search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீகார்"

    பீகார் மாநிலத்தில் பணம் எடுத்துச்செல்லப்பட்ட வாகனத்தின் காவலரை துப்பாக்கியால் சுட்டு, வாகனத்தில் இருந்த 52 லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். #Bihar
    பாட்னா:

    பீகார் மாநிலத்தின் சமஸ்திபூர் பகுதியில் இன்று பணத்தை இடமாற்றம் செய்வதற்காக பயன்படுத்தப்படும் வாகனத்தின் மீது மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதுகாவலர் கொல்லப்பட்டார்.

    இதையடுத்து அந்த வாகனத்தில் இருந்து 52 லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து அப்பகுதியில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.

    பணம் எடுத்துச் சென்ற வாகனம், வங்கி ஏ.டி.எம் இயந்திரங்களுக்கு பணம் நிரப்புவதற்காக எடுத்துச்செல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் இந்த விபத்து குறித்து முழுமையான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

    சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள போலீசார் கொள்ளையர்கள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Bihar
    பீகார் மாநிலத்தில் இயங்கிவரும் அரசு தத்தெடுப்பு மையங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் பல்வேறு மையங்களில் குழந்தைகள் பசியால் வாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Bihar
    பாட்னா:

    பீகாரில் பாதுகாப்பு இல்லங்களில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லைகள் அளிக்கப்பட்ட சம்பவங்கள் வெளியாகி நாட்டையே குலுக்கியது. இந்த நிலையில், பீகாரில் அரசு நடத்தும் சிறப்பு தத்தெடுப்பு மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றி டாடா சமூக அறிவியல் அமைப்பு பட்டியலிட்டு உள்ளது.

    இதற்காக பீகாரின் 20 மாவட்டங்களில் உள்ள 21 அரசு நடத்தும் சிறப்பு தத்தெடுப்பு மையங்களில் இந்த அமைப்பு ஆய்வு நடத்தியது. இந்த மையங்களில் அனாதைகள், வீட்டை விட்டு வெளியேறியோர், குடும்பத்தினரால் கைவிடப்பட்டோர் என 6 வயது வரையிலான குழந்தைகள் தங்கி உள்ளனர்.  இந்த மையங்களில் 70 சதவீதம் சிறுமிகள் உள்ளனர்.

    இதில் 3 வயது உடைய சில குழந்தைகள் பேசுவது இல்லை. ஏனெனில், இங்கு முறையான பயிற்சி பெற்ற ஊழியர்கள் இல்லாததால், குழந்தைகளுக்கு முறையான பராமரிப்பும், அவர்களின் துளிர் பருவத்தில் தேவையானவற்றை கற்பிக்கவும் ஆட்கள் இல்லை என கூறப்படுகிறது.

    இங்குள்ள குழந்தைகள் சிறிய தவறு செய்தாலும், அவர்களை குளியல் அறையில் அடைத்து வைத்தல், தனிமையில் இருக்க வைத்தல், தகாத சொற்களால் திட்டுதல் என கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இதுபோன்ற தண்டனைகளால் குழந்தைகள் நீண்ட கால பாதிப்பிற்கு ஆளாகின்றனர் என அறிக்கை குழுவின் தலைவர் முகமது தாரீக் கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:

    'இவர்கள் மிக சிறியவர்கள். குளியல் அறையில் அடைத்து வைப்பது அவர்களை மனதளவில் கடுமையாக பாதிக்கும். எதற்காக தண்டனை வழங்குகிறார்கள் என்பது கூட அவர்களுக்கு புரியாது. இந்த குழந்தைகளுக்கு முறையான மருத்துவ வசதிகளும் இல்லை. இதனால் அவர்களின் வாழ்நாள் பற்றிய அச்சுறுத்தல் எழுந்துள்ளது.

    இங்கு தத்தெடுக்க வரும் பெற்றோர் சிலரால், தொடர்ந்து புறக்கணிக்கப்படும் சில குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர்.  அவர்களை திட்டுவது கூடாது.  அவர்கள் நலனில் அக்கறை காட்டுவதற்கு ஆள் இல்லாதது குழந்தைகளை வருத்தமடைய செய்கிறது.’

    என அவர் கூறியுள்ளார்.

    மேலும் இந்த அறிக்கையில் மிக முக்கியமாக, சில மையங்களில் குழந்தைகள் தங்குவதற்கு உரிய உட்கட்டமைப்பு வசதிகள் கூட இல்லாமல் கஷ்டப்படுவதாகவும், இங்கு உள்ள குழந்தைகள் போதிய உணவு இன்றி பசியுடனே வாழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #Bihar
    ரெயில்வே உணவு டெண்டர் முறைகேடு விவகாரத்தில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மனைவி ராப்ரி தேவி உள்ளிட்ட 13 பேர் மீது அமலாக்கத்துறை இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. #RailwayTenderScam #LaluPrasad
    புதுடெல்லி:

    ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் முன்னாள் முதல் மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ், மாட்டுத்தீவன ஊழல் வழக்குகளில் சிறைத்தண்டனை பெற்று வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் சிறையிலடைக்கப்பட்ட அவர், உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

    அதன்பின், அங்கிருந்து சிகிச்சைக்காக ராஞ்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவரது ஜாமீன் மனு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.

    இதற்கிடையே, தனது ஜாமீனை நீட்டிக்கக் கோரி லாலு மனுதாக்கல் செய்தார். அவரது மனுவை நிராகரித்த ராஞ்சி ஐகோர்ட், ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் கோர்ட்டில் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டது.

    இந்நிலையில், ரெயில்வே உணவு டெண்டர் முறைகேடு விவகாரம் தொடர்பாக, லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்பட 13 பேர் மீது அமலாக்கத்துறை இன்று குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது.

    லாலு பிரசாத் யாதவ் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது, ரெயில்வே உணவு டெண்டரில் ரூ.44.75 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #RailwayTenderScam #LaluPrasad
    பீகாரில் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற விவகாரம் தொடர்பாக நிதிஷ்குமார் அரசில் சட்டம் ஒழுங்கு செயலிழந்து விட்டது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. #Nitishkumar #Congress
    பாட்னா:    

    பீகாரில் விபச்சார கும்பல் தங்கியிருந்த பகுதியில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்ததற்கு அவர்கள் தான் காரணம் என கருதி அங்கிருந்த பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

    தகவலறிந்து அங்கு வந்த போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க பாதுகாப்பை அதிகரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில், பீகாரில் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற விவகாரம் தொடர்பாக நிதிஷ்குமார் அரசில் சட்டம் ஒழுங்கு செயலிழந்து விட்டது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. 

    இதுதொடர்பாக  மாநில காங்கிரஸ் செயல் தலைவர் கவ்காப் குவாட்ரி கூறுகையில், பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் அழைத்துச் சென்றதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த சம்பவத்தால் பீகார் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது உறுதியாக தெரிகிறது. எனவே, மாநில அரசி இனியும் காலதாமதம் செய்யாமல் சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். #Nitishkumar #Congress
    மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநில அரசின் துயர் துடைப்பு பணிகளுக்கு பீகார் மற்றும் அரியானா அரசின் சார்பில் தலா 10 கோடி ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. #KeralaRains #KeralaFloods
    பாட்னா:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது. மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. இன்று மட்டும் 22 பேர் பலியாகியுள்ள நிலையில் மழை பாதிப்பால் இதுவரை 346 பேர் உயிரிழந்துள்ளனர்.



    இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை  மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    தமிழக அரசின் சார்பில் 10 கோடி, டெல்லி அரசின் சார்பில் 10 கோடி, தெலுங்கானா அரசின் சார்பில் 25 கோடி என நிதியுதவி குவிந்து வருகின்றன.

    அவ்வகையில் கேரளா மாநில அரசின் துயர் துடைப்பு பணிகளுக்கு பீகார் அரசின் சார்பில் ரூ.10 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என அம்மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

    இதேபோல், அரியானா அரசின் சார்பாக ரூ.10 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என அம்மாநில முதல் மந்திரி மனோகர்லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

    பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். #KeralaRains #KeralaFloods 
    பீகாரில் அரசு அதிகாரி ராஜீவ் குமார் மீது மர்ம மனிதர்கள் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். #Bihar #GovernmentOfficer #ShotDead
    பாட்னா:

    பீகார் மாநில அரசின் திட்டமிடல் இலாகாவில் சார்பு செயலாளராக பணியாற்றி வந்தவர், ராஜீவ் குமார்(வயது 50). இவருடைய வீடு பாட்னா நகரில் சாச்சிவலயா போலீஸ் நிலையம் அருகேயுள்ள அரசு குடியிருப்பில் உள்ளது.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் ராஜீவ்குமார் வீட்டுக்கு வந்த மர்ம மனிதர்கள் சிலர் அவருடைய வீட்டின் கதவைத் தட்டினர். இதையடுத்து வெளியே வந்த அவரிடம் மர்ம மனிதர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். பின்னர் அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த ராஜீவ் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுபற்றி ராஜீவ்குமாரின் மனைவி ரஜ்னி கூறுகையில், “மர்ம கும்பல் வீட்டில் கொள்ளையடிக்கும் முயற்சியுடன் வந்துள்ளது. அதை தடுக்க முயன்ற எனது கணவரை அந்த கும்பல் சுட்டுக்கொன்றுவிட்டு ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுவிட்டது” என்றார்.

    ஆனால், இந்த படுகொலை பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ள போலீசாரோ, “முன்பகை காரணமாக ராஜீவ்குமார் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும், இதை அவருடைய குடும்பத்தினர் மறைக்கிறார்களோ எனவும் சந்தேகிக்கிறோம். இந்த சம்பவம் பற்றி பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தனர்.  #Bihar #GovernmentOfficer #ShotDead
    பீகாரின் முசாபர்பூர் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில், மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.#MuzaffarpurShelterHome
    புதுடெல்லி:

    பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரித்து வருகிறது.

    சிறுமிகள் சீரழிக்கப்பட்ட பாதுகாப்பு இல்லத்திற்கு மாநில சமூக நலத்துறை மந்திரி குமாரி மஞ்சு வர்மாவின் கணவர் சந்தேஷ்வர் வர்மா அடிக்கடி சென்று வந்ததாகவும், அதனால் பாலியல் வன்கொடுமை வழக்கில் சந்தேஷ்வர் வர்மாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. 

    இதனை அடுத்து, குமாரி மஞ்சு வர்மா தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், காப்பகத்தில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று நீதிபதிகள் மதன் பி லோகுர், அப்துல் நசீர், தீபக் குப்தா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, நாடு முழுவதும் 286 சிறுவர்கள் உள்பட 1575 சிறார்கள் உடல் ரீதியான, பாலியல் ரீதியிலான துன்புறுத்தலை சந்தித்துள்ளதாக மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்திருந்தது. 

    இதனை அடுத்து, ‘1575 சிறார்கள் துன்புறுத்தலை சந்தித்துள்ளனர். அரசு எடுத்த நடவடிக்கை என்ன? இதுபோன்ற காப்பகங்களை இன்னும் ஏன் வைத்துள்ளீர்கள்?’ என நீதிபதிகள் அரசு வழக்கறிஞரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர். 
    மேலும், குழந்தைகள் பாதுகாப்பு கொள்கையை உருவாக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என நீதிபதிகள் குறிப்பிட்டனர். 
    பீகாரில் ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சியின் பிரமுகரான மனீஷ் சஹானி அவரது அலுவலக வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    பாட்னா:

    பீகார் மாநிலத்தின் வைஷாலி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி பிரமுகர் மனீஷ் சஹானி. இவர் நேற்று ஜந்தாஹா பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் கட்சி பணிகளை கவனித்துக் கொண்டிருந்தார்.  

    இந்நிலையில், அலுவலகத்தின் முன் நின்றிருந்த சஹானி மீது அங்கு பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

    இந்த தாக்குதலில் சஹானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, குற்றவாளிகளை கைதுசெய்ய கோரி அவரது ஆதரவாளர்கள் உள்ளூர் காவல் நிலையத்தின் முன்பு போராட்டம் நடத்தினர்.

    இதுதொடர்பாக முதல் மந்திரி நிதிஷ்குமார் உரிய விசாரணை நடத்த வேண்டும் என மத்திய மந்திரியும், ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி தலைவருமான உபேந்திரா குஷ்வா வலியுறுத்தியுள்ளார்.

    ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி தலைவர் அவரது அலுவலக வளாகத்தில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பீகாரில் காப்பகம் ஒன்றில் 2 பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக காப்பக உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். #BiharShelter
    பாட்னா:

    பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் உள்ள நேபாளி நகரில் செயல்பட்டு வருவது ஆஸ்ரா பெண்கள் காப்பகம். இங்கு ஏராளமான பெண்கள் தங்கி வருகின்றனர்.

    இந்நிலையில், அந்த காப்பகத்தில் சுமார் 17 வயது மற்றும் 21 வயது மதிக்கத்தக்க இரு பெண்கள் மர்மமான முறையில் நேற்று உயிரிழந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தகவலறிந்த போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், அதிக காய்ச்சல் காரணமாக இரு பெண்களும் பாட்னா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்ததாக காப்பகம் நிர்வாகத்தினர் கூறினர். ஆனால், பெண்கள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு வந்த போதே உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியது தெரிய வந்தது.

    இரு பெண்கள் இறந்தது தொடர்பாக காப்பக உரிமையாளர் சீரந்தான் குமார் மற்றும் காப்பக பாதுகாவலர் ரேணுகா தயாள் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஏற்கனவே, முசாபர்பூர் நகரில் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் அரசு உதவி பெற்று நடத்தப்படும் காப்பகத்தில் தங்கியிருந்த 30க்கு மேற்பட்ட சிறுமிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து காப்பக நிர்வாகிகள் மற்றும் பலர் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
    பீகார் மாநிலம் முசாபர்ப்பூர் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து இன்று சி.பி.ஐ அதிகாரிகள் தங்களது விசாரணையை துவங்கியுள்ளனர். #MuzaffarpurShelterHome #Bihar #CBI
    பாட்னா:

    பீகார் மாநிலம் முசாபர்ப்பூர் பகுதியில் இயங்கிவந்த சிறுமிகள் காப்பகத்தில் பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாக தெரியவந்ததை அடுத்து அப்பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். போலீசாரின் இந்த அதிரடி சோதனையின் விளைவாக அந்த காப்பகத்தில் 34 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.

    இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். அதன்படி, பீகார் மாநில முதல்மந்திரியின் கோரிக்கைப் படி இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.



    இந்நிலையில், சி.பி.ஐ அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் மற்றும் போலீசாருடன் இணைந்து தங்களது விசாரணையை துவக்கினர். காப்பகத்தின் சீல் வைக்கப்பட்ட அறைகள் திறக்கப்பட்டு முழுமையான சோதனை நடத்தப்பட்டது.

    இந்த வழக்கில் பிரஜேஷ் தாக்கூர் என்பவர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கு குறித்த சி.பி.ஐ விசாரணையை பாட்னா உயர்நீதிமன்றம் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #MuzaffarpurShelterHome #Bihar #CBI
    பீகாரில் 110 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்புக்குழுவினர் இன்று பத்திரமாக உயிருடன் மீட்டனர். #ChildFellBorewell #Bihar
    பாட்னா:

    பொதுமக்கள் பயன்படுத்தப்படாமல் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூடாமல் அப்படியே விட்டு விடுவதால் அதில் குழந்தைகள் தவறி விழுந்து உயிரிழக்க நேரிடுகிறது. இதுகுறித்து தொடர்ந்து அறிவுறுத்தியும் சிலர் அதனை அஜாக்கிரதையாக விட்டுவிடுகின்றனர்.

    இதேபோல், பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 3 வயது பெண் குழந்தை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, திறந்து கிடந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டது.

    தகவலறிந்த கோட்வாலி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து  மீட்பு பணியில் ஈடுபட்டனர். 110 அடி ஆழம் கொண்ட அந்த ஆழ்துளை கிணற்றில் பக்கவாட்டில் பொக்லைன் எந்திரம் மூலம் பெரிய பள்ளம் தோண்டி குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. 

    இந்நிலையில், தொடர்ந்து 26 மணி நேரமாக நடைபெற்ற மீட்பு பணிகளால் இன்று மாலை அந்த பெண் குழந்தை உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டது என போலீசார் தெரிவித்தனர். #ChildFellBorewell #Bihar
    பாராளுமன்ற தேர்தலையையொட்டி பீகாரில் எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின் மீதான சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் தலித் அமைப்புகள் எதிர்ப்புகளால் பாரதிய ஜனதாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. #BJP
    பாட்னா:

    மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி ஆட்சியில் இடம்பெற்றுள்ள லோக் ஜனசக்தி கட்சிக்கு மக்களவையில் 6 எம்.பி.க்கள் உள்ளது. அக்கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் மத்திய மந்திரியாகவும் உள்ளார். 2019 பாராளுமன்றத்திற்கு தயாராகி வரும் பா.ஜனதா கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைப்பது முக்கியமானது என்று செயல்பட்டுவருகிறது.

    பீகாரில் ஜக்கிய ஜனதா தளம் கூட்டணியை உறுதிசெய்த பா.ஜனதாவிற்கு ராம் விலாஸ் பாஸ்வான் கட்சியால் இப்போது பிரச்சனை எழுந்துள்ளது. பீகாரில் தலித் மக்களின் எதிர்ப்பு மொத்தமும் பா.ஜனதாவை நோக்கியுள்ளது, அவர்களில் பா.ஜனதாவையே பீகாரில் நம்பர் ஒன் எதிரியாக பார்க்கிறார்கள் என கூறப்படுகிறது.

    எஸ்சி, எஸ்டி சட்டத்தின் மீது கடந்த மார்ச் 20-ம் தேதி உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பளித்த நீதிபதிகள் ஏ.கே.கோயல், யு.யு.லலித், எஸ்சி,எஸ்டி சட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களைக் கைது செய்ய வேண்டுமானால், மூத்த அதிகாரிகளிடம் முறைப்படி அனுமதி பெற்றுத்தான் கைது செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்து இருந்தது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தலித் அமைப்புகள் போராட்டம் நடத்தினர். நாடாளுமன்றத்திலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    எஸ்சி,எஸ்டி சட்டத்தின் மீது வழங்கப்பட்ட தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய முடியாது, அதற்குத் தடைவிதிக்கவும் முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

    ஏற்கெனவே இருந்த வடிவிலேயே எஸ்சி, எஸ்டி சட்டம் நீடிக்கும் வகையில் மத்திய அரசு அவசரச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஓய்வுபெற்ற பிறகு நீதிபதி ஏ.கே.கோயலை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவராக நியமித்தது. அவசரச் சட்டம் கொண்டு வராமல் உள்ளது மற்றும் நீதிபதி கோயலை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டதற்கு தலித் பிரிவினர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய பாஸ்வான் தேசிய பசுமைத் தீர்ப்பாய தலைவர் பதவியில் இருந்து நீதிபதி ஏ.கே.கோயலை நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    இப்போது பொறுமையாக இருக்க முடியாது என கூறியுள்ள லோக் ஜனசக்தி கட்சி, “தலித் பிரிவினர் தரப்பில் ஆகஸ்ட் 9-ம் தேதி நாடு தழுவிய பெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த சட்டம் போன்று மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும். இல்லையெனில் எங்களுடைய தலித் சேனாவினர் தெருக்களில் போராட்டத்தில் குதிப்பார்கள்,” என எச்சரிக்கையை விடுத்துள்ளது. #BJP #Bihar #ParliamentElection
    ×