search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அழகர்கோவில்"

    மதுரையில் கள்ளழகர் அணிந்திருந்த பட்டு வஸ்திரத்தை ஆண்டாளுக்கு அணிவிக்கும் நிகழ்ச்சி ஆண்டாள் கோவிலில் நடைபெற்றது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும்போது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய மாலையை அணிந்து கொண்டு இறங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் மதுரையில் ஆற்றில் அழகர் இறங்கும் போது ஆண்டாள் சூடிய மாலை அணிந்து கொண்டு இறங்கினார்.

    இதற்காக ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை ஆண்டாள் கோவில் நிர்வாகத்தினர் மதுரைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கு பதிலாக மதுரையில் கள்ளழகர் அணிந்திருந்த பட்டு வஸ்திரம் மதுரை அழகர் கோவில் நிர்வாகத்தின் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு அனுப்பப்பட்டது.

    இந்த பட்டு வஸ்திரத்தை ஆண்டாளுக்கு அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை ஆண்டாள் கோவிலில் நடைபெற்றது. இதற்காக ஆண்டாள்-ரெங்கமன்னார் குறடு மண்டபத்தில் காட்சி அளித்தனர். பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து அழகர் அணிந்திருந்த பட்டு வஸ்திரம் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமன்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்திருந்தனர்.
    கள்ளழகர் அதிர்வேட்டுகள் முழங்க அழகர்கோவில் சேர்ந்தார். திருஷ்டி பூசணிக்காய் சுற்றி பக்தர்கள் வரவேற்றனர். தொடர்ந்து அழகர் திருக்கோவிலுக்குள் சென்று இருப்பிடம் சேர்ந்தார்.
    மதுரை சித்திரை பெருந்திருவிழாவையொட்டி கடந்த 17-ந்தேதி, அழகர்மலையில் இருந்து கள்ளழகர் தங்கப்பல்லக்கில் மதுரை புறப்பட்டார். சிகர நிகழ்ச்சியாக தங்கக்குதிரை வாகனத்தில் கடந்த 19-ந்தேதி வைகை ஆற்றில் எழுந்தருளி லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து 20-ந்தேதி கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தலும், அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சியும், 21-ந்தேதி இரவு பூப்பல்லக்கு விழாவும் நடந்தது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பன்திருப்பதி உள்ளிட்ட மண்டபங்களில் கள்ளழகர் எழுந்தருளினார். பின்னர் அப்பன்திருப்பதியில் விடிய, விடிய திருவிழா நடைபெற்றது.

    தொடர்ந்து நேற்று பகல் 11 மணி அளவில் அழகர்கோவில் கோட்டைவாசல் பகுதிக்கு கள்ளழகர், தங்கப்பல்லக்கில் திரும்பினார். அங்கு 18-ம்படி கருப்பணசாமி கோவில் முன்பு அழகருக்கு சிறப்பு பூஜைகளுடன் வையாழி நிகழ்ச்சியும், தீபாராதனையும் நடந்தது.

    பின்னர் அதிர்வேட்டுகள், வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடனும் கோவில் யானை சுந்தரவள்ளி முன்னால் செல்ல கள்ளழகர் தங்கப்பல்லக்கில் வந்தார். அங்கு “கோவிந்தா... கோவிந்தா...” என கோஷத்துடன் பக்தர்கள் பூக்கள் தூவி வரவேற்பு அளித்தனர். பின்னர் 21 பூசணிக்காய்களில் கற்பூரம் ஏற்றி அழகரை சுற்றிவந்து திருஷ்டி கழித்தனர். தொடர்ந்து அழகர் திருக்கோவிலுக்குள் சென்று இருப்பிடம் சேர்ந்தார்.

    இந்த விழாவில் தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர்கள், திருக்கோவில் பணியாளர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    இந்த ஆண்டு 27 உண்டியல் பெட்டிகள் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக மதுரைக்கு சென்றுவந்தன. மொத்தம் 451 மண்டகபடிகளில் அழகர் எழுந்தருளியது குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த தானியங்களை பாரம்பரிய வழக்கப்படி நெற்களஞ்சியத்தில் செலுத்தினர்.

    இன்று (புதன்கிழமை) உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.
    மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அழகர்மலைக்கு புறப்பட்ட அவர், இன்று காலை அங்கு சென்றடைகிறார்.
    மதுரை சித்திரை திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து 17-ந் தேதி மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. இதற்கிடையே அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் கடந்த 17-ந் தேதி மதுரைக்கு புறப்பட்டார். அவரை புதூர் மூன்றுமாவடி, தல்லாகுளம் பகுதியில் பக்தர்கள் வரவேற்கும் எதிர்சேவை நடந்தது.

    அதை தொடர்ந்து கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் கடந்த 19-ந் தேதி எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்கினார். பின்னர் கள்ளழகர் தேனூர் மண்டபத்தில் எழுந்தருளி அங்கு மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்தார்.

    அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் அழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய, விடிய நடந்தது. அங்கிருந்து அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க கோலத்துடன் கிளம்பிய கள்ளழகர் நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளினார்.

    அங்கிருந்து கருப்பணசாமி கோவிலில் இரவு 2.30 மணிக்கு பூப்பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளி அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து அழகர்மலை நோக்கி புறப்பட்டார். தல்லாகுளத்தில் இருந்து நேற்று காலை புறப்பட்ட அவர் அவுட்போஸ்ட், ரிசர்வ் லைன், புதூர், முன்றுமாவடி வழியாக இரவு அப்பன்திருப்பதியை சென்றடைந்தார். அங்கு விடிய, விடிய நடந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசனம் செய்து மலைக்கு வழியனுப்பினர்.

    பின்னர் கள்ளழகர் பல்வேறு மண்டபங்களில் எழுந்தருளி இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு மேளதாளம் முழங்க அழகர்கோவில் மலையை அடைகிறார். அங்கு அவரை பக்தர்கள் வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கள்ளழகர் மலைக்கு சென்றதும் மதுரை சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
    அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கு ஏற்ப அந்த வருடத்தில் நல்லது கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    மதுரை வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகருக்கான ஆடைகள், அலங்காரப் பொருட்கள் அனைத்தும் ஒரு பெரிய மரப்பெட்டியில் இருக்கும். இந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா.என பல வண்ணங்களில் பட்டுப்புடவைகள் இருக்கும். கோவிலின் தலைமைப் பட்டர் அந்தப் பெட்டிக்குள் கைவிட்டு ஏதாவது ஒரு புடவையை எடுப்பார். அவர் கையில் எந்த வண்ணப் புடவை சிக்குகிறதோ, அது அழகருக்கு அணிவிக்கப்படும். அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கு ஏற்ப அந்த வருடத்தில் நல்லது கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும்.சிவப்புப் பட்டு கட்டிவந்தால் அந்த வருடம் போதிய விளைச்சல் இருக்காது. நாட்டில் அமைதியும் இருக்காது. பேரழிவு ஏற்படும்.

    வெள்ளை மற்றும் ஊதாப்பட்டு கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும். மஞ்சள்பட்டு கட்டிவந்தால், அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் நடக்கும். இப்படி நம்பிக்கை இருப்பதால் ‘ஆற்றில் இறங்க வரும்போது அழகர் என்ன கலர் பட்டு உடுத்தி வரப் போறாரோ எனப் பக்தர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
    பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். இதனை 10 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். #Kallalagar #ChithiraiThiruvila
    மதுரையில் ஆண்டு தோறும் நடைபெறும் சித்திரை திருவிழா வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியாகும். இது விழா மட்டுமல்ல. வைணவம் - சைவம் இணையும் முத்திரை பதிக்கும் வைபவமாகும்.

    சிவபெருமான் - விஷ்ணு பெருமாள் இருவரையும் மக்கள் ஒன்றாக தரிசித்து விழா எடுத்ததுதான் சித்திரை திருவிழா. இந்த விழாவைக்காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் மதுரை வருவதுண்டு.

    இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழாவில் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கலயாணம், தேரோட் டம் 12 நாட்கள் விமரிசையாக நடந்தது. இந்த விழாக்களின் போது ஏராளமான சிறுவர்-சிறுமிகள், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் மற்றும் பல்வேறு கடவுள் வேடம் அணிந்து வீதி உலா சென்றனர்.

    இந்த விழாவை கண்டு தரிசனம் பெற்றமக்கள் அடுத்து எதிர்பார்த்தது கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தை தான். மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுக்கவும் மீனாட்சியின் திருக்கல்யாணத்தை காணவும் அழகர் மலையில் இருந்து சுந்தர்ராஜ பெருமாள் கடந்த 17-ந்தேதி தோளுக்கினியான் வேடத்தில் புறப்பட்டார்.

    அழகர் கோவிலின் காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பண்ண சாமியிடம் காவல் பொறுப்பை ஒப்படைத்த சுந்தர்ராஜ பெருமாள் அங்கிருந்து கள்ளர் திருக்கோலத்தில் மதுரை நோக்கி புறப்பட்டார்.

    அவருக்கு முன்பாக கள்ளர் வேடமணிந்த பக்தர்கள். துள்ளல் ஆட்டம் போட்டு ஆடிப்பாடி வந்தனர். மதுரை வந்த கள்ளழகரை ஏராளமான மண்டகப்படிகளில் பக்தர்கள் வரவேற்றனர்.

    நேற்று காலை மூன்று மாவடியில் பக்தர்கள் கள்ளழகருக்கு எதிர் சேவை கொண்டு வரவேற்பு கொடுத்தனர். அதன் பின்னர் புதூர் மாரியம்மன், ரிசர்வ் லைன் மாரியம்மன் கோவில் பகுதிகளுக்கு சென்றுவிட்டு இரவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் கள்ளழகர் எழுந்தருளினார்.

    அங்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர்மாலை மற்றும் அங்கவஸ்திரம் பெரு மாளுக்கு அணிவிக்கப் பட்டது. இதனை ஏராள மான பக்தர்கள் கண்டு தரிசனம் பெற்றனர்.

    இன்று அதிகாலை 2.30 மணிக்கு அங்கி ருந்து புறப்பட்ட கள்ள ழகர், தல்லாகுளம் கருப் பண்ணசாமி கோவிலுக்கு வந்ததும் அங்கு ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். நள் ளிரவு மட்டுமல்ல அதி காலையிலும் பக்தர்கள் அலைகடலென திரண்டு அழகரை தரிசித்தனர். இதனால கோரிப்பாளையம், தல்லாகுளம் வைகை ஆற்றுப் பாலம் என எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளே காணப்பட்டன.

    அதிகாலை 3 மணிக்கு கருப்பண்ணசாமி கோவிலில் இருந்து பச்சைப்பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றுக்கு புறப் பட்டார். அப்போது பக்தர்கள் கோவிந்தா... நாராயணா... என பக்தி கோ‌ஷம் எழுப்பினர்.



    வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவத்துக்காக வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று இரவே வைகை ஆற்றை வந்தடைந்தது. இன்று காலை 5.50 மணிக்கு வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார். 10 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். அவர் தங்க குதிரை வாகனத்தில் துள்ளிக்குதித்து வருவதைப் போல சீர்பாத தூக்கிகள் தங்கள் உள்ளங்கைகளில் தூக்கி போட்டு பிடித்தபடி ஆட்டம் போட்டது மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அமைந்தது.

    நீண்ட தூர பயணம் செய்து வந்த கள்ளழகரை குளிர்விக்கும் வகையில், கள்ளழகர் வேடமணிந்த பக்தர்கள் துருத்தி நீரை அழகர் மீது பாய்ச்சி குளிர வைத்தனர்.

    கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி இறங்கியதால், நாட்டில் விவசாயம் செழித்து நாடு செழிப்பாக இருக்கும் என அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தெரிவித்தனர்.

    தொடர்ந்து அவர்கள் வைகை ஆற்றின் கரையிலே தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். சிலர் முடி காணிக்கை செலுத்தினர். மேலும் சிலர் நாட்டுச்சர்ககரை நிரப்பப் பட்ட செம்பில் சூடம் ஏற்றி வழிபட்டனர். லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்ததால் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு இருந்தது. மாநகரில் போக்குவரத்தும் மாற்றி அமைக்கப்பட்டு இருந்தது. #Kallalagar #ChithiraiThiruvila

    ஆண்டாள் சூடிய மாலை, கிளிகள், வஸ்திரம் போன்றவை மேளதாளங்கள் முழங்க கோவிலுக்கு வெளியே கொண்டு வரப்பட்டன. அவை மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து மதுரை புறப்பட்டது.
    ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும்போது ஆண்டாள் சூடிய மாலை அணிந்து கொண்டு இறங்குவது வழக்கமாகும். அதேபோல் இந்த ஆண்டும் ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக ஆண்டாள் அணிந்த மாலை ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து புறப்படும் நிகழ்ச்சி நேற்று மதியம் நடைபெற்றது. அழகர் சூடுவதற்காக பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட மாலை நேற்று ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டது.

    பின்னர் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு பூஜைகள் முடிவடைந்தவுடன் ஒரு கூடையில் வைத்து ஆண்டாள் சூடிய மாலை, கிளிகள், வஸ்திரம் போன்றவை எடுத்து வைக்கப்பட்டு மேளதாளங்கள் முழங்க கோவிலுக்கு வெளியே கொண்டு வரப்பட்டன. அவை மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து மதுரை புறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமன்றி விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வந்து பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்திருந்தனர்.

    தங்கப்பல்லக்கில் கள்ளழகர் இன்று மாலை மதுரை புறப்படுகிறார். வழி நெடுகிலும் பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.
    திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று அழைக்கப்படுவதும், 108 வைணவ தலங்களில் ஒன்றானதுமான அழகர்கோவிலிலுள்ள கள்ளழகர் கோவி லாகும்.

    இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் உலக அளவில் பிரசித்தி பெற்றது, அழகரின் சித்திரை பெருந்திருவிழாவாகும்.

    இந்த திருவிழா கடந்த 15-ந் தேதி மாலை தொடங்கியது. இன்று (புதன் கிழமை) காலை சுவாமி புறப்பாடு நடந்தது. தொடர்ந்து மாலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் கள்ளழகர் பெருமாள் தங்கப் பல்லக்கில் 18-ம் படி கருப்பணசாமி கோவில் முன்பு வையாழியாகி மதுரை நோக்கி புறப்பட்டு செல்கிறார்.

    வழி நெடுகிலும் உள்ள பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, சுந்தரராஜன்பட்டி உள்ளிட்ட மண்டபங்களில் கள்ளர் திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 18-ந் தேதி அன்று அதிகாலையில், புதூர் மூன்றுமாவடி பகுதியில் எதிர்சேவை நடைபெறும். இரவு 9.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் தல்லாகுளம் பெருமாள் கோவிலில், கள்ளழகருக்கு திருமஞ்சனம் நடைபெறும். பின்னர் தங்க குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளியதும், ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார் ஆண்டாள் சூடிகொடுத்த திருமாலையை பெருமாளுக்கு சாற்றி பக்தர்களுக்கு சேவை சாதித்தல் நடைபெறும்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 5.45 மணிக்குமேல் 6.15 மணிக்குள் தங்ககுதிரை வாகனத்தில் மதுரை வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளி லட்சக்கணக்கான பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிப்பார்.

    தொடர்ந்து காலை 7.25 மணிக்கு வீரராகவ பெருமாளுக்கு மாலை சாத்துதல் நடைபெறும்.

    20-ந் தேதி காலையில் வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில், சே‌ஷ வாகனத்தில் கள்ளழகர் காட்சி தருவார்.

    பின்னர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் பிரசன்னமாகி கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாபம் நீக்கி மோட்சம் வழங்குதல் நடைபெறும். அன்று இரவு மதிச்சியம் ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி விடிய, விடிய நடைபெறும்.

    21-ந் தேதி இரவு மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகி, பூப்பல் லக்கு விழா நடைபெறும். 22-ந் தேதி இரவு அப்பன் திருப்பதியில் திருவிழா நடைபெறும்.

    23-ந் தேதி காலையில் கள்ளழகர் அழகர் கோவிலுக்கு சென்று இருப்பிடம் சேருகிறார். 24-ந் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    கள்ளழகர் எழுந்தருளும் 445 மண்டகபடிகளும் தயார் நிலையில் உள்ளது. அழகர் கோவில் முதல் வண்டியூர் வரை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    தண்ணீர் பீய்ச்சும் வைபவத்தின்போது கள்ளழகர் மீது வேதிப்பொருட்கள் கலந்த நீரை பீய்ச்சி அடிக்கக்கூடாது என்று கள்ளழகர் கோவில் செயல் அலுவலர் மாரிமுத்து பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதேபோன்று மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் சித்திரை பெருந்திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 19-ந்தேதி அதிகாலை கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் நடைபெறும்.

    இதற்காக இன்று (புதன்கிழமை) மாலை 6 மணி அளவில் கள்ளழகர் மதுரைக்கு புறப்படுகிறார். மதுரை வந்தபிறகு கள்ளழகர் மீண்டும் 23-ந்தேதி இருப்பிடம் திரும்புவார். இதற்கிடையே கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியன்று தண்ணீர் பீய்ச்சும் வைபவம் ராமராயர் மண்டபத்தில் நடைபெறும். இதில் பக்தர்கள் அவரவருக்குரிய வழக்கப்படி விரதமிருந்து இயற்கையான தோல் பையில் தண்ணீர் சுமந்து சிறிய குழாய் மூலம் சாமி மீது தண்ணீர் பீய்ச்சி தங்களது நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

    இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக பக்தர்கள் தோல் பையில் விரத ஐதீகத்தை மீறிய செயற்கையான மற்றும் அதிக விசையான குழாயை பொருத்தி தண்ணீரில் திரவியங்கள், வேதிப் பொருட்களை கலந்து பீய்ச்சி அடிக்கின்றனர். இதனால் சாமி, சாமியின் வாகனம் மற்றும் ஆபரணங்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. வேதி பொருட்கள் கலந்த தண்ணீரை பீய்ச்சி அடிப்பதால் பக்தர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் தண்ணீர் பாக்கெட்டுகளை பற்களால் கடித்து அந்த பாக்கெட் தண்ணீரை பீய்ச்சுகின்றனர். இதுபோன்ற செயல் ஐதீகத்தை மீறும் வகையில் உள்ளன.

    எனவே எதிர்வரும் சித்திரை திருவிழாவில் செயற்கையான தோல் பையில் அதிக விசையான குழாய் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடிக்கக்கூடாது. தண்ணீர் பாக்கெட்டுகளையும் பயன்படுத்தக்கூடாது. விரத ஐதீகத்தின்படி இயற்கையான தோல் பைகளை பயன்படுத்தி, சிறிய குழாய் பொருத்தி வேதிப் பொருட்கள், திரவியம் ஏதும் கலக்காமல் சுத்தமான தண்ணீரை மட்டும் சாமி மீது பீய்ச்சி அடிக்க வேண்டும். இந்த தகவலை கள்ளழகர் கோவில் செயல் அலுவலர் மாரிமுத்து கூறியுள்ளார்.

    சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் எழுந்தருளுவதற்காக அழகர்கோவிலில் இருந்து தங்க குதிரை, சேஷ மற்றும் கருட வாகனங்கள் மதுரைக்கு வந்தன.
    மதுரையை அடுத்த அழகர்கோவில் உள்ள கள்ளழகர் கோவிலில் சித்திரை பெருந் திருவிழா நேற்று தொடங்கியது. அப்போது மேளதாளம் முழங்க சாமி புறப்பாடு நடந்தது. திருவிழாவின் 2-ம் நாளான இன்று (செவ்வாய்க் கிழமை) சாமி புறப்பாடு நடைபெறும். நாளை மாலை தங்கப்பல்லக்கில் கள்ளழகர் பெருமாள் மதுரைக்கு புறப்பட்டு செல்கிறார். 18-ந்தேதி மதுரை புதூர் மூன்றுமாவடி பகுதியில் எதிர்சேவை நடைபெறும்.

    இதையடுத்து சிகர நிகழ்ச்சியாக வருகிற 19-ந்தேதி காலை 5.45 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் பெருமாள் வைகை ஆற்றில் எழுந்தருளி லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 20-ந்தேதி சேஷ வாகனத்தில் வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் கள்ளழகர் காட்சி தருவார்.

    பின்னர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் பிரசன்னமாகி கள்ளழகர் பெருமாள், மண்டூக முனிவருக்கு சாபம் நீக்கி மோட்சம் வழங்குதல் நடைபெறும். அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி நடைபெறும். 21-ந்தேதி இரவு மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கு விழா நடைபெறும். மறுநாள் அப்பன் திருப்பதியில் திருவிழா நடைபெறும். 23-ந்தேதி காலை கள்ளழகர் அழகர்கோவிலுக்கு வந்து இருப்பிடம் சேருவார். அதற்கு மறுநாள் திருவிழா உற்சவ சாந்தியுடன் நிறைவுபெறுகிறது.

    இந்தநிலையில் சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் எழுந்தருளுவதற்காக தங்க குதிரை, சேஷ மற்றும் கருடன் ஆகிய 3 வாகனங்களும் தனித்தனியே லாரிகள் மூலம் ஏற்றி நேற்று காலை அழகர்கோவில் இருந்து பாதுகாப்புடன் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் தங்க குதிரை வாகனம் தல்லாகுளம் பெருமாள் கோவிலிலும், வண்டியூர் வீரராகவபெருமாள் கோவிலில் சேஷ வாகனமும், தேனூர் மண்டபத்தில் கருட வாகனமும் தனித்தனியே போலீஸ் பாதுகாப்புடன் இறக்கி வைக்கப்பட்டுள்ளன.மேலும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக 27 உண்டியல் பெட்டிகளும் சாமியுடன் மதுரைக்கு அனுப்பி வைக்கப்படும். 445 மண்டகப் படிகளில் கள்ளழகர் காட்சிதருவார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர்கள், திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    தமிழகத்தில் நடைபெறும் திருவிழாக்களில் உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 4-ந்தேதி தொடங்குகிறது. 17-ந்தேதி திருக்கல்யாணம்
    தமிழகத்தில் நடைபெறும் திருவிழாக்களில் மதுரை சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.

    இந்த ஆண்டு சித்திரை திருவிழா ஏப்ரல் 4-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி மீனாட்சி- சுந்தரேசுவர் கோவிலில் 4-ந் தேதி வாஸ்து சாந்தி, நிலத்தேவர் வழிபாடு நடக்கிறது.

    இதைத்தொடர்ந்து ஏப்ரல் 8-ந் தேதி காலை 10.05 மணியில் இருந்து 10.29 மணிக்குள் கொடியேற் றத்துடன் முதல் நாள் திருவிழா தொடங்கு கிறது. இதைத்தொடர்ந்து ஏப்ரல் 8-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை சுவாமி மற்றும் அம்மன் தினமும் காலை மற்றும் இரவு பல்வேறு வாகனங்களில் 4 மாசி வீதிகளில் வீதி உலா நடைபெறுகிறது.

    ஏப்ரல் 9-ந் தேதி தங்க சப்பர வாகனம், பூத அன்ன வாகனம், 10-ந் தேதி தங்க சப்பர வாகனம், கைலாச பர்வதம், காமதேனு வாகனம், 11-ந் தேதி தங்கப் பல்லக்கு வாகனம், 12-ந் தேதி தங்க சப்பர வாகனம், தங்க குதிரை வாகனம், 13-ந் தேதி தங்கம், வெள்ளி ரி‌ஷப வாகனம், 14-ந் தேதி சிம்மாசனங்களில் நந்திகேஸ்வரர், யாழி வாகனம், 15-ந் தேதி பட்டாபிஷேகமும், 16-ந் தேதி திக்கு விஜயமும் நடக்கிறது.

    சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஏப்ரல் 17-ந் தேதி (புதன்கிழமை) காலை 9.50 மணியில் இருந்து 10.14 மணிக்குள் நடக்கிறது.

    அன்று இரவு 8 மணிக்கு கல்யாண கோலத்தில் சுவாமி, அம்மன் பூப்பல்லக் கில் வீதி உலா வந்து பக்தர் களுக்கு அருள் பாலிக்கின் றனர்.

    ஏப்ரல் 18-ந் தேதி காலை 5.45 மணிக்கு சுவாமி-அம்மன் தேரோட்டம் நடக்கிறது. ஏப்ரல் 19-ந் தேதி தீர்த்தவாரி, தேவேந்திர பூஜையுடன் இரவு அம்மன், சுவாமி ரி‌ஷப வாகனத்தில்புறப்பாடு செய்வதுடன் மீனாட்சி அம்மன் கோவில் சித் திரை திருவிழா நிறைவு பெறுகி றது.

    அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவையொட்டி அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் திருக்கல்யாண மண்டபத்துக்கு ஏப்ரல் 15-ந் தேதி எழுந்தருளுகிறார்.

    ஏப்ரல் 17-ந் தேதி திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து எழுந்தருளும் கள்ள ழகர் அங்கிருந்து மாலை 6 மணிக்கு மதுரைக்கு புறப் படுகிறார்.

    ஏப்ரல் 18-ந் தேதி காலை 6 மணிக்கு மதுரை மூன்றுமாவடி பகுதியில் பக்தர்கள் கள்ளழகரை எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நடக்கிறது. அன்று இரவு 9.30 மணிக்கு தல்லாகுளம் பெருமாள் கோவிலில் திருமஞ்சணமா கிறார்.

    தொடர்ந்து ஏப்ரல் 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தல்லாகுளம் கோவிலில் இருந்து அதிகாலையில் புறப்படும் கள்ளழகர், அதிகாலை 5.45 மணியில் இருந்து 6.15 மணிக்குள் வைகை ஆற்றில் இறங்கி எழுந்தருளுகிறார்.

    இதையடுத்து ஏப்ரல் 20-ந் தேதி ராமராயர் மண்டகப்படியில் இரவு முழுவதும் தசாவதார நிகழ்ச்சியும், 21-ந் தேதி இரவு மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சணமாகும் கள்ளழகர் 22-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு பூப்பல்லக்கில் புறப்பட்டு ஏப்ரல் 23-ந் தேதி காலை 10.30 மணிக்கு அழகர் கோவிலை சென்றடைகிறார்.

    ஏப்ரல் 24-ந் தேதி உற்சவ சாந்தியுடன் கள்ளழகர் திருவிழா நிறைவடைகிறது.
    அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் திருக்கல்யாண வைபவம் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது.
    திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று அழைக்கப்படுவதும், 108 வைணவ தலங்களில் ஒன்றானதும் மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில். இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமானது ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் திருக்கல்யாண வைபவம்.

    இந்த விழாவானது வருகிற 18-ந்தேதி காலை 9.45 மணி அளவில் தொடங்குகிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூமிதேவியருடன் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தொடர்ந்து அடுத்த 2 நாட்கள் அதே மண்டப வளாகத்தில் சாமி, தேவியர்களுடன் எழுந்தருள்வார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாண வைபவம் வருகிற 21-ந்தேதி, திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. அன்று காலை 11.15 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் மிதுன லக்கனத்தில் விழா நடைபெறுகிறது. மேலும் பலவண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட திருமண மேடையில் ஸ்ரீதேவி, பூமிதேவி, கல்யாணசுந்தரவள்ளி, ஆண்டாள் ஆகிய 4 பிராட்டிமார்களையும் ஒரே நேரத்தில், ஒரே மேடையில் திருக்கல்யாண திருக்கோலத்தில் கள்ளழகர் பெருமாள், மாலைகளையும், மாங்கல்யங்களையும் அணிவித்து மணக்கிறார்.

    திருக்கல்யாண திருவிழாவை காண ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். 22-ந்தேதி மஞ்சள் நீர் சாற்றுமுறையுடன் இந்த திருவிழா நிறைவுபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர்கள், திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தெப்பத்திருவிழா வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது.
    அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் தெப்பத்திருவிழாவும் ஒன்றாகும். இந்த திருவிழாவை காண மதுரை மட்டுமின்றி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் வருகை தருவார்கள். இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான திருவிழா வருகிற 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

    முன்னதாக 18-ந்தேதி மாலை 5.45 மணி அளவில் கஜேந்திர மோட்சம் நடைபெறும். தொடர்ந்து மறுநாள் பவுர்ணமி நிறைநாளில் காலை 8.15 மணி அளவில் மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கள்ளழகர் பெருமாள் எழுந்தருளி அழகர்கோவிலில் இருந்து பல்லக்கில் புறப்படுகிறார்.

    பொய்கைகரைபட்டியில் உள்ள கள்ளழகர் கோவில் தெப்பக்குளம் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.

    பின்னர் தெப்பக்குளம் செல்லும் சாமியை, வழிநெடுக பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்வார்கள். பின்னர் மண்டூக தீர்த்தம் என்ற பொய்கைகரைபட்டி புஷ்கரணி தெப்பத்திற்கு சாமி சென்று, அங்கு கிழக்கு பகுதியில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளுவார். இதையடுத்து கள்ளழகருக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் அங்கு குவிந்து தரிசனம் செய்வார்கள்.

    கடும் வறட்சியின் காரணமாக இந்த ஆண்டு பொய்கைகரைபட்டி தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லை. இதனால் சாமி குளக்கரையை மட்டும் சுற்றி வருவார். பின்னர் அங்கிருந்து சாமி அதே பரிவாரங்களுடன் வந்த வழியாகவே கோவிலுக்கு சென்று இருப்பிடம் சேருவார்.

    இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர்கள், திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    ×