search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்கக்கடல்"

    வங்கக் கடலில் 29-ம் தேதி புயல் உருவாகும் என்றும், இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. #TNRains #IMDPredicts
    சென்னை:

    தமிழகத்தில் பரவலாக கோடை மழை பெய்து வரும் நிலையில், சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஆத்தூரில் 10 செமீ மழை பெய்துள்ளது. பெரியகுளம், மேட்டூர், திருவண்ணாமலை, ஓசூர், தம்மம்பட்டி, தேனி மாவட்டம் கூடலூர் ஆகிய இடங்களில் தலா 5 செமீ மழை பதிவாகி உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.



    மேலும், இந்திய பெருங்கடல்- தென்மேற்கு வங்கக் கடலில் வரும் 25ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளது. இது 27-ம்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். பின்னர் மேலும் வலுப்பெற்று 29-ம் தேதி புயலாக மாறி தமிழகத்தை நோக்கி நகரும்.

    இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 29-ம் தேதி முதல் கனமழை பெய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNRains #IMDPredicts
    வங்கக் கடலில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சென்னையில் சில இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டது. #Earthquake #ChennaiTremors
    சென்னை:

    வங்கக் கடலில் இன்று காலை 7.02 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சென்னைக்கு வடகிழக்கே 609 கிமீ தொலைவில் கடல் மட்டத்தில் இருந்து 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவு கோலில் 4.9 அலகாக பதிவாகியிருந்தது.



    இந்த நிலநடுக்கம் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. சில வினாடிகள் நில அதிர்வு இருந்ததாக, பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். நிலநடுக்கம் காரணமாக எந்த சேதமும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. #Earthquake #ChennaiTremors

    வங்கக்கடலில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி ஆந்திராவில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #MET #PethaiCyclone
    சென்னை:

    தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டு இருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று இன்று காலை புயலாக மாறியது. இந்த புயலுக்கு நாடுகள் வரிசைப்படி தாய்லாந்து ‘பேத்தாய்’ என பெயர் சூட்டி உள்ளது.

    மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து சென்னைக்கு கிழக்கு தென் கிழக்கில் 730 கி.மீ. தொலைவிலும், ஆந்திராவின் மசூலிப்பட்டினத்தில் இருந்து கிழக்கு தென்கிழக்கில் 930 கி.மீ. தொலைவிலும், இலங்கையின் திரிகோணமலையில் இருந்து 470 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருந்தது.

    இந்த புயலானது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி வடக்கு மற்றும் வடமேற்கு, திசையில் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரை நோக்கி நகரும். நாளை மறுநாள் ஆந்திராவின் கடலோர பகுதியான ஓங்கோலுக்கும் காக்கிநாடாவுக்கும் இடையே கரையை கடக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில்,  வங்கக்கடலில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இந்த ‘பேத்தாய்’ புயல் ஆந்திராவின் மசூலிப்பட்டினம்-காக்கிநாடா இடையே டிச.17ம் தேதி பிற்பகல் கரையை கடக்கும்.  

    இதனால் ஆந்திர கடலோர பகுதிகளில் டிச.16 மற்றும் 17ம் தேதிகளில் கனமழை பெய்யும். புயலால் கோதாவரி, விசாகப்பட்டினம், கிருஷ்ணா, குண்டூர் மாவட்டங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த ஏனம் மாவட்டமும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #MET #PethaiCyclone
    வடதமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் காற்றுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #BayofBengal #Rain #Storm
    சென்னை:

    வங்க கடலில் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெறுகிறது. இது தீவிர புயலாகவும் மாற வாய்ப்பு உள்ளது என்றும், இந்த புயல் ஆந்திரா நோக்கி செல்கிறது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது.

    ஆந்திரா நோக்கி புயல் சென்றாலும், வட தமிழக கடலோர பகுதிகள் வழியாக அது கடந்து செல்வதால், வட தமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைக்கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருக்கிறது. இது சென்னைக்கு தென்கிழக்கே 930 கி.மீ. தொலைவிலும், ஆந்திராவின் மசூலிப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 1,090 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டு இருக்கிறது.

    மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் இது நகர்ந்து வருகிறது. தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று அதிகாலையில்) புயலாக வலுவடைகிறது. இந்த புயல் ஆந்திர கடலோர பகுதிகளான ஓங்கோலுக்கும், காக்கிநாடாவுக்கும் இடையே 17-ந் தேதி (நாளை மறுநாள்) கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வடதமிழக கடலோரங்களில் இருந்து 200 கி.மீ. தொலைவில் இந்த புயல் வடக்கு, வடமேற்கு நோக்கி நகர்ந்து செல்வதால், வடதமிழக கடலோர மாவட்டங்களில் 15 (இன்று), 16 (நாளை) ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் காற்றுடன் மழையும், ஓரிரு இடங்களில் காற்றுடன் கூடிய கனமழையும் பெய்யும். குறிப்பாக, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழையை எதிர்பார்க்கலாம்.

    15, 16-ந் தேதிகளில் தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். தரைக்காற்றை பொறுத்தவரையில், மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வரை வீசக்கூடும்.

    புயலானது தற்போது வடக்கு, வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. அதுவே மேற்கு, வடமேற்கு நோக்கி நகரும் பட்சத்தில் தமிழகத்தை நெருங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் அது பெரிய மாற்றம். தற்போது உருவாகும் இந்த புயல், ‘கஜா’ புயலை விட சற்று அழுத்தம் அதிகமாக இருப்பதாகவே காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #BayofBengal #Rain #Storm
    வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருவாகியிருப்பதால் வட தமிழகத்தில் 15, 16ந்தேதிகளில் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #BayofBengal #Rain #Storm
    சென்னை:

    கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி வங்கக்கடலில் உருவான கஜா புயல் டெல்டா மாவட்டங்களை தாக்கி கடுமையான பேரழிவை ஏற்படுத்தியது.

    புயல் கரையை கடந்தபோது மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதால் தென்னை மரங்களையும், மின் கம்பங்களையும் வேரோடு சாய்த்து நாசப்படுத்தியது.



    அதே போன்ற ஒரு புதிய புயல் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகி உள்ளது. நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்தம் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றது.

    அது அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று வானிலை மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி இன்று மதியம் புயல் உருவானது. இதற்கு தாய்லாந்து ‘பேத்தாய்’ என பெயர் சூட்டியுள்ளது.

    தற்போது இந்த புயலானது சென்னைக்கு தெற்கு, தென்கிழக்கில் 960 கி.மீ. தொலைவிலும், ஆந்திராவின் மசூலிப்பட்டினத்துக்கு தெற்கு, தென்கிழக்கில் 1130 கி.மீ. தொலைவிலும் இலங்கையின் திரிகோணமலைக்கு தென்கிழக்கில் 700 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டு உள்ளது.

    6 மணி நேரத்தில் 11 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா நோக்கி நகர்ந்து வருகிறது. தொடர்ந்து இதே திசையில் நகர்ந்து நாளை மறுநாள் (16-ந்தேதி) காலை அதிதீவிர புயலாக வலுப்பெற்று சென்னையை நெருங்கும். அன்று மாலை வரை சென்னை அருகே மையம் கொண்டு இருக்கும். அதன் பிறகு வடக்கு திசையில் ஆந்திரா நோக்கி நகரும். ஆந்திராவின் நெல்லூர், கவாலி, சிராலா, மசூலிப்பட்டினம் கடற்கரை பகுதி வழியாக செல்லும்.

    17-ந்தேதி இரவு மசூலிப்பட்டினத்துக்கும் அமலாபுரத்துக்கும் இடைப்பட்ட பகுதியான ஓங்கோல்-காக்கிநாடா இடையே கரையை கடக்கும். அதன் பிறகு படிப்படியாக வலுவிழக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    தற்போது தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் மணிக்கு 65 முதல் 75 கி.மீ. வேகத்திலும் அதிகபட்சம் 85 கி.மீ. வேகத்திலும் காற்று வீசுகிறது.

    நாளை (15-ந்தேதி) தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் 90 முதல் 100 கி.மீ. வேகத்திலும் அதிகபட்சம் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது.

    தென்கிழக்கு வங்கக்கடலில் 16-ந்தேதி காற்றின் வேகம் 100 முதல் 110 கி.மீ. வேகத்திலும் அதிகபட்சம் 120 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசும், கடல் அலைகள் பல மீட்டர் உயரத்துக்கு எழும்பி கொந்தளிப்பு ஏற்படும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    எனவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், ஏற்கனவே ஆழ்கடல் சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறும் கடந்த 3 நாட்களாக வானிலை மையம் அறிவுறுத்தி வருகிறது.

    தமிழக கடற்கரை பகுதிகளில் தற்போது மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது. இதனால் தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    நாளை தமிழகத்தின் சென்னை மற்றும் வட கடலோர பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்யும், நாளை மறுநாள் (16-ந் தேதி) பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    புயல் கரையை நெருங்க நெருங்க காற்றின் வேகம் கஜா புயல் போல் 120 கி.மீ. வரை இருக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னையை நோக்கி நகர்ந்து வரும் புயல் திசை மாறி ஆந்திரா பக்கம் செல்வதால் சென்னைக்கு ஆபத்து இல்லை. 15-ந்தேதி மிதமான மழையும், 16-ந்தேதி பலத்த மழையும் மட்டுமே இருக்கும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #BayofBengal #Rain #Storm

    தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி தமிழகம்-ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். #Storm #Rain #BayofBengal
    சென்னை:

    கஜா புயல் டெல்டா மாவட்டங்களை தாக்கிய பின்பு அவ்வப்போது மிதமான மழை பெய்து வந்தது. கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலையே காணப்படுகிறது.

    நேற்று காலை வரை சாத்தனூர், சத்தியமங்கலத்தில் தலா 2 செ.மீ. மழையும், வேலூர் கலவை, கிருஷ்ணகிரியில் தலா 1 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

    அடுத்த 24 மணி நேரத்துக்கு தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வட மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.

    அதன்பிறகு இது தீவிரம் அடைந்து காற்றழுத்தமாகி, புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது. வருகிற 10-ந் தேதி முதல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், புயலாகவும் மாறி தமிழகம்-ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

    புயல் முதலில் சென்னை நோக்கி நகரும் என்றும், சென்னையை தாக்கும் அபாயம் இருப்பதாகவும் கணிக்கப்பட்டது. ஆனால் இப்போது காற்று வீசும் திசையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக ஆந்திரா நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.



    12-ந் தேதி புயலாக மாறி கடற்கரை நோக்கி நகரத் தொடங்கும். 14-ந் தேதி கரையை நெருங்கும். 15-ந் தேதி கடற்கரையை அடையும், 16-ந் தேதி கரையை கடக்காமல் வலுவிழந்து ஒடிசாவுக்கு சென்றுவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக திங்கட்கிழமைக்கு மேல் வட தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறும்பட்சத்தில் அதற்கு நாடுகள் வரிசைப்படி தாய்லாந்து ‘பேய்ட்டி’ என பெயர் சூட்டும். #Storm #Rain #BayofBengal

    வங்கக்கடலில் அடுத்த 2 நாட்களில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. #Rain #TN
    சென்னை:

    வங்கக்கடலில் உருவான கஜா புயல் நாகையில் கரையை கடந்தபோது 7 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    அதன்பின் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் டெல்டா மாவட்டங்களிலும், சென்னையிலும் பரவலாக மழை பெய்தது.

    வங்கக்கடலில் 22-ந்தேதி உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வுநிலை சீர்காழி அருகே கரையை கடந்து தெற்கு கர்நாடகா மற்றும் கேரளா, தமிழகத்தின் மேட்டூர் அணைப் பகுதியில் நிலை கொண்டிருந்தது.

    அது காற்றின் சுழற்சியால் தமிழகத்தில் நீடித்துக் கொண்டிருந்ததால் இன்று வரை தமிழகத்தில் மழை இல்லாத வறண்ட வானிலை நிலவுகிறது.



    29, 30, டிசம்பர் 1-ந்தேதி ஆகிய 3 நாட்களில் ஒவ்வொரு இடத்திலும் குறைந்தபட்சம் 24 மணி நேரமாவது விட்டுவிட்டு மழை பெய்யும்.

    வடகிழக்கு பருவமழை இயல்பை விட நிச்சயமாக அதிகமாக இருக்கும். பொங்கல் பண்டிகை வரை வடகிழக்கு பருவமழை பெய்ய சாதகமான சூழ்நிலை காணப்படுகிறது.

    இந்த நிலையில் வங்கக்கடலில் அடுத்த 2 நாட்களில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறியதாவது:-

    வியட்நாம், தாய்லாந்தை யொட்டியுள்ள சியாம் வளைகுடா பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அது அந்தமான் கடல் பகுதிக்கு பரவுகிறது.

    மேலும் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி காற்று வீசுவதால் அந்தமான் கடல் பகுதியில் அடுத்து 2 நாட்களில் மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது. அதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் நாளை முதல் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறி உள்ளது. #Rain #TN

    தமிழகத்தின் கடலோர பகுதிகளில் வருகிற 19-ந்தேதி முதல் மழை பெய்யும் என்றும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. #Storm #TN #Rain
    சென்னை:

    இந்திய தீப கற்பமானது தென்மேற்கு பருவ மழை, வடகிழக்கு பருவ மழை என இரு பருவ காலங்களை கொண்டது.

    தென்மேற்கு பருவமழை அரபிக்கடல் வழியாகவும், வடகிழக்கு பருவ மழை வங்கக்கடல் வழியாகவும் உருவாகிறது.

    தென்மேற்கு பருவ மழையை காட்டிலும் வடகிழக்கு பருவமழையால் தான் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும். அக்டோபர் தொடங்கி டிசம்பர் முடிய வங்கக்கடலில் உருவாகும் புயல்கள், காற்றழுத்த தாழ்வு பகுதிகளால்தான் வட தமிழகத்தில் மழை பெய்யும்

    வங்கக்கடலில் பெரும்பாலும் மலாய் தீபகற்ப பகுதியில் இருந்து வரும் மேலடுக்கு சுழற்சியானது அந்தமான் கடலில் உருவாகும் மேலடுக்கு சுழற்சியுடன் இணையும்போது காற்றழுத்த தாழ்வு நிலைகளும் புயல்களும் உருவாகின்றன.

    அதுபோல கஜா புயலும் மலாய் தீபகற்பத்தில் இருந்து வந்த மேலடுக்கு சுழற்சியால் அந்தமான் கடல் பகுதியில் நிலவிய மேலடுக்கு சுழற்சியுடன் இணைந்து புயலாக மாறியது.

    கஜா புயல் கரையை கடந்து விட்ட நிலையில் அதே இடத்தில் நாளை மாலை புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. மலாய் தீவு கற்பத்திலும் அதனையொட்டிய இந்திய பெருங்கடலிலும் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இது 19, 20-ந்தேதிகளில் தென்மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும். 21-ந்தேதி தெற்கு ஆந்திரா மற்றும் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொள்ளும் வாய்ப்பு உள்ளது.



    வருகிற 19-ந்தேதி முதல் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மழை பெய்யும் என்றும் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன் பிறகு காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்வதைப் பொருத்து மழை தீவிரம் அடையும். 21-ந்தேதி கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லலாம் நாளையும், நாளை மறுநாளும் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிக்கும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #Storm #TN #Rain

    ‘கஜா’ புயலை தொடர்ந்து தெற்கு வங்க கடலில் மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #GajaCyclone
    சென்னை:

    வங்க கடலில் உருவான ‘கஜா’ புயல் கடந்த சில நாட்களாக தமிழகத்தை மிரட்டி வந்தது. பல்வேறு கட்ட கண்ணாமூச்சி போராட்டத்துக்கு இடையே நேற்று அதிகாலை நாகை-வேதாரண்யம் இடையே ‘கஜா’ புயல் கரையை கடந்தது.

    ‘கஜா’ புயல் ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து தமிழகம் இன்னும் மீளவில்லை. அதற்குள் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-

    ‘கஜா’ புயல் இன்று (நேற்று) காலை 11.30 மணி வரையிலான நிலவரப்படி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்து, திண்டுக்கல்லை ஒட்டியுள்ள பகுதியில் நிலவுகிறது. இதன் காரணமாக மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, கரூர், திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

    இந்த பகுதிகளில் காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். தற்போதைய நிலவரப்படி தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் வருகிற 18-ந்தேதி (நாளை) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது 19 மற்றும் 20-ந்தேதிகளில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தென் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவக்கூடும். இதன் பாதிப்பு குறித்து கணித்து சொல்லப்படும்.

    ‘கஜா’ புயல் தமிழகத்தை கடந்ததை தொடர்ந்து, மீனவர்கள் கடலுக்குள் செல்லலாம். 18-ந்தேதி தெற்கு வங்க கடல் மத்திய பகுதியிலும், 19-ந்தேதி தென் மேற்கு வங்க கடல் பகுதிகளிலும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம்.

    கடந்த 1-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையிலான நிலவரப்படி தமிழகம், புதுச்சேரியில் 22 செ.மீ. மழை பதிவாகியிருக்கிறது.

    இந்த காலக்கட்டத்தின் இயல்பு அளவு 29 செ.மீ. ஆகும். எனவே தற்போது பெய்திருக்கும் மழை இயல்பை விடவும் 23 சதவீதம் குறைவு ஆகும். ஆனால் நேற்று (நேற்று முன்தினம்) வரை 29 சதவீதம் வரை மழை அளவு இயல்பை விடவும் குறைவாக இருந்தது. இன்று (நேற்று) 6 சதவீத மழை நமக்கு கிடைத்திருக்கிறது. இதன்மூலம் சராசரி மழை அளவை விடவும் 23 சதவீதம் குறைவு என்ற நிலைக்கு வந்திருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone
    வங்கக் கடலில் உருவான கஜா புயல் படிப்படியாக வேகம் எடுத்து இன்று பிற்பகல் மணிக்கு 12 கிமீ வேகத்தில் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. #GajaCyclone #IMD
    சென்னை:

    வங்கக்கடலில் உருவான கஜா புயல் கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று முதலில் கணிக்கப்பட்டது. அதன்பின்னர் புயல் நகரும் திசையில் மாற்றம் ஏற்பட்டதால் கடலூருக்கும் - பாம்பனுக்கும் இடையில் கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    இன்று காலை நிலவரப்படி சென்னையில் இருந்து கிழக்கே 750 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகையில் இருந்து வடகிழக்கே 840 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டிருந்தது. மணிக்கு 5 கிலோ மீட்டர் என குறைந்த வேகத்தில் நகர்ந்தது. அதன்பின்னர் மணிக்கு 4 கிமீ என அதன் வேகம் குறைந்தது. மேற்கு - தென்மேற்கு நோக்கி நகரும் கஜா புயல், 15-ந்தேதி அதிதீவிர புயலாக வலுப்பெற்று பாம்பன் - கடலூர் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்தது.

    இந்நிலையில், இன்று பிற்பகல் சென்னையில் இருந்து 690  கிமீ தொலைவிலும் நாகையில் இருந்து 790 கிமீ தொலைவிலும் மையம் கொண்டிருந்த புயல் கஜா படிப்படியாக வேகம் எடுத்து மணிக்கு 12 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசைநோக்கி நகரத் தொடங்கியது.

    அதன்பின்னர், மேற்கு-தென்மேற்கு நோக்கி நகரும் புயல் பாம்பன்- கடலூர் இடையே நவம்பர் 15-ம் தேதி பிற்பகல் கரைகடக்கும் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.



    புயல் கரை கடக்கும்போது கடலூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

    கஜா புயலால் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் அணைகளை கண்காணிக்க வேண்டும் என்றும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர் ஆகியோருக்கு மத்திய நீர்வளத்துறை ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. #GajaCyclone #IMD
    வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. அதற்கு ‘கஜா’ புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. #GajaCyclone #Gaja #Storm
    சென்னை:

    வடகிழக்கு பருவமழை இந்த மாத தொடக்கத்தில் தொடங்கியதாக வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், தமிழகத்தில் கடலோர மாவட்டங்களை தவிர மற்ற இடங்களில் பெரிய அளவில் மழை இல்லை.

    இந்நிலையில் வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியது. பின்னர் இது புயலாக மாறியது. இதற்கு ‘கஜா’ என்று பெயரிட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.



    வடமேற்கு திசையை நோக்கி நகரும் ‘கஜா’ புயல் இரண்டு அல்லது மூன்று நாட்களில் தமிழகத்தை நோக்கி வர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் இருந்து 990 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த புயல், 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என்று அறிவித்துள்ளது. #GajaCyclone #Gaja #Storm
    வங்கக்கடலில் உருவான புயல் இன்று (வியாழக்கிழமை) காலை ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்திற்கும், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கும் இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
    சென்னை:

    சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வங்கக்கடலில் உருவான தித்லி புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறி ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்தில் இருந்து தென் கிழக்கில் 270 கிலோ மீட்டர் தூரத்திலும், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு தென் கிழக்கில் 320 கிலோ மீட்டர் தூரத்திலும் நிலை கொண்டுள்ளது. அந்த புயல் கலிங்கப்பட்டினத்திற்கும், கோபால்பூருக்கும் இடையே இன்று (வியாழக்கிழமை) காலை கரையை கடக்கிறது. அரபிக்கடலில் உருவான புயல் ‘லூபன்’ ஒமனில் 14-ந் தேதி கரையை கடக்கும். மீனவர்கள் மத்திய மேற்கு வங்கக்கடலில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை வரையிலும், அரபிக்கடலில் 14-ந் தேதி வரையிலும் மீன் பிடிக்க செல்லவேண்டாம்.

    தமிழகத்தில் இந்த இரு புயல் காரணமாக பாதிப்பு இருக்காது. தமிழகத்தில் இன்று சில இடங்களில் மழை பெய்யும்.

    இவ்வாறு இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

    சின்னக்கல்லார் 7 செ.மீ., வால்பாறை, மேட்டுப்பாளையம் தலா 4 செ.மீ., கூடலூர் பஜார், உடுமலைப்பேட்டை, பெரியாறு தலா 2 செ.மீ., பெரியகுளம், வால்பாறை, மேட்டுப்பட்டி, போடிநாயக்கனூர் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

    தித்லி புயல் காரணமாக சென்னை, எண்ணூர், கடலூர், நாகப்பட்டினம், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, ராமநாதபுரம், குளச்சல் ஆகிய துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    தித்லி புயல் இன்று ஒடிசாவில் கரையைக் கடப்பதையொட்டி, அந்த மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக், கள நிலவரத்தை நேற்று ஆய்வு செய்தார். கடலோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கிற மக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுமாறு கஞ்சம், பூரி, குர்தா, கேந்திரபாரா, ஜெக்த்சிங்பூர் மாவட்ட கலெக்டர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

    அதைத் தொடர்ந்து அந்த மாவட்டங்களில் மக்களை வெளியேற்றும் பணி தொடங்கிவிட்டது.

    இதை அரசு தலைமைச்செயலாளர் ஏ.பி. பதி உறுதி செய்தார்.

    மேலும், “புயலையொட்டி, தேசிய பேரிடர் மீட்பு படையினரும், ஒடிசா பேரிடர் அதிரடி படையினரும் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் ஏற்கனவே அமர்த்தப்பட்டுள்ளனர். ராணுவத்தின் உதவியை இதுவரை நாங்கள் நாடவில்லை. தேவைப்பட்டால் நாடுவோம்” என அவர் குறிப்பிட்டார்.

    இதே போன்று ஆந்திராவிலும் கடலோர மாவட்டங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. இங்கு மணிக்கு 165 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்; பலத்த மழை பெய்யும்; சேதங்களும் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச்செல்ல வேண்டாம் என தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஸ்ரீகாகுளத்திலும், விசாகப்பட்டினத்திலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் கூறுகின்றன.
    ×