search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலங்குளம்"

    ஆலங்குளம்-கயத்தாறு பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழையால் மரங்கள்- மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. #Rain

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் தென்காசி, செங்கோட்டை பகுதியில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. இந்த நிலையில் நேற்று பகல் சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தியது. ஆனால் பிற்பகல் கருமேகங்கள் திரண்டு பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

    ஆலங்குளத்தில் நேற்று மாலை இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த மழையுடன் சூறைக்காற்றும் வீசியது. இதில் ஆலங்குளம் ஜோதிநகர் பகுதியில் ஆங்காங்கே மரங்களும், 7 மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன. இதனால் ஆலங்குளம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, சாய்ந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பாப்பாக்குடி அருகே உள்ள இலந்தகுளத்தில் மின்னல் தாக்கியதில் தேவ அருள் குமார் என்பவரின் பசுமாடு பலியானது.

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, கோவில்பட்டி, கழுகுமலை பகுதியிலும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. அதிகபட்சமாக கயத்தாறு பகுதியில் 45 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கழுகுமலையில் 10 மில்லி மீட்டரும், கோவில்பட்டியில் 6 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் ஆய்க்குடியில் 15.2 மில்லி மீட்டரும், தென்காசியில் 14.3 மில்லி மீட்டரும், சங்கரன் கோவிலில் 10 மில்லி மீட்டரும், குண்டாறு அணை 5 மில்லி மீட்டரும், சேரன்மகாதேவி 3 மில்லி மீட்டரும், செங்கோட்டை 2 மில்லி மீட்டரும், சிவகிரி மற்றும் அடவிநயினாரில் 1 மில்லி மீட்டரும் மழையும் பெய்துள்ளது.

    கோடை மழையின் போது இடி-மின்னலுடன் சூறாவளி காற்றும் வீசுவதால் பல்வேறு இடங்களில் பயிரிடப் பட்டுள்ள வாழை மரங்களும் சேதம் அடைந்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் புகார் செய்து வருகிறார்கள்.

    மழை காரணமாக பாபநாசம் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 4.86 கன அடி தண்ணீர் மட்டுமே பாபநாசம் அணைக்கு வந்தது. ஆனால் இன்று பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 71.30 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் சற்று உயர்ந்து இன்று காலை 17 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 49.28 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 46 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 75.72 அடியாக உள்ளது.

    குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் இன்றும் தண்ணீர் நன்றாக விழுந்தது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. கோடை வெயிலுக்கு இதமாக வெளியூரில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்து குளிக்க தொடங்கியுள்ளார்கள். இதைத்தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.  #Rain

    ஆலங்குளத்தில் இன்று காலை டிராக்டர் மோதி 3 வயது சிறுமி பலியானதையடுத்து போலீசார் டிரைவர் ராஜ்குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் மகராஜன். இவரது மகள் வினிதா (வயது 3). இவள் அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வந்தாள். இன்று காலை சிறுமி வினிதா வழக்கம்போல் அங்கன்வாடிக்கு தனியாக நடந்து சென்றாள். ஆனால் அங்கன்வாடி பூட்டப்பட்டிருந்தது.

    அப்போது அங்கு சிறுமியின் உறவினரான அதே பகுதியை சேர்ந்த செல்லப்பசாமி மகன் ராஜ்குமார் டிராக்டரில் நின்று கொண்டிருந்தார். பின்னர் அவர் டிராக்டரை இயக்கி நகர்த்த முயன்றார். ராஜ்குமாரை பார்த்த சிறுமி வினிதா, மாமா என்று அழைத்தவாறு அவரை நோக்கி சென்றது. இதை கவனிக்காத ராஜ்குமார் டிராக்டரை பின்நோக்கி நகர்த்தினார்.

    இதில் டிராக்டர் சிறுமி மீது மோதியது. இதில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே சிறுமி வினிதா பரிதாபமாக இறந்தாள். இது குறித்து தகவலறிந்த ஆலங்குளம் சப்-இன்பெக்டர் உமா மகேஷ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பலியான குழந்தை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் டிரைவர் ராஜ்குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அங்கன்வாடிக்கு சென்ற சிறுமி டிராக்டரில் சிக்கி பலியாகி கிடந்ததை பார்த்து அவரது தாய், பாட்டி மற்றும் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

    ஆலங்குளம் அருகே கடையில் நூதன முறையில் ரூ. 8 லட்சம் கொள்ளையடித்த கடை ஊழியர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலங்குளம்:

    நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த ஊத்துமலை அருகே உள்ள ரெட்டியார்பட்டியை சேர்ந்தவர் விஜய். இவர் ரெட்டியார்பட்டியில் சூப்பர் மார்க்கெட் வைத்து நடத்தி வருகிறார். இங்கு அதே பகுதியை சேர்ந்த உதயகுமார், முருகன் ஆகியோர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 5-ந்தேதி விஜய் வழக்கம்போல் கடையை திறக்க சென்றார். அப்போது கடையில் தீபாவளி விற்பனை பணம் ரூ. 8 லட்சம் மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து அவர் ஊத்துமலை போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் தனலெட்சுமி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் ரெட்டியார் பட்டியை சேர்ந்த லெட்சுமணன் என்ற தினேஷ் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கடையில் வேலை பார்த்த உதயகுமார், முருகன் ஆகியோரின் நண்பர் லெட்சுமணன் என்ற தினேஷ். கடந்த 4-ந்தேதி தனது நண்பர் தினேசை உதயகுமார், முருகன் ஆகியோர் வரவைத்துள்ளனர்.

    அப்போது தீபாவளி விற்பனை நடந்ததால் விஜய் அவர்களை கண்காணிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து தினேசை கடைக்குள்ளேயே ஒரு மறைவான இடத்தில் தங்க வைத்தனர். இதை அறியாத விஜய் இரவு கடையை பூட்டி விட்டு சென்றார். இரவில் கடையில் தங்கியிருந்த தினேஷ் அங்கு விற்பனையான பணம் ரூ.8 லட்சம் மற்றும் சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளையும் கொள்ளையடித்தார். பின்பு விடியும் வரை அங்கேயே காத்திருந்தார்.

    மறுநாள் காலை விஜய் கடையை திறக்க வந்தார். அப்போது தொழிலாளர்கள் உதயகுமார் மற்றும் முருகன் கடைக்கு வேலைக்கு வந்துள்ளனர். காலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உதயகுமாரும், முருகனும், தினேசை கொள்ளையடித்த பணத்துடன் தப்பவிட்டனர்.

    கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து கார், பைக் வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சத்தை மீட்டனர்.

    ×