search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 109458"

    அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜபெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
    அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜபெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    மாலையில் கல்யாணசுந்தரவள்ளி தாயாருக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடந்தது. இதைதொடர்ந்து உற்சவர் தாயார் புறப்பாடு மேளதாளம் முழங்க நடந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    இதற்காக நவராத்திரி கொலுமண்டபம் வண்ண விளக்குகளாலும், தோரணங்களும், கதம்ப மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் காட்சி அளித்தார்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா நேற்று தொடங்கியது. வருகிற 18-ந் தேதி வரை விழா நடக்கிறது. இதையொட்டி சாமி சன்னதி 2-ம் பிரகாரத்தில் கொலு அலங்காரம் வைக்கப்பட்டுள்ளது. அங்கு சாமியின் திருவிளையாடலை விளக்கும் கதைகள், சிவனின் வடிவங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் காட்சி அளித்தார்.

    விழாவையொட்டி 18-ந் தேதி வரை தினமும் மாலை 6 மணிக்கு மூலஸ்தான சன்னதியில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் நடந்து கல்பபூஜை, சகஸ்ரநாம பூஜை போன்ற பூஜைகள் நடைபெறுகிறது. அந்த பூஜை காலங்களில் பக்தர்களின் தேங்காய் உடைத்தல் மற்றும் அர்ச்சனை மூலஸ்தான மீனாட்சி அம்மனுக்கு நடத்தப்படாது. ஆனால் கொலு மண்டபத்தில் எழுந்தருளும் உற்சவ மீனாட்சி அம்மனுக்கு தேங்காய் உடைப்பு மற்றும் அர்ச்சனைகள் செய்யப்பட்டது.

    நவராத்திரி விழாவையொட்டி தினமும் திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை இசை கச்சேரி, கர்நாடக சங்கீதம், தோற்பாவை கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவையொட்டி பொற்றாமரை குளம், அம்மன், சாமி சன்னதி, பிரகாரங்கள், கோபுரங்கள் போன்றவை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.



    கோவிலில் வரையப்பட்டிருந்த நீர்கோலம் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.

    இந்த விழாவையொட்டி 18-ந் தேதி வரை மூலவர் மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் நேரம், திரை போடும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி காலை 4.30 மணி முதல் 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், 5 மணியில் இருந்து 7 மணி வரை சாமி தரிசனம். பின்னர் 7 மணியில் இருந்து 8 மணி வரை திரை போட்டு அபிஷேகம் நடைபெறுகிறது. பின்பு 8 மணியில் இருந்து 10 மணி வரை சாமி தரிசனம் செய்யலாம். அதை தொடர்ந்து 10 மணியில் இருந்து 10.45 மணி வரை திரை போடப்படும். பின்பு 10.45 மணியில் இருந்து 12.45 வரை சாமியை தரிசனம் செய்யலாம். மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை நடை அடைக்கப்படுகிறது.

    பின்பு மாலை 4 மணியில் இருந்து 5.30 மணி வரை தரிசனம் செய்யலாம். 5.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை மீனாட்சி அம்மனுக்கு அபிஷேக, அலங்காரம் நடைபெறும். அந்த நேரங்களில் கொலுமண்டபத்தில் உள்ள உற்சவர் மீனாட்சியை தரிசனம் செய்யலாம். பின்பு இரவு 7.30 மணியில் இருந்து 10 மணி வரை அம்மனை தரிசனம் செய்யலாம். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் ஆகியார் செய்து உள்ளனர். 
    நவராத்திரி பண்டிகை தொடங்கியுள்ளதை முன்னிட்டு ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் ரெயில்வே பயணிகளுக்கு சிறப்பு உணவை அறிமுகம் செய்துள்ளது. #IRCTC #Navaratri
    மும்பை:

    இந்திய பண்டிகைகளில் நவராத்திரி மிகவும் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக, வடமாநிலங்களில் நவராத்திரி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.

    இதுபோன்ற பண்டிகை காலங்களில் ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகளை கவரும் வகையில் ஐ.ஆர்.சி.டி.சி. சிறப்பு உணவுகளை வழங்கி வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக, நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு ரெயில்களில் சிறப்பு உணவை, விராட் கா கானா என்ற பெயரில் ஐ.ஆர்.சி.டி.சி. வழங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



    நவராத்திரி கொண்டாடப்படும் இந்த 9 நாட்களிலும் இந்த சிறப்பு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    மேலும், இந்த சிறப்பு உணவு நாக்பூர், அம்பாலா, ஜெய்ப்பூர், இடார்சி, ஜான்சி, நாசிக், ரத்லம், மதுரா, நிஜாமுதீன் மற்றும் லக்னோ ஆகிய ரெயில் நிலையங்களில் கிடைக்கும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #IRCTC #Navaratri
    நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதே ஆகும். ஒவ்வொரு படிகளும் ஒவ்வொரு தத்துவத்தை மிக எளிதாக சொல்லிச் செல்கின்றன.
    ‘ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை பூஜித்தால், அவர்களுக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்’ என்று தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளார். அன்னையின் அந்த வார்த்தையை சுரதா என்ற மன்னன் கடைப்பிடித்து, தன் பகைவர்களை வீழ்த்தியதோடு, பலவிதமான இன்னல்களில் இருந்தும் விடுதலை அடைந்தான். எனவே கொலு பொம்மைகளை வைத்து வழிபாடு செய்வது என்பது நவராத்திரி விழாவில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது.

    மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. ஒன்பது படிகள் அமைப்பது மரபு. ஒவ்வொரு படியிலும் ஐதீகப்படி பொம்மைகளை வைக்க வேண்டும். பொம்மைகளை வைக்கும் மரபையும், அந்த பொம்மைகள் கூறும் தத்துவத்தையும் இங்கு காணலாம்.

    நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதே ஆகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பது என்பது பொருளாகும். ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூஜிப்பவர்களுக்கு சகல நலங்களையும் தருவேன் என்று அம்பிகையே கூறியிருக்கின்றார். நவராத்திரியில் வீட்டில் வைக்கப்படும் கொலு மேடையானது, 9 படிகள் கொண்ட தாக அமைக் கப்பட்டு இருக்க வேண்டும். ஒவ்வொரு படிகளும் ஒவ்வொரு தத்துவத்தை மிக எளிதாக சொல்லிச் செல்கின்றன.

    முதலாம் படி

    கொலு மேடையில் கீழிருந்து முதல் படியில் ஓரறிவு கொண்ட உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரங்களின் பொம்மைகளை கொலுவாக வரிசைப்படுத்தி வைக்க வேண்டும்.

    இரண்டாம் படி

    அடுத்ததாக அமைந்த இரண்டாவது படியில் ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற உயிர்களின் பொம்மைகளை கொலுவில் வைக்க வேண்டும்.

    மூன்றாம் படி


    மூன்றறிவு படைத்த உயிரினங்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகளை கொண்டு மூன்றாவது படியை அமைக்க வேண்டும்.

    நாலாம் படி

    நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகளை வைத்து நான்காவது படியை அலங்கரிக்க வேண்டும்.

    ஐந்தாம் படி

    ஐந்தறிவு கொண்ட உயிர்களான மிருகங்கள் மற்றும் பறவைகளின் பொம்மைகளை வைத்து ஐந்தாவது படியை அமைக்க வேண்டும்.

    ஆறாம் படி

    இந்த படி மனிதர்களுக்கு உரியது. எந்த உயிருக்கும் இல்லாத சிந்திக்கும், சிரிக்கும் சக்தியை இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ளார். அத்தகைய ஆறாவது அறிவு கொண்ட மனிதர்களின் பொம்மைகளை வைத்து ஆறாவது படியை நிர்மாணிக்க வேண்டும்.

    ஏழாம் படி

    மனித நிலையிலிருந்து உயர்நிலையை அடைந்த சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள் கொண்டு ஏழாவது படியை அமைக்க வேண்டும்.

    எட்டாம் படி

    தேவர்கள், அட்டதிக்கு பாலகர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள், தேவதைகள் போன்றோரின் பொம்மைகளைக் கொண்டு எட்டாவது படியை அலங்காரம் செய்ய வேண்டும்.

    ஒன்பதாம் படி

    பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முப்பெரும் தேவர்கள், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி தேவி போன்ற முப்பெரும் தேவிகள் ஆகிய தெய்வங்களையும், அவர்களின் நடுவில் நடுநாயகமாக ஆதிபராசக்தியின் உருவ பொம்மையையும் வைத்து ஒன்பதாவது படியை நிறைவு செய்ய வேண்டும்.

    மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாகவே இதுபோன்ற வரிசையில் கொலு அமைக்கச் சொல்லப்பட்டுள்ளது.
    முப்பெரும் தேவியர்களை 9 நாட்களும் வழிபடுவதுடன், ஒவ்வொரு நாளும் வழிபட வேண்டிய தெய்வங்களையும், படைக்க வேண்டிய நைவேத்தியங்களையும் இங்கே பார்க்கலாம்.
    முப்பெரும் தேவியர்களை வழிபடும் நவராத்திரி விழாவில், ஒன்பது நாட்கள் சிறப்பான வழிபாடு நடைபெறும். அந்த ஒன்பது நாட்களும் அன்னையை ஒவ்வொரு தேவியாக பாவித்து வழிபடுவதுடன், அவர்களுக்கு ஏற்ற நைவேத்தியத்தையும் படைத்து வழிபாடு செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் வழிபட வேண்டிய தெய்வங்களையும், படைக்க வேண்டிய நைவேத்தியங்களையும் இங்கே பார்க்கலாம்.

    முதலாம் நாள்:

    சக்தியை முதல்நாளில் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும். தெத்துப்பல் திருவாயும், முண்ட மாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்தவள் என்பதால் சாமுண்டா எனவும் அழைப்பர். கோபம் கொண்டவளாக காட்சி யளிக்கும் இந்த அன்னையின் கோபம் மற்றவர்களை திருத்தி நல்வழிப்படுத்தவே ஆகும்.

    நைவேத்தியம்: சர்க்கரைப் பொங்கல்.

    இரண்டாம் நாள்

    இரண்டாம் நாளில் அன்னையை வராகி தேவியாக வழிபட வேண்டும். வராகி (பன்றி) முகமும் தெத்துபற்களும் உடையவள். சூலமும் உலக்கையும் ஆயுதங்கள். பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள். தனது தெத்து பற்களால் பூமியை தூக்கியிருப்பவள். இவளுக்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு. இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள். ஏவல், பில்லி,சூனியம், எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபட இவளின் அருளைப் பெறுவது அவசியம்.

    நைவேத்தியம்: தயிர் சாதம்.

    மூன்றாம் நாள்

    மூன்றாம் நாளில் சக்தித் தாயை இந்திராணியாக வழிபட வேண்டும். இவளை மாகேந்தரி, சாம்ராஜதாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை அழித்தவள். தேவலோகத்தை பரிபாலனம் செய்பவளும் இவளே ஆகும். பெரிய பெரிய பதவிகளை அடைய விரும்புபவர்களுக்கு இவளது அருட்பார்வை கட்டாயம் வேண்டும். மற்றும் வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க, பதவியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க அருள்புரிபவளும் இந்த அன்னையே ஆவாள்.

    நைவேத்தியம்: வெண் பொங்கல்.

    நான்காம் நாள்

    இந்நாளில் சக்தித்தாயை வைஷ்ணவி தேவியாக கருதி வழிபாடு செய்ய வேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை தன் கையில் கொண்டிருப்பவள். தீயவற்றை சம்ஹரிப்பவள். இவளின் வாகனம் கருடன் ஆகும்.

    நைவேத்தியம்: எலுமிச்சை சாதம்.

    ஐந்தாம் நாள்

    ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ்வரி தேவியாக கருதி வழிபாடு செய்ய வேண்டும். அன்னை மகேஸ்வரனின் சக்தியாவாள். திரிசூலம், பிறைச் சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளி இருப்பவள். அளக்க முடியாத பெரும் சரீரம் உடையவள். சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற இந்த அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.

    நைவேத்தியம்: புளியோதரை.

    ஆறாம் நாள்

    இந்த நாளில் அன்னையை கவுமாரி தேவியாக நினைத்து வழிபடவேண்டும். மயில் வாகனமும், சேவல் கொடியும் கையில் ஏந்தியவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். சகல பாவங்களையும் விலக்கி விடுபவள். வீரத்தை தருபவள்.

    நைவேத்தியம்: தேங்காய் சாதம்.

    ஏழாம் நாள்

    அன்னையை ஏழாம் நாள் அன்று மகா லட்சுமியாக கருதி வழிபட வேண்டும். கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு, வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள். விஷ்ணு பத்தினியாவாள். பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள். தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தருபவள். இந்த அன்னையை வேண்டினால் அனைத்து செல்வங்களும் வந்து சேரும்.

    நைவேத்தியம்: கல்கண்டு சாதம்.

    எட்டாம் நாள்

    இன்று அன்னையை நரசிம்மகி ஆக வழிபாடு செய்ய வேண்டும். மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள் வேண்டும்.

    நைவேத்தியம் : சர்க்கரைப் பொங்கல்.

    ஒன்பதாம் நாள்


    இன்று அன்னையை பிராக்மி ஆக வழிபட வேண்டும். அன்ன வாகனத்தில் இருப்பவள். வாக்கிற்கு அதிபதியாவாள். ஞான சொரூபமானவள். கல்விச் செல்வம் பெற இந்த அன்னையின் அருள் மிகவும் அவசியமாகும்.
    நவராத்திரி விரதத்தைப் போன்று எளிமையானதும் அதேநேரம் மிகுந்த பலன்களைத் தரக்கூடியதுமான வேறு விரதங்கள் இல்லை என்கின்றன புராணங்கள்.
    நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் இருப்பவர்கள், உபவாசியாக இருந்து பூஜித்த பிறகே உணவருந்தி பஞ்சனை மற்றும் பாயில் படுக்காமல் தரையில் விரிப்புகளில் படுக்க வேண்டும். பிரதமைத் திதியில் ஹஸ்த நட்சத்திரம் கூடுமானால் அது உன்னதமான நாளாகும். அந்த நாளில் தேவி தன்னைப் பூஜித்தவருக்கு வேண்டியவற்றையெல்லாம் கொடுப்பாள் என்று சொல்வார்கள்.

    நவராத்திரி வழிபாடு சக்தி மகிமையை விளக்கும் மனிதனின் முக்கிய தேவைகளான கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றையும் வேண்டி அவற்றுக்கு அதிபதிகளான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை என்று மூன்று சக்தி அம்சங்களையும் வழிபடுதலே இவ்விரதத்தின் நோக்கமாகும்.

    முதல் மூன்று நாட்களில் வீரத்தையும், தைரியத்தையும் வேண்டி பராசக்தியை வழிபடுதல் வேண்டும். அடுத்த மூன்று நாட்களும் செல்வத்தை வேண்டி மஹாலட்சுமியை வழிபடவேண்டும். இறுதி மூன்று நாட்களும் கல்வி, அறிவு, சகல கலை ஞானங்கள் என்பவற்றை வேண்டிச் சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும்.

    சுமங்கலிப் பெண்களை இவ்விரத நாட்களில் வீட்டுக்கு அழைத்து அவர்களைப் பராசக்தியாகப் பாவித்துக் கொலுவின் அருகில் அமரச் செய்து வணங்கி மஞ்சள், குங்குமம், பட்டு, நாணயம், தாம்பூலம் என்பவற்றை வழங்குவர்.

    நவராத்திரி காலத்தில் எண்ணெய் தேய்த்து முழுகுதல் விலக்கப்பட்டுள்ளது. ஊசிநூல்கொண்டு தைத்தலும் கூடாது. புரட்டாசி சனி விரதம் இந்த நவராத்திரி நாட்களில் வரும்போது எண்ணெய் தேய்க்காது நீராடி அந்த விரதத்தை யும் கைகொள்ளலாம். எண்ணெய் எரித்து வழிபடுதலும் செய்யலாம்.

    நவராத்திரி விரதத்தை முறையாகக் கைக்கொள்ள விரும்புவோர் முதலெட்டு நாட்களிலும் பகலில் உணவின்றி இரவில் பூஜை முடித்தபின் பால்பழம், பலகாரம் என்பவற்றை உண்டு, நவமியில் உபவாசமிருந்து பத்தாம் நாள் விஜயதசமியன்று காலை எட்டரை மணிக்கு முன் பாரணை செய்தல் வேண்டும். முடியாதவர்கள் முதலெட்டு நாளிலும் ஒரு நேர உணவுண்டு, கடைசி நாளில் பால் பழம் மட்டும் கொள்ளலாம்.

    நவராத்திரி விரதத்தைப் போன்று எளிமையானதும் அதேநேரம் மிகுந்த பலன்களைத் தரக்கூடியதுமான வேறு விரதங்கள் இல்லை என்கின்றன புராணங்கள். தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஸ்வர்க்கம், மோட்சம் என ஒரு மனிதனுக்கு வேண்டிய அனைத்தையும் தரக்கூடிய விரதம் நவராத்திரி விரதம்.

    குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிட்டும்.படிப்பில் மந்தமாக இருப்பவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், உயர்ந்த நிலையை அடையலாம். ஒன்பது நாட்களும் வழிபட இயலாதவர்கள் அஷ்டமியன்று துர்கையை வழிபட்டு அன்று இரவு விழித்திருந்தால், அவர்களின் வாழ்க்கையை துர்காதேவியானவள் கண்விழித்துக் காப்பாள்.

    அதேபோன்று, மூல நட்சத்திரம் அல்லது நவமியன்று நாம் அன்றாடம் வேலைக்கு உபயோகப்படுத்தும் பொருட்களையும், குழந்தைகளின் புத்தகங்களையும் பூஜையில் வைத்து வழிபட்டு, அன்று அவற்றைப் பயன்படுத்தாமல், அடுத்த நாள் விஜயதசமியன்று அந்தப் பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்துதல் சிறப்பு. 
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற உள்ள நவராத்திரி விழாவை முன்னிட்டு பழனியில் இருந்து திருப்பதிக்கு 800 கிலோ பூக்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படும். விழாவுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாடாமல்லி, செவ்வந்தி, பிச்சிப்பூ உள்ளிட்ட பூக்கள் திருப்பதிக்கு கொண்டு செல்லப்படும். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து திருப்பதிக்கு நேற்று முன்தினம் 800 கிலோ பூக்கள் அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக பூக்கள் அனைத்தும் பழனி மாரியம்மன் கோவில் வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டது.

    பின்னர் அதனை சாக்கு மூட்டைகளில் அடைத்து லாரியில் ஏற்றும் பணி நடந்தது. பழனி கந்தவிலாஸ் பாஸ்கரன், கோவில் கண்காணிப்பாளர் முருகேசன், புஸ்ப கைங்கரிய சபா நிர்வாகி மருதுசாமி உள்பட பலர் பூக்களை சாக்கு மூட்டைகளில் அடைக்கும் பணியை மேற்கொண்டனர். திருவிழா நிறைவடையும் வரை பழனியில் இருந்து பூக்கள் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதேபோல் திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இருந்தும் பூக்களை நேரடியாக திருப்பதிக்கு அனுப்ப ஏற்பாடு செய்திருப்பதாகவும் புஸ்ப கைங்கரிய சபா நிர்வாகிகள் தெரிவித்தனர். 
    நவராத்திரி நாளில் தேவி தன்னைப் பூஜித்தவருக்கு வேண்டியவற்றையெல்லாம் கொடுப்பாள் என்று சொல்வார்கள். இன்றைய தினம் சொல்ல வேண்டிய ஸ்லோகத்தை பார்க்கலாம்.
    கிராஹுர் தேவீம் த்ருஹிண க்ருஹிணீ மாகமவிதோ
    ஹரே: பத்நீம் பத்மாம் ஹரஸ ஹசரீ மத்ரித நயாம்!
    துரீயா காபி த்வம் துரதிகம் நிஸ்ஸீம மஹிமா
    மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷி!!

    பொருள்: இறைவனோடு இணைந்திருக்கும் சக்தியே! வேதங்களின் உட்பொருளை உணர்ந்தவர்கள் உன்னை சரஸ்வதி என்றும், லட்சுமி என்றும், சிவனின் பத்தினியாகிய பார்வதி என்றும் பலவிதமாகக் கூறுகிறார்கள். மனதிற்கும் வாக்கிற்கும் அப்பாற்பட்டவளே! எல்லையற்ற மகிமை கொண்டவளே! மகாமாயாவாக இருந்து உலகை இயக்கச் செய்து பிரமிக்க வைப்பவளே! அருள்புரிவாயாக.

    பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவில், திருஆவினன்குடி கோவிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை 9 மணிக்கு விநாயகர் பூஜை, காலசந்தி பூஜை நடந்தன. இதையடுத்து சிவன், நடராஜர், சிவகாமி அம்மன், சோமாஸ்கந்தர், பெரியநாயகி அம்மன், முத்துகுமாரசுவாமி வள்ளி-தெய்வானை மற்றும் கோவில் யானை கஸ்தூரிக்கும் காப்புக்கட்டு நிகழ்ச்சி நடந்தது.

    இதைத் தொடர்ந்து உச்சிகால பூஜையில் திருஆவினன்குடி கோவிலிலும், மலைக்கோவிலிலும் விநாயகர், மூலவர், சின்னக்குமாரர், சண்முகர், வள்ளி தெய்வானை, துவாரபாலகர்கள் ஆகியோருக்கு காப்புக்கட்டு நடைபெற்றது. காப்பு கட்டு நிகழ்ச்சியை கோவில் பட்டத்துகுருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணிய குருக்கள் உள்ளிட்ட குருக்கள் செய்தனர்.

    நவராத்திரி விழாவையொட்டி பழனி முருகன் கோவிலில் நேற்று முதல் வருகிற 19-ந்தேதி வரை 11 நாட்கள் சுவாமி புறப்பாடு நடைபெறாது . மேலும் வருகிற 19-ந்தேதி விஜயதசமி விழாவில் மலைக்கோவிலில் மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையும், 1.30 மணிக்கு சாயரட்சை பூஜையும், 3.05 மணிக்கு பராசக்திவேல் புறப்பாடும், உடன் சன்னதி அடைக்கப்படும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.

    இதையடுத்து பராசக்திவேல் மலைக்கோவிலில் இருந்து புறப்பட்டு பெரியநாயகி அம்மன் கோவில் வந்து சேர்கிறது. பின்னர் அங்கிருந்து தங்கக்குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி பராசக்திவேலுடன் சென்று கோதைமங்கலம் கோதை ஈஸ்வரர் கோவிலில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து பராசக்திவேல் மலைக்கோவில் வந்து சேரும். இரவு 10 மணிக்கு சம்ரோட்சண பூஜையும், பின்னர் ராக்கால பூஜையும் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் செய்து வருகின்றனர். 
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று (புதன்கிழமை) கோலாகலமாக தொடங்குகிறது.
    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று (புதன்கிழமை) காலை கோலாகலமாக தொடங்குகிறது. அதையொட்டி இன்று காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை தங்கத் திருச்சி வாகன வீதிஉலா, மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை ஊஞ்சல் சேவை, இரவு 8 மணியில் இருந்து 10 மணிவரை பெரிய சேஷ வாகன வீதிஉலா நடக்கிறது.

    நாளை (வியாழக்கிழமை) காலை சிறிய சேஷ வாகன வீதிஉலா, இரவு அம்ச வாகன வீதிஉலா, 12-ந்தேதி காலை சிம்ம வாகன வீதிஉலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதிஉலா, 13-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு சர்வ பூபால வாகன வீதிஉலா, 14-ந்தேதி காலை விழாவின் ‘சிகர’ நிகழ்ச்சியாக மோகினி அவதாரத்தில் பல்லக்கு வாகன வீதிஉலா, இரவு 7 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணிவரை கருட வாகன வீதிஉலா (கருட சேவை) நடக்கிறது.

    15-ந்தேதி காலை அனுமந்த வாகன வீதிஉலா, மாலை 4 மணியில் இருந்து 6 மணிவரை புஷ்ப வாகன வீதிஉலா, இரவு யானை வாகன வீதிஉலா, 16-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா, 17-ந்தேதி காலை தங்கத் தேரோட்டம், இரவு குதிரை வாகன வீதிஉலா, 18-ந்தேதி காலை 6 மணியில் இருந்து 9 மணிவரை பல்லக்கு உற்சவம், தங்கத் திருச்சி வாகன வீதிஉலா மற்றும் ஸ்ரீவாரி புஷ்கரணியில் சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி, இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை பல்லக்கு உற்சவம் நடக்கிறது.

    இத்துடன் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. அதைத்தொடர்ந்து 19-ந்தேதி திருமலை அருகே உள்ள பார்வேடு மண்டபத்தில் பார்வேடு உற்சவம் நடக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்க உள்ள நவராத்திரி பிரம்மோற்சவ விழாவையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை அங்குரார்ப்பணம் நடக்கிறது. புற்று மண் சேகரித்து, சிறப்புப் பூஜை செய்யப்படுகிறது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நாளை (புதன்கிழமை) தொடங்கி, 18-ந்தேதி வரை 9 நாட்கள் வெகுவிமரிசையாக நடக்கிறது. அதனை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை அங்குரார்ப்பணம் நடக்கிறது.

    இன்று இரவு 7 மணியில் இருந்து 8 மணிவரை சேனாதிபதியான விஸ்வசேனரை ஏழுமலையான் கோவிலில் இருந்து ஊர்வலமாக மேற்கு மாடவீதியில் உள்ள வசந்த மண்டபத்துக்கு அர்ச்சகர்கள் கொண்டு வருகிறார்கள். அத்துடன் புற்று மண் சேகரித்து வசந்த மண்டபத்துக்குக் கொண்டு வரப்படுகிறது. அங்கு விஸ்வசேனருக்கும், புற்று மண்ணுக்கும் சிறப்புப் பூஜை செய்யப்படுகிறது.

    பின்னர் விஸ்வசேனர், புற்று மண்ணை வசந்த மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக ஏழுமலையான் கோவிலுக்குள் எடுத்து வந்து ரெங்கநாயக்கர் மண்டபத்தில் உள்ள யாக சாலையில் வைக்கிறார்கள். அந்தப் புற்று மண் நவராத்திரி பிரம்மோற்சவ விழா முடியும் வரை யாக சாலையிலேயே இருக்கும். அந்தப் புற்று மண்ணில் நவ தானியங்கள் தூவப்படுகின்றன.

    அந்த நவ தானியங்கள் முளையிட்டு வளர்ந்ததும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நிறைவு நாளில் எடுத்துச் சென்று, திருமலையில் உள்ள புனித தீர்த்தத்தில் போடப்படுகிறது.

    அங்குரார்ப்பணத்தையொட்டி இன்று வசந்த உற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன. நாளை (புதன் கிழமை) காலை நவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக தொடங்குவதாக திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் நவராத்திரி விழா நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இது குறித்த விரிவான செய்தியை அறிந்து கொள்ளலாம்.
    திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் நவராத்திரி விழா நாளை தொடங்குகிறது. நாளை முதல் வருகிற 13-ந்தேதி வரை மாலை 5.30 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு நவராத்திரி மண்டபம் வந்தடைகிறார். மாலை 6.30 மணிக்கு கொலு ஆரம்பித்து இரவு 7.30 மணிக்கு முடிவடையும். இரவு 7.30 மணி முதல் 8 மணி வரை வெள்ளிச்சம்பா அமுது செய்தல், தீர்த்தகோஷ்டி பொது ஜனசேவையுடன் நடைபெறும். இரவு 8.15 மணிக்கு தாயார் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    வருகிற 14-ந்தேதி மாலை 4.15 மணிக்கு தாயார் புறப்பட்டு மாலை 5 மணிக்கு நவராத்திரி மண்டபம் சேர்ந்தடைகிறார். மாலை 5.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை பொதுஜன சேவை நடைபெறும். மாலை 6.30 மணிக்கு கொலு ஆரம்பித்து இரவு 8 மணிக்கு முடிவடையும். இரவு 8 மணி முதல் இரவு 8.30 மணி வரை வெள்ளிச்சம்பா அமுது செய்தல், தீர்த்தகோஷ்டி, பொது ஜன சேவையுடன் நடைபெறும். இரவு 8.45 மணிக்கு தாயார் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    வருகிற 18-ந்தேதி சரஸ்வதி பூஜையன்று மாலை 4.30 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்கு நவராத்திரி மண்டபம் சேர்ந்தடைகிறார். மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். இரவு 8 மணி முதல் இரவு 8.30 மணி வரை வெள்ளிச்சம்பா அமுது செய்தல், தீர்த்தகோஷ்டி, பொது ஜனசேவையுடன் நடைபெறும். இரவு 8.45 மணிக்கு தாயார் மண்டபத்தில் புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடடைகிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர். 
    ×