search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 110640"

    உடுமலையில் சாலையோர பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த பயணிகள் அலறி சத்தம் போட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    உடுமலை:

    உடுமலை அடுத்த குடிமங்கலம் அருகே ராமச்சந்திராபுரத்தில் இருந்து உடுமலைக்கு அரசு டவுன்பஸ் ஒன்று 20 பயணிகளுடன் புறப்பட்டது. பஸ் ராமச்சந்திராபுரம்- உடுமலை சாலையில் பண்ணை கிணறு அருகே சென்றபோது எதிரே ஒரு கார் வந்தது. காருக்கு வழி விடுவதற்காக சாலையின் ஓரமாக பஸ்சை டிரைவர் ஓட்டினார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த பயணிகள் அலறி சத்தம் போட்டனர்.

    மேலும் பஸ்சின் படிக்கட்டுபகுதி தரையில் அழுத்தியதால் பஸ்சுக்குள் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் காப்பாற்றுமாறு கூக்குரலிட்டனர். அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடிச்சென்று பஸ்சுக்குள் இருந்தவர்களை ஜன்னல் வழியாக வெளியே மீட்டனர்.

    காயம் அடைந்தவர்கள் உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பொதுமக்கள் கூறும்போது, கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் தார்ரோடு போடப்பட்டது. ஆனால் ரோட்டின் ஓரங்களில் முறையாக மண்போட்டு நிரப்பவில்லை. அருகில் உள்ள மண்ணை எடுத்து நிரப்பி உள்ளனர். இதனால் வாகனங்கள் சாலையை விட்டு லேசான இறங்கினாலும் பள்ளத்தில் கவிழ்ந்து விடும். இதுபோல் பல விபத்துகள் நடந்துள்ளது. எனவே சாலையோரங்களை சீரமைக்க வேண்டும் என்றனர்.

    உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி டிரைவர் பஸ்சைஅதிவேகமாக ஓட்டியதால் தான் விபத்து ஏற்பட்டதாக உயிர் தப்பிய பயணிகள் கூறியுள்ளனர்.
    விழுப்புரம்:

    உளுந்தூர்பேட்டை அருகே டேங்கர் லாரி மீது பஸ் மோதியதில் 4 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர். பஸ்சில் இருந்த 13 பேர் ஜன்னலை உடைத்துக்கொண்டு கீழே குதித்து உயிர்தப்பினர்.

    இந்தவிபத்து குறித்து உயிர்தப்பிய பயணிகள் கூறியதாவது:-

    பஸ் சென்னையில் இருந்து புறப்பட்டபோதே பஸ்சின் டிரைவர் பஸ்சை அதிவேமாக ஓட்டி சென்றார். இதனால் நாங்கள் அச்சத்துடன் பயணம் செய்தோம்.

    சில பயணிகள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் லாரி மீது பஸ் டமார் என்று மோதியது. சிறிது நேரத்தில் லாரியும், பஸ்சும் தீ பிடிக்க தொடங்கியது.

    இதில் நாங்கள் அனைவரும் கூச்சல் போட்டு அலறினோம். பின்னர் ஜன்னலை உடைத்து கீழே குதித்து உயிர்தப்பினோம். பஸ் டிரைவர் வேகமாக ஓட்டியதால் விபத்து ஏற்பட்டது.

    ஆம்னி பஸ் டிரைவர்கள் அனைவரும் மின்னல்வேகத்தில் ஓட்டிசெல்வதால் விபத்து ஏற்படுகிறது. எனவே மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆம்னி பஸ்களை ஆய்வு செய்ய வேண்டும். வேகமாக ஓட்டும் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மேலும் இந்த விபத்து குறித்து அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    அஜீஸ்நகர் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதற்கு காரணம் அங்குள்ள வளைவு பகுதியில் செல்லும்போது பஸ் டிரைவர்கள் அதிவேகமாக செல்கிறார்கள். இதனால் டிரைவர்களின் கட்டப்பாட்டை இழந்து பஸ்கள் விபத்துக்குள்ளாகிறது.

    மேலும் அந்த பகுதியில் மின்விளக்கும் எரிவதில்லை. இதனால் இரவில் வரும் வாகனங்கள் அந்த பகுதியில் விபத்தில் சிக்கிக்கொள்கிறது.

    எனவே அந்த பகுதியில் மின்விளக்கு அமைக்க வேண்டும். மேலும் ஆம்னி பஸ்களை வேகமாக ஓட்டி வரும் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #tamilnews
    திருச்சியில் ஓடும் பஸ்சில் பிக்பாக்கெட் அடித்த 2 பெண்களை சக பயணிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    திருச்சி:

    திருச்சி கே.கே.நகர் அய்யப்பநகர்  குமுதம் தெருவை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 56). இவர் திருச்சி மத்திய பேருந்து  நிலையத்தில் இருந்து கே.கே.நகருக்கு பேருந்தில் சென்றார். பஸ் காஜாமலை பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அவரின் அருகில் இருந்த 2 பெண்கள், பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மணிபர்சை எடுத்துள்ளனர். 

    இதனை கவனித்த அவர் சக பயணிகள் உதவியுடன் இரு பெண்களையும் பிடித்து கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில்  ஒப்படைத்தார். 

    விசாரணையில் அவர்கள் இருவரும்  மதுரை அலங்காநல்லூரை சேர்ந்த மகாலிங்கம் மனைவி ஜீவா (50), முத்து மனைவி சுபிதா ( 37) என்பது தெரியவந்தது. பின்னர் இருவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயணிகளுடன் வந்த பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #JammuKashmir #Accident
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வார் மாவட்டத்தில் இன்று காலை பயணிகளை ஏற்றி வந்த சிறிய ரக பேருந்து ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 300 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த விபத்து குறித்து காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டு மீட்பு பணிகள் துவங்கப்பட்டன.

    இந்த கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேருந்தில் சுமார் 30 பேர் வரை பயணம் செய்திருக்கலாம் என கூறப்படும் நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வார் பகுதியில் ஒரே மாதத்துக்குள் நடக்கும் 3-வது மிகப்பெரிய விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது. #JammuKashmir #Accident
    கேரளாவில் இருந்து மாலத்தீவுக்கு 136 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் இன்று மாலை தவறான ஓடுபாதையில் தரையிறங்கியதால் அதிர்ச்சியும் பதற்றமும் ஏற்பட்டது. #AirIndiaflight #MaleAirport
    மாலி:

    கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் இருந்து ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் A320 ரக விமானம் இன்று 136 பயணிகளுடன் மாலத்தீவு தலைநகரான மாலி நகரை நோக்கி புறப்பட்டு சென்றது.

    இன்று மாலை 4.42 மணியளவில் மாலி விமான நிலையத்தை நெருங்கியதும் கீழே இறங்கிய அந்த விமானம் வழக்கமான ஓடுபாதையை விட்டு விலகி, புதிதாக கட்டப்பட்டு வரும் வேறொரு கரடுமுரடான ஓடுபாதையில் இறங்கியது. இதனால், அந்த விமானத்தின் இரு டயர்கள் பஞ்சர் ஆனதை தவிர வேறு அசம்பாவிதங்கள் ஏதுமின்றி, அனைத்து பயணிகளும் உயிர் தப்பினர்.

    சம்பவ இடத்தில் இருந்து இழுத்து செல்லப்பட்டுள்ள நிலையில், மாலி விமான நிலயத்தில்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அந்த விமானத்தின் பழுதடைந்த டயர்களை மாற்றும் பணிகள் நடைபெற்று வருவதாக ஏர் இந்தியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #AirIndiaflight #MaleAirport 
    மெட்ரோ ரெயிலில் கூடுதல் பயணிகளை கவரும் வகையில் ரெயில்கள் விடப்படும் இடைவெளி நேரத்தை குறைக்க மெட்ரோ ரெயில் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். #chennai #Metrotrain
    சென்னை:

    சென்னை நகரில் துரித போக்குவரத்துக்காக மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இதில் ஒரு வழித்தடத்தில் சென்ட்ரலில் இருந்து எழும்பூர், கோயம்பேடு, ஆலந்தூர் வழியாக மீனம்பாக்கத்துக்கும், மற்றொரு வழித்தடத்தில் மீனம்பாக்கத்தில் இருந்து ஆலந்தூர், சைதாப்பேட்டை, டி.எம்.எஸ். வரையிலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    இந்த ஆண்டு இறுதிக்குள் டி.எம்.எஸ். - சென்ட்ரல் இணைக்கப்பட்டதும் இந்த திட்டம் நிறைவு பெறும்.

    மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பாதுகாப்பு வசதிகள், இணைப்பு வாகன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    முற்றிலும் குளு, குளு வசதியுடன் ரெயிலில் நெருக்கடி, இன்றியும் சுற்றுச்சூழல் மாசு இல்லாமலும் சொகுசாக பயணம் செய்ய முடிகிறது.

    இதற்கிடையே மெட்ரோ ரெயிலில் கூடுதல் பயணிகளை கவரும் வகையில் ரெயில்கள் விடப்படும் இடைவெளி நேரத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    சென்டிரல்-விமான நிலைய வழித்தடத்தில் நேரடி ரெயில்கள் நெரிசல் மிகுந்த நேரங்களில் அதிக அளவிலும், நெரிசல் இல்லாத நேரங்களில் குறைந்த அளவிலும் இயக்கப்படுகிறது.

    அதாவது காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் நெரிசல் நேரங்கள் ஆகும். இந்த சமயத்தில் 5 நிமிடத்துக்கு ஒரு ரெயிலும், மற்ற நேரங்களில் 20 நிமிடத்துக்கு ஒரு ரெயிலும் விடப்படுகிறது.

    இதில் நேரடி ரெயில்கள் 20 நிமிடத்துக்கு ஒன்றும் ஆலந்தூர் வரையிலான குறைந்த தூரங்களுக்கான ரெயில்கள் 7 நிமிடங்களுக்கு ஒன்றும் இயக்கப்படுகிறது. இந்த நேரத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நேரடி ரெயில்கள் 14 நிமிடத்துக்கு ஒன்றும் மற்ற நேரங்களில் 7 நிமிடத்துக்கு ஒன்றும் இயக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    விரைவில் இது அமலுக்கு வரும் என்றும் இதன் மூலம் நீண்ட நேரம் காத்திருப்பது குறையும் என்றும் மெட்ரோ ரெயில் அதிகாரிகள் தெரிவித்தனர். #Chennai #Metrotrain
    ரெயில் தாமதமாக வருவதை கண்டித்து மயிலாடுதுறையில் இருந்து கோவை நோக்கி வந்த ஜன சதாப்தி ரெயிலை மறித்து திருப்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருப்பூர்:

    தொழில் நகரமான திருப்பூரில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களில் கோவை, சிங்காநல்லூர், இருகூர், சோமனூர், சூலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

    இவர்கள் தினசரி கோவையில் இருந்து நாகர்கோவில் நோக்கி செல்லும் பாசஞ்சர் ரெயிலில் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு வரும் பாசஞ்சர் ரெயிலில் திரும்புகின்றனர்.

    நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு வரும் பாசஞ்சர் ரெயில் தினசரி இரவு 7.10 மணிக்கு திருப்பூருக்கு வரும். ஆனால் கடந்த சில மாதங்காளாக இந்த ரெயில் 1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை காலதாமதமாக வருகிறது. இதனால் தொழிலாளர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.

    நேற்று இரவு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாசஞ்சர் ரெயிலுக்காக திருப்பூர் ரெயில் நிலையத்தில் காத்து இருந்தனர். ஆனால் ரெயில் 9.30 மணிக்கு தான் வரும் என அறிவிப்பு செய்யப்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் மயிலாடுதுறையில் இருந்து கோவை நோக்கி வந்த ஜன சதாப்தி ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல் கிடைத்ததும் ரெயில்வே அதிகாரிகள், போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு பயணிகள் பாசஞ்சர் ரெயில் தினசரி 2 மணி நேரம் காலதாமதமாக வருகிறது. எனவே நாங்கள் தினசரி பணி முடிந்து வீட்டுக்கு செல்வதற்கு இரவு 11 மணி முதல் 12 மணி வரை ஆகிறது எனவும், பாசஞ்சர் ரெயிலை சரியான நேரத்துக்கு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இதனையடுத்து ரெயில்வே அதிகாரிகள் மயிலாடுதுறையில் இருந்து கோவைக்கு சென்ற ஜனசதாப்தி ரெயிலில் இருகூர், சூலூர், சோமனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகளை ஏற்றி அனுப்பி வைத்தனர்.
    வடசேரி பஸ் நிலையத்தில் 2 பேர் பிணமாக கிடந்ததால் இது குறித்து பயணிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாகர்கோவில்:

    வடசேரி பஸ் நிலையத்திற்கு தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இன்று குமரி மாவட்ட கிராம பகுதிகளுக்குச் செல்லும் டவுன் பஸ்கள் நிற்கும் இடம் அருகே சுமார் 48 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். திடீரென கீழே விழுந்த அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்கு சிலர் முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் இறந்து விட்டார்.

    இதேபோல் பஸ் நிலையம் மேற்கு பகுதியில் மதில் சுவரில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் படுத்திருந்தார். சுவரில் இருந்து தவறி பஸ் நிலையம் பகுதியில் கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

    மேலும் பஸ்நிலையத்திற்குள் அடுத்தடுத்து 2 பேர் பிணமாக கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.  இது குறித்து வடசேரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு பிணமாக கிடந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? எதற்காக இங்கு வந்தனர். என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை- பொள்ளாச்சி மெயின் ரோட்டில் அதிவேகமாக பஸ்கள் செல்வதால் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கூறியுள்ளனர்.
    கிணத்துக்கடவு:

    கிணத்துக்கடவு வழியாக கோவை- பொள்ளாச்சிக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்தவழியாக 130-க்கும் மேற்பட்ட அரசு பஸ்களும், தனியார்பஸ்களும் கோவை, பொள்ளாச்சி,வால்பாறை, உடுமலை, பழனி, மதுரை உள்ளிட்ட பல ஊர்களுக்கு கிணத்துக்கடவு வழியாக செல்கிறது.

    தற்போது கோவை- ஈச்சனாரியில் இருந்து பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிபட்டி வரை உள்ள 26.85 கிலோமீடடர் தூரத்தில் உள்ள ரோடு 4 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் வரும் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் முடிவுபெற்று அதன்பின் இந்த வழியில் ரோட்டின் இருபுறங்களில் வழக்கம்போல் பஸ்கள் இயங்கும்.

    புதிய சாலை கான்கிரீட் கலவையால் நவீன முறையில் அமைககப்பட்டு வருவதால் இந்த சாலையில் வாகனங்களில் பயணிப்பதற்கு சொகுசாக அமையும் என நெடுஞ்சாலைத்துறையினர் கூறினார்கள். இதில் கிணத்துக்கடவு, ஒத்தக்கால்மண்டபம் ஆகிய பகுதிகளில் ஊருக்குள் பாலம் கட்ட தூண்கள் அமைக்கும் பணிகளும், முள்ளுப்பாடி ரெயில்வே கேட் மற்ற பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.

    தற்போது பொள்ளாச்சி ஆச்சிப்பட்டிமுதல் கிணத்துக்கடவு வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணி முடிவடைந்து விட்டதால். ரோட்டில் இருபுறங்களிலும் தாறுமாறாக வாகனங்கள் செல்ல தொடங்கியுள்ளது .4 வழிச்சாலையில் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலையில் போவதற்கும் மற்றொரு பாதை வருவதற்கும் அமைக்கப்பட்டுள்ளது.

    ஆனால் தற்போது இருபகுதியிலும் அமைக்கப்பட்டுள்ள ரோட்டிலும் எதிர்திசையிலும் வாகனங்கள் ஒரே ரோட்டில் தாறுமாறாக வருவதால் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டுவருகிறது.

    மேலும் பொள்ளாச்சி கிணத்துக்கடவு இடையே சாலை அமைக்கும் பணி நிறைவு பெற்றதால் இந்த வழியில் தற்போது மீண்டும் தனியார் பஸ்களின் வேகம் அதிகரித்துள்ளது.

    கோவையில் இருந்து மலுமிச்சம்பட்டி பகுதிக்கு வந்ததும் வேகம் எடுக்கும் பஸ்கள் மின்னல் வேகத்தில் கிணத்துக்கடவு, தாமரைக்குளம், கோவில் பாளையம், ஆச்சிப்பட்டி வழியாக பொள்ளாச்சியை சென்றடைகிறது. இதனால் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

    அதிவேகத்தில் வரும் தனியார் பஸ்களால் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு சந்தேகவுண்டன்பாளையம், தாமரைக்குளம் பகுதியில் விபத்து ஏற்பட்டு பலர் காயம்அடைந்தனர்.

    சிலவிபத்தில் உயிர் பலியும் ஏற்பட்டுள்ளது. அதேபோல் கோதவாடி பிரிவு, அரசம்பாளையம் பிரிவு பகுதியில் அதிவேகமாக வந்த தனியார் பஸ்கள் கட்டுப்படுத்த முடியாமல் ரோட்டின் நடுவில் உள்ள தடுப்புகள் மீது மோதியும் ரோட்டோரம் பள்ளத்தில் இறங்கியும் உள்ளது.

    இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கூறினர். #tamilnews
    காரைக்குடியில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்துக்கு இயக்கப்பட்ட டவுன் பஸ்கள் திடீர் நிறுத்தப்பட்டதால் பயணிகளிகள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள்.
    காரைக்குடி:

    காரைக்குடி நகர் மற்றும் புறநகர் போக்குவரத்து கிளைகளில் இருந்து அண்டை மாவட்டமான புதுக்கோட்டை மாவட்டத்தின் திருமயம் தாலுகாவில் உள்ள சில ஊர்களுக்கும், அதே போன்று புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் மற்றும் அதன் அருகில் உள்ள சில ஊர்களுக்கும் நாள்தோறும் இயக்கப்பட்டு வந்தன.

    இந்த நிலையில் ஏம்பலுக்கு இயக்கப்பட்டு வந்த 2ஏ மற்றும் 2பி ஆகிய நகரப் பேருந்துகளும், அதே போல் ஏம்பல் வழியாக மணமேல்குடிக்கு இயக்கப்பட்டு வந்த புறநகர் பேருந்தும் நிறுத்தப்பட்டு விட்டது.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்களும் மாணவர்களும் காரைக்குடி கிளை மேலாளர் மற்றும் அலுவலகத்தினரை தொடர்பு கொண்டு பல முறை கோரிக்கைகள் வைத்தும் மனுக்கொடுத்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், சிவகங்கை மாவட்டத்தின் கடைகோடி கிராமங்களில் வசிக்கும் எங்களுக்கு ஒரு அத்தியாவசிய தேவை அல்லது முதல் உதவி மருத்துவம் என்றால் கூட அருகில் உள்ள புதுக்கோட்டை மாவட்ட பகுதியான ஏம்பலுக்கு சென்றுதான் எங்களின் அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்ய முடியும்.

    மேலும் அங்கு உள்ளவர்கள் மருத்துவம் உள்பட அனைத்து வசதிகளுக்காகவும் காரைக்குடிக்குதான் வரவேண்டிய சூல்நிலை உள்ளது.

    ஏம்பல் பகுதியில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் காரைக்குடி வந்து செல்கின்றனர்.

    இவ்வாறு இரண்டு மாவட்ட மக்களும் பயன்பெறும் வகையில் இயக்கப்பட்டு வந்த பேருந்து நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    மேலும் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் அந்த வழியாக செல்லும் தனியார் பேருந்துகளில் கூட்ட நெரிசலால் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் நாள்தோறும் சிறு சிறு விபத்துக்களும் அதிகரித்து வருகிறது.

    எனவே அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி நிறுத்தப்பட்ட பேருந்து வழித்தடத்தை மீண்டும் தொடங்கவும், அதேபோல் காரைக்குடியில் இருந்து ஏம்பலுக்கு ஜெயங்கொண்டான் வழித்தடத்தில் புதிய நகரப்பேருந்து இயக்க வழியுறுத்தியும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. #tamilnews
    ஆற்காட்டில் இருந்து செய்யாறு வழித்தடத்தில் உயிரை பணயம் வைத்து பஸ்சின் படிக்கட்டிலும், பின்புறத்திலும் தொங்கிய படி பயணிகள் ஆபத்தான பயணம் செய்கின்றனர்.
    ஆற்காடு:

    வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் இருந்து கலவை வழியாக திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறுக்கு ஒரு சில அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. அதுவும், பள்ளி, கல்லூரி, அலுவலக நேரமான காலையில் இயக்கப்படுவதில்லை. கலவை கூட்ரோட்டில் உள்ள தனியார் கல்லூரிக்கு ஆற்காடு பகுதியில் இருந்து மாணவ, மாணவிகள் ஏராளமானோர் சென்று படிக்கின்றனர்.

    அதேபோல் ஆற்காட்டில் இருந்து செய்யாறு வழியில் உள்ள பகுதிகளுக்கு வேலைக்காக வருபவர்களும் அதிகமாக பயணிக்கின்றனர். போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதியடைகின்றனர். காலை நேரத்தில் ஒன்றிரண்டு தனியார் பஸ்கள் மட்டுமே செல்கிறது. இதனால், பயணிகள் கூட்டம் முண்டியடித்து கொண்டு அலை மோதுகிறது.

    பெரும்பாலும் பயணிகள் நின்றபடி பயணம் செய்ய வேண்டியுள்ளது. கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் படிக்கட்டில் பயணிக்கின்றனர். இதிலும் சிலர், பஸ் பின்புறத்தில் தொங்கியவாறே பயணிக்கின்றனர். உயிரை பணயம் வைத்து, பயணம் செய்கின்றனர். கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் போக்குவரத்து கழகம் செவி சாயக்க மறுத்து வருவதால், தொங்கியபடியே பயணித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    எனவே, அதிக மக்கள் தொகை கொண்ட ஆற்காடு- செய்யாறு வழித்தடத்தில் உள்ள கிராமங்களுக்கு கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்துதுறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். #tamilnews
    மேம்பாலம் வழியாக செல்லாமல் கருமத்தம்பட்டி நகரம் வழியாக பஸ்களை இயக்க வேண்டும் என பயணிகள் வற்புறுத்தியுள்ளனர். #Bus

    சூலூர்:

    சூலூர், கருமத்தம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஏராளமானோர் கோவை நகருக்கு வந்து செல்கிறார்கள்.

    சேலம், திருப்பூர், ஈரோடு, ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பஸ்களிலேயே கருமத்தம்பட்டி செல்லும் பயணிகள் சென்று வருகிறார்கள். ஆனால் சமீபகாலமாக இந்த பஸ்கள் கருமத்தம்பட்டி நகருக்குள் வராமல் தேசிய நெடுஞ்சாலை வழியே உள்ள பாலத்தில் சென்று விடுகின்றன.

    மேலும் கருமத்தம்பட்டி வழியாக சில பஸ்கள் மட்டும் இயக்கப்படுவதால் காலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் ஆண்கள்,பெண்கள் கூட்டம் அதிகமாக உள்ள காரணத்தால் படிகட்டுகளில் பயணித்த படி ஆபத்தான பயணம் செய்யும் நிலை உருவாகி உள்ளது. எனவே கூட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் கருமத்தம்பட்டியில இருந்து அதிகமான பஸ்களை இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    மேலும் கருத்தம்பட்டி நால்ரோடு சந்திப்பில் போலீசார் இல்லாததாலும் , சிக்னல் இல்லாததாலும் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்துகள் ஏற்படுகிறது.

    எனவே இங்கு சிக்னல் அமைத்து, போக்குவரத்தை சரிசெய்ய போலீசாரை நியமிக்க வேண்டும். மேலும் கருமத்தம்பட்டி வழியாக செல்லும் அனைத்து பஸ்களையும் மேம்பாலம் வழியாக இயக்காமல் நகருக்குள் இயக்கி பயணிகளை ஏற்றி செல்லவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×