search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 111149"

    கோவை, திருப்பூர், நீலகிரியில் தனியார் ஆஸ்பத்திரிகள் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேரம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். #IndianMedicalAssociation
    கோவை:

    மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேரம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவையில் வேலை நிறுத்த போராட்டத்தில் 450-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய மருத்துவமனைகள் பங்கேற்றுள்ளன. 3,500-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் வேலைக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து இந்திய மருத்து கவுன்சில் உறுப்பினர் டாக்டர் தங்கவேலு கூறியதாவது:-

    இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்து விட்டு தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. பல கட்டங்களாக பேச்சு வார்த்தை நடத்தியும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை டாக்டர்கள் வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவையில் 450-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. 3500-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் வேலைக்கு செல்லவில்லை. இதனால் மருத்துவமனைகளில் வெளிநோயாளிகளுக்கு எந்த சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. அவசர சிகிச்சைகள் மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேட்டுப்பாளையத்தில் 10 தனியார் மருத்துவமனைகளும் 20 கிளீனிக்குகளும். சிறுமுகையில் 5 மருத்துவமனைகளும் 10 கிளீனிக்குகளும். காரமடையில் 4 மருத்துவமனைகளும் 5 கிளீனிக்குகளும் உள்ளன.

    இங்கு பணியாற்றும் டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். ஆனால் போராட்டத்தில் பிரசவம் உள்நோயாளிகள் மற்றும் அவசர சிகிச்சைகள் வழக்கம் போல் மேற்கொள்ளப்பட்டது.

    புறநோயாளிகள் சிகிச்சை மற்றும் அவசரமில்லா அறுவை சிகிச்சைகள் செய்யப்படவில்லை என்று சங்கதலைவர் திப்பையன், செயலாளர் இளங்கோவன், பொருளாளர் கண்ணன் ஆகியோர் தெரிவித்தனர்.

    இதேபோன்று திருப்பூர், அவினாசி, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 450 தனியார் டாக்டர்கள் உள்ளனர். இவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து இந்திய மருத்துவ சங்கத்தலைவர் டாக்டர் பாரதி, செயலாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் கூறும்போது, தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்களின் கோரிக்கை நிறைவேற்றகோரி இதற்கு முன்பு ஒருநாள் போராட்டம் நடத்தினோம். அப்போது அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்து கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தது. ஆனால் இன்னும் கோரிக்கைகளின் மீது எந்த நடவக்கை எடுக்கவில்லை. அதனை கண்டிக்கும் வகையில் இன்று ஒரு நாள் வெளிநோயாளிகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்கமாட்டார்கள். அதே சமயம் உள்நோயாளிகள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு வழக்கம்போல் செயல்படும். ஆனால் டாக்டர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து சிகிச்சை அளிப்பார்கள் என்று கூறினர்.

    நீலகிரி மாவட்டத்தில் தனியார் ஆஸ்பத்திரி, கிளீனிக்குகளில் பணியாற்றும் டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவசர சிகிச்சைகள் மட்டும் அளிக்கப்பட்டது.  #IndianMedicalAssociation

    நீலகிரி மாவட்டத்தில் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கவும் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும் அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் நான்கு நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், மற்றும் 35 ஊராட்சிகள் அடங்கிய அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவைகளுக்கு தடை விதித்து தீர்மானங்கள் இயற்றப்பட்டு நீலகிரி மாவடட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி அனைத்து தடிமனாலான பிளாஸ்டிக் பைகள், ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் கப்புகள், ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் கரண்டிகள், கத்திகள், முள் கரண்டிகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல், காகித கப்புகள், காகித டம்ளர்கள், பிளாஸ்டிக் தட்டுகள் மற்றும் மூலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், ஸ்டைலோஃபோம் தெர்மகோல் தட்டுகள் மற்றும் பிறவகை தெர்மோகோல், நெய்யப்படாத வகையிலான பைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் சமையலர் தொப்பிகள், பிளாஸ்டிக் கையுறைகள், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், சில்வர் பூச்சு கொண்ட பைகள், பிளாஸ்டிக் பேக்கிங் செய்யப்படும் பொருட்கள், புச்செண்டுகள் மற்றும் பரிசு பொருட்கள் சுற்றப் பயன்படும் பிளாஸ்டிக்குகள், லாமினே‌ஷன் செய்யப்பட்ட காக்கி தாள்கள், லாமினே‌ஷன் செய்யப்பட்ட பேக்கரி அட்டைகள், பிளாஸ்டிக் வாழை இலை வடிவ தாள்கள், பிளாஸ்டிக் தோரணங்கள் ஆகிய 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் சில்லரை விற்பனையாளர் ½கிலோ ரூ. ஆயிரமும், மொத்த விற்பனையாளர்கள் ½ கிலோ ரூ.5 ஆயிரமும், திருமண மண்டபங்கள் ½ கிலோ ரூ. 20 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.

    எனவே நீலகிரி மாவட்ட பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் அனைத்து தரப்பினரும் மேற்கண்ட அறிவிக்கையினை பின்பற்றி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் நீலகிரி மாவட்ட சுற்றுச்சூழலை பாதுகாத்திட மாவட்ட நிர்வாகத்திற்கு தகுந்த ஒத்துழைப்பு நல்குமாறு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். #Tamilnews
    நீலகிரி மாவட்டத்தில் 80 ஏக்கர் பரப்பளவில் புதிதாக ‘இருநூற்றாண்டு பசுமைப் புல்வெளி’ எனும் புதிய பூங்கா ஒன்று ரூ.10 கோடி செலவில் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். #EdappadiPalaniswamy
    சென்னை:

    தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது:-

    ‘மலைகளின் ராணி’ என அழைக்கப்படும் உதகமண்டலம், 200 ஆண்டு காலம் பழமை வாய்ந்ததுடன், பிரதான சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. தற்போது செயல்பட்டு வரும் தாவரவியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, நடப்பாண்டில், நீலகிரி மாவட்டத்தில் 80 ஏக்கர் பரப்பளவில் புதிதாக ‘இருநூற்றாண்டு பசுமைப் புல்வெளி’ எனும் புதிய பூங்கா ஒன்று ரூ.10 கோடி செலவில் அமைக்கப்படும். மேலும், வருடந்தோறும், சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் அரசு ரோஜா பூங்காவிற்கு வருகை புரிவதால், போக்குவரத்து நெரிசல் அதிகமாகி, வாகனம் நிறுத்துவதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுவதை கருத்தில் கொண்டு, நீலகிரி நகரத்தில் 500 வாகனங்களை நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடம் ரூ.3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

    ஆக மொத்தம் ரூ.127 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் இன்று நான் அறிவித்துள்ள இத்திட்டங்கள் மூலம் தமிழ்நாடு வேளாண்மையும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் மேலும் செழிக்க வழிவகை ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.   #EdappadiPalaniswamy #tamilnews

    கோவை மாவட்டம் வால்பாறையில் 8-வது நாளாக இன்றும் மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை நிரம்பியது.
    காந்தல்:

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது.

    இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று பகல் மட்டும் லேசான மழை பெய்தது.

    இரவு கடும் மழை நீடித்தது. விடிய, விடிய மழை பெய்தது. இன்று காலையும் மழை தொடர்ந்து வருகிறது. இதனால் கடும் குளிர் நிலவி வருகிறது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். அடிக்கடி மின்சாரம் தடை படுவதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

    பலத்த மழை மற்றும் கடும் குளிர் காரணமாக ஊட்டிக்கு சுற்றுலா வரும் பயணிகள் எண்ணிக்கை பெரிதும் குறைந்தது.

    இதனால் சுற்றுலா தலங்களான ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா காட்சி முனையம், ரோஜா பூங்கா உள்ளிட்டவைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. ரோடுகளிலும் மக்கள் நடமாட்டம் இல்லை.

    தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் பெரிதும் சிரமப்பட்டனர். அவர்கள் குடை பிடித்தபடியும், ரெயின் கோட் அணிந்தபடியும் சென்றனர்.

    ஊட்டி- கோத்தகிரி சாலையில் ஒரு சில இடங்களில் லேசான மண் சரிவு ஏற்பட்டது. இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றினார்கள்.

    ஆங்காங்கே சிறிய மரங்கள் விழுந்தது. இதனை தீயணைப்பு துறையினர் அப்புறப்படுத்தினார்கள்.

    நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை நிரம்பியது. இந்த அணையின் மொத்த நீர் மட்டம் 100 அடியாகும். அணைக்கு இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையின் பாதுகாப்பு கருதி அதே அளவு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையில் தற்போது 96.25 அடி தண்ணீர் உள்ளது. நேற்று மாலை 3 மணி நிலவரப்படி அணைக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இன்று 6 ஆயிரம் கன அடியாக குறைந்து விட்டது.

    பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் பவானி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடித்து வருகிறது. இன்று 6-வது நாளாக ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

    தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து பெய்து வரும் மழை காரணமாக கோவை, திருப்பூர், நீலகிரியில் அணைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    கோவை:

    கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது.

    இதனால் பவானி, நொய்யல், சின்னாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகள், குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்து வேகமாக நிரம்பி வருகின்றன.

    தொடர்மழை காரணமாக கோவை நகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அணையின் மொத்த நீர்மட்டம் 50 அடி ஆகும். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை 15 அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது 24 அடியாக உயர்ந்துள்ளது.

    2 நாட்களில் மட்டும் 9 அடி அதிகரித்துள்ள நிலையில் இன்றும் சிறுவாணி அணைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    பில்லூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. மொத்தம் 100 அடி கொண்ட அணையின் நீர் மட்டம் நேற்று 97.25 அடியை எட்டியது. இரவில் அணைக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. இதையடுத்து பாதுகாப்பு கருதி அணையின் 4 மதகுகளில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இன்று காலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இந்த நீர் அப்படியே திறந்து விடப்பட்டது.

    160 அடி கொள்ளளவு கொண்ட சோலையார் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 103.84 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6273.50 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையோர பகுதியில் 115 மில்லி மீட்டர் மழை பதிவாக உள்ளது.

    120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணை நீர்மட்டம் இன்று காலை 58.40 அடியாக இருந்தது. வினாடிக்கு 240 கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது. 34 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 72 அடி கொள்ளளவு கொண்ட பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 11.90 ஆக உள்ளது. வினாடிக்கு 1988 கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது. 7 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமூர்த்தி அணையின் மொத்த நீர்மட்டம் 60 அடி ஆகும். இன்று காலை அணை நீர்மட்டம் 12.74 அடியாக இருந்தது. வினாடிக்கு 15 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 90 அடி கொள்ளளவு கொண்ட அமராவதி அணை நீர்மட்டம் 63.32 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2482 அடி கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது. 14 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள கெத்தை அணை முழு கொள்ளளவான 89 அடி உயரத்தை எட்டியது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு பரளி மின் வாரியத்தை அடைகிறது.

    தொடர் மழை காரணமாக அணைகள் நிரம்பி வருவதாலும், நீர்வரத்து அதிகரித்துள்ளதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு கோவை, நீலகிரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு கோவை, நீலகிரியில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தின் மற்ற இடங்களிலும், புதுவையிலும் சில நேரங்களில் மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.


    கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கோவை சின்னக்கல்லார், வால்பாறையில் 7 செ.மீ. மழையும், பொள்ளாச்சி, நீலகிரி ஜி.பஜாரில் 5 செ.மீ மழையும், செங்கோட்டை, தென்காசி, பாபநாசம், பெரியாறு ஆகிய இடங்களில், 3 செ.மீ மழையும் பெய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
    கோவை, திருப்பூர், நீலகிரியில் தொடங்க இருந்த நடிகர் கமல்ஹாசனின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #MakkalNeedhiMaiam #KamalHaasan
    கோவை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கிய நடிகர் கமல்ஹாசன் பல்வேறு மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து பொது மக்களை நேரில் சந்தித்து வருகிறார்.

    கடந்த மாதம் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்த அவர் இளைஞர்கள், மாணவர்களுடன் உரையாடினார்.

    இந்த சுற்றுப்பயணத்துக்கு பெரும் வரவேற்பு இருந்தது. அடுத்ததாக ஜூன் 8, 9, 10-ந் தேதிகளில் திருப்பூர், நீலகிரி, கோவை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பொது மக்களை சந்திக்கப் போவதாக அறிவித்திருந்தார். இதனால் கோவை மண்டலத்தில் உள்ள கமல் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

    இந்த பயணத்தின் போது கோவையில் பொதுக்கூட்டத்தை நடத்தவும் திட்டமிட்டிருந்தனர். ஏற்கனவே கமல்ஹாசன் மதுரை, திருச்சியில் பொதுக்கூட்டங்களை நடத்தி இருந்தார்.

    அந்த பொதுக்கூட்டங்களை விட கோவை பொதுக்கூட்டம் பிரமாண்டமாக இருக்கும் வகையில் கொடிசியாவில் பொதுக் கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

    ஆனால் அவரது சுற்றுப் பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் கோவை, திருப்பூர், நீலகிரியில் கமல்ஹாசனின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் கூறியதாவது:-

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் வளர்ச்சி பணிகளில் தலைவர் தீவிரம் காட்டி வருகிறார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கட்சிக்கு நிர்வாகிகள் நியமிப்பதற்காக நேர்காணல் சென்னையில் நடந்தது.

    ஏற்கனவே கோவை மாவட்டத்தில் பெண் உறுப்பினர்கள் அதிக அளவில் சேர்ந்துள்ளனர். நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டு விட்டால் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையை மேலும் தீவிரப்படுத்த முடியும்.

    விரைவில் உள்ளாட்சி தேர்தல் அதனை சந்திக்க தயாராகும் வகையில் கட்சிக்கு தேவையான அடிப்படை வேலைகளை செய்து வருகிறார். இதுபோன்ற பல்வேறு காரணங்களால் தான் அவரது கோவை மண்டல சுற்றுப்பயணம் தள்ளிப் போய் உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #MakkalNeedhiMaiam #KamalHaasan
    கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்கி இதுவரை 16 பேர் பலியாகி உள்ளதால் கோவை, நீலகிரியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    கோவை:

    கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்கி இதுவரை 16 பேர் பலியானார்கள். மேலும் பலர் நோய் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கோழிக்கோடு, மலப்புரம் நீலம்பூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்கள் தமிழக மாவட்டமான நீலகிரி, கோவை மாவட்டத்தை யொட்டியுள்ளது. இதனால் நிபா காய்ச்சல் பீதி இங்கு அதிகம் உள்ளது.

    நீலகிரி மாவட்டம் சேரம்பாடி, தாளூர், நாடுகாணி, பந்தலூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் கூலித்தொழிலாளர்கள் வேலை சம்பந்தமாக கேரளா சென்று வருகிறார்கள். இதேபோன்று கேரளாவில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருகிறார்கள்.

    இந்நிலையில் இந்த காய்ச்சல் தமிழக பகுதியில் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறையினர் முன்எச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளனர். நீலகிரி மாவட்டத்திற்கு கேரளாவில் இருந்து கக்கநல்லா, பந்தலூர், சேரம்பாடி, தொரப்பள்ளி, கூடலூர் ஆகிய 5 வழிப்பாதை உள்ளது. இங்கு சுகாதாரத்துறையினர் முகாமிட்டு கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கின்றனர்.

    மேலும் சுற்றுலா தலங்கள், ஆதிவாசி கிராமங்களில் வாகனம் மூலம் விழிப்புர்ணவு ஏற்படுத்தப்படுகிறது. மாவட்டம் முழுவதிலுள்ள சுகாதார நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை நீலகிரி மாவட்டத்தில் இந்த நோய்குறித்து எந்த அறிகுறிகளும் இல்லை என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறினார்.

    மாவட்ட நியமன அலுவலர் கருணாநிதி பழ வியாபாரிகளிடம் பறவை கடித்த பழங்கள், அழுகிய பழங்களை விற்பனை செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

    தமிழக-கேரள எல்லையான வாளையார் சோதனை சாவடி மற்றும் பொள்ளாச்சியிலும் சுகாதார துறையினர் முகாமிட்டு வாகன பரிசோதனை நடத்தி வருகிறார்கள். கோவையில் இதுவரை இந்த காய்ச்சலால் யாரும் பாதிக்கப்படவில்லை என்று கலெக்டர் ஹரிஹரன் தெரிவித்தார்.

    கோவை மற்றும் நீலகிரியில் நேற்று கனமழை பெய்தது. சுற்றுலா பயணிகள் குடைப்பிடித்தப்படி கண்டு ரசித்தனர்.

    கோவை:

    கோவையில் கடந்த சில நாட்களாக மாலை, இரவு நேரங்களில் கோடை மழை பெய்து வருகிறது. நேற்று மாலையும் திடீரென மழை கொட்டியது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சுமார் 1 மணிநேரம் கொட்டி தீர்த்த இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து இரவு நேரத்தில் கடுங்குளிர் நிலவியது.

    இதேபோல் ஊட்டியிலும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அவர்கள் ஊட்டியில் உள்ள பல்வேறு சுற்றுலா தளங்களையும் பார்வையிட்டு வருகிறார்கள்.

    ஊட்டியில் நேற்று பகல் நேரத்தில் திடீரென பலத்த மழை கொட்டியது. இதனால் படகுசவாரி போட்டி ரத்து செய்யப்பட்டது. மேலும் பல்வேறு சாலைகளில் மழைவெள்ளம் தேங்கியது. ஊட்டி தாவரவியல் பூங்காவில் பெய்த மழையின் காரணமாக சுற்றுலா பயணிகள் குடைப்பிடித்தப் படி கண்டு ரசித்தனர். மேலும் மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. சமவெளி பகுதிகளில் வெப்பம் வாட்டி வரும் நிலையில் ஊட்டியில் நிலவிய குளிர்ந்த காற்றை சுற்றுலா பயணிகள் ஆனந்தமான ரசித்தனர். சிலர் உற்சாக மிகுதியில் மழையில் நனைந்தபடி நின்றனர். மழையின் காரணமாக ஊட்டியில் குளுகுளு சீசன் களைகட்டியுள்ளது. சுற்றுலா பயணிகளின் கூட்டம் காலை நேரத்தில் இருந்தே அதிகரிக்க தொடங்கியது.

    மலர் கண்காட்சியையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு வருகிற 18-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களை கட்டி உள்ளது. இதையொட்டி கூடலூரில் நாளை வாசனை திரவிய கண்காட்சி தொடங்குகிறது. 12-ந் தேதி ஊட்டியில் ரோஜா கண்காட்சி நடக்கிறது.

    வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 5 நாட்கள் ஊட்டியில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. கண்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

    மலர் கண்காட்சியையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு வருகிற 18-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது-

    ஊட்டியில் 122-வது மலர் கண்காட்சி வருகிற 18-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

    இந்நாளில் மாவட்ட கருவூலம் மற்றும் சார்பு நிலை கருவூலங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும்.18-ந் தேதிக்கான வேலை நாளை ஈடு செய்ய வருகிற 26-ந் தேதி (சனிக்கிழமை) மாவட்டத்திற்கு பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #Tamilnews
    ×