search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 110640"

    பொது இடங்களில் புகைபிடிக்க தடை உள்ள நிலையில் அறந்தாங்கி பஸ் நிலையத்தில் தடையை மீறி புகை பிடித்த 9 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    அறந்தாங்கி:

    பொது இடங்களில் புகைபிடிக்க தடை உள்ள நிலையில் அறந்தாங்கி பஸ் நிலையத்தில் தடையை மீறி ஏராளமானவர்கள் புகை பிடித்து வந்தனர். இதனால் மற்ற பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். 

    இதுகுறித்து அறந்தாங்கி நகராட்சி நிர்வாகத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தன. புகாரின் அடிப்படையில் நகராட்சி ஆணையர் நவேந்திரன் உத்தரவின் பேரில், நகராட்சி சுகாதாரப்பிரிவினர், அறந்தாங்கி பஸ் நிலையத்தில் புகைபிடித்த 9 பேரிடம் தலா ரூ.100 வீதம் அபராதத் தொகை பெற்றனர். இதனால் பஸ் நிலைய பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    அரியலூர் அருகே இன்று காலை பயணிகள் நிழற்குடைக்குள் கார் புகுந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளி உள்பட 2 பேர் பலியாகினர். 4பேர் காயமடைந்தனர்.

    அரியலூர்:

    அரியலூர் கீழப்பளூர் அருகே வாரணவாசி திருச்சி சாலையில் பஸ் நிழற்குடை உள்ளது. இன்று காலை வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பஸ் ஏறுவதற்காக நிழற்குடையின் கீழ் நின்று கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த கார் நிலைதடுமாறி தாறுமாறாக ஓடி நிழற்குடைக்குள் புகுந்தது. இதில் அங்கு நின்றிருந்த அப்பகுதியை சேர்ந்த தொழிலாளி மருதமுத்து (வயது 70), இளங்கோவன் (55) ஆகியோர் மீது மோதியதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பயணிகள் திருநாவுக்கரசு, சாமிநாதன், கொளஞ்சி, பள்ளி மாணவன் விக்கிரமதி (15) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் அரியலூர் டி.எஸ்.பி. மோகன்தாஸ் மற்றும்கீழப்பளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியான 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரியலூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    விபத்தை ஏற்படுத்திய காரின் டிரைவர் , சம்பவம் நடந்ததும் காரை அங்கேயே விட்டு விட்டு தப்பியோடிவிட்டார். காரில் கட்சி கொடி கட்டப்பட்டுள்ளது. இதனால் விபத்தை ஏற்படுத்திய நபர் அரசியல் கட்சி பிரமுகராக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. அவர் யாரென்று விசாரணை நடத்தி போலீசார் தேடி வருகின்றனர்.

    விபத்தில் பலியான இளங்கோவனின் பேரன் விக்கிரமதி. இவன் கீழப்பளூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம்வகுப்பு படித்து வருகிறான். அவனை பஸ் ஏற்றி விடுவதற்காக இளங்கோவன் பஸ் நிலையத்திற்கு அழைத்து வந்திருந்தார். இந்தநிலையில் பேரன் கண் முன்பே இளங்கோவன் பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தநிலையில் விபத்தை ஏற்படுத்திய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், வாரணவாசி பயணிகள் நிழற்குடை அருகே வேகத்தடை அமைக்க கோரியும் அப்பகுதி பொதுமக்கள் திடீரென அங்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வேகத்தடை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    தூத்துக்குடி அருகே அரசு பேருந்துக்கு தீ வைக்கப்பட்டதில் 56 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தீ வைத்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடந்து வருகின்றன. நேற்று தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் முழுஅடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அவர்கள் பல்வேறு இடங்களில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் செய்துங்கநல்லூர் அருகே உள்ள கருங்குளத்தில் அரசு பஸ்சுக்கு தீவைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. உடன்குடியில் இருந்து நெல்லை நோக்கி நேற்று மாலை அரசு பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சை டிரைவர் ரமேஷ் என்பவர் ஓட்டி வந்தார். கண்டக்டராக லட்சுமணன் இருந்தார். பஸ்சில் மொத்தம் 56 பயணிகள் இருந்தனர்.

    அந்த பஸ் செய்துங்கநல்லூர் அருகே உள்ள கருங்குளம் புதுபாலம் அருகில் வந்த போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்மநபர்கள் 3 பேர் பெட்ரோல் கேனுடன் வந்து அந்த பஸ்சை வழிமறித்து நிறுத்தினர். இதையடுத்து பஸ்சை டிரைவர் நிறுத்தினார். அப்போது அவர்களில் 2 பேர் பஸ்சின் படிக்கட்டுகளில் மறைத்தபடி நின்றனர்.

    ஒருநபர் மட்டும் பஸ்சுக்குள் ஏறி பெட்ரோலை ஊற்றினார். அவரை அந்த பஸ்சில் பயணித்து வந்த செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரியும் ராம்பிரகாஷ் என்பவர் தடுத்தார் ஆனால் அதனையும் மீறி அந்த நபர் பெட்ரோலை ஊற்றி தீவைத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் போட்டிபோட்டுக்கொண்டு பஸ்சில் இருந்து கீழே இறங்கி ஓடினர்.

    அப்போது பஸ்சில் இருந்து கீழே இறங்க முயன்ற மெஞ்ஞானபுரம் நவலடிபுதூரை சேர்ந்த சுடலை கோனார் (வயது 78), அவருடைய மனைவி வள்ளியம்மாள் (63) தீயில் சிக்கினர். அவர்களை அதே பஸ்சில் வந்த காரைக்குடியை சேர்ந்த ஜெபகுமார் (23) மீட்க முயன்றார். இந்த சம்பவத்தில் அவர்கள் 3 பேரும் தீக்காயம் அடைந்தனர்.



    பஸ்சுக்கு தீவைத்த மர்மநபர்களும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். பெட்ரோல் ஊற்றி தீவைக்கப்பட்டதால் பஸ் கொழுந்து விட்டு எரிந்தது. அவர்கள் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    பஸ்சுக்கு தீவைக்கப்பட்டதும் அதிலிருந்த 56 பயணிகள், டிரைவர், கண்டக்டர் உடனடியாக இறங்கியதால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்து, பஸ்சில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இருப்பினும் பஸ் முழுவதும் எரிந்து எலும்புக்கூடானது.

    இதற்கிடையே தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசாரும், தாசில்தார் தாமஸ் பயஸ் அருள் மற்றும் அரசு போக்குவரத்து கழக பணிமனை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பஸ்சுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பஸ்சுக்கு தீவைத்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். அவர்களை கண்டுபிடிக்க ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு சகாயஜோஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    தனிப்படை போலீசார் தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களில் இருவர் வேஷ்டி அணிந்தும், மற்றொருவர் பேண்ட் அணிந்தும் இருந்துள்ளார். வேறு எந்த அடையாளங்களும் அந்த நபர்களை பற்றி தெரியவில்லை. மேலும் அவர்கள் தப்பிச்சென்ற மோட்டார் சைக்கிள் எண்ணை பயணிகள் குறித்து போலீசாரிடம் கொடுத்துள்ளனர். அதனை வைத்தும் மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    தீக்காயம் அடைந்தவர்களில் வள்ளியம்மாளுக்கு மட்டும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    ஒட்டன்சத்திரம் பகுதியில் பலத்த மழை பெய்த தால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கடந்த 3 ஆண்டுகளாக கடும் வறட்சி நீடித்தது. எனவே எப்போது மழை பெய்யும் என மக்கள் கவலையில் இருந்தனர். மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் பகுதியில் தமிழகத்திலேயே மிகப் பெரிய காய்கறி சந்தை உள்ளது.

    இந்த சந்தையை சுற்றி ஏராளமான விவசாயிகள் காய்கறி சாகுபடி செய்து வருகின்றனர். பருவ மழை பொய்த்துப் போனதால் விவசாயத்தில் எதுவும் கிடைக்காததால் வறுமையில் வாடினர். இந்த ஆண்டு ஓரளவு கிணற்றில் நீர் இருப்பு உள்ளது. அதுவும் போதுமானதாக இல்லை.

    மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தாலும் ஒட்டன்சத்திரம் நகர் பகுதியில் மழை தூறல் எட்டிப்பார்க்கவில்லை. நேற்று மாலை கரு மேகங்கள் சூழ்ந்தது. பின்னர் திடீரென ஒட்டன்சத்திரம் பகுதியில் பலத்த மழை கொட்டியது. சுமார் 2 மணி நேரம் இந்த மழை பெய்ததால் மழை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

    அதோடு ஓரளவு வெப்ப மும் குறைந்துள்ளது. இதே போல ஒட்டன் சத்திரம் பகுதியை சுற்றியுள்ள விருப்பாட்சி, அத்திக் கோம்பை, வடகாடு, சாலைப்புதூர், கேதையறும்பு, அம்பிளிக்கை, கரியாம்பட்டி, கள்ளிமந்தயம், காவேரியம்மாபட்டி பகுதியிலும் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    கொடைக்கானலிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குதூகலித்தனர்.

    அரசு பஸ்சில் நர்சை தரக்குறைவாக பேசிய கண்டக்டரால் பயணிகள் முகம் சுளித்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அடுத்துள்ள சின்னாளபட்டியை சேர்ந்தவர் பிச்சை. இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று குமுளியில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த அரசு பஸ்சில் பணியில் இருந்தார். பெரியகுளம் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்க்கும் பிரேமா தேனியில் ஏறினார்.

    பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கடைசி இருக்கையில் அமர்ந் திருந்தார். பெரியகுளம் வரும் வரைக்கும் கண்டக்டர் அங்கு வராததால் லட்சுமிபுரத்தில் பிரேமா கண்டக்டரிடம் டிக்கெட் கேட்டார்

    இதனால் கண்டக்டர் பிச்சை தரக்குறைவான வார்த்தைகளால் நர்சை திட்டினார். தேனியில் பஸ் ஏறி இவ்வளவு நேரம் எதற்காக டிக்கெட் எடுக்காமல் இருந்தாய் என கேவலமாக திட்டினார்.

    சக பயணிகள் கண்டக்டரிடம் எதற்காக அந்த பெண்ணை இப்படி திட்டுகிறீர்கள்? என கேட்டதற்கு அவர்களையும் கண்டக்டர் வசை பாடினார். இது குறித்து பயணிகள் கண்டக்டரின் பேச்சை செல்போனில் பதிவு செய்தனர். மேலும் பெரியகுளம் வந்ததும் பஸ்சை போலீஸ் நிலையத்தில் நிறுத்தினர். ஆனால் நர்ஸ் பிரேமா தனக்கு வேலைக்கு நேரமாகிவிட்டதால் தான் செல்வதாக கூறி சென்று விட்டார். ஆனால் மற்ற பயணிகள் சம்மந்தப்பட்ட கண்டக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் தெரிவித்தனர்.

    இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    கள்ளக்குறிச்சியில் பஸ்சில் பயணம் செய்த விவசாயிடம் ஜேப்படி செய்த வாலிபரை பயணிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே உள்ள நீலமங்கலத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 48), விவசாயி. நேற்று இவர் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இருந்து நீலமங்கலம் செல்லும் பஸ்சில் ஏற முயன்றார்.

    அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் முருகேசனின் சட்டை பையில் இருந்த 300 ரூபாயை ஜேப்படி செய்து விட்டு தப்பி ஓட முயன்றார்.

    இதில் சுதாரித்துக் கொண்ட முருகேசன் பஸ் நிலையத்தில் இருந்த பயணிகள் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி பிடித்து கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர், புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த வாழவந்தான் மகன் ராமமூர்த்தி (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமமூர்த்தியை கைது செய்தனர். 

    சென்னை விமானநிலையத்தில் குவைத்திற்கு செல்ல இருந்த விமானத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டது. விமானம் புறப்படுவதற்கு முன்பாக கோளாறு தெரியவந்ததால், 164 பயணிகள் உயிர்தப்பினர்.#ChennaiAirport
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் இருந்து நேற்று அதிகாலை 3.30 மணிக்கு குவைத்திற்கு விமானம் செல்ல இருந்தது. இதில் பயணம் செய்ய 164 பயணிகள் சோதனைகளை முடித்துக்கொண்டு விமானத்தில் ஏறினார்கள். விமானம் நடைமேடையில் இருந்து ஓடுபாதைக்கு செல்ல முயன்றபோது விமானத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார்.

    இதனையடுத்து விமானம் ஓடுபாதைக்கு செல்லாமல் நடைமேடையில் நிறுத்தப்பட்டு விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது. விமான நிறுவன தொழில்நுட்ப பொறியாளர்கள் குழுவினர் வந்து எந்திர கோளாறை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    ஆனால் உடனடியாக எந்திர கோளாறை சரி செய்ய முடியாததால் விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.

    அனைவரும் சென்னையில் உள்ள ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்தபின்னர் விமானம் குவைத்திற்கு புறப்பட்டு செல்லும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.



    உரிய நேரத்தில் விமானத்தில் ஏற்பட்ட எந்திர கோளாறை விமானி கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பயணிகள் அனை வரும் உயிர்தப்பினர். #ChennaiAirport
    ×