search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீவிபத்து"

    • தீ விபத்து ஏற்பட்ட வணிக வளாகம் புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் அருகில் உள்ளது.
    • வணிக வளாகம் அருகில் ஏராளமான ஓட்டல்களும், தங்கும் விடுதிகளும் உள்ளன. அங்கும் தீ பரவியது.

    பூரி:

    ஒடிசா மாநிலம் பூரியில் வணிக வளாகம் உள்ளது. இங்கு 40 கடைகள் உள்ளன. இங்கு முதல் தளத்தில் உள்ள ஒரு துணிக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    கடை முழுவதும் பற்றி எறிந்த தீ அருகில் உள்ள கடைகளுக்கும் பரவியது. வணிக வளாகத்தில் ஷாப்பிங் செய்து கொண்டு இருந்த ஏராளமான பொதுமக்கள் இதில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் அங்கும், இங்கும் அலறி அடித்து கொண்டு ஓடினர்.

    தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    தீ விபத்து ஏற்பட்ட வணிக வளாகம் புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் அருகில் உள்ளது. வணிக வளாகம் அருகில் ஏராளமான ஓட்டல்களும், தங்கும் விடுதிகளும் உள்ளன. அங்கும் தீ பரவியது.

    மகாராஷ்டிரா, நாசிக்கில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தீ விபத்து ஏற்பட்ட வணிக வளாகம் அருகில் தங்கி இருந்தனர். சுமார் 106 சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    நீண்ட போராட்டத்துக்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் பூரி பா.ஜனதா எம்.எல்.ஏ. ஜெயந்த் சாரங்கி, தீ விபத்து தடுப்புக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக செய்யவில்லை என்று மாவட்ட நிர்வாகம் மீது குற்றம் சாட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தீ விபத்து, பொது சொத்துகளையும் பாதுகாப்பது மிகுந்த சவாலாக உள்ளது.
    • பேரிடர் விழிப்புணர்வு பணியினை பாலம் சேவை நிறுவனம் செய்து வருவது குறிப்பிடதக்கது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட கலெக்டரின் ஆலோசனைபடியும் மாவட்ட பேரிடர் வட்டாட்சியரின் வழிகாட்டுதல்படியும், தமிழ்நாடு அரசின் பேரிடர் ஆணையத்தின் சார்பில் வெளியிடப்பட்ட பேரிடர் விழிப்புணர்வு சுவரொட்டியினை திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் வெளியிட்டார்.

    அப்போது அவர் கூறும்போது, தீ விபத்து, இடி மின்னல், வெள்ளம், புயல், காலங்களில் மக்களையும், பொது சொத்துகளையும் பாதுகாப்பது மிகுந்த சவாலாக உள்ளது. இதுபோன்ற விழிப்புணர்வு வாசகங்களை மக்களிடம் கொண்டு செல்வது மிகுந்த பயனளிக்கும். மக்களுக்கும், அலுவலர்களுக்கும் பேரிடர் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும்.

    பேரிடர் விழிப்புணர்வு பணியினை பாலம் சேவை நிறுவனம் செய்து வருவது குறிப்பிடதக்கது. நகராட்சி நிர்வாகமும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் என்றார். நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் பிரதான் பாபு தலைமை வகித்தார். பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார், மேலாளர் சிற்றரசு முன்னிலை வகித்தனர். நகராட்சியில் மக்கள் அறியும் வண்ணம் சுவர்களில் விழிப்புணர்வு போஸ்டர் ஒட்டப்பட்டது.

    • தனியாருக்கு சொந்தமான மசாலா குடோன் செயல்பட்டு வருகிறது.
    • இந்த குடோனில் நேற்று இரவு 12 மணி அளவில் திடீரென தீப்பிடித்து புகை வந்தது.

    சேலம்:

    சேலம் அரிசிபாளையம் துரைசாமிபுரத்தில் தனியாருக்கு சொந்தமான மசாலா குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் நேற்று இரவு 12 மணி அளவில் திடீரென தீப்பிடித்து புகை வந்தது. இதை அக்கம் பக்கத்தினர் பார்த்து பள்ளப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார், செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

    இது குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • விருகம்பாக்கம், அசோக் நகர், கிண்டி, கீழ்ப்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து 4 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் ஏறத்தாழ 3 மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர்.
    • தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் அதிகளவில் வரவழைக்கப்பட்டு குடியிருப்புவாசிகள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டனர்.

    போரூர்:

    சென்னை விருகம்பாக்கம், ஆற்காடு சாலையில் தனியார் பள்ளி அருகே அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த வளாகத்தில் 2 பிளாக், 12 தளங்களுடன் மொத்தம் 134 வீடுகள் உள்ளது.

    நேற்று இரவு 11 மணி அளவில் தரை தளத்தில் உள்ள மின்சார பெட்டியில் இருந்து திடீரென கரும்புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது.

    மின்சார ஒயர்கள் முழுவதும் தீப்பற்றி எரிய தொடங்கியதால் தீ 12-வது தளம் வரை வேகமாக பரவியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடியிருப்பு வாசிகள் தங்களது வீட்டை விட்டு வெளியேறி அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் புகை மூட்டமாக மாறியது. இதில் குடியிருப்பில் வசித்து வரும் வயதானவர்கள் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் அவர்கள் கடும் அவதிப்பட்டனர்.

    தகவல் அறிந்ததும் விருகம்பாக்கம் உதவி கமிஷனர் சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் ஜார்ஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் அங்கு 7 ஆம்புலன்ஸ் வாகனங்களும் உடனடியாக வரவழைக்கப்பட்டது. மூச்சு திணறலால் அவதிப்பட்டவர்களுக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    விருகம்பாக்கம், அசோக் நகர், கிண்டி, கீழ்ப்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து 4 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் ஏறத்தாழ 3 மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் அதிகளவில் வரவழைக்கப்பட்டு குடியிருப்புவாசிகள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டனர்.

    இந்த தீ விபத்தில் மூச்சு திணறலால் கடுமையாக பாதிக்கப்பட்ட முதியவர் ராஜ்மோகன் (வயது 79), அவரது மனைவி நீலா ஆகிய இருவரும் சாலிகிராமத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    முதல் கட்ட விசாரணையில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மின்சார பெட்டியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. துரிதமாக செயல்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. 

    • கடைகள் நெரிசலாக இருந்ததால் ஒரு கடையில் பிடித்த தீ மற்ற கடைகளுக்கும் பரவியது.
    • மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

    அசாம் மாநிலம் ஜோர்ஹாட் நகரின் மையப் பகுதியில் உள்ள சவுக் பஜார் மார்க்கெட்டில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடைகள் நெரிசலாக இருந்ததால் ஒரு கடையில் பிடித்த தீ மற்ற கடைகளுக்கும் பரவியது. இதில் 150 கடைகள் எரிந்து நாசமானது. தகவல் அறிந்ததும் 25 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    சாலைகள் குறுகலாக இருந்ததால் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. ஆனால் வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இரவில் கடை உரிமையாளர்கள் கடைகளை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டதால் உயிர் சேதம் ஏற்படவில்லை.

    இந்த தீ விபத்தில் துணி, மளிகை பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. சேத மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

    • தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்
    • ரூ.25 ஆயிரம் நஷ்டம்

    ஆலங்குடி,

    ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடியை சேர்ந்த கோவிந்தன் மகன் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான வைக்கோல் போர் ஒன்று உள்ளது. இந்த போரில் திடீரென்று தீ பற்றி எரிந்துள்ளது. தகவல் அறிந்து வந்த ஆலங்குடி தீயணைப்பு தீயை அணைத்தனர். இருந்தபோதிலும் வைக்கோல் போர் முற்றிலும் சேதம் அடைந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.25 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    • 100 சதவீதம் கருகி உள்ள நிலையில் விபத்தில் சிக்கிய பெண் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது
    • தென் தாமரைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    வடக்கு தாமரை குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவரது மனைவி ஷீலா (வயது 64). இவர்களது மகன் ஹரிகரன் (30). ஷீலாவும் அவரது மகன் ஹரிகரனும் குடிசை வீட்டில் வசித்து வந்தனர்.

    நேற்று இரவு வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு தூங்கினார்கள்.அப்போது வீட்டில் விளக்கை பற்ற வைத்திருந்தனர். நள்ளிரவு திடீரென விளக்கு சரிந்து எதிர்பாராத விதமாக குடிசை வீட்டில் தீப்பிடித்தது.

    தீவிபத்தில் குடிசை வீடு முழுவதும் எரிந்தது.அப்போது வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த ஹரிகரன் கண் விழித்தார். தீ எரிந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டை விட்டு வெளியே ஓடினார். அதற்குள் வீடு முழுவதும் எரிந்து நாசமானது.

    இந்த விபத்தில் அவரது தாயார் ஷீலா சிக்கி உடல் கருகினார். அவரை மீட்டு சிகிச்சைக்காக கன்னியாகுமரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட ஷீலாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஷீலாவின் உடல் 100 சதவீதம் கருகி உள்ள நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் டாக்டர்கள் அவரை கண்காணித்து வருகிறார்கள் . இதுகுறித்து தென் தாமரைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தீ விபத்தில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமானது.
    • சமையல் செய்த போது எண்ணெய் கடாயில் இருந்து பற்றிய தீ அருகில் இருந்த பொருட்கள் மீது பரவியதே விபத்துக்கு காரணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    தாம்பரம்:

    தாம்பரம் முடிச்சூர் சாலையில் முகமது நசீர் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு சமையல் செய்து கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்தது. சற்று நேரத்தில் தீ மளமளவென ஓட்டல் முழுவதும் பரவத்தொடங்கியது,

    ஊழியர்கள் மற்றும் சாப்பிட வந்தவர்கள் அலறி அடித்து கொண்டு வெளியேறினர். தாம்பரம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்,

    ஆனால் அதற்குள் சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமானது. சமையல் செய்த போது எண்ணெய் கடாயில் இருந்து பற்றிய தீ அருகில் இருந்த பொருட்கள் மீது பரவியதே விபத்துக்கு காரணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • சிலிண்டரை சரியாக மூடாமல் வைத்திருந்ததால் கியாஸ் வெளியேறி தீ விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
    • தீவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கொல்கத்தாவை சேர்ந்தவர் பிஜாய் (வயது 35). இவர் கோவை தியாகி குமரன் வீதி பகுதியில் தங்கி தங்க நகை பட்டறையில் வேலை செய்து வருகிறார்.

    அவர் இன்று காலை வழக்கம்போல வீட்டில் சமைப்பதற்காக கியாஸ் சிலிண்டரை பற்ற வைத்துள்ளார். அப்போது கியாஸ் கசிவு ஏற்பட்டு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டிலிருந்த பொருட்கள் தீயில் கருகி சேதமானது. அதிர்ஷ்டவசமாக பிஜாய் உயிர் தப்பினர்.

    சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் அங்கு காயம் அடைந்து கிடந்த பிஜாயை மீட்டனர். அவரை உடனடியாக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் சிலிண்டரை சரியாக மூடாமல் வைத்திருந்ததால் கியாஸ் வெளியேறி தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் பொருட்கள் எரிந்து நாசமடைந்தன
    • எம்.எல்.ஏ. நேரில் ஆறுதல்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் நகரம் எளம்பலூர் சாலையில் உள்ள தென்றல் நகர் பகுதியில் குடியிருந்து வருபவர் கஸ்தூரி (வயது 46), இவரது கணவர் கொளஞ்சிநாதன் இறந்து விட்டார் இந்நிலையில், மகன் கமலேஸ் உடன் தனக்கு சொந்த மான ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். நேற்று மாலை கஸ்தூரி மற்றும் அவரது மகன் கமலேஸ் இருவரும் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். அப்போது சற்று நேரத்தில் கஸ்தூரியின் வீட்டில் இருந்து அதிகமான புகை வெளியே வந்துள்ளது.

    இதனை அருகில் இருந்தவர்கள் பார்த்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் ஓட்டு வீட்டில் கொழுந்துவிட்டு எறிந்து கொண்டிருந்த, தீயை அனைத்தனர். இச்சம்பவத்தில் வீட்டில் உள்ள பீரோ, கட்டில், டேபிள் சேர், பாத்திரங்கள் மற்றும் உடமைகள் அனைத்தும் எரிந்து சாம்பாலாது.

    தகவல் அறிந்த பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் இரவு நேரம் என்றும் பாராமல் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தீயில் சேதமான வீட்டினை பார்வையிட்டு அதன் உரிமையாளர் கஸ்தூரி மற்றும் அவரது மகன் கமலேஷ் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தார். மேலும் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் புதிய வீடு கட்டி தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்படும் எனவும் தெரிவித்து ஆறுதல் கூறினார்.

    • காரைக்குடியில் செருப்பு குடோனில் தீ விபத்தில் ரூ. ரூ.பல லட்சம் செருப்புகள் எரிந்து நாசகியது.
    • 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செகண்ட் பீட் அருகே உள்ள டாக்சி ஸ்டாண்ட் பகுதியில் தனியார் செருப்பு குடோன் உள்ளது.

    பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வரும் இந்த குடோனில் மின் கசிவு காரணமாக இன்று காலை தீப்பற்றி எரிந்தது. குடோனில் இருந்த ரூ. பல லட்சம் மதிப்பிலான செருப்புகள் எரிந்து சேதமானது.

    காரைக்குடி தீயணைப்பு நிலையம் ஊருக்கு வெளியே 3 கிலோமீட்டர் தூரம் தள்ளி இருந்ததால் தீயை அணைக்க வருவதற்கு தாமதம் ஆனது.அதன் பின்பு காரைக்குடி, தேவகோட்டை தீயணைப்பு நிலையங்களில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    • தீவிபத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 30 புதிய மோட்டார் சைக்கிள்கள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தன.
    • கம்ப்பூட்டர் உள்ளிட்ட பொருட்களும் நாசமானது. கீழ்தளத்துக்கு தீ பரவாததால் அங்கிருந்த மோட்டார்சைக்கிள்கள் தப்பியது.

    தாம்பரம்:

    தாம்பரம் மேம்பால அருகே பிரபல நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் விற்பனை மையம் இயங்கி வருகிறது. இன்று காலை ஊழியர்கள் விற்பனை மையத்தை திறந்து சுத்தப்படுத்திய போது முதல் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    சிறுது நேரத்தில் தீ மளமளவென அந்த தளம் முழுவதும் பரவியது. இதில் அங்கு விற்பனைக்காக நிறுத்திவைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளிலும் தீ பரவி பற்றி எரிந்தது.

    இதனால் விற்பனை மையம் முழுவதும் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.

    தகவல் அறிந்ததும் தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் 4 வண்டிகளில் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இந்த தீவிபத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 30 புதிய மோட்டார் சைக்கிள்கள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தன. அங்கிருந்த கம்ப்பூட்டர் உள்ளிட்ட பொருட்களும் நாசமானது. கீழ்தளத்துக்கு தீ பரவாததால் அங்கிருந்த மோட்டார்சைக்கிள்கள் தப்பியது.

    மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×