் சூலாயுதத்தால் வதம் செய்தார். அப்போது கூடியிருந்த பல லட்சக்கணக்கான பக்தர்கள் ‘ஓம் காளி, ஜெய் காளி’ என்று விண்ணதிர பக்தி கோஷங்களை எழுப்பினர்.

    பின்னர் கடற்கரை மேடையில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சிதம்பரேசுவரர் கோவிலில் எழுந்தருளிய அம்மனுக்கு சாந்தாபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மன் தேரில் பவனி வந்து கோவிலை சென்றடைந்தார். பின்னர் கோவில் கலையரங்கத்தில் அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.



    தசரா திருவிழாவை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் குலசேகரன்பட்டினத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கோவில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. குலசேகரன்பட்டினம் நகர் முழுவதும் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில், குலசேகரன்பட்டினத்துக்கு வரும் சாலைகள் ஒருவழிப்பாதையாக மாற்றி அமைக்கப்பட்டன. குலசேகரன்பட்டினம் தருவைக்குளம் பகுதியில் தற்காலிக பஸ் நிலையங்கள், வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்து பக்தர்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து, கோவிலுக்கு சென்றனர்.

    குலசேகரன்பட்டினம் நகர எல்லையில் தசரா குழுவினர் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு, ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், பக்தி கோஷங்களை எழுப்பியும் வந்தனர். வேடம் அணிந்த பக்தர்கள் சேகரித்த காணிக்கைகளை கோவில் உண்டியலில் செலுத்தினர். பின்னர் கடற்கரையில் மகிஷாசூரனை அம்மன் வதம் செய்ததை தரிசித்தனர். கடற்கரையில் தசரா குழுக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் கரகாட்டம், பரதநாட்டியம், மேற்கத்திய நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

    பல்வேறு பகுதிகளில் இருந்தும் தசரா குழுவினர் குலசேகரன்பட்டினத்துக்கு விடிய, விடிய வந்த வண்ணம் இருந்தனர். குலசேகரன்பட்டினம் நகரம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. குலசேகரன்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையோரம் நீண்ட தூரத்துக்கு பக்தர்களின் வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்தன. தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா மேற்பார்வையில், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு தலைமையில், சுமார் 1,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    11-ம் நாளான இன்று (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மாலை 4 மணிக்கு அம்மன் கோவில் வந்து சேர்ந்தவுடன், கொடியிறக்கப்படும். பின்னர் அம்மன் காப்பு களைதல் நடைபெறும். தொடர்ந்து வேடம் அணிந்த பக்தர்களும் காப்புகளை களைவார்கள். இரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெறும்.

    12-ம் நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி, 8 மணி, 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். மதியம் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்காரும், உதவி ஆணையருமான ரோஜாலி சுமதா, இணை ஆணையர் பரஞ்ஜோதி, கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து உள்ளனர். #Kulasekarapattinam #Dasara #Soorasamharam

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக, இங்குதான் பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து, அம்மனை வழிபடுகின்றனர்.

    கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் காப்பு அணிந்தனர். ஒவ்வொரு ஊரிலும் விரதம் இருக்கும் பக்தர்கள், அங்குள்ள கோவில் அருகில் தசரா பிறை அமைத்து, அதில் தங்கியிருந்து வழிபட்டு வருகின்றனர். அவர்கள் தினமும் ஒரு வேளை மட்டும் பச்சரிசி உணவு சாப்பிட்டு விரதம் இருந்து வருகின்றனர்.

    விரதம் இருந்து காப்பு அணிந்த பக்தர்கள் நேர்த்திக்கடனாக காளி, சிவன், விஷ்ணு, பிரம்மன், விநாயகர், முருகபெருமான், கிருஷ்ணர், ராமர், லட்சுமணர், சுடலைமாடன், அனுமார் போன்ற பல்வேறு சுவாமிகளின் வேடங்களையும், முனிவர், அரசர், போலீஸ்காரர், செவிலியர், நரிக்குறவர், அரக்கன், சிங்கம், புலி, கரடி உள்ளிட்ட பல்வேறு வேடங்களையும் அணிந்தனர்.

    ஒவ்வொரு ஊரிலும் வேடம் அணிந்த பக்தர்கள் குழுக்களாக வாகனங்களில் ஊர் ஊராக சென்று, காணிக்கை வசூலித்து வருகின்றனர். தசரா குழுக்கள் சார்பில் கரகாட்டம், மேற்கத்திய நடனம், பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. விரதம் இருந்து காப்பு அணிந்த சில பக்தர்கள் தசரா திருவிழாவின் கடைசி சில நாட்கள் மட்டும் வேடம் அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து, கோவிலில் செலுத்துவார்கள். இதனால் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தசரா திருவிழா களைகட்டியது.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

    10-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்காரும், உதவி ஆணையருமான ரோஜாலி சுமதா, இணை ஆணையர் பரஞ்ஜோதி, கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். 
    நவராத்திரி விழாவே குலசேகரன் பட்டினத்தில் தசரா விழாவாக கொண்டாடப்படுகிறது. முத்தாரம்மனுக்கு உகந்த இந்த 108 போற்றியை தினமும் சொல்லி வழிபாடு செய்து வரலாம்.
    1. ஓம் ஸ்ரீஞான அங்கையற்கண் அம்மையே  போற்றி
    2. ஓம் ஸ்ரீஞான அகிலாண்ட நாயகியே  போற்றி
    3. ஓம் ஸ்ரீஞான அருமையின் வரம்பே  போற்றி
    4. ஓம் ஸ்ரீஞான அறம்வளர்க்கும் அம்மையே  போற்றி
    5. ஓம் ஸ்ரீஞான அரசிளங் குமரியே  போற்றி
    6. ஓம் ஸ்ரீஞான அப்பர்ணி மருந்தே  போற்றி
    7. ஓம் ஸ்ரீஞான அமுத நாயகியே போற்றி
    8. ஓம் ஸ்ரீஞான அருந்தவ நாயகியே போற்றி
    9. ஓம் ஸ்ரீஞான அருள்நிறை அம்மையே போற்றி
    10. ஓம்ஸ்ரீஞான ஆலவாய்க்கரசியே  போற்றி - 10
    11. ஓம் ஸ்ரீஞான ஆறுமுகத்தின் அன்னையே போற்றி
    12. ஓம் ஸ்ரீஞான ஆதியின் பாதியே போற்றி
    13. ஓம் ஸ்ரீஞான ஆலால சுந்தரியே போற்றி
    14. ஓம் ஸ்ரீஞான ஆனந்த வல்லியே போற்றி
    15. ஓம் ஸ்ரீஞான இளவஞ்சிக் கொடியே போற்றி
    16. ஓம் ஸ்ரீஞான இமயத் தரசியே போற்றி
    17. ஓம் ஸ்ரீஞான இடபத்தோன் துணையே போற்றி
    18. ஓம் ஸ்ரீஞான ஈசுவரியே போற்றி
    19. ஓம் ஸ்ரீஞான உயிர் ஒவியமே போற்றி
    20. ஓம் ஸ்ரீஞான ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி -20
    21. ஓம் ஸ்ரீஞான எண்திசையும் வென்றாய் போற்றி
    22. ஓம் ஸ்ரீஞான ஏகன் துணையே போற்றி
    23. ஓம் ஸ்ரீஞான ஐங்கரன் அன்னையே போற்றி
    24. ஓம் ஸ்ரீஞான ஐயம் தீர்ப்பாய் போற்றி
    25. ஓம் ஸ்ரீஞான ஒப்பில்லா அமுதே போற்றி
    26. ஓம் ஸ்ரீஞான ஓங்காரசுந்தரியே போற்றி
    27. ஓம் ஸ்ரீஞான கற்றோருக்கு இனியோய் போற்றி
    28. ஓம் ஸ்ரீஞான கல்லார்க்கு எளியோய் போற்றி
    29. ஓம் ஸ்ரீஞான கடம்பவன சுந்தரியே போற்றி
    30. ஓம் ஸ்ரீஞான கல்யாண சுந்தரியே போற்றி -30
    31. ஓம் ஸ்ரீஞான கனகமணிக்குன்றே போற்றி
    32. ஓம் ஸ்ரீஞான கற்பின் அரசியே போற்றி
    33. ஓம் ஸ்ரீஞான கருணை யூற்றே போற்றி
    34. ஓம் ஸ்ரீஞான கல்விக்கு வித்தே போற்றி
    35. ஓம் ஸ்ரீஞான கனகாம்பிகையே போற்றி
    36. ஓம் ஸ்ரீஞான கதிரொளிச்சுடரே போற்றி
    37. ஓம் ஸ்ரீஞான கற்களை கடந்த கற்பகமே போற்றி
    38. ஓம் ஸ்ரீஞான காட்சிக்கிளியோய் போற்றி
    39. ஓம் ஸ்ரீஞான காலம் வென்ற கற்பகமே போற்றி
    40. ஓம் ஸ்ரீஞான முத்தார காமாட்சி அம்பிகையே போற்றி -40
    41. ஓம் ஸ்ரீஞான முத்தாரம்மா அம்பிகையே போற்றி
    42. ஓம் ஸ்ரீஞான கிளியேந்திய கரத்தோய் போற்றி
    43. ஓம் ஸ்ரீஞான குலச்சிறை காத்தோய் போற்றி
    44. ஓம் ஸ்ரீஞான குற்றம் பொறுக்கும் குணமே போற்றி
    45. ஓம் ஸ்ரீஞான கூடற்கலாப மயிலே போற்றி
    46. ஓம் ஸ்ரீஞான கோலப் பசுங்கிளியே போற்றி
    47. ஓம் ஸ்ரீஞான சம்பந்தன ஞானத்தாயே போற்றி
    48. ஓம் ஸ்ரீஞான சக்திவடிவே போற்றி
    49. ஓம் ஸ்ரீஞான சங்கம் வளர்த்தாய் போற்றி
    50. ஓம் ஸ்ரீஞான சிவகாம சுந்தரியே போற்றி -50
    51. ஓம் ஸ்ரீஞான சித்தம் தெளிவிப்பாய் போற்றி
    52. ஓம் ஸ்ரீஞான சிவயோக நாயகியே போற்றி
    53. ஓம் ஸ்ரீஞான சிவானந்த வல்லியே போற்றி
    54. ஓம் ஸ்ரீஞான சிங்கார வல்லியே போற்றி
    55. ஓம் ஸ்ரீஞான செந்தமிழ் தாயே போற்றி
    56. ஓம் ஸ்ரீஞான செல்வத்துக் கரசியே போற்றி
    57. ஓம் ஸ்ரீஞான சேனைத் தலைவியே போற்றி
    58. ஓம் ஸ்ரீஞான சொக்கர் நாயகியே போற்றி
    59. ஓம் ஸ்ரீஞான சைவநெறி நிலைக்கச்செய்தோய் போற்றி
    60. ஓம் ஸ்ரீஞான ஞானாம்பிகையே போற்றி -60
    61. ஓம் ஸ்ரீஞான ஞானப்பூங்கோதையே போற்றி
    62. ஓம் ஸ்ரீஞான தமிழர் குலச்சுடரே போற்றி
    63. ஓம் ஸ்ரீஞான திருவுடையம்மையே போற்றி
    64. ஓம் ஸ்ரீஞான திசையெல்லாம் புரந்தாய் போற்றி
    65. ஓம் ஸ்ரீஞான திரிபுர சுந்தரியே போற்றி
    66. ஓம் ஸ்ரீஞான திருநிலை நாயகியே போற்றி
    67. ஓம் ஸ்ரீஞான தீந்ர்தமிழ்ச் சுவையே போற்றி
    68. ஓம் ஸ்ரீஞான தெவிட்டாத தெள்ளமுதே போற்றி
    69. ஓம் ஸ்ரீஞான தென்னவன் செல்வியே போற்றி
    70. ஓம் ஸ்ரீஞான தேன்மொழியம்மையே போற்றி -70
    71. ஓம் ஸ்ரீஞான தையல் நாயகியே போற்றி
    72. ஓம் ஸ்ரீஞான நற்கனியின் சுவையே போற்றி
    73. ஓம் ஸ்ரீஞான நற்றவத்தின் கொழுந்தே போற்றி
    74. ஓம் ஸ்ரீஞான நல்ல நாயகியே போற்றி
    75. ஓம் ஸ்ரீஞான நீலாம்பிகையே போற்றி
    76. ஓம் ஸ்ரீஞான நீதிக்கரசியே போற்றி
    77. ஓம் ஸ்ரீஞான பக்தர்தம் திலகமே போற்றி
    78. ஓம் ஸ்ரீஞான பழமறையின் குருந்தே போற்றி
    79. ஓம் ஸ்ரீஞான பரமானந்த பெருக்கே போற்றி
    80. ஓம் ஸ்ரீஞான பண்மைதைந்த பெருக்கே போற்றி -80
    81. ஓம் ஸ்ரீஞான பவளவாய்கிளியே போற்றி
    82. ஓம் ஸ்ரீஞான பசுபதி நாயகியே போற்றி
    83. ஓம் ஸ்ரீஞான பாகம் பிரியா அம்மையே போற்றி
    84. ஓம் ஸ்ரீஞான ஞான பாண்டியா தேவியின் தேவி போற்றி
    85. ஓம் ஸ்ரீஞான பார்வதி அம்மையே போற்றி
    86. ஓம் ஸ்ரீஞான பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
    87. ஓம் ஸ்ரீஞான பெரிய நாயகியே போற்றி
    88. ஓம் ஸ்ரீஞான பொன்மயிலம்மையே போற்றி
    89. ஓம் ஸ்ரீஞான பொற்கொடி அன்னையே போற்றி
    90. ஓம் ஸ்ரீஞான மங்கள நாயகியே போற்றி -90
    91. ஓம் ஸ்ரீஞான மழலைக்கிளியே போற்றி
    92. ஓம் ஸ்ரீஞான மனோன்மயித்தாயே போற்றி
    93. ஓம் ஸ்ரீஞான மண்சுமந்தோண் மாணிக்கமே போற்றி
    94. ஓம் ஸ்ரீஞான மாயோன் தங்கையே போற்றி
    95. ஓம் ஸ்ரீஞான மாணிக்க வல்லியே போற்றி
    96. ஓம் ஸ்ரீஞான மீனவர்கோன் மகளே போற்றி
    97. ஓம் ஸ்ரீஞான மீனாட்சியம்மையே போற்றி
    98. ஓம் ஸ்ரீஞான முழுஞானப் பெறுக்கே போற்றி
    99. ஓம் ஸ்ரீஞான முக்கண் சுடர்விருந்தே போற்றி
    100.  ஓம் ஸ்ரீஞான யாழ்மொழி யம்மையே போற்றி -100
    101. ஓம் ஸ்ரீஞான வடிவழ கம்மையே போற்றி
    102. ஓம் ஸ்ரீஞான வேலவனுக்கு வேல்தந்தாய் போற்றி
    103. ஓம் ஸ்ரீஞான வேதநாயகியே போற்றி
    104. ஓம் ஸ்ரீஞான சவுந்தராம்பிகையே போற்றி
    105. ஓம் ஸ்ரீஞான வையகம் வாழ்விப்பாய் போற்றி
    106. ஓம் ஸ்ரீஞான அம்மையே அம்பிகையே போற்றி
    107. ஓம் ஸ்ரீஞான அங்கையற்கண் அம்மையே போற்றி
    108. ஓம் ஸ்ரீஞானமூர்த்திஸ்வரர் சமேத முத்தாரம்மனே
     போற்றி! போற்றி!! போற்றி!!!
    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா 4-ம் நாள் திருவிழாவில் அம்மன் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். விழாவை முன்னிட்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேன்கள், பஸ்கள், கார்கள் போன்றவற்றில் கோவிலில் குவிந்து அம்மனை வழிபட்டு வருகின்றனர்.

    விரதம் இருந்து காப்பு கட்டிய பல ஆயிரம் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அம்மனுக்கு காணிக்கை சேகரித்து வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாரா‌ஷ்டிரா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு வருகின்றனர்.

    திருவிழாவின் 4-ம் நாளான நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு அம்மன் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்தில் எழுந்தருளி திருவீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பாலசுப்பிரமணியர் திருகோலத்தில் அம்மனை வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் நேற்று முன்தினம் பெண்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 10-ம் நாளான வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான மகி‌ஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. 
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

    இதனை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் வீதி உலா, 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 9 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து நேர்த்திக்கடனாக பல்வேறு நாட்கள் விரதம் இருந்து, காளி வேடம் அணியும் பக்தர்களுக்கு கோவில் பூசாரி காப்பு அணிவித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழா நாட்களில் தினமும் காலை முதல் இரவு வரையிலும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. தினமும் இரவு 9 மணிக்கு அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு கோலங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    முதலாம் நாளில் சிம்ம வாகனத்தில் துர்க்கை கோலத்திலும், 2-ம் நாளில் கற்பகவிருட்சம் வாகனத்தில் விசுவகர்மேசுவரர் கோலத்திலும், 3-ம் நாளில் ரி‌ஷப வாகனத்தில் பார்வதி கோலத்திலும், 4-ம் நாளில் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் கோலத்திலும், 5-ம் நாளில் காமதேனு வாகனத்தில் நவநீதகிருஷ்ணர் கோலத்திலும், 6-ம் நாளில் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி கோலத்திலும், 7-ம் நாளில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் கோலத்திலும், 8-ம் நாளில் கமல வாகனத்தில் கஜலட்சுமி கோலத்திலும், 9-ம் நாளில் அன்ன வாகனத்தில் கலைமகள் கோலத்திலும் அம்மன் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    10-ம் நாளான வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. 11-ம் நாளான 20-ந்தேதி (சனிக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு அம்மன் தேரில் பவனி வருதல், மாலை 4.30 மணிக்கு காப்பு களைதல், இரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது.

    12-ம் நாளான 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலையில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனையுடன் தசரா திருவிழா நிறைவு பெறுகிறது. விழா நாட்களில் தினமும் மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழாவை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு காளி பூஜை, மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 4 மணிக்கு மகுட இசை, 5 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, 6 மணிக்கு கரகாட்டம், இரவு 7 மணிக்கு வில்லிசை, 8 மணிக்கு பக்தி இசை நடக்கிறது.

    இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்பு அணிவிக்கப்படுகிறது.

    நாளை (புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் வீதி உலா நடக்கிறது. காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. காலை 9 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. தொடர்ந்து நேர்த்திக்கடனாக பல்வேறு நாட்கள் விரதம் இருந்து, காளி வேடம் அணியும் பக்தர்களுக்கு கோவில் பூசாரி காப்பு அணிவிப்பார்.

    காப்பு அணிவிக்கப்பட்ட பக்தர்கள் தங்களது ஊர்களுக்கு சென்று, அங்குள்ள கோவில் அருகில் தசரா பிறையில் தங்கி விரதம் இருந்து வரும் பக்தர்களுக்கு காப்பு அணிவிப்பார்கள். காப்பு அணிவிக்கப்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு சுவாமி வேடங்களை அணிந்து, ஊர் ஊராக சென்று, காணிக்கை வசூல் செய்து 10-ம் நாள் இரவில் கோவிலில் வழங்குவார்கள்.

    விழா நாட்களில் தினமும் காலை முதல் இரவு வரையிலும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. தினமும் இரவு 9 மணிக்கு அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு கோலங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். முதலாம் நாளில் சிம்ம வாகனத்தில் துர்க்கை கோலத்திலும், 2-ம் நாளில் கற்பகவிருட்சம் வாகனத்தில் விசுவகர்மேசுவரர் கோலத்திலும், 3-ம் நாளில் ரி‌ஷப வாகனத்தில் பார்வதி கோலத்திலும், 4-ம் நாளில் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் கோலத்திலும்,

    6-ம் நாளில் சிம்ம வாகனத்தில் மகி‌ஷாசுரமர்த்தினி கோலத்திலும், 7-ம் நாளில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் கோலத்திலும், 8-ம் நாளில் கமல வாகனத்தில் கஜலட்சுமி கோலத்திலும், 9-ம் நாளில் அன்ன வாகனத்தில் கலைமகள் கோலத்திலும் அம்மன் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    10-ம் நாளான வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான மகி‌ஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. 11-ம் நாளான 20-ந்தேதி (சனிக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு அம்மன் தேரில் பவனி வருதல், மாலை 4.30 மணிக்கு காப்பு களைதல், இரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது. 12-ம் நாளான 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலையில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனையுடன் தசரா திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழா நாட்களில் தினமும் மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. தினமும் மாலையில் கோவில் வளாகத்தில் உள்ள சவுந்திரபாண்டிய நாடார்-தங்கக்கனி அம்மாள் கலையரங்கில் சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பரதநாட்டியம், பட்டிமன்றம், பாவைக்கூத்து போன்ற கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா வருகிற 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் பல லட்சக்கணக்கான பக்தர் கள் விரதம் இருந்து, பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள்.

    கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற 10-ந் தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல திருக்கோலங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

    முதலாம் நாளில் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்திலும், 2-ம் நாளில் கற்பகவிருட்சம் வாகனத்தில் விசுவகர்மேசுவரர் திருக்கோலத்திலும், 3-ம் நாளில் ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்திலும், 4-ம் நாளில் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்திலும், 5-ம் நாளில் காமதேனு வாகனத்தில் நவநீதகிருஷ்ணர் திருக்கோலத்திலும், 6-ம் நாளில் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்திலும், 7-ம் நாளில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்திலும், 8-ம் நாளில் கமல வாகனத்தில் கசலட்சுமி திருக்கோலத்திலும், 9-ம் நாளில் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்திலும் அம்மன் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

    10-ம் நாளான 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. 11-ம் நாளான 20-ந் தேதி (சனிக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்தவுடன் கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளி, அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. அதிகாலை 2 மணிக்கு அம்மன் சிதம்பரேசுவரர் கோவிலுக்கு எழுந்தருளி, சாந்தாபிஷேக ஆராதனைகள் நடக்கிறது.

    அதிகாலை 3 மணிக்கு அம்மன் தேரில் பவனி வருதல், அதிகாலை 5 மணிக்கு சுண்டங்கோட்டை சவுந்திரபாண்டிய நாடார்-தங்கக்கனி அம்மாள் கலையரங்கத்திற்கு அம்மன் எழுந்தருளி, அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்பிகை வீதி உலா புறப்படுதல், மாலை 4 மணிக்கு அம்மன் கோவில் வந்து சேர்தல், மாலை 4.30 மணிக்கு காப்பு களைதல், இரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது.

    12-ம் நாளான 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி, 8 மணி, 10 மணிக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு பாலாபிஷேகத்துடன் தசரா திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழா நாட்களில் தினமும் காலை முதல் இரவு வரையிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. மதியம் அன்னதானம் நடக் கிறது. மாலையில் சுண்டங்கோட்டை சவுந்திரபாண்டிய நாடார்-தங்கக்கனி அம்மாள் கலையரங்கில் சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பரதநாட்டியம், பட்டிமன்றம், பாவைக்கூத்து போன்ற கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்காரும், உதவி ஆணையருமான ரோஜாலி சுமதா, இணை ஆணையர் பரஞ்ஜோதி, செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலின் தசரா திருவிழாவை முன்னிட்டு, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதத்தை தொடங்கினர்.
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள்.

    கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற அக்டோபர் மாதம் 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    விழாவின் சிகர நாளான அக்டோபர் மாதம் 19-ந்தேதி இரவு 12 மணிக்கு மகி‌ஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள்.

    தசரா திருவிழாவை முன்னிட்டு, பல்வேறு ஊர்களிலும் விரதம் இருக்கும் பக்தர்கள் நேற்று கோவிலுக்கு வந்து விரதத்தை தொடங்கினர். முன்னதாக பக்தர்கள் செவ்வாடை அணிந்து, கடலில் புனித நீராடினர்.

    பின்னர் பக்தர்கள் கோவிலில் சென்று வழிபட்ட னர். அம்மன் பாதத்தில் வைத்த துளசிமாலையை கோவில் அர்ச்சகர் பக்தர்களுக்கு அணிவித்தார்.

    விரதம் தொடங்கிய பக்தர்கள் தங்களது ஊர்களில் உள்ள கோவில்களின் அருகில் குடில் அமைத்து, அதில் தங்கியிருந்து அம்மனை வழிபடுவார்கள். அவர்கள் தினமும் ஒரு வேளை மட்டும் பச்சரிசி உணவு சாப்பிட்டு விரதம் இருப்பார்கள்.

    பின்னர், குலசேகரன்பட்டினம் வந்து முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்தில், விரதம் இருக்கும் பக்தர்கள் திரளாக கலந்து கொள்வார்கள். கொடியேற்றம் நடந்ததும், விரதம் இருக்கும் பக்தர்களுக்கு கோவில் அர்ச்சகர் காப்பு அணிவிப்பார்.

    காப்பு கட்டிய பக்தர்கள் நேர்த்திக்கடனாக சிவன், பார்வதி, காளி, விநாயகர், முருகர், ராமர், லட்சுமணர், அனுமார், முனிவர், குறவன், குறத்தி, போலீஸ், நர்ஸ், சிங்கம், புலி, கரடி போன்ற பல்வேறு வேடங்களை அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூல் செய்து, அதனை சூரசம்ஹார நாளில் கோவிலில் வழங்கி வழிபடுவார்கள். 
    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆடிக்கொடை விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் பிரசித்திபெற்ற கோவில் ஆகும். தசரா திருவிழாவுக்கு பெயர் பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிக்கொடை விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான கொடை விழா நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனையுடன் தொடங்கியது. இரவு 10 மணிக்கு வில்லிசை நடந்தது.

    நேற்று காலை 7 மணி, 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. 11 மணிக்கு சிறப்பு பூஜையுடன் கும்பம் வீதிஉலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மகுட இசை, 10 மணிக்கு வில்லிசை, 11 மணிக்கு சிறப்பு பூஜையுடன் கும்பம் வீதிஉலா செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.

    மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு சுவாமிகள் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனையுடன் கொடை விழா நிறைவு பெறுகிறது.

    பக்தர்கள் வசதிக்காக நெல்லை, தூத்துக்குடி, திசையன்விளை ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திபு தலைமையில் குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    விழா ஏற்பாடுகளை தூத்துக்குடி அறநிலையத்துறை உதவி ஆணையரும், கோவில் தக்காருமான ரோஜாலி சுமதா, கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன், கோவில் ஆய்வாளர் பகவதி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். 
    ×