search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 110454"

    கோவையில் அரசு கொள்முதல் மையம் அமைக்க கோரி சின்ன வெங்காய செடியுடன் வந்து விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
    கோவை:

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. கலெக்டர் ஹரிஹரன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

    அவரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமையில் விவசாயிகள் கையில் வெங்காய செடியுடன் வந்து மனு அளித்தனர்.

    கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளான தொண்டாமுத்தூர், நரசீபுரம், செம்மேடு, பூலுவப்பட்டி, நல்லூர் வயல், ஆலாந்துறை, சென்னனூர், மாதம்பட்டி, தீத்திப்பாளையம், பேரூர் ஆகிய பகுதிகளில் 500 ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    சின்ன வெங்காயத்தை அறுவடை செய்கின்ற காலத்தில் போதிய விலை கிடைக்காததால் பட்டறையில் இருப்பு வைத்து ஐப்பசி முதல் மார்கழி மாதம் வரை போதிய விலை கிடைக்கும் காலத்தில் விற்பனை செய்து வருகிறோம்.

    தற்போது இந்த சின்ன வெங்காயம் அழுக தொடங்கியது. இதனால் சின்ன வெங்காயம் உற்பத்தி செய்த விவசாயிகள் பெரும் பொருளாதார நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே சின்னவெங்காய விவசாயிகளுக்கு மானிய விலையை அரசு வழங்க வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள சின்ன வெங்காயம் சேதத்தை கணக்கெடுப்பு செய்து பாதிக்கப்பட்ட விசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 1 லட்சம் வரை நஷ்டு ஈடு வழங்க வேண்டும்.சின்ன வெங்காயம் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் அரசே கொள்முதல் மையம் அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

    போத்தனூர் ரெயில்வே பணியாளர் சங்கத்தினர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், போத்தனூர் ரெயில் நிலையம் கோவையில் 2-வது பெரிய ரெயில் நிலையமாக உள்ளது.

    இங்கு ஆயிரம் வாகனங்களை நிறுத்தும் அளவு இட வசதி உள்ளது. ஆனால் இங்கு ரெயில்கள் நின்று செல்வதில்லை. இந்த ரெயில் நிலையத்தை 2-வது ரெயில் நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என மனுவில் கூறி உள்ளார்.

    கோவை மேட்டுப்பாளையம் சாலை எருகம்பெனி ஜீவா நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், நாங்கள் 200 குடும்பத்தினர் இப்பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக வசித்து வருகிறோம்.

    கடந்த 30 வருடத்திற்கு முன் குடியிருப்புக்கு 85 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை பணம் கட்டினோம். தற்போது எங்களை காலி செய்து கீரணத்தம் பகுதியில் உள்ள குடியிருப்புக்கு செல்லுமாறு அதிகாரிகள் கூறுகிறார்கள்.

    எங்கள் குழந்தைகள் இப்பகுதியில் தான் படித்து வருகிறார்கள். எங்களுக்கு மாநகராட்சி எல்லை பகுதியில் மாற்று இடம் வழங்க வேண்டும் என கூறி உள்ளனர்.

    கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் கே.மோகன்ராஜ் கோவை கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கோவை வெரைட்டிஹால் ரோட்டில் போலீஸ் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்பு உள்ளது. இதன் சுற்றுச்சுவர் இடிந்து பல ஆண்டுகள் ஆகிறது. போலீசார் இரவு பகல் பாராமல் மக்கள் பாதுகாப்பு பணிக்கு சென்று விடுகின்றனர்.

    போலீஸ் நிலையத்தையொட்டி ரெயில் நிலையம் உள்ளது. டாஸ்மாக் மதுக்கடையும் உள்ளது. பயணிகள் மற்றும் சமூக விரோதிகள் மது அருந்திவிட்டு தகாத வார்த்தைகளில் பேசிவருகிறார்கள். சுற்றுச்சுவர் இல்லாமல் இருக்கும் குடியிருப்பால் போலீசாரின் குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர்.

    தற்போது ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலைய சுற்றுச்சுவர் பணி நடைபெற்று வருகிறது. அதேபோன்று வெரைட்டிஹால் காவலர் குடியிருப்பு சுற்றுச்சுவரை கட்டிக்கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றதால் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் மனு கொடுக்க வந்தவர்களை சோதனை செய்த பின்னர் கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதித்தனர்.

    சோதனையின் போது கலெக்டர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் அரசு ஊழியர் ஒருவர் வந்தார். அவரிடம் போலீசார் சோதனை செய்த போது அவர் தனது அடையாள அட்டையை காண்பித்தார்.

    அவர் வைத்திருந்த பையை திறந்து காண்பிக்கும் படி போலீசார் கூறினார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தனது பையை திறந்து அதில் வைத்திருந்த சாப்பாடு பாக்சை திறந்து அதனை வெளியே கொட்டி விட்டு சென்று விட்டார்.இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. #tamilnews
    இம்ரான் கான் மீதான தகுதிநீக்க மனுவை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. #Pakistan #SupremeCourt #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவரும், தற்போதைய பிரதமருமான இம்ரான் கானை தகுதிநீக்கம் செய்யுமாறு கடந்த ஆண்டு மே மாதம் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அவர் எம்.பி.யாக இருந்தார்.

    அந்த மனுவில் எம்.பி. மனுத்தாக்கலின் போது அவர் தனது பிள்ளையின் பெயரை குறிப்பிடவில்லை இதனால் அவர் அரசின் விதிமுறைகளுக்கு உண்மையாக இல்லை என குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.



    அந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி இஜாசுன் அஹ்சான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு காலாவதியாகி விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அது கடந்த பாராளுமன்ற காலகட்டத்தில் போடப்பட்டது எனக்கூறிய நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். #Pakistan #SupremeCourt #ImranKhan
    உடனடி முத்தலாக் முறையை சட்டவிரோதமாக அறிவிக்கும் மத்திய அரசின் புதிய சட்டத்தை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #TripleTalaqBill #TripleTalaqOrdinace #MumbaiHC
    மும்பை:

    இஸ்லாமியர்களின் திருமண முறிவு முறையான முத்தலாக் நவீன காலங்களில் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. செல்போன்களிலும், எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் அப் போன்றவற்றிலும் முத்தலாக் கூறி கணவன் மனைவியை விவாகரத்து செய்து வருகின்றனர்.

    இதனை தடுக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான சட்ட மசோதா கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் நிறைவேற்ற கடும் முயற்சி மேற்கொண்டும் முடியாமல் போனதால் அவசர சட்டம் மூலம் உடனடி முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்து அதற்கான ஒப்புதலை பெற்றது.

    இந்நிலையில், இந்த புதிய சட்டத்தை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் கவுன்சிலர் மசூத் அன்சாரி, அரசு சாரா அமைப்பான ரைசிங் வாய்ஸ் பவுண்டேசன் மற்றும் ஒரு வழக்கறிஞர் இணைந்து இந்த மனுவை அளித்துள்ளனர்.

    இந்த மனுவில், இஸ்லாமிய ஆண்களின் அடிப்படை உரிமைகள் இந்த சட்டத்தின் மூலம் மறுக்கப்படுவதால் உடனடி முத்தலாக் தடை சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

    இந்த மனு வருகிற 28-ம் தேதி மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #TripleTalaqBill #TripleTalaqOrdinace #MumbaiHC
    அதிமுகவின் சட்டவிதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. #ADMK #DelhiHighCourt
    புதுடெல்லி:

    அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா இறந்த பிறகு, அக்கட்சியில் இனி பொதுச்செயலாளர் பதவி இல்லை எனவும், ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவி மட்டுமே உள்ளது எனவும் கட்சி முடிவு செய்தது. மேலும், அதிமுக சட்டதிட்டங்களில் சில திருத்தங்களும் செய்யப்பட்டன.

    இதை எதிர்த்து கே.சி. பழனிசாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பு தலைமை தேர்தல் ஆணையத்துக்கு மாற்றப்பட்டது. இந்த மாற்றத்தை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம் ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்து இருந்தனர்.

    இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, அதிமுகவில் சட்டவிதிகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற மனுவுக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், மற்றும் சசிகலா உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் 3 வார காலத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

    மேலும், 3 வாரத்துக்குள் பதில் அளிக்கப்பட்டவுடன், அடுத்த 4 வார காலத்துக்குள் அதனை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்றம்,  ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., மனுவை நிராகரித்து தீர்ப்பளித்தனர். #ADMK #DelhiHighCourt
    ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யக்கோரிய அமலாக்கத்துறையின் மனு குறித்து கார்த்திக் சிதம்பரம் பதிலளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #EnforcementDirectorate #KartiChidambaram #AircelMaxisCase
    புதுடெல்லி:

    ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அப்போது கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இருந்தது. இந்த தடையை நீக்குமாறு அமலாக்கத்துறை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தது. இந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

    அமலாக்கத்துறையின் மனுவை விசாரித்த நீதிமன்றம், இது குறித்து கார்த்தி சிதம்பரம் வரும் 18-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது. #EnforcementDirectorate #KartiChidambaram #AircelMaxisCase
    கோர்ட்டு தீர்ப்புக்கு ஏற்ப தங்களை விரைந்து விடுவிக்கக் கோரி முருகன், நளினி ஆகியோர் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். #RajivGandhiCase #Nalini
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை குற்றவாளிகளை தமிழக அரசே விடுதலை செய்வது குறித்து முடிவு எடுக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    ராஜிவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தமிழக அமைச்சரவை அவசர கூட்டம் நாளை நடக்கிறது. இதில் 7 பேரின் விடுதலை தொடர்பாக கவர்னருக்கு பரிந்துரைப்பது பற்றி முடிவு எடுக்கிறார்கள்.

    வேலூர் ஜெயிலில் உள்ள நளினி அவரது மகள் திருமணத்துக்காக 6 மாதம் பரோல் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை நேற்று வாபஸ் பெற்றார்.

    இந்த நிலையில் வேலூர் ஜெயிலில் நளினி அவரது கணவர் முருகன் சந்திப்பு இன்று காலை நடந்தது. இருவரும் விடுதலை தொடர்பாக பேசியுள்ளனர். மேலும் அவர்கள் மகள் திருமண ஏற்பாடுகள் குறித்து உருக்கமாக பேசியதாக கூறப்படுகிறது.

    காலை 8.5 மணி முதல் 9.5 மணி வரை சந்திப்பு நடந்தது. காட்பாடி டி.எஸ்.பி. அலெக்ஸ் தலைமையிலான போலீசார் ஆண்கள் ஜெயிலில் இருந்து முருகனை பெண்கள் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர். சந்திப்புக்கு பின் முருகன் மீண்டும் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனை அவரது வக்கீல் புகழேந்தி சந்தித்து பேசினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு நளினி மற்றும் முருகன் உள்ளிட்டவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல், முதல்வர் பழனிசாமி, மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி உட்பட அனைத்து தலைவர்களுக்கும் நளினி மற்றும் முருகன் நன்றி தெரிவித்தனர்.

    கோர்ட்டு தீர்ப்புக்கு ஏற்ப தங்களை விரைந்து விடுவிக்கக் கோரி முருகன், நளினி ஆகியோர் தமிழக உள்துறை செயலருக்கும், சாந்தன் தமிழக முருல்வருக்கும் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.#RajivGandhiCase #Nalini
    திருச்சி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நாளை நடக்கிறது. இந்த முகாம்களில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெறும்படி கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.
    திருச்சி:

    பொதுமக்கள் தங்களது தேவைகளுக்காக அரசு அலுவலங்களுக்கு சென்று வருவதில் ஏற்படும் காலதாமதம், காலவிரயம், போக்குவரத்து செலவு விரயத்தை தவிர்க்கவும், அந்தந்த கிராமங்களுக்கு அரசு அலுவலர்கள் சென்று கோரிக்கைகளை கேட்டு தீர்வு காணும் வகையில் வாரந்தோறும் அம்மா திட்ட முகாம்கள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

    அதன்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் தலா ஒரு கிராமம் வீதம் தேர்வு செய்யப்பட்டு வாரந்தோறும் அம்மா திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. 

    திருச்சி கிழக்கு வட்டத்தில் அரியமங்கலம், திருச்சி மேற்கு  வட்டத்தில் பஞ்சப்பூர், திருவெறும்பூர் வட்டத்தில் அரசங்குடி, ஸ்ரீரங்கம் வட்டத்தில் கிளிக்கூடு, மணப் பாறை வட்டத்தில் முகவனூர் தெற்கு, மருங்கா புரி வட்டத்தில் செவந்தாம் பட்டி, லால்குடி வட்டத்தில் கருடாமங்கலம், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் ராசாம் பாளை யம், முசிறி வட்டத்தில் நெய்வேலி, துறையூர் வட்டத்தில் பகன வாடி, தொட்டியம் வட்டத்தில் அரங்கூர் ஆகிய கிராமங்களில் நாளை  24-ந்தேதி முகாம் நடைபெறுகிறது.  

    இந்த முகாம்களில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், உழவர் பாதுகாப்பு அட்டைகள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், குடும்ப அட்டை, சாலை, குடிநீர் வசதி குறித்து கோரிக்கை மனுக்கள் அளிக்கலாம். தகுதியான மனுக்களுக்கு முகாமில் தீர்வு காணப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். #sterlite
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கி மனுக்கள் பெற்றார். அப்போது உடன்குடி வட்டார விவசாயிகள் மற்றும் பசுமை ஆர்வலர்கள் நலச்சங்க தலைவர் தினகரன் தலைமையில் 40-க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

    எங்கள் பகுதி விவசாய பகுதியாகும். நாங்கள் விவசாயத்து பிரதான உரமான டி.ஏ.பி. உரத்தை பயன்படுத்தி வருகிறோம். தற்போது உரம் தட்டுப்பாட்டால் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து சல்பியூரிக் ஆசிட், பாஸ்பாரிக் ஆசிட் ஆகியவைகள் ஸ்பிக் நிறுவனத்துக்கு கிடைக்காததால் உரம் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு இருப்பது தான்.

    ஸ்டெர்லைட் ஆலை எங்கள் விவசாயத்துக்கு கால்வாய் சுத்தம் செய்தல், குளம் தூர்வாருதல், வண்டல் மண் அடித்து கொடுத்தல் மற்றும் நிறைய பராமரிப்பு பணிகளை பல கோடி ரூபாய்களுக்கு செய்து தருகிறார்கள். எங்கள் பகுதி இளைஞர்கள் பலர் ஸ்டெர்லைட் ஆலையில் வேலை செய்து வந்தனர். இப்போது அவர்களுக்கு வேலை இல்லை. பல கஷ்டங்களில் இருக்கும் எங்களுக்கு ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.

    தூத்துக்குடி மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் மாநில துணை தலைவர் சொக்கலிங்கம் கொடுத்த மனுவில், தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மகாத்மா காந்தியின் முழு உருவ வெண்கல சிலை உள்ளது. இந்த சிலை மற்றும் பீடம் சற்று உயரமாக இருப்பதால், மகாத்மா காந்தியின் பிறந்த நாள், சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட நாட்களில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த சிரமம் ஏற்படுகிறது. எனவே காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வசதியாக அங்கு ஒரு நிரந்தர படிக்கட்டு ஏணி அமைக்க வேண்டும் என்று கூறி இருந்தார். #sterlite
    புறம்போக்கு நிலத்துக்கு பட்டா கேட்டு கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு பெட்ரோல் கேனுடன் வந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து மனு கொடுப்பதற்காக பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்களை கலெக்டர் அலுவலக நுழைவு வாசலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தீவிர சோதனை நடத்திய பின்னரே கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுமதித்தனர்.

    அப்போது கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த ராயர்பாளையம் பகுதியை சேர்ந்த ராமசாமி (வயது 29) என்பவர் தனது குடும்பத்தினருடன் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தார். அவர்களை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் பெட்ரோல் கேன் இருந்ததை கண்டு பிடித்தனர். உடனே அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் ராமசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கூறியதாவது:-

    எங்கள் (ராயர்பாளையம்) பகுதியில் உள்ள 3½ ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் எங்களது கால் நடைகளை மேய்த்து பராமரித்து வருகிறோம். தற்போது திட்டக்குடியை அடுத்த குடிகாடு பகுதியை சேர்ந்த ஒருவர் இந்த நிலத்தை நான் பராமரிக்க போகிறேன். இந்த நிலத்தை இனிமேல் நீ பராமரிக்கக்கூடாது என்று கூறி மிரட்டல் விடுத்தார். கால்நடைகளை நம்பியே எங்களது வாழ்வாதாரம் உள்ளதால் கால்நடைகளை பராமரிக்க வழியில்லாமல் தவித்து வருகிறோம்.

    எனவே அந்த புறம்போக்கு நிலத்துக்கு எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். எங்களுக்கு மிரட்டல் விடுக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்சினைக்காக இன்று கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தோம். எங்கள் மனு மீது நடவடிக்கை எடுக்கா விட்டால் தற்கொலை செய்ய முடிவு எடுத்து கையில் பெட்ரோல் கேன் கொண்டு வந்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெட்ரோல் கேனுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வாலிபர் ஒருவர் வந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    அசாம் மாநிலத்தின் குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என குடியரசுத்தலைவரிடம் இன்று எதிர்க்கட்சிகள் மனு அளித்துள்ளனர். #AssamNRC #RamNathKovind
    புதுடெல்லி:

    வங்காளதேசத்தில் இருந்து வந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டது. சமீபத்தில் வெளியிடப்பட்ட அதன் இறுதி வரைவு அறிக்கையில், 40 லட்சம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். தற்போதைய நிலையில் இந்த 40 லட்சம் பேரும் சட்டவிரோத குடிமக்களாக கருதப்படுவார்கள்.

    இந்த விவகாரம் கடும் சர்ச்சைக்குள்ளானது. மேலும், அரசியல் காரணங்களுக்காக இந்தியர்களின் பெயர்களும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், அசாம் குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் இந்தியர்களின் பெயர்கள் விடுபடாமல் இருக்க குடியரசுத்தலைவர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய எதிர்க்கட்சிகள் குடியரசுத்தலைவரிடம் இன்று மனு அளித்தனர். #AssamNRC #RamNathKovind
    கட்டிட தொழிலாளர்கள் விபத்தில் மரணம் அடைந்தால் 10 லட்சம் இழப்பீடு வேண்டும் என்று தொழிலாளர்கள் வலியுறுத்தல்.

    சேலம்:

    கட்டுமான தொழிலாளர்கள் வாழும் உரிமையை நிலைநாட்ட தமிழகம் தழுவிய தொழிலாளர் சந்திப்பு இயக்கத்தை ஜூலை 1-ந்தேதி முதல் 30-ந் தேதியான இன்று வரை நடத்தினர். இதையொட்டி தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது-

    நல வாரியத்தில் நலத்திட்ட உதவிகள் விண்ணப்பித்து 30 நாட்களில் வழங்க வேண்டும், ஈமச்சடங்கு உதவி தொகையை அடக்கம் செய்வதற்கு முன்பாக வழங்க வேண்டும்,

    இயற்கை மரணத்திற்கு 5 லட்சமும், விபத்து மரணத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், பதிவு ஆவணப்படி 60 வயதை அடைந்தால் நிபந்தனையின்றி ஓய்வூதியம் வழங்க வேண்டும்,

    இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி, பி.எப். வைப்பு திட்டங்களை உடனடியாக அமுல் படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது. #Tamilnews

    புதுவை மாநில இளைஞர் காங்கிரசுக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 11, 12-ந்தேதி களில் நடக்கிறது. #congress

    புதுச்சேரி:

    புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக இளையராஜா தலைமையிலான நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்து 3 ஆண்டாகிவிட்டது. இதனால் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய கட்சித்தலைமை தேர்தலை அறிவித்துள்ளது.

    தேர்தலுக்கு முன்னதாக உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடந்தது. இதில் மாநிலம் முழுவதும் 30 ஆயிரம் தீவிர உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரு தீவிர உறுப்பினர் தனக்கு கீழ் 4 உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். அதனடிப்படையில் தற்போது 1½ லட்சம் பேர் இளைஞர் காங்கிரசில் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர். சேர்க்கப்பட்ட உறுப்பினர்களின் மனு பரிசீலனை நடந்து வருகிறது.

    இறுதி பரிசீலனை வருகிற 30-ந்தேதி தொடங்கி 1-ந்தேதி முடிவடைகிறது. இதையடுத்து வேட்பு மனுதாக்கல் 30-ந்தேதி முதல் ஆகஸ்டு 2-ந்தேதி வரை நடக்கிறது. வேட்பு மனு பரிசீலனை ஆகஸ்டு 3-ந்தேதி நடக்கிறது. சின்னம் ஒதுக்கீடு 4-ந்தேதி நடக்கிறது.

    இதைத்தொடர்ந்து தேர்தல் ஆகஸ்டு 11 மற்றும் 12-ந்தேதிகளில் நடக்கிறது. 14-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. முன்னதாக தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களில் 16 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்களுக்கு நேர்முகத் தேர்வு டெல்லியில் இன்று நடக்கிறது. இதில் தகுதியுள்ளவர்களை தேர்வு செய்து அவர்கள் மட்டுமே தலைவர் பதவிக்கு போட்டியிட அனுமதிக்கப்படுகின்றனர்.  #congress

    ×