search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமாகா"

    தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்கள் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக வந்த தகவல்கள் வடிகட்டின பொய் என கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். #TMC #GKVasan
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்கள், நிர்வாகிகளுக்காக காங்கிரஸ் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன என தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் தலைவரின் இந்த அறிக்கைக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனித்தன்மையுடன் செயல்படுகிறது. கட்சியின் வளர்ச்சியை பிடிக்காதவர்களின் சதி இது. பா.ஜ.க.வில் இணைவதாக வந்த செய்திகள் வடிகட்டிய பொய் என தெரிவித்துள்ளார்.

    இரு கட்சி தலைவர்கள் அறிக்கைகள் தமிழக காங்கிரஸ், தமாகா தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #TMC #GKVasan
    தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு காங்கிரஸ் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன என மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். #Congress #KSAlagiri
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பாஜகவுடன் இணைக்க உள்ளதாக நாளேடுகளில் செய்திகள் வெளியாகி உள்ளன.



    காங்கிரசில் வாழ்க்கையை தொடங்கியவர்கள் பாஜகவில் இணைவது தற்கொலைக்கு சமம். எனவே, கருத்து வேறுபாட்டால் தமாகாவுக்கு சென்ற தொண்டர்கள் காங்கிரசில் மீண்டும் இணைய வேண்டும். அவர்களுக்காக சத்தியமூர்த்தி பவன் கதவுகள் திறந்தே உள்ளன என தெரிவித்துள்ளார். #Congress #KSAlagiri
    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஏப்ரல் 1-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்கிறார். #LokSabhaElections2019 #GKVasan
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஏப்ரல் 1-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்கிறார். அதன் விவரம் வருமாறு:-

    ஏப்ரல் 1-ந் தேதி தஞ்சாவூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதிகளிலும், 2-ந் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், தென்சென்னை தொகுதிகளிலும், 3-ந் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி தொகுதிகளிலும், 4-ந் தேதி தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை பாராளுமன்ற தொகுதிகளிலும் பிரசாரம் செய்கிறார்.

    ஏப்ரல் 5-ந் தேதி மதுரை, திண்டுக்கல், தேனி பாராளுமன்ற தொகுதிகளிலும், 6-ந் தேதி தஞ்சை பாராளுமன்றம், சட்டமன்ற தொகுதிகளிலும், 7-ந் தேதி சிதம்பரம், கும்பகோணம், மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிகளிலும், மீண்டும் தஞ்சையிலும் பிரசாரம் செய்கிறார். 8-ந் தேதி செல்லும் இடம் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.

    ஏப்ரல் 9-ந் தேதி ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, நீலகிரி பாராளுமன்ற தொகுதிகளிலும், 10-ந் தேதி கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, 11-ந் தேதி திருவண்ணாமலை, வேலூர், அரக்கோணம், ஆரணி பாராளுமன்ற தொகுதிகளில ஜி.கே.வாசன் பிரசாரம் செய்கிறார்.

    12-ந் தேதி சென்னையில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளிலும், 13-ந் தேதி திருச்சி, தஞ்சை தொகுதிகளிலும், 14-ந் தேதி தஞ்சை, 15-ந் தேதி திருவாரூர், நாகை தொகுதிகளிலும் மீண்டும் தஞ்சாவூரிலும் பிரசாரம் செய்கிறார். 16-ந் தேதி ஜி.கே.வாசன் பிரசாரம் செய்யும் இடங்கள் பற்றிய விவரம் பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #GKVasan

    சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறுகையில், அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வுக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்தார். #AIADMKAlliance #GKVasan #TMC #Thanjavur
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் (புதுச்சேரி), த.மா.கா. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7, பா.ஜ.க.வுக்கு 5, தே.மு.தி.க.வுக்கு 4, மற்ற கட்சிகளுக்கு தலா ஒரு இடம் என்று தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தேசிய நலனில் அக்கறை கொண்ட மாநில கட்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது. வளமான தமிழகம், வலிமையான பாரதம் என்பது தான் த.மா.கா.வின் நிலைப்பாடு.

    பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளடக்கிய கூட்டணி வெற்றி கூட்டணி. எங்களது கூட்டணி குறித்து காங்கிரஸ் - தி.மு.க. ஆகியவை ஜீரணிக்க முடியாமல் பேசி வருகிறார்கள்.

    தேர்தல் கூட்டணி என்பது வேறு, இயக்கத்தில் கொள்கை என்பது வேறு. எண்ணிக்கை என்பதை விட, எண்ணத்தின் அடிப்படையில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். மக்களுடைய நலன் கருதி எங்கள் கூட்டணி முடிவு செய்யப்பட்டுள்ளது. எங்களுடைய செயல்பாட்டை மதிக்கும் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளோம். 

    கேட்ட தொகுதியை அ.தி.மு.க. கொடுத்துள்ளது. தஞ்சாவூர் தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது என தெரிவித்துள்ளார். #AIADMKAlliance #GKVasan #TMC #Thanjavur
    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான உடன்படிக்கையில் இருகட்சி தலைவர்களும் இன்று கையொப்பமிட்டனர். #LSpolls #TMConeseat #AIADMKallaiance
    சென்னை:

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., பா.ஜனதா, தே.மு.தி.க., புதிய தமிழகம், புதிய நீதிகட்சி ஆகியவை உள்ளன.  

    இந்த கூட்டணியில், தமிழ் மாநில காங்கிரசையும் சேர்க்க பேச்சுவார்த்தை நடந்து வந்தது. தங்களுக்கு 2 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வற்புறுத்தி வந்தார்.

    இந்த நிலையில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜி.கே.வாசன் வீட்டுக்கு சென்றனர். அங்கு பேச்சுவார்த்தை நடந்தது.

    பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்த நிலையில் தமாகாவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான உடன்படிக்கையில் இருகட்சி தலைவர்களும் இன்று கையொப்பமிட்டனர். #LSpolls #TMConeseat #AIADMKallaiance 
    அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறாவிட்டால் த.மா.கா.வுக்கு 2 தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. #TamilMaanilaCongress #GKVasan #ADMK
    சென்னை:

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க. இடம் பெற்றுள்ளது. தே.மு.தி.க.வும் இடம் பெறும் என்று அமைச்சர்களும், பா.ஜனதாவினரும் கூறி வருகிறார்கள்.

    அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வும் இடம் பெறுவது உறுதியாகி இருப்பதாக அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தெரிவித்தனர். த.மா.கா. தங்களுக்கு 2 தொகுதிகள் வேண்டும் என்று வற்புறுத்தி வந்தது.

    த.மா.கா.வுக்கு ஒரு இடம் தருவதாகவும், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று அ.தி.மு.க. தரப்பில் வற்புறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    தற்போது அ.தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க.வை இழுப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    அ.தி.மு.க. கூட்டணிக்கு அந்த கட்சி வந்தால் அதற்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டும். இந்த கூட்டணி முடிவானால் த.மா.கா.வுக்கு ஒரு தொகுதி கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

    அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறாவிட்டால் த.மா.கா.வுக்கு 2 தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இன்னும் 2 நாளில் இதுபற்றி முடிவு செய்யப்பட்டு விடும் என்று த.மா.கா. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #TamilMaanilaCongress #GKVasan #ADMK
    தமிழகம் - புதுவையில் மொத்தம் உள்ள 40 இடங்களில் அ.தி.மு.க.வுக்கு 25 தொகுதிகள், பா.ஜனதாவுக்கு 15 தொகுதிகள் என முடிவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #ADMK #BJP #ParliamentElection
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. - பா.ஜனதா இடையே கூட்டணி உருவாகி உள்ளது.

    ரகசியமாக நடந்து வந்த கூட்டணி பேச்சுவார்த்தைகள் தற்போது அதிகாரப்பூர்வமாக நடந்து வருகிறது.

    பா.ஜனதா கட்சியின் மேலிட பொறுப்பாளரான மத்திய மந்திரி பியூஷ் கோயல் நேற்று முன்தினம் சென்னை வந்து அ.தி.மு.க. தேர்தல் குழுவுடன் அதிகாரப்பூர்வ பேச்சு நடத்தினார்.

    பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரியுடன் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் அ.தி.மு.க. தரப்பில் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி மற்றும் வைத்திலிங்கம் எம்.பி., கே.பி.முனுசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர்.



    3 மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களான முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் கலந்து கொண்டதாக இப்போது தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த பேச்சுவார்த்தையில் தொகுதி உடன்பாடு மற்றும் கூட்டணியில் எந்தெந்த கட்சிகளை சேர்ப்பது அந்த கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு பற்றி முடிவு செய்யப்பட்டது. யார்- யாருக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பதில் மட்டும் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது.

    அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், புதுவை என்.ஆர்.காங்கிரஸ், த.மா.கா. ஆகிய கட்சிகள் இடம் பெறுவது உறுதியாகியுள்ளது.

    தமிழகம் - புதுவையில் மொத்தம் உள்ள 40 இடங்களில் அ.தி.மு.க.வுக்கு 25 தொகுதிகள், பா.ஜனதாவுக்கு 15 தொகுதிகள் என முடிவாகி உள்ளதாக தெரிகிறது. அ.தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுக்கும், பா.ஜனதா தனது கூட்டணி கட்சிகளுக்கும் தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும்.

    அ.தி.மு.க. தனது தொகுதிகளில் த.மா.கா., என்.ஆர்.காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சிக்கு தலா 1 தொகுதியை விட்டுக் கொடுத்தது போக 22 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    பா.ஜனதா தனது தொகுதிகளில் பா.ம.க.வுக்கு 4 தொகுதிகளும், தே.மு.தி. க.வுக்கு 3 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்தது போக மீதம் உள்ள 8 தொகுதிகளில் போட்டியிடும் என தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த தொகுதி பங்கீடுகள் பேச்சுவார்த்தை அளவில் மட்டுமே உள்ளது. இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை முடிவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இருகட்சி தலைவர்களும் இணைந்து வெளியிடுவார்கள்.

    பியூஷ்கோயல் வருகிற திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை மீண்டும் சென்னை வந்து இறுதிக்கட்ட பேச்சு நடத்துகிறார். அதன் பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

    பா.ஜனதாவுக்கு தென் சென்னை, கோவை, கன்னியாகுமரி, சிவகங்கை, தென்காசி, பெரம்பலூர் ஆகிய 6 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், மீதம் உள்ள 2 தொகுதிகள் திருப்பூர், பொள்ளாச்சியா? அல்லது நெல்லை, ராமநாதபுரமா? என்பதில் மட்டும் இன்னும் முடிவாகவில்லை என்று கூறப்படுகிறது.

    பா.ம.க.வுக்கு அரக்கோணம், ஆரணி, தர்மபுரி தவிர சிதம்பரம் அல்லது விழுப்புரம் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

    என்.ஆர்.காங்கிரசுக்கு புதுவையும், தே.மு.தி.க.வுக்கு மத்திய சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் தே.மு.தி.க. கூடுதலாக சேலம் தொகுதியையும் கேட்கிறது. அந்த தொகுதியை விட்டுக் கொடுக்க அ.தி.மு.க. மறுத்து விட்டது.

    வருகிற 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாசி பவுர்ணமி நல்ல நாள் என்பதால் அன்றைய தினம் தொகுதி பங்கீடு விவகாரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட திட்டமிட்டுள்ளதாக அ.தி.மு.க. வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. #ADMK #BJP #ParliamentElection
    தமாகாவை பொறுத்தவரை மக்கள் விரும்பும் வெற்றிக் கூட்டணியில் இடம் பெறும் என ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். #GKVasan
    சென்னை:

    த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தேசிய கட்சிகளும் சரி மாநில கட்சிகளும் சரி கூட்டணி அமைத்து தான் போட்டியிட வேண்டி உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்க இன்னும் நாட்கள் இருப்பதால் கூட்டணி இன்னும் இறுதியாகவில்லை. த.மா.கா.வை பொறுத்தவரை மக்கள் விரும்பும் வெற்றிக் கூட்டணியில் இடம் பெறுவது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

    அந்த வகையில் தொடர்ந்து பல்வேறு நிலைகளிலும் கருத்துக்கள் கேட்டு வருகிறோம் முக்கியமான பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வியூகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்டணி அமைத்து தான் போட்டி என்பது இல்லை.

    எந்தக் கூட்டணியில் இடம் பெறுவது என்பது பற்றிய அதிகாரப்பூர்வ முடிவை எட்டுவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகலாம் தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டிருப்பது அந்தக் கட்சியின் அகில இந்திய தலைமையின் அதிகாரத்துக்கு உட்பட்டது.

    அந்தக் கட்சியின் தலைவர் மற்றும் புதிதாக பொறுப்பேற்றுள்ள நியமன தலைவர்களுக்கும் த.மா.கா. சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார் பேட்டியின்போது துணை தலைவர் கோவை தங்கம், சக்தி வடிவேல், சேகர் மாநில செயலாளர் என்.டி.எஸ். சார்லஸ், டி.எம்.பிரபாகர், மாவட்ட தலைவர் சைதை மனோகரன் உள்பட பலர் உடன் இருந்தனர். #GKVasan
    வருகிற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம் என்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். #gkvasan

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் போதுமான மழை பெய்தும் கடும் வறட்சி நிலவுகிறது. அரசின் நீர் மேலாண்மை திட்டம் தோல்வியடைந்துள்ளது. நீர் நிலைகள் தூர்வாரப்படவில்லை. இதன் காரணமாக கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை.

    தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிக வறட்சி ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணை 2 முறை நிரம்பியும் டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை. இதன் காரணமாக பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு, விவசாயிகளுக்கு விவசாயப்பணிகள் செய்ய தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    எனவே நீர் மேலாண்மை திட்டத்தை மேம்படுத்த வேண்டும். குட்கா விவகாரத்தில் உண்மை நிலையை அரசு தெரியப்படுத்த வேண்டும். வருகிற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம்.

    இவ்வாறு ஜி,கே. வாசன் கூறினார். #gkvasan

    வருகின்ற தேர்தல்களில் த.மா.கா. அசைக்க முடியாத சக்தியாக உலா வரும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
    சென்னை:

    காமராஜரின் 116-வது பிறந்த நாளையொட்டி அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியில் த.மா.கா. பொதுக் கூட்டம் மாவட்ட தலைவர் அண்ணாநகர் ராம்குமார் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு பேசினார்:-

    காமராஜரின் பொற்கால ஆட்சியை மீண்டும் தருவதற்கு நூறு சதவீதம் தகுதி பெற்ற ஒரே கட்சியாக த.மா.கா. வளர்ந்து கொண்டு வருகிறது. காமராஜருக்கு பிறகு யாராலும் தமிழகத்தில் இதுவரை நல்ல ஆட்சியை தர முடியவில்லை. இன்றைய அரசியல்வாதிகள் சுய நலத்தோடு செயல்பட்டு வருகிறார்கள். பொது நலம், தொலைநோக்கு பார்வை யாரிடமும் இல்லை குறுகிய பார்வை மட்டுமே உள்ளது.

    இன்று விளை நிலங்கள் எல்லாம் வீட்டு மனைகளாக மாறி வருகின்றன. காமராஜர் ஆட்சியில் கிராமங்கள் தோறும் பள்ளிகள் கட்டினார். இன்று கிராமங்கள் தோறும் டாஸ்மாக் கடைகள் திறந்து வருகிறார்கள்.

    லோக் ஆயுக்தா சட்டத்தை சீர்திருத்தங்களுடன் பலமான சட்டமாக தமிழகத்தில் வந்தால் மட்டுமே மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

    வருகின்ற தேர்தல்களில் த.மா.கா. அசைக்க முடியாத சக்தியாக உலா வரும். தமிழகத்தில் மட்டும் அல்ல இந்தியா முழுமைக்கும் கூட்டணி அரசியல் தான் வருங்காலத்தில் ஏற்படும். இது காலத்தின் கட்டாயம். யதார்த்த உண்மை ஆகும். நல்லவர்கள் இணைந்து நாடாளும் நேரம் நெருங்கி கொண்டு இருக்கிற இந்த முக்கிய தருணத்தில் த.மா.கா. நிர்வாகிகள், தொண்டர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வெற்றிக்கு அடித்தளமாக செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ×