search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவிகள்"

    மஞ்சூர் அருகே சாலை வசதி கேட்டு பள்ளி மாணவ– மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    மஞ்சூர்:

    மஞ்சூர் அருகே உள்ளது பேலிதளா ஸ்ரீராம் நகர். இங்கு 70–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஸ்ரீராம் நகரில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் கூலி தொழிலாளர்கள் ஆவர். பஸ் வசதி இல்லாத காரணத்தால், அருகிலுள்ள கன்னேரிக்கு சென்று அங்கிருந்து பஸ் ஏறி பல்வேறு இடங்களுக்கு சென்று கூலி வேலை செய்கின்றனர். தவிர குழந்தைகளும் கன்னேரிக்கு வந்து அங்கிருந்து மந்தனை, எடக்காடு பகுதிகளில் இயங்கி வரும் பள்ளிகளுக்கு சென்று படித்து வருகின்றனர். ஆரம்பத்தில் ஒத்தையடி பாதையாக இருந்த ஸ்ரீராம் நகர்– கன்னேரி வழியில் அரசு தார்ச்சாலை அமைத்து கொடுத்தது. அதன்பிறகு பல ஆண்டுகள் கடந்து விட்டதால் தற்போது அந்த சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

    இதற்கிடையே அந்த சாலையை மேம்படுத்த பாலகொலா ஊராட்சி சார்பில் ரூ.13 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கின. நேற்று முன்தினம் பொக்லைன் எந்திரம் மூலம் சாலையோரத்தில் இருந்த புதர் செடிகள் மற்றும் மண்ணை அகற்றும் பணி நடந்தது. அப்போது சாலை அமைந்துள்ள இடம் தனக்கு சொந்தமானது எனக்கூறி தனியார் ஒருவர் பணியை நிறுத்தியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்ரீராம் நகரை சேர்ந்த பள்ளி மாணவ– மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சாலை வசதி கேட்டு நேற்று காலை 9 மணியளவில் கன்னேரி பஜாரில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். கொட்டும் மழையிலும் நடந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த குந்தா தாசில்தார் ஆனந்தி, ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜ் மற்றும் அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஸ்ரீராம் நகர்– கன்னேரி சாலையை அனைவரும் பயன்படுத்த எந்த தடையும் இல்லை, அதை மேம்படுத்துவதை யாரும் தடுக்க முடியாது, மேலும் அந்த சாலை தனக்கு சொந்தம் எனக்கூற எந்தவொரு தனிநபருக்கும் உரிமை இல்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் கன்னேரி பஜாரில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #tamilnews
    அரியலூர் மாவட்டத்தில் ஆசிரியை உள்பட 3 பேர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை. இவரது மகள் பிரியா (வயது 17). இவர் அரியலூரில் உள்ள தனியார் நர்சிங்கல்லூரியில் படித்து வந்தார்.

    அதே பகுதியை சேர்ந்தவர் ராமர். இவரது மகள் ராணி (வயது 16). இவர் அரியலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார்.

    பிரியாவும், ராணியும் தோழிகள் ஆவர். 2 பேரும் சேர்ந்த பஸ் மூலம் அரியலூருக்கு சென்று படித்து விட்டு வீடு திரும்புவது வழக்கம். இந்நிலையில் கடந்த 3-ந் தேதி பிரியாவும், ராணியும் கல்லூரி-பள்ளிக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றனர்.

    பின்னர் அவர்கள் 2 பேரும் வீட்டிற்க்கு திரும்பவில்லை. அவர்களது பெற்றோர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். எங்கும் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து அரியலூர் டி.எஸ்.பி. மோகன்தாஸ், இன்ஸ்பெக்டர் அழகேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். அரியலூர் மாவட்டம் தா.பழுர் அடுத்த அணைகுளம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் கிருஷ்ணவேணி (வயது 23). இவர் அதே பகுதியில் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.கடந்த 24-ந் தேதி வீட்டில் இருந்த தனது சான்றிதழ்களை எடுத்து கொண்டு பள்ளிக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடிப் பார்த்தனர். எங்கும் தேடியும் கிருஷ்ணவேணி கிடைக்கவில்லை. இது குறித்து தா.பழுர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். #tamilnews
    வேலூரில் நேற்று பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    வேலூர்:

    வேலூர், திருவண்ணா மலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்தது. நேற்று மாலை முதல் பரவலாக மழை பெய்ய தொடங்கியது.இரவிலும் தொடர்ந்து மழை பெய்தது. விடிய விடிய பெய்த மழை காலையிலும் நீடித்து பெய்தது.

    ஆற்காடு பகுதியில் அதிகபட்சமாக 30 மில்லி மீட்டர் மழை பதிவானது. அரக்கோணத்தில் தொடர்ந்து மழை பெய்ததால் பஸ் நிலையம் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது. வேலூரில் இன்று காலை பலத்த மழை பெய்தது. பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலகத்திற்கு செல்பவர்கள் மிகுந்த சிரமப்பட்டனர்.

    தொடர்ந்து வேலூரில் மழை பெய்து கொண்டே இருந்தது. கிரீன் சர்க்கிளில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையோரம் குளம்போல் மழைநீர் தேங்கி கிடக்கிறது. மேலும் தாழ்வான பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

    வாணியம்பாடி, ஆம்பூர், அரக்கோணம், காட்பாடி பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி சென்றனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு பகுதியில் பலத்த மழை கொட்டியது. திருவண்ணாமலை, போளூர், தண்டராம்பட்டு பகுதியில் பலத்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்த ஓடியது.மற்ற இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    திருவண்ணாமலை மகா தீப மலை முழுவதும் மேக கூட்டங்கள் தவழ்ந்து செல்கின்றன. இந்த காட்சி ரம்மியமாக உள்ளது. இதேபோல ஜவ்வாது மலை பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மலையில் நீருற்றுகள் ஏற்பட்டுள்ளன.

    வேலூர், திருவண்ணா மலை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    வேலூர், திருவண்ணா மலை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    வேலூர்- 12.1

    ஆம்பூர்- 22.4

    வாணிய ம்பாடி-10.6

    ஆலங் காயம்- 9.2

    காவேரிப்பாக்கம்- 15.6

    திருப்பத்தூர்-18.3

    மேல் ஆலத்தூர்- 1.2

    திருவண்ணாமலை- 21.2

    ஆரணி- 15.2

    செங்கம்- 4.6

    சாத்தனூர் அணை-17.7

    போளூர்- 20.8

    தண்டராம்பட்டு- 18.6

    கலசப்பாக்கம்- 31.

    இந்திய அளவில் தொற்று நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று ஈரோட்டில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசினார். #mylswamyannadurai

    ஈரோடு:

    இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில் ஆண்டு தோறும் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கான அறிவியல் ஊக்குவிப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இருந்து இளம் விஞ்ஞானிகளாக தேர்வு செய்யப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு இந்த பயிற்சி வழங்கப்படுகிறது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 150 மாணவ-மாணவிகளுக்கு ‘இன்ஸ்பையர்’ எனப்படும் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் திறன் ஊக்குவிப்பு பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. வருகிற அக்டோபர் 3-ந் தேதி வரை நடைபெறும் இந்த முகாமின் தொடக்க விழா நடந்தது.

    விழாவுக்கு நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் வி.சண்முகன் தலைமை தாங்கினார். நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரி ஆறுமுகம், நந்தா கல்வி அறக்கட்டளை செயலாளர் நந்தகுமார் பிரதீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் முன்னாள் இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். மேலும், அறிவியல் தொழில்நுட்பத்துறையில் வாய்ப்புகளும், சவால்களும் என்ற தலைப்பில் பேசினார்.

    அடுத்த மாதம் புதுடெல்லியில் ரஷ்ய நாட்டை சேர்ந்த, தேர்ந்து எடுக்கப்பட்ட 20 மாணவ-மாணவிகளுடன் மனித வாழ்நாளை அதிகரிப்பது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக, பரீட்சார்த்த முறையில் உங்களோடு கலந்துரையாட இருக்கிறேன்.

    தற்போது தொற்று நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன. போர் தொடர்பான அச்சம் இருந்தாலும், போர்கள் நடைபெறாமல் தவிர்க்கும் நிலை உள்ளது. பசி இருந்தாலும் பட்டினியால் மரணம் என்பது இல்லை. எனவே இந்த 3 முக்கிய காரணிகளும் மனித வாழ்நாளை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

    இவ்வாறு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

    விழாவில் அவரது மனைவி வசந்தி அண்ணாதுரை, சென்னை பேராசிரியர் சுரேஷ்காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். முடிவில் ஒருங்கிணைப்பாளர் கே.அப்துல் நன்றி கூறினார். #mylswamyannadurai

    காரிமங்கலம் அரசு விடுதியில் தங்கி இருக்கும் மாணவிகளை தண்ணீர் எடுத்துவர காப்பாளர்கள் தொடர்ந்து வற்புறுத்துதால் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் அரசு மாணவிகள் விடுதி இயங்கி வருகிறது. இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி அருகிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். பழமையான இந்த விடுதியில் அடிப்படை வசதிகள் இன்றி மாணவிகள் தவிக்கிறார்கள். குறிப்பாக கட்டிடத்தின் சிமெண்டு மேற்கூரைகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் விழுமோ? என்ற நிலையில் உள்ளது. மாணவிகளுக்கான குளியல் அறை, கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையில் இருக்கிறது. 

    இந்த நிலையில் மாணவிகளை விடுதி முன்பாக அமைக்கப்பட்டிருக்கும் குடிநீர் தொட்டியில் இருந்து விடுதியில் சமையல் செய்வதற்கும் மற்றும் கழிப்பறைகளுக்கும் தண்ணீர் எடுத்துவர காப்பாளர்கள் தொடர்ந்து வற்புறுத்துவதாக கூறப்படுகிறது. இதனால் மாணவிகள் குடங்களில் தண்ணீர் எடுத்து சுமந்து செல்கிறார்கள். 

    ஏழ்மையான நிலையில் இருக்கும் இந்த மாணவிகளை குடங்களில் தண்ணீர் எடுத்துவர வலியுறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
    பாப்பிரெட்டிப்பட்டி:

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பட்டு கோணம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 35 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    பள்ளியின் தலைமை ஆசிரியராக பாபு (வயது51) என்பவர் இருந்து வருகிறார். இவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், மாணவ, மாணவிகளை தகாத வார்த்தைகளால் திட்டியும் அடித்தும் வந்துள்ளதாகவும் 1077 என்ற அவசர எண்ணுக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில், முதன்மை கல்வி அதிகாரி ராமசாமி, மாவட்ட கல்வி அதிகாரியான குழந்தைவேலுவை விசாரிக்க உத்தரவிட்டார்.

    நேற்று பாப்பி ரெட்டிப்பட்டி வட்டார கல்வி அதிகாரி, உமாதேவி மற்றும் அதிகாரிகள் ஆகியோர் பள்ளிக்கு சென்று அங்கு படிக்கும் 35 மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்களிடமும், மாணவிகளின் பெற்றோரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் தலைமை ஆசிரியர் பாபு (வயது51) மாணவிகள் சிலரிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

    மேலும் அவர் வகுப்பறையில் புகையிலை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாணவ, மாணவிகளின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினார்கள்.

    அதைத் தொடர்ந்து விசாரணை நடத்திய குழுவினர் முதன்மை கல்வி அதிகாரி ராமசாமியிடம் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர். இதையடுத்து தலைமை ஆசிரியர் பாபுவை சஸ்பெண்ட் செய்ய அவர் உத்தரவிட்டார்.

    இது பற்றி முதன்மை கல்வி அதிகாரி ராமசாமி கூறியதாவது:-

    எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் தலைமை ஆசிரியரின் நடவடிக்கை குறித்து மாணவிகளிடம் தனித்தனியே விசாரணை நடத்தப்பட்டது. இதில் பாலியல் தொல்லையில் அவர் ஈடுபட்டது உண்மையென தெரியவந்தது. இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன். இன்று அதற்கான கடிதம் தலைமை ஆசிரியர் பாபுவிடம் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    மாநில அளவிலான தடகள போட்டிகளில் சாதனை படைத்த மாணவிகளை கலெக்டர் சாந்தா பாராட்டினார்.
    பெரம்பலூர்:

    சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான இளையோர் தடகள போட்டிகளில் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதி மாணவிகள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு 4 தங்கப்பதக்கம், 3 வெள்ளிப்பதக்கம், 2 வெண்கலப்பதக்கம் பெற்றுள்ளனர். மேலும் சென்னையில் நடைபெற்ற ரிலையன்ஸ் பவுன்டேசன் மூலம் நடத்தப்பட்ட மாநில அளவிலான தடகளபோட்டிகளில் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதி மாணவிகள் கலந்துகொண்டு 4 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் மற்றும் சீனியர் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் ரூ.25 ஆயிரத்திற்கான பரிசுத்தொகையும் பெற்று சாதனை படைத்து பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இதையடுத்து அவர்கள் மாவட்ட கலெக்டர் சாந்தவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இவர்கள் புனித தோமினிக் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தொடர்ந்து வருகிற 15-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை ஆந்திர மாநிலம் குண்டூரில் நடைபெற உள்ள தென்னிந்திய அளவிலான தடகளபோட்டிகளில் தமிழக அணி சார்பாக கலந்துகொள்ள உள்ள மாணவிகள் பிரியதர்ஷினி, சுபாஷினி, சங்கீதா, கிருத்திகா, பவானி, நாகபிரியா ஆகியோரும் மாவட்ட கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளையும், பயிற்சியாளர் கோகிலா ஆகியோரை மாவட்ட கலெக்டர் பாராட்டினார். மேலும் தென்னிந்திய அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் மாணவிகள் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார். அப்போது மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராமசுப்பிரமணியராஜா உடனிருந்தார். 
    வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வது தொடர்பாக விழிப்புணர்வு ஊர்வலம் பெரம்பலூரில் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    பெரம்பலூர்:

    இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2019 அன்று தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கல், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளவும் கடந்த 1-ந்தேதி முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 31-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெற ஆணையிட்டுள்ளது.

    அதன்படி வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கல், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்வதற்காக பொதுமக்களிடம், அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் பெரம்பலூரில் நடைபெற்றது. பெரம்பலூர் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    ஊர்வலத்தில் கலந்துகொண்ட கல்லூரி மாணவ- மாணவிகள் 1.1.2019-ம் நாளன்று நீங்கள் 18 வயது பூர்த்தியானவரா? இன்றே வாக்காளராக உங்கள் பெயரை பதிவு செய்வீர், எழுவீர், வாக்காளராக இன்றே பதிவு செய்வீர் என்பது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர். ஊர்வலம் சங்குப்பேட்டை, பாலக்கரை வழியாக புதிய நகராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது. ஊர்வலத்தில் குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் இருபாலர் கல்லூரி, சாரதா மகளிர் கல்லூரிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை வழங்கி சென்றனர்.

    இதில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், பெரம்பலூர் தாசில்தார் பாரதிவளவன், தேர்தல் பிரிவு தாசில்தார் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
    சென்னிமழை அருகே அரசு டவுன் பஸ்சில் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட கண்டக்டரை மாணவிகளே போலீசில் ஓப்படைத்தனர்.
    சென்னிமலை:

    சென்னிமலையில் இருந்து தடம் எண் சி-8 அரசு டவுன் பஸ் எழுமாத்தூர் அரசு கல்லூரி வரை தினமும் சென்று வருகிறது.சென்னிமலை பகுதியில் இருந்து 20 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தினமும் இலவச பஸ் பாஸ் மூலம் காலையில் கல்லூரிக்கு சென்று மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.

    இந்நிலையில் இந்த பஸ்சில் கண்டக்டராக பணியாற்றும் துடுப்பதி கல்லாகுளத்தை சேர்ந்த அம்மாசை என்பவர் மகன் அய்யப்பன் (31) கல்லூரி மாணவிகளிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு வந்தாராம். தொடர்ந்து இதுபோலவே கல்லூரி மாணவிகளின் மீது மோதுவது, அவர்களின் காது அருகே வந்து சினிமா பாட்டு பாடுவது என தொடர்ந்து டார்ச்சர் கொடுத்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று மாலை பஸ்சில் கூட்டம் இல்லாத போதும் வழக்கம் போல மாணவிகளிடம் சில்மி‌ஷம் செய்துள்ளார். இதனால் வெகுண்டு எழுந்த மாணவிகள் கண்டக்டர் அய்யப்பனை பிடித்து சென்னிமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மாணவிகளின் புகாரின் பேரில் அய்யப்பனிடம் சென்னிமலை இன்ஸ்பெக்டர் சுகவனம் (பொறுப்பு) விசாரணை மேற்கொண்டார். அரசு கண்டக்டருக்கு ஆதரவாக தொழிற்சங்கத்தினரும், போக்குவரத்து கழக அதிகாரிகளும் மாணவிகளிடம் சமரச முயற்சி மேற்கொண்டனர்.

    ஆனாலும் பாதிக்கப்பட்ட மாணவிகள் இதனை ஏற்க மறுத்து உறுதியுடன் இருந்தனர். இதனால் இரவு 10 மணிக்கு மேல் கண்டக்டர் அய்யப்பன் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தில் கீழ் வழக்கு போடப்பட்டு கைது செய்யப்பட்டார். இன்று காலை கொடுமுடி நீதிமன்றத்தில் அய்யப்பன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். #tamilnews
    பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவ-மாணவிகள் கைக்குட்டை மற்றும் துப்பட்டா போன்றவற்றால் முகத்தை மூடி வாகனத்தில் வரவோ, நடமாடவோ கூடாது என்று அண்ணா பல்கலைக்கழகம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. #AnnaUniversity
    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைப்பு உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ. மற்றும் பி.டெக் படிப்புகளில் மாணவர் சேர்க்கை முடிந்து வகுப்புகள் தொடங்கியுள்ளது.

    அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பாடங்களை படிக்கும் முறை ஆகியவை குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை ‘ராக்கிங்’ செய்யாமல் தடுக்கும் வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.



    அண்ணா பல்கலைக்கழகத்தின், கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி, அழகப்பா செட்டியார் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் கட்டடவியல், கலை படிப்புகளுக்கான ஆர்கிடெக்ட் கல்லூரி வளாகங்களில் ராக்கிங் தடுப்பு வாகனம் ரோந்து வர உத்தரவிடப்பட்டுள்ளது.

    பல்கலைக்கழகத்தின் வளாகத்தில், ராக்கிங் தடுப்பு குழுவினர் கண்காணிப்பு பணியை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    மேலும் மாணவ-மாணவிகளுக்கு ஒழுக்கம் தொடர்பான கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

    வளாக பகுதிகளில் அரட்டை அடித்து நேரத்தை வீணடிக்கக்கூடாது, வகுப்புகளை புறக்கணிக்காமல் பங்கேற்க வேண்டும். மாணவ-மாணவிகளிடம் ராக்கிங் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.

    பல்கலைக்கழக வளாகத்திற்குள் காதில் ஹெட்போன் கருவி அணிந்து வரக்கூடாது, மொபைல் போன் ஹெட்செட்டை கல்லூரி வளாகத்தில் பயன்படுத்தக்கூடாது.

    மாணவ-மாணவிகள் கைக்குட்டை மற்றும் துப்பட்டா போன்றவற்றால் முகத்தை மூடி வாகனத்தில் வரவோ, நடமாடவோ கூடாது. வாகனத்தில் வரும்போது ஹெல்மெட் அணிந்திருந்தால் அதில் முகத்தை மூடும் கண்ணாடியை திறந்து விட்டிருக்க வேண்டும்.

    ஒவ்வொரு மாணவியும் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும். பேராசிரியர்களும் பல்கலைக்கழக ஊழியர்களும், காவலாளிகளும் அடையாள அட்டையை காட்டச் சொன்னால் மறுப்பு தெரிவிக்காமல் காட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. #AnnaUniversity

    அரக்கோணம் மற்றும் வேலூரில் மாணவிகளை குடை பிடிக்க வைத்த ஆசிரியைகள் மீது நடவடிக்கை பாய்கிறது. #Teachers

    அரக்கோணம்:

    பள்ளிக்கல்வி விளையாட்டு துறை சார்பில் அரக்கோணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த போட்டியில் முள்வாய் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.

    போட்டிகள் நடந்தபோது, 2 ஆசிரியைகள் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு வெயிலில் இருந்து தங்களை தற்காத்து கொள்வதற்காக மாணவிகளை குடை பிடிக்க வைத்தனர். போட்டி முடியும் வரை மாணவிகள் நின்றபடி ஆசிரியைகளுக்கு குடை பிடித்தனர்.

    ஆசிரியைகளுக்கு மாணவிகள் குடை பிடித்த போட்டோ வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. இதுதொடர்பாக, விசாரணை நடத்த அரக்கோணம் மாவட்ட கல்வி அதிகாரி குணசேகரனுக்கு, முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் உத்தரவிட்டார்.

    விசாரணையில், மாணவிகளை குடை பிடிக்க வைத்த ஆசிரியைகள், அரசு நிதியுதவி பெறும் மேல்நிலை பள்ளி மற்றும் தனியார் பள்ளியில் பணிபுரிவது தெரியவந்தது. அந்த பள்ளிகளின் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து, வேலூர் நேதாஜி மைதானத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாதாந்திர விளையாட்டு போட்டிகள் நேற்று முன்தினம் நடந்தது.

    அப்போது, வெயில் கொளுத்தியது. போட்டியில் நடுவராக இருந்த ஆசிரியை மாணவிகளை தனக்கு குடை பிடிக்க வைத்தார். இது, பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    அரக்கோணத்தையடுத்து வேலூரிலும் ஆசிரியைகள் மாணவிகளை குடைபிடிக்க வைத்த சம்பவம் சர்ச்சையாக வெடித்தது. சமூக வலை தளங்களில் கல்வித்துறைக்கு எதிராக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.இதனால் கல்வித்துறையில் சலசலப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து, அரக்கோணம் மற்றும் வேலூரில் மாணவிகளை குடை பிடிக்க வைத்து சர்ச்சையில் சிக்கிய ஆசிரியைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். #Teachers

    மாணவிகள் ஆளுமை திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பழனிசாமி பேசினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் தன்னாட்சி கல்லூரி மாணவிகள் பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி கல்லூரி கலையரங்கில்) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

    ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் 1952 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கல்லூரியில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவிகள் கல்வி பயின்று இன்று தமிழ்நாட்டை கடந்து உலகளவில் பல்வேறு நாடுகளில் உயர் பதவிகளில் இருந்து வருகின்றனர். இன்றைய நவீன சூழலில் மாணவ, மாணவியர்கள் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தங்களுடையே பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடையேயான பகிர்தலை குறைத்து வருகின்றனர். அவ்வாறு இல்லாமல் தங்களுடைய பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களின் நல்ல ஆலோசனைகளை உள்வாங்கி அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    மேலும், அறிவு சார்ந்த புத்தகங்களை படிப்பதோடு இந்திய ஆட்சிப்பணி மற்றும் தமிழ்நாடு அரசால் நடத்தப்படுகின்ற அனைத்து போட்டி தேர்வினையும் எதிர்கொள்ள நீங்கள் உங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

    எனவே, இன்று புதிய உறுப்பினர்களாக பொறுப்பேற்றுக்கொண்ட மாணவிகளாகிய நீங்கள் உங்கள் ஆளுமைத் திறனை வளர்த்து தன்னம்பிக்கையுடன், கடின உழைப்பு, விடா முயற்சியுடன் வாழ்வை எதிர்கொண்டு நல்ல பணியில் சேர்ந்து பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில், உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அசோகன், எஸ்.வி.ஜி. விசாலாட்சி கல்லூயின் செயலாளர் திரவீந்திரன், கல்லூரி முதல்வர் கலைச்செல்வி, வரலாற்றுத்துறை தலைவர் பேராசிரியர் சரஸ்வதி, உடுமலை வட்டாட்சியர் தங்கவேல், நந்தினி ரவீந்திரன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×