search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 110370"

    கோபியில் உள்ள ஒரு வங்கியில் ரூ.80 ஆயிரம் எடுத்து சென்ற முதியவரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற பட்டதாரி வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    கோபி:

    ஈரோடு மாவட்ட கோபி தமிழ் நகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 70) ஓய்வு பெற்ற ஆசிரியர்.

    இவர் நேற்று மதியம் கோபியில் உள்ள ஒரு பாங்கியில் ரூ.80 ஆயிரம் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் மர்ம ஆசாமி ஒருவர் வந்து கொண்டிருந்தார்.

    திடீரென அவர் திருநாவுக்கரசை மிரட்டி அவரிடம் இருந்த 80 ஆயிரம் பணத்தை பறிக்க முயன்றார். அதிர்ச்சி அடைந்த அவர் “திருடன்..திருடன்..” என சத்தம் போட்டார். அவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அந்த ஆசாமியை மடக்கி பிடித்தனர்.

    அவனை மடக்கி கையும்- களவுமாக பிடித்த காளீஸ்வரன், சக்திகுமார், வில்லியம்ஸ் ஆகியோர் பொதுமக்கள் உதவியுடன் கோபி போலீசில் ஒப்படைத்தனர்

    அந்த வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவனது பெயர் அருண்சுந்தர் என்றும் பவானி அருகே உள்ள கொத்தம்பாளையத்தை சேர்ந்தவர் என்றும் மேலும் அவன் ஒரு எம்.பி.ஏ. பட்டதாரி என்றும் தெரிய வந்தது.

    அருண்சுந்தர் ஒரு தனியார் கம்பெனியில் சூப்பர்வைசர் ஆக பணிபுரிந்து வந்தான். 6 மாதமாக அவன் வேலைக்கு போகவில்லை.

    இந்த நிலையில் தீபாவளிக்கு செலவுக்கு பணம் தேவைப்படவே இந்த வழிப்பறியில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

    மேலும் பட்டதாரி வாலிபர் அருண்சுந்தர் கோபி வேலுமணி நகரில் செல்வராஜ் என்பவரது வீட்டில் வீடு வாடகைக்கு உள்ளதா? என்று கேட்டு உள்ளான். அவர் வீடு காலி இல்லை என்று கூறி உள்ளார். அவரது பின்னால் நைசாக வீட்டுக்குள் புகுந்த அருண்சுந்தர் அங்கிருந்த ரூ.32 ஆயிரம் மதிப்புள்ள “லேப்டாப்”பையும் திருடி உள்ளான் இதுவும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    ஊழியர்கள் மற்றும் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் பங்களிப்புடன் வளர்ந்துவரும் பி.எப்., நம் எதிர்காலத்துக்கு மட்டுமின்றி, அவசரத் தேவைக்கும் கைகொடுக்கக்கூடியது.
    ஊழியர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது ‘பிராவிடண்ட் பண்ட்’ (சுருக்கமாக பி.எப்.) எனப்படும் வருங்கால வைப்புநிதித் திட்டம்.

    ஊழியர்கள் மற்றும் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் பங்களிப்புடன் வளர்ந்துவரும் பி.எப்., நம் எதிர்காலத்துக்கு மட்டுமின்றி, அவசரத் தேவைக்கும் கைகொடுக்கக்கூடியது.

    பல்வேறு காரணங்களுக்காக, இடையில் நாம் பி.எப். பணத்தை பகுதியாகவோ, முழுமையாகவோ பெற்றுக்கொள்ள முடியும். அவை எவை எவை என்று இங்கே பார்ப்போம்...

    மகன் அல்லது மகளின் கல்விச் செலவுக்காக, வருங்கால வைப்பு நிதியிலிருந்து உறுப்பினர் ஒருவர் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு ஊழியரின் பங்களிப்புத் தொகையில் 50 சதவீதம் மட்டும்தான் விடுவிக்கப்படும்.

    திருமணமாகாத ஒருவர், தனது திருமணத் தேவைக்காக வருங்கால வைப்பு நிதியில் இருந்து செலுத்தப்பட்ட பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும். மகன், மகள், சகோதரி மற்றும் சகோதரன் ஆகியோரின் திருமணத்துக்காகவும் பணத்தைப் பெறலாம். ஆனால் தாம் செலுத்திய பங்களிப்புத் தொகையில் 50 சதவீதம் மட்டுமே இந்தக் காரணங்களுக் காகத் திரும்பப் பெற முடியும்.

    தொடர்ச்சியாக 15 நாட்களுக்கு ஒரு நிறுவனம் தமது ஊழியர்களுக்கு எந்தவித இழப்பீடும் வழங்காமல் இழுத்தடித்தாலோ, அந்த நிறுவனம் இழுத்து மூடப்பட்டாலோ வருங்கால வைப்பு நிதியை உறுப்பினர்களால் திரும்பப் பெற முடியும்.

    இதேபோல் 2 மாதமோ அல்லது அதற்கு அதிகமாகவோ ஒரு நிறுவனம் சம்பளம் வழங்காத நிலையில், சேமநல நிதியை மொத்தமாகத் திரும்பப் பெற வழிவகை உள்ளது.

    ஓர் ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டாலோ அல்லது கோர்ட்டை அணுகும்போதோ, தனது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள வருங்கால நிதியில் 50 சதவீத பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

    தொழிற்சாலை ஒன்று தொடர்ந்து 6 மாதங்களுக்கு மூடப்பட்டிருந்தால், உறுப்பினர் தனது பங்களிப்புத் தொகையை நூறு சதவீதம் வரை திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும். வேலை இழப்பை தொடர்ந்து சந்திக்கும்போதோ, இழப்பீட்டுத் தொகையை அந்த நிறுவனம் வழங்காதபோதோ நூறு சதவீத வட்டியுடன் பங்களிப்புத் தொகை முழுவதையும் தொழிலாளர் திரும்பப் பெற்றுக்கொள்ளவும் இடம் இருக்கிறது.

    காசநோய், தொழுநோய், முடக்கம், புற்றுநோய், மனநலம் பாதிப்பு மற்றும் இதயநோய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதியின் முழுத்தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும். குறைவான அடிப்படை ஊதியமாக இருந்தால் 6 மாதங்களுக்கான பரிவுத்தொகையோ அல்லது பாதிக்கப்பட்ட அந்த உறுப்பினரின் பங்களிப்புத் தொகையோ வட்டியுடன் வழங்கப்படும்.

    கலவரம், வெள்ளம், பூகம்பம் உள்ளிட்ட எதிர்பாராமல் ஏற்படும் இயற்கைப் பேரிடர்களில் உறுப்பினர்களின் சொத்து சேதமடைந்தால், ஐயாயிரம் ரூபாயோ அல்லது பங்களிப்புத் தொகையில் 50 சதவீதமோ திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

    தொழிற்சாலையில் மின்வெட்டு ஏற்பட்டதைக் காரணம் காட்டி, பங்களிப்பாளர் ஒருவர் கடன் முதலீடாக வருங்கால வைப்பு நிதி கோர அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் குறிப்பிட்ட பகுதியில் மின்வெட்டு ஏற்பட்டதாக மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும். ஊதியம் வழங்க முடியாத அளவுக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டதாக முதலாளி ஒப்புதல் அளிக்க வேண்டும்.

    மாற்றுத்திறனாளிகள் உபகரணங்கள் வாங்குவதற்காக வருங்கால வைப்பு நிதியை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு, உரிய மருத்துவரிடம் சான்றிதழ் பெற்றுச் சமர்ப்பிக்க வேண்டும். அப்போது 6 மாதங்களுக்கான பரிவுத்தொகை அல்லது வட்டியுடன் பங்களிப்புத்தொகை அல்லது உபகரணங்களுக்கான செலவுத்தொகை இதில் ஏதாவது ஒன்று வழங்கப்படும்.

    உறுப்பினர் ஒருவர் தனது 54-வது வயதில் 90 சதவீதம் வரை வருங்கால வைப்பு நிதியைத் திரும்பப்பெற அனுமதிக்கப்படுகிறது. ஓய்வு பெறுவதற்கு ஒரு வருடத்துக்கு முன்னரே, விருப்ப ஓய்வு பெற்றாலும் இந்தத் தொகையைத் திரும்பப் பெற்றுக்கொள்ள இயலும்.

    55 வயதை எட்டிய ஓர் உறுப்பினர் 90 சதவீத பங்களிப்புத் தொகையைத் திரும்பப் பெற வருங்கால வைப்பு நிதி அனுமதிக்கிறது. இதை ஆயுள் காப்பீட்டுக் கழகத்திலோ அல்லது வரிஷ்த்த பென்சன் பீமா யோஜனாவிலோ முதலீடு செய்து கொள்ளும்வகையில் மாற்றிக் கொள்ளலாம்.

    வீடு கட்டவும், அடுக்குமாடிக் கட்டிடங்களில் முதலீடு செய்யவும், மனையிடம் வாங்கிப் போடவும் வருங்கால வைப்பு நிதியின் பங்களிப்புத் தொகையைப் பெற முடியும். ஆனால் நல நிதியத்தில் உறுப்பினராக 5 ஆண்டுகளை நிறைவு செய்திருக்க வேண்டும்.

    நிலுவையில் உள்ள கடனுக்காகவோ, கடனுக்கு வட்டி செலுத்துவதற்காகவோ உறுப்பினர் வருங்கால வைப்பு நிதியைக் கோரலாம். உறுப்பினரின் பெயரிலோ, மனைவியின் பெயரிலோ அல்லது கூட்டாக இருவரின் பெயரிலோ கடன் பெற்றால், வருங்கால வைப்பு நிதி விடுவிக்கப்படும். 
    செங்கம் அருகே வங்கியில் ஜன்னல் கம்பிகளை வளைத்து மர்ம நபர்கள் கொள்ளை அடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள இறையூர் கிராமத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை உள்ளது. இந்த வங்கியில் நேற்று முன்தினம் இரவு பின்பக்கமுள்ள ஜன்னல் கம்பிகளை வளைத்து மர்ம நபர்கள் கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளனர். நேற்று அந்த பக்கமாக சென்றவர்கள் இதை பார்த்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். வங்கி அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்ரவர்த்தி சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். மேலும் இந்த சம்பவம் குறித்து பாய்ச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வங்கியின் ஜன்னல் கம்பிகளை மேலும் வளைக்க முடியாததால் வங்கியில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் பணம் தப்பியது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பெங்களூரை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை திருத்தியது ஏன் என்று சி.பி.ஐ.விளக்கம் அளித்துள்ளது. #VijayMallya #CBI

    புதுடெல்லி:

    பெங்களூரை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா. இந்தியாவில் பல வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் மோசடி செய்துவிட்டு இங்கிலாந்துக்கு தப்பி சென்று விட்டார்.

    எனவே அவரை தேடப்படும் குற்றவாளியாக மத்திய அரசு அறிவித்தது. அதே ஆண்டு அக்டோபர் 16-ந்தேதி ‘லுக்அவுட்’ நோட்டீசும் வழங்கப்பட்டது. இந்தநிலையில் அவர் வழக்கு விசாரணையில் ஆஜராவதற்காக 2015-ம் ஆண்டு நவம்பர் 24-ந்தேதி லண்டனில் இருந்து நாடு திரும்பினார். தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருந்த போதும் அவரை சி.பி.ஐ. கைது செய்யவில்லை.

    இதுகுறித்து சி.பி.ஐ. மீது குற்றம் சுமத்தப்பட்டது. பின்னர் லுக் அவுட் நோட்டீசு திருத்தம் செய்யப்பட்டது.

     


    அதுகுறித்து சி.பி.ஐ. தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபரில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மல்லையா அதே ஆண்டு நவம்பர் 21-ந்தேதி வழக்கு விசாரணையில் ஆஜராக நாடுதிரும்பினார். பின்னர் அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைத்தார்.

    வேண்டிய ஆவணங்களை சமர்ப்பித்தார். அப்போது அவர் பாராளுமன்ற மேல்- சபையின் எம்.பி.யாக இருந்தார். எனவே தேடப்படும் நபராக அறிவித்த போதும் அவரை கைது செய்ய சட்ட ரீதியான போதிய காரணங்கள் இல்லை. அதனால் அவரை கைது செய்ய முடியவில்லை.

    இந்தநிலையில் அவரை கைது செய்ய வசதியாக லுக் அவுட் நோட்டீசு திருத்தப்பட்டது. அதன் மூலம் அவர் வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் தகவலை குடியுரிமை துறை சி.பி.ஐ.க்கு தெரிவிக்க வேண்டும் என்ற திருத்தம் வெளியிடப்பட்டது’’ என்று கூறப்பட்டுள்ளது. #VijayMallya #CBI 

    தஞ்சை மாவட்டம் கபிஸ்தலத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் போலி நகைகள் அடகு வைத்து ரூ.6 கோடி மோசடி செய்தததாக விவசாய சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.
    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை விமலநாதன் மற்றும் தலைவர் சின்னதுரை ஆகியோர் கும்பகோணம் உதவி கலெக்டர் பிரதீப் குமாரை நேரில் சந்தித்து இன்று ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டம் கபிஸ்தலத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்த வங்கியில் விவசாயிகள் வேளாண்மை நகை கடன் வேளாண் பயிர் கடன் எந்திரக் கருவிகள் பண்ணை திட்டங்களுக்கான கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் விவசாயத்துக்கு சம்பந்தம் இல்லாத நபர்களுக்கு விவசாய கடன்கள் வழங்கப்படுவதாக புகார் வந்த வண்ணம் இருந்தது. இதற்கிடையே வங்கிக்கு புதிதாக பொறுப்பேற்ற அலுவலர்கள் வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகளை திடீர் ஆய்வு செய்து பார்த்தனர். அப்போது வங்கி ஊழியர்கள் போலி நகைகளை விவசாயிகள் பெயரில் பல கோடி ரூபாய்க்கு அடகு வைத்து மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. சுமார் ரூ.6 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளது என தெரியவருகிறது.

    எனவே இந்த மோசடி குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்ய வேண்டும். அவ்வாறு சி.பி.ஐ. விசாரணைக்கு வங்கி நிர்வாகம் ஒத்துழைக்காவிட்டால் வங்கியின் முன் விவசாயிகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டாரத்தில் வங்கிகளில் சேமிப்பு கணக்கு புத்தகம் இருப்பு இல்லாததால் வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
    செந்துறை:

    திண்டுக்கல் அருகே நத்தம் ஒன்றியத்தில் 23 ஊராட்சிகள் உள்ளன. 100-க்கும்மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள், வங்கி கணக்குகளை தொடங்குவதற்காக வங்கிகளில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் ஒரு மாதத்திற்கு மேலாகியும், சேமிப்பு புத்தகம் இருப்பு இல்லை என்றும், மேலும் ஒருசில வங்கிகளில் ஊழியர்கள் பற்றாக்குறையும், சேமிப்பு கணக்கு துவங்கி கொடுப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர்.

    சேமிப்பு கணக்கு தொடங்கி புத்தகம் தராததால், அரசு வழங்கும் மானியம், கல்வி உதவித்தொகை பெறுவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    மேலும் கிராமத்தில் உள்ள படிப்பறிவு இல்லாதவர்கள், கைரேகை வைப்பவர்களும் தங்களுடைய சேமிப்பு கணக்கு புத்தகம் இருந்தால் தான் அவர்களுக்கு தங்களது கணக்கில் எவ்வளவு இருப்பு பணம் இருக்கிறது என்று கேட்டு தெரிய முடியும். படித்தவர்கள் ஏடிஎம் எந்திரத்தில் போய் பார்த்து கொள்கின்றனர்.

    ஆனால் கிராமத்தில் உள்ள படிப்பறிவு இல்லாதவர்கள், கைரேகை வைப்பவர்களுக்கு இந்த சேமிப்பு புத்தகம் இருந்தால் மட்டுமே அருகில் உள்ளவர்களையும், வங்கி ஊழியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளும் நிலமை உள்ளது.

    தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்தால் அவர்கள் வீன்அலைச்சலும், மன உளைச்சலும் இல்லாமல் அவர்கள் உங்களுடைய உதவியை நாடி பலர் வங்கி கணக்கு தொடங்கவும், பணத்தை வங்கியில் தொடர்வைப்புக்கு வழி வகுக்கும், அப்போது தான் வங்கி மீது நம்பிக்கைக்கு ஏதுவாக இருக்கும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
    மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கணேஷ் கூறினார்.
    புதுக்கோட்டை:

    மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கணேஷ் கூறினார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு கல்வி உதவித்தொகை பெறவிண்ணப் பிக்கும் மாணவர்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்ப படிவங்களை அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று வருகிற 15-ந்தேதிக்குள் பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் தங்களின் வங்கி கணக்கு எண் விவரங்களை தவறாது குறிப்பிட வேண்டும்.

    மேலும் செப்டம்பர் 1-ந் தேதியில் தொடங்கும் கல்வி உதவித்தொகைக்கான இணையதளத்தில், புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை செப்டம்படர் 15-ந்தேதிக்கு முன்பும், புதியதிற்கான விண்ணப்பங்களை நவம்பர் 30-ந்தேதிக்கு முன்பும் அந்தந்த கல்வி நிறுவனங்கள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகவும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். 
    விவசாயி தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியது நிதி நிறுவனத்தின் சட்ட விரோத செயல்களுக்கு டாக்டர் ராமதாஸ், வைகோ கண்டனம் தெரிவித்துள்ளனர். #vaiko #ramadoss #farmersuicide

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை அடுத்த கருணாகரநல்லூரில், தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் டிராக்டரை பறிமுதல் செய்து சென்றதால் அவமானமடைந்த தமிழரசன் என்ற விவசாயி நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதுடன், குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கருணாகரநல்லூரைச் சேர்ந்த விவசாயி தமிழரசன் தம்மிடம் இருந்த பழைய டிராக்டரை கடந்த ஆண்டு விற்பனை செய்துவிட்டு, கோட்டக் மஹிந்திரா நிறுவனத்திடம் கடன்பெற்று புதிய டிராக்டரை வாங்கி உள்ளார்.

    அதன்படி முதல் இரு தவணைகளை சரியாக செலுத்தி விட்ட தமிழரசன், கடந்த மாதம் செலுத்த வேண்டிய ரூ.90,000 தவணையில் ரூ.50 ஆயிரத்தை மட்டும் செலுத்தி விட்டு கரும்புக்கான கொள்முதல் விலை கிடைத்ததும் கட்டுவதாகக் கூறி கால அவகாசம் பெற்றிருக்கிறார். ஆனால், 10 நாட்களில் கடன் தவணையை செலுத்தா விட்டால் டிராக்டர் பறிமுதல் செய்யப்படும் என்று அறிவிக்கை அனுப்பிய நிதி நிறுவனம், அதன்படியே அடியாட்களை அனுப்பி டிராக்டரை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றுள்ளது.

    இதனால் அவமானம் அடைந்த உழவர் தமிழரசன் தமது விவசாய நிலத்தில் கத்தரிச் செடிக்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். எந்தத் தவறும் செய்யாத உழவர் தமிழரசனை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியது நிதி நிறுவனத்தின் சட்ட விரோத செயல்கள் தான்; இது கண்டிக்கத்தக்கது.

    உழவர்களிடம் இந்த அளவு கடுமை காட்டும் வங்கி நிர்வாகங்கள் பெருந்தொழில் நிறுவனங்கள் வாங்கிய கடனை வசூலிப்பதில் மட்டும் கனிவு காட்டுகின்றனர்.

    அந்நிறுவனங்கள் கடனை செலுத்தாவிட்டால், அதை தள்ளுபடி செய்து தயவு காட்டுகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தனியார் நிறுவனங்கள் வாங்கிய ரூ.1.69 லட்சம் கோடி கடனை வங்கிகள் தள்ளுபடி செய்திருக்கின்றன. மல்லையா, நிரவ் மோடி போன்றவர்கள் கடன் வாங்கி ஏமாற்றியதால் மட்டும் கடந்த ஆண்டில் வங்கிகளுக்கு ரூ.87 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. தொழில் நிறுவனங்களின் கண்ணுக்கு வெண்ணெய், விவசாயிகளின் கண்ணுக்கு சுண்ணாம்பு என்ற வங்கிகளின் அணுகுமுறை ஆபத்தானதாகும்.

    கடன் செலுத்த முடியாததற்காக உழவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை மாற்றப்பட வேண்டும். இதற்கான கொள்கை வகுக்கப்பட்டு வங்கிகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும். உழவர் தமிழரசன் தற்கொலை செய்து கொண்டதற்கு வங்கியின் சட்ட விரோத செயலும், சர்க்கரை ஆலை குறித்த காலத்தில் நிலுவைத் தொகையை வழங்காததும் தான் காரணம்.

    எனவே, தமிழரசன் தற்கொலை வழக்கில் அவற்றையும் சேர்த்து தண்டனை பெற்றுத்தர வேண்டும். விவசாயி தமிழரசனின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சிஸ் வங்கி, மாணவர்களுக்கு வழங்கியுள்ள கல்விக்கடன், விவசாயிகளுக்கு அளித்துள்ள வேளாண் கடன், சிறு, குறு தொழில் முனைவோர் மற்றும் வர்த்தகர்களுக்கு வழங்கியுள்ள கடன்களை வசூலிக்க ஏ.ஆர்.சி. என்ற தனியார் நிறுவனத்தை முகவராக நியமித்து இருக்கிறது. இந்த தனியார் நிறுவனத்தின் முகவர்கள், கடன் பெற்றுள்ளவர்களை அவர்கள் வீட்டுக்குச் சென்று, கந்து வட்டிக் கும்பல் போல கடனை திரும்ப செலுத்தக்கோரி மிரட்டி வருகின்றனர்.


    மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக்கடன் ரூ 4 லட்சம் வரை எந்த உத்தரவாதமும் தேவையில்லை. மேலும் கல்விக் கடனை 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகளில் கடனை திரும்பச் செலுத்த வேண்டும் என்று விதிமுறைகள் கூறுகின்றன. ஆனால் மாணவர்கள் படிப்பு முடிந்தவுடனேயே சென்று வங்கி முகவர்கள், கடனைத் திரும்பச் செலுத்துமாறு மாணவர்களின் பெற்றோரை மிரட்டுவதும், அவமானப்படுத்துவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

    இந்திய பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் ரூ 9 லட்சம் கோடி என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டு இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பொதுத்துறை வங்கிகள் ரூ.2.5 லட்சம் கோடி வராக்கடன்களை தள்ளுபடி செய்துள்ளன. இதில் இந்தியன் ஓவர்சிஸ் வங்கி மட்டும் ரூபாய் 3 ஆயிரத்து 66 கோடி வராக்கடனைத் தள்ளுபடி செய்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    மத்திய அரசு ஈவு இரக்கமற்ற ஈட்டிக்காரனாக மாறி, இந்தியன் ஓவர்சிஸ் வங்கியின் குண்டர்கள் கூலிப் படையைப் போல பயன்படுத்தி, கடன் வசூலிக்கும் இந்த அராஜகம் ஜனநாயக நாட்டில் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. எனவே சாதாரண எளிய மக்களிடமிருந்து கந்துவட்டிக் கும்பலைப் போன்று கடன் வசூலிக்க முகவர்களை ஏவி விடுவதை உடனடியாக கைவிடும் வகையில் மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு வைகோ கூறியுள்ளார். #vaiko #ramadoss #farmersuicide

    இந்திய வங்கிகளுக்கு வழக்கு செலவாக விஜய் மல்லையா ரூ.1 கோடியே 80 லட்சம் வழங்க வேண்டும் என்று இங்கிலாந்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. #VijayMallya
    லண்டன்:

    பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 13 இந்திய வங்கிகளிடம் சுமார் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல் லண்டனில் தஞ்சம் அடைந்து விட்டார். அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க உத்தரவிடக்கோரி, இங்கிலாந்து கோர்ட்டில் இந்தியா வழக்கு தொடர்ந்துள்ளது.

    மேலும், விஜய் மல்லையாவின் உலகளாவிய சொத்துகளை முடக்குவதற்கு இந்திய கோர்ட்டு உலகளாவிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கர்நாடகாவில் உள்ள கடன் மீட்பு தீர்ப்பாயமும் விஜய் மல்லையாவிடம் இருந்து கடனை வசூலிக்க இந்திய வங்கிகளுக்கு அதிகாரம் அளித்துள்ளது.

    சொத்துகளை முடக்கும் உலகளாவிய உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி, இங்கிலாந்து ஐகோர்ட்டில் விஜய் மல்லையா முறையிட்டார். ஆனால், கடந்த மாதம் 8-ந் தேதி, அந்த உத்தரவுக்கு தடை விதிக்க நீதிபதி ஆன்ட்ரூ ஹென்சா மறுத்து விட்டார். விஜய் மல்லையாவிடம் கடனை வசூலிக்க இந்திய வங்கிகளுக்கு அனுமதி அளித்தார்.

    இந்நிலையில், இந்த உலகளாவிய உத்தரவையும், கடன் மீட்பு தீர்ப்பாயத்தின் தீர்ப்பையும் இங்கிலாந்தில் பதிவு செய்ய இந்திய வங்கிகளுக்கு ஏற்பட்ட வழக்கு செலவுக்காக அந்த வங்கிகளுக்கு விஜய் மல்லையா 2 லட்சம் பவுண்டு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 கோடியே 80 லட்சம்) வழங்க வேண்டும் என்று நீதிபதி ஆன்ட்ரூ ஹென்சா நேற்று உத்தரவிட்டார்.

    இதற்கிடையே, விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்கக்கோரும் வழக்கின் இறுதி விசாரணைக்காக, அவர் அடுத்த மாதம் 31-ந் தேதி, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜராகிறார். #VijayMallya
    அன்னூர் அருகே வங்கியின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க நடைபெற்ற முயற்சியில் அலாரம் ஒலித்ததால் கொள்ளையன் தப்பி ஓடி விட்டான். ரூ.2 கோடி மதிப்புள்ள பணம்-நகைகள் தப்பியது.
    அன்னூர்:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கெம்பநாயக்கன் பாளையத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளை உள்ளது.

    இங்கு கெம்பநாயக்கன் பாளையம் மற்றும் அதனை சுற்றி உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பணம் டெபாசிட் செய்து வருகிறார்கள். மேலும் நகைகளை அடகு வைத்து கடனும் பெற்றுள்ளனர்.

    இந்த வங்கி கிளை மேலாளராக அரிஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று மாலை வேலை நேரம் முடிந்து வங்கியை பூட்டி சென்றனர்.

    இன்று அதிகாலை 2 மணி அளவில் மர்ம நபர் அங்கு வந்தான். அவன் வங்கிக்கு வெளியே இருந்த கண்காணிப்பு கேமராவை வேறு பக்கம் திருப்பினான். வங்கியில் 2 ‌ஷட்டர் உள்ளது. அதில் ஒரு ‌ஷட்டரில் மட்டும் சென்டர் லாக் உள்ளது. மற்றொரு ‌ஷட்டரில் சென்டர் லாக் இல்லை. அதனை மர்ம நபர் உடைத்தான். அங்கு இருந்த சி.சி.டி.வி. கேமராவையும் உடைத்தான்.

    அந்த சமயத்தில் அலாரம் ஒலித்தது. இந்த சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். இதனை பார்த்த கொள்ளையன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். இதனால் லாக்கரில் வைக்கப்பட்டு இருந்த ரூ. 2 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் நகைகள் தப்பியது.

    இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் வங்கி பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் வங்கி மேலாளர் அரிசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் வங்கிக்கு விரைந்து வந்தார். இது குறித்து போலீசில் புகார் செய்தார். சூலூர் டி.எஸ்.பி ஜெயச்சந்திரன், அன்னூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரண நடத்தினார்கள்.

    மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது வங்கியில் இருந்து சற்று தூரம் ஓடி நின்றது. வங்கியில் கொள்ளை முயற்சி நடைபெற்ற சமயத்தில் அப்பகுதியில் மின்சாரம் இல்லை. ஆனாலும் வங்கியில் இருந்த யூ.பி.எஸ். மூலம் கண்காணிப்பு கேமரா மற்றும் அலாரம் இயங்கி வந்தது. கேமராவில் கொள்ளையன் உருவம் பதிவாகி உள்ளது.

    அதனை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வங்கியில் கொள்ளை அடிக்க வந்தவன் மின்சாரத்தை நிறுத்தி விட்டு வந்தானா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    வங்கியில் கொள்ளை முயற்சி நடைபெற்ற சம்பவம் பற்றி தெரியவந்ததும் வாடிக்கையாளர்கள் வங்கி முன்பு திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் நகைகள் மாயமான சம்பவத்தில் வங்கி ஊழியர் உட்பட 3 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து நகைகளையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர். #bankrobbery #staffarrested
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.9 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

    32 கிலோ எடை உள்ள அந்த நகைகள் அனைத்தும் அடகு நகைகளாகும். அவற்றை திருவள்ளூர் மற்றும் சுற்றுப் பகுதியைச் சேர்ந்த சுமார் 600 பேர் அடகு வைத்திருந்தனர்.

    வங்கிக் கதவுகள் மற்றும் லாக்கர் உள்ளிட்ட எதையும் உடைக்காமல் கள்ளச் சாவிகளை பயன்படுத்தி இந்த துணிகர கொள்ளை நடந்திருந்தது வங்கி மேலாளர் சேகர், உதவி மேலாளர் பானு இருவரும் நேற்று காலை வங்கிக்கு வந்தபோது தான் இந்த கொள்ளை பற்றி தெரிய வந்தது.

    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி, துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி மற்றும் திருவள்ளூர் டவுன் போலீசார் அந்த வங்கிக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது வங்கி லாக்கரில் நகைகளுடன் வைக்கப்பட்டிருந்த ரூ.25 லட்சம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்படாமல் அப்படியே இருந்ததை கண்டு பிடித்தனர்.

    இதையடுத்து வங்கியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த வங்கியில் மொத்தம் 7 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அந்த 7 கேமிராக்களும் திசை மாற்றி வைக்கப்பட்டிருந்தன.

    இதன் மூலம் ரூ.9 கோடி நகைகளை யாரோ ஒரு வங்கி ஊழியர்தான் கொள்ளையடித்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. உடனடியாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அந்த தனிப்படை போலீசார், வங்கி ஊழியர்கள் அனைவரிடமும் தனித்தனியாக தீவிர விசாரணை நடத்தினார்கள்.

    பிறகு வங்கி ஊழியர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. அந்த கைரேகை பதிவுகளை, வங்கி வாசல் கதவு மற்றும் லாக்கர்களில் ஏற்கனவே பதிவாகி இருந்த கைரேகை பதிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து ஆய்வு செய்தனர்.

    அந்த கைரேகை ஆய்வில் 5 வங்கி ஊழியர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த 5 பேரையும் கடம்பத்தூர் காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். நேற்று பிற்பகல் 3 மணிக்கு அவர்களிடம் விசாரணை தொடங்கியது.


    இன்று அதிகாலை வரை விடிய, விடிய விசாரணை நடந்தது. 5 ஊழியர்களில் 3 பேரை போலீசார் விடுவித்தனர். 2 பேரிடம் தீவிர விசாரணை நீடித்தது. அந்த 2 பேரில் ஒருவர்தான் முக்கிய குற்றவாளி என்பதை நள்ளிரவில் தனிப்படை போலீசார் உறுதி செய்தனர்.

    அந்த முக்கிய குற்றவாளியின் பெயர் விஸ்வநாதன். இவர் அந்த வங்கியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். முதலில் இவர் வங்கியை சுத்தம் செய்யும் பணிக்காகத்தான் வேலையில் சேர்ந்தார்.

    ஓராண்டுக்கு முன்பு அவரை அலுவலக உதவியாளராக மாற்றினார்கள். அதன் பிறகே அவரது நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வங்கி அதிகாரிகள் அடகு நகைகளை லாக்கரில் எடுத்து வைக்கவும், லாக்கரை பூட்டவும் அவர் உதவியாக இருந்துள்ளார்.

    நகைகளைப் பார்த்ததும் அவருக்கு அவற்றை கொள்ளையடிக்கும் ஆசை ஏற்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்புதான் அவர் செவ்வாப்பேட்டை ரெயில் நிலையம் அருகில் புதிய வீடு ஒன்றை சில லட்சம் கொடுத்து விலைக்கு வாங்கினார். அந்த கடனை அடைக்கவும், சொகுசாக வாழவும் அவருக்கு பணம் தேவைப்பட்டது.

    இதையடுத்து லாக்கரில் உள்ள அடகு நகைகளை திருட முடிவு செய்தார். இதுபற்றி வங்கியின் கீழ் தளத்தில் உள்ள தனது கூட்டாளிகளான சூப்பர் மார்க்கெட் சூப்பர்வைசர் ஜெய்கணேஷ், காவலாளி கவுதம் இருவரிடமும் தெரிவித்தார். உடனே அவர்களும் இந்த கொள்ளையில் சேர சம்மதித்தனர்.

    இதையடுத்து கடந்த சில வாரங்களாக அவர்கள் கொள்ளைக்கான ஏற்பாடுகளை செய்தனர். சுலபமாக நகைகளை திருடுவதற்கு வசதியாக வங்கி கதவு மற்றும் லாக்கர்களின் சாவிகளை நைசாக எடுத்துச்சென்று கள்ளச் சாவிகளைத் தயாரித்தனர்.

    அதன் பிறகு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். ரொக்கப் பணத்தில் கை வைத்தால் மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் அவர்கள் ரூ.25 லட்சத்தைத் தொடவில்லை. ஆனால் கைரேகை பதிவுகள் அவர்களைக் காட்டிக் கொடுத்து விட்டன.

    முதலில் பியூன் விஸ்வநாதன் குற்றத்தை ஒத்துக் கொள்ளவில்லை. நல்லவன் போல நடித்தார். ஆனால் கைரேகை பதிவு ஆதாரத்தைக் காட்டியதும் அமைதியாகி விட்டார். இனியும் தப்ப முடியாது என்ற நிலை வந்த பிறகே அவர் தனது குற்றத்தை ஒத்துக் கொண்டார்.

    அதன் பிறகே அவருக்கு ஜெய்கணேசும், கவுதமும் உதவியாக இருந்தது தெரிய வந்தது. அவர்களிடம் தான் 32 கிலோ அடகு நகைகள் இருந்தன. அந்த 32 கிலோ நகைகளையும் தனிப்படை போலீசார் அதிரடியாக செயல்பட்டு மீட்டனர்.

    விஸ்வநாதன், ஜெய் கணேஷ், கவுதம் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தனி இடத்தில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. திருவள்ளூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை சம்பவத்தில் போலீசார் மிகத் திறமையாக செயல்பட்டு 12 மணி நேரத்துக்குள் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள விதத்தைப் பார்த்ததுமே போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி, இந்த கொள்ளை வங்கி ஊழியரின் உதவி இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார். அந்த கோணத்தை நோக்கியே அவர் 5 தனிப்படைகளை உருவாக்கி விசாரணையை முடுக்கி விட்டார்.

    வங்கி ஊழியர்கள் ஒவ்வொருவர் பற்றியும் முழுமையாக ஆய்வு செய்த போலீசார், இறுதியில் அது பியூன் விஸ்வநாதன் செய்த கைவரிசை என்பதை கண்டுபிடித்து விட்டனர். என்றாலும் 32 கிலோ நகைகளையும் மீட்பதற்காக எந்த தகவல்களையும் வெளியிடாமல் இருந்தனர்.

    இன்று அதிகாலை 32 கிலோ நகைகளும் மீட்கப்பட்ட பிறகே, குற்றவாளிகள் பற்றிய தகவல்களை போலீசார் வெளியிட்டனர். 12 மணி நேரத்துக்குள் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ததோடு, ரூ.9 கோடி அடகு நகைகளையும் மீட்ட போலீசாரை திருவள்ளூர் நகர மக்கள் மகிழ்ச்சியுடன் பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தனர்.. #bankrobbery #staffarrested
    திருவள்ளூர் மாவட்டத்தில் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 6 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #bankrobbery
    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் இருந்து சென்னை வரும் சாலையில் சுமார் 2½ கிலோ மீட்டர் தொலைவில் ஆயில் மில் என்றொரு பகுதி உள்ளது.

    அங்குள்ள 3 மாடி கட்டிடத்தில் கீழ் தளத்தில் சூப்பர் மார்க்கெட் ஒன்றும், முதல் தளத்தில் “பேங்க் ஆப் இந்தியா” கிளையும் செயல் பட்டு வருகிறது.

    அந்த வங்கியின் அருகில் மற்றொரு வங்கியும் 4 ஏ.டி.எம்.களும் இருக்கின்றன. இந்த வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.களுக்கு இரவு நேர காவலாளிகள் இல்லை. அதைப் பயன்படுத்தி நேற்றிரவு மர்ம மனிதர்கள் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்குள் புகுந்து கைவரிசை காட்டி விட்டனர்.

    முதல் தளத்தில் உள்ள அந்த வங்கிக்கு செல்ல, கீழ் தள சூப்பர் மார்க்கெட்டின் பக்கவாட்டுப் பகுதியில் பாதை உள்ளது. மாலையில் வங்கிப் பணிகள் முடிந்ததும் அந்த பாதையை “‌ஷட்டர்” மூலம் மூடி விட்டு செல்வார்கள்.

    நேற்று முன்தினம் சனிக்கிழமை மதியம் வரைதான் வங்கிப் பணிகள் நடந்தது. அதன் பிறகு ஊழியர்கள் வங்கியை பூட்டி விட்டுச் சென்றனர்.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கி மூடப்பட்டிருந்தது. இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணி அளவில் வங்கிக்கு ஊழியர்கள் வந்தனர். நுழைவுப் பகுதியில் உள்ள ‌ஷட்டர் திறந்து இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

    பதட்டத்துடன் வங்கி உள்ளே சென்று பார்த்த போது, ஊழியர்கள் அமர்ந்து பணிபுரியும் இடங்களில் எந்த குளறுபடிகளும் இல்லாமல் இருந்தது. கேஷியர் அறையும் உடைக்கப்படவில்லை.

    வங்கி ஊழியர்கள் அவசரம், அவசரமாக நகைகள் உள்ள பெட்டகம் அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு பெட்டகங்கள் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    நகைப் பெட்டகங்கள் அனைத்தும் கள்ளச் சாவிப் போட்டு திறக்கப்பட்டிருந்தன. அவற்றுக்குள் வாடிக்கையாளர்களின் அடகு நகைகள் வைக்கப்பட்டிருந்தன. அந்த அடகு நகைகள் அனைத்தையும் மர்ம மனிதர்கள் வாரி சுருட்டி எடுத்துச் சென்று விட்டனர்.

    அடகு நகைகளில் ஒரு நகையைக்கூட கொள்ளையர்கள் விட்டு வைக்கவில்லை. பெட்டகங்களை துடைத்து வைத்தது போல அனைத்தையும் அள்ளிச் சென்று விட்டனர்.

    இந்த கொள்ளை குறித்து பேங்க் ஆப் இந்தியா வங்கியின் மேலாளர் சேகர் உடனடியாக திருவள்ளூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி, துணைப் போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி மற்றும் டவுன் போலீசார் ஆயில் மில் பகுதிக்கு விரைந்து சென்று கொள்ளை குறித்து விசாரித்து ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளை போன அடகு நகைகளின் மதிப்பு ரூ.6 கோடி என்பது தெரிய வந்தது.

    ஆனால் வெளிச்சந்தையில் அந்த நகைகளின் மதிப்பு ரூ. 8 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. போலீசார் அந்த வங்கியில், எத்தனை பேர், எத்தனை பவுன் நகைகளை, எவ்வளவு ரூபாய்க்கு அடகு வைத்தனர் என்ற விவரங்களை சேகரித்தனர்.

    அப்போது அந்த வங்கியில் திருவள்ளூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 624 பேர் தங்களது நகைகளை அடகு வைத்திருந்தது தெரிய வந்தது. மொத்தம் 32 கிலோ அளவுக்கு அடகு நகைகள் இருந்தன. அந்த நகைகள் அனைத்தும் பறிபோய் விட்டன.

    இந்த கொள்ளையை மர்ம மனிதர்கள் மிகவும் திட்டமிட்டு அரங்கேற்றி இருப்பது தெரிய வந்துள்ளது. பாதுகாவலர்கள் இல்லாததால் மிகவும் நிதானமாக அவர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

    அடுத்தப்படியாக அவர்கள் கொள்ளையடிப்பதற்கு விடுமுறை தினத்தை தேர்வு செய்துள்ளனர். சனிக்கிழமை இரவே மர்ம மனிதர்கள் வங்கிக்குள் புகுந்து இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    கொள்ளையர்கள் அந்த வங்கியின் எந்த ஒரு பூட்டையும் உடைக்கவில்லை. அனைத்து பூட்டுக்களையும் அவர்கள் கள்ளச்சாவியைப் பயன்படுத்தி கைவரிசை காட்டி உள்ளனர். நுழைவுப் பகுதியில் உள்ள ‌ஷட்டரில் இருந்து பாதுகாப்புப் பெட்டகம் வரை மர்ம மனிதர்கள் எந்த ஒரு இடத்திலும் பூட்டை தகர்க்கவில்லை.

    சில வங்கிகளில் கொள்ளையர்கள் பூட்டை உடைக்க முடியாதபட்சத்தில் சுவரில் துளைப்போட்டு நகைகளை கொள்ளையடிப்பார்கள். இல்லையெனில் வெல்டிங் செய்யும் கருவி மூலம் பெட்டகங்களை உடைத்து கைவரிசை காட்டுவார்கள்.

    ஆனால் அப்படி எதுவுமே இங்கு நடக்கவில்லை. கள்ளச்சாவி போட்டு காரியத்தை கச்சிதமாக முடித்து விட்டனர்.

    கொள்ளை போன நகைகளை வைத்திருந்த பெட்டகத்தின் சாவிகள் அனைத்தும் துணை மேலாளர் ஒருவர் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. சாவிகள் அனைத்தும் அவரிடம் பத்திரமாக உள்ள நிலையில் மர்ம மனிதர்கள் கள்ளச் சாவியை பயன்படுத்தி இருப்பது போலீசாருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். வங்கி ஊழியர்கள், கட்டிட உரிமையாளர் மற்றும் வங்கிக்கு அடிக்கடி வந்து செல்லும் வாடிக்கையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    ஆனால் அதில் பயன் உள்ள வகையில் எந்த துப்பும் துலங்கவில்லை.

    கொள்ளையர்கள் வங்கிக்குள் எந்த தடயத்தையும் விட்டுச் செல்லவில்லை. அந்த வங்கிக்குள் ரூ.25 லட்சம் ரொக்கப் பணம் இருந்தது.

    ஆனால் அந்த பணம் இருக்கும் பகுதிக்கு மர்ம மனிதர்கள் செல்லவில்லை. அடகு நகைகளை மட்டுமே குறி வைத்தே அவர்கள் கை வரிசை காட்டி உள்ளனர்.

    கடந்த வாரம்தான் இந்த வங்கியில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு ஆடிட்டர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருந்தனர். அன்று சுமார் 200 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

    அந்த சம்பவம் நடந்து இன்னும் ஒரு வாரம் கூட நிறைவு பெறவில்லை. அதற்குள் அதே பகுதியில் 32 கிலோ தங்கம் கொள்ளை போய் இருப்பது மக்களிடம் கடும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    பேங்க் ஆப் இந்தியாவில் அடகு நகைகள் கொள்ளை போய் விட்டது என்ற தகவல் பரவியதும் மக்கள் ஆயில்மில் பகுதியில் திரண்டனர். நகைகளை அடகு வைத்த சில பெண்கள் கண்ணீர் மல்க காணப்பட்டனர்.

    திருவள்ளூரில் அடுத் தடுத்து நடக்கும் கொள்ளைகள் போலீசாருக்கு சவால் விடும் வகையில் உள்ளது. ஆடிட்டர் வீட்டில் 200 பவுன் கொள்ளை போன போதே வங்கிகள் உஷாராகி காவலாளியை ஏற்பாடு செய்திருந்தால் அடகு நகைகள் கொள்ளை போய் இருக்காது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    சென்னை வளசரவாக்கத்தில் கடந்த மார்ச் மாதம் ரூ.45 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளைபோனது. அதிலும் இன்னமும் துப்பு துலங்கவில்லை. இந்த நிலையில் திருவள்ளூரில் ஆடிட்டர் வீட்டிலும் வங்கியிலும் கைவரிசை காட்டியது ஒரே கும்பலாகத்தான் இருக்கும் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.#bankrobbery
    ×