search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலூர்"

    வேலூர் மாவட்டத்தில் 13 இடங்களில் ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். #JactoGeo

    வேலூர்:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தில் 13 இடங்களில் இந்த போராட்டம் நடந்தது. வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் நடந்த போராட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, பேரணாம்பட்டு, குடியாத்தம், அரக்கோணம், காட்பாடி, ஆற்காடு, வாலாஜா, நெமிலி ஆகிய இடங்களில் தாலுகா அலுவலகங்கள் முன்பு ஏராளமான ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் போராட்டம் செய்தனர்.

    அணைக்கட்டில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு போராட்டம் செய்தனர். இந்த போராட்டத்தில் 13 ஆசிரியர்கள் பங்கேற்றதாக ஜாக்டோ ஜியோ நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். ஆசிரியர்கள் போராட்டத்தால் பள்ளிகளில் பணிகள் பாதிக்கபட்டது.

    சில தொடக்கபள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களும் போராட்டத்தில் பங்கேற்க சென்றதால் பள்ளிக்கு பூட்டு போடபட்டது. அரசு அலுவலர்கள் போராட்டத்தால் அலுவலகங்களில் பணிகள் பாதிக்கபட்டன. #JactoGeo

    வேலூர் அருகே பைக் மோதி கட்டிட மேஸ்திரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் அடுத்த சந்தனகொட்டா கொளமேட்டை சேர்ந்தவர் ரேணு (வயது 58). கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று மாலை மேல்வெங்கம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த பைக் இவர் மீது மோதியது இதில் அவர் படுகாயமடைந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ரேணு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூரில் சென்னை ரியல் எஸ்டேட் உரிமையாளரை கடத்தி ரூ.26 லட்சம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    சென்னை வடபழனியை சேர்ந்தவர் வில்சன் விமல் (வயது 44). ரியல் எஸ்டேட் உரிமையாளரான இவரை கடந்த மாதம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியவர்கள் தங்களை விக்னேஷ், தமிழ்செல்வன் என அறிமுகப்படுத்தி, வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் நிலம் விற்பனைக்கு உள்ளது, அதனை நேரில் பார்க்க வரும்படி கூறினர்.

    இதையடுத்து வில்சன்விமல் நிலத்தை வாங்க ரூ.5 லட்சத்துடன் கடந்த மாதம் தனது காரில் வேலூருக்கு வந்தார். விக்னேஷ், தமிழ்செல்வன் மற்றும் நண்பர்கள் 4 பேர் என மொத்தம் 6 பேர் வில்சன்விமலை தங்கள் காரில் அழைத்து சென்று சில இடங்களை காண்பித்தனர்.

    பின்னர் 6 பேரும் சேர்ந்து வில்சன்விமலை தாக்கி கண்களை கட்டி காரில் ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு கடத்தினர். அங்கு வைத்து ரூ.26 லட்சத்து 20 ஆயிரத்தை பறித்து கொண்டனர். இதுதொடர்பாக வில்சன்விமல் அளித்த புகாரில் வேலூர் வடக்கு இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்தார். 2 தனிப்படை போலீசார் பெருந்துறையில் தீவிர விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் வாணியமபாடியை சேர்ந்த சீனிவாசன் (44), கரூரை சேர்ந்த விக்னேஷ் என்ற விஷ்வா (31) ஆகிய 2 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    வேலூர் மற்றும் திருவண்ணாமலையில் அரசு ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.


    வேலூரில் பல்வேறு இடங்களில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர், அகில இந்திய அஞ்சலக ஊழியர்கள் சங்கத்தினர், சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம், டாஸ்மாக் அனைத்து தொழிலாளர்கள் சங்கம், மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கம் உள்பட பல்வேறு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    2-வது நாளாக மத்திய அரசு ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக வேலூர் மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அனைத்து பகுதிகளுக்கும் அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்கள், ஆட்டோக்கள், சரக்கு லாரிகளும் வழக்கம்போல் இயங்கின.

    வேலூரில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் மட்டும் தமிழக எல்லையான ஓசூர் வரை இயக்கப்பட்டன. திருப்பதி, சித்தூர் உள்ளிட்ட ஆந்திரா மாநிலத்துக்கு வழக்கம்போல் பஸ்கள் சென்றன.

    இதேபோல் திருவண்ணாமலையிலும் மத்திய அரசு ஊழியர்கள் இன்று 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்டோ, பஸ்கள் வழக்கம் போல் ஓடியது. பொதுமக்கள் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை.

    வேலூர் மாவட்டத்தை 3-ஆக பிரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். #Vellore #MinisterVeeramani
    வேலூர்:

    வேலூர் மண்டலத்திற்கு ரூ.6 கோடி மதிப்பில் ஒதுக்கப்பட்ட 24 பஸ்களில் 16 பஸ்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டது.

    இதில் மேலும், 8 புதிய பஸ்கள் இயக்க நிகழ்ச்சி வேலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு கொடியசைத்து புதிய பஸ்களை தொடங்கி வைத்தார்.

    இதில் சென்னையிலிருந்து வேலூர் வழியாக ஓசூருக்கு 3 பஸ்களும், வேலூரிலிருந்து திருச்சிக்கு ஒரு பஸ்சும், வேலூரிலிருந்து ஈரோட்டுக்கு ஒரு பஸ்சும், ஆம்பூரிலிருந்து அம்பத்தூருக்கு ஒரு பஸ்சும், பேரணாம்பட்டிலிருந்து ஆவடிக்கு ஒரு பஸ்சும், குடியாத்தத்திலிருந்து சோழிங்கநல்லூருக்கு ஒரு பஸ்சும் இயக்கப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து அமைச்சர் கே.சி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறுகையில்:- ‘‘வேலூரை 2 மாவட்டமாக பிரிக்க ஏற்கனவே பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் வேலூர் மாவட்டத்தை வேலூர், அரக்கோணம், திருப்பத்தூர் என 3 மாவட்டமாக பிரித்தால் சிறப்பாக இருக்கும் என்ற கருத்தை முதல்- அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளேன். நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்து உள்ளார். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார். #Vellore #MinisterVeeramani
    வேலூரில் வருகிற 31-ந்தேதி ரேசன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    வேலூர்:

    அரக்கோணம் வட்டத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ரேசன் கடைகளுக்கு வரும் பொருட்களை சரியான அளவில் எடைபோடாமல் அனுப்பப்படுகிறது.

    இந்த செயலை கண்டித்து ரேசன் கடைகளுக்கு வரும் பொருட்கள் அனைத்தும் லாரியில் வரும் எடைதராசில் சரியான அளவில் எடையிட்டு அந்தந்த மாதத்திற்கான கலர்நூல் தையலிட்டு விற்பனையாளர் முன்பாக கடையிலேயே வழங்க கோரியும் தொடர்ந்து இம்மாதிரியான சம்பவங்கள் நடைபெறுவதை மாவட்ட நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மாநில மையத்தின் வழிகாட்டுதலின்படி மாவட்ட செயற்குழு கூட்டத்தின் முடிவின்படியும் மேற்காணும் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே வருகிற 31-ந்தேதி திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    மாவட்ட தலைவர் செல்வம் தலைமையில் ரேசன் கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியம் பங்கேற்று பேசுகிறார். மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

    மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகத்தில் முதன்மை மாவட்டமாக வேலூர் திகழ்கிறது என்று அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.
    வேலூர்:

    உலகம் முழுவதும் மாற்றுத் திறனாளிகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகள் தின விழா வேலூரில் நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். அரக்கோணம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சு.ரவி, முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், குழந்தைகள் பாதுகாப்பு நலஅலுவலர் நிஷாந்தினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி. வீரமணி கலந்து கொண்டு 191 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.16 லட்சத்து 68 ஆயிரத்து 880 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் வளம்பெற மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பல்வேறு விதமான நலத்திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தினார். அந்த திட்டங்கள் தற்போதும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் வேலூர் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதன்மை மாவட்டமாக வேலூர் திகழ்கிறது.

    வேலூர் மாவட்டத்தில் 84 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் நலத்திட்டங்களை பெற அரசு உறுதுணையாக இருக்கும்.

    மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்க வங்கியில் மானியக்கடன், கல்விக்கடன், 3 சக்கர சைக்கிள்கள், சிறப்பு சக்கர நாற்காலிகள், பிரெய்லி கைக்கெடிகாரம், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அரசின் அனைத்து திட்டங்களையும் பெற்று மாற்றுத்திறனாளிகள் பயனடைய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் கலெக்டர் ராமன் பேசுகையில், ‘உலக மக்கள்தொகையில் 15 சதவீதம் பேர் மாற்றுத்திறனாளிகள். இந்தியாவில் 2.1 சதவீதமும், தமிழகத்தில் 1.8 சதவீதமும் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். சராசரி மனிதர்களை போன்று மாற்றுத்திறனாளிகளையும் நடத்த வேண்டும், அவர்களுக்கு சிறப்பான பாதுகாப்பை கொடுக்க வேண்டும். கர்ப்பத்தின்போது உரிய ஊட்டச்சத்து சாப்பிடாதது, நெருங்கிய உறவினர்கள் குடும்பத்தில் திருமணம் செய்து கொள்வது உள்ளிட்ட காரணங்களால் மாற்றுத்திறனாளிகள் பிறக்கிறார்கள். 1995-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட்டது. அது கடந்த 2016-ம் ஆண்டு 4 சதவீதமாக உயர்த்தப்பட்டது. உயர்கல்வியில் 5 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் மாற்றுத்திறனாளிகள் சாதித்து வருகிறார்கள். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று பெருமை சேர்த்துள்ளனர். மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் ‘வெல்மாவில்’ ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பணிபுரிந்து வருகின்றனர்’ என்றார்.

    முன்னதாக மாற்றுத்திறனாளிகளின் கைவினை பொருட்கள் கண்காட்சியினை அமைச்சர் கே.சி.வீரமணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

    இதில் வேலூர் தாசில்தார் ரமேஷ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஜெகதீஸ்வரன், ஆவின் முன்னாள் தலைவர் வேலழகன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் எம்.ராகவன், பெல் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    வேலூர் அருகே கார்த்திகை தீப விளக்கு ஏற்றிய போது தீயில் கருகிய சிறுமி இறந்தார்.

    வேலூர்:

    வேலூர் அடுத்த நாயக்கன் நேரியை சேர்ந்தவர் ரமேஷ். விவசாயி இவரது மகள் ஹரிணி (வயது 5). இவர் கார்த்திகை தீபத்தன்று வீட்டில் அகல்விளக்குகளை ஏற்றி உள்ளார்.

    அப்போது எதிர்பாராமல் அவர் அணிந்திருந்த ஆடையில் விளக்கில் இருந்து தீபற்றி எரிந்தது. உடல் முழுவதும் பற்றிய தீயால் சிறுமி அலறிதுடித்தார். அவரது அலறல் சத்தம்கேட்டு வந்த உறவினர்கள் சிறுமியை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிகக்கு கொண்டு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு ஹரிணி சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்து வேலூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் கிரீன் சர்க்கிளில் டாக்டரிடம் செல்போன் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வேலூர்:

    வேலூர் சங்கரன்பாளையத்தை சேர்ந்தவர் வாசு (வயது 50). ஹோமியோபதி டாக்டர். இவர் நேற்று கிரீன் சர்க்களில் செல்போன் பேசிக் கொண்டு நின்றிருந்தார். அப்போது அங்கு ஒரு பைக்கில் வந்த 3 பேர் கும்பல் திடீரென வாசுவை தாக்கிவிட்டு அவரிடம் இருந்து செல்போனை பறித்துச் சென்று விட்டனர்.

    அதிர்ச்சியடைந்த வாசு திருடன், திருடன் என கத்தி கூச்சலிட்டார். அதற்குள் அந்த மர்ம கும்பல் தப்பிச் சென்று விட்டது. இது குறித்து வாசு வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பகுதியில் உள்ள ஓட்டல் கண்காணிப்பு கேமராவில் செல்போன் பறிப்பு சம்பவம் பதிவாகி உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே இடத்தில் ஒரு பெண்ணிடம் செயின் பறிப்பு நடந்தது. இந்த பகுதியில் தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    எனவே போலீசார் இந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைத்து ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 3-வது நாளாகவும் மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக சில இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். #Rain

    வேலூர்:

    தென்மேற்கு வங்க கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இன்று 3-வது நாளாகவும் தொடர்ந்து பெய்தது.

    சில நேரங்களில் சாரல் மழை போன்றும் சில நேரங்களில் பலத்த மழையும் பெய்தது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்லமுடியாமல் வீட்டுக்குள் முடங்கினர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மக்கள் நடமாட்டமின்றி வேலூர் நகரம் வெறிச்சோடி காணப்பட்டது. வெளியில் சென்ற பொதுமக்கள் குடைபிடித்தும், மழை கோட்டு அணிந்தும் சென்றனர். தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.

    தொடர் மழையால் வேலூர் சூரியகுளம் பர்மாகாலனி பகுதியில் உள்ள சில வீடுகளுக்குள் மழைநீருடன், கழிவுநீரும் புகுந்தது. தெருவிலும் முழங்கால் வரை தண்ணீர் தேங்கி நின்றது. அதேபோன்று சேண்பாக்கம் ராகவேந்திரா நகரில் உள்ள சில வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.


    வேலூர் ஆற்காடு ரோடு, புதிய பஸ்நிலையம் அருகே கிரீன்சர்க்கில், சர்வீஸ் ரோடு, ஆரணிரோடு பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் அதிகப்பட்சமாக ஆற்காடு பகுதியில் 59 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டம் முழுவதும் பெய்துள்ள மழையளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    வேலூர்-47.3, ஆம்பூர்-25.4, வாணியம்பாடி-19.7, ஆலங்காயம்-25.9, அரக்கோணம்-37.8, காவேரிபாக்கம்-32.2, வாலாஜா-29.2, சோளிங்கர்-14, திருப் பத்தூர்-3.8, ஆற்காடு-59, குடியாத்தம்-23.3, மேலாலத்தூர்-29.6, பொன்னைடேம்-16.2, காட்பாடி-44.8, அம்முண்டிமில்-30.2.  #Rain

    வேலூர்- திருவண்ணாமலை மாவட்டத்தில் கோர்ட்டு தீர்ப்பை மீறி அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    வேலூர் மாநகர பகுதியில் ஒதுக்கப்பட்ட நேரத்தை விட மற்ற நேரத்தில் பட்டாசு வெடித்த 14 பேர் மீதும், காட்பாடி-4, ராணிப்பேட்டை-6, அரக்கோணம்-2, குடியாத்தம்-4, ஆம்பூர்-6, வாணியம்பாடி-7, திருப்பத்தூர் 7 பேர் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 50 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் அனுமதிக்கப்படாத நேரத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்தததாக 93 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதில் ஒரு சிலர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். #tamilnews
    வேலூரில் இளம் பெண்ணிடம் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வேலூர்:

    லத்தேரி அடுத்த அன்னங்குடி கிராமத்தை சேர்ந்தவர் அபிலா (வயது 22). இவர் வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் உள்ள தனியார் வாகன ஷோரூமில் வேலை செய்து வருகிறார்.

    அபிலா கடந்த 2 நாட்களுக்கு முன்பு பணியை முடித்து கொண்டு இரவு 7.30 மணிளவில் பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார்.அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த 3 பேர் ஷோரூமுக்கு அருகிலேயே அபிலோவின் கழுத்தில் இருந்த 1½ பவுன் செயினை பறித்து சென்றனர். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் அபிலா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும் செயின் பறிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரின் விவரங்களை போலீசார் சேகரித்துள்ளனர். அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று தெரிவித்தனர்.

    ×